புனித பூமி மனிதர் வாழுமிடமில்லையா!

புனித பூமி என்ற இச்சொல் பழமையானது. பொருள் பொதிந்தது. இறையருள் பெற்றது. இதற்கு அனைத்துலக மக்களாலும் ஏற்கப்பட்ட வரைவிலக்கணமும் உண்டு.

அண்மைக் காலங்களாக இந்நாட்டில் சில பௌத்த மதத் துறவிகள் எனப்படுபவர்களால் தன்னிச்சையாகச் சில இடங்கள் புனித பூமிகள் எனக் கூறப்பட்டு. அவ்விடங்களில் பிற மதவழிபாட்டு நிலையங்கள் கூட இருக்கக் கூடாது என்ற வகையில், பலாத்காரமாக தகர்ப்பு வேலைகளில் கூட ஈடுபடுவதும், இறைதியானத்தில் ஈடுபட வந்தவர்களைத் தமது கடமையைச் செய்ய விடாது கலைத்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.

முன்னைய புத்த சிங்கள மன்னர்கள் தமது பௌத்த வணக்க ஸ்தலங்களுக்கு அருகாமையிலேயே மற்றைய மதங்களும் தமது வழிபாட்டுத் தலங்களை நிறுவுவதற்குக் காணி கொடுத்து உதவியுள்ள மிகச் சிறந்த பாரம்பரியத்தை இந்நாடு கொண்டிருந்தது. இப்போது அதற்கு எதிர்மாறான திசையிலே நாடும், ஆட்சியும், மதவாதிகளும் பயணிக்கின்றனர். புத்த தர்மம் எதைத் தனது பஞ்ச சீலமாகக் கொண்டுள்ளதோ அவற்றைப் பற்றிக் கவலைப்படுவோர் இல்லை. அவை ஏதோ சாக்குப் போக்குகளைக் கூறி வளர்க்கப்பட்டு வருகின்றன. 

பிச்சைப் பாத்திரமேந்தி வாழவேண்டிய துறவிகள், கச்சை கட்டிக் கொண்டு காடைத்தனம் செய்யும் அளவிற்கு நாட்டில் மதவெறி தலைவிரித்தாடுகின்றது. புத்த பெருமான்,  ”அடு்த்தவர் மதத்துக்கு இழுக்கை எற்படுத்தும் அனைவரும் தமது மதத்துக்கே தவிர இழுக்கை ஏற்படுத்த வில்லை” எனக் கூறியதெல்லாம் வெறும் ஏட்டுச் சுரைக்காயாகப் பார்க்கப்படுகின்றது. மதம் வளர்க்கப்படுவதற்கல்ல. பின்பற்றப்படுவதற்கே ! ஆனால் இங்கு மதம் பின்பற்றப்படுவதற்கு மாறாக மற்ற மதங்களை  அழித்து தமது மதத்தை வளர்க்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

இந்நாட்டில பல்லின மக்கள் பல்லாண்டு காலமாகப் பரஸ்பரமாக, புரிந்துணர்வு, ஒற்றுமை, நல்லிணக்கத்துடன் அமைதியாக அவரவர் மதங்களைப் பேணி வாழ்ந்து வந்துள்ளனர். சில காலங்களில் அரசியலாரின் அடாவடித்தனங்கள் மக்கள் மத்தியில் பாஷை அடிப்படையில் பிரச்சினைகளை வளர்த்திருந்தாலும், மக்கள் மத்தியிலோ, மதங்கள் மத்தியிலோ பிரச்சினையாக அவை உருவெடுத்ததில்லை.

இந்நாட்டில் வாழும் பல்லின மக்களும் எங்கெங்கோ இருந்து இங்கு வந்து குடியேறியவர்களாக இருந்தாலும் இத்துனை காலமாக புரிந்துணர்வுடன், ஒருவருக்கு மற்றவர் ஒத்தாசையாக இருந்து அமைதியாக அன்பான வாழ்வை மேற்கொண்ட பாரம்பரியத்தை இந்நாடு கொண்டுள்ளது. இந்தியர், பாகிஸ்தானியர், அரேபியர், ஐரோப்பியர், மலாயர் என்ற பாகுபாடின்றி இனசௌஜன்யம் பாதுகாக்கப்பட்டே வந்துள்ளது. இவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காகவே சட்டங்களும், அவர்களுக்காகவே நியமன அங்கத்தவர்கள் என்ற பெயரில் பாராளுமன்றத்தில் பிரநிதித்துவம்கூட வழங்கப்பட்டு இருந்தது இந்நாட்டின் சிறப்பம்சங்களில் ஒனறே.

அவரவர் பின்பற்றிக் கொண்டிருக்கும் வேதங்களும் கூட எங்கிருந்தோ இங்கு வந்தவையே! அப்படி இருந்த மதநிகழ்வுகளில் கூட பேதம் பாராது மக்களும், மதாச்சாரியார்களும் கலந்து சிறப்பித்த காலமும் உண்டே. அண்மைக் காலமாக இப்படியான ஓர் நிலை தோன்றி இருப்பது ஜீரணிக்க முடியாத ஒன்றாகவே இருக்கின்றது.

இந்நாட்டில் எந்த நாட்டிலும் இல்லாதவாறு விரும்பிய மதங்களைப் பின்பற்றுவதற்கு சட்டபூர்வமாக ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

மனிதர் அனைவரும் ஒர் ஆத்மாவில் இருந்து படைக்கப்பட்டவர்கள் என்பது மதங்களாலும் மற்றுமுள்ளவைகளாலும் ஏற்கப்பட்டவையே. மனிதருள் உணவு, பால், இடம் சார்ந்தவைகளால் பிரச்சினைகள் ஏற்பட்ட போதே மதங்கள் அறிமுகமாயின. மதங்கள் அனைத்தும் மனிதன் வாழும் வழிகளைக் கூறிச் சென்றனவே தவிர அமைதிக்குப் பங்கம் விளைக்கும் விடயங்களைக் கூறிச் செல்லவில்லை.

ஆனாலும் மதத்தைப் பின்பற்றிய சில மதவாதிகளால் உலகில் பிரச்சினைகள் உருவாக்கப்பட்டு அவை மக்களைச் சீரழித்துள்ளன. மனித வாழ்வை மேம்படுத்த வந்த மதங்களே, கையாளப்பட்ட விதங்களால் மக்களை அழிக்கும் சாதனங்களாயின. இது சில விஷமிகளால் ஏற்படுத்தப்பட்டவையே தவிர மதங்களின் குற்றமல்ல.

உலகின் பிரதான மதங்களாக கிறிஸ்தவம், இஸ்லாம், பௌத்தம், இந்து ஆகியவை காணப்பட்டாலும் அவற்றைப் பின்பற்றுவோர் ஆயிரக்கணக்காள மொழி பேசுபவர்களாகவே உள்ளனர். அவரவர்க்குரிய மதஅனுஷ்டானங்கள் கூட வேறுபாட்டைக் கொண்டுள்ளன. கலாசாரங்கள் முற்றான மாறுபட்ட தன்மைத் தனவாகவே காணப்படுகின்றன. மதத்தைப் பின்பற்றுபவர்களில் அதிகமானவர்கள் தமது மதத்தைப் பற்றிய சரியான அறிவைக் கொண்டிராதவர்களாகவே உள்ளமை உண்மையே.

இதற்கு மதப் பெரியார்களும் விதிவிலக்கல்ல. எந்த மதமும் மனித நேயத்தை வளர்க்கவில்லை என்றால் அது மனித வர்க்கத்துக்கு எதிரானது என்றே கூறலாம். அனைத்தும் மனிதனுக்கும், அவனது வாழ்வுக்கும் நன்மை பயப்பனவாக இருக்க வேண்டும் என்பதில் யாரும் இரண்டாவது கருத்தைக் கொண்டிரார். அந்த வகையில் எந்த மதமாவது மனித ஐக்கியத்தை, மனித சுதந்திரத்தை, மதவழிபாட்டுச் சுதந்திரத்தை மறுக்குமாயின் அது காட்டுமிராண்டி காலத்துக்குள் நம்மை நுழைவித்துள்ளதாகவே கருதலாம்.

மதங்கள் பின்பற்றப்படும் நாடுகள் அனைத்தும் நாட்டை சிறப்பாக கொண்டு நடத்த தமக்காக ஏற்றுக் கொள்ளப்பட்ட யாப்பொன்றைக் கொண்டுள்ளன. அவை மனித சுதந்திரத்தை, அந்தந்த நாட்டின் இறையாண்மையை வலியுறுத்துபவையாகவே இருக்கும். ஆக நமது செயற்பாடுகள் அனைத்தும் அந்த யாப்புக்குள் உட்பட்டதாகவே இருக்க வேண்டும். அப்படியல்லாமல் முன்னெடுக்கப்படும் எவ்விடயமாக இருந்தாலும், யாரால் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் அது குற்றச் செயலே! யாப்புக்கு மாறானதே! அதனால் தடை செய்யப்பட வேண்டியதே!

சட்டம் அனைவருக்கும் சமமானதே! நீதிக்கு முன் பெரியவர்-சிறியவர், உள்ளவர-இல்லாதவர், உயர்ந்தவர்-தாழ்ந்தவர், படித்தவர்-படிக்காதவர், மதத்தை அனுஷ்டிப்பவர்-அனுஷ்டிக்காதவர், துறவு பூண்டோர்-அல்லாதோர் என்ற எந்த பாகுபாடும் கிடையாது. ஆக குற்றம் செய்தவரா? குற்றமற்றவரா? எனவே நீதி பார்க்கும். மேற்சொன்ன அனைத்துத் தகுதியைக் கொண்டிருந்தவரானாலும் கூட அவர் குற்றவாளியாயின் அவர் தண்டனைக்குரியவரே! குற்றச் செயலில் ஈடுபட்டால் அவர் சம்பந்தப்பட்டவர்களால் கைது செய்யப்பட்டு மன்றில் நிறுத்தப்பட வேண்டியவரே!

இத்தகு செயல்களில் ஈடுபடுபவர்கள் சமூகங்களுக்கு, இனங்களுக்கு இடையில் நிலவும் மனிதத்தை, புனிதத்தைக் களங்கப்படுத்திக் குழப்பம் உண்டு பண்ணுபவர்களே! அடுத்து உயிரினும் மேலாக நாம் மதிக்க வேண்டிய நாட்டின் அரசியல் யாப்பை அவமதித்தவர்களே! இந்த நாட்டின் காவல்துறை, நீதித்துறை, நிர்வாகத்துறை அனைத்தையும் காலில் போட்டு மிதித்தவர்களே! ஆட்சியாளருக்கு நாட்டு நிர்வாகத்தில் சவால் விடுபவர்களே!

அதனால் செய்தது குற்றமாயின் துறவி என்பதால் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படாமல் விடப்படுமாயின் ஓர் பிழையான பாரம்பரியத்தை இந்நாட்டில் உருவாக்கியதாகவே சரித்திரத்தில் பதிவாகும்! இந்த நாட்டின் முக்கிய, தாமும் பின்பற்றும் மதமான பௌத்த மதத்துக்கே அவப்பெயரை ஏற்படுத்திச் சென்ற வரலாற்றுக் குற்றத்தை ஏற்படுத்தியவரே! மேலாக தாம் தரித்திருக்கும், பணிவை, அமைதியை, சாந்தத்தை, எளிமையை,ஒழுக்கத்தை வெளிப்படுத்தும் காவியுடைக்கும் மதத்துக்கும் கறையை ஏற்படுத்திய குற்றவாளியே!

- நிஹா -