நற்சிந்தனை 29

அல் குர்ஆன் 28:77

இன்னும், “அல்லாஹ் உனக்கு அளித்துள்ளவற்றிலிருந்து நீ மறுமை வீட்டைத் ‌தேடிக் கொள்! இன்னும், இவ்வுலகில் உனது பங்கை மறந்துவிடாதே! மேலும், அல்லாஹ் உனக்கு உபகாரம் செய்தது போன்று, நீயும் உபகாரம் செய்! பூமியில் நீ குழப்பத்தைத் தேடாதே! நிச்சயமாகக் குழப்பவாதிகளை அல்லாஹ் நேசிக்கமாட்டான்“

மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் சில விடயங்களைக் கூறுகின்றான். இவைகளும் அவனின் கட்டளைகள்தான் என்பதை நாம் கவனத்தில் எடுப்பதிலிருந்து தவறவிட்டதனால் உலகில் பல குழப்பங்கள் மலிந்துள்ளன.

குர்ஆன் முழுமையானது என்பதன் பொருள் அதற்கு யாரும் எவ்வித பங்களிப்பையம் செய்யாதவாறு முழுமையாக பரிபூரணமாக்கப் பட்டுள்ளது என்பது மட்டுமல்ல. அதைவிடப் பெரிய உண்மை என்னவென்றால் நமது பின்பற்றலுக்காக, அதன் மூலம் இம்மை, மறுமையில் அனைத்தையும் அடைந்து, வல்ல நாயனின் திருப்தியுடன் அவனது நெருக்கத்தையும் பெற்றுக் கொள்ள வேண்டும்என்பதற்கதாக இறக்கியருளப்பட்டதால், அதனை நாம் முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்பதே! அதனால், அல்லாஹ் நபிகள் நாதர் ஸல் அவர்களையே இஸ்லாத்தினுள் முழுமையாக நுழைந்துவிடுங்கள் என்ற கூறுகின்றான். இதுவும் கூட நிறைவேற்றப்பட வேண்டிய கட்டளையே என்பதை நினைவிற் கொள்க! இன்றேல் நிராகரிப்பாகவே மாறிவிடும்.

இப்போது, அவ்வசனத்தின் முதற் பகுதியைப் பாருங்கள். அது, அல்லாஹ் உனக்கு அளித்துள்ளவற்றிலிருந்து நீ மறுமை வீட்டைத் தேடிக் கொள் என்கின்றது. இது ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய ஒன்றை வெளிப்படுத்துகின்றது. அல்லாஹ் நமக்கு எதனை அளித்துள்ளான் என்பதில் நிறையவே உண்மைகள் கிடக்கின்றன. அவை சிந்திப்போருக்கு உள்ளுணர்வை ஏற்படுத்தி நல்வழியைக் காட்டும். இன் ஷா அல்லாஹ்!

அவ்வசனத்தின் அடுத்துள்ளது, அளித்தவற்றிலிருந்து மறுமை வீடென்னும் போது, மறுமை வீட்டைப் பெறும் வழி கூறப்படுகின்றது. நேர்விழியைக் காட்டுவாயாக என்ற நமது வேண்டுதலுக்கு விடையாகவும் இது அமைகின்றது. தன் வழியில் முயல்வோருக்கு அவன் வழியைத் திறந்து விடுவான். நம்பிக்கையாளரைக் காப்பதைத் தன் கடமையாகக் கொண்டவன், வாக்குமாறாதவன் அல்லவா!

அடுத்து இவ்வுலகில் உனது பங்கை மறந்துவிடாதே என்கின்றான். இதிலிருந்து, உலகில் பிறந்த அனைவருக்கும், இவ்வுலகில் ஒவ்வொரு பங்குண்டு என்ற உண்மை வெளிப்படுகின்றது. அந்தப் பங்கை நிறைவேற்ற வேண்டும் என்ற கடமையும் மறைமுகமாகவே உள்ளது. அதனாலேயே உனது பங்கை மறந்துவிடாதே என்கின்றான் இது முன்னயை உனக்கு வழங்கப்பட்டவற்றில் உள்ளதால் நீ செய்ய வேண்டிய பங்களிப்பாகவும் இருக்கலாம். அதற்கு மேல், மனிதப் பிறப்பினால் உலகில் நடைபெற வேண்டிய விடயங்களில் நமது பங்களிப்பு. அது அவரவர் திறமைக்கும், தன்மைக்கும், அறிவுக்கும் ஏற்ப செய்யப்பட வேண்டியது எனவும் கொள்ளலாம்.

மேலும், அல்லாஹ் உனக்கு உபகாரம் செய்தது போன்று நீயும் உபகாரம் செய் என்ற வசனத்தைப் பாருங்கள். அவ்வசனத்தில் பல உண்மைகள் வெளிப்படுகின்றன. அல்லாஹ்வின் உபகாரம், முதலாவது, நிச்சயமாக முழுமையானதாக, நன்மை பயப்பதாக, தேவை அறிந்து அத்தேவையை நிறைவு செய்வதாக இருக்கும்.

அதைவிட மேலாக, அவனது உபகாரம் எதிர்பார்ப்பற்றது என்பதை உணர்ந்து, நாமும் எதிர்பார்ப்பின்றி செய்ய முற்பட வேண்டும். அப்படிச் செய்வதனால், நமக்குள் அபிப்பிராய பேதம். ஏற்படுவதில்லை. அவனுக்கு நான் செய்ததை மறந்து விட்டான் என நினைக்கவோ, வேதனைப்படவோ, சொல்லிக் காட்டவோ, அதனால் பிரச்சினகளை உருவாக்கிக் கொள்ளவோ தேவையற்ற நிலை ஏற்படுகின்றது. உபகாரத்திற்குப் பிரதி உபகாரம் செய்யத் தேவை இல்லை என்ற இறைகட்டளையை அடுத்தவரும் நிறைவு செய்யவும் நாம் வழிவிடுகின்றோம். இதுவும் நமது பங்களிப்பே!

இவை அனைத்தையும்விட மனிதருள் நல்லெண்ணம் ஏற்பட்டு உலகே அமைதிப் பூங்காவாக, சாந்தியும், சமாதானமும் நிலவும் இடமாக மாற்றப்படுவதால். இஸ்லாம் சாந்தி மார்க்கம் என்பதை, நாம் நிறுவி விடுகின்றோம். அதனால், உண்மையைக் கொணர்ந்தவரும், உண்மைப்படுத்தியவரும் வெற்றியாளர்கள் என்ற அல்லாஹ்வின் கூற்றுக்குச் சொந்தமாகி, மறுமை வீட்டை, அவனது நெருக்கத்தைப் பெற்று விடுகின்றோம். இறைதூதர் இவ்வுலகுக்கு அனுப்பப்பட்டதன் நோக்கத்தை நாம் நிறைவு செய்வதன் மூலம், நபிகளாருக்கும் வெற்றியைப் பெற்றுக் கொடுக்கிறோம். அவர்தானே உண்மையைக் கொணர்ந்தவர்.

இறுதியாக அவ்வசனத்தில், பூமியில் நீ குழப்பத்தைத் தேடாதே! நிச்சயமாகக் குழப்பவாதிகளை அல்லாஹ் நேசிக்கமாட்டான் என்கின்றான். உண்மையில் மேற்கண்டவற்றைச் செய்வதன் மூலம் குழப்பங்களைத் தவிர்த்து விடலாம். குழப்பங்களே உருவாகாது. ஆனால், மேற்கண்ட வசனத்தைக் கூறும் போது, இவற்றினைச் செயற்படுத்துவதில் கூட குழப்பங்கள் உருவாகும் தன்மை இருக்கலாம். அதனால், குழப்பத்தைத் தேடாதே என்ற கட்டளையையும் இட்டு, அப்படி நீ தேடுவாயாயின், அவன் உன்னை நேசிக்க மாட்டேன் என்கின்றான். நாம் தஃவா செய்கின்றோம் என்று அடுத்தவரை வலிந்து வம்புக்கிழுப்பதன் மூலம் குழப்பமே நாட்டில் நிலவுகின்றது என்பது கண்கூடு.

எனது சிற்றறிவுக்கு எட்டியதை, இறையுதவியால், சிறு முயற்சியில் உங்களுக்கு வெளிடுப்படுத்தி உள்ளேன். இலகுவை இலகுபடுத்துபவன் அல்லவா! இது ஒரு உண்மையை வெளிப்படுத்திய ஆக்கமல்ல. உண்மையைத் தேடும் ஒரு தூண்டலை உருவாக்குவதற்கான எனது பங்களிப்‌பே! ஆதலால் உய்த்துணர்வோருக்கு இதில் இன்னும் பல உண்மைகள் வெளியாகலாம்.

அல்ஹம்துலில்லாஹ்!

 

- நிஹா -