குடும்பக் கட்டுப்பாட்டில் குர்ஆனின் பங்கு!

 

இஸ்லாம் நேரடியாகச் சில விடயங்களை செய்யும்படியும், நேரடியாகச் சில விடயங்களை செய்யாதே என்றும் கூறும்! சிலவற்றில் அவற்றிலுள்ள நன்மைகளையும் தீமைகளையும் கூறும்! ஒரு விடயத்திலேயே தடுக்கப்பட்டதையும், ஆகுமாக்கப்பட்டதையும் கூறும்! சில விடயங்களில் தடுக்கபட்டதையும், விதிவிலக்குகளையும் கூறும்! சில விடயங்களில் அவற்றிலுள்ள நன்மைகளையும் கூறி, அவற்றினால ஏற்படும் பாவங்கள் மிகுதி என்பதால் அவற்றை விலக்கிக் கொள்ளக் கூறும்! சில விடயங்களில் மிகவும் நாசூக்காக அவற்றை அமுல்படுத்தும் விதத்தில் செய்திகளைக் கூறும், அதே வேளை அங்கு நாமறியாமல் ஒரு தடையை ஏற்படுத்தியும் இருக்கும்! இது நிர்ப்பந்தம் செய்யும் நோக்கைக் கொண்டதாக இராது! இவை பற்றி பட்டியல் போட்டுக் கூற முற்பட்டால் அது நாம் கூற வந்ததைவிட்டுச் செல்வதாக முடிந்து விடும். ஆதலால், நமது தலையங்கத்தை விளங்கிக் கொள்வதற்கு இவ்வளவும் போதுமானதாகும் என்பதில் நிறைவு கொள்வோம்!

விடயத்திற்குத் திரும்பின், இஸ்லாம் குடும்பக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை கொண்டுள்ளதா! அதாவது பிள்ளைப் பேற்றைக் கட்டுப்படுத்தும் சட்டம் எதனையும் கொண்டுள்ளதா! அதன் மூலம் பல் வேறு நன்மைகள் வந்தடைவது பற்றி எதுவும் கூறியுள்ளதா! குர்ஆன் எப்போதும் எவ்விடத்தையும், தனியாக எடுத்து, அது பற்றிய ஒரு கட்டுரைப் புத்தகமாக அமையாத விதத்தில், மிக நுட்பமாக, உய்த்துணர்ந்து, மேலும், மேலும் பல நன்மைகளை அதனுள் இருந்து பெற்றுக் கொள்ளுமாறே செய்திருக்கும்.

அந்த வகையில், குடும்பக் கட்டுப்பாட்டுச் சட்டம் என்ற ஒன்றை நேரடியாக அறிமுகப்படுத்தியிரா விட்டாலும், பினள்ளைப் பேறு பற்றியும், அதற்குப் பாலூட்டும் கால எல்லை பற்றியும் குறிப்பிட்ட விதத்தால், குடும்பக் கட்டுப்பாட்டை வெகு சாமர்த்தியமாக, யாருக்கும் துன்பமோ ஏற்படாத, யாராலும் மறுப்போ, எதிர்ப்போ கறப்பட முடியாத விதத்தில் கூறியள்ளமை வியந்து நயந்து கடைப்பிடிக்க வேண்டிய கடமைபாகின்றது. இது எதிர்மறையாகக் கூறாது நுட்பமாக, மிகச் சிறந்த நன்மையைக் கொண்டு தீமையைக் களையும் வழியாகவும் கொள்ளலாம்!

குடும்பக் கட்டுப்பாட்டால் நன்மைகள் உண்டா என்ற கேன்விக்கு நிரந்தரமாக ஒரு பதிலைக் கூறிவிட யாரலும் முடியாது! காரணம், அது முதற்படியாக இறை நாட்டத்துடன் சம்பந்தப்பட்டது. அடுத்து வருவன சில நன்மைகளையும் சில தீமைகளையும்கூடக் கொண்டிருக்கும்!

அல்லாஹ் தான் நாடியவருக்கு ஆண் பிள்ளைகளையும:,தான் நாடியவருக்குப் பெண் பிள்ளைகளையும், தான் நாடியவருக்கு ஆண் பிள்ளைகளையும், பெண் பிள்ளைகளையும், தான் நாடியோரை மலடாகவும் ஆக்கிவிடுவதாகத் தன் அருள் மறை குர்ஆனில் அழகுபடக் கூறியிருப்பதில் நிறையவே படிப்பினைகள் உண்டு.

இதிலிருந்து குடும்பக் கட்டுப்பாடு என்பது நமது கைவசமுள்ள ஒரு கட்டுப்பாடு என்று முழுமையாகக் கருதிவிட முடியாது என்பது புலனாகின்றது. இது, நான் முதற் பந்தியில் கூறிய , குடும்பக் கட்டுப்பாடு பற்றி ஒரு நிரந்தரமான கருதுகோளை ஏற்படுத்திவிட முடியாது என்பதைக் குறிகாட்டி நிற்கின்றது. ஆக தேவைக் கேற்ற விதத்தில் அல்லாஹ் சிருஷ்டிகளை உருவாக்குவதில் கைதேர்ந்தவன் என்பதால் உலக தேவைகளை முன்னிறுத்தி மக்கள் பேற்றை அனுமதிக்கிறான் என்றே கொள்ள வேண்டும்!

இப்போது நான் முதற் பந்தியில் அல்லாஹ்வின் நடைமுறை சம்பந்தமாகக் கூறியிருந்த சில விடயங்களில் இறதியில் கூறியிருந்த, ‘சில விடயங்களில் மிகவும் நாசூக்காக அவற்றை அமுல்படுத்தும் விதத்தில் செய்திகளைக் கூறும் அதே வேளை, அங்கு நாமறியாமல் ஒரு தடையை ஏற்படுத்தியும் இருக்கும்! இது நிர்ப்பந்தம் செய்யும் நோக்கைக் கொண்டதாக இராது!’ என்பதைக் கவனத்திற்குக் கொள்வோமாயின் நான் கூறத் தலைப்பட்ட தலையங்கத்தை நான் விவரித்துக் கூறாமலே, பின்னால் கூறப்படவுள்ள குர்ஆன் வசனத்தில் இருந்து நீங்கள் அறிந்து கொள்வீர்கள்!

ஒரு தாய் தன் கருவைச் சுமப்பதும், அதற்குப் பாலூட்டுவதற்கும் அவள் செலவழிக்கும் காலமாக அல்லாஹ் கூறியுள்ள முப்பது மாதங்கள் என்பது நமது கருத்திற்கு விருந்தாவது! இவ்வசனத்தில், ஒரு தாய் நம்மைச் சுமக்கும் காலம், அதில் அவள் அனுபவிக்கும் கஷ்டம், அவளால் உலகுக்கு அளிக்கப்படும் பங்களிப்பு, அக்கருவை வளரச் செய்வதில் இறைவனின் திருவிளையாடல் போன்ற இன்னோரன்னவை மிகவும் நுணுக்கமாக உட்படுத்தப் பட்டிருப்பினும், மிக முக்கியமானதாக நாம் இங்கு, அதில் கூறப்பட்டுள்ள பாலூட்டும் கால நிர்ணயத்தை எடுத்துக் கொள்வோம்!

இதனை வெளிப்படுத்த புனித குர்ஆனில் ஒரு சில வாசகங்கள் காணப்படினும், நான் இங்க ஒரு வசனத்தை மிகவும் பொருத்தமானதாகக் கருதிப் பதிவிடுகிறேன். அது நமது தலையங்கத்துக்குப் போதிய பதிலை அளிப்பதாக அமையும். அல்ஹம்துலில்லாஹ்!

அல் குர்ஆன் 46:15 – தமது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு நாம் உபதேசி;த்தோம். அவனுடைய தாய் அவனைச் சிரமத்துடன் சுமந்திருந்து, சிரமத்துடனே அவனை ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்திருந்ததும், அவனுக்குப் பால் குடியை மறக்கடித்ததும் முப்பது மாதங்களாகும். முடிவில் அவன் தனது வாலிபத்தை அடைந்து நாற்பது ஆண்டுகளை அவன் அடைந்திட்ட பொழுது, ‘என்னுடைய ரப்பே! நீ எனக்கும், என்னுடைய பெற்றோருக்கும் அருளிய உனது அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்துவதற்கும், நீ எதனைப் பொருந்திக் கொள்வாயோஅத்தகைய நற்செயல்களை நான் செய்வதற்கும், எனக்கு உள்ளுணர’வை உறுதிப்படுத்துவாயாக! என் சந்ததியினரை எனக்கு நல்லிணக்கமாக்கி வைப்பாயாக! நிச்சயமாக நான் உன் பக்கமே மீண்டு விட்டேன்! நிச்சயமாக நான் முஸ்லிம்களில் உள்ளவனாக இருக்கிறேன்! ‘ என்று அவன் கூறுகின்றான்!

மேற்கண்ட வசனத்தில் கருவைச் சுமந்திருந்ததும், பால் குடியை மறக்கச் செய்ததற்கும் கால எல்லையாகக் குறிப்பிடப்பட்ட காலம் முப்பது மாதங்கள். அதில் சிசுவைச் சுமந்த காலமாக பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட காலம் ஒன்பது மாதம் பத்து நாட்கள், அதாவது 280 நாட்கள். இது தவிர்ந்த, 620 நாட்களைப் பாலுட்ட வேண்டிய காலமாகக் குறிப்பிட்டுள்ளதால், அடுத்த பிள்ளை உருவாவதற்கான காலம், ஆகக் குறைந்தது, பத்து மாதங்களாவது இடைவெளி ஒன்றைக் கொண்டிருக்க வேண்டும் என்பது புலப்படுகின்றது. இன்னும் விளக்கமாகக் கூறின், முதற் குழந்தை பிறந்ததில் இருந்து, அடுத்த குழந்தை கருவுறத் தொடங்கும் காலம் ஆகக் குறைந்தது பத்து மாதமாகக் கணக்கிடப்பட வேண்டும் என்பதே!

ஆனால், உண்மையில், மேலும் பத்து மாதம் காத்திருப்பது, அடுத்த குழந்தை கருவுறுவதிலும், பிறந்த குழந்தை போதிய ஊட்டத்துடன் வளர்வதற்கும், தாய்க்கு எவ்வித நலிவையும் ஏற்படுத்தாது உதவுவதாகவும் இருக்கும்! இந்த வகையில் நோக்குவோமாயின் ஒரு பிள்ளைக்கும் மறு பிள்ளைக்கும் உள்ள இடைவெளி முப்பது மாதங்கள் அல்லது இரண்டரை வருடங்களாக மாறுகின்றது!

இப்போது, நாம், குடும்பக் கட்டுப்பாடு என்ற எதனையும் சட்டமாக்காமலே, ஒரு தாய் ஒரு குழந்தையைக் கருவற்று, சுமந்து, பெற்று, பாலூட்டி வளர்க்கும் கஷ்டத்தை நமக்கு அறிவிக்கும் குறித்த சந்தர்ப்பத்திலேயே, பல்வேறு விடயங்களை நமக்கு அறிவித்து விடுகின்றதை.க் காணக்கூடியதாய் இருக்கின்றது. அதில் முக்கியமானதாக நாம், இங்கு பிள்ளைப் பேற்றுக்கான இடைவெளிக் காலத்தை முப்பது மதங்கள் என்று நிர்ணயிப்பதற்கான வழி வகையும் கூறப்பட்டுள்ளதைக் அவதானிக்கக் கூடியதாயிருக்கின்றது. இதன் மூலம் நாமறியா, ஒரு மிகச் சிறந்த, இயற்கையாயமைந்த, நிர்ப்பந்தமற்ற, சுயகட்டுப்பாட்டுடனான குடும்பக் கட்டுப்பாட்டை மனித வர்க்கத்திற்குப் புனித குர்ஆன் இறக்கி அருளியுள்ளது என்பது வெளிப்படை!

- நிஹா -