இப்பதிவு முநூலில் இருந்து பெறப்பட்டது. பீஜே அவர்களின் ஒன்லைன் கேள்வி – பதில் நிகழ்வில் அல்லாஹ் பற்றிய கேள்வி ஒன்றுக்கு, அல்லாஹ் ஔியாக இருப்பதால் இவ்வுலகில் காண முடியாது. மறுவுலகில், நமக்கு தரப்படும் வேறொரு அமைப்புள்ள கண்களினால் காணலாம் என பீஜே கூறிய கருத்துக்கு, மாற்றுக் கருத்தாகப் பதிவாகி இருந்த குர்ஆனிய உண்மைகளை, வாசகர் நலன் கருதி, இப்பகுதியில் பதிவிடுகிறேன்!

நற்சிந்தனை! 34

கலிமா கூறும் ஏகத்துவம் !

தௌஹீத் என்றால் என்ன என்ற விளங்கிக் கொள்ளாதவரை அல்லாஹ் பற்றிய குழப்பங்களுக்கு அளவே இருக்காது. அதனை விளங்க வைக்கவே வேதங்கள், நபிமார், ரசூல்மார் உலகுக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் கொணர்ந்த தாரக மந்திரம், லா இலாஹ இல்லல்லாஹ் அதாவது, அல்லாஹ்வைத் தவிர எதுவுமில்லை. நமது நாயகம் ஸல் அவர்களுக்கு அல்லாஹ், நீர் இபுறாஹிமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக எனக் கூறிவிட்டு, இபுறாஹிம் இணைவைப்போராக இருக்கவில்லை என்கின்றான்.

இல்லாமல் ஒன்றும் உருவாகிட முடியாது என்பது ஏற்கப்பட்ட தத்துவ உண்மை! இப்பொழுது நாம் காணும் பிரபஞ்சமும் அதனுள் அடங்கியவையும் முன்பு இல்லாதிருந்தாலும், அவை நித்தியனான அல்லாஹ்வின் உள்ளமையில்இருந்தே உருவாகியிருக்கின்றது. இதைத்தான் அல்லாஹ்வும் உண்மையிலிருந்தே அனைத்தையும் படைத்ததாகக் கூறுகின்றான். உண்மை என்பது இல்லாத ஒன்றல்ல. அது உள்ளதே! அதனாலேயே அல்லாஹ் உண்மையைக் கொணர்ந்தவரும் உண்மைப்படுத்தியவரும் வெற்றியாளர் என்கின்றான். அதுவே கலிமாவாக, சாட்சியம் கூறுவதற்காக நம்முன் காத்துக் கிடக்கின்றது. அதற்கு ஆதாரமானதே சூரா 112 கூறும் அவன் ஏகன் என்பது. அல் குர்ஆன் 16:3 – அவன் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்துள்ளான். இது படைக்கப்பட்டுள்ள விதத்தைத் தெளிவாகக் கூறுவது.

நீதியை நிலை நாட்டக்கூடியவனாக உள்ள நிலையில் அல்லாஹ் தன்னைத் தவிர வேறு எதுவுமில்லை என்கின்றான். அவ்வாறே வானவர்களும் அறிஞர்களும் சான்று பகர்கின்றனர் என்று தன்னருள் மறை குர்ஆனில், 3:18இல் கூறியுள்ளான்.

இந்தப் பிரபஞ்சம் வேறு அல்லாஹ் வேறு என்று எப்போது நினைக்கின்றோமோ அப்போது அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கத் தொடங்கி விடுகின்றோம். தங்கம் வேறு நகை வேறாகிவிட முடியாது என்பதை உணர வேண்டும். கடல் வேறு அலை வேறாகிவிடாது. இவை சில மாற்றங்களுக்கு உட்பட்டே வேறு ஒன்றாக உருவெடுத்துத்துள்ளன, ஆனால் அல்லாஹ்வின் உள்ளமையோ மாற்றங்களுக்கு உட்படாமல், அவன் அவனாக இருக்கும் நிலையில் தோற்றங்களை உருவாக்கியுள்ளது. அவனிலிருந்து வெளியான ஒரே ஆத்மா பல்வேறு உருவங்களுடன் வெவ்வேறு பெயர்களுடன் காட்சியளித்தாலும், அது தன்னில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்திக் கொள்ளாதது. அது போன்று அதுவும் காண முடியாததாக உள்ளது, அது அவனில் நின்றுமுள்ளதால் என்பது அறியப்படல் வேண்டும்.

அவன் பேரொளியாக இருக்கின்றான் என்பது, இடம், காலம், வரம்பு, எண்ணிக்கை போன்ற எவற்றாலும் கணிக்கப்பட முடியாததாக உள்ளதே! அவனைப் போன்று எப்பொருளும் இல்லை என அவன் கூறியிருப்பது, எதனுடனும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாதது என்பதாலேயே1 இது இணை வைக்க முடியாது என்பதை வலியுறுத்துவது.

பார்வைகள் அவனை வந்தடைவதில்லை என அவன் கூறுவது அவனைக் காண முடியாது என்று கூறுவதல்ல. கண்ணால் பார்க்க முடியாது என்பதால் காற்றை யாரும் இல்லை எனக் கூற முடியாது. ஆனால் அதனை உணர முடிகின்றது. ஆனால், அல்லாஹ்வோ அனைவரினதும் பார்வைகளை அடைவதாகக் கூறுகின்றான்.

அதனால் அவனை மறுமையில்தான் வேறொரு அமைப்புள்ள கண்ணினால்தான் காணலாம் என்று கூற முற்படுவது, அல்லாஹ் மேல் பொய்யுரைப்பதாகிவிடும். இம்மையில் குருடர் மறுமையிலும் குருடர் என அல்லாஹ் கூறுவதை நிராகரிப்பதாகிவிடும். ஆதலால், இம்மையில் அவன் நம் கண்களை அடைவதாகக் கூறுவது நாம் அவனைக் கண்டு, முன்னர் கண்டதை ஞாகப்படுத்தி சாட்சி பகர்வதற்காகவே என்பதை உணர வேண்டும். அதனை விடுத்து எதேச்சையாக, மனம்போன போக்கில் கருத்துக்களைக் கூறி வழி கெடுக்கக் கூடாது.

அவன் அவ்வலு என்ற ஆதியானவனாகவும், ஆஹிறு என்ற அந்தமானவனாகவும், ளாஹிறு என்ற வெளியானவனாகவும், பாத்தினு என்ற மறைவானவனாகவும் உள்ளான். இதனாலேயே அவன் அவற்றைத் தன் திருநாமங்களாக வைத்து்க் கொண்டுள்ளான். இதனை 57:3 தெளிவாகக் கூறுகின்றது. அவனே முதலாமவனும் கடைசியானவனும். அவன் வெளிப்படையானவனும் மறைவானவனும். மேலும், அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். இவ்வசனம் உய்த்துணரப்பட வேண்டியது.

நாம் இப்பிரபஞ்சத்தையும் அவற்றிலுள்ள அனைத்தையும் வேறாகவும் அல்லாஹ்வை வேறாகவும் பார்ப்பதானால், அவன் ளாஹிறு வெளியானவன், நாம் எங்கும் மறைந்துவிடவில்லை என்பதை மறுக்கவே வேண்டும். அதே வேளை அவற்றை இறைவனாகக் கூற முற்படின் பாத்தினு என்ற மறைவானவன் என்பதை மறுக்க வேண்டும். அவனைப் போன்று எப்பொருளும் இல்லை என்பதோடு முரண்படவும் வேண்டும். அது தௌஹீது – ஏகன் என்பனை நிராகரிப்பதாக ஆகிவிடும்.

ஆதலால். தௌஹீத் என்ற வார்த்தை விளையாட்டுக்களை விடுத்து, தௌஹீதை -ஏகத்துவத்தை- அறிய வேண்டும். அப்போதே கலிமா தரிபடும். சாட்சியம் கூற முடியும்! நாம் இஸ்லாமியனாக முடியும்.