வடக்கு முஸ்லிம்களை மீள்குடியேற்றம் செய்ய முனைபவர்களுக்கு கீழ்க்கண்டவற்றை மிகத் தெளிவாகக் குறிப்பிட விரும்புகிறேன். முஸ்லிம்களைப் பாதுகாக்கத் தவறியதற்கு அரசுகளும், அவர்களைக் கவனிக்காது மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்டிருந்த அனைத்து தரப்பினரும், விரட்டிய பயங்கரவாதிகளும் விசாரிக்கப்பட்டு நியாயம் காணப்படல் வேண்டும்.
எந்தவிதமான மீள்குடியேற்றப் பேச்சு வார்த்தைகளாயினும், அவற்றில் நேரடியாகப் பாதிக்கப்பட்ட வடக்கு முஸ்லிம்களின் அங்கத்துவமும், அவர்தம், அபிப்பிராயங்களும், அவர்களின் அங்கீகாரமும் பெறப்பட வேண்டுமென்பதை மிகவும் வலியுறுத்திக் கூறிக் கொள்வது பாதிக்கப்பட்ட முஸ்லிம் என்ற வகையில் என்கடமை. அதற்கு முன்னோடியாகப் பின்வருவன நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும் என்ற கோரிக்கையை பாதிக்கப்பட்ட வடக்கு முஸ்லிம்கள் சார்பாக முன்வைக்கிறேன்.
1. வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்களின் இயங்கா உடமைகள் அனைத்தும் 1990 ஒக்டோபர் 30ஆந் திகதிக்கு முன்புள்ள நிலைக்குத் திரும்புவதற்கான வழிவகைள் மேற்கொள்ளப்படல், சட்டமாக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படல்.
2. அவர்களின் இயங்கும் உடமைகளுக்கேற்பட்ட இழப்புகள் தகுந்த முறையில் மதிப்பிடப்பட்டு இழப்பீடு செய்யப்படல்.
3. அவர்களது உழைப்பு, வருமானம் போன்றவை பரிசீலிக்கப்பட்டு கணக்கிடப்பட்டு அகதிகளாக்கப்பட்டிருந்த காலத்துக்கான இழப்பீடு தாராளமாகச் செய்யப்படல்.
4. இக்காலத்தில் உரியகல்வி பெறமுடியாமலும், உயர்கல்வி பெறமுடியாமலும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பொதுவாகச் சில சலுகைகளையும், சிறப்பாக சில நடவடிக்கைகளையும் எடுத்து அவர்கள் சமூகத்தில் மற்றையோருடன் விரக்தியற்று வாழும் வழிகாணப்படல்.
5. அது போன்று, உத்தியோகம், பதவி உயர்வு, விருப்பு ஓய்வு Optional Retirement போன்ற இன்னோரன்னவைகளால் பாதிக்கப்பட்டோருக்குத் தகுந்த பரிகாரம் காணப்படல். அவர்கள் தம் அறுபது வரை பதவியிலிருந்ததாகக் கணிக்கப்பட்டு நிவாரணம் வழங்கல்.
6. தொழில் ஸ்தாபனங்கள், வீடுகள், கட்டிடங்களின் சேதங்கள் கவனத்திற்கெடுக்கப்பட்டு அதற்குத் தாராளமாக இழப்பீடுகள் செய்யப்படல்.
7. வெளியேற்றத்தினால் இழந்த வியாபார முகவர் (Agencies) மீளளிக்கப்படல்
8. வடக்கைத் தாயகமாகக்கொண்ட அனைத்து முஸ்லிம்களதும் பிறப்பு, விஷேட சட்டமூலமொன்றால் ஆகக் குறைந்தது பத்து வருடங்கள் பிற்படுத்தப்படல்
9. வியாபாரிகளுக்குக் மீள் குடியேற்றத்தின் பின்னர் குறைந்தது பத்து வருடங்களுக்கு வியாபார மொத்த வரி, இறைவரி போன்றவை நீக்கப்படல்.
10. கடந்த காலங்களுக்கான சோலை வரி நீக்கப்படல், அப்படி வரிகள் பெற்றிருந்தால் மீளளித்தல். மேலும் பத்து வருடங்களுக்கு சோலைவரி அறவிடாதிருத்தல்.
11. பதவிகளுக்கு ஆட்சேர்த்தலின்போது குறைந்தது பத்து வருடங்களுக்கு விஷேட புள்ளிகள் வழங்கும் திட்டமொன்றை அரச, தனியார் நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தல்.
12. குறைந்தது பத்து வருடங்களுக்கு அரச நிறுவனங்களில் தம் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முன்னுரிமை அளித்தல்.
13. கடந்த 20 வருடங்களாகப் புறந்தள்ளப்பட்டிருந்த அபிவிருத்தி வேலைகள் அனைத்து மட்டங்களிலும் மேற்கொள்ளல், பாடசாலைகளுட்பட.
14. 1990க்கு முந்திய குடிசனப் பரம்பல் கணக்கிலெடுக்கப்பட்டு மாற்றங்கள் தடுக்கப்படல், விகிதாசாரம் பேணப்படல்.
15. 1990க்கு முந்திய முஸ்லிம் கிராமங்களில் தற்போது மாற்றங்கள் ஏற்பட்டிருந்தால் அவை அவை பழைய நிலைக்குத் திருத்தப்படல். அதாவது அவை முஸ்லிம் கிராமமாகவே இருப்பதை உறுதி செய்தல்.
16. வடக்கு முஸ்லிம்களது இருப்பு உறுதிசெய்யப்படல். மீண்டும் 1990இல் நடந்தது போன்ற அட்டூழியங்கள் நடவாது உத்தரவாதம் வழங்குதல்.
பாதிக்கப்பட்ட வடக்கு முஸ்லிம்கள்
2010.12.15