வேதங்களில் இருந்து நாம் அறிந்தபடிக்கு, தற்கால கிறிஸ்தவ மக்கள் பின்பற்றும், தற்போது வழக்கிலுள்ள புனித பைபிளில், பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என இரண்டு பகுதிகள் காணப்படுகின்றன. இதனையே கத்தோலிக்க மக்கள் அனைவரும் தமது வேதநூலாகக் கைக்கொண்டு ஒழுகி வருவதாகக் கூறப்படுகின்றது. இதில் பழைய ஏற்பாடு என்ற முதற் பகுதி மூஸா (அலை) என்ற மோஸஸ், தாவூத் (அலை) என்றழைக்கப்படும் தாவீது ஆகிய இருவர்களதும் வேதாகாமங்களையும், புதிய ஏற்பாடு என்ற இரண்டாம் பகுதி ஈஸா என்றழைக்கப்படும் யேசு கிறிஸ்து அவர்களாலும் போதிக்கப்பட்டவையென நம்பப்படுபவை களைக் கொண்டுள்ளது. புதிய ஏற்பாட்டில் காணப்படும் வசனங்கள், யேசு நாதரின் பன்னிரு சிஷ்யர்களில் நால்வர்களான மத்தேயு, மார்க், லூக்கா, யோவான் ஆகியோரால், இயேசு நாதரின் மறைவுக்குப் பின்னர், வரையப்பட்டவைகளும், இன்னும் பவுல் மற்றும் சிலரது கடிதங்களும் கோவை செய்யப்பட்டுள்ளன.

இறைவனால் தனது திருத்தூதர்கள் மூலம் அவ்வப்போது மக்களுக்காகக் கொடுக்கப்பட்டதாக நம்பப்படும் நான்கு வேதங்களுள் முதல் மூன்றைத் தன்னகத்தே கொண்டுள்ள புனித வேதாகாமமான பைபிளைப் பின்பற்றும் கிறிஸ்தவ மக்கள் பல தெய்வ, விக்கிரக ஆராதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இறைவனால் அருளப்பட்ட வேதமாக இருந்தால், பல தெய்வ வணக்கங்களையும், விக்கிரக ஆராதனைகளையும் புனித பைபிள் அனுமதிக்குமா என்பதே நமக்கு முன் நிற்கும் கேள்வி? இறைவன் கொடுத்த வேதத்தில் இன்னொருவரை அல்லது பலரை வணங்க அனுமதி கொடுக்கப்பட்டிருக்குமா? இதற்கான பதிலையறிய, கத்தோலிக்கரின் தற்போதைய வணக்க வழிபாடான பலதெய்வ வணக்கங்களுக்கும், விக்கிரக ஆராதனைகளுக்கும், புனித பைபிளின் மூலக் கொள்கைக்கும் எந்தளவு தொடர்பும், பொறுப்பும், அனுமதியுமுண்டு என்பதைப் புனித பைபிளில் இருந்து காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஓரிறை சம்பந்தமாக மார்க் என்ன கூறுகின்றார் பாருங்கள். ‘ஓரே தேவன் உண்டு. அதைத் தவிர வேறு தேவன் இல்லை’- மார்க் 12: 32. ‘நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்’-மார்க் 12:29. இது முழுக்க முழுக்க ஓரிறைக் கொள்கையல்லவா. இதுதானே உலக முஸ்லிம்களினதும் தாரக மந்திரமாக (வணங்கப்படக்கூடியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை) உள்ளது. இன்னும் மத்தேயு 15: 9 – ‘மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லி இருக்கிறார் என்றார்’.

இதிலிருந்து அறியப்படுவதென்ன? தீர்க்கதரிசிகளான மனிதர்களை வணங்குவது வீண் என்பதல்லவா. அத்தோடு தனக்கு ஆராதனை செய்வதே பிழை அதனால் நன்மைகள் பெறப் போவதில்லை என்பதல்லவா? மேலும் மத்தேயு 19:17 – ‘அதற்கு அவர், நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே! நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார்’, என்று கூறுவதில் தன்னை நல்லவன் என்று கூறுவதைக்கூடக் கண்டிப்பதிலும், கற்பனைகளைக் கைக்கொள் என்பதனையும் ஆராய வேண்டாமா?

மேற்கண்ட இயேசுநாதரின் கூற்றாக எழுதப்பட்டுள்ள ‘கற்பனை’ எதைக் கூறுகிறது. இறைவனைத் தவிர ஆராதிப்பதற்குத் தகுதியான நல்லவன் தானே (இயேசு நாதரே) இல்லையென்ற பின்னர் வேறு யாரையேனும் தெய்வமாகக் கொண்டு வழிபடலாமா? இது இறைவனையும், அவனது தூதரினதும் சொல்லையும் நிராகரிப்பதாகாதா? மத்தியூ 22:37 மிகத் தெளிவாக, ‘இயேசு அவனை நோக்கி, ‘உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுமனதோடும் அன்பு கூருவாயாக’ ‘ எனக் கூறுகிறதே தவிர, தன்னையோ அன்றி வேறு யாரையுமோ வணங்கும்படி கூறவில்லை

யோவான் 14:10 நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாகச் சொல்லவில்லை. என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்து வருகிறார் என்று இயேசுநாதர் கூறியதன் பொருள்தான் என்ன? மேற்கண்ட வாக்கியத்தின் மூலம், இயேசு நாதர் தனது பேச்சுக்கூடத் தானாகப் பேசியதில்லை, தனக்குள் உள்ள இறைவனே பேசுகிறார் எனக் கூறுவதிலிருந்து ஒன்றே இறைவன் என்பதோடு, அவனை வேறுபடுத்திப் பார்க்க, பிரித்துப் நோக்க முடியாதபடிக்கு அவனே எல்லாமாக உள்ளான் என்பதைச் சூசகமாகத் தெரிவிக்கிறது. இறைவணக்கத்தில் கலப்படத்தையோ, பங்கிடுதலையோ முதலாவது கற்பனையான இவ்வசனம் முற்றாக மறுப்பது மிகத் தெளிவாக உள்ளதைக் காணக் கூடியதாகவுள்ளது.

இதற்கு மேலும் வலுவூட்டுவதாகப் பின்வரும், ஏசாயா 42:8 – நான் கர்த்தர். இது என் நாமம். என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன். எனக் கூறுகிறது. இவ்வசனம் தனது மகிமையை வேறு யாருக்கும் கொடுப்பதையோ, தனக்கான வணக்கத்தைப் பிறருக்குப் பங்கிடுவதையோ, விக்கிரக ஆராதனை யையோ ஏற்கவில்லை எனவும் முற்றாகத் தடை செய்கிறது எனவும் தெரிகிறது.இன்னும் லேவியராகமம் 19:4-விக்கிரகங்களை நாடாமலும், வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை உங்களுக்கு உண்டாக்காமலும் இருப்பீர்களாக.நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். இவற்றிலிருந்து ஓரிறைக் கொள்கைக்குச் சாதகமான, விக்கிரக ஆராதனைக்கு எதிரான பைபிளின் வெளிப்பாடும், நிலைப்பாடும் நன்கு புலனாகின்றது.

ஏசாயா 45:22 – நானே தேவன் வேறொருவருமில்லை. ஏசாயா 43:11 – ‘நானே கர்த்தர். என்னையல்லாமல் இரட்சகர் இல்லை’. 1 இராஜாக்கள் 8:23- ‘மேலே வானத்திலும் கீழே பூமியிலும் உமக்கு ஒப்பான தேவன் இல்லை’ மேற்கண்ட பழைய ஏற்பாட்டின் வசனங்களைப் பாருங்கள், No god other than Allah என்ற இஸ்லாமியரின் தாரக மந்திரமானதன், -தன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை என்ற தமிழ்க் கருத்தைக் கொண்டதாகக் காணப்படுவதை அறியக்கூடிதாயுள்ளது. மேலும் மத்தேயு 23:9 – ‘பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்’. இவை சந்தேகத்துக்கோ விசாரனைக்கோ இடமின்றி ஓரிறைக் கொள்கையையே வற்புறுத்துகின்றன என்பது மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

ஆக வணக்கத்தில் இறைவனைத் தவிர இன்னொருவரைச் சேர்த்துக் கொள்வது ஓரிறைக் கொள்கைக்கு எதிரான செயல் என்பது பைபிளின் கொள்கையாக இருப்பது தெளிவு. இருந்தும் மக்கள் இம்மூலமந்திரத்தை, அதாவது அவர்களுக்கு இறைவன் கொடுத்த முதல் கற்பனையை அறியாதிருப்பது அல்லது அறிந்தும் நடைமுறைப்படுத்தாது இருப்பது, துர்அதிர்ஷடம் என்பதைவிட, வழிவழியாக அவர்களது முன்னோர்களிடம் இருந்து வந்துள்ள எதையோ பின்பற்றுகிறார்களே தவிர தமது திருத்தூதரால் தமக்கு வழங்கப்பட்ட வேதத்தைக் கூறும் பைபிளிலுள்ள ஏவல்களை அல்ல என்பது நன்கு புலனாகின்றது. இது நிராகரிப்பாகவே அமையும் என்பதும் தெளிவு.

கீழக்கண்ட வசனத்தைப் பாருங்கள். மத்தேயு 7: 21 – ‘பரலோகத் திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக இராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்கிறவன் அதில் பிரவேசிப்பதில்லை’. இதிலிருந்து தன்னை அழைப்பதால்கூட எந்தப் பயனையும் நாம் பெறப் போவதில்லை என்பதை இயேசு பிரானே தமது வாயால் கூறுகிறார் என்றால் ஓரிறைக் கொள்கையின் முக்கியத்துவம் விளங்குகிறதல்லவா? இதற்கு மேலும், நமக்கு விளக்கம் தேவையா?

இன்னும், மத்தேயு 12 :31 – ‘நான் உங்களுக்குச் சொல்கிறேன், எந்தப் பாவமும், எந்தத் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும், ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவது இல்லை’. இவ்வசனத்தில் இறை நிந்தனை- கர்த்தருக்குச் சமமாக வேறு தெய்வத்தைப் பொருந்துதல்- ( அதாவது, விளக்கத்துக்காக- மாட்டைப் பார்த்து மனிதன் என்பது போல் மனிதரையோ அல்லது விக்கிரகங்களையோ பார்த்து இறைவன் என்பது இறை நிந்தனை அல்லது தூஷித்தல் என்பதனுள் அடங்கும்-) மன்னிக்கப்பட மாட்டாது என்றுதானே பொருள்.

இதையேதான் இஸ்லாத்திலும், இறைவன், தனக்கு நிகராக இன்னொரு தெய்வத்தைச் சமமாக்குவதைத் தவிர்த்து, அனைத்துப் பிழைகளையும் தான் மன்னிப்பேன் எனக் கூறுகிறான். ஓரிறைக் கொள்கையின் வெளிப்பாடு இவ்வசனத்தில் பொதிந்திருக்கின்றது. கருணையே வடிவான இறைவன் தன்னை வணங்குவதில் தவறுவோரைப் பற்றிக்கூடக் குறிப்பிடாது, தனக்கு இணையாக இன்னொரு தெய்வத்தை வணங்குவதையே இறைவன் மன்னிக்க மாட்டான் என இயேசு நாதர் கூறுவதிலிருந்து அக்குற்றத்தின் தன்மை புலனாகின்றது, ஓரிறைக் கொள்கையின் இன்றியமையாமை புரிகின்றது.

மேலும் யாத்திராகாமம் 9:14-‘பூமியெங்கும் என்னைப் போல் வேறொருவரும் இல்லை’ எனக் கூறுவது உய்த்துணரத்தக்கது. இவை போன்று இன்னும் அனேக இடங்களில் கூறப்பட்டிருந்தாலும் விரிவஞ்சி அறிவுள்ளவர்களுக்கு இந்தளவே போதும் என்பதால் இறுதிநாள் பற்றிய பைபிளின் கோட்பாட்டைக் கூறி இதனைச் சுருக்குகிறேன்.

நாமனைவரும் ஏற்றுள்ள இறுதிநாள் எப்போது வரும் என்ற இரகசியம், இறைவனைத் தவிர வேறு யாரும் அறியமாட்டார் என மிகவும் அழுத்தந் திருத்தமாகக் கூறுகிறது கீழ்வரும் மார்க்கின் வசனம். இதுவும் சர்வ வல்லமையுள்ள ஓரே இறைவனுக்கு இணையாக யாருமில்லை என்பதற்கு வலுச்சேர்க்கும் கருத்தே. ‘அந்த நாளையும், நாழிகையையும் பிதா ஒருவரைத் தவிர மற்றொருவனும் அறியான். பரலோகத்தில் இருக்கிற தூதர்களும் அறியார், குமாரனும் அறியார்.’ –மார்க் 13 :32 . இதுவே இஸ்லாமியர்களதும் இறுதிநாள் பற்றிய கொள்கை. அந்த மறுமை நாள் எப்போது வருமென்றதன் இரகசியம் இறைவனைத் தவிர யாருக்கும் தெரியாது என்ற கருத்தில் பல இடங்களில் குர்ஆன் கூறுவதும் இதே கருத்தையேதான்.

குர்ஆன் தனக்கு முந்திய வேதங்களை மெய்ப்படுத்த வந்தது என்பதால் பைபிளின் கருத்துக்குச் சான்று பகர்கின்றது. ஆக புனித பைபிளின் பழைய, புதிய ஏற்பாடுகளும் தமக்குள் எவ்வித கருத்து வேறுபாடுமின்றி ஓரிறைக் கொள்கையை வெளிப்படுத்தி உள்ளமை மேற்போந்த வசனங்களால் அறியப்படலாம். பின்பற்றப்படலாம். அதன் மூலம் இறைகருணையையும், இறையன்பையும், இறைநெருக்கத்தையும் பெற்றுக் கொள்ளலாம் அல்லவா?

- நிஹா -

2010.02.24