நற்சிந்தனை 32

அல்லாஹ்வை மறவாது அவனும் நம்மை மறக்காதிருக்க வழி தேடுவோம்!

 
அல் குர்ஆன் 59:19 அல்லாஹ்வை மறந்து விட்டவர்களைப் போன்று நீங்களும் ஆகிவிட வேண்டாம். ஏனென்றால், அவன், அவர்கள் தங்களையே மறக்குமாறு செய்துவிட்டான்!

மேற்கண்ட வசனத்தில் முன்னைய கூட்டம் ஒன்று அவனை மறந்தது பற்றியும், அதனால் அல்லாஹ், அவர்களைத் தங்களையே மறக்கும்படி செய்து விட்டான் என்ற ஒரு உண்மையை வெளிப்படுத்தி நம்மையும் அப்படி ஆகிவிட வேண்டாம் என எச்சரிக்கின்றது.

இச்சம்பவத்தில் இறுதி இழப்பு அல்லது தண்டனை அல்லது விளைவு நம்மை அவன் மறந்து விடுவதுடன், நம்மை நாம் மறந்து விடவும் செய்வதிலுள்ள பாரதூரம் விளங்க வேண்டியது. எதற்காக நாம் நம்மை மறக்க வேண்டிய நிலையை அடைந்துள்ளோம் என்பதை ஒப்புநோக்கின்அல்லாஹ்வை மறந்ததற்காகக் கொடுக்கப்பட்டதனைக் காண்கின்றோம்.

இதனைச் சமன்படுத்தின், அல்லாஹ்வை மறப்பது என்பது, நம்மை நாமே மறப்பது என்பதற்குச் சமனாகின்றது. நம்மை நாம் மறந்து வாழும் வாழ்க்கை ஏறத்தாழ சுயநினைவற்ற வாழ்க்கையாகக் கொள்ளலாம். சுயநினைவற்ற வாழ்வைச் சிறிது சிந்திப்போமாயின், அது எவ்வளவு கீழ் நிலை என்பதை அறிந்து கொள்ளலாம். தன்னை மறந்திருத்தல், தொழுகைக்கு முன்னரான வுளு வையும்கூட முறித்துவிடும் என்பதில் இருந்து அதன் பாதிப்பின் அளவை மட்டிடலாம்! தன்னிலை மறந்திருத்தல் என்பதற்கும் சிலர் பிழையான விளக்கங்களைக் கொடுத்து, தம்மையும் ஏய்த்து, பிறரையும் வழிகெடுக்கின்றனர்.

அதற்கு மேலாக, நாம் படைக்கப்பட்டதன் நோக்கம் நம்மை அறிவதன் மூலம் அல்லாஹ்வை அறிந்து, அவனை அனுதினமும் நினைவில் கொண்டவர்களாக நற்காரியங்கள் என்ற அவனின் உயர் தன்மையை வெளிப்படுத்தி, அவனுடைய நன்றி பாராட்டுதல் என்ற பண்பை முழுமையாக அடையப் பெற்று இம்மையிலும் மறுமையிலும் நாம் நினைத்ததை அடைந்து கொள்வதே!

இது நம்மை அல்லாஹ் முதலில் படைத்து, நம்மூதாதையரான ஆதமின் பிள்ளைகளின் முதுகளில் இருந்து வெளிப்படுத்தி, தான் நமது றப்பு என்ற உண்மையசை் சாட்சியங் கூற வைத்து, நம்மை முஸ்லிம்களாக்கி உலகில் இன்னொரு பிறப்பின் மூலம் வெளிப்பட வைத்துள்ளான்.

இம்மனிதப் படைப்பில் நம்மிடமுள்ள குறைபாடுகள், அவனை மறந்து. அவனது அடுத்த சந்திப்பையும் மறக்க வைத்து, நம்மைக் குருடர்களாகவும், செவிடர்களாகவும், இதயம் பூட்டிடப்பட்டவர்களாகவும், பாவச் செயலர்களில் ஈடுபட வைத்துள்ளது. அதனால், அல்லாஹ்வும், தன் ரூஹைச் சுமந்து திரியும் நம்மேல் கொண்ட கிருபையாலும், இரக்கத்தாலும், மன்னிக்கும் பண்பாலும் நம்மை உடனடியாகத் தண்டியாது, தன்னால் நியமிக்கப்பட்ட நபிமார், தூதுவர், இறை நேசர்கள், அறிஞர்கள் போன்றோர் மூலம், நாம் அன்று அவனைச் சந்தித்து சாட்சியங் கூறியதை நினைவுபடுத்து கின்றான். நாமும் அதனைப் புறக்கணிப்போராகவே உள்ளோம்.

நாம் அம்மறதி அல்லது புறப்பணிப்பு நிலையில் இருந்து விடுபடும் வழியாக தொழுகையை அமைத்து, அதனை நிலைநாட்டும்படியும், அதன் மூலம் அல்லாஹ்வை நினைவுகூரும்படியும் கூறி, அதற்கான தவணையை நாம் உறுதி ஏற்படும் காலம் எனவும், அது மறுமைக்கு முன்னர் என்ப‌தனையும் தெளிவுபடுத்தி உள்ளான்.

இத்தனைக்கும் மேலாகவும் நாம் அவனை மறந்திருந்தால் வரவுள்ள தீமையினைப் பல்வேறு சந்தர்ப்பங்களில், இம்மையில் குருடர் மறுமையிலும் குருடர் எனவும், மறுமையில் அவன் நம்முடன் பேசமாட்டான் எனவும், அவனது தரிசனம் கிடைக்காது என்றெல்லாம் கூறியிருக்கிறான். அனைத்தையும் விட மோசமானதாகவே, மேற்கண்ட வசனத்தில் உள்ள எச்சரிக்கை அமைந்துள்ளது.

ஆதலால் அவனை மறவாதிருக்க, அவன் கூறியவாறு நமக்குள்ளும் உற்று நோக்கி, அவனை நினைவபடுத்தி, அவன் நமது பார்வையினுள் வருவதாகக் கூறியிருப்பதைப் பயன்படுத்தி, அவனை அறிந்து, அவனை ஒவ்வொரு ஷணமும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

அப்போது அவனின் நற்பண்புகள் நம்மில் வெளியாகும், அதனால் மறுமைக்கான தேட்டம் நம்மில் அதிகரிக்கும், நாம் செய்தவற்றுக்கு மேல் நமக்குக் கிடைக்காதென்பதாலும், அவன் பதவிகளை உயர்த்துபவன் என்பதிலுள்ள உண்மையை உணர்ந்து, உயர் பதவியை அடைவதற்காக, அவன், அவனது நெருக்கத்தை அடைவதற்கான வழியைத் தேடிக்கொள்ளுங்கள் என்பதற்கேற்ப தேடுவோமாயின் அவனருகில் நாமமரும் நிலையை அடைவோம்! அல்ஹம்துலில்லாஹ்!

- நிஹா -