An Open letter to all Sri Lankan Brothers!

உடன் பிறவா உறவுகளுக்கு உளம் திறந்து ஓர் மடல்…

இத்திறந்த மடலை உளம் திறந்து உங்கள் அனுமதியுடன் அல்லாஹ்வைப் பயந்தவனாகத் தொடர்கின்றேன். 

நான் முதலில் மனிதன். அடுத்து, ஓர்இஸ்லாமியன், அதனையடுத்து தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவன், அனைத்திற்கும் மேலாக ஓர் இலங்கையன். இலங்கையை பாரம்பரிய தாயகமாகக் கொண்டவன். இஸ்லாம் இலங்கைக்குள் பரவும் முன்னர் எனது மூதாதையர் இலங்கையரே! ஆனால் இஸ்லாமியரல்லர். பெரும்பாலும், இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களும் இதே வரைவுள் அடங்குபவர்களே!  

பிறப்பால் தீர்மானிக்கப்பட்டவைக்கு யாரும் பொறுப்பல்ல என்ற அடிப்படையில் இறைவன் அனைவரையும் ஓர் ஆன்மாவில் இருந்து படைத்திருப்பினும், நம்மைப் பல கோத்திரங்களாகவும், கொள்கைகளைப் பின்பற்றுபவர்களாகவும் ஆக்கியுள்ளான். அவரவர் கொள்கைகளும், கோட்பாடுகளும் அவரவர் பிறப்புரிமை!  இதில் மூக்கை நுழைக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. இவற்றில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்வதும் அவரவர் அடிப்படை மனித உரிமை. அதனையே இஸ்லாம் மிகத் தெளிவாக அழுத்தந் திருத்தமாகக் கூறியுள்ளமையை இங்கு குறிப்பிட்டுக் காட்டுவது அனைவருக்கும் ஆறுதல் அளிப்பதாகவும், அவர்களை சிந்திக்கத் தூண்டுவதாகவும், தம்மைச் சீர் செய்து கொள்வதற்கு உதவுவதாகவும் இருக்கும். 

அல்குர்ஆன் 13:11- எந்த ஒரு சமூகத்தவரும் தங்கள் நிலையைத் தாங்களே மாற்றிக் கொள்ளாத வரை நிச்சயமாக, அல்லாஹ் அவர்களை மாற்றுவதில்லை.  நான் குர்ஆனிலிருந்து சில கருத்துக்களை எமது நிலையை வெளிப்படுத்துவதற்காக பதிவிடுவதை யாரும், இது ஓர் மறைமுக மார்க்கப் பிரச்சார மடலாக நினைத்து விட வேண்டாம் என அன்புடன் வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

மாறாக, எமது நல்லெண்ணத்தையும், அமைதி வாழ்வையும், சகஜீவன உறவையும் மேம்படுத்திக் கொள்வதற்காக இஸ்லாத்தில் எமக்கு அறிவிக்கப்பட்டவை, எந்த சமூகத்துடனும் புரிந்துணர்வோடு நாம் வாழ்வதைத் தடை செய்வதல்ல என்ற அதியுயர் மனித நேயத்தை விளக்குவதற்காகவே! 

இன்றேல் சர்வ வல்லமையுள்ள அல்லாஹ் அனைவரையும் தனது மார்க்கத்தைப் பின்பற்றுபவர்களாகவே ஆக்கி இருப்பான். அதனையே, குர்ஆன் 2:256 இல் , “மார்க்கத்தில் நிர்ப்பந்தமில்லை“ என திறந்த அறிவிப்பு ஒன்றினைச் செய்துள்ளது. மார்க்கத்தைப் பிழையாக விளங்கிக் கொண்டவர்களே அதிகம் என்பதால் இக்கருத்துக்கள் எம்மவர்களுக்கும் தமது நிலையை ஒப்பிட்டுப் பார்க்கும் ஓர் சந்தர்ப்பமாக அமையும். 

அல்லாஹ் தான் விரும்பியவர்களுக்கே வழிகாட்டுகிறான் எனக் கூறினாலும், அப்படி வழிகாட்டப்படுபவர்களின் விருப்பு, வெறுப்புக்களை அறிந்தே அதற்கேற்றபடி வழிகாட்டும் பணியை மேற்கொள்கின்றான். இது, தான் நினைத்திருந்தால், அனைவரையும் ஓரே மார்க்கத்தைப் பின்பற்றுபவராக ஆக்கி இருக்கலாம் என்பதற்கும், மார்க்கத்தில் முரண்பாடில்லை என்ற தனது கூற்றுக்கும் முரண்படாத நிலையைக் காட்டுவதே! ஆக, இங்கு அல்லாஹ்வின் வழியை பாரபட்சமாகக் கருதிவிட முடியாது. மனிதர்களின் சுயநிர்ணய உரிமைக்குப் பரிபூரண மதிப்பைக் கொடுத்துள்ளமை மறுமையில் அவரவர்க்குரிய பலன்களைக் கொடுப்பதற்காகவே! இது ஓர் சாதாரண நடைமுறையே! 

எமக்கு நல்லவற்றைச் செய்யுமாறு ஏவிய இறைவன், முடிந்தவர்களை அந்நல்லவற்றைப் பிறரையும் செய்யுமாறு தூண்டுவதையும், தமக்குத் தெரிந்தவற்றை ஏற்பவர்களுக்கு நல்ல முறையில் நவிலுமாறும் கூறியுள்ளான். தனது நபியை உலக மாந்தருக்கு அருட்கொடையாகவே அன்றி அனுப்பவில்லை என்பது நிறைய உண்மைகளை, நன்மைகளை உள்ளடக்கி உள்ளதுடன், விளக்கம் தேவை அற்றதுமாகும். அவர் நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும்படியே உபதேசித்துச் சென்றுள்ளார். 

நாம் சமூகப் பிராணியாக நல்வாழ்வு மேற்கொள்ளும் அதே வேளை நமது ஆன்ம உயர்விற்காகச் செய்ய வேண்டிய நற்கருமங்களான அன்பு, தயை, பிறருக்கு உதவல், தர்மம் செய்தல் போன்றவையை சிலாகித்துக் கூறியுள்ளான்.  நமது சொத்தில் இரப்போருக்கும் இரவாதோருக்கும் பங்குண்டு, ஏழைகளுக்கும் பங்குண்டு போன்ற இறை கருத்தை ஏற்று அவரவர்தம் பங்கை அவர்களுக்கு வழங்கல் போன்றவற்றைச் செய்யுமாறும் கட்டளை இட்டுள்ளான். இதன் நோக்கம் சிந்தித்துப் பார்ப்போருக்கு சிறப்பான தெளிவான உண்மையைக் காட்டும். இக்கட்டளை சிறப்பான சமூக வாழ்வு ஒன்றினையே மையமாகக் கொண்டுள்ளமையை யாரும் மறுக்க மாட்டார்கள். இதனைச் சரியாகக் கடைப்பிடிக்கும் ஒருவர் தனது ஆன்ம உயர்வுக்கும், எதனையோ முற்படுத்திச் செல்லவே செய்கின்றார். ஆக, இவ்வுலகில் தானும் தன்னைச் சுற்றியுள்ளோரும் சகவாழ்வை மேற்கொள்ளும் உயர் பண்பு மனித இலக்கணமாகின்றது. 

உங்கள்மார்க்கம்உங்களுக்கு, எங்கள் மார்க்கம் எங்களுக்கு என்பதன் மூலம் யாவரும் அவரவர் மார்க்கத்தைப் பின்பற்றுவதை இஸ்லாம் தடை செய்யவில்லை என்பது தெரிகின்றது. அந்நிய மதத்தவர்களின் கடவுள்களை ஏசாதீர்கள். அப்படி ஏசினால் அவர்களும் அல்லாஹ்வை ஏசுவார்கள் என்கின்றது. இதில் மறைந்துள்ள செய்தி, அவர்கள் ஏசுவதால் அல்லாஹ்வுக்கு குறைபாடு ஏற்பட்டு விடும் என்பதல்ல. மாறாக, ஒருவர் கடவுளை ஒருவர் ஏசுவதன் மூலம் இரு சாராருக்கும் இடையே தேவையற்ற பகைமை மூண்டுவிடக் கூடாது என்பதே! சாந்தி மார்க்கம் அல்லவா!

மேலும், ஒரு சாராருக்கு மேல் உங்களுக்கு ஏற்பட்டுள்ள பகைமை, உங்களை அவர்களுக்கு அநியாயம் செய்துவிட அனுமதிக்கக் கூடாது என்கின்றது. இவ்வறிவித்தல்,  எம்மை,  சமூக வாழ்வைச் சீரழிக்கும் கைங்கரியங்களில் ஈடுபடும் அடிப்படையைக் கூட நெருங்க விடாது தடுக்கின்றது. 

உன்னுடைய முகத்தை மனிதர்களிடமிருந்து திருப்பிக் கொள்ளாதே! எனக் கூறுவதன் மூலம், மனிதாபிமானத்தையும். மனிதப் பெறுமதியையும் சீர்படுத்திக் கொள்ளும் வகையைத் தருகின்றது. 

எம்மை நடுநிலையுள்ள சமூதாயமாகப் படைத்துள்ளேன் எனக் கூறும் குர்ஆன், நாம் சமூகத்தோடு நடுநிலையில், பக்கம் சாரா பண்பை எம்மிடம் வளர்ப்பதன் மூலம், மனித நேயத்துக்கு எவ்வித துன்பமும் ஏற்படாது காக்கும் முன்னேற்பாட்டைச் செய்துள்ளது. 

பூமியில் கர்வமாக நடக்க வேண்டாமெனவும், ஆணவங் கொண்டு தற்பெருமை கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான் எனக் கூறியதன் மூலம் எமக்குப் பாரிய அச்சுறுத்தல் ஒன்றைத் தருகின்றது, அதாவது, முஸ்லிம் ஒருவன் கர்வமாக நடப்பதன் மூலமும், தற்பெருமை கொள்வதன் மூலமும். ஆணவங் கொள்வதன் மூலமும் அடுத்தவனின் மனதை நோக வைப்பதை வெறுப்பதோடு அப்படியானோரைத் தான் நேசிக்கவும் மாட்டேன் என்பதன் உள்ளார்ந்த நோக்கு, ‘மனிதம்’ என்பது வெளிப்படுத்தப்படுகின்றது. 

தீயவன் ஒருவன் ஏதேனும் ஒரு செய்தியை உங்களிடம் கொண்டு வந்தால் அப்பொழுது, தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். அறியாமை காரணமாக ஒரு கூட்டத்தாருக்கு நீங்கள் தீங்கிழைத்துவிட நேரிடும். அப்பால் நீங்கள் செய்தவற்றின் மீது வருந்துவோராக ஆகிவிடுவீர்கள். என்ற இவ்வசனம், எந்தளவு முன்னெச்சரிக்கையை மேற்கொள்ளுமாறு எம்மை ஏவியுள்ளது. இதன் மூல நோக்கமே காரணமின்றி யாரையும் பாதிக்கும் நடவடிக்கைகளில் ஒரு முஸ்லிம் ஈடுபட்டுவிடக் கூடாது என்பதே! 

பழிக்குப் பழி வாங்குவதில் உங்களுக்கு வாழ்வுண்டு எனக் கூறும் அதே வேளை, முடிந்தால் பெருமனது கொண்டு மன்னித்து விடுவதைக் கடமையாக்கி விட்டுள்ளது. பழிக்குப் பழி என்ற தத்துவம்  தனக்கு நேர்ந்த அளவு பாதிப்பை, கூட்டுச் சேராது, தானே தனித்து, அதே அளவில் செய்வதே! இது குழுச் சண்டைகளையும், சாதிச் சண்டைகளையும், இன மோதல்களையும், மதச் சச்சரவுகளையும் பலர் சேர்ந்து ஒருவரைப் பழி வாங்குவதையும் தடுப்பது.  புழிக்குப் பழி வாங்கியதன் பின்னர் தாக்குதல்கள் மேற்கொள்ளும் நிலையைத் தவிர்ப்பதும் மேலதிக அம்சமாகும்.   

அல்லாஹ் தர்மத்தை வளர்ப்பதாகக் கூறியுள்ள அதே வேளை எம்மைத் தர்மம் செய்யும்படியும் ஏவியுள்ளான். ஏழை வரி என்ற ஸக்காத்தைக் கொடுப்பதைக்கூட எம்மீது கடமையாக்கியுள்ளான். யாருக்கு தர்மம் கொடுக்க வேண்டும் என்பதை மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளான். ஏழைகள், கடனாளிகள், விடுபடமுடியாதவர்கள், வழிப் போக்கர்கள் போன்றவர்கள் முக்கியத்துவம் பெறுகின்றார்கள். இக்கட்டளை, மனிதர்கள் எவரும் இல்லாமையால், வசதியின்மையால் கஷ்டப்பட்டுவிடக் கூடாது என்ற பெரும் பொறுப்புடன் கூறப்பட்ட ஒரு கடமையல்லவா! இக்கட்டளையைச் செலுத்துவோர் எந்தளவு சமூக இணக்கத்தை நிலை நிறுத்துவோராக இருக்க வேண்டும் என்பதையும் அதனடிப்படையையும் புரிந்து கொள்ளலாம். 

உதவி செய்தால் அதனைச் சொல்லிக் காட்ட வேண்டாமென்கின்றது. கேட்போருக்கு உதவ முடியாவிட்டால் இனிய சொற்களையாவது கூறும்படி பணிக்கின்றது. உதவி செய்து விட்டு அதற்குப் பிரதி உபகாரத்தை எதிர்பார்க்க வேண்டாம் என்கின்றது. நன்கொடையை ஏற்கும்படி கூறுகின்றது. அழகிய கடனாகக் கொடுக்கும்படி ஏவுகின்றது. கடன் பெற்றவருக்குக் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டு விடுமாயின் அதனைத் தர்மமாக விட்டு விடும்படி கூறுகின்றது. மீதமுள்ளதைத் தர்மம் செய்யும்படி உற்சாகப்படுத்துகின்றது. ஒரு மனிதனை தக்க காரணமின்றிக் கொலை செய்வது முழு மனித சமுதாயத்தையும் கொன்றதற்கு சமன் எனக் கூறி எச்சரிக்கின்றது. 

‘உங்கள் மீது சாந்தி சமாதானம் உண்டாகுக’ என்ற ‘ஸலாம்’ எனும் முகமன் கூறும்படி பணிக்கின்றது. யாரும் ஸலாம் கூறினால் மேலதிகமாகவே கூறும்படி அறிவுறுத்துகின்றது. நிறுத்தால், அளந்தால் நீதமாகவே செய்யும்படி வற்புறுத்துகின்றது. இவை எல்லாம் மனிதர்களிடையே நீதியாக நடந்து, அந்நியோன்யமாக, ஒருவருக்கு ஒருவர் உதவி ஒத்தாசை புரிந்து வாழ்வதை மையமாகக் கொண்டே எமக்குக் கற்பித்துத் தருகின்றது. 

விபச்சாரத்தின் பக்கம் நெருங்க வேண்டாம் என்கின்றது மதுவிலும் சூதிலும் சில நன்மைகள் இருந்தாலும், அதனால் வரும் தீமை அதிகம் என்கின்றது. பக்கத்து வீட்டான் பசித்திருக்க நாம் உண்ணுவதை எமது நபிகளார் எமக்கு அனுமதிக்கவில்லை. உணவளிப்பதை, இறைவனின் கடமையை ஏற்று நாம் செய்வதாகக் கருதுகின்றோம். அதனால் பட்டினியாக மனிதர் வாழ்வது குறைக்கப்படலாம். 

ஏழைகளின் பசியை அறிவதற்காக, நோன்பு நோற்பதும், அதன் மூலம் மனிதர் பசியால் வாட விடாது தடுப்பதற்காக தர்மம் செய்ய வேண்டும் என்பதனை உணர்த்த, நோன்பைத் தொடர்ந்து ஈகையை – கொடையை – பெருநாளாகவே கொண்டாடுகின்றோம். பிறருக்குக் கொடுப்பதை நாம் பெருநாளாகக் கொள்வதன் மகத்துவம் மனிதமே! 

பொய் பேசுபவர்களுக்குக் கேடு எனக் கூறுவதால் நாம் கேட்டை விலக்கியே நடக்கின்றோம். சுத்தமாக வாழ்வதும், சுத்தமானதை உண்பதும், அழகாகவும், அலங்காரமாகவும் மானத்தை மறைத்து உடையணிந்து வாழ்வதும், அனைத்திலும் சுத்தத்தை முன்னிலைப் படுத்துவது எமது கடமைகளில் உள்ளவை என்பதால் அவற்றைப் பேணியே வருகின்றோம். அதனால் அடுத்தவருக்கு எவ்வித அசௌகரியங்களையும் ஏற்படுத்துவதில்லை. 

ஐவேளைத் தொழுகைகூட நேரங் குறிக்கப்பட்ட கடமையாக்கப்பட்டு உள்ளதால் நேரத்தை மதிப்பதுடன் திட்டமிட்டு வாழ்வதற்குப் பணிக்கப்பட்டுள்ளதோடு, மானக் கேடான காரியங்களையும் அருவருப்பான காரியங்களையும் நாம் செய்வதிலிருந்தும் நம்மைக் காத்து உதவுகின்றது. 

துருவித் துருவி ஆராயதீர், பட்டப் பெயர் கூறி அழைக்காதீர், பரிகாசம், கேலி பண்ணாதீர், மனிதர் ஒருவருக்கு ஒருவர் குறைந்தவர்கள் அல்லர், போன்றவற்றைக் கூறுவதன் மூலம் மக்கள் மத்தியில் தேவையற்ற பிரச்சினைகள் வராது, சுமுகமான நிலவரம் ஒன்றையே இஸ்லாம் எம்மிடம் எதிர்பார்க்கின்றது. இவை எல்லாம் மனிதர்கள் அனைவருடனும் மனிதத்துடன் இணக்கமாக வாழ்வதற்காகச் செய்யப்பட்டுள்ள ஒழுங்குகளே! 

உழைக்காமல் வட்டி பெற்று வாழ்வதற்கு எமக்கு அனுமதி மறுக்கப்பட்டு, உழைத்து, வியாபாரம் செய்து வாழும்படி கூறப்பட்டுள்ளதால், அதிகமான முஸ்லிம்கள் வியாபாரம் செய்தே வாழ்கின்றனர்.  இவ்வாறு பல நல்ல விடயங்களிலுமே ஒரு முஸ்லிமின் நாள் கழியுமே தவிர, வீண் விவாதங்களிலும், விளையாட்டிலும், விரயங்களிலும், குழப்பங்களிலும் கழிவதில்லை!

தலைமைக்குக் கட்டுப்படும்படி கூறுகின்றது. அதிகாரம் பெற்றவர்களின் கட்டளைகளை மதிக்கும்படி கூறுகின்றது. ஆக, நாம், முஸ்லிம்களும், நமது பின்பற்றலான இஸ்லாமும்,  யார், என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்கு இவ்வளவும் போதும். எமக்கு இவ்வுலக வாழ்வு மறுமைக்கான நன்மைகளைச் செய்வதற்காகப் பயன்படுத்துவதே தவிர, விளையாடிச் செல்வதற்கோ, யாருக்கும் துன்பம் செய்வதற்கோ அல்ல என்பதே! 

இறுதியாக அல்லாஹ், நாம் ஒருவருக்குச் செய்த தீமையை சம்பந்தப்பட்டவர் மன்னிகாத வரை மன்னிக்க மாட்டான் என்பதைத் தனது கடமையாகவே கொண்டுள்ளான் என்பது, முஸ்லிம்கள் எப்படி அடுத்தவனுக்குத் துன்பம் விளைக்காமல் வா‌ழ வேண்டும் என்பதை விளக்கப் போதுமானது!

நாம் அனைவருடனும் சமாதானமாக, அன்பாக, ஒருவருக்கொருவர் உதவிகள் புரிந்து, இந்த நாட்டைப் பேணி, ஒழுக்கமுள்ள சமுதாயமாகவே வாழ விரும்புகின்றோம்! நாம் செய்யும் நன்மைகளே நம்மை இவ்வுலகத்திலும், மறுவுலகத்திலும் சுவர்க்கத்தையும் நரகத்தையும் தரவல்லது என்பதால், நன்மையான விடயங்களிலேயே எமது காலத்தைக் கழிக்க விரும்புகின்றோம். சாந்தி, சமாதானம்என்பதே   எமது அடிநாதம்! 

 

 – நிஹா -