நற்சிந்த‌னை !

அல் குர்ஆன் இறை அற்புதமா!
அல்லாஹ்வின்  அறிவுக் கருவூலமா!

இவ்வினாவிற்கு விடை காண்பதாயின், அற்புதம், அறிவுக் கருவூலம் ஆகிய இவ்விரண்டு சொற்களும் எவற்றைக் குறிக்கின்றன என்பதை அறிவுபூர்வமாக விளங்கிக் கொள்ளல் அவசியம்.

அடுத்து, குர்ஆனில் அல்லாஹ், குர்ஆன் என்றால் என்ன எனக் ஏதாவது கூறியிருக்கின்றானா என்பதையும், அதனை எங்காவது ஓரிடத்தில், அற்புதம், அல்லது அறிவுக் கருவூலம் எனக் கூறியிருக்கிறானா என்பதையும் அறிய வேண்டும்.

அத்தோடு குர்ஆனில் காணப்படும் கருத்துக்கள், கட்டளைகள், செய்திகள், சம்பவங்கள், அத்தாட்சிகள் போன்றவற்றையும் நன்கு அறிந்திருக்க வேண்டும்.

இதன் பின்னர் இதைப் பேச விழைபவர்,  நடுநிலையில் நின்று, மேற்கண்ட தலைப்பிற்கமைய, ஆய்வினை மேற்கொள்ளல் வேண்டும்.

அற்புதம் என்பது, அசாதாரணமான, நடைமுறைச் சாத்தியமற்ற, இயற்கையோடொட்டாத, விஞ்ஞானச் சட்டங்களுக்கு அப்பாற்பட்ட தெய்வீக சக்திகளாகக் குறிப்பிட்டுக் கூறக் கூடியனவாக இருக்கும்.

அறிவுக் கருவூலம் என்பது இதற்கு எதிர்மாறான தன்மைத்தது. இயற்கை, விஞ்ஞான சட்டங்கள், நடைமுறைச் சாத்தியங்கள் போன்றவற்றோடு ஒத்துப் போவதாகவிருக்கும்.

குர்ஆன் ஓர் அற்புதமா என்ற கேள்வியை ஆராயும் முன்னர், குர்ஆனில் அற்புதங்கள் கூறப்படவில்லையா என்பதற்கு பதில் காணல், பின்னர் தேவையற்று வரவுள்ள தர்க்கங்களைத் தடை செய்யும்.

ஆம், குர்ஆனில் நிறையவே அற்புதங்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளது. ஆணின் தொடர்பற்று குழந்தை பெறல், மலடான கிழவிகள், கருவுற்று பிள்ளைகள் பெறல், மண்ணிலிருந்தும், விலா எலும்பிலிருந்தும் பிள்ளை உருவாதல் போன்றவை, அல்லாஹ் தனது இருப்பை வெளிப்படுத்து வதற்காக, அத்தாட்சிகளாகக் கூறப்பட்டுள்ளது.

இன்னும், கடல்களுக்கிடையில் கண்ணுக்குத் தெரியாத தடை, சுவை. தன்மை மாற்றம் போன்றவை. பிர்அவ்னின் உடல் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருத்தல், மலைமுகட்டில் மரக்கலம் இருத்தல் போன்றவற்றையும் அல்லாஹ் தனது அற்புதங்களாகவும், அத்தாட்சிகளாகவும் காட்டியிருக்கின்றான். இவை சில.

இவை கூறப்பட்டதற்கான காரணமும் உண்டே. இக்குர்ஆனை மனிதன் இயற்றிக் கொண்டு வரவில்லை. மாறாக, இதனை அல்லாஹ்வே மனிதர்களுக்கு வழிகாட்டலாகவும், அறிவுரையாகவும், ஞாபக மூட்டலாகவும், சட்டதிட்டங்களைக் கொண்டதாகவும், தெளிவான தாகவும், சந்தேகமற்றதாகவும், விரித்துரைக்கப்பட்டதாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும், சம்பூரணமானதாகவும், முன்னைய வேதங்களை மெய்ப்படுத்துவதாகவும், சாட்சியங் கூறுவதாகவும், ஞான வெளிப்பாடாகவும்  இறக்கி வைத்துள்ளான் என்பதை மக்கள் நம்ப வைப்பதற்காகவே கூறி வைத்துள்ளான். 

குர்ஆன் ஞானம் நிறைந்தது, ஞாபகமூட்டல், உரைகல், அறிவுக் கருவூலம், உண்மையைக் கொண்டது, பின்பற்றப்பட வேண்டியது, நடைமுறைப் படுத்தப்பட வேண்டியது, இயற்கையானது, உபதேசம், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வது, போன்ற சொற்களால் குறிப்பிட்டுக் கூறி இருக்கிறான்.  ஆனால், எங்காவது ஓரிடத்தில் இது ஓர் அற்புதம் எனக் கூறி இருப்பதாகத் தெரியவில்லை. 

இதற்கு மாற்றுக் கருத்து இருக்குமாயின் அது குர்ஆனிலிருந்தே தவிர காட்டிட முடியாது.  “உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதம்“,  என அல்லாஹ் கூறியிருப்பது ஒன்றே, அது அற்புதமில்லை என்பத்றகுச் சான்றாக அமைகின்றது.

அற்புதங்களை யாரும் உண்மை என ஏற்பதில்லை. அற்புதமாக நடந்த சம்பவத்தை உண்மையாக நடந்த அற்புதம் எனலாம்.

ஈஸா அலை அவர்கள் தொட்டிலில் பாலகனாக இருந்து, தன்னை ஒரு இறை தூதர் எனக் கூறியது அற்புதமாயினும், உண்மையாக நடந்தது.

மூஸா அலை அவர்கள் கடலைத் தன் தடியால் அடித்துப் பிளந்து கொண்டு, தனது கூட்டத்தாரை  நடத்திச் சென்றது அற்புதம். ஆனால் உண்மைச் சம்பவம்!  அதாவது உண்மையாக நடந்த அற்புதங்கள்!

ஆக, குர்ஆன் அற்புதமல்ல, ஓர் அற்புதமான அறிவுக் கருவூலம்.  இறை ஞான வெளிப்பாடு. மனித சிந்தனைக்குள் அடங்கிடாது அனைத்து காலங்களுக்கும், அனை்த்து மக்களுக்கும், அனைத்து சந்தர்ப்பங்களுக்கும், அனைத்து விடயங்களுக்கும் தீர்வு தந்து நிற்பது. தன்னில் எவ்வித மாற்றத்தையும் உண்டாக்கிடாது, அனைத்து மாற்றங்களுக்கும்  ஈடு  கொடுத்து நிற்பது.

 

- நிஹா -