பசிகள் மூவகைத்து. அவை பாலியற் பசி அல்லது காமப்பசி, வயிற்றுப்பசி, அறிவுப்பசி என அறியலாம். இனவிருத்தியை மூலதாரமகக் கொண்டு முதற் பசியும், உயிரினங்களின் இயக்கத்தையும் சமநிலையைப் பேணி உலகைக் காப்பதையும் மையமாகக் கொண்டு உணவு தேடலான வயிற்றுப் பசியையும், இவற்றையெல்லாம் படைத்துப் பரிபாலிக்கும் சர்வ வியாபகனும், சர்வ வல்லமையுள்ள வனுமான இறைவனை அறிதலையும், ஆத்ம உய்வையும் மறைமுக நோக்காகக் கொண்டு மனித இனத்துக்கு மட்டும் அறிவுப் பசியையும் இறைவன் அளித்தமை அவனின் அருளே என்பதை சிந்திக்கக்கூடிய எவரும் மறுக்க மாட்டார்.

உலகின் முதற்படைப்புத் தவிர்ந்த அனைத்தும் சம்பந்தப்பட்ட உயிரினங்களின் நேரடி, மறைமுக அல்லது புறக்காரனிகளின் உதவியால் ஏற்படும் சேர்க்கைகளால் உண்டாகின, உண்டாகின்றன, உண்டாகும். இவற்றில் விதிவிலக்குகளும் உண்டு. அது பற்றி ஆராய்வது நம் நோக்கல்ல. இப்படைப்புத் தொழில் தானே நடைபெறுவதில்லை. அதற்கு, அத்தொழிலில் ஈடுபடுவதற்கான ஓர் உந்துதல் தேவை. அவ்வுந்துலையே நாம் காமம் என்றோ, பாலியல் பசி என்றோ குறிப்பிடுகிறோம். இன்ப உணர்வு அதனை வளர்க்கின்றது. இன்பம் பயக்காதவற்றில் எவரும் ஈடுபாடு காட்டார். இன்பத்தைத் தேடும் நடவடிக்கையால் சேர்க்கை நடைபெற படைப்பு தானே நடைபெறுகிறது. இதற்காகவே இறைவன் அனைத்துப் படைப்புக்களையும் இருபாற் சோடிகளாகப் படைத்துள்ளான். இதுவே இனவிருத்தியின் இரகசியம். இதுவே இறையருள்.

வயிற்றுப் பசியை இரண்டாவதாகக் கூறினும் உலக இயக்கத்துக்கு மூலாதாரமானதும், அதற்கான சக்தியைப் பெற வழி சமைப்பதும், அதற்காக உணவு தேடும் முயற்சியில் இறங்க வைப்பதும் வயிற்றுப் பசியே. உணவுத் தேவைக்காக உயிரினங்களில் ஏற்படும் உந்தல் உணர்வையே நாம் இங்கு வயிற்றுப் பசி என்கிறோம். உயிரினங்களில் முதலசைவையோ, இடப்பெயர்வையோ வயிற்றுப் பசியே ஏற்படுத்தியிருக்கும். இப்பசியை இறைவன் உயிரினங்களில் உண்டாக்கி இராவிடில் உலகே ஸ்தம்பித்திருக்கும், எவ்வகை வளர்ச்சியும் ஏற்பட்டிராது. உலகின் சமநிலை தகர்ந்திருக்கும். நம்மால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியா விடயங்கள் நடந்து முடிந்திருக்கும். அனைத்தும் அழிந்தொழிந்து அகிலமே பாலை நிலமாக மாறியிருக்கும். ஆக உணவுத் தேவையை உண்டாக்கி, உயிரினங்களில் அசைவை ஏற்படுத்தி, படைத்தலை, அழித்தலை, பராமரித்தலைச் செய்ய வைத்து உலக சமநிலை காத்து உலகு வாழ வழிசமைப்பதில் வயிற்றுப் பசியே முக்கிய பங்கு வகிக்கிறது. இவை அனைத்தையும் விவரிக்கப் புகின் இச்சிறு ஆக்கம் நீண்டு விடும் என்றஞ்சி நிறுத்துகிறோம். சிந்திப்போருக்கு இந்தளவே போதும். இதனால்தானோ இரைதரும் தொழிலை தனது கடமையாக்கிக் கொண்டுள்ளான். அனைத்து உயிரினங்களுக்கும் பாரபட்சமின்றி இவ்வருள் சொரியப்படுகிறது.

வயிற்றுப்பசியில்லாத பாலியற் பசி சாத்திமற்றது. அப்படியே சாத்தியப்படினும் சத்தின்மையால் நலிந்து நாசம் விளைந்திருக்கும். அன்றேல் அனைத்தும் பல்கிப் பெருகி நீரிலோ நிலத்திலோ எவ்வுயிரினமும் வாழமுடியா அவலம் அரங்கேறியிருக்கும். இங்கு இறைசட்டத்தின் மகிமை இன்றியமையாமையான ‘உணவு வட்டத்தின்’ மூலம் அறியவருகிறது. ஓன்றையொன்று கொன்று தின்று உயிர் வாழும் முறைமையில்லா நிலையை நினைத்துப் பார்த்தால் உண்மை விளங்கும். பாலியற் பசி இல்லா வயிற்றுப் பசி மட்டும் இருந்திருந்தால் படைத்தல் இல்லாது உணவுக்கான அழிப்பே நடைபெற்று உலகில் உயிரினம் படைக்கப்பட்ட சில காலத்திலேயே அழிந்தொழிந்திருக்கும். இவ்விரண்டு பசியும் ஒன்றையொன்று சார்ந்து நிற்பது. ஓன்றில்லாது ஒன்று நீடித்து நிலைக்காது.

உயிரினங்களின் படைப்பும் இயக்கமும் முதலிரண்டு பசிகளால் நடைபெற்றாலும், உலகின் அனைத்துத் தீங்குகளுக்கும் இவையிரண்டுமே முழுக்க முழுக்கப் பொறுப்பாகின்றன. இவையிரண்டின் தேவைகளை நிறைவு செய்யும் வழிவகைகள் பேணப்படாததும், அன்றி அதிகரித்த, அளவுமீறிய இச்சைகள் வரம்பு மீறியதுமே உலகின் பேரனர்த்தங்களுக்குக் கால்கோளாயமைந்தமை வரலாறு தரும் பாடம். இவைகளை மட்டுப்படுத்தவோ அன்றி சீர்செய்யவோ, அன்றி அவை நடைபெறாது தடுக்கவோ ஆட்சிகளும், மதங்களும், சட்டங்களும் தோன்றலாயின.

உயிரினங்கள் தமக்கு வழங்கப்பட்ட பொறிகளுக்கேற்ப ஒன்றையோ, சிலதையோ, அன்றி ஐயறிவையோ கொண்டுள்ளன. உயிரினங்களில் ஐவகை அறிவுகளின் நுகர்வுகளால் ஏற்படும் அனர்த்தங்கள் அளவாயின் மட்டுமே நன்மை பயக்கும். மீறின் அழிவையே தரும் அவலத்தையே ஏற்படுத்தும். இப்படி ஏற்படுத்தப்படும் தாக்கம் மனிதன் தவிர்ந்த மற்றைய உயிரினங்களில் குறைவாகவோ? அரிதாகவோ ஏற்படுகிறது. அவைகளின் மேற்கண்ட தேவைகள் மட்டுப்படுத்தப்பட்டு உள்ளமையே அதற்கான காரணம். அவை தம் தேவைக்கு மிஞ்சி இரு பசிகளையும் எப்போதும் எக்காரணத்தாலும் நுகர முற்படுவதில்லை. எழுத்தில் எழுதப்படாத இறைசட்டங்களே அவ்வுயிரினங்களை வழிநடத்துகின்றன.

மனிதன் மட்டுமே பொறிகளுக்கு அப்பாற்பட்ட அவைகளையே அடக்கி வாழும் ஆறாவதறிவைக் கொண்டுள்ளான். அவ்வகை மனிதனுக்கே நாம் முன்பு குறிப்பிட்ட அறிவுப்பசி ஏற்படுகிறது. அது வெகு சிலரில் மட்டுமே விரவிக் கிடக்கின்றது. அறிவுப்பசி இன்மையே குற்றச் செயல்களும், வன்முறையும், வல்லுறவும் இடம்பெற வைக்கின்றன. அறிவுத் தேடலுக்கான அறிவுப்பசி ஏற்பட்டவர்களின் கண்டு பிடிப்புகளாலேயே நாம் இன்று இத்தனை சௌபாக்கியங்களையும் அநுபவிக்கிறோம். அனைத்து கண்டுபிடிப்புகளும் அறிவுப் பசியால் ஏற்பட்டனவே.

உலகை உய்விக்க அவ்வப்போது தோன்றிய அனைத்து மகான்களும் அறிவுப்பசியால் உந்தப் பட்டவர்களே. உலகின், உலகோரின் அனைத்து வளர்ச்சிகளுக்கும் பின்னணியாய் அமைந்தவை அறிவுப்பசியே. அறிவுப்பசியற்ற மற்றவர்களால், அக்கண்டுபிடிப்புகள்கூட, அழிவுகளையும், அனர்த்தங்களையும் ஏற்படுத்தும் வழியில் கையாளப்பட்டுள்ளன. அச்செயல்கள் பாரிய அளவில் ஈடுசெய்ய முடியாதளவு நட்டத்தை ஏற்படுத்தியும், இயற்கையை மாசுபடுத்தியும் உள்ளன.

அந்த வகையில், ஓசோன்படையில் உண்டான ஓட்டையானது குறிப்பிட்டுக் கூறக் கூடியது. மனிதன் மட்டுமே, அதிகரித்த அத்தியாவசியமற்ற, தேவைகளால் உந்தப்பட்டு அனைத்து தவறுகளிலும் தன்னை ஈடுபடுத்தி, உலகுக்கும் உயிரினங்களுக்கும் பேராபத்தை உண்டு பண்ணுகிறான். பெரும்பான்மை மனிதர்களைப் பொறுத்து, மூன்று பசிகளுமே உலக அழிவுக்கான காரணிகளை முன்னெடுப்பதில் முக்கிய பங்கெடுத்துள்ளமை மனிதவர்க்கமே வெட்கப்பட வேண்டிய ஒன்றாயுள்ளது. படைப்பை, இயக்கத்தை, அழிவை முப்பசியினுள்ளும் மிக நுட்பமாயமைத்து உலகையே இயங்கவைக்கும் இறையருளின் இரகசியம் உணரப்படவேண்டியதே.
- நிஹா -