நற்சிந்தனை 20

ஷைத்தான்கள் யார்மீது இறங்குகின்றனர்?

இக்கேள்விக்கான விடையிறுக்கும் தகுதி அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் இல்லை என்பதால், அவனிடமே கேட்டுப் பார்போமே! அக்கேள்வியை நாம் கேட்போமென்று தெரிந்ததனால்தானோ அன்றி நம்மை எச்சரித்து வைப்பதற்காகவோ அல்லது இரண்டுக்குமாகவோ அதற்கான பதிலைத் தனது குர்ஆன் ஷரீபில் கோடிட்டுக் காட்டியுள்ளான்.

அது தொடர்பான வசனங்கள் கீழ்க்கண்டவாறு வினா-விடைகளாகவே நம்மோடு பேசுகின்றன.

26:221 – ஷைத்தான்கள் எவர்மீது இறங்குகின்றனர் என்பதை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?

26:222 – பெரும் பாவிகளான பொய்யர்கள் ஒவ்வொருவர் மீதும் இறங்குகின்றனர்.

மேற்கண்டவை விளக்கம் தேவையில்லாமல் மிக மிகத் தெளிவாக நமக்கு உண்மை நிலையைக் கூறுவன. ஆயினும், இறையாணை, அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்து அவற்றிலுள்ள சிறந்தவற்றைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதாக இருப்பதால், இது பற்றி நமது சிறிய அறிவைப் பயன்படுத்திப் பார்ப்போம். அல்லாஹ் நாடினால் மேலதிகத் தகவல்கள் வந்து சேரலாம். அல்ஹம்துலில்லாஹ்!

பதிலாகவுள்ளதில் ‘இறங்குகின்றனர்’ என்ற சொல், ஷைத்தான்கள் எங்கிருந்தோ, தாம் இறங்கக் கூடிய இடத்தைக் கூர்மையாக அவதானித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதைக் காட்டுகின்றது. மேலும், அவர்களால் அல்லாஹ்வின் அடியார்கள் மீது இறங்கிக் கொள்ள முடியாது என அல்லாஹ் ஆதம் அலை அவர்களைப் படைத்து, வானவர்களைச் சிரம் சாய்க்குமாறு கூறியதை மறுத்து, உலக மக்களைத் தான் வழிகெடுக்கப் போவதாக இறைவனிடம் கேட்டபோதே, அல்லாஹ் அவனிடம் உன்னால் என்னுடைய அடியார்களைக் கெடுத்துவிட முடியாது என்று கூறியுள்ளமையையும் நமக்கு அறிவுறுத்துகின்றது. இது 10:103இலும் வேறு சில இடங்களிலும், நம்பிக்கையாளரைப் பாதுகாப்பது தனது கடன் என்ற தனது வாக்கை அல்லாஹ் நிறைவு செய்வதாக அமைகின்றது.

அதனாலேயே, ஷைத்தான்கள் மனிதரை உற்று நோக்கியவர்களாக எப்போது யார் மேல் இறங்கலாம் எனப் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். அந்நிலையில் பாவிகளான பொய்யர்களைக் கண்ணுற்றதும், இவர்கள் அல்லாஹ்வின் அடியார்கள் அல்லர் என்பதைத் தீர்க்கமாக அவர்கள் அறிந்து கொள்கின்றனர். அதனால் சற்றும் தாமதிக்காது உடனே இறங்கி விடுகின்றனர் சிறு தாமதம்கூட தனது நோக்கில் தளர்வை, முடியாத நிலையை ஏற்படுத்திவிடும் என்பதனை ஷைத்தான்கள் நன்கு அறிந்தே வைத்துள்ளனர். அது, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவது. அதனால். அந்த பாவமன்னிப்பைக் கோருவதற்குச் சந்தரப்பம் அளிக்காது, அதற்கு முன்னர், ஷைத்தான்கள் பாவிகளான பொய்யர்கள் மீது இறங்கித் தமது கைவரிசையைக் காட்டத் தொடங்கி விடுகின்றனர். இதனால் பாவியர் தொடர்ந்து பாவத்தில் ஈடுபட்ட வண்ணமே உள்ளனர். அதனால் அவர்களிடம் இருந்து பொய் அகலும் சந்தர்ப்பம் அற்றுப் போகின்றது.

அல்லாஹ் ”பாவியரான பொய்யர்கள்” என்று கூறியிருப்பதன் மூலம், பாவகரமான செயல்களில் ஈடுபடுபவன் எப்போதும்,பொய் கூறியே ஆக வேண்டியுள்ளது என்பது புலனாகின்றது. இன்றேல் அவன் தனது பாவங்களில் இருந்து உலகில் தப்பிக்க வழி கிடைக்காது. உலகில் பாவ வேலைகளில் ஈ,டுபடும் எவனும் தான் பாவம் செய்வதை ஒத்துக கொள்வதில்லை, நமது மார்க்க, அரசியல் தலைவர்களைப் போல.

அடுத்து, பொய் கூறுவதும் பாவச் செயல்களில் ஒன்று என்பதால், வேறு எந்தப் பாவமும் செய்யாத ஒருவராக இருந்தாலும்கூட, பொய்யொன்றைக் கூறுவதன் மூலம் பாவம் செய்தவனாக மாறிவிடுகின்ற தன்மையைக் காணக் கூடியதாக உள்ளது

குர்ஆனில் வேறோரிடத்தில் அல்லாஹ், பொய் சொல்பவர்களுக்குக் கேடுதான் என்று கூறுவதற்கு, பொய்யோடு, பொய் சொல்பவர்களுடன் உலகத் தொடக்கத்திலேயே நிராகரிப்பாளனான ஷைத்தானுடைய உறவு ஏற்பட்டதே காரணம் எனவும் அறியலாம்.

அதற்கும் மேலதிகமாக, ஆதாமும், ஏவாளும் சொர்க்க வாழ்வை இழக்க வேண்டி ஏற்பட்டு அதனால், அவர்களின் சந்ததியினரான நாமனைவரும் இப்புவியில் பிறக்க வேண்டி வந்ததும் ஷைத்தானின் உறவை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டு உலகிற்கு அனுப்பப்பட்டமையால்தான் என்பதை உணரும் எவரும், பொய்யினதும், பாவத்தினதும் பாதிப்பின் அளவை, அதன் கடுமையான பாதிப்பைக் கண்டு கொள்வர். அவற்றிலிருந்து தவிர்ந்து கொள்வர். அல்லாஹ்விடம் பொய்யிலிருந்தும் பாவத்திலிருந்தும் காக்குமாறு, பாவமன்னிப்புக் கோரி இறைஞ்சுவோம்.

- நிஹா -