குர்ஆனை ஏற்றுள்ள முஸ்லிம்கள் அனைவரும் குர்ஆன் விலக்கிய வற்றையும், ஏவியவற்றையும் கடைப்பிடிக்கக் கடமைப்பட்டு உள்ளனர்.  இதனைப் பின்வரும் குர்ஆனிய வசனம் வலியுறுத்தும். 6:106 – ‘உம்முடைய ரப்பிடமிருந்து உம்பால் ‘வஹீ’ யாக அறிவிக்கப்பட்டதை நீர் பின்பற்றுவீராக…’ அதனைப் பின்பற்றுவோரே  உண்மை முஸ்லிம்கள். நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் உம்மத்துக்கள். நாயகத்தின் வபாத்தும், தொடர்ந்த கலீபாக்களினதும், ஸஹாபாப் பெருமக்களினதும், தாபிரீன், தபஉத் தாபிரீன்களினது மறைவும் காரணமாக சர்ச்சைகள் ஏற்பட்டு, அவை தீர்வுகளையும் தேடி நின்றன. அதனால் குர்ஆனிய அடிப்படையில் தீர்வு காணும் தேவை உண்டானது. இவை சாதாரண மக்களுள் பிரச்சினைகளைத் தோற்றுவித்தன. குர்ஆனைச் சரிவர அறிந்து செயற்படுவதில் அக்காலத்தில் ஏற்பட்ட பல்வேறு தடைகள் காரணமாக முஸ்லிம்களின் செயற்பாடுகளில் சறுக்கல்கள், சரிவுகள்  ஏற்பட்டன. பிரச்சினைகள் தோன்றின. மார்க்கத்தைப் நடைமுறைப்படுத்துவதில் தடங்கல்கள் ஏற்பட்டன. அடியார்கள் கஷ்டப்படக் கூடாது என்பதையும், குழப்பங்கள் ஏற்படக் கூடாதென்பதையும், குர்ஆனில் தாம் அறிந்தவற்றை மறைப்பது இறை  குற்றத்தை வருவிக்கும் என்பதையும் அறிந்ததனாலும்,  வேறு பிற காரணங்களாலும் அன்று அறிஞர் பெருமக்கள் எனக் கருதப்பட்டோர், குர்ஆனை அடிப்படை யாகக்  கொண்டு, அன்றைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக  இஸ்லாமியச் சட்டங்களை யாத்தார்கள். அவை இன்றுவரை நடை முறையில் இருந்து வருவது அத்தகையோரது ஆழ்ந்த அறிவை, தூர நோக்கை,  வெளிப்படுத்துகின்றது. இச்சட்டங்களே ஷரிஆச் சட்டங்கள் அல்லது பிக்ஹு என அழைக்கப்படுகின்றன. உலக அழிவு வரை பின்பற்றப்பட வேண்டிய ஒழுக்க நெறிகளையும், சட்ட திட்டங் களையும் கொண்டு,  குர்ஆன் தனது பங்களிப்பைச் செய்தாலும், சட்டங்களையோ, ஒழுக்கங்களையோ பிறவற்றையோ அறிவதற்கு அல்லது தீர்ப்புக்காக யாரும் குர்ஆனைத் திறந்து பார்ப்பதில்லை. காரணம் குர்ஆனியச் சட்டங்களை உள்ளடக்கி யாக்கப்பட்ட ஷரிஆ சட்டம் பன்னெடுங்காலமாக மக்கள் நம்பிக்கையை வளர்த்து, அவர் மத்தியில் தனது செல்வாக்கைச் செலுத்தி, சட்டத்துறையில் ஆட்சி செய்து வந்ததே! அத்தோடு, அனைத்து  மக்களிடமும்,  ஷரிஆ என்ற சட்டம் சரியானதையே சொல்லுகின்றது என்ற நம்பிக்கையும், அது சொல்வதே சரி என்ற நிலைப்பாடும் ஏற்பட்டிருந்தமை தற்போது ஏற்பட்டுள்ள  நிலையில் தெரிய வந்துள்ளது. காரணம் இன்றைய உலகின் கண் ஏற்பட்டுவரும் பல்வேறு மாற்றங்கள் , சில ஷரிஆ சட்டத்தின்படி ஏற்கமுடியாத நிலையைக் கொண்டிருந்தாலும் அதனைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.  இதை நான் கூறுவதற்குக் காரணம் பல உலகியல் பிரச்சினைகள் ஷரீஆவால் தீர்வு காணப்பட முடியாது தடைசெய்யப்பட்டுள்ளதே.

அதனால் பல்வேறு  பின்னடைவுகள், சட்டமீறல்கள் போன்றவை நடைபெறுவதான எண்ணக்கரு.  குர்ஆனுக்குத் தீர்வுகான முடியாது என்றவாறான நிலையைத் தோற்றுவிக்கும் மாற்றம் அறிய விரும்பா மனோநிலை.  குர்ஆனில் என்ன இருக்கிறது என்பதறியா அறியாமை. அக்காலத்தில் ஆன்றோர் செய்ததை மாற்றும் துணிவோ, சமூக அறியாமையை எதிர்கொள்ளும் திறனோ அற்ற போக்கு, உண்மையைக் கண்டு கொள்ள மறுக்கிறது. அல்லது ஷரிஆவில் மாற்றத்தை ஏற்பது மார்க்க விரோதம் போன்ற அறியாமை இருள். அதனால் குர்ஆனிய உண்மைகள் புத்தக அட்டைக்குள் முடங்கி விட்டன. இது இறைநிராகரிப்பின் புதிய பரிமானம்.

மருத்துவம், பொருளாதாரம், வானியல், கண்டுபிடிப்புகள், போக்கு வரத்து வசதிகள், இலத்திரணியல் தொடர்பாடல் சாதனங்கள், உறுப்பு மாற்றுச் சிகிச்சைகள், அவற்றில் மிருகங்களின் உள்ளுறுப்புக்கள் பாவிக்கப்படல்,  க்ளோனிங் முறையிலான படைப்புக்கள், பரிசோதனைக் குழாய் மூலம் கருத்தரிக்க வைத்தல்,  நாணயப் பரிமாற்றம்,  நாடுகளின் சட்டங்களும் கட்டுப்பாடுகளும், துரித வளர்ச்சி பெற்று உலகப் பொருளாதாரத்தையே தன்கட்டுப்பாட்டுள் கொண்டு வந்துள்ள வங்கி நடவடிக்ககைள், அதிகரித்து வரும்  அனர்த்தங்கள், கொள்ளைகள் போன்றவைகட்கான காப்பீட்டு முறைகள், பங்குச் சந்தையின் பரவலாக்கம், கிரகங்களின் ஆய்வு, அங்கும் குடியேறுவதற்கான முனைப்புகள் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

இவைகள் அனைத்தும் சில நூற்றாண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சி. இவை அனைத்துக்கும், அன்று குர்ஆனின் அடிப்படையில் மனிதனால்  யாக்கப்பட்ட  ஷரீஆச் சட்டம் ஈடு கொடுக்க முடியாது திண்டாடுகிறது. அந்தத் திண்டாட்டத்தை மூடி மறைக்க,  குர்ஆன் பலிக்கடாவாகி உள்ளது.   ஷரீஆச் சட்டம் மனிதன் யாத்தது. அது அன்றைய கால கட்டத்தில், வாளை ஆயுதமாகவும், ஒட்டகத்தை வாகனமாகவும், பண்டமாற்றைப் பொருளாதாரமாகவும், நீரைக்காவ தோற்பையை சாதனமாகவும்  கொண்ட காலத்தில்  ஏற்பட்ட பிரச்சினைகட்கு முகம் கொடுப்பதற்காக யாக்கப்பட்டது.

அதற்காக அந்த ஷரீஆச் சட்டத்தை யாரும் குறைகூறிட முடியாது. சட்டம் இயற்றிய அந்தப் பெரியார்கள் 19ஆம் நு{ற்றாண்டில் வாழ்ந் திருந்தால், அவர்களே தமது சட்டங்களின் செல்லுபடியாகாத் தன்மையை உணர்ந்திருப்பர். இத்தனை காலமும் திருத்தம் மேற்கொள்ளாது வாளாவிரார். மேலும், குர்ஆன் வசனம் தற்போதைய பிரச்சினைகளுக்கு ஈடுகொடுத்து தீர்வு கூறுவதையும்  குர்ஆனிய அடிப்படையில் அன்றைய தேவை கருதித் தம்மால் யாக்கப்பட்ட சட்டங்கள் தற்போது இன்றைய பிரச்சினைகளில் பிரயோகம் செய்யப்படும் போது  குர்ஆனுக்கு முரணாக, விரோதமானதாகக் காணப்படுவதையும் அவதானித்திருப்பர். அதன் பயனாகத்  தமது ஷரீஆச் சட்டத்தினை மீள்பரிசோதனை செய்வதற்காக, குர்ஆன் வசனங்களோடு உரைத்துப் பார்த்திருப்பர். உண்மையைக் கண்டிருப்பர். குர்ஆனின் மகிமையை அறிந்திருப்பர். அதனை உலகிற்கு உணர்த்தி இருப்பர். அதற்கான மாற்று வழியாகத் தமது முன்னைய தமது ஷரீச் சட்டத்தை மாற்றி எழுதியிருப்பர். மக்கள் பயனடைந்திருப்பர்.  இஸ்லாம் கண்டனத்துக்கும், காலத்துக்கு உதவாத கடும் போக்கைக் கொண்டது என்ற கருத்துக்குள்ளும் வலிந்து தள்ளப்பட்டிராது. மாறாக, மக்கள் அரும்பெரும் குர்ஆனிய உண்மைகளை அறிந்து அதனைச் சரியாகவே பயன்படுத்தி, உச்ச பலனையும், அதனால் அனைத்து முன்னேற்றங்களையும் பெற்றிருப்பர். இம்மீளாய்வு காலத்தின் தேவையே.

தேவையின் முக்கியத்துவத்தை உணர்த்த, தேவையற்ற சில அறியாமைகளைப் பதிவாக்க வேண்டிய கட்டாயத்தால், தலையங்கத்தைத் தாண்டிச் செல்வதை மன்னிக்க வேண்டுகிறேன்.

இருபத்தோராம்நூற்றாண்டில் வாழ்வதாகப் பெருமை பேசிக்கொளும் நாம் நமது அறியாமையைக் கலைய வந்த அருள்மிகு வேதமான, வல்ல அல்லாஹ்வால் அருட்கொடையாக அளிக்கப்பட்ட குர்ஆனைக் கையில் வைத்துக் கொண்டு,  அதிலுள்ளவற்றை அறியாது,  பழைய பல்லவியைப் பாடிக் கொண்டிருக்கிறோம். இது நமது சாபக் கேடே !

இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டு காலத்துள் தம் அறிவை ஏதோ வகையில் வளர்த்துக் கொண்டோர் விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சியில் விண்ணைத் தொட்டு அதற்கு மேலும் தம் ஆதிக்கத்தைச் செலுத்திக் கொண்டிருக்கும் போது நாம் மட்டும் பழம் பெருமையும், 1400 ஆண்டுப் பாரம்பரியத்தையும் பேசிக்கொண்டும், குர்ஆனில் இல்லாதது எதுவும் இல்லை வெறும் வாயை மென்று கொண்டும்,  பொன்னான  காலத்தை வீணடித்து, மண்ணாகி மடியும் வேதனைக்கு வித்திட்டுக் கொண்டிருக்கிறோம். போதாக் குறைக்கு, சட்டைப்பையில் மிஸ்வாக்குக் குச்சி, வெட்டி வளர்க்காத நீண்டதாடி, (நீரைக் கண்டிராத ) தொப்பி , அதற்கு மேல் தலைப்பாகை,  கணுக்கால் வரையான ஜுப்பா, அத்தஹியாத்தில் விரல் ஆட்டுதல், தொழும்போது காலை அகல விரித்து அடுத்தவன் காலைத் தொடனுமா? கூடாதா? குனூத்து ஓதலாமா? கூடாதா? துஆக் கேட்டல் சரியா? பிழையா?, தல்கீன் தேவையா? ஹத்தம் ஓதலாமா? பாத்திஹா தேவையா? கப்றில் கல் நாட்டலாமா? அல்லாஹ்வுக்கு உருவம் உண்டா? இல்லையா? அல்லாஹ் வானத்திலா? பூமியிலா? இருக்கிறான். நபிகளார் பிறந்த தினத்தைக் கொண்டாடலாமா? அவருக்கு ஸலாம் சொல்லலாமா?

புதுமைகளைக் காண்பது பிதுஅத்,  வங்கியில் வேலை செய்து சம்பளம் பெறுவது ஹறாமா? ஹலாலா? ( வங்கி செய்வது ஹறாமான தொழில் என்றால், அரசு எத்தனை ஹறாமான வழியில் பணம் தேடுகிறது, பெறுகிறது. வட்டிக்குக் கொடுத்தும் வாங்கியும்,  மது, சிகரெற் வரி, மது தயாரிப்பு, விற்பனை, செய்கின்றதே. அரசில் உத்தியோகம் பார்க்கலாமா?)  இது இன்றைய அறிஞர்களாகக் கருதப்படுவோர் இஸ்லாத்தைப் பின்பற்றும், பரப்பும் முறை. மதச் சீர்திருத்தமாம். சிரிப்பு வருதா? சிரிக்காதீர்கள் அழவேண்டிய அபாக்ய நிலை. அறிவு வரட்சிப் புரட்சி. குதிரையைவிட்டு வாலைப் பிடிக்கும் அவலம்.

இன்னும் ஒன்றை, மிக முக்கியமாக நடை பெற்ற ஒன்றை நம்நிலையை வெளிப்படுத்தும் நோக்கில் பதிவு செய்துகிறேன். இவை நம்மைச் சரியான பாதையில் செல்வதற்காக.  குர்ஆனில், இறைவன் ஏதாவது விடயத்தைக் கடமையாக்கி இருப்பின் அது, அப்பாவிகள், அநாதைகள், சிறுவர்கள், வலிமை குன்றியோர், வறியோர், அநாதரவானோர், பாதிக்கப்பட்டோர், குற்றமிழைக்கா பெண்கள், போன்றோருக்கு  அநியாயம் நடந்து விடக் கூடாது, உலகில் சீர்திருத்தம் சிதையலாகாது, குழப்பம் விளையலாகாது போன்ற காரணங்களை முன்னிறுத்தியே இருக்கும். அத்தகை இறைசட்டங்கள் எந்தவித விஞ்ஞான தொழில்நுட்ப உயர்வாலும் செயற்படுத்த முடியாத செல்லாக் காசாகிவிடாது. அல்லாஹ்வை யாரும் இயாமலாக்கிட முடியாது என்பது அவனது வார்த்தையே. அப்படித் தோற்றம் தருமாயின் அதற்கு உலகு ஏற்கும் சான்று குர்ஆனில் எங்காவது இருக்கும். அல்லது நமது அறியாமையால் விளைந்ததே.

2005இல் நிகழ்த்தப்பட்ட ஜும்மா பிரசங்கம் ஒன்று உங்கள் அறிதலுக்கு. அது, தற்போதைய தொழில் நுட்ப வளர்ச்சியில் இத்தா தேவையற்றது. கருக்கட்டலை அறிய நான்கு மாதம் பத்து நாள் காத்திருக்க வேண்டிய தில்லை. காரணம்,  உடனடியாகவே கண்டு கொள்ளும் தொழில்நுட்பம் நம்காலடியில். ஆயினும் குர்ஆன் எதையாவது செய் என்றால், நாம் ஏனென்று கேளாது பின்பற்றவே வேண்டும் என்றவாறு கூறியதே ! ஆதலால் அனைவரும் ‘இத்தா’வை சரியாகவே கடைப்பிடிக்க வேண்டும் எனக் கூறப்பட்டதே. இத்தா கட்டாயம் என்றாவது சொல்லப்பட்டதே என்பதை நினைந்து ஓரளவு ஆறுதல்.

கட்டாயம் எனச் சொல்லியிராவிடில் வெறும் நிராகரிப்பு மட்டுமே. ஆனால் இங்கு நிலைமை மகா பயங்கரம். எழுதிட  முடியா நிலை… இது, அப்பேச்சாளரது அறியாமையின் வெளிப்பாடும், ஈமானில் குறைவும், குர்ஆனைப் பெயரளவில் அறிந்திருந்ததுமே தவிர, குர்ஆனினதோ, அல்லாஹ்வினதோ (அல்லாஹ் அனைவரையும் காப்பானாக ) குற்றமல்ல. அல்லாஹ் பிழையான சட்டங்களை யாப்பவனல்ல. பிழைகளைச் செய்ய நிர்ப்பந்திப்பவனுமல்ல. அறியாமை குடி கொண்டவனுமல்ல. அல்லாஹ்வைப் பற்றிய சரியான மதிப்பீடும்,  குர்ஆன் பற்றிய முழுமையான அறிவும் கிடைத்திருந்தால் இப்படியான ஓர் கருத்து வெளியிடப்பட்டு இருக்குமா? இஸ்லாமிய அறிவு இப்படித்தான் பரப்பப்படுகிறது. துர்அதிர்ஷ்டம்.அறியாமையை மறைக்க குர்ஆன், குர்பான் ஆகிறது. மக்களும் உண்டு மகிழ்கின்றனர். தெண்டிக்க மனமின்றி, கண்டிக்க ஆளின்றி !

‘இத்தா’வுக்கான குர்ஆனின் காரணங்களுக்கு முன்னதாக கருத்தரித்தல் பற்றிய அறிவும், அதனை அறியும் தொழிநுட்ப விளக்கமும்  பெற்றிருத்தல் இத்தாவின் இன்றியமையாமையை, இறையருளை விளங்கிட உதவும். அந்த வகையில் கருத்தரித்தல் 72 மணித்தியாலங்கள் வரை தாமதித்தும் நடைபெறும் என்பதை மனத்திலிருத்திப்  பின்வரும் சந்தர்ப்பத்தை ஆராய்வோம். கணவரை இழந்தவள் தன் கணவருடன் அவரது இறப்புக்கு சில வினாடிகளுக்கு முன்னதாகக் கலவியில் ஈடுட்டிருக்கலாம். இப்போது இத்தா சட்டம் கட்டாயமாக்கப்படாது இருந்தால், அப்பெண்மணி இன்னொரு கணவனைத் தன் பாதுகாப்புக் கருதியோ, இல்லையேல் வேறு காரணங்களுக்காகவோ அடுத்த நாளே மணமுடித்து விடுவாள். இதன் முன்னோடியாக,  அவள் திருமணத்துக்கு முன்னதாக, அடுத்த நாளே தன்னைத் தற்போதைய தொழில்நுட்பப் பரிசோதனைக்கு உட்படுத்தி விடுவாள். நான் தொடக்கத்தில் கூறிய காரணத்தால் அவள் கருத்தரிக்கவில்லை என்ற அறிக்கை கிடைக்கிறது. தற்போதைய திருமணம் நடைபெறுகிறது.

இந்நிலையில் அவள் கணவனின் இறப்புக்கு முன்னர் ஏற்பட்ட தொடர்பால், பரிசோதனைக்குப்  பின்னர் கருத்தரித்தல் சம்பவித்ததால், பிறக்கும் பாலகன் தனது உண்மையான தகப்பனை அறியாத நிலைக்குத் தள்ளப்படுகிறான். பாவம் அப்பெண்மணி பிறந்த குழந்தை தன் முன்னைய கணவனுடையது என்பதை அறியாமல் இருக்கிறாள். பிள்ளையும் விலாசம் மாறுகிறது. இது அநியாயம் இல்லையா?

அடுத்து, அப்பெண்மணி திருமணம் முடிக்கவில்லை. ‘இத்தா’வும் அணுஷ்டிக்கவில்லை. தன்னை அடுத்தடுத்த நாட்களில் பரிசோதனைக்கு உட்படுத்தி கருத்தரிக்கவில்லை எனத் தெரிந்து கொண்டாள்.  உறவினரும் அயலவரும் கூட கருத்தரிக்கவில்லை என்பதை அறிந்து கொண்டனர். சில மாதங்களில் அவளின் தாய்மை வெளிப்படுகிறது. இப்போது அவளினதும், கருவினதும் நிலை கேள்விக் குறியாகி விடுகிறது? அவப்பெயரை அநியாயமாகச் சூடிக் கொள்கிறாள்.

அவள் கருவுற்றமையை,  யாரும் காண முடியாத இடத்தில் தற்போது வாழ்கிறாள் என வைத்துக் கொண்டால், அபகீர்த்தி, அவதூறுகளில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள அவள் என்ன செய்வாள்? ஓன்று தனது உயிரை மாய்ப்பாள். அன்றேல் களவாகக் கருக் கலைப்பில் ஈடுபடுவாள். எதில் ஈடுபடினும் இரண்டுமே, குற்றவுணர்வையும் அநியாய தற்கொலை, கொலை என்ற சட்டத்துள்,  தண்டனைகளையும் வருவிக்கும்.

மேலும், மிக அண்மையில் ஆராய்ச்சி மூலம் வெளியானதொரு உண்மை நம்மை எல்லாம் திகைக்க வைப்பதோடு, குர்ஆனின் தூரதிருஷ்டியை எண்ணி வியக்கவும் வைக்கிறது.  ஆம், அண்மையில் ஒரு யூத ஆராயச்சியாளன் கண்டறிந்த உண்மை அது. அதாவது, ஒரு ஆணுடன் ஒரு பெண் உறவு கொண்டு விட்டு மூன்று மாதத்துள் இன்னொரு ஆணுடன் கலவியில் ஈடுபட்டால், பிறக்கும் அக்குழைந்தையில் இரு ஆண்களின் ரேகைகள் காணப்படுவதே அது.

மேலும், முஸ்லிம் பெண்களிடம் இந்நிலை காணப்படாததும். முஸ்லிம் அல்லாத சில பெண்களிடம் மூன்று ஆண்களின் ரேகைகள் கூட பதிவாகி இருந்தமையைக் கண்டுள்ளார். பின்னர், ஒரு ஆசைக்காக,  தனது பிள்ளை ஒன்றினை ஆய்வுக்கு உட்படுத்திய போது மூவரின் ரேகைகள் காணப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அது பற்றித் தனது மனைவியிடம் வினவிய போது, அவள் கூறிய பதில், மற்ற இரண்டு பிள்ளைகளையும் ஆய்வு செய்தால் இதே முடிவுதான் கிடைக்கும் என்பதே! உடன் அந்த யூத ஆய்வாளன், தனது மனைவியை விவாக இரத்துதுச் செய்து விட்டு, இஸ்லாத்தில் இணைந்து கொண்டார்.

இதிலிருந்து, பெண்ணின் விபச்சாரம் கூட அவளது பிள்ளைகளின் மாதிரியை வைத்து அம்பலமாகிவிடும் என்பதே ! அல்லாஹ் மிக அறிந்தவன் என்பது புரிகிறதா ! ஆதலால்தான் அல்லாஹ், தான் அறிந்தவன், நீங்கள் அறிய மாட்டீர்கள் எனப் பகன்றுள்ளான்.  இப்போது,  இத்தா கடமை ஆக்கப்பட்டதன் நன்மை புரிந்திருக்கும். அத்தோடு சமூகச் சீரழிவு தடுக்கப்படும் பண்பு வெளிப்படுகின்றது. சிறார்களின் கௌரவம், கண்ணியம் காக்கப்படுகின்றது.

குர்ஆனின் அடிப்படையில், இத்தா கணவனை இழந்த ஷணத்தில் இருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டியுள்ளது. அத்தோடு அதன் உயர் நோக்கம், பிறக்கும் எந்தப் பாலகனும் யாரோ ஏனோ செய்த பிழைகளால் தந்தை பெயர் தெரியாத அனாதையாகிவிடக் கூடாது என்பதும், கணவனை இழந்தவள் குற்றமிழைக்காத நிலையில் எந்த வகையிலும் களங்கத்துக்கு ஆளாகிவிடக் கூடாது என்பதும், மொத்தத்தில் அநியாயங்கள் நடந்துவிடக் கூடாது என்பதும் அல்லாஹ்வின் அவா.

மேலும், இதனையறிய, குர்ஆனில் பதிவாகியுள்ள மூன்று சந்தர்ப்பங்கள்:  1. ஆண் தொடர்பற்று மரியம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஈஸா அலைஹிவ ஸல்லம் அவர்களை ஈன்றமை. 2. இப்றாஹிம் அலை அவர்களின் மலட்டு, கிழவியான மனைவி பிள்ளை பெற்றமை. 3. ஸக்கரியா அலை அவர்களின் மலட்டு, கிழட்டு மனைவி பிள்ளை பெறல் போன்றவை.

மேலும், தற்காலத்தில்,  ‘கருத்தரிக்க வில்லை’ என்ற தொழில்நுட்ப அறிக்கை கிடைத்தவர்கள்  பிள்ளை பெற்ற சம்பவங்கள். ‘பிள்ளையே கிடைக்காது’ என்ற மருத்துவ உலகின் ஏகோபித்த தீர்ப்பைப் பெற்ற பெண் கருத்தரித்து பிள்ளை பெற்றமை. ‘மாதவிடாய் நின்ற பின்னர்’ கூட பெண்கள் கருத்தரித்த சந்தர்ப்பங்கள்  நிறையவே பதிவாகி யுள்ளன. இவை எல்லவற்றுக்கும் விடை காண, அவதூறில், அவப்பெயரில் அவர்களைக் காத்துக்கொள்ள, பிறக்கும் குழந்தை சமூகத்தால் இழிபிறப்பாகக் கருதப்படாத நிலை உருவாக, சொத்துரிமை காக்கப்படல் போன்றவற்றுக்கு, அல்லாஹ் தன் அருள் மறையில் கூறிய ‘இத்தா’வைத்  தவிர உலகில் வேறு வழியே இல்லை.

அல்லாஹ்வின் சட்டங்கள் திருத்தப்பட  முடியாதவை. குர்ஆன் கூறினால், செய்யத்தான் வேண்டும் என்ற குதர்க்கம்,  குர்ஆனின் 2:256 இலும் வேறிடங்களிலும் வலியுறுத்தப்படும் ‘மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை’ என்ற இறைகூற்றுக்கு முரணானதும்,  இறைமறுப்புமாகும். அல்லாஹ் போதுமானவன்.  இக்குதர்க்கம், அறியாமையை மறைக்கும் கவசம். இஸ்லாத்தில் தமக்குள்ள தீவிரத்தைக் காட்ட எடுத்த முயற்சி. தனது அந்தஸ்தைத் துஷ்பிரயோகம் செய்தல்.உண்மைகளை உலை மூடியால் மறைக்க முடியாது. அதுவும் குர்ஆனிய உண்மைகளை???

தலைப்பிற்கு மீண்டால்… பலநூற்றாண்டுகளுக்கு முன்னர் உலகின் தேவை கருதி, அன்றைய பிரச்சினைகள், குழப்பங்களுக்குத் தீர்வாக, குர்ஆனின் அடிப்படையில் யாக்கப்பட்ட  சட்டங்கள்,  சில தற்போது காலாவதியாகி உள்ளன.  அந்நிலை தொடர்வதானால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு நான் முன்னர் குறிப்பிட்டது போல் இஸ்லாம் பலியாகி உள்ளது ! அவ்வாறான நிலையை உண்டு பண்ணிய பிரச்சினைகள் சிலவற்றை காண்போம்.

வட்டி என்ற கருதுகோளுக்குள் சங்கமமாகியுள்ள ‘றிபா’. ஆங்கிலத்தில் USURY எனவும் தமிழில் வட்டி என்ற பெயர் வழங்கப்பட்டு,  தற்கால வங்கி முறைக்கும் குர்ஆனின் கோட்பாட்டுக்கும் குந்தகம் விளைவிக்கும் நிலைக்குள்ளும் சிக்கித் தவிக்கிறது.  அதற்காக ஷரீஆச் சட்டம் இயற்றியோர் குறைகாணப்படு கின்றனர். இஸ்லாமும்தான்.  வட்டி பற்றி குர்ஆன் 3:130 மிகத் தெளிவாக, விளக்கமாக, அர்த்தபுஷ்டியுடன் கூறியுள்ளது. இறைநம்பிக்கையாளர்களே! இரட்டிப்பாக்கப்பட்ட பன்மடங்காகி விடும்  வட்டியை நீங்கள் தின்னாதீர்கள். நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்‘ .  இது எந்த சாதாரண அறிவு படைத்தவனும் விளங்கக் கூடியது. அநியாயம் என அறியக் கூடியது தடை செய்யப்பட வேண்டியது என ஆர்ப்பாட்டம் செய்ய வைக்கக் கூடியது. போர்க்கொடி தூக்க வைப்பது.  இது அன்றைய உலகில் நடந்த மிகப் பெரும் அநியாயம். The greatest exoploitation of the entire world, identified by Allah and put end by His own Law.  இதனையே இறைவன் தடைசெய்துள்ளான். இச்சட்டத்தை ஆதாரமாகக் கொண்டே அன்று நடந்த அந்த அநியாயத்துக்கு சட்ட விளக்கம் தரும் வகையில், விரிவான சட்டவாக்கம் செய்தனர் அன்றைய மார்க்க அறிஞர்.

அன்று  நடந்த அந்த அநியாயத்தை இன்றும் நடவாமல் தடுத்துக் கொண்டிருப்பதே குர்ஆன். என்றும் இச்சட்டம் வலிமையுடன் நடைமுறைக்கு வரும். அல்லாஹ்வை யாரும் இயலாமலாக்கிவிட முடியாது என்பது அவன் வாக்கு. ஆனால் அன்றைய தேவைகட்காக நூற்றாண்டுகளுக்கு முன்னர் யாக்கப்பட்ட விளக்கமான மனித சட்டங்கள்,  இன்றுள்ள நடை முறையைத் தடை செய்வதற்காகச்  சட்டமாக்கப்படவில்லை என்பதுதானே உண்மை! இதை உணராமை நமது அறியாமை!

குர்ஆனும்  இன்றைய நடைமுறையையோ, அன்றி இன்று வங்கிகள் நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகளையோ கருத்தில் கொண்டு சட்டம் செய்யவில்லை என்பது அதன்  ‘இரட்டிப்பாகும், பன்மடங்காகும் …’  என்ற வசனத்தால் அறிய வருகிறது. மேலும், இப்படியொரு வங்கி நடைமுறை வரும் என்பதை அவன் அறியாதவனுமல்ல. ஆனால் தற்போதைய வங்கி நடைமுறை மக்களுக்கு அவசியமானதே என்பதையும், அது அநியாயம் அல்லஎன்பதையும்  அறிந்திருந்ததால், அதனை உள்வாங்கும்வாறு அவனது சட்டம் அமையவில்லை.  அறியாமையில் மூழ்கியுள்ள  நாமே இன்று வலிந்து,  என்றோ உள்ள நிலைக்கேற்ப, அன்றைய, றிபா தடைக்கு ஏற்ப ஆக்கப்பட்ட மனித சட்டத்தை,  தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறோம்.

வங்கி நடைமுறையுள் தற்போது இரண்டு தசாப்தங்களுக்குள் அறிமுகமாகியுள்ள கடன் அட்டை என்ற ஒன்று மட்டும் (அதன் சரியான பயன்பாட்டைப் பாவனையாளர் தாண்டும் சந்தர்ப்பத்தில் ) றிபா – USURY என்ற இலக்கணத்துள் அடங்கும் நிலை குறிப்பிடக் கூடிய அளவில் காணப்படுகின்றது. அனைத்து பிற நடபடிகளும் அச்சட்ட வரம்புள் அடங்குமா என்ற முடிவுக்கு வருவதாயின், ஷரீஆச் சட்டம் உருவான சந்தர்ப்ப சூழ்நிலைகளும், கால, தேய, வர்த்தமானங்களும் மிகக் கவனமான மீளாய்வுக்கு உட்படுத்தப்படல் அவசியம்.

குர்ஆனுக்கு எதிராக நாம் இயங்கிக் கொண்டிருக்கிறோமா என்பதைத் தீர்மானிப்பதையும், உலக நடைமுறைக்கு, பொருளாதார  அபிவிருத்திக்கு,  குர்ஆனின் கடன் கொள்கைக்கு, உள்ளவன் இல்லாதவனுக்குக்  கொடுத்து, அனைவரையும் வாழவைக்கும் நற்செயலுக்கு,  முட்டுக்கட்டையாகவா, உந்துசக்தியாகவா இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள உதவும்.

இறைவன்   குர்ஆனில் கடன்  பற்றிப்  பேசியுள்ள வசனங்களைப் பார்வையிடுவது, மிகச் சிறந்த அறிதலுக்கு உதவும். அந்தக் கைங்கரியத்தை இன்று வங்கிகள் மட்டுமே செய்து கொண்டிருக் கின்றன  என்பது பதிவாக்கப்படுவது தவறில்லை என நினைக்கிறேன். அவர்கள் அன்று நிலவியதாகக் கொள்ளப்பட வேண்டிய, அதாவது இறைவன் தடைசெய்துள்ள ‘இரட்டிப்பாகும் பன்மடங்காகும்’ கொடுக்கல் வாங்கலைத் தடைசெய்து சட்டம் இயற்றினரா? அன்றேல் இன்று நடைமுறையில் இருக்கும் வங்கி முறையில் காணப்படும் கொடுக்கல் வாங்கலில் உள்ள நடைமுறையைத் தடைசெய்துள் ளனரா? இதற்குப் பாதகமான பதிலைக் கொடுத்து,  அதன் பின்னணியில் குர்ஆன் வசனத்தை ஒப்பு நோக்கின் எதனை ஏற்பது? எதனை விடுவது? முன்னையதை எனக் கூறிடத்தான் முடியுமா?

அல் குர்ஆன் அல் பகரா வசனம் 2:282 இல், கடன் முறைமை பற்றி மிகச் சுருக்கமாக ஆனால் மிகத் தெளிவாகச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் குறிப்பிட்ட தவணை வரைகடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொள்வீர்களாயின் அதனை நீங்கள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். மேலும், எழுதுபவர் உங்களுக்கிடையில் நீதமாக எழுதட்டும். எழுதுகிறவர் எழுதுவதற்கு மறுக்கக் கூடாது. அல்லாஹ் அவருக்குக் கற்றுக் கொடுத்தது போன்று, அவர் எழுதிக் கொடுக்கட்டும். இன்னும் எவர் மீது உரிமையுள்ளதோ அவர் வாசகம் கூறட்டும். தமது ரப்புவான அல்லாஹ்வை அவர் அஞ்சிக் கொள்ளட்டும். இன்னும் அதிலிருந்து எதனையும் அவர் குறைத்துவிட வேண்டாம். எனவே கடன் வாங்கியவர் எழுத்தறிவு இல்லாதவராக, அல்லது பலவீனராக, அல்லது வாசகம் சொல்வதற்கு  இயலாதவராக இருப்பராயின் அவரது பொறுப்பாளர் நீதமான முறையில் வாசகம் கூறவேண்டும். உங்களிலுள்ள ஆண்களில் இரு  சாட்சியாளர்களை நீங்கள் சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள். அவ்விருவரும் ஆண்களாக இல்லையாயின், சாட்சியாளரில் நீங்கள் பொருந்திக் கொண்டோரில் ஓர் ஆணும், இரு பெண்களும்  அவ்விருவரில் ஒருவர் மறந்துவிடுவதை அவ்விருவரில் ஒருவர் மற்றவருக்கு நினைவூட்டுவதற்குத்தான். மேலும் சாட்சிகள் அழைக்கப்படும் போது அவர்கள் மறுக்கக் கூடாது. மேலும் கொஞ்சமாக இருந்தாலும், மிகுதமாக இருந்தாலும் அதன் தவணை வரை எழுதுவதற்குச் சடையாதீர்கள். உங்களுக்கு அது அல்லாஹ்விடத்தில் மிக்க நீதியானதும், சாட்சியத்திற்கு மிக்க உறுதியானதும், சந்தேகம் எழாமல் இருப்பதற்கு மிக நெருங்கியதாகவும் இருக்கிறதுநீங்கள் உங்களுக்கிடையே ரொக்கமாக நடத்தும் நேரடி வியாபாரமாக இருப்பின், அதனை நீங்கள் எழுதிக் கொள்ளாமல் இருப்பது உங்கள் மீது குற்றமும் இல்லை. மேலும் வியாபாரம் செய்யும் போது நீங்கள் சாட்சியை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். மேலும், எழுதுபவரோ, சாட்சியாளரோ துன்புறுத்தப்படக் கூடாது. அவ்வாறு செய்வீர்களாயின் நிச்சயமாக அது உங்களால் விளைந்த கெடுதியாகும். மேலும் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக்  கொள்ளுங்கள்அல்லாஹ்தான் உங்களுக்கு வழிமுறைகளைக் கற்றுக் கொடுக்கிறான். மேலும், அல்லாஹ் அனைத்துப் பொருள்களையும் நன்கு அறிந்தவன்‘.

மேற்கண்ட நீண்ட வசனம் அல்லாஹ்வின் அருட்கொடை என்பதை யாரும் மறுக்க முடியாது. மனிதருக்குள் சாதாரணமாக கொடுக்கல் வாங்கல் நடைபெறும் என்பதை நன்கு உணர்ந்த வல்ல நாயன், எவ்வளவு இரத்தினச் சுருக்கமாக, நுணுக்கமாகவும், சட்டரீதியான அங்கீகாரத்துடனும், சாட்சிகளுடனும், எழுதுபவருடனும், எழுத்தில், குறிப்பிட்ட தவணை வைத்து, பெறுனரே வாசகம் கூறப் பணித்து, நீதமாக எழுதிக் கொள்ளும்படி பணித்துள்ளான். இதில் ஒவ்வொரு வரதும்  கடமைகள்கூட வரையறுக்கப்பட்டுள்ளன. இதில் கொடுக்கல் வாங்கற்காரர் இருவர், ஆண்  சாட்சிகளாயின் இருவர், எழுதுபவர் ஒருவர், அவரவர் தம் கடமை பொறுப்பு போன்றவற்றை எல்லாம் மிகஅழகாகக் கூறிச் சென்றுள்ளது. இதை நுணுக்கமாக, பக்கச் சார்பின்றி, உண்மையை உணரும் நோக்கில், இறைவனின் நோக்கத்தை அறிந்து மனத்திலிருத்தி, இவ்வசனத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதை ஆராய்வோமாயின் மிகச் சிறந்த உண்மைகளை அறிந்து கொள்ள முடியும். நடைமுறைச் சாத்தியமான சிறந்த கொடுக்கல் வாங்கல் முறை ஒன்று 1400 ஆண்டுகளுக்கு முன்னரே  கருணை யாளனும், நீதியாளனுமாகிய அல்லாஹு ஜல்லஷானுஹுத் தஆலாவால் பரிந்துரைக்கப் பட்டுள்ளது. ஆயினும், அல்லாஹ்வால் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, சட்டதிட்டங்களுடனும் அறிமுகமாக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல் எனப்படும் கடன்  தேடுவாரற்றதாகக் கைவிடப்பட்டுள்ளதை சற்று மன இறுக்கம் தளர்ந்தால் எளிதில் உணரலாம்.

இக் கடன் முறை முஸ்லிம்களுக்குக் கடமையாக்கப்படாதது போல் நினைப்பது, இறைவன் அறிவித்தவற்றைப் புறந்தள்ளும் போக்காகவே படுகிறது.  இதற்கான முழுமையான காரணம், Usury ஐக் காலாவதி யான சட்டத்தின் பிடிகளில் வைத்திருந்ததும், கடன் பற்றிய சரியான விளக்கத்தைப் பெற்றிராததுமேயாகும். அத்தோடு கடன் கொடுப்பவர் இக்கொடுப்பனவால் தனக்கு இலாபம் இல்லை என்றும்  கருதி இருக்கலாம். இதனை ஊன்றி உய்த்துணர்ந்தால், இம்மையிலும் மறுமையிலும் பலன் வரும் தன்மைகளை மட்டுமல்ல, குறிப்பிட்டுக் கூற முடியாதளவு வேறு நன்மைகளும் உண்டே என்பதைக் கண்டு கொள்ளலாம்.

இக்கால கட்டத்திலாவது அறிஞர்கள் எனக் கூறப்படுவோர்,  தேவையற்ற  அவைக்குதவா சர்ச்சைகளைக் கிளப்பிக் கொண்டு தாமும் கெட்டு, மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்துவதைத் தவிர்த்து,  குர்ஆனை அறிந்து,அதனை அதன் உண்மை உருவத்தில் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதன்  மூலம் அல்லாஹ், ‘எனக்கு உதவி செய்பவன் யார்?’ என விடுத்துள்ள கேள்விக்கு விடை தந்து, தடைகளை அகற்றுவார்களாக? பறப்பதை விட்டு இருப்பதையாவது பிடிக்கலாமே. USURY க்கு சரியான விளக்கமும் பெற்று, அதற்கேற்ப தற்போதைய தடைகளும் நீக்கப்பட்டால் இந்நடவடிக்கையில் 90 வீதம் முடிந்துவிடும்.

மேலும், ஒன்றைக் கூறுவது உங்களைச் சிந்திக்கத் தூண்டும். ‘உங்கள் சொத்துக்களில் யாசகருக்கும் பங்கு உண்டு’ இது இறை கூற்று. யாசகருக்கு உரிய பங்கைக் கொடுக்காவிட்டாலும் (கொடுக்கா விட்டாலும் எனக் கூறுவதை அல்லாஹ் மன்னிப்பானாக) அவர்களுக்குக் கடனாவது கொடுத்து உதவலாமே!  தர்மமும், ஸக்காத்தும் கொடுக்கும் மனமும், குணமும், பணமும் உடைய முஸ்லிம்கள் இக்கடனின் கண் தங்கள் கவனத்தைச் செலுத்தத் தயங்குவதேனோ? பிழையாக விளங்கிக் கொண்டமையே!  கட்டுரையின் நோக்கம் இவை பற்றிப் பேசுவதல்ல ஆயினும், சில காரணங்களால் சற்று அது குறித்துப் பேச வேண்டியிருந்தது.

இறுதியாக ஒன்றைக் கூறி அடங்கவுள்ளேன். அதாவது, இதுவரை, காலாவதியாகியுள்ள மனித ஆக்கங்களான ஷரீஆச் சட்டங்கள் சிலவற்றை,  நீங்கள்  குர்ஆன் விளக்கங்களைக் கொடுத்த போதோ, விரிவுரைகளினை ஆக்கிய போதோ சுட்டிக் காட்டினீர்களா?  விமர்சித்தீர்களா? கண்டித்தீர்களா? அவைகள் தற்போதைய நிலையில் குர்ஆனுக்கு முரண்படுவது உங்களுக்கும் தெரிந்திருக்கவில்லையா? அல்லது இந்த விடயத்தைக் கூறித் தொல்லையை ஏன் வாங்க என்ற ஓதுங்கும் மனோபாவமா? எதுவாயினும் அல்லாஹ்வின் பார்வையில் அக் குற்றம் தண்டணைக்கு உரியதாகாதா?

உலமாப் பெருமக்களே! உங்கள் கடமை, வருடமொரு முறை பிறை பார்த்து நோன்பையும், பெருநாளையும் தீர்மானிப்பதோடும், ஹலால் சாட்சிப் பத்திரம் வழங்குவதோடும் முடிந்துவிட்டதா?அன்றேல், இவை  உங்கள் கடமைக்கு அப்பாற்பட்டனவா? ஆம் எனின், எனது அறியாமைக்காக மன்னிக்க வேண்டுகிறேன்.

இதே போன்ற பிழையான கருத்தியலுக்குள் அகப்பட்டுச் சிக்கித் தவிக்கிறது ஸக்காத் என்ற கடமை. அதுவும் ஓர் ஸ்டீரியோ டைப் நடவடிக்கையாக, இறைநோக்கம் அறியாது, நிறைவேற்றப்படுகிறது. இதன் சட்ட வாக்கத்திலும் ஷரீஆ வின் பங்கு முன்னையதைப் போன்றதே. அல்லாஹ் ஸக்காத்தையும் கொடுத்து வாருங்கள் எனக்கூறிய 13 சந்தர்ப்பங்களிலும், தொழுகையை நிலைநிறுத்துமாறு கூறியவைகளோடு இணைத்தே கூறியுள்ளான். ஸக்காத் பற்றி விரிவான விளக்கங்கள் தரப்படாதது, அது அவ்வப்போது தொழுகையைப் போல் நிறைவேற்றப்பட வேண்டிய கடமை என்பதற்காக இருக்கலாம்.

மேலும் அது ஸதக்காவைப் போன்று ஆனால் சிறு புறநடையாக,  அதாவது தனவந்தரால் கட்டாயமாகச் செயற்படுத்தப்பட வேண்டும்.  ஸதக்கா பற்றி இறைவன் குர்ஆனில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளான். அதனை நிறைவேற்றும் போது அது யார் யார் முன்னுரிமை பெற வேண்டியவர்கள் எனவும் வகுத்துள்ளான். ஸதக்கா பெறத் தகுதியுள்ளவர்களாக  அவன் குறிப்பிட்டுள்ள  எட்டு சாராரை ஷரிஆ சட்டமும், ஸக்காத்துக்குப் பரிந்துரைத்துள்ளது. அதற்கான நியாயமான காரணங்களாக வேறு எதுவும் இல்லாவிட்டாலும், ஸதக்கா பெறத் தகைமை பெற்றோர், ஸக்காத் பெறத் தகுதி பெற்றவர்களாகக் கணிக்கப்பட்டமை அல்லாஹ்வின் வார்த்தைக்கு அன்றைய சட்டவல்லுநர் கொடுத்த முக்கியத்துவத்தையும்,  மாற்றீடற்ற அவற்றின் பெறுமதியையும் விளக்குகின்றது.

இஸ்லாமியக் கடமைகளில் ஸக்காத் தவிர்ந்த அனைத்தும், தனக்கும் இறைவனுக்குமுள்ள நேரடித் தொடர்பைக் காட்டுவது.  ஸக்காத் மட்டும் பிறருக்குக் கொடுப்பதன் மூலம் நமது கடமையை நிறை வேற்றுவது. இந்த ஸக்காத் நடைமுறை, தற்போதைய உலகியலில் சிறப்பாகத் தன் கடமையைச் செய்துள்ளதா எனச் சீர்தூக்கிப் பார்ப்பது அடியார்தம் கடமையே. (அல்லாஹ் மன்னிக்கனும் ) அல்லாஹ்வின் எண்ணக் கரு பற்றியும் அதனை நாம் அடைந்துள்ளோமா என்பது பற்றியும் அறியுமுன்னர், ஷரியா சட்டத்தையாவது நடைமுறைப் படுத்துகிறதா? என்பதை அறிந்தால் ஏமாற்றமும், விரக்தியுமே எஞ்சுகிறது. நமது பரிதாப நிலை பதிவாகிறது. இச்சந்தர்ப்பத்தில், ஸக்காத் பற்றி ஷரியாவின் அடிப்படையில் நடைமுறையிலுள்ளதை சுருக்கமா அறியலாம்.

அதாவது, வருட முழுவதும் நம்மிடம் மேலதிகமாக இருப்பிலுள்ள பணம், பொருள் போன்றவைகட்கு, வருடமொரு 2.5 வீதம் வரிசெலுத்தல். இது குர்ஆனுக்கு முரண்படுகிறதோ இல்லையோ, சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாத சந்தர்ப்பத்தை, ஸக்காத் கொடுக்கக் கடமைப்பட்டவருக்கு ஏற்படுத்தி விடுகிறது. பல கோடிச் சொத்துக்களுக்கு ஸக்காத் கொடுக்கக் கடமைப்பட்ட செல்வந்தர், தனது சொத்து, சுகம் அனைத்தையும், ஸக்காத் கொடுக்கவிருந்த வருட முடிவில், இயற்கை அழிவாலோ (சுனாமி), செயற்கையாகவோ இழந்து விடுகிறார். இந்நிலையில், அவரால் ஷரிஆ சட்டத்தை நிறைவேற்ற முடியுமா? இந்நபர் குற்றவாளிக்கூண்டில் அல்லவா உள்ளார். இது யார் செய்த பாவம்? அவரா ? ஷரியாவா ? குர்ஆனா? நிச்சயமாகக் குர்ஆன் குற்றங்குறைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட அல்லாஹ்வால், சந்தேகமற்றதெனக் கூறப்பட்ட, குர்ஆனில் இருக்க முடியாது. அப்படி நினைத்தால் அது நமது ஈமானையே அழித்துவிடும்.  அச்செல்வந்தரின் குற்றமா என்றால் அதுவும் இல்லையெனக் குழந்தையும் கூறிவிடும்.

இப்போது கூண்டில் நிறுத்தப்பட வேண்டியது ஷரிஆ சட்டமே. குர்ஆனின் அடிப்படையில், அது தொழுகையையும், ஸக்காத்தையும் இணைத்துக் கூறியிருப்பதற்கொப்ப அவ்வப்போது செயற்படுத்தப் பட்டிருந்தால், அச்செல்வந்தருக்கு இந்நிலை ஏற்பட்டிருக்காது. குர்ஆனியச் சட்டத்தின் மகிமையைப் புரிந்துகொள்ள இதனைவிட வேறு உதாரணம் தேவையில்லை.

அடுத்து, ஸக்காத்துக்கு உரியவர்களாக, ஷரிஆ குறிப்பிட்டுள்ள எட்டு வகை மக்களை பார்ப்பது மேலும் விளக்கம்பெற உதவும்.   மேற்குறிப் பிட்ட  ஸக்காத் பெறுநர்களில் கடனாளிகள், அடிமைகள், வழிப் போக்கர் போன்றோர் தேவையின் அவசர, அவசியம் உணர்ந்தே இறைவன் அவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்கள் எதுவுமற்று அநாதரவான அகதிகளாகஇருப்பார்கள்.  வழிப்போக்கர் செல்வந்தராக வும் இருக்கலாம். ஆனால், அவர் சந்தர்ப்ப சூழலால் நிர்க்கதியாகி, அருந்த நீர், உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க, படுக்க இடம், தமது இயற்கை உபாதைகளைப் போக்குவதற்குக்கூட வகை தெரியாது திண்டாடுபவர்களாக இருப்பார்கள். அவர்கள், இஸ்லாமியராக இருக்க வேண்டும் என்பதில்லை. ஆக கடனாளியாக, அடிமையாக, வழிப் பிரயாணியாக இருத்தலே வேண்டப்படுவது. இவர்கள் வருட முடிவில் கொடுக்கப்படும் ஸக்காத்துக்காகக் காத்திருக்க முடியுமா?

வல்ல அல்லாஹ் நலிவடைந்தோரின் நலனைக் காக்க எண்ணி வருடமுடிவு வரை காத்திருந்து பெறக்கூடிய உதவு திட்டத்தை சட்டமாக்கி இருப்பானா? அல்லது முஸ்லிம்கள் மட்டும் பயன்பெறும் திட்டத்தை வரைந்திருப்பானா? நல்லவர் கெட்டவர் பாராது உணவளிப்பவன்,  இது போன்ற குறுகிய நோக்குடைய சட்டங்களை ஆக்கி முஸ்லிம்களை உலகோர் மத்தியில் குறுகிய நோக்குடைய, சுயநலமிகளாக, மனிதாபிமானமற்றவர்களாக வாழுமாறு செய்திருப்பானா?  அத்தோடு முஸ்லிம்களை நடுநிலை உள்ள சமுதாயமாக ஆக்கி உள்ளோம் என்ற வாக்கையே மறுப்பதாகிவிடாதா? அல்லாஹ் மன்னிப்பானாக !

ஆக, தற்போது நாம் பின்பற்றிக் கொண்டிருக்கும் ஷரிஆச்சட்டம் தற்கால நிலையில் பொருத்தமற்தாக, அல்லாஹ்வின் ஏற்பாட்டையே புறந்தள்ளுவதாக அமைந்திருப்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. ஸக்காத் வருடமொரு முறை என்ற கருது கோள் வேண்டுமானால், ஒரு இஸ்லாமிய நாட்டிற்குப் பொருத்தமானதாக இருக்கலாம்.  அவர்கள்  ஸக்காத்தை வசூலித்து பொது நிதியாக்கித் தேவைப்படுவோருக்கு அவ்வப்போது கொடுத்துதவலாம். அங்கு முஸ்லிம்கள் மட்டும் இருப்பதனால் வேறு பிரச்சினைகள் தோன்றாது. வழிப்பிரயாணி எவ்வூரவராகவும், எம்மதத்தவராகவும் இருக்கலாம். அதற்கான வழிமுறைகள் செய்யப்படாவிடில் நிராகரிப்பாகிவிடும்.

எமது நாட்டில் பொது நிதியம், பைத்துல்மால் என்ற பெயரில் இயங்கி வருகின்றது.ஆயினும், இறைவனின் நோக்கை, கட்டளையைச் செயற்படுத்துகின்றதா என்பது நகைப்புக்குரியதே.  அது தோன்றிய காலத்தில் ஒரு கடனாளியை, வழிப்பயணியைப் பயனாளி ஆக்கியதில்லை என்பதை அவர்களின் வருடாந்த கணக்கறிக்கை சாட்சி கூறும்.

அல்ஹம்துலில்லாஹ் ! அல்லாஹ் நாடினால் தொடரும்….

- நிஹா -