நற்சிந்தனை 16

மதத்தின்பெயரால் நடத்தப்படும் காடைத்தனங்கள்!

தீர்ப்புக்கள் யாவும் குர்ஆனில் இருந்து கொடுக்கப்பட வேண்டுமென்பது வல்ல நாயன் அல்லாஹ் சுபுஹானஹுதஆலாவின் கட்டளை. அதனையடுத்து, அப்படி குர்ஆனில் இருந்து தீர்ப்பு கொடுக்காதவர்களுக்கு, மற்றைய குற்றங்களுக்கு தண்டனைகள் அறிவிக்கப்பட்டது போலன்றி, அவர்களை நிராகரிப்பாளர்கள் அதாவது காபிர்கள் என்றே குறிப்பிடுகின்றான். ஆதலால் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்.

மனஇச்சைப்படி எங்காவது ஹதீஸ் ஒன்றத் தூக்கிப் பிடித்துக் கொண்டு குர்ஆனில் ஆதாரம் இல்லாத நிலையில் தீர்ப்புக்களை நீங்களாகவே கொடுத்துக் கொள்ள வேண்டாம்.

மேலும், நன்மையைக் கொண்டே தீமையை அகற்றுமாறு கூறியிருப்பதும், பொய்யின் மேல் உண்மையைப் போட்டு பொய்யை அழிப்பதும், அத்துமீறாமல் காரியங்களை ஆற்றும்படி கூறியிருப்பதும், குழப்பம் செய்ய வேண்டாமெனக் கூறியிருப்பதும், அடுத்தவர்களுடைய தெய்வங்களைக்கூடப் பேச வேண்டாமென்று கூறியிருப்பதும், மார்க்கத்தில் பலவந்தமில்லை, உங்கள் மார்க்கம் உங்களுக்கு எங்கள் மார்க்கம் எங்களுக்கு என நவின்றிருப்பதும். குர்ஆனிய அறிவுரைகளைக்கூட ஏற்பவர்களுக்கு மட்டுமே கூறுங்கள் எனக் கூறியிருப்பதிலும், வழிகெடுப்புகூட அவனிடமிருந்தே வருகின்றது என முத்தாய்ப்பு வைத்திருப்பதிலிருந்தும், அவன் விரும்பியவர்களை வழிகெடுத்து, அவன் விரும்பியவரை வழிநடத்தியும் வருகின்றான் என்பதில் இருந்தெல்லாம் நமக்கு அறிய வருவது, அடுத்தவனுக்கு இடைஞ்சலாக எதனையும் செய்யவோ, மற்றவனுடைய காரியத்தில் தேவையின்றி மூக்கை நுழைக்கவோ வேண்டாமென்பதுதானே!

அத்தோடு. பழிப்பது, பட்டப் பெயர் வைப்பது, அவமானம் விளைப்பது, அவதூறு கூறுவது, துருவித்துருவி ஆராய்வது போன்றவற்றை எல்லாம் தடைசெய்து உள்ளமையிலிருந்து அல்லாஹ் மனிதரிடத்தில் அமைதி வாழ்வையே விரும்புகின்றான் என்பதையே காட்டுகின்றது. பாதிக்கப்பட்டவன் பழிவாங்குதலில் வாழ்வு உண்டு கூறிய அல்லாஹ் அதில் கூட வரம்ப மீற வேண்டாமென்றும். பாதிக்கப்பட்ட அளவே தவிர அத்துமீற வேண்டாம் என்றும், பெருமனது கொண்டால் மன்னித்து விடலாமென்று கூறியிருப்பதும் எதனைக் குறிக்கின்றது.

இவ்வளவு விடயங்களை அல்லாஹ் நமக்கு எடுத்தியம்பியும், அடுத்தவன் விடயத்தில் எவ்வித உரிமையுமின்றி அத்துமீறல் செய்வதும், அடாவடித்தனமாக அவர்களின் நம்பிக்கைகளைத் தகர்க்கும் வேலைகளில் ஈடுபடுவதும் ஒரு மூமினுக்கு உகந்ததல்ல. சட்டத்தைக் கையில் எடுப்பது உலக நடைமுறைக்கோ, மதக் கட்டுப்பாடுகளுக்குள்ளோ கூட அடங்காது. தடியெடுததவன் எல்லாம் தண்டல்காரனாகி நீதி செலுத்தவும், தீர்ப்புக்கூறி, நடவடிக்கை எடுக்கவும் துணிந்து விட்டால் இவ்வுலகமே அழிந்துவிட்டிருக்கும் என்பதை அல்லாஹ்வும் தனது மாமறையில் கூறியே உள்ளான்.

தமது கருத்துக்களுக்கு இசைவாக எங்கோ இரண்டு ஹதீதுகளைப் படித்து விட்டால், அதனை அடுத்தவன் மேல் பரீட்சித்துப் பார்ப்பதை நினைக்கும் போது, அந்நியர் நம்மை தீவிரவாதிகள் என்றும், பயங்கரவாதிகள் என்றும் கூறுவதில் எவ்வித குற்றமும் இல்லை என்றே தோன்றுகின்றது. வலிந்து சண்டைக்குப் போகும் தன்மையையே இச்செயல்கள் வெளிப்படுத்துகின்றன.

ஒருவன் ஒரு சிலையைக் கட்டிக் கும்பிட்டால் கூட அவனைத் தடைசெய்யும் உரிமையோ அன்றி அவனது சிலையை உடைக்கும் உரிமையோ யாருக்கும் மதத்தினாலோ, நாட்டுச் சட்டத்தினாலோ கொடுக்கப்பட வில்லை.

நபிகளாருக்கே வஹீ மூலம் அறிவித்ததைப் பின்பற்றும்படியும், அதன் மூலம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும்படியும் மட்டுமே கூறியுள்ளான்.

கபுறுகளை அவர்கள் வணங்குவதில்லை, வணங்கினால்கூட உங்களுக்கு என்ன பாதிப்பு? உடைக்கும் உரிமை யார் தந்தது? அவர்களைப் பழிக்க நீங்கள் யார்?

கபுறுகள் வணங்கப்படுவதாகக் கூறி நீங்கள் அடுத்தவருடைய அடக்கத் தலங்களைத் தகர்க்கும் பணியில் ஈடுபடுவது சரியென்றால், இன்று ஓரிரு புத்த துறவிகளும் ஏதோ காரணங்களைக் கூறிக் கொண்டு இங்குள்ள பள்ளிவாசல்களைத் தகர்ப்பதையும் சரியெனவே ஏற்க வேண்டும். இவை அடிப்படை மனித உரிமை மீறல்களே! இந்த இரண்டு செயல்களும் குற்றச் செயல்களே தவிர நியாயப்படுத்தக் கூடியனவல்ல. தண்டனைக்குரிய குற்றங்கள். செய்பவர்கள் குற்றவாளிகள். ஈருலகிலும் தண்டனையையே அல்லாஹ் வைத்திருப்பான்.

உங்களுடைய கையில் பலம் வந்ததென்பதற்காக 1800 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட கிறிஸ்தவ கோயிலை உடைப்பது சரியென்றால், நேற்றும். இன்றும், நாளையும் பலம் வாய்ந்தவர்களால் உடைக்கப்படும் பள்ளிவாசல்கள் குற்றமற்ற ஒன்றாகிவிடும். சட்டமும் நியாயமும் ஆளுக்கு ஆள் வேறுபடுவதில்லை. அல்ஹம்துலில்லாஹ்! 

 

- நிஹா -