எது மார்க்கம் ?

அல்லாஹ் நமக்கு எதைக் கூறியுள்ளானோ அதனையே மார்க்கமாகக் கொள்கின்றோம். அல்லாஹ்வைத் தவிர வேறு நாயனில்லை என்பது மார்க்கத்தின் அடிப்படை உண்மை. இந்த உண்மையை மறுக்காமல் அதை நிறுவுவதற்கான வழியைத் தேடிக் கொள்வது மார்க்த்தின் இலக்கை எட்டுவது.

கொழும்பில் வதியும் ஒருவன் காலிக்குப் போக வேண்டும் எனக் கருதினால் பல்வேறு வகையில் ஒன்றைத் தெரிவு செய்யலாம். அது அவனின் தேவை, வசதி, நேரம், வாய்ப்பு, பாதுகாப்பு போன்ற இன்னோரன்னவைகளைக் கொண்டு தீர்மானிக்கப் படுகின்றது. ஆகாயத்தில் செல்லும் வசதி, வாய்ப்பு போன்றவை இருக்குமானால் அவனின் தேவைக் கேற்ப அதனைத் தெரிவு செய்யலாம். அதில் பணச் செலவு இருந்தாலும் நேர விரயம் ஏற்படுவதில்லை.  குறுகிய நேரத்தில் சென்று திரும்பிவிடலாம். அது போன்றே கடல், தரைவழிப் பயணம் போன்றவையும் இவற்றிலும், அரச தனியார், சொந்த சொகுசு, சாதாரண, கடுகதி போன்ற பல்வேறு வகைகள் உள்ளன. அதற்குமேல், காலை, பகல், மாலை, இரவு போன்றவைகளும் உள. இவை அனைத்தும் பயனாளியினால் தீர்மானிக்கப் படுகின்றது.

இது சாதாரண வாழ்வியல் பிரச்சினையில் அன்றாடம் நாம் முகம் கொடுப்பது. இது மார்க்கம் அதாவது மறுமைக்கான பயணமாயின், அதற்கும் பல்வேறு வழிகள் உள்ளன. அவற்றில் நடுத்தரமான ஒன்றே நபிமார், தூதர்க்ள போன்றோரால் வெளிப்படையாக அனைத்து மக்களுக்கும் சொல்லித் தரப்பட்டவை.

உலகம் தோன்றிய நாள் முதல் காலத்துக்குக் காலம், சமூகங்களுக்கு சமூகம், இடத்துக்கும், தேவைக்கும் ஏற்ப அவ்வப்போது, தனது நபிமார், தூதர்களைக் கொண்டு அல்லாஹ் சில வாழ்க்கைத் தத்துவங்களை, சட்டங்களை வணக்க முறைகளைத் தந்துள்ளான். அவை அனைத்தும் வித்தியாசமானவை. ஆனால் அனைத்தும் ஒரு இலக்கை, அடுத்த கட்ட வாழ்வில் இறைவனை சந்திப்பதற்காக இங்கு செயற்படுத்தப் படும்  நடைமுறைகளே! அதனை இறைவனே ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் வணக்க முறை களுண்டு எனக் கூறியுள்ளமையில் இருந்து ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளலாம்.

முஸ்லிம்கள் என்ற பதம் இன்று நாம் குறுக்கி வைத்துள்ள வரையறையைக் கொண்டதல்ல. நமது குர்ஆனின்படி, மூஸா அலை, ஈஸா அலை காலத்திலும் முஸ்லிம் என்ற பதம் பாவிக்கப்பட்டே இருந்திருக்கின்றது. எல்லோரும் அல்லாஹ்வைத் தவிர வேறு நாயனில்லை என்பதையும், மறுமை உண்டென்பதையும், அனைவரும் அல்லாஹ்வைச் சந்திக்கவுள்ளோம் என்பதையும் கூறியுள்ளதுடன் தொழுகையை நிலைநிறுத்தி, ஸக்காத்தும் கொடுத்து வரும்படியும் அறிவுறுத்தப்பட்டே வந்துள்ளது. புர்கான் என்ற பதம்கூட மூஸா அலை அவர்கள் காலத்தில் அல்லாஹ்வால் பாவிக்கப்பட்டே வந்திருக்கின்றது.

மேலாக, நமது கண்மணி நாயகம் ஸல் அவர்களுக்கு, அல்லாஹ் புதிதாக ஒரு மார்க்கத்தையும் கொடுத்து விடவில்லை எனவும், இதற்கு முந்திய நபிமார்களுக்கு கொடுக்கப்பட்டவைகளை உண்மைப்படுத்தவும், சாட்சியங் கூறவும் பாதுகாத்திடுவதற்குமாகவே கொடுக்கப்பட்டதாகவும் அல்லாஹ் தன் அருள்மறை குர்ஆனில் தெளிவாகக் கூறியுள்ளான்.

அண்டசராசரத்தில் உள்ள அனைத்தும் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டு இருப்பதாக. துதித்துக்கொண்டு இருப்பதாக, சிரம் சாய்ப்பதாக, புகழ்பாடுவதாகக் கூறுகின்றான். ஆனால், வல்ல நாயன் அல்லாஹ் தொழுகை என்ற ஒன்றை சில நேரங்களைக் குறிப்பிட்டு அதில் செயற்படுத்தி வருமாறும் கூறுகின்றான். அனைத்தும் வணங்கிக் கொண்டு இருப்பதாகக் கூறியுள்ள அல்லாஹ், இந்த தொழுகை மூலம் எதனை எதிர்பார்க்கிறான். அவனோ, யாருடையவும், எதனுடையவும் தேவைகள் அற்றவன் என்பதால் இந்த தொழுகை அவனுக்காகத் தொழப் பட்டாலும் அவனது தேவையை நிறைவேற்றுவதற் கல்ல என்பதை முதற்கண் புரிந்து கொள்ள வேண்டும்.

தொழுகை என்ற பெயரில் நாம் சில செயற்பாடுகளைச் செய்து கொண்டு வருகின்றோம். தொழுகை பற்றிக் கூறியுள்ள அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் தொழுகையை நிலைநிறுத்துவீராக, பேணிவருவீராக. கடைப்பிடிப்பீராக, நிறைவேற்றுவீராக என்றே கூறுகின்றான். தொழுகை என்றால் என்ன, நாம் செய்கின்ற செயற்பாடுகளுடன் தொழுகை முடிந்துவிட்டதா? அதனால் எதனை நிலை நிறுத்தினோம்? எதைப் பேணிக் கொண்டோம், எதைக் கடைப்பிடித்தோம் எதனை நிறைவேற்றினோம் என்ற கேள்வியும் எழுகின்றது. சாவு வரை இதனைச் செய்யத்தான் வேண்டுமா! இது ஒன்றுதான் மறுமையில் இறைவனைச் சந்திப்பதற்கான வழியா! வேறு எதுவும் குர்ஆனில் கூறப்படவில்லையா! போன்ற இன்னோரன்ன கேள்விகளை நாம் நமக்குள் எழுப்பிக் கொள்ளவே வேண்டியுள்ளது.

குர்ஆனில் அடிக்கடி அல்லாஹ்வால் பரிந்துரைக்கப்படுகின்ற விடயமே, ஈமான் கொண்டு நற்செயல் செய்து வருவது என்பது. இது நமக்குக் கடமையாகக் கூறப்பட்டுள்ள பல விடயங்களுக்கு அப்பால், எதனையோ வலியுறுத்திக் கொண்டு நிற்கின்றது. அதைவிட ஈமான் கொண்டு நன்றியும் செலுத்தி வந்தால் உங்களைத் தண்டிப்பதில் அல்லாஹ் என்ன நன்மையடையப் போகின்றான் என்ற அறைகூவல் கூட நம்மை நிமிர்ந்து பார்க்கவே வைக்கின்றது. ஒருவருக்குச் செய்ததற்காகப் பிரதி உபகாரம் செய்யத் தேவையில்லை, ஒருவர் பிரதி உபகாரத்தை எதிர்பார்த்து யாருக்கும் உதவி செய்யக் கூடாது, அல்லாஹ் தேவையற்றவன் எனக் குர்ஆனில் கூறிய அல்லாஹ், நன்றி என்பதன் மூலம் நம்மிடம் எதை எதிர்பார்க்கின்றான் என்பதை அறிய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றோம். ,

ஏற்கனவே, தொழுகை பற்றிய அறிவு, அதனைத் தொடர்ந்து மறுமை, அல்லாஹ்வின் சந்திப்பு என்பவைகளோடு, தற்போது ஈமான், நன்றி போன்றவைகள் அறியப்பட வேண்டியவைகள் என்ற பட்டியலுள் சேர்ந்துள்ளன.

இது இவ்வாறிருக்க, வேறு எதனையாவது, அல்லாஹ் தன்னருள் மறையில் கூறியுள்ளானா எனப் பார்க்கும் போது பல விடயங்கள் நம் கண்களை உறுத்தவே செய்கின்றன. உங்களுக்கு மீண்டும் மீண்டும் ஓதப்பட வேண்டிய ஏழு வசனங்களைக் கொடுத்துளளோம் எனக் கூறியதன் மூலம் தொழுகையின் அத்தனை றக்அத்துக்களிலம் இடம் பிடித்துள்ள, குர்ஆனில் தோற்றுவாயாகக் கூறப்படும், சூரத்துல் பாத்திஹா நமது கவனத்தை ஈர்க்கின்றது. ஒவ்வொரு றக்அத்திலும் அதனை ஓதுவதனால் நாம் எதனை அதிலிருந்து அடையவுள்ளோம் எனச் சிந்திக்க வேண்டிய பெறுப்பும் தற்போது ஏற்படுகின்றது.

அதிலுள்ள ஏழு வசனங்களில், தொடக்கம் அல்லாஹ்வின் வல்லமைகளைக் கூறி அவனைப் புகழ்வதாகவும், நடுப் பகுதி, அவனை அறிந்து அவனிடம் உதவி தேடுவதாகவும், கடைப் பகுதி, நம்மை வழி நடத்தும்படியாக, அதுவும். இதற்கு முந்தி, உனது கோபத்துக்கு ஆளாகாது, வெற்றி பெற்றோரின் வழியில் வழி நடத்தும்படி கேட்பதாக அமைந்துள்ளது.

இதன் முக்கியத்துவம் கருதி, இந்த பாத்திஹாவில் எதனை நாம் கேட்கின்றோம், உதவி கேட்பதாயின், அவரை நாம் அறிந்திருத்தல். கேட்கப்படும் உதவி என்ன? வழிகாட்டப்பட்டோர்? வெற்றியடைந்தோர் யார்? போன்றவைகள் அறியப்படாவிட்டால், நாம் எதனைக் கேட்கின்றோம் என்பது தெரியாமல் எதனையோ யாரிடமோ கேட்கின்றோம் என்ற நிலயை அடைகின்றறோம்!

அவ்வசனத்தில் இய்யாக்க நஃபுது என்ற வசனத்தை, தற்போது அறிந்து வைத்துள்ள ‘உன்னையே வணங்குகின்றோம்’ எனக் கொள்வதாயின், அல்லாஹ் அனைத்தும் தன்னை விரும்பியோ விரும்பாமலோ வணங்கக் கொண்டு இருக்கின்றன, என்பதற்கு மேல் மீண்டும் நம்மை வணங்கச் சொல்லியதாக, அதாவது நாம் செய்து கொண்டிருப்பதைச் செய்யும்படி ஏவுவதாக அமையும். அத்தோடு தொழுகை நிலைநிறுத்த, பேண, கடைப்பிடிக்க, நிறைவேற்ற என்ற சொற்களெல்லாம் கைவிடப்பட்டதாகப் பொருளற்றதாக, வீணாகக் கூறப்பட்டவையாக (அஸ்தஃபிருல்லாஹ்) ஆகிவிடும்.

அதற்கு மேலும், தொழுகை என்றால் என்ன அல்லாஹ் தன் அருள் மறையில் கூறப்பட்ட, ‘அவனை நினைவு கூரல்’ என்ற வேலை நடந்துள்ளதா? என்ற விளாவை எழுப்பி நிற்கும். இப்போது, ஒரு உதவியை நாம் பெற வேண்டி இருந்தால், அவ்வுதவி யாரிடம், அவரின் பண்பு, தரக்கூடிய தன்மை பெறும் தகுதி, எதைக் கேட்கின்றோம் என்ற தெளிவு தேவை.

அந்த வகையில். உன்னை வணங்கிக் கொண்டு உதவி தேடுதல் என்ற பண்பு, நமது தொழுகை என்ற கடமையைச் செய்யாது எதனையோ அடைவதற்கான கொடுக்கல் வாங்கலுள் சங்கமமாகின்றது.

அத்தோடு, பாத்திஹாவின் இறுதியில் நாம் யாரிடம் கேட்கின்றோம் என்பது நினைவு கூரலின் மூலம் அல்லாஹ்விடம் என்பதை ஊர்ஜிதப்படுத்தப் படுகின்றது. இப்போது தொழுததற்காகக் கேட்கப்படும் உதவியாக இது அமையாது, ஏனென்றால். தொழாத சமயத்திலும் இவ்வசனங்கள் ஓதப்படும் போது, உதவி தேடப்படுபவனை அறிந்து நினைவு கூர்ந்து உதவி தேடுகின்றோம் எனவே வருகின்றது.

தொழாத நேரத்தில் உன்னை வணங்குகின்றோம் எனக் கூறுவது ஏதோ பொய் சொல்வதைப் போன்ற தன்மையை, செய்யாததைச் செய்வதாகக் கூறுவதாகத் தெரிகின்றது. மேலும், உதவி தேடுபவர், தேடப் படுபவரை நினைவு கூர்ந்தே உதவியைக் கேட்பார் என்பதை, இன்னோரிடத்தில் அல்லாஹ்வே, பயபக்தியாளர் அல்லாஹ்வை நினைவுகூர்ந்து உதவி தேடுவர் என்கின்றான்.

நாம் உன்னையே அறிகின்றோம். உன்னிடமே உதவி தேடுகின்றோம் எனப் பன்மையில் கூறியிருப்பது சாதாரண சந்தர்ப்பங்களில் நாம் உதவி கோரும் நேரங்களில் நமது செயற்பாட்டைக் கூறுகின்றது. அதாவது, நமது அன்றாட வாழ்வில் நாம், உன்னை அறிந்து, உன்னிடம் உதவி தேடுகின்றோம் என்பதைத் தொழுகையின் போது கூறுவதாகக் கொள்ளலாம். அதனால், அடுத்து வரும் வசனங்கள் வழி நடத்தும்படி அவனிடம் இறைஞ்சுவதாக அமைகின்றது. வழி நடத்துபவன் அவனல்லவா!

அதாவது, நமது அன்றாட வாழ்வில் நாம், உன்னை அறிந்து, உன்னிடம் உதவி தேடுகின்றோம் என்பதைத் தொழுகையின் போது கூறுவதாகக் கொள்ளலாம். அதனால், அடுத்து வரும் வசனங்கள் வழி நடத்தும்படி அவனிடம் இறைஞ்சுவதாக அமைகின்றது. வழி நடத்துபவன் அவனல்லவா!

இச்சந்தர்ப்பத்தில், அல்லாஹ் நமக்கு வேறு எதையாவது கட்டளை இட்டுள்ளானா எனபதைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அப்படிப் பார்க்கும் போது, நாம் பிறந்த நோக்கமான, அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறுவது என்பதில். நமது இலக்கை அடைய வேண்டிய செய்தி முக்கியத்துவம் பெறுகின்றது. இதனை அல்லாஹ் கூறாமல் விடவில்லை. 5:35இல் இறை நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். அவன்பால் நெருங்குவதற்குரிய வழியைத் தேடிக் கொள்ளுங்கள். மேலும், அவனுடைய பாதையில் போர் செய்யுங்கள் நீங்கள் வெற்றி பெறலாம் என மிகவும் தெளிவாகக் கூறியுள்ளமை நம்முன்னுள்ள பொறுப்பை விளக்குகின்றது.

நான் ஆரம்பத்தில் கூறியபடி, நாம் இறை நெருக்கம் என்ற இலக்கை அடைவதற்காக எவ்விதமான முயற்சிகளில் ஈடுபட்டாலும், அது அல்லாஹ்வால் கணக்கெடுக்கப்பட்டு, அடைவுக்கேற்ற கூலி கொடுக்கப்படவே செய்யும். அல்லாஹ் நமது செயல்களையோ, வார்த்தைகளையோ பார்த்துத் தீர்மானிப்பவனல்ல. நமது உள்ளத்தை, எண்ணத்தையே பார்க்கின்றான். அதனால் எண்ணங்களில் அனேகமானவை பாவங்களாகும், அவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். எனவும். மனோஇச்சைக்கு இடம் கொடாதீர்கள் எனவும் கூறியுள்ளான்.

அந்த வகையில், ஈமான் கொண்டவர்கள், நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் அல்லாஹ்வை அறிந்தவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள் என்ற அறிவுரைக்கேற்ப, இறைநெருக்கத்திற்காக ஏற்கனவே அறிஞர்களாக ஏற்கப்பட்டவர்களின் உதவியுடன் சில வழி முறைகளைப் பின்பற்றி வருகின்றார்கள். அவை தனி மனித ஈடேற்றத்திற்காக, அல்லாஹ்வால் ஏற்கப்பட்டால் வெற்றியை அளிக்கலாம்.

அதனால். அப்படியானோரைரக் காணும் போது, அல்லது அவர்களது செயற்பாடுகளை காணும் போது, அவர்கள் பற்றிய விமர்சனங்களை அள்ளி வீசுவதோ, அவர்கள் செய்வது பிழை எனத் தீர்மானிப்பதோ கூட நம்மால் முடியாது.

பிரச்சினைகளுக்குத் தீர்வாகக் குர்ஆனை நாடலாமே தவிர, தனிமனித நடத்தைகளான, இறைவழியில் செல்வோரது விடயங்களில் அநாவசியமாக நாம் தலையிடுவதோ, கண்டபடி அத்துமீறி அவர்களை விமர்சிப்பதோ இறைதண்டனையை வருவிக்கும் செயலாகவே மாற்றமடையும்.

நமது அறிவு அவர்களை விமர்சிக்கும் அளவிற்கு ஆற்றலையும் பெறவில்லை. ஒரு கட்டுப்பாட்டுள், நியதியுள், சட்டத்துள் இருந்து கொண்டு அதற்க்கப்பால் சென்றவர்களின் செயல்களை கட்டுப்படுத்தவோ, விமர்சிக்கவோ, குறைகாணவோ முடியாது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பாடசாலையில் நாம் பின்பற்றும் சட்டம், ஒழுங்கு, பல்கலைக்கழக மாணவர்களைக் கட்டுப்படுத்தாது. பல்கலைக்கழக சட்டம்,  அதனைத் தாண்டிச் சென்றவனைக் கட்டுப்படுத்தப் போவதுமில்லை. அத்தோடு,  அச்சட்டங்களுக்குள் உட்படாதவர்கள் பாடசாலை மாணவனாலோ, கல்லூரி மாணவனாலோ, பல்கலைக்கழக பட்டதாரி மாணவராலோ விமர்சனத்திற்கு உட்படுத்த, கட்டுப்படுத்த முடியாதவர்கள்.

நமக்கு எது பற்றிய தீர்க்கமான ஞானமில்லையோ, அதனைப் பின்பற்றுவது தடை என்பதை நிராகரிக்காத விதத்தில் நம்முடைய மார்க்க நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். நாம் யாரையும் திருத்துவதற்காக உலகில் பிறந்தவர்கள் அல்லர். நமக்குத் தெரிந்ததை அழகிய முறையில் ஏற்பவர்களுக்குக் கூறுவதோடு நமது கடமைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

அதனை விட்டு குர்ஆனை வாசித்து விட்டோம் என்ற ரீதியில் அனைவரினதும் தனிப்பட்ட செயற்பாடுகளை விமர்சிக்க முற்படக் கூடாது. பொது விடயங்களோடு ஒட்டியவைகளில் மார்க்க விடயங்கள் பிழையாக அனுசரிக்கப்பட்டால். அதனால் பலர் பாதிக்கப்படும் நிலை இருந்தால், அதனை அழகுற எடுத்தியம்பலாம். அவ்வளவுதான்!

நாட்டைத் துறந்து காட்டிற்குச் சென்ற புத்தரை எந்த சட்டமும் கட்டுப்படுத்தவில்லை. ஹிரா குகையில் தன்னை ஒறுத்து தவ நிலையில் இருந்த நமது கண்மணிநாயகம் அவர்களை எந்தச் சட்டங்களும் கட்டுப்படுத்தவில்லை. அது போன்று பல்லாயிரம் பேர், குணங்குடி மஸ்தான்சாகிபு அவர்கள், தற்கலை பீர்முகம்மது ஒலியுல்லாஹ், பட்டினத்தார் போன்றோரை எல்லாம் நாம் படிக்கும் பாலர் வகுப்பு அறிவைக் கொண்டு அளக்க முனைவதும், விமர்சிக்க முனைவதும், குறைகாண முனைவதும் அழிவைத் தவிர எதனையும் தந்துவிடப் போவதில்லை!

மார்க்கத்தில் நிர்ப்பந்தமில்லை. அவரவர்க்கு அவரவர் மார்க்கம். ஒவ்வொருவரும் தாம் ஆத்மீக வெற்றியை அடைவதனை விடுத்து, அடுத்தவரைப் பேசிக் கொண்டிருப்பதனால் எதனையும் அடையப் போவதில்லை. மறுமையில் அல்லாஹ்வின் முன் குருடராகவே இருப்பர். இம்மையில் குருடர் மறுமையிலும் குருடரே என்ற இறை வசனத்தை நினைவிற் கொள்க!

தொழுகையில் அல்லாஹ்வை நினைவு கூரும்படி கூறுவதையாவது நாம் நிறைவேற்றி உள்ளோமா என்பதுவும், மறுமைக்கு முன்னர், தொழுகையை நிலைநிறுத்திக் கொள்ளுங்கள் என்ற அறைகூவலும், மறதியில் இருப்பதை அல்லாஹ் நமக்கு இடித்துரைத்துக் கொண்டிருப்பதையும், உங்களுக்குள்ளேயும் கவனித்துப் பார்க்க வேண்டாமா? என்பதையும் சிறிது சிந்திப்போமானால், நமது இழிநிலை விளங்கும். ஆதலால் கடைத்தேறும் வழியைக் காண விழையுங்கள்!

- நிஹா -