ஈமான் கொண்டு நற்செயல் செய்தல் என்ற இத்தொடரும், அதன் நன்மைகளும் பற்றிப் புனித குர்ஆன் பல்வேறு சந்தர்ப்பங்களில் கூறிச் சென்றுள்ளது. அல்லாஹ் இந்தளவு முக்கியத்துவத்தை, ஏன் இவ்விரு செயற்பாடுகளுக்கும் கொடுத்துள்ளான் என்பதை ஆழ்ந்து சிந்தித்தால், மனித வர்க்கத்துக்கு வல்ல அல்லாஹ் வழங்கியுள்ள அளவற்ற அருட்கொடைகளும், அதன் பயன்பாடுகளும், அதனால் பெறப்படவுள்ள நன்மை தீமைகளும் அறிவுகளும், ஒழுக்கங்களும், இன்ன பிறவும் தெரிய வரும். இத்தகு நன்மைகளை எழுத முயல்வது, இமயத்தை ஊசித் துளையுள் நுழைத்துவிடும் செயலே! ஆனால், அதனை அறியும் முயற்சியில் ஈடுபடின் வல்ல அல்லாஹ் அதனை இலகுவாக்கி நமது முயற்சிகளுக்கு உந்துதலைத் தருவான் என்பது அசைக்க முடியா உண்மையும் கூட. காரணம், அல்லாஹ் நம்மால் செய்ய முடியாததைச் செய்யும்படி நிர்ப்பந்தித்துச் செல்பவனல்ல. இமயத்தை ஊசித்துளையுள் நுழைத்துவிடும் செயல் என நான் கூறியது, நற்செயலின் செறிவும் பருமனும் எந்தளவுள்ளது என்பதைக் கோடிட்டுக் காட்டவே. முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்பது வழக்கிலுள்ள பழமொழி. முயற்சியாளர் அடைந்த வெற்றிகளும் நாமறிந்தவையே. வல்ல அல்லாஹ்வும் அது பற்றி, நீங்கள் முயன்றதைத் தவிர வேறில்லை எனவும் உங்கள் முயற்சிகள் எண்ணப்படும் அதற்கான கூலியும் உண்டு என்றெல்லாம் கூறியிருப்பது நாம் அறிந்து கொள்ளப் போதுமானதாகும். Continue reading →