நாம் செல்ல வேண்டிய வழியை உறுதி செய்து கொள்வது எப்படி!

நாம் ஓரிடத்துக்குச் செல்ல வேண்டியிருந்தால், அதற்கான ஆயத்தங்களைச் செய்வதோடு போகவுள்ள பாதை பற்றிய அறிவு வேண்டப்படுகின்றது. காரணம், பாதையே நாம் செல்ல வேண்டிய இலக்கை அடைவதற்கு உறுதுணையாயிருப்பது. ஒரு இலக்கை அடைவதற்குப் பல பாதைகள்கூட இருக்கலாம். அத்தனை பாதையிருந்தும் சில வேளை புதிய பாதை ஒன்றைப் போட்டுச் செல்ல வேண்டிய நிலைமைகூட காணப்படலாம். குறுக்கு வழிப் பாதைகள், ஒற்றையடிப் பாதைகள் எனப் பல்வேறு வகைத்தானவையும் உண்டே! இவை பாவிப்பவர்களின் திறன், அறிவு, அனுபவம், தேவை, வசதி என்பவற்றை உள்ளடக்கி அவரவர்களின் தெரிவுக்கு உள்ளாகும்.

பாதைகளில் சில பல்வேறு குறியீடுகளின் மூலம் நமக்கு பாதை பற்றிய அறிவினைத் தந்து நமது பயணத்தை இலகுவாக்கி இலக்கைச் சிரமமின்றி அடைவதற்காக அமைக்கப்பட்டுள்ளன. இம்மாதிரியான வசதிகள் செய்யப்படாத பாதைகளும் உண்டு. அப்படியான சந்தர்ப்பங்கள் நமக்கு ஏற்படும் போது விசாரணைகள் ஒன்றே நன்மை பயப்பன. இதில் அனுபவஸ்தர்களின் வழிகாட்டல் சிறப்பான பலனை, இலக்கை அடைவதில் நல்கும்.

இவை இவ்வுலகில் நமக்குத் தேவையான அறிவாக உள்ளது. இப்பாதைகள் பௌதிகத் தொடர்பு கொண்டவை என்பதால், மிகக் குறைந்த தேடல், அல்லது விசாரணை, ஒரு வரைபடம் நமது தேவையை நிறைவு செய்யும். மேலும், போகும் வழிகளில் நாம் சந்திக்கும் மனிதர்களிடம் இருந்து கேட்டு அறிந்து, நாம் போகும் வழி சரியான இடத்திற்குக் கொண்டு சேர்ப்பதில் தடைகளை உருவாக்காது என்பதை ஊர்ஜிதம் செய்து கொள்ளலாம்.

ஆனால், நாம் இங்கு அலசவிருப்பது, அல்லாஹ்வின் நெருக்கத்தை அடைவதற்கான பாதையைத் தேடுவது, தேர்வது. அந்த வகையில், இந்தப் பாதை பௌதிகத் தன்மைகளைக் கொண்டதல்ல என்பதும், போகும் வழியில், கேட்டுக் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாத ஒன்றென்பதும், பிழைவிட்டுத் திருத்திக் கொள்ளும் சந்தர்ப்பம் இறுதி நேரத்தில் சாத்தியப்படாது என்பதும் அறிவில் இருத்தப்பட வேண்டியவை. காரணம், இவ்வுலக வாழ்வில் நமக்குக் கிடைத்துள்ள அத்தனை பாக்கியங்களையும் கொண்டு மறுமைக்கான வழியைத் தேடுவது என்பதால், அவ்வழி சரியானதா, பிழையானதா என்பதைத் தேர்வுக்கு முன்னதாகவே காணப்பட வேண்டியுள்ளது. குர்ஆனில் உரைத்துப் பார்த்து அறிந்து கொள்ளும் அறிவு நம்மில் எத்தனை பேருக்கு இருக்கப் போகின்றது. அப்படியே அறிந்து விட்டோம் என்றால் கூட அது உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது. ஆதலால், இங்கு விசாரணை, உதவி போன்றவை முக்கிய அம்சங்களாக மாறுகின்றன. 

விசாரணை செய்வதற்கு அப்பாதையைக் கண்டு வெற்றி பெற்றவர் யாரென்பது நாமறியாதது. நாம் நிச்சயப்படுத்திக் கொள்ளக் கூடிய ஒரேயொரு மனிதர் நமது நாயகம் ஸல் அவர்கள் மட்டுமே! அதுவும்கூட அவர்களின் காலத்தில் நாம் வாழவில்லை என்பதால் குறைபாடாகவே உள்ளது. அதற்காக அவர்கள் கூறிச் சென்றவைகளான ஹதீஸ்கள் நமக்குக் குறிப்பிட்ட அளவு உதவலாம். ஆனாலும், அதுவே முழுமையானது என்பதற்கு உத்தரவாதமில்லை. இவைகளை எல்லாம் அறிந்திருந்ததனாலேயே, அறிவுக் கருவூலமான அல்லாஹ் நமக்கு, தனது தோற்றுவாயான புனித குர்ஆனின் தொடக்க சூராவான பாத்திஹாவிலே அவனது உதவியை நாடும்படி ஏவியுள்ளான். அது ஐந்தாம், ஆறாம், ஏழாம் வசனங்களாகப் பதிவாகி உள்ளன.

அவ்வசனங்கள் அனைவரும் அறிந்ததுதான் என்றாலும், அவற்றைக் கூற வேண்டியே இருக்கின்றது. காரணம் அதனை வைத்தே நாம் தேடும் உண்மையை உத்தரவாதம் செய்ய வேண்டியுள்ளதே! ”நீ எங்களை நேரான வழியில் செலுத்துவாயாக. நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ, அத்தகையோர்களின் வழியில். கோபத்துக்கு உள்ளானோர்களின் வழியுமல்ல, நேர்வழி தவறியோர் வழியுமல்ல.” இவை விளக்கம் தேவைப்படாதவை. இங்கு அல்லாஹ்வே வழிகாட்ட வேண்டியுள்ளது என்பது முதன்மையானது. அப்படிக் காட்டப்பட்டால், அது பிழைக்காது ஆயினும். அல்லாஹ்வே, அடுத்த வசனத்தில் அல்லாஹ் அருள் புரிந்தவர்களின் வழி என்கின்றான். அதற்கு மேலும், அவனது கோபத்துக்குள்ளானவர்களின் வழியல்ல என்பவை உய்த்துணரப்பட வேண்டியவை.

அல்லாஹ்வே நேர்வழியிலும் செலுத்துவான், வழி கெடுக்கவும் செய்வான் என்ற ஓர் உண்மை குர்ஆன் முழுவதும் விரவிக் கிடப்பதால், சரியான வழி என நாம் தெரிவது பிழையான வழியாகிவிடும் சாத்தியமும் உண்டு என்பதால், அவனிடம் கேட்பதோடு நிறுத்திவிடாது. அவனால் நேர்வழியில் நடத்தப்பட்டு வெற்றியடைந்த அவனது நல்லடியார்களைக் கண்டறிவதும் அவர்களிடம் அறிவுரை பெறுவதும் இன்றியமையாததாகின்றது. இது, அல்லாஹ் பரிந்துரைத்த, இறைநெருக்கத்தை அடைவதற்கான வழியைத் தேடிக் கொள்ளுங்கள் எனக் கூறப்பட்ட வசனத்தால் தரப்பட்ட அனுமதியாகக் கொள்ளலாம்.

இங்குதான் பிரச்சினை தோற்றம் பெறுகின்றது. 40:29 வசனத்தைப் பாருங்கள். ‘என் சமூகத்தாரே! இந்தப் பூமியில் மிகைத்தவர்களாயிருக்க, இன்று ஆட்சி உங்களிடம்தான் இருக்கிறது. ஆகவே, அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து அது நமக்கு வந்துவிட்டால், நமக்கு உதவுபவர் யார்?’ இதற்குப் பதிலாகவே பிர்அவ்ன், ‘நான் கண்டதைத் தவிர நான் உங்களுக்கு அறிவிக்கவில்லை. நேரான வழியே தவிர நான் உங்களுக்குக் காட்டவில்லை.’ என்று கூறினான்.

இதிலிருந்து நமக்கு ஒன்று தெளிவாகப் புலப்படுகின்றது, வழிகேடர்கள்கூட தாம் நேரான வழியையே காட்டுவதாகக் கூறுவதே! ஆகவே, பிரிவினைவாதிகள் பல்வேறு வழிகளை மக்களுக்குக் கூறிக் கொண்டிருந்தாலும். அவர்கள் அல்லாஹ்வால் வழிகாட்டப்பட்டு வெற்றி அடைந்தவர்களா என்பதே நமது சிந்தனைக்கு விருந்தாக வேண்டியது. அதனை விடுத்து, நாம் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் வழிகேடாகிவிடும் சந்தர்ப்பமே அதிகமாக உள்ளது என்பதனால்தால்தான், அல்லாஹ் தன் திருமறையின் தொடக்கத்திலேயே அவ்வாறான ஒரு அறிவுரையைத் தந்துள்ளான். அல்ஹம்துலில்லாஹ்!

ஆதலால், இவ் இறைநேசர்களை அறிந்து கொள்வதில், நம்முன்னோர் நமக்கு வழிகாட்டியே உள்ளனர். அவைகளின் அத்தாட்சிகளாகக் காணப்படுபவையே உலகெங்கும் காணப்படுகின்ற இறைநேசர்களின் அடக்கத் தலங்கள். அவை நம் போன்ற அறியாமையில் மூழ்கியவர்களால், பிழையான வழியில் நடைமுறைப் படுத்தப்படுகின்றது. அப்பிழைகளை அறிந்தவர்களும், அதன் உண்மைத் தன்மையை மக்களுக்கு வெளிப்படுத்துவதை விடுத்து, வெளிப்படையாக அவர்கள் அறிந்து கொண்ட சிலவற்றை வைத்துக் கொண்டு. அவற்றை விமர்சிப்பதிலும், கேலி, கிண்டல், நையாண்டி செய்வதிலும். அவ்வடியார்களைக் கேவலமாகக் கதைப்பதிலும், தூஷிப்பதிலும், அவர்களின் கல்லறைகளை உடைப்பதிலும் தமது அறியாமையை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், அவ்வாறான சில தவறான நடைமுறைகளைக் கையாள்பவர்களை, மிகைப்படுத்தி, அவர்கள் கபுறுகளை வணங்குபவர்கள் எனவும் ஷிர்க்கில் இருக்கின்றனர் எனவும் தீர்ப்பளிக்கின்றனர்.

உதவி தேடுவது என்பது, மனித வாழ்வில் இன்றியமையாதது. தனது வழியில் நிற்போருக்குத்தான் அல்லாஹ் உதவுவதாகக் கூறுகின்றான். அவனது வழியைத் தேடவும், அவ்வழிக்குப் போவதற்கும் முன்னதாக அறிய வேண்டியவை நிறையவே உண்டு. அதனால்தான் நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் அறிந்தவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள் என்ற அனுமதியையும் தந்துள்ளான்.

இதிலிருந்து, அறிந்தவர்கள் என்று உலகம் ஏற்றுக் கொண்ட பலர் உயிரோடும் நம்மத்தியில் உள்ளனர். அவர்கள் தாமாக வலிந்து தம்மைக் காட்டிக் கொண்டு திரிவதில்லை. அத்தோடு, இறந்தவர்கள் என்று நாம் நினைக்கும் இறைநேசர்கள், தியாகிகள், இறைவன் வழியில் கொல்லப்பட்டவர்கள். அல்லது மரணித்தவர்கள் அல்லாஹ்வால் உணவு ஊட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் நினைத்த வழிகளில் பேறு பெற்றவர்களாக உள்ளனர் என்பதைக் குர்ஆன் நமக்கு எடுத்துரைத்துக் கொண்டிருக்கின்றது. அவர்கள் நினைத்ததைச் செய்யும் ஆற்றல் பெற்றுக் கொண்டவர்கள், நினைத்த இடத்திற்கு நினைத்த மாத்திரத்தே சென்று அல்லாஹ்வின் நாட்டத்தை நிறைவேற்றுபவர்களாகவே இருக்கின்றனர். இவற்றில் சில நம் அறிவுக்குள் அடங்காதவை. அதனால் நம் அறியாமையை அம்மாமனிதர்களை அளவிடுவதற்கான கருவியாகப் பாவிக்கக் கூடாது. அது நிராகரிப்பை வருவிக்கும். அல்லாஹ்வும் இறைநேசர்கள் கவலையும் அச்சமும் அற்றவர்கள் எனவும், தியாகிகள், மார்க்கத்திற்காக நாடு துறந்தவர்கள். அவர்களில் மரணித்தவர்கள் கொல்லப்பட்டவர்கள் எனவும் அவர்கள் பற்றிக் கூறுகின்றான். அதனால்தான் அல்லாஹ்வே தன் நல்லடியார்களின் ஞாபகார்த்தமாக குர்பானி, ஷபா-மர்வா, ஸம்ஸம், இபுறாஹீம் அலை அவர்கள் நின்று தொழுத இடம், ஆதம் அலை அவர்கள் கட்டிய முதல் வீடு போன்றவைகளை அத்தாட்சிகளாக, அடையாளச் சின்னங்களாக, படிப்பினைகளாக, நடைமுறைப்படுத்தப்பட வேண்டியவகைளாக ஆக்கியுள்ளான். இவைகளும் நமது பின்பற்றலுக்குரியனவே!

ஆதலால், சிலர், தாம் மட்டும் இஸ்லாத்தை அறிந்தவர்கள் போன்று, மற்றவர்களைக் கேலி பண்ணிக் கொண்டு திரிவதையும், பட்டப் பெயர் வைப்பதையும், ஸியாரங்களை உடைத்து முஸ்லிம்களின் இருப்புக்கு ஆதாரமாக விளங்கிக் கொண்டிருக்கும் வரலாற்றுப் பதிவுகளாகவுள்ளவைகளை அழிக்கும் வேலைகளை விடுத்து, முடிந்தால் தவறுகளை, உண்மைகளை விளங்க வைப்பதன் மூலம் திருத்த முயற்சியுங்கள். இன்‌றேல் ஸலாம் கூறி விலகிக் கொள்ளுங்கள். இது இறை வழி. அல்லாஹ்வின் வழிகளில் மாற்றமில்லை.நீங்கள் புதிதாக மாற்றங்களைக் கொணர முயற்சிக்காதீர். 
அவை 22:58, 59 போன்ற வசனங்களிலும் வேறிடங்களிலும் குர்ஆனில் பதிவாகி உள்ளன.

 

- நிஹா -