ஓட்டிய புலிகளை உவந்திட தகுமோ !                                                 விரட்டிய குற்றம் வேறுலகில் உண்டோ !

எட்டொண்ப தாண்டுகள் ஒட்டு மொத்தமாகப்
பட்டதை எண்ணிப் படைத்திடல் எளிதோ !
சுட்டதை யாற்ற மருந்துக ளுண்டோ !
விட்டதைப் பிடிக்க வித்தைக ளுண்டோ !
கெட்டவர் செயலால் கேடுகள் விளைந்ததை
முட்டாள்கள் முடிவால் முடங்கிய எம்வாழ்வை
காட்டு மிராண்டிகளின் கடின சிந்தையால்
தொட்டு நிற்கும் துயர வாழ்வை
தொட்டிட முடியாது தொலைந்த எம்வாழ்வை
ஏட்டில் எழுத்தால் இயம்பிடல் எளிதோ !
கொட்டும் வெயிலிலும் கொடூரக் கடலிலும்
பட்ட அவஸ்தையைப் பகிர்தல் எளிதோ
நாட்டை இழந்து நடுவழி நின்ற
கேட்டை நினைத்துப் பாடிடல் எளிதோ
ஓட்டை உடைத்து உள்ளீடு தின்று
பாட்டிலில் விட்டு பருக்கிய இளநீரை
கட்டி அணைத்தும் கைநழுவ விட்ட
குட்டிக் குழவி பட்டபெரும் பாட்டை
நாட்டுப் பாடலாய் நவில்தல் நயமோ
ஆட்டி அiசைத்த அலைகடல் நடுவில்
பட்டப் பகலிலும் கொட்டும் மழையிலும்
பட்ட பாட்டைப் பாட்டாய் பகிர
விட்ட வற்றை விரைவாய் நினைந்திட
வாட்டி வதைத்த வயிற்றுப் பசியை
கேட்டு அலறிய குழந்தைகள் கொடுமையை
ஓட்டமும் நடையுமாய் உலகை மறந்து
ஓட்டி உலர்ந்து ஒடுங்கிய உடலுடன்
மூட்டை முடிச்சுடன் ஊத்தை உடையுடன்
ஏட்டினில் எழுதிய எண்ணிலாக் கருக்களை
பாட்டினில் எழுதிய பயன்தரு வினைகளை
ஓட்டா லான உண்டியற் கலசத்தில்
போட்டுச் சேர்த்த சில்லறைச் சல்லியை
கோர்ட்டுக்குத் தேவையான குறிப்புக் கோவைகளை
நட்டு நகைகள் நிறைந்த பெட்டகத்தை
பட்டுப் புடவைகள் பக்குவப் படுத்திய
காட்சி யறையாம் கவினுறு கெபினட்டை
கோர்ட்டும் சூட்டும் குழந்தைகள் அணிகளும்
கொட்டிக் கிடந்த கட்டை அலுமாரியை
போட்டுப் பார்த்திடா பல்வகை அணிகளை
சேட்டும் களிசானும் சேர்ந்தே நிறைந்த
வீட்டில் அணியும் விதமாம் அணிகளோடு
பாட்டும் படங்களும் பரவச மூட்டும்
கெசட்டுகள் நிறைந்த குட்டை அலுமாரியும்
விட்டு வந்த தேக்கால் ஆன
பட்டப் பகலிலும் பளிச்சிடும் அலுமாரியை
மீட்டிடல் எளிதோ மீட்டியோர் யாரோ?
கட்டையாய்ப் பரந்து முந்திரி நிறைந்த
வீட்டை அண்டிய தோட்டத்தைத் துறவை
கொட்டைகள் கட்டிய மூட்டை களஞ்சியத்தை
மோட்டைத் தொட்டிட முயலும் ஒடியற் குவியலை
மூட்டைகளாய் மாறிய செந்நெல் மணிகளை
ஆட்டுப் பண்ணைகளில் கூட்டுக் குரவையை
மாட்டுப் பட்டிகளில் மந்தைகள் அவலத்தை
சூட்டில் உயர்ந்த செந்நெற் கதிர்களை
நட்டிட வைத்த நாற்றுக் கற்றைகளை
தோட்டத்தில் கிடந்த தேங்காய்க் குவியலை
பெட்டிகளடங்கிய களஞ்சிய கிடங்கை
பட்டி தொட்டிகளில் பரவிக் கிடந்ததை
நாட்டில் விடுத்திட்ட நலமாம் பொருளை
கெட்டித் தனமாய் நடத்திய பணிகளை
கட்டிக் காத்த களங்கமில் பெருமையை
கேட்டால் தந்திட யாரால் முடியும்?
வீட்டை விட்டுப் பாட்டை இன்றி
ஓட்டப் பட்டதை மறந்திடல் எளிதோ!
ஓட்டிய புலிகளை உவந்திட தகுமோ !!
விரட்டிய குற்றம் வேறுலகில் உண்டோ !!!

- மன்னாரான் – 

26.10.2007

பாஸிச புலிகளின் இனச் சுத்தகரிப்பின் இருபத்து மூன்றாண்டுகளின் அவலத்தை நினைவுகூருமுகமாக !

யுத்தம் முடிந்த நிலையிலும் எமமவர் நிலையில் மாற்றம் ஏற்படவில்லை. ஏமாற்றங்களும், ஏய்ப்புக்களும், கழுத்ததறுப்புகளும், காட்டிக் கொடுப்புக்களும், அரசியல் வியாபாரப் பொருளாக்கப்பட்டதும் தான் நாம் அனுபவித்து வருவது. எம்மை வைத்து எல்லோரும் பிழைப்பு நடத்துகிறார்கள்.

எமது பொறுமை எப்படி புலிகளின் அழிவுக்குக் காரணமாகியதோ, அதே பொறுமை எமக்கு அநீதி இழைத்துக் கொண்டிருக்கும் அனைத்து சாராருக்கும் வந்தே தீரும். அப்போது, காக்கவும் ஆளிரா ! தூக்கவும் ஆளிரா!

- நிஹா -

30.10.2013