கடமை

 

கடமை என்ற மூன்று எழுத்துள் அடங்கும் வார்த்தை, பிரபஞ்சம் அளவிற்குப் பரந்து விரிந்தது. அதனை விவரிக்கப் புகின் நம் அறிவும், திறனும், காலமும் இடங்கொடா. வாசிப்போரும் மனத்திலிருத்திக் கொள்ளார். நன்றாக எழுதப்பட்டுள்ளது என்ற விமர்சனத்தோடு சிந்தனையிலிருந்து விடைபெற்றுக் கொள்ளும்.

உலக கடமைகள், இறை கடமைகள், குர்ஆனியக் கடமைகள், அன்றாடம், அடைவு வரை, வாரமொரு முறை, வருடமொரு தடவை, வாழ்வில் ஒரு தரமாவது செய்ய வேண்டியன, நம் குடும்பத்துக்கு, நம் உறவினருக்கு, நம் சமூக கத்துக்கு, நம் நாட்டுக்கு, உலகுக்கு, மனித குலத்துக்கு, மறுமைக்கு, இல்லாதோருக்கு, இயலாதோருக்கு, உள்ளவர்கள் செய்ய வேண்டியன, எழுதப்பட்ட கடமைகள், எழுதப்படா கடமைகள், தார்மீகக் கடமைகள், எதிர்பார்ப்பற்ற கடமைகள் என நீண்ட பட்டியலையே தரலாம்.

ஆனால் நாம் இங்கு கடமைகள் பற்றிப் பொதுவாக சிறிது விளங்கி பின்னர் நோக்கத்துக்குள் நுழையலாம் என நினைக்கிறேன். நமது கடமை, ஆணின் கடமை, பெண்ணின் கடமை, சிறுவரின் கடமை, பெற்றோரின் கடமை, பெரியோரின் கடமை, கணவனின், மனைவியின் கடமை, பிள்ளைகளின் கடமை, தந்தையின், தாயின் கடமை, கற்றோரின், மற்றோரின் கடமை, அயலவர் கடமை, மாணவர் கடமை, ஆசிரியர் கடமை, அதிபரின் கடமை, ஆட்சியாளர் கடமை, பொது மகன் கடமை, அரசனின், அடிமையின் என வகைப்படுத்தப்பட்டும் இருக்கும். நாம் இங்கு நமக்கு தரப்பட்டுள்ள இறை கடமைகள் பற்றிப் பேசுவதற்காகத் தொடர்கிறோம். நமது மார்க்கக் கடமைகள் எனலாம் அல்ஹம்துலில்லாஹ்!

எது மார்க்கக் கடமை! ஏன் செய்ய வேண்டும்! யார் தந்தது? யாருக்காக? செய்வதால் ஏற்படும் நன்மை, தீமைகள்! தாக்கங்கள், பயன்கள் எனனென்ன என்ற கேள்விகளும் எழவே செய்கின்றன. ஆனாலும் நாம் இங்கு, இறைவன் நம்பிக்கையாளர்கள் என்போருக்கு, தனது திருத்தூதர் மூலம், தனது குர்ஆனில் கூறப்பட்டுள்ள கடமைகளை அதன் வரையறைக்குள் ஆய்வு செய்வதே பொருத்தமானதும், ஏற்புடையதுமாகும். நாம் இஸ்லாமியர்கள் என்ற வரைவுள் குர்ஆனில் நமக்கு எதைச் செய்யக் கூறப்பட்டிருக்கின்றதோ அவை எல்லாம் கடமைகளே! சுருக்கின் ஏவலைச் செய்வதும், விலக்கலை விடுவதும்கூட கடமையே!

இஸ்லாமியர் என்பதை உறுதி செய்து கொள்ள நாம். அல்லாஹ்வைத் தவிர வேறு நாயனில்லை என சாட்சியம் கூறுதலும் நம்மீது விதிக்கப்பட்டுள்ள நிபந்தனையே! அன்றேல் நாம், இஸ்லாமியர் என்ற வகையில் கடமையானவர்கள் அல்ல என்பது மட்டுமல்ல, இஸ்லாமியர் எனக் கூறிக் கொள்ளவும் முடியாதவர்கள். இஸ்லாமியர் என்போர் அடி பணிந்தவர்கள் என்றால் யாருக்கு அடி பணிந்தவர்கள்! அந்த அடிபணிதலை அறிந்து செய்கிறோமா? என்பது உறுதிப்பட மேற்கண்ட சாட்சியம் துணைநிற்கின்றது. இன்றேல் நமது அடிபணிதல் யாருக்குச் செய்யப்பட்டது என்பது கேள்வியாகிவிடும்.

இங்கு நமது கடமை தொடங்குகின்றது என நம்பலாம். அதாவது அல்லாஹ்வை அறிதல் என்பது கடமை ஆகிவிடுகின்றது. இந்த அறிதல் என்ற கடமையை இலகுபடுத்துவதற்காகவே நமக்கு அல்லாஹ், நம்மேல் கொண்ட கருணையால் தொழுகை என்றொரு கடமையை முன் வைக்கின்றான். அதாவது, தன்னை நினைவு கூருவதற்காக தொழுகையை நிலைநிறுத்தும்படி கட்டளையிடுகின்றான். காரணம் அறிதல் என்ற கடமை, மனிதன் மறதியாளனாகப் படைக்கப்பட்டு உள்ளதால் அறிந்தவை மறவாதிருக்க, ஞாபகப்படுத்த, நினைவுகூரும் வேலையைக் கடமையாக்கி வைத்துள்ளான். அதனால்தான் அதிகமதிகமாக தன்னை நினைவு கூரும்படி கூறுகின்றான்.

நாம் சிறு வயது முதல், ஆறு விடயங்களில் ஈமான் கொள்ள வேண்டும் எனவும், ஐந்து கடமைகளைச் செய்ய வேண்டும் எனவும் அறிந்து அவற்றைப் பாடம் பண்ணி அவற்றைச் செய்தால் நமது கடமை முடிந்து விடுகிறது என்ற கற்பனையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால், குர்ஆனில் அல்லாஹ் நமக்கு நிறைய விடயங்களை, நமது ஈடேற்றத்திற்காகக் கூறியிருக்கின்றான். அந்தக் கடமைகள் எவையும் நமது சிந்தனைக்குள் வராதிருப்பதற்குக் காரணம் நாம் ஏலவே கருத்தேற்றம் செய்யப்பட்டு ஐந்து கடமைகள் மட்டுமே உண்டு என்ற கற்பனையே!

அறிதல் என்ற கடமை நம் சிந்தனைக்குள் வரவே இல்லை. நாயகம் ஸல் அவர்கள் கூறிய சீனா தேசம் சென்றாயினும் அறிவைத் தேடு என்பதன் காரணம் நமது சிந்தனையைத் தூண்டத் தவறிவிட்டதா! அல்லாஹ்வும் தன்னருள் மறையில் பல இடங்களில் சிந்தனையைத் தூண்டும் பல விடயங்களைக் கூறி இருப்பினும், குறிப்பாக, 20:114இல் ‘என் ரப்பே! கல்வி ஞானத்தை எனக்கு அதிகமாக்குவாயாக’ எனப் பிரார்த்திக்கும்படி அறிவுறுத்தி உள்ளமை கவனத்திற் கொள்ளப்பட வேண்டியது.

15:99 – உமக்கு உறுதி ஏற்படும் வரை அல்லாஹ்வை அறிந்து கொண்டிருப்பீராக! உண்மையில், நாம் ஒன்றை அறியும் வரை தேடலில் இருப்போம். அதனை தீர்க்கமாக அறிந்து கொண்டோம் என்ற உறுதிப்பாடு வந்து விடுவோமாயின், அறிதல் என்ற பயணம் நின்று விடுகின்றது. ஆனால், அது நினைவு கூரல் என்ற நிலையினுள் தன்னை குறுக்கிக் கொள்கின்றது. அறிந்த ஒருவனே, நினைவு கூரமுடியும் என்பதால், மறதி என்ற பொறிக்குள் நாம் விழுந்து விடாது இருப்பதற்காக தொழுகை என்ற நினைவுகூரலை நமக்கு கடமையாக்கி உள்ளான்.

அறிதலையும், தொழுகையையும் சரியாகப் புரிந்து கொள்ளாத காரணத்தினால் மேற்கண்ட வசனத்தில் கூறப்பட்டுள்ள உறுதி ஏற்படும் வரை என்பதை, ‘மரணம்’ ஏற்படும் வரை எனவும், அறிந்து கொள்வீராக என்பதை, ‘வணங்கி’ வருவீராக எனவும் மொழி பெயர்த்து, குழப்ப நிலையில் விட்டுள்ளனர்.

7:105;இல் ‘நான் அல்லாஹ்வின் மீது உண்மையை அன்றிக் கூறாதிருப்பது கடமையாகும்’. இவ்வசனத்தில், அல்லாஹ் பற்றிய உண்மையை அறிந்திருப்பது கடமையாகும் என்ற அறிவுறுத்தலும் மறைந்தே நிற்கின்றது. ஆக, அவன் பற்றிய உண்மையை அறிந்திருப்பது, உண்மையை அன்றிக் கூறாதிருக்கும்படி கூறியதை கடமையை நிறைவேற்ற உதவுவது. இவைகளை எல்லாம் நாம் எப்போதும் கடமையாகப் பார்த்ததில்லை என்பது, நாம் வழிவழியாகப் பின்பற்றி வந்த முன்னோர்களின் வழமையால் என்பதே!

50:45 இல் கூறப்படும், எனது எச்சரிக்கையை அஞ்சி நடப்பவருக்கு திருக் குர்ஆனைக் கொண்டு நீர் உபதேசம் செய்வீராக! என்பதும் நம்மீது கடமையே!

7:55 உங்கள் ரப்பை மிக்க பணிவாகவும், இரகசியமாகவும் நீங்கள் அழையுங்கள. நிச்சயமாக அவன் வரம்பு மீறுவோரை நேசிக்கமாட்டான். இது நம்மீது கடமை இல்லையா!

எதைக் கொடுப்பது எனக் கேட்கின்றார்கள், மீந்ததைக் கொடுங்கள்’ எனக் கூறுங்கள். ஆக நாம் நாம் மீந்ததைக் கொடுப்பதைக் கடமையாகக் கொண்டுள்ளோமா! ப்படிக் கூறுவதையாவது கடமையாகக் கொண்டுள்ளோமா!

உங்கள் சொத்தில் யாசிப்போருக்கும், யாசிக்காதோருக்கும் பங்கு உண்டு எனக் கூறியுள்ளானே, எப்போதாவது அவர்களது பங்கைச் செலுத்தி உள்ளோமா? இதனை நாம் கடமையாகக் கருதவில்லையா! இன்னொருவருடைய பங்கை நாம் சாப்பிட்டுக் கொண்டிருப்பது விலக்கலை ஏற்று நடக்கவில்லை என்ற குற்றத்தைச் சுமக்க வைத்ததுடன், அவர்களது அனுமதியின்றி பிறரது சொத்தை அனுபவித்த குற்றத்தையும் அல்லவா வருவிக்கின்றது. இந்தக் கடமை ஏன் நம்மால் தவற விடப்படுகின்றது!

34:13 இல் நன்றி செலுத்துவதற்காகக் காரியங்களைச் செய்து வாருங்கள். என்னுடைய அடியார்களில் நன்றி செலுத்துவோர் குறைவானவர்களே என்ற அல்லாஹ்வின் ஆதங்கம் எப்போதாவது நமது சிந்தனையைத் தூண்டியுள்ளதா! கடமையாக நினைத்துள்ளோமா!

4:147இல் ‘நீங்கள் அல்லாஹ்வை விசுவாசித்தும், அவனுக்கு நன்றி செலுத்தியும் வந்தால், உங்களுக்கு வேதனை செய்து அவன் என்ன அடையப் போகிறான்? அல்லாஹ்வோ நன்றி பாராட்டுகிறவனாகவும், நன்கு அறிபவனாகவும் இருக்கின்றான்’ என்பதில் கூறப்பட்டுள்ளவை நமது கவன ஈர்ப்பைப் பெற்றிருக்கின்றதா! இவை கடமை இல்லையா!

25:63இல், ‘அர்ரஹ்மானுடைய அடியார்கள் எத்தகையவர்கள் என்றால், பூமியில் பணிவாக நடப்பார்கள். அறிவீனர்கள் அவர்களிடம் தர்க்கம் செய்திட முனைந்தால், ‘ஸலாமுன்’ எனக் கூறிவிடுவார்கள்’ என்ற இவ்வசனம் மிகத் தெளிவாகக் கூறியவாறு, கடமையாக ஏற்கப்பட்டுப் பின்பற்றப்பட்டிருந்தால், இன்று நம்மத்தியில் குழப்பங்களே இருந்திராதே!

74:6இல் கூறிய ‘அதிகமானவற்றைப் பெற எண்ணி உபகாரம் செய்யாதீர்’ என்பது கடமையாகக் கொள்ளப்பட்டிருந்தால், நம்முள் ஏமாற்றங்களும், இன்னல்களும், விரோதங்களும் ஏற்பட்டிராதே!

76:12இல், ‘நிச்சயமாக நாம் அவனுக்கு வழியை விளக்கினோம். ஆகவே, நன்றி செலுத்துபவனாகவும் இருக்கலாம், அல்லது நன்றி கெட்டவனாகவும் இருக்கலாம்’ , சுயகட்டுப்பாடோடு கூடிய சுதந்திரம் கடமையாக உள்ளமை அறியப்பட்டிருந்தால், நம் சுதந்திரம் பாவிக்கப்படுமாறை அறிந்திருக்கலாம் அதன்படி நடந்து இறை திருப்தியைப் பெற்றிருக்கலாமே!

அல்லாஹ் குர்ஆனில் பல இடங்களில், அழகிய கடன் கொடுப்பது பற்றிப் பேசியுள்ளான். சூரா பகறாவின் 282ஆம் வசனத்தில், கடன் கொடுத்தல் பற்றிய மிகவும் விரிவான செய்தி ஒன்று (அதுவே குர்ஆனில் உள்ள வசனங்களில் மிகப் பெரியது) உளதே, அதனை எப்போதாவது கடமையாகக் கருதியுள்ளோமா! அது கடமை என்பதை உணர்ந்திந்தால் இன்று வங்கி முறைமையின் பிதாமகர்களாக நாமல்லவா இருந்திருப்போம். ஆனால், நாம் வங்கி என்பது முஸ்லிம்கள், கிட்ட நெருங்கவும் கூடாத ஒன்று என்ற எண்ணத்தை அல்லவா பரிப்பிக் கொண்டும், வங்கியில் வேலை செய்வதையே ஹஹாம் என்பதாகவும் கருதி வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இது சுத்த நிராகரிப்பானமைக்குக் காரணம், நாம் கடன் பற்றிய மேற்கண்ட வசனத்தை உய்த்துணர்ந்து அறிவதைக் கடமையாகக் கொண்டு செயற்படுத்தாததே என்றால் மிகையாகிவிடுமா!

புனித குர்ஆன் ‘றிபா’ என்ற வரையறைக்குள் தடை செய்துள்ளதை அறிவதை நாம் கடமையாகக் கொண்டு சரியாக அறிந்து கொள்ள குர்ஆனை நாடாததால், குர்ஆனில் அச்சொல்லுக்குக் கொடுக்கப்பட்டுள்ள வரைவிலக்கணத்தை 3:130இல் அறியாது, எதனையோ அறிந்து வைத்துக் கொண்டு, குர்ஆனைப் புறக்கணித்துக் கொண்டிருக்கின்றோம்.

அதன் மூலம் இஸ்லாத்தில் வங்கி முறைமை இல்லாதது போன்று நம்பிக் கொண்டிருக்கின்றோம். அதனால். அல்லாஹ் ‘றிபா’வை அழித்து, தர்மத்தை வளர்க்கின்றான் என்ற வசனத்தினைக் கருத்திற் கொள்ளாது விட்டுள்ளோம். அல்லாஹ்வின் கூற்றுப்படி ‘றிபா’ அழிந்திருக்க வேண்டும். ஆனால் ‘றிபா’வை தற்போதைய வட்டியாக நினைத்துக் கொண்டு நாம் செயல்படுவதால். ‘றிபா’ அழிக்கப்படவில்லை, அதனால் அல்லாஹ்வின் வாய்ச் சொல் நடைமுறையில் இல்லை. அவன் அதனைச் செய்ய முடியாத இயலாதவனாக ஆகிவிட்டான் என்பது போன்ற பிரமையை உருவாக்கி வைத்துள்ளோம். இச்செயலால் குர்ஆனின் பல விதிகளை நாம் நிராகரித்தவர்கள் என்ற குற்றத்தில் மூழ்கியுள்ளோம். இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள் என்ற கடமையையும், கடமையாக ஏற்காது, அல்லாஹ்வை அறிய வேண்டிய விதமாக அறியுங்கள் போன்ற பல கடமைகளில் இருந்து தவறி உள்ளோம்.

இஸ்லாத்தில் அனைத்தும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. தனியாக சிலவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு இஸ்லாத்தைப் பின்பற்றுவதாக நினைக்கக் கூடாது. அதனாலேயே. அல்லாஹ் நமது கண்மணி நாயகம் ஸல் அவர்களையே நீர் சிலதை எடுத்துக் கொண்டு சிலதை விட்டுவிடுவீரோ என எச்சரிக்கின்றான். ஆக முழுவதையும் அறிவதும் கடமை அல்லவா!

தொடரும்…

– நிஹா -