பிறை பார்த்தலும் பிழையான பெருநாளும்!

அல்லாஹ் மனிதர்களுக்கு சிரமத்தை விரும்புவதில்லை. இலகுவையே விரும்புகின்றான். காலத்தை அறிவதற்காக சூரியனையும் சந்திரனையும் படைத்துவிட்டு, அதனைக் கண்டுபிடிக்க முடியாமல் கஷ்டப்படும் நிலையை உருவாக்குவானா கருளண நாயன் அல்லாஹ்! றமழான் மாதம் வந்துவிட்டால் எண்ணிவிடப்பட்ட நாட்களில் நோன்பைப் பிடியுங்கள் எனவே கூறியுள்ளான்.

றமழான் மாதத்தை அறிவதற்கு மற்றைய மாதங்களைப் போலவே, அமாவாசை என்ற இருட்டுக்கு அடுத்த நாள் பிறை தோன்றும் நாளாக ஆக்கியுள்ளான். சந்திரனுக்கு பல தங்குமிடங்களை ஆக்கியுள்ளான் எனக் கூறியிருப்பதனால், அமாவாசை இருட்டுக்கு அடுத்த தங்குமிடம் குறிப்பது, புதிய பிறையின் தொடக்கத்தையே!

தலைப்பிறை என்பதால் அது மனிதரின் கண்களுக்குத் தென்படாமல் போகும் சந்தர்ப்பம் அதிகம். அதனால், அதற்கு முந்திய நாளில் இருந்த இருட்டே அடுத்த நாளில் வரப்போகும் முதற் பிறையை அறிவிக்கும் இலகு வழியாக உள்ளது.

பிறையைப்பார்த்துத்தான் நோன்பைப் பிடிப்பேன் என்பது, ஒரு வகை அடம்பிடிக்கும் தன்மையை, உண்மையை மறுக்கும் போக்கை, இயற்கை மதிக்கா எண்ணத்தை, மேலாக அல்லாஹ் சூரிய, சந்திரரின் போக்கில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என்பதை ஏற்காத மனமுரண்டை உண்டாக்குகின்றது.

நாயகம் ஸல் அவர்கள் கூறியதாக் கூறுப்படும் பிறை பார்த்து நோன்பு பிடிக்க, நோன்பை விட வேண்டும் என்பது, எவ்வகையிலும், அல்லாஹ்வின் வார்ததையை மீறுவதற்குப் பாவிக்க முடியாது. இது இறை மறுப்பே. நமது கண்மணி நாயகம் ஸல் அவர்களும் பின்பற்றியது அல்லாஹ்வின் சுன்னத்தாகிய குர்ஆனே. அப்படியிருக்க நாம் குர்ஆனைப் புறந்தள்ளுவது என்பது வழி கேட்டைத் தவிர இ்ல்லை.

இம்மாதம் 26ஆந் திகதி, ஆடி அமாவாசையை அனைவரும் கண்டுள்ளோம். அதற்கடுத்த நாள் பிறை தோன்றும் நாள். அப்படியாயின் 27ஆந் திகதி தலைப்பிறைக்குரிய நாள். இதில் எவ்வித மாற்றமும் ஏற்படுவதில்லை. அப்படி ஏற்படுமாயின், அல்லாஹ்வும், இயற்கையும், இவ்வியற்கை மார்க்கமும் பிழையாகிவிடும். இந்நிலையில், 27ஆந்திகதி மாலை ‌பிறை பார்க்க முடியாவிட்டாலும், தலைப்பிறையே! ஷவ்வால் மாதத் தொடக்கமே! பெரு நாள் தினங்கள் நோன்பு வைக்கக் கூடாது என்ற ஹதீஸின்படி 28ஆந்தகதி நோன்பு நோற்பது குற்றச் செயலாகின்றது.

பிறை பார்த்துத்தான் நோன்பு தீர்மானிக்கப்பட வேண்டும் என்ற ஹதீஸை ஏற்பவர்களே, இன்று பிறை காணப்படவில்லை அதனால், நாளை பெருநாள் எனத் தீர்மானிப்பதன் மூலம், பிறை காணமலேயே பெருநாளைத் தீர்மானித்து முரண்பாட்டை வெளிப்படுத்தி உள்ளமை, இவர்களது பிறை பார்த்தல் எ்னற தர்க்கம் சாத்தியப்படாத ஒன்று என்பதை தெளிவாக்குகின்றது.

 

- நிஹா -