வானத்திலிருந்து நீரை இறக்கி வைத்தோம் !

இவ்வாக்கத்தின் மகுடம் குர்ஆனிய வசனமேயானாலும், இது மனித வர்க்கத்துக்கான ஓர் பேருண்மையைத் தன்னகத்தே கொண்டுள்ளமையால், இது ஓர் இஸ்லாமிய ஆக்கம் மட்டுமே என்ற சிந்தனையால் இதனை வாசித்தறியாமல் போய்விடக் கூடாதே என்பதற்காக திருவள்ளுவர் கூறும் சில அறவுரைகளை தொடக்கத்திற்காகத் தேர்ந்துள்ளேன்.

 

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு அந்த அடிப்படையில் மெய்ப் பொருள் தேடும் உந்தலே இக்கட்டுரை. அவ்வகையில், கடவுள் வாழ்த்துக்கு அடுத்தபடியாக வான் சிறப்பு பற்றி தனியதிகாரம் வைத்துள்ள திருவள்ளுவரின் மழை பற்றிய கருத்தையும் பார்த்து விடுவோமே!

 

வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று

 

மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்றுணரத் தக்கதாகும்.

 

மழையை இறக்கி வைத்தோம் என்பதில் வள்ளுவர் பேதமை கொள்ளவில்லை என்பது அவரை அறிந்து கொள்ள உதவுவது. வள்ளுவர் மழைபெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழை, வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் போலும் என்கிறார்.

 

அதிகாரத்தின் முடிவாக,

 

நீர்நின்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும் வான்நின்று அமையாது ஒழுக்கு

 

எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லாவிடில் ஒழுக்கம் இல்லாமல் போகும் என்பதாக டாக்டர் மு.வ. கருத்தெழுதியுள்ளார்.

 

இவற்றில் தற்போதைக்கு எனது ஆக்கத்திற்கான, மழை வானிலிருந்து வருகின்றது என்பதையும் அது நீர் என்பதையும் அறிதல் போதுமானது.

 

வானத்திலிருந்து மழை வருகின்றது என்பதை உலகில் அறிவதற்கு யாருடைய உதவியும் தேவையில்லை. இதனை வள்ளுவர் கூறினால், அவரும் மனிதர், ஆதலால் நம்மைப் போன்ற அநுபவ அறிவில் தனது ஆக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்றளவோடு மக்கள் சிந்தனை மட்டுப்பட்டிருக்கலாம்.

 

அதனையே இறைவனும் வானத்திலிருந்து நீரை இறக்கி வைத்ததாகக் கூறுவது அது தான் செய்த ஒன்றாக மட்டுமே கருதிக் கொண்டிருந்தால் இன்று மழை பற்றிய பல தகவல்களை நாம் அறிந்திருக்க முடியாது. மழை நீராக வருகின்றது என்பதையும் நாமறிந்தது போன்று வள்ளுவரும் அறிந்தாரா அதற்கு மேலும் அறிந்திருந்தாரா என்பது நமக்கு தெரியாதது. ஆனால், வல்ல நாயன் அல்லாஹ் மழை பற்றி பல தகவல்களை வெளியிடுகிறான்.

 

குர்ஆனும் சிந்திக்கத் தூண்டும் ஒன்றாக இருப்பதால் நாமும் அக்கடமையைச் செய்ய வேண்டியுள்ளது. அனைத்தும் சோடிகளாகப் படைக்கப்பட்டுள்ளன என்பதில் அடங்கியுள்ள உண்மைகள் நீர் விடயத்தில் விஷேட இடத்தைப் பெறுகின்றது. ஆம் நீரின் ஆக்கமே இரு ஐதரசன் ஒரு ஒட்சிசனின் கலவையே என்பது அண்மைக் காலத்தில் கண்டறியப்பட்ட பேருண்மை.

 

இப்பேருண்மை, எப்படி நீர் ஆகாயத்தில் இருந்திருக்கின்றது? என்பதை அறியப் போதுமாகவுள்ளது. நீர் ஆகாயத்தில் நின்று கொள்ள முடியாமலே கீழே இறங்குகின்றது. அது உண்மையும்தான். புவியின் ஈர்ப்பும் கூட.

 

ஆனால், வானத்தையே தூணின்றி முகடாக்கிய, கிரகங்களை, நட்சத்திரங்களை ஆகாயத்தில் பவணி வரச் செய்த அல்லாஹ், நீரை வானத்தில் வைத்துக் கொள்ள முடியாமலா அதனை வேறு இரண்டின் கலவையாக்கி பொழியச் செய்கின்றான் என்பதில் பல் வேறு உண்மைகள் பொதிந்து கிடக்கின்றன. அதில் மிக முக்கியமான ஒன்றாக நீரின் சுத்திகரிப்பைக் கூறி அடங்குவோம். இது இறை கருணையின்பாற்பட்டது.

 

அல்லாஹ் தன்னருள் மறையில் மேகங்களை ஓட்டிச் சென்று அவற்றைக் கருக் கொள்ள வைக்கிறோம் பின்னர் மழையாகப் பொழிவிக்கின்றோம் என்கின்றான். இங்கு கருக்கொள்ள வைத்தல் என்ற உண்மை ஐதரசன் ஒட்சிசன் சேர்க்கையை நாசூக்காகக் கூறிச் செல்வதாக இருக்கின்றது.

 

ஆம் இவை இரண்டும் பெரும்பாலும் ஆகாயத்திலேயே உள்ளவைதான் என்பதை யாரும் மறுக்கப் போவதில்லை. ஆக கண்ணுக்குத் தெரியாத திரவமாகவோ, சடமாகவோ கேஸ் நிலையில் இருந்த இரு மொடியூல்கள் திரவ நிலையான மழையாகவும், சில வேளைகளில் வேறும் சில புறத் தாக்கங்களால், பனியாகவும், மழைக் கட்டிகளாகவும் மாறி, விண்ணில் காணப்படும் வளியையும் கரைத்துக் கொண்டு புவியை  – கடலை, நிலத்தை – ‌வந்தடைகின்றன. அதனை நாம் மழை. பனிமழை, பனிக்கட்டி, பனித்துகள், ஆலங்கட்டி என அழைக்கின்றோம். எப்படியோ அனைத்தும் வெவ்வேறு நிலையிலுள்ள நீரே. அவை எச்2ஓ என்பதன் கலவையே!

 

இதற்கு முன்னதாக அல்லாஹ் தான் படைப்புக்களை நீரிலிருந்தே தொடங்கினோம் என்கின்றான். இது பல்வேறு உண்மைகளைக் கொண்டவையாக இருந்தாலும், நமது முயற்சிக்கு, அனைத்து உயிரினங்களும் நீரை அடிப்படையாகக் கொண்டவை என்றளவில் புரிந்து கொள்ளலாம்.

 

நீரில்லாத எவ்வகை உயிரும் இல்லை. அவை வெறும் சடமாகவே இருக்கும். இங்கு இன்னொன்றை அல்லாஹ் அடிக்கடி கூறுவது நம் சிந்தையைக் கவருவது. ஆம், அது இறந்து போன பூமியை மழையைக் கொண்டு நாம் உயிர்ப்பிக்கின்றோம் என்கின்றான். மழை பெய்ததும் வரண்டு வெடித்து பாலையாகவும், பாறை போன்றும் காணப்படும் நிலம் மழையைக் கண்டதும் உயிர் பெற்றுவிடுவதை, அது வெளிப்படுத்தும் பயிரினங்களில் இருந்து அறிய முடிகின்றது. 

 

இந்த, நாம் வாழும் பூமியை உயிரினங்கள் வாழ்வதற்கேதுவாக அதனைச் செவ்வைப் படுத்தினோம் என்கின்றான். நீரில்லாத நிலமாக இப்பூமி இருந்திருந்தால் நிச்சயமாக உயிரினங்கள் இவ்வுலகில் வாழும் சாத்தியமில்லை. காரணம் அவ்ளவு சூடாகவே இப்புவி இருந்துள்ளது. அதனை தற்போதும் எரிமலை என்ற பெயரில் வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நெருப்பிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

அந்த உயிரினங்களின் தோற்றத்திற்கு முன்னர், நீண்ட காலம் இப்புவியின் மேல் மழை பெய்து கொண்டிருந்ததாக விஞ்ஞானமும் கூறுகின்றது. தற்போதைய நிலையில் ஏற்த்தாழ 72 பங்கு நீரும் 28 பங்கு நிலமும் உள்ளதாக புவியியல் ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், அன்றே அல்லாஹ் தனது மாமறையில் இவ்வுண்மையை வெளிப்படுத்தி உள்ளான் என்பது அவனது அறிவுக்கு சான்று பகர்வது. அவன் யாவுமறிந்தவன். அனைத்தினதும் அறிவும் அவனிடம் உள்ளது போன்ற பல வசனங்களால் அறியலாம்.

 

இன்று நீரும் நிலமும் இருக்கும் அளவு எதிர்மறையாகவோ, கூடுதல் குறைவாகவோ கூட இருந்திருந்தால் இப்புவியில் உயிரனங்கள் வாழ முடியாது என்பதை விஞ்ஞானிகள் கூறிக் கொண்டிருக்கின்றனர். இவவுண்மையை அல்லாஹ். மிகத் தெளிவாக நாமே மழையை அளவாக இறக்கி வைத்தோம். அதனைத் தான் விரும்பிய இடங்களில் பெய்விக்கின்றோம் எனக் கூறுகின்றான்.

 

இதிலிருந்து, அன்று அல்லாஹ் இவ்வுலகுக்கு எவ்வளவு மழை தேவையோ அவ்வளவு மழையை உலகத்திற்கு அனுப்பி தனது திட்டத்தை நிறைவேற்றியுள்ளான். அதற்கு அடுத்த நிலையை சுழற்சி முறையில் அமைத்துள்ளான். அதனையே நாம் தற்போது, ஆவியாதல், மேகமாகி மழை பெய்தல் எனக் கூறிக் கொண்டிருக்கின்றோம். நீரின் சுழற்சி முறை இல்லாத நிலையை உங்கள் சிந்தனைக்கு விடுகிறேன்.

 

அல்லாஹ், நீரைக் கொண்டு செல்லுதலில், வெப்பமாக்கி அதனை ஆவியாக்கும் பொருட்டு அதன் கொதி நிலையை 100பாகையாக மட்டுப்படுத்தி வைத்துள்ளான். அது குறிப்பட்ட வெப்ப நிலையை அடைந்ததும் ஆவியாக மேலெழுந்து செல்கின்றது. இப்படி ஒரு செயன்முறையை ஏற்படுத்துவதோடு விட்டிருந்தால், குளிர்ப் பிரதேசங்களில் நீரின் சுழற்சி நடைபெறாமலே போய் பல் வேறு நீர்ப் பிரச்சினை தோன்றியிருக்கும்.

 

அதனால், இது மட்டுந்தானா நீர் மேலே போகும் முறை என்று பார்த்தால், இல்லை வேறும் சில வழிகளும் உள்ளனவே என்பதை நீரில் ஏற்படும் அலை பற்றியதில் நுட்பமாக அறியலாம். சாதாரணமாக அனைவரும் தெரிந்த உண்மையாக காற்று நீரை அசைக்கின்றது. அதனால் அலை ஏற்படுகின்றது. அப்போது நீர்த் திவளைகள் வெளியாகி காற்றோடு கலந்து மேலெழுகின்றது என்ற உண்மை அண்மைக் காலக் கண்டு பிடிப்புகளில் ஒன்றே. இதனையும் அல்லாஹ் காற்று பற்றிய தனது வசனங்களில் வெளிப்படுத்தி உள்ளான்.

 

ஆனாலும், அனைத்திலும் சக்தி தேங்கியுள்ளது என்ற உண்மையை வெளிப்படுத்தி நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி அது எப்படி என்கின்றார். நீர் பற்றிய ஆய்வாக இது இருப்பதால் அது பற்றி நாம் பேசலாம். நீருக்குள் எச்2ஓ கலவையோடு இரண்டறக் கலந்துள்ள சக்தி, இன்னொரு நீர் சக்கியோடு மோதிக் கொள்ளும் போது ஏற்படும் அலைப்பு, அலையாக மாறுவதில் வியப்பில்லை. ஆனால் அங்கு கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தியின் செயற்பாடு இந்நீரை அசைத்துக் கொண்டிருக்கின்றது என்பதுதான் உண்மை.

 

இப்படித்தான் அனைத்திலும் அல்லாஹ்வின் ஆட்சி நடைபெறுகின்றது. என்பதை அவன் வேறொரு இடத்தில் திட்டவட்டமாகத் தெளிவாக விளக்கியுள்ளான். ஆம், ஆரம்பத்தில் தனது அர்ஷ் – அதனை நாம் ஆட்சி என்போம்-,  நீரில் இருந்தது என்கின்றான். இவை உய்த்துணரற்பாலது. அனைத்திலும் தனது சக்தி நிறைந்தே உள்ளது என்பதன் மூலம் இவ்வுண்மையை அறிந்து வியப்புறுகின்றனர் ஆன்றோர்.

 

உலகு என்று நாம் கருதும் வாயுமண்டலம் உட்பட்ட பகுதியில் காணப்படும் நீரின் அளவு அல்லாஹ் முன்னர் கூறியபடி நீரை அளவாக இறக்குகிறோம் என்பதனால் விளங்கலாம்.

 

அல்லாஹ் அன்று எவ்வளவு நீரை அனுப்பி வைத்தானோ அவ்வளவு நீரே இற்றை வரை உள்ளதை, நீரின் – நிலத்தின் அளவுப் பிரமாணம் 72க்கு 28 என்ற விகிதாசாரத்தால் அறியப்படுகின்றது.

 

இந்த நீர், கடலில், உடலில், நிலத்தில், குளத்தில், ஆகாயத்தில், மேகத்தில், மழையில், இலையில், ஆவியாய், பனியாய், பனிப் பாறையாய், நிலத்துள், கடலுள், வாயில், காயில், கனியில், கழிவில், குழியில், காற்றில், கூற்றில், சேற்றில், சோற்றில் என நீக்கமற நிறைந்து காணப்படுகின்றது.

 

அனைத்திலும் காணப்படும் நீரின் மொத்த அளவில் எவ்வித மாற்றமும் இராது. ஆனால், ஒரு இடம் வரட்சியாக, இன்னோரிடம் வெள்ளமாகக் காணப்படுவது என்பது பொதுவாக நீரின் அளவின் மாற்றங்களாகக் கணிக்கப்பட்டே மழை பொய்த்துவிட்டது என மக்கள் குறைபட்டுக் கொள்கின்றனர். உலகைப் பொறுத்து மழை பெய்வதில் அளவில் எவ்வித மாற்றமும் இரா.

 

இப்படியிருக்க, வானத்திலிருந்து மட்டுந்தானா நீர் வருகின்றது. நிலத்திலும் நீர் சுரக்கின்றனவே, கிணறுகள், ஊற்றுக்கள், பௌன்டன் எனப்படும் நீர் எழுச்சிகள் என்ற கேள்வி சாதாரணமாக சில வேளை எழ இடமுண்டு. அவை எல்லாவற்றுக்கும் பதிலாக அமைவது, ஆரம்பத்தில் தொடர்ச்சியாகப் பெய்த அடை மழையே என்பதுவே.

 

இதனை உயிரினங்களின் வாழ்வுக்கேற்ற இடமாக மாற்றி, செவ்வை ஆக்கினோம் என்று கூறுவதில் காண முடிகின்றது. அந்த நுட்பமே நிலத்தில், சேமிக்கப்பட்ட நீராக உள்ளது. இதனையும் அல்லாஹ், நீங்கள் நீரைச் சேமித்து வைக்கின்றீர்களா? நான், நீரைப் புவி உறிஞ்ச வைத்தால் அதனை வெளிக் கொணர்பவர் யார் போன்ற கேள்விகளை எழுப்புவதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

 

இன்னொரு நியாயமான சந்தேகமும் எழ இடமுண்டு. அது, இரு வாயுக்களின் கலவைதான் நீர் என்பதால், நிலத்தில், வாயு நிலையில் இருந்து கலக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டு நீராக முடியாதா என்பது. இதற்கும், முன்சொன்ன பதில் பொருந்துமாயினும், அது நீராகவே இல்லாமல் வாயு நிலை எனக் குறிப்பிடுவதால், நீராக நிலத்தில் சேமிக்கப்பட்டிருந்த நீர், நிலத்திலுள்ள சூட்டின் காரணமாக வெவ்வேறு வாயுக்களாகப் பிரிந்த நிலையை அடைந்ததாகக் கொள்ளலாம். இதனை ஏனைய கிரகங்களில் வாயுக்களோ, நீரோ இருக்கின்றது என்ற ஆய்வுகள் இன்னும் ஆரம்ப நிலையிலே உள்ளதால் அறியலாம்.

 

ஆதலால், நீர் வானில் இரு வாயுக்களின் கலவையில், குறிப்பிட்ட விகிதாசாரத்தில் கலக்கப்பட்டு, நீராக்கப்பட்டு நிலத்தில் பல்வேறு நிலைகளில். இடங்களில் பொழிவிக்கப்பட்டதே! அதே நீர் இற்றை வரை சுழற்சி முறையில், காற்றால், சூட்டால், ஆவி நிலைக்கு மாற்றப்படுவதன் மூலம் இயற்கையாகவே யாருடைய முயற்சியும் இன்றி சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்பட்டு மீண்டும், மேக மூட்டங்களாகி, கருவுற்று மழையாக மற்றும் பிற நீர்ப் பொருட்களாக இறக்கி அருளப்படுகின்றது.

 

இந்த, நீர் – நில விகிதாசார முறையில் மாற்றம் எதுவும் நிகழ்வதில்லை. இந்த நீரின் கொள்ளளவு உயிரினங்களுக்கு இடையில் மாறுபட்டாலும், அவற்றில் தனிப்பட்டு மாற்றம் ஏற்படாது, அப்படி மாற்றம் ஏற்படுமாயின் இறப்பே நிகழும். அப்போதுகூட அவற்றில் வேறு உயிரினங்கள் தோற்றம் பெறும் அளவிற்கு நீர் காணப்படுவதால், புழுவாக, கிருமியாக, திராவகமாக வேறு ஏதோவாகவெல்லாம் மாற்றம் பெறுகின்றது.

 

இப்படியொரு மாற்றம் நிகழாவிட்டால் அழிவு என்பது இல்லாது புவி மாசடைந்துவிடும். அத்தோடு புவியில் தோன்றிய அனைத்தும் புவியில் சங்கமமாகிவிடும். இதுவும் ஒரு சுழற்சி முறையைக் கொண்டதாகவே காணப்படுகின்றது.

 

அதிலும், ஏதோ ஒன்றைப் பூமி அழித்துவிடாது என்பது அல்லாஹ், பூமி உங்கள் உடலிலிருந்து எதனை உண்கின்றது என்பதை அறிவீர்களா என்ற கேள்வியால் உணரலாம். உயிரினங்கள் உருவாக அடிப்படையான ஒரு திராவகத்தை, -அது மனிதரில் டீஎன்ஏ எனக் கண்டு பிடித்துள்ளனர்-இதனைப் பூமி உண்பதில்லை. இதன் அழிவு இறைவன் கையில். இதுவே மறுமையில் அனைத்தையும் மீண்டும் உயிர்ப்பிப்பதற்காக இறைவன் மீதப்படுத்தி வைத்துள்ள ஒன்றாகக் கொள்ளலாம்.

 

நீரினுள் அடங்கியுள்ள சக்தி, அதன் தாக்கங்கள், பயன்கள் பற்றி எழுதுவது, கட்டுரைத் தலைப்பிற்குள் அடங்காது என்பதால் அது தவிர்க்கப்பட்டுள்ளது. அதனால் சுழற்சி முறையில் மழை பெய்வதற்கு ஆதாரமாக நீர் மேலெழ வேண்டியுள்ளது. நீருள் உள்ள சக்தியால் அதனில் எப்போதும் ஒரு அசைவு இருந்து கொண்டிருப்பதனைக் கொண்டு இத்தேவை பூர்த்தி செய்யப்படுகின்றது. நீரில் காணப்படும் சக்தியால் ஏற்படும் அசைவு, நீரை துகள்களாக வெளியேற்றி வற்றல் நிலையை அடைய வைக்கின்றது என்ற அளவிற்கு தெரிந்தால் போதும்.

 

அறிதலுக்காக நீரை உறியாத ஒரு கோப்பையில் வைக்கப்படும் நீர் குறைவடைந்து ஈற்றில் இல்லாமற் போவதனைக் கூறுலாம். அங்கு நீர் காற்றைப் பயன்படுத்தி வெளியேறினாலும், கோப்பையினுள் இருந்த நீர்த் திவளைகளில் அசைவினால் ஏற்பட்ட மோதல்களே முதன்மைக் காரணமாகும். எப்படியோ அடுத்து சுத்திகரிக்கப்பட, மழையாக மீள இவை துணைபுரிகின்றன.

 

- நிஹா -