நீதி அழிந்ததுமில்லை!
அநீதி இழியாதிருந்ததுமில்லை!

 
உயர்வில் பணிவு வீழ்ச்சியைத் தடுக்கும்
வியந்து போற்றிப் புகழ்ந்தும் பேசும்
நயந்து வாழ்ந்திட வழியையும் சேர்க்கும்
பயந்திடா நிலையை பாரினில் வளர்க்கும்!

பதவி கிடைப்பது பழிசெய வல்ல
பதவியால் இழிவினை அடைந்திடா வழியில்
முதலாய் அதனை நிதமும் கொண்டு
உதவியே வாழ்ந்து உலகினை வெல்ல!

யுத்தத்தை வென்ற மமதை கொண்டு
சித்தம் கலங்கி கொத்தள மமைத்து
கோத்தாவை கொண்டு சதிகள் விதைத்து
உத்தமர் போன்று உலகை ஏமாற்றி

வித்தகன் தானேயென தன்புகழ் பேசி
மொத்தமாய் பொய்களை சந்தைப் படுத்தி
நித்தமும் ஆளலாம் நாட்டினை என்று
கத்தனை மறந்து காரிய மாற்றின்

சனங்களும் பழிக்கும் சாடையாய் பேசும்
இனங்களே உங்களை இழித்து நகைக்கும்
பிணங்களும் கூட பேசிட எழும்பும்
மனங்களும் மதியாது மதிப்புரை வழங்கும்!

முந்தநாள் நிலை இன்று இல்லை
அந்தநாள் பெருமை அழிவோடு முடித்திட
இந்தநாள் அநியாயம் இசைவை நல்கும்
வருந்தும் வாழ்வை சந்திக்க வைக்கும்!

குந்தகம் செய்தோரை வந்தனை செய்வரோ
சிந்தித்து சீராய் கந்தலைக் களைய
நிந்தனை செய்து உந்தனை அழிக்க
மந்திரம் செய்து வந்திட்டார் சந்திரிக்கா!

தாமரைத் தடாகம் பாவானரை ஏமாற்ற
சோமாரிகள் கூட்டம் சேர்ந்திசை பாடிட
பாமரர் சிலரை பகடை ஆக்கிட
ஏமாற மனிதர் எந்நாளும் கிடைப்பரோ!

வஞ்சனை செய்து வாதுகள் நிகழ்த்தி
துஞ்சாது பழிகளால் துயரம் விளைத்து
நஞ்சையே உமிழ்ந்து நயம்படப் பேசி
கொஞ்சி மகிழலாம் கொஞ்ச காலமே!

வாஞ்சையில் உமைக் கொஞ்சிய மக்களை
கஞ்சிக்கு வழியிலாது ஆக்கிட நினைந்து
அஞ்சாது கொஞ்சமும் நஞ்சையே விரைந்து
நும்சுந்தர வாழ்வுக்கு தந்திரம் செய்தீர்!

காலம் எல்லாம் தானுந்தன் குடும்பமும்
ஞாலம் நிலைக்கும் நாளெலாம் வாழ்ந்திட
கோலங்கள் காட்டி சாலங்கள் செய்து
ஓலங்களை எமக்கு உவப்பாய் ஆக்கினீர்!

யாப்பும் காப்பும் ஏய்ப்பாய் வாய்ப்பாய்;
சோப்பு சீப்பாய் சாய்ப்புக்கடை சாமானாய்
தோய்த்து பொய்களில் மேய்த்தெமை வாழ
சாய்த்தே நீதியை தமதாக்கிக் கொண்டீர்!

அபிவிருத்தி என்பதை உமதாயுத மாக்கி
அபிவிருத்தி செய்திட்டீர் உம்மை மட்டும்
அபிவிருத்தியையே அடுத்தவர் அழிவிற்காக
அபிவிருத்தி செய்து இனங்களை அழிக்கிறீர்!

நகரமயமாக்கல் என்ற பெயரால் சிலரை
நரக வாழ்விற்கு நகரத்தை விட்டே
பகரமும் இன்றி பாதகமாக வீட்டையழித்து
வேகமாக அனுப்பி மகிழ்ந்தீர் ஆணவமாக!

பள்ளிகளைக் குறிவைத்து திட்டங்கள் ஆக்கி
பாதை வரைந்து குறுக்காய் அமைத்து
கொள்ளையராய் மாறிக் காணியைப் பறித்து
பள்ளிகளை அழித்து பரவசம் அடைந்தீர்!

அகழ்வாராய்;ச்சி செய்து புகழ் சேர்ப்பதாக
அகற்றியே முஸ்லிம்களை அனாதை ஆக்குறீர்
புகழ்பெற்ற புனித தேசமிதெனக் கூறி
அகற்றுறீர் பள்ளிகள் அவனை தொழவிடாது!

புதுவித உபாயம் முஸ்லிம்களுக் கெதிராய்
பொதுபலசேனா பெயரில் காவிகளை ஏவி
மதுவெறி யாளரையும் கூடவே அனுப்பி
சாதுக்களான முஸ்லிம்மீது தாக்குதல் நடத்துறீர்!

கோத்தாவும் சாத்தானும் கூடிக் குலவி
போத்தலும் பெற்றோலும் வீசி எறிந்து
காத்திட வேண்டிய காவலரைக் கேடயமாக்கி
பாத்துப் பார்த்து கொளுத்தினீர் எம்முடமைகளை!

சட்டம் ஒழுங்கை நுமக்குச் சாதகமாக்கி
திட்டமிட்டே திருட்டுத் தனமாய் முஸ்லிம்களை
சுட்டும்கொன்றீர் கட்டாக் காளிகளை அனுப்பி
இட்டமுடன் பகலிரவாய் ஊரடங்கு போட்டு!

காவிகள் காலிகள் பாவிகள் கூட்டம்
தாவியே பாய்ந்து தகர்த்தன அழித்தன
மேவியே பொலிஸின் பாதுகாப்புடன் எரித்து
போதியர் கூடிக் கொள்ளையும் அடித்தனர்!

நீதி தவறிய நீசர்கள் ஆட்சி
நாதியற்று நாற்றமெடுத்து வீதிக்கும் வந்து
சேதிகளாகிடும் காலம் வந்தது காலனாக
பாதியழிவு வந்ததே அநாதியாக்கி அழித்திட!

ஜனாதிபதிப் பதவியைப் பிடிக்கும் தந்திரமே
ஜனங்களின் வாழ்வில் புதுமையை விளைக்க
சனங்களின் உள்ளங்கள் மகிழும் சுணங்கினும்
இனவாதிகள் அழிவால் இன்னும் சிந்நாளில்!

அநீதி அழித்திட அணங்கு ஒன்று
நீதி விழியில் நியாயமாய் நின்று
பாதி அழிவை பகரமாய்க் கொடுத்து
கதியை விதியை நிதியாய் ஆக்கியது!

நீதி வென்றிட அநீதி அழிந்திட
நீதி தேவன் நேர்வழி வழங்கியே
மீதிப் பாதியை முடித்தே வெற்றியாய்
ஊதி அழிப்பான் அராஜக ஆட்சியை!

வந்தோராய் முஸ்லிம்களைக் காட்டி அழிக்க
தந்திரம்செய்து விந்தையான வழிகள் தேடும்
மந்தார புத்தியால் சந்தானமே அழியும்
மஹிந்தாவின் வாழ்வும் மங்கியே மறையும்!
- தேசாந்தரி -