குர் ஆன் வழியில் …
முதல் மனிதனின் மார்க்கம் இஸ்லாம் ( அடிபணிதல் ) !
அல்லாஹ் மனிதனை முதன்முறையாக மண்ணிலிருந்தே படைத்தான். அப்படிப் படைக்கப்பட்ட முதல் மனிதனாகக் கருதப்படுபவர் ஹஸரத் ஆதம் (அலை) அவர்கள். அவரது வலது விலா எழும்பிலிருந்து அவரது துணைவியரான ஹஸரத் ஹவ்வா (அலை) -ஏவாள்- அவர்களைப் படைத்தான். படைப்பின் பின்னர் அவர்கள் சொர்க்கத்தில் வாழ்ந்ததாகவும், இப்லீஸின் – சாத்தான் -வழிகெடுப்பில் சிக்கியதால் அவர்கள் அல்லாஹ்வால் தூக்கி எறியப்பட்டு, நாம் வாழும் இந்தப் பூமிக்கு வந்ததாகவும், புனித பைபிளும், புனித குர்ஆனும் கூறிக் கொண்டிருக்கின்றன.
சுதந்திரம் கொடுக்கப்பட்ட அதே வேளை ஓர் கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது. அக்கட்டுப்பாடு மீறப்பட்டமையாலேயே அவர்கள் இருவரும் பூமியில் கால் பதிக்கும் நிலை உருவானது. அனைத்தும் அல்லாஹவின் நாட்டப்படியே நடந்தன. அவர்களது வாழ்வின் வழிகாட்டியாக அல்லாஹ்வால் அருளப்பட்ட வேத வெளிப்பாடுகள் கூறிக் கொண்டிருக்கின்றன. அதனை நாமும் முழுமையாக நம்புகிறோம். அப்படிப் படைக்கப்பட்ட மனிதன் எதையும் தெரிந்து கொள்ளாதவனாக இருப்பான் என்பதால் வல்ல அல்லாஹ் மனிதனைப் படைத்ததும் அவர்களுக்கு சிலவற்றைக் கற்றுக் கொடுத்தான் என குர்ஆன் கூறுகிறது.
எப்பொழுது மக்களுள் தவறுகள், குற்றச் செயல்கள் தலைகாட்டத் தொடங்குகின்றனவோ அப்போது உபதேசங்களும், ஆலோசனைகளும், சட்டங்களும், கட்டுப்பாடுகளும், தண்டனைகளும், ஏதோ ஓர் வகையில் உருவாவதை நாம் இன்றும் காணக் கூடியதாக இருக்கின்றன. அந்தவாறே அன்றும் ஆதம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ்வால் சில சட்டவரம்புகளும், அறிவுரைகளும், அறவுரைகளும், அறிவும் புகட்டப்பட்டது. ஏலவே கூறியது போல் வல்ல அல்லாஹ்வால் கற்றுக் கொடுக்கப்பட்ட சிலவற்றைக் கொண்டே, அன்றைய முதல் மனிதனின் வாழ்வு தொடங்கி இருக்க வேண்டும். அப்படித்தான் குர்ஆன் கூறுகிறது.
ஆக அன்றே அந்த அடிபணிதல் தொடங்கியிருக்கிறது. அடி பணிந்தோரை நாம் முஸ்லிம்கள் என அழைக்கிறோம். அவர்கள் கடைப் பிடித்த மார்க்கத்தை, வாழ்வியலை, அல்லாஹ் இஸ்லாம் (அடிணிதல்) என்றே பெயர் சூட்டியுள்ளான். அல் குர்ஆன் 30:30, மேற்கண்ட உண்மையை இப்படிக் கூறுகிறது. ‘எனவே, நீர் உம்முடைய முகத்தை தூய மார்க்கத்தின்பால் முற்றிலும் திரும்பியவராக நிலைநிறுத்துவீராக. அல்லாஹ் மனிதர்களை எதில் படைத்தனோ அத்தகைய இயற்கை மார்க்கத்தை. அல்லாஹ்வின் படைப்பில் எத்தகைய மாற்றமுமில்லை. அதுவே நேரான மார்க்கமாகும். ஆயினும் மனிதர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்’ .
மக்கள் பெருக்கமும், பரம்பலும், இடம்பெயரலும் அவர்களை இயற்கையாகவே பல்வேறு கோத்திரங்களாகவும், சமுகங்களாகவும் மாற்றின. இதையும் அல்லாஹ் கூறாமலில்லை. அறிந்து கொள்ளும் பொருட்டு அவர்களை நாம் பல்வேறு… அப்படிப் பல்வேறு குழுக்களான போது அவர்களுக்கு அவர்களின் ஆத்ம உயர்வுக்காக இறைவன் காலத்துக்குக் காலம் அடியார்களில் சிறந்தவர்களைத் தேர்ந்து அவர்களை தூதர்களாக்கி, அவர்கள் மூலம் தனது தூதை அம்மக்களுக்குச் சேர்ப்பித்தான்.
பெரும்பாலோர் ஏற்க மறுத்தனர். மறுத்தவர்கள் அதனால் அழிவைத் தேடிக்கொண்டனர். எந்த ஒரு சமுகத்துக்கும் தனது தூதைக் கொடுத்தேயல்லாது அவர்களைச் சோதிப்பவனாக அல்லாஹ் இருக்கவில்லை. அந்த வகையில் 124000 நபிமார் பல்வேறு கால கட்டங்களில் தோன்றியதாக நாம் அறிகிறோம். ஆயினும் இறைவன் நமது அறிதலுக்காக வேண்டி சில நபிமார்களையும், அவர்களின் பெயர்களையும், அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தூதுச் செய்திகளையும் நமக்குக் கூறியுள்ளான். ஆதம் (அலை) அவர்களுக்கு அடுத்து, நாம் குர்ஆனின் அடிப்படையில் நூஹ் -நோவா- நபி (அலை) அவர்களை அறிகிறோம். இவரது பெயரும் அவர் காலத்தில் ஏற்பட்ட ஜலப் பிரளயமும், புனித பைபிளிலும், திருக் குர்ஆனிலும் காணப்படுகின்றன. அம்மக்களில் சிலரைத் தவிர ஏக இறைக் கொள்கையை ஏற்காததனால், அத்துமீறி அநியாயங்கள் செய்ய முற்பட்டதனால், வெள்ளத்தை ஏற்படுத்தி அழித்துள்ளான். அன்று நோவாவால் கொணரப்பட்ட இறையருள் வெளிப்பாட்டை ஏற்றுத் தப்பிப் பிழைத்த அடியார்களின் சந்ததியினரே நாம் என்பது மகிழ்ச்சி தருகிறது.
ஒரு மனிதனிலிருந்தே நாமவைரையும் படைத்தாக அல்லாஹ் கூறுகிறான். இன்று போலேயே அன்றும் ஏகதெய்வக் கொள்கை அறிமுகமாகியுள்ளது. முதல் மனிதனாகிய ஆதமும் ஓரிறைக் கொள்கையை உடையவராக இருந்திருக்கிறார். அந்த வகையில் ஓரிறைக் கொள்கையை இற்றை வரை கட்டிக்காத்து நடைமுறைப்படுத்தி வரும் இஸ்லாமே முதல் மனிதன் ஆதமினது கொள்கையாக இருந்திருக்கிறது.
அவர் இறையடியாராகவே இருந்துள்ளார். ஆக அல்லாஹ்வுக்கு அடிபணிந்தவரான ஆதம் அல்லாஹ்வுக்கு அடிபணிதல் என்ற கருத்தைக் கொண்ட இஸ்லாம் மார்க்கத்தவர் என்பது தெளிவு. அத்தோடு நபிமாரனைவரும் ஓரிறைக் கொள்கையைப் போதிக்க வந்தவர்கள் என்பதால் அவர்களனைவரும் இஸ்லாம் மார்க்கத்தவரே!
மேலும், இஸ்லாம், முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுக்குப் புதிதாகக் கொடுக்கப்பட்ட மார்க்கம் அல்ல. அது, ஆதம் முதல் அனைத்து, நோவா, ஏப்ரஹாம், ஈசாக்கு, ஜேக்கப், இஸ்மயேல், மோஸஸ், யேசு நாதர் ஆகிய அனைவருக்கும் இறக்கி அருளப்பட்ட இறை வேதமே! வேதங்கள் அனைத்தும் இறுதியாக வந்த தூதுவரான முகம்மது ஸல் அவர்களால் மீண்டும் கூறப்பட்டு, மெய்ப்படுத்தப்பட்டு, சம்பூரணமாக்கப்பட்டு, அந்த நபிமார் கொணர்ந்த அனைத்து வேதங்களும் இறைவனால் அருளப்பட்டவையே என சாட்சி கூறப்பட்டதே!
அந்த வகையிலும், ஆதம் முதல் அனைத்து நபிமாரும், இறைவனின் அடியார்களே! இறை அடியார் என்பதன் அரபிய சொல்லே இஸ்லாம். ஆதலால் மனித இனம் என்ற பெரும் அந்தஸ்துப் பெற்றவர்கள், ஒற்றுமைப்படுத்த இறக்கப்பட்ட மதங்களின் பெயரால் தம்முள் பிரிவினைகளை ஏற்படுத்தி, அமைதியை இழந்து வாழ்க்கையை நரகமாக்கிக் கொள்ளாது, உங்கள் மார்க்கம் உங்களுக்கு எங்கள் மார்க்கம் எங்களுக்கு என்ற அளவிலாவது வேற்றுமையில் ஒற்றுமையை வளர்க்கக்கூடிய மனநிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
- நிஹா -