முழு மனித குலமும் வெட்கித் தலைகுனிய வைத்த செய்தியே பாஞ்சாலி துகிலுரிப்பு. உலக வரலாற்றைக் கறைபடுத்திய பல நிகழ்வுகளில் ஆதியானது. அந்நிகழ்வு உண்மையோ கற்பனையோ எதுவாயினும் அதனை இலக்கியமாகக் கொள்ளுதல் மனித நாகரிகத்தைக் குழிதோண்டிப் புதைப்பதே! தாய்க்குலத்தைத் தலைகுனிய வைப்பதே! அதனைப் பாடியோர் எவராயினும் இகழப்பட வேண்டியவர்களே! தவிர புகழப்படக் கூடியவர்கள் அல்லர். அக்கதையைப் பாடநூலாக்கிய அனைவரும் பகுத்தறிவற்ற ஜென்மங்களே! அதனைப் புத்தக வடிவில் கொணர்ந்தோர் சமூகக் குற்றவாளிகளே!
அப்படியோர் பெண் துகிலுரிப்பு சம்பவம் அரசவையில் நடைபெற்றிருந்தால் அது மறைக்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்றே. கவிதைகளாகவும், காவியங்களாகவும் ஆக்கி இலக்கியத்துக்கு பசளையென்றுகளை நாட்டி இருக்கக் கூடாது. அவ்வாபாசத்தை மக்கள் மத்தியில் காட்சிக்கு விட்டிருக்கக் கூடாது. நமது தாயோ, தாரமோ, சகோதரியோ, அந்நிலையை அடைந்திருந்தால் அதனை இலக்கியமாக்கி இன்புற்றிருப்போமா? கவிதை செய்து களிப்புற்று இருப்போமா? காவியமாக்கி, ஓவியமாக்கி உவந்து இருப்போமா? என்னே கொடுமை! அவள் செய்த பாவம் என்ன? ஐவருக்குப் பத்தினியானதால் கிடைத்த தண்டைனையா உலக அழிவு வரை அவள் துகிலுரிப்பு நினைவு கூரப்படுவது எனவே கருத வேண்டியுள்ளது. அவள் செய்தது குற்றமாயினும் அதனை காவியமாக்கிப் பெண்ணினத்தை அசிங்கப்படுத்தியது ஏன்?
பாஞ்சாலிக்கு இவ்வுலகில் நடந்த அநியாயங்களில் முதன்மையானது அவளை ஐவருக்குப் பத்தினியாக்கியது. எந்தப் பெண்மகளுக்கும் நடக்கக் கூடாதது. தன்மானமுள்ள ஆண்மகன் எவனாலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. இத்தகு அதர்மத்தை, அக்கிரமத்தை, அநாகரிகத்தைக் காட்டுமிராண்டித்தனத்தைக் கற்பனை பண்ணிய மனித மனத்தை என்னவென்று கூறுவது? அதனைக் கவிதையாக்கி மகிழ்ந்தோர் எப்படியான வக்கிர மனங் கொண்டோராக இருக்கலாம்! ஒரு மங்கையைத் தம் மனையாளாக்கிய அவ்வகைச் சகோதரரை உருவாக்கிய பண்பு கொண்டோரை மனித இனத்துள் வைத்துப் பார்க்க முடியுமா? பெண்ணினத்துக்கு அருவருப்பை ஏற்படுத்தக்கூடிய, ஆணினத்தின் அஜீரணத்தைக் காவியமாக்கிப் பெருமைப்படல் இழிசெயல் இல்லையா? பத்தினியென்ற பெயரில் ஓர் அபலையைப் பரத்தையாக அறிமுகப்படுத்தி மனித நாகரிகத்தை மாசுபடுத்திய மாபாதக செயலை கற்பனை பண்ணியவர். பாவாக்கியவர், படித்தவர், புகழ்ந்தவர், சுவைத்தவர், நயந்தவர், நவின்றவர் அனைவரும் குற்றச்செயலுக்கு உடந்தையானவர்களே!
உலகில் நடவா, நடக்கக்கூடா இன்னொரு அநியாயம் அவ்வபலைக்கு அவள் மூத்த கணவரால் செய்யப்பட்டது. அது அவளைத் தன்விருப்புக்கு சூதுப் பொருளாக்கித் தோற்றமை. அதன் மூலம் அன்னியனுக்கு அவளை அடிமைப் படுத்தியமை. தீராப்பழிப்புக்கு, அவமானத்துக்கு ஆளாக்கியமை. அவள் வாழும் உரிமையைப் பறித்தமை. மனித நீதியைக் குழிதோண்டிப் புதைத்தமை. அதுவும் தர்மவான் எனப் புகழப்படுபவரால் தனது தம்பிமாருக்கும் சொந்தமான தர்ம பத்தினியைத் தோற்றமை. இதனை அவரது அறியாமை என்பதா? ஆணவம் என்பதா? பெண்ணைக் கிள்ளுக் கீரையாக நினைத்திருந்தமை என்பதா? பிறர் உரிமையைத் தன தாக்கியமை என்பதா? தம்பியர் தன்மீது வைத்திருந்த மரியாதையை மதிக்காது துஷ்பிரயோகம் செய்தமை என்பதா? அல்லது கூறவும் நாக்கூசும் வகையில் அவள் ஐவருக்குப் பத்தினியாக இருந்தவள்தானே என்ற அவமதிப்பு எனக் கூறுவதா? அல்லது அனைத்துமா? வாசகர் முடிவுக்கு அதனை விட்டு விடுகிறேன்.
இதனை வஞ்சகம் என்ற வரைவுள் அடக்கி நியாயங்காண முனைந்தால், அவ் வைவரும் முட்டாள்கள் என்ற முடிவுக்கு வரவேண்டும். நாட்டையும் மக்களையும் சூதாடித் தோற்கும் நாசவேலையை நயவஞ்சகத்துள் வைத்து நியாயப்படுத்த முனைவது அனைத்திலும் கொடிய அக்கிரமமே! தர்மத்தைத் தாரை வார்த்தவர்கள் எனக் கூறலாமா? அநியாயம் செய்தோரை அப்படி எப்படி கூறுவது? தர்மவான் என்பவன் சூதை மனதால் நினைத்தாவது பார்ப்பானா? அதுவும் தன் பொறுப்பில் தன்னை நம்பியுள்ள தன்நாட்டை, தன்மக்களை, தன்தம்பியரை, ஐவருக்கும் ப(ர)த்தினியாக வாழ்ந்தவளை தோற்கும் மனநிலை படைத்தவன் மாமன்னன் எனப்படுவானா மாபாதகன் எனப்படுவானா?
அடுத்தது அவணியில் அந்த அபலைக்கு நடந்த ஆடையவிழ்ப்பு. பட்டப்பகலில் அவள் கணவர் ஐவருட்பட பலபேர் அமர்ந்து பார்த்திருக்க ஆட்சி மன்றில் நடந்த கைங்கரியம். அவ்வவையில் பெண் மானம் காக்கும் தன்மானமுள்ள மனிதன் ஒருவனும் இருக்கவில்லை போலும். ஒரு பெண் அவள் விருப்பத்துக்கு எதிராக அன்னிய ஆண் ஒருவனால் துகிலுரியப்படுவதைப் பார்த்துக் கொண்டு சபதங்கள் போடும் சண்டாளர்களான அவள் கணவர்மாரை ஆணினத்துள் அடக்கலாமா? அங்கு அரசவையில் அமர்ந்து வேடிக்கை பார்த்திருந்தவர்களை மனித வர்க்கத்துள் வகைப்படுத்தலாமா? அவள் சேலையை உரிய முனைந்த பேடிகளை மிருகத்துளாவது அடக்கிடலாமா? இவ்வநியாயத்தை அழகுபட கவிதையாக்கி பெருமை கொண்டோரை எந்த வகைக்குள் அடக்கிடுவது? அவர்கள் துகிலுரிந்தோரைவிடக் கேடுகெட்டவர்களே! மனித நாகரிகத்தைப் பாடுவது இலக்கியமாகலாம்! இவ்வாறான அசிங்கங்களை அழகுபட மேடையேற்ற நினைத்தது நயவஞ்சகமில்லையா? துரோகமில்லையா?
அன்று அரசவையில் தொடக்கி வைத்த அந்த அநாகரிகம் இன்று நாகரிகம் என்ற பெயரில் பெண்ணினத்தாலே மேடையேற்றப்படுவதை நினைக்குந் தோறும் மானமுள்ள பெண்கள் படும்பாட்டை அவர்களின் மனோநிலை பாதிப்பை அறிய நாடி பிடித்துப் பார்க்க வேண்டுமா? உடுக்கை இழந்தவன் கைபோலாங்கே இடுக்கண் களைவதாம் நட்பு என்ற வள்ளுவம் வழி வாழ நினைக்கும் இனம் தமிழினம். துன்பத்தில் உதவி செய்யப்படுவது உடுமானத்தை இழந்தபோது நமது கைகள் மானத்தைக் காக்க விரைவதைப் போன்று தேவையறிந்து அத்தருணத்தில் செய்யப்பட வேண்டியது என நீதிமொழி கூறி நெறிதவறாது வாழ நினைக்கும் நம் தமிழர் மத்தியில்தானா இவ்வாறான அசிங்கமான இலக்கியங்களும் உலவிக் கொண்டிருக்கின்றன என்பதே இரத்தக் கண்ணீர் வடிக்க வைத்துக் கொண்டிருக்கும் செய்தி.
பெண் மானம் போக்குவதைப் பாடலாகப் பாடி இன்பமுறுபவர்கள் எல்லாம் புரட்சிக் கவிஞர்களா? கண் பார்த்தாலே களங்கம் வந்து விடும் என்ற கண்டிப்பு கொண்ட பெண்ணினத்துக்கு இப்படியொரு தண்டனையா? பெண்ணிற்கு இருக்க வேண்டிய குணங்களாக நாணத்தை, பயிர்ப்பை வகைப்படுத்தி அவள் பண்பைக் காட்ட முயன்ற தமிழ் கலாசாரத்தில், அவள் துகிலுரிதலைப் படம் பிடித்துக் காட்டி மகிழும் அசிங்கங்களை என்னென்பது? நல்ல காலம் அக்காலை வீடியோ கருவிகள் கண்டு பிடிக்கப்படாதிருந்தமை. இருந்திருந்தால் You Tube இல் தரவேற்றி உலகோர் பார்த்து மகிழ வைத்தும் இருப்பர் இச்சண்டாளர்கள். அல்லது Live Telecast நேரடி ஒளிபரப்புச் செய்து தம் சாகசத்தை நினைந்து மகிழ்ந்திருப்பர், பெருமைப்பட்டிருப்பர் இழிமனங் கொண்டோர்.
இவையெல்லாம் உலகப் புகழ்பெற்ற காவியங்களாக நினைந்து படித்து மகிழ்கின்றனர். இவற்றிலும் இறைவன் புகழ் வேறு. துகிலுரியும் வரை பார்த்திருந்து அந்த சீலையை வளரவிட்டு வேடிக்கை பார்த்திருக்கிறார் கடவுள். அப்பெண்ணின் சீலையைத் தொட்டவனின் கையை அங்கிருந்தோர் முறித்திருக்க வேண்டும், அல்லது கடவுள் அவனை முடமாக்கி இருக்க வேண்டும். அதனை விட்டு அக்காட்சியை தொடர் நாவலாக்கியது போல் உரிய, உரிய சேலை, சேலையாக வந்து கொண்டிருந்ததாம். அதனை வண்ண வண்ண சேலைகளாம்… அவை வளர்ந்தன, வளர்ந்தன, வளர்ந்தனவே எனப் பாடி பெருமை கொண்டிருக்கின்றனர். என்னே கேவலம்!
ஒரு வினாடி கூட நடக்க அனுமதிக்கப்பட்டிருக்கக் கூடாத அந்த அசிங்கத்தை தொடர் நவீனமாக்கியுள்ளனர் பெண்ணினத் துரோகிகள். அவற்றைப் பொறுமை யாகப் பார்த்துக் கொண்டிருந்து பின்னர் வீரமுழக்கம் செய்கின்றனர் அவள் கணவர்மார் எனப்படும் கயவர். இவர்கள் எல்லாம் கணவர்களா என அவள் காறி உமிழ்ந்திருக்க வேண்டும். அப்படியொரு நிகழ்வுக்குப் பின்னரும் அந்தப் பேடிகளைக் கணவராக அவள் மதித்திருந்தால் அவளை என்னென்று கூறுவது? அக்கணவர்கள் முகத்தை அவள் பார்த்திருந்தால் அதைவிடக் கேவலம் வேறென்ன இருக்க முடியும்? மனைவியின் துகிலுரியும் போது பார்த்திருந்துவிட்டு எப்படி மக்கள் முகத்தைப் பார்த்தனரோ வெட்கங்கெட்டோர். இதன் பரிணாமம் தான் இன்றைய மேடை ஆடையவிழ்ப்புக்களோ?
இவற்றையெல்லாம் நாடகமாக நடத்தி, சினிமாப் படங்களாக்கி மக்கள் மத்தியில் விற்பனைக்கிடும் பாவிகள் தம்மனைவிக்கு, தன் அன்னைக்கு, தன் சகோதரிக்கு தன் மகளுக்கு இப்படியோர் அவலம் நடந்திருந்தால் அதனைக் காவியமாக்கி, ஓவியமாக்கி, நாடகமாக்கி, சினிமாவாக்கி, மகாபாரதமாக்கி மகிழ்ந்திருப்பார்களா? வியாபாரம் செய்திருப்பார்களா? பணம் பண்ணி இருப்பார்களா?
இதனைப் பாடப் புத்தகங்களிலும் இணைத்து மாணாக்கரை பாடம் பண்ண விட்ட அநியாயத்தால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். அதனைப் பாடசாலையில் படித்தமைக்காக, பாடம் செய்தமைக்காக, ரசித்தமைக்காக இன்றும் நான் வெட்கப்படுகின்றேன். வேதனைப்படுகின்றேன். இக்காவியங்களும் பாடல்களும் கதைகளும் தீயிட்டுக் கொழுத்தப்பட வேண்டியவையே தவிர படிக்கப்பட வேண்டியவை அல்ல.
ஒவ்வொரு மானமுள்ள பெண்ணும் தம்வீட்டில் இப்படியொரு புத்தகம், கவிதை இருந்தால் அதனை எரித்துவிட வேண்டும். உலகில் இனிவரும் சமுதாயமாவது இதனைக் காணாது இருக்க வேண்டும். அப்போதுதான் மேடைகளில் துகிலுரிதல் அசிங்கமானது என பெண்கள் தம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமாவது உருவாகும்.
இவைகள்தானா மேடையில் ஆடை அவிழ்த்து அம்மணமாகும் மனோநிலையை அம்மாக்களுக்குக் கொடுத்தது. அவிழ்ப்பவர்களுக்கும் மாக்களுக்கும் உள்ள வித்தியாசமே ஆடைகள்தானே! தாமும் மாக்கள்தான் எனக்கூறி, இதனையும் சமவுரிமைக்குள் அடக்கப் பார்க்கிறார்களா? அம்மணத்தோடு திரிவது மிருக உரிமை. அது உடுத்துவதே இல்லை உரிவதற்கு. மிருகங்களுக்கு ஆடைகட்டி அழகு பார்க்கும் ஆரணங்குகள் தாங்கள் ஆடையவிழ்த்து அம்மணமாவதேன்! பணம் பண்ணும் இலகு வழியா? பாரம்பரியம் என்ற நினைப்பா? அன்று அது வன்செயல். அம்மாதின் விருப்பமின்றிச் செய்யப்பட்டது என்பதை உணர்வீர்களா?
மேடையில் ஆடை உரியும் ஒரு பெண் தான் ஒரு குழந்தைக்கு தாயாகுபவள் என்பதை அவள் மறந்துவிடக் கூடாது. நாளை அவ்வாடை அவிழ்ப்புக் காட்சியை அவளுக்குப் பிறந்த அப்பையன் பார்க்க நேர்ந்தால், அன்றி அவனுக்குப் பார்க்கும்படி காட்டப்பட்டால் அவன் நிலையைச் சற்று எண்ணிப் பாருங்கள் சகோதரிகளே! (உங்களைச் சகோதரிகள் எனக் கூறுவதே கேவலம்).
பெண்ணியம், பெண்ணுரிமை, சமவுரிமை பேசுவோர் கண்களில் இக்காவியங்கள் படவில்லையா? அல்லது இவை அநியாயம், அக்கிரமம், அநாகரிகம், அசிங்கம் என்று அவர்கள் மனதில் படவில்லையா? அல்லது தமது இக்கால ஈனத்தை நியாயப்படுத்த இவைகளை ஏற்றுக் கொண்டுள்ளனரா? பூமியில் இறக்கப்பட்ட ஆதாமும் ஏவாளும் அங்கு யாருமற்ற நிலையிலுங்கூட இலை குழைகளால் தமது மானத்தை மறைத்த செய்தி பைபிளில் பதிவாகியுள்ளதையாவது உதாரணமாகக் கொள்ளக் கூடாதா? அன்றி அது நாகரிகமற்ற நிலையில் அவ்விருவரும் செய்த முட்டாள் தனம் என எண்ணுகிறீர்களா?
- நிஹா -