இந்த தலையங்கம் பரந்துபட்ட உண்மைகளைத் தன்மேல் தாங்கி நிற்பது. அவை அனைத்தையும் விளக்கப் புகின் எனது இலக்கின் நோக்கம் தடம் மாறிவிடும் என்பதால் தடுமாற்றம் தவிர்க்க, விளக்கத்துக்குத் தேவையான அளவில் குறிப்பிட்ட சில உண்மைகளைச் சுருக்கமாக எழுதவுள்ளேன். உய்த்துணரின் உண்மை விளங்கும்.

ஓன்று இருக்கும் இடத்தில் இன்னொன்று இருப்பதில்லை என்பது பொது விதி. ஓன்றின் அழிவிலேயே இன்னொன்று உருவாகின்றது எனவும் கூறலாம். இயற்கை உண்மையில் இப்பாடத்தை நமக்குக் கற்றுத் தந்துள்ளதா என்றால், அது நமது விளக்கத்தின் பிழையே தவிர வேறில்லை என்றே கூற வேண்டியுள்ளது. மனிதன் உலகில் எதனையும் புதிதாகப் படைத்து விடுவது இல்லை. ஒன்றில் நாம் அறியாதிருந்தவைகள் தாமாக வெளிப்பட்டிருக்கும் அல்லது புறத் தூண்டல்களால் வெளிப்படுத்தப்பட்டிருக்கும். அன்றேல் ஒன்றில் இருந்து இன்னொன்று உருவாகி அல்லது உருவாக்கப்பட்டு இருக்கும். உருவமாற்றம், அல்லது கலப்பு நடந்திருக்கும். ஆயினும் அங்கு எதுவும் முற்றாக அழிந்து விடுவதில்லை. அதனாலேயே மனிதன் அழிந்ததாக நமக்குத் தெரிந்தாலும் அவனது எச்சங்கள் அதனையே வெளிப்படுத்த வல்லன என்ற விஞ்ஞான உண்மைகள் விளம்பி நிற்கும். விதிவிலக்குகளும் உண்டே. இந்த அழிவுகளும் ஆக்கங்களும் பல்வேறு வழிகளில் கையாளப்படுகின்றன.

இருள் இருக்கும் இடத்தில் வெளிச்சமோ வெளிச்சம் இருக்கும் இடத்தில் இருளோ இருப்பதில்லை. இருள், வெளிச்சம் அழிந்துவிட்டனவா? அப்படி என்றால் அழிந்த ஒன்று மீண்டிட முடியாதது. மீண்டும் மீண்டும் தோன்றுவதன் மர்மம் என்ன? எதுவும் அழிவதில்லை என்பதெல்லாம் பொய்யா? அழிவதென்பது நமக்கு தெரியாத நிலையை அடைந்து விடுவதே. மறைதல் தோற்றல் எனப்படலாம். மிகப் பெரியதாகவோ, மிகச் சிறியதாகவோ ஆவதன் மூலம் நமது பார்வைக்குத் தோற்றாமல் மறைந்து இருக்கலாம். அது பின்னர் பழைய நிலைக்கு மீளும் போது இருப்பதாகத் தெரிகிறது. பார்வைக்கு அப்பால் சென்று விடலாம். அதனாலேயே இறைவன் தன் அருள் மறையில் இரவை நாம் பகலால் போர்த்துகிறோம் என்கிறான். ஆக இங்கு அழித்தல் இடம் பெறவில்லை. எப்படி நம்மால் புதிதாக இல்லாத ஒன்றைப் படைத்திட முடியாதோ அப்படியே இருக்கும் ஒன்றையும் அழித்துவிட முடியாது. நமது படைப்புக்கள் அனைத்தும் அடிப்படையில் ஏதோ ஒன்றை ஆதாரமாகக் கொண்டிருக்கும். இறைவன் இல்லாமையில் இருந்து அனைத்தையும் படைத்திருப்பதால் அவனுக்கு அவற்றை இல்லாமல் ஆக்கவும் முடியும். நம்மால் முடிந்ததெல்லாம் உருவை மாற்றலே அல்லது நிலையை மாற்றலே. உயிரினங்களின் வாழ்வாதாரமாகவும், உலகின் சமநிலை பேணப்படவும் உணவு வட்டத்தில் அழித்தல் நடை பெறுகின்றது. அதுவும் வேறோர் உருவைக் கொண்டேயுள்ளது.

மேற்கண்டவற்றில் மிகச் சிறந்த நன்மையைக் கொண்டு தீமையைக் களைவீராக என்ற வல்ல இறைவனின் அறை கூவல் வெளிப்படுகிறது. தீமைகள் எல்லாம் ஏதாவது ஒன்றில் இருந்து உண்டாவதால் தீமைகளைக் களையலாமே தவிர அழிக்க முடியாது. தீமையை அழிப்ப தாயின் அது உண்டாவதற்கான காரணத்தை அழிக்க வேண்டும். இறைவழி அதுவே. றிபா வால் தீமை வருவதால், தானே அதனை அழித்து, தர்மத்தை வளர்ப்பேன் என்கிறான். றிபா என்பது ஓர் பண்பு என்பதால் மனிதனால் அதிலிருந்து விலகிடவே முடியும். ஆதலின் அழிப்பு வேலையை அல்லாஹ்வே செய்கிறான். மது, சூது போன்றவற்றில் சில நன்மைகள் இருந்தாலும் அதனால் பெறப்படும் பாவம் அதிகம் எனக் கூறி அதனைத் தடை செய்து உள்ளான். அதனை அவன் அழிக்கவும் இல்லை. நம்மையும் அழிக்குமாறு கூறாது, தவிர்க்கு மாறே கூறி உள்ளான். அதற்குக் காரணம் தேவையான அளவக்கு மது உற்பத்தி நடை பெற வேண்டும் என்பதே. சூது விளையாடாவிட்டால், தானே அது அழிந்து விடும். தானாக அழியக் கூடியதை அழிக்க முனைவது வீண் வேலை. அல்லாஹ் வீணாக எதையும் செய்வதில்லை என்ற பண்பை இது உணர்த்துகிறது. அசுத்தமான உணவால் ஆபத்து என்பதனால் பெயர் குறிப்பிட்டு சில உணவை உண்ண வேண்டாம் என்கின்றான்.

நீர் இருக்குமிடத்தில் காற்று இருப்பதில்லை என்பது சாதாரணமாக உலவும் எண்ணம். அப்படியெனின் நீருள் சீவராசிகள் எப்படி வாழ்கின்றன! காற்றின்றி எந்த உயிரினமும் வாழ முடியாதே! ஆக இங்கு நீர் காற்றைக் கரைத்து தன்னுள் வைத்து உயிர்களைக் காப்பாற்றும் வேலையைச் செய்கின்றது. மனிதன் நீரினுள் மூழ்கினால் இறந்து விடுவான். அவனது உடலமைப்பு நிலத்தில் வாழ்வதற்காகப் படைக்கப்பட்டிருப்பதே. நீரில் காற்று மறைந்திருப்பது போலவே, காற்றில் நீரும் கலந்துள்ளது. நீர் நிலைகளில் இருந்து நீரைக் காவி மேகமாக மாற்றி, அதனை ஓட்டிச் சென்று, கருவுற வைத்து மீண்டும் நீராக்கி, நீரைப் பிரசவித்து நம்மை வாழ வைக்கிறது காற்று. நம்முடலுள் குருதிச் சுற்றோட்டம் முதல் அனைத்தும் அதன்பாற் பட்டதே. இங்கு எதுவும் அழிந்து விடவில்லை என்பதே உண்மை. நிலத்தில் இருந்து அழுக்காகி உயிரினங்களின் பாவனைக்கு உதவாத நிலையில் உள்ள நீர் உயர்த்தப்பட்டு சுத்தமான நீராக நமக்கு மீளளிக்கப்படுகிறது. ஆக இறைவன் தான் அன்று படைத்த அதே அளவில் இன்று வரை நீர் இருந்து கொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இருக்கும். ஆவியாக, ஐஸ் கட்டியாகி, நீராகிக் கொண்டே இருக்கும். அவன் அனைத்தையும் அழிக்கும் நாள் வரை தொடர் நிகழ்வே இவை.

மேற்கண்டவை இயற்கை செய்யும் புதுமைகள். மனிதரும் அதனைச் செய்யாமல் இல்லை. ஆயினும் அவை எல்லாம் மட்டுப்பட்ட அளவிலேயே நடை பெறும். மனிதன் ஒன்றில் இருந்து ஒன்றை உருமாற்றம் செய்து விடுகிறான் மிக இலகுவாக. ஆனால் உருமாற்றப்பட்டதனை மீட்டிட முடியாது. உயிரற்ற பொருட்களில் அவன் இச்சட்டத்தை மீறிவிடுவான். உதாரணமாக இரும்பில் இருந்து ஆயுதத்தை உருவாக்கும் மனிதன் அதனை பின்பு அதன் பழைய நிலையான இரும்புக்கே கொண்டு வந்து விடுவான். ஆனால் துருப்பிடித்து அழிந்த இரும்பை அவனால் மீட்டிட முடியாது தவிக்கிறான். மரத்தை வெட்டி பல்வேறு பாவனைக்குத் தேவையான பொருட்களை, விறகை உருவாக்கும் மனிதனால் அம்மரத்தை உண்டாக்க வேண்டாம். அதன் முன்னைய நிலையிலாவது கொணர்ந்திட முடியுமா? அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்;, 10:34- உங்களுடைய கூட்டாளிகளில் எவரேனும் படைப்பினத்தைப் படைத்து, பிறகு அதனை மீள வைக்கிறவர் உண்டா? என்று நீர் கேட்பீராக! அல்லாஹ் படைப்பைப் படைக்கிறான். பிறகு, அதனை மீளவும் வைக்கிறான். எனவே, நீங்கள் எங்கே திருப்பப்படுகிறீர்கள்? என்று நீர் கூறுவீராக!

உயிரினங்களைக் கொல்லும் மனிதன் அவற்றை மீட்டிட முடிவதில்லை. ஆக எவனுக்கு மீட்டும் பண்பு காணப்படுகிறதோ அவனுக்கே அழிக்கும் உரிமையும் உண்டு. அதனாலேயே இறைவன் ஆக்கவும், மீட்கவும் முடியும் என்பதால் அழிக்கவும் முடியும், அழிக்கவும் செய்வேன் என்ற அதிகாரத்தை தன் கையில் வைத்துக் கொண்டிருக்கிறான். காரணம் அவனால் மீண்டும் உயிர் கொடுக்கவும் முடியும். இதனை அவன் தன் நபியான ஈஸா அலை அவர்கள் மூலமும் இறை நேசர்கள் மூலமும் செய்து காட்டியுமுள்ளான். இதனாலேயே இறைவன் தன்னை நீதிமான் என்கிறான். அதனாலேயே நம்மை தக்க காரணங்களின்றி ஒரு உயிரையும் கொல்ல வேண்டாம் என்கின்றான். ஒரு மனிதனைத் தக்க காரணம் இன்றிக் கொல்வது மனித சமுதாயத்தையே கொன்றதற்கு சமன் என்கிறான். இது வெறும் வார்த்தையல்ல. ஆதிமனிதன் ஆதம் (அலை) அன்று கொல்லப்பட்டிருந்தால் இன்று மனித இனப் பரம்பல் இல்லை. உலகின் நபிமார், விஞ்ஞானிகள், அறிவாளர்கள் அனைவரும் யாரோ ஒரு மனிதனில் இருந்து தோன்றியவர்களே. அன்று அந்த மனிதர்கள் அழிக்கப்பட்டிருந்தால் நாம் நபிமாரையோ, அறிஞர் பெருமக்களையோ கண்டிருக்க, அவர்தம் வருகையால் பயன் பெற்றிருக்க மாட்டோம். இவை உய்த்துணரப்பட வேண்டியவை.

என்னடா இவன் வழமை போல் தலையங்கம் ஒன்றிருக்க எதனையோ பிதற்றிக் கொண்டு இருக்கிறான் என்ற கேள்வி உங்கள் உள்ளத்தில் உதித்தே இருக்கும். ஆம் அறியாதவற்றில் பொறுமை காப்பது முடியாததுதான். அதனையும் மீறிப் பொறுமையாக இருப்பவனே அறியும் வழியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவன். அறிபவன். இதனாலேயே இறைவனும் நம்மை பொறுமை காக்கும்படியும், பொறுமையாளர்களுடன் தான் இருப்பதாகக் கூறுவதும். இப்போது நீங்களும் அத்தகு பொறுமை மேற்கொண்டவர்கள் என்பதனால் தொடர்ந்து எதையோ அறியவுள்ளீர்கள். இதற்கு, முன்னர் கண்ட உண்மைகள், இலகுபடுத்தும், வழிவகுக்கும், அடைவைத் தரும்.

தலையங்கத்துள் நுழைந்தால், உலக வரலாற்றில் மனித வாழ்வு ஆக்கத்தை அழிவிலேயே தேடத் தொடங்கின. அது பிரச்சினைகள் அனைத்துக்கும் கால்கோளாயின. முதன் முதல் உலகில் ஆதமின் இரு பிள்ளைகளுள் நடைபெற்ற கொலை ஒருவரின் மேல் மற்றவர் கொண்ட காழ்ப்புணர்வே. அன்றிலிருந்து தொடர்ந்து கொண்டிருக்கும் அனைத்துப் போராட்டங்களும் அழிவையே தம் மூலதனமாகக் கொண்டு செயற்பட்டன. அதனால் அவை நீண்ட நாள் நிலைக்காமல் அதே அழிவுக்குள் தம்மைச் சங்கமாக்கிக் கொன்டன.

எகிப்திய கொடுங்கோல் மன்னன் பாரோ முதல் ரோம் பற்றி எரிந்தபோதும் பிடில் வாசித்துக் கொண்டிருந்த நீரோ மன்னன், அண்மைக்கால ஹிட்லர் உட்பட தற்கால சேகுவேரா, ரோஹன, பிரபா வரை அனைவரும் அழிவைத் தழுவிக் கொண்டவர்களே! இவர்கள் அழிவில் எழுச்சி காண விழைந்தவர்கள்! அவர்கள் கட்டி எழுப்பிய சாம்ராச்சியங்கள் கூட இருந்த இடந் தெரியாது அழிந்து விட்டன!

இன்னும் பைபிள், குர்ஆன், மகாபாரதம், இராமாயணம் அனைத்தும் பிறர் வீழ்ச்சியில் தமது எழுச்சியைக் காண விழைந்தவர்களின் சரிதைகளை விளாவாரியாகக் கூறிக் கொண்டிருக்கின்றன. கடவுள் அவதாரங்களாகக் கருதப்பட்டோர் வீழ்ச்சியில் இருந்து எழுச்சி அடைந்தாலும் இவை நிலையாக இல்லை என்பதே உண்மை. இவை அனைத்தும் நிரந்தரமாக இல்லாமல் அழிந்து ஒழிந்ததற்கான காரணம் இயற்கை அமைப்பே. மனிதன் தன் அளவை அறிந்திராததால் ஏற்படுத்தப்பட்ட உதாரணங்களே!

ஆனால், இதற்கு விதிவிலக்காக நடைபெற்ற அரவணைத்து ஆட்கொள்ளும் முறையால் கட்டி எழுப்பப்பட்ட சாம்ராஜ்யம் இற்றைவரை அழிந்து விடாது, வளர்ந்து வானளாவி இறை பெருமையை அறைகூவி அழைத்துக் கொண்டிருக்கிறது. ஆம், குருதி சிந்தாமல் நடந்து முடிந்த ஓர் மாபெரும் புரட்சி. எதிரிகளே நண்பர்களாக்கப்பட்ட இணையற்ற அரங்கேற்றம். அழிக்க முனைந்தவர்களை, அரவணைத்து, ஆட்கொண்டு ஆட்சியமைத்த அவ்வரும்பெரும் பெருமை, பாலைவனத்தில் பிறந்து, பிறக்கும் முன்னரே தந்தையை இழந்து, பிறந்து ஆறே ஆண்டுகளில் தன் அன்னையையும் இழந்து, யாரோ ஓர் பெண்ணின் பாலை அருந்தி வாழ்ந்து, அவரது ஏக தெய்வக் கொள்கையையே ஏற்காதவர்களால் வளர்க்கப்பட்டு, தனி மனிதனாக ஓர் மதத்தையே ஸ்தாபித்து, அதற்காக ஒரு நாட்டையும் ஏற்படுத்திக் கொடுத்துச் சென்ற அருமை நபிகள் கோமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களையே சாரும்.

அப்பெருந்தகை கொணர்ந்த வேதம், எந்த வேதங்களையும் குறைகூறிக் குற்றம் பிடித்துக் கொண்டு வரவில்லை. எந்த வேதத்தையும் அழித்துக் கொண்டு வரவில்லை. மாறாக அனைத்து வேதங்களும் அல்லாஹ்வால் வழங்கப்பட்டவை, அவற்றுக்கு சாட்சியம் கூறி உண்மைப்படுத்தவே அல்லாஹ் என்னை அனுப்பினான். நான் புதிதாக எதனையும் கொண்டு வரவில்லை முன்பு உங்கள் மூதாதையர்களான மோஸே, ஏப்ரஹாம், ஐசேக், ஜேக்கப், நோவா, தாவீது, சொலமோன், ஈஸா போன்றோருக்குக் இறைவனால் கொடுக்கப்பட்டவையே தவிர இல்லை என்றே கூறினார்கள்.

அன்று அப்படி அறிமுகப்படுத்தப்பட்ட அந்த மார்க்கம் இன்று தளிர்விட்டுக் கிளை பரப்பி ஆலவிருட்சமாகப் பரந்து, வளர்ந்து உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் அல்லாஹ்வைத் தவிர வேறு நாயனில்லை, முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என மொழி, இன, வர்க்க பேதமின்றி ஒவ்வொருவரையும் வாயாலும், மனத்தாலும் லாயிலாக இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் என சொல்லிக் கொண்டிருக்க வைத்துள்ளது என்றால் அது ஒன்றின் வீழ்ச்சியில் எழுச்சி காண விழையாமல் ஸ்தாபிக்கப்பட்டது என்பதே! 

மேலும், அனைவரையும் அரவணைத்து, உள்வாங்கி, எதிரியை நண்பனாக்குவதன் மூலம் எதிர்ப்பை இல்லாதொழித்து நீதியை நிலைநிறுத்தி, உண்மையின் மேல் கட்டி எழுப்பியதுமே! இது ஆத்மீகம், இதனை உதாரணமாகக் கொள்ள முடியுமா? எனச் சிலர் நினைக்கலாம். அதற்கும் பதில் கூறியே சென்றுள்ளது அக்கொள்கை. அக்கொள்கையை வெளிப்படுத்திச் சென்ற அண்ணல் நபிகளார் முஹம்மது ஸல் அவர்கள்.

மேலும் நபிகளார் போர் செய்ய வில்லையா? என்ற கேள்வியும் எழவே செய்யும். ஆம் அவர்களே முன்னின்று பதினொரு யுத்தங்களை நடத்தி வெற்றி, தோல்விகளைத் தழுவிக் கொண்டுள்ளார்கள். அவை அனைத்தும் இறைவழியில், தற்காப்பை மையயமாக் கொண்டு நடத்தப் பட்டதே தவிர ஒருவரை வீழ்த்தி ஆட்சிபீடமேறிடச் செய்யப்பட்டவை அல்ல.

உலகில் அனைவரும் கட்டி எழுப்பிய சாம்ராஜ்யங்கள் இன்று இல்லை. ஆனால் ஓரே ஒரு சாம்ராஜ்யம் இற்றைவரை தலை நிமிர்ந்து அகில உலகுக்கும் உதாரணமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது என்றால் அது, சுந்தர ரூபத்தோடு இலங்கிக் கொண்டு இருக்கும் அன்றைய அந்தகார அரேபியாவே. இன்று வரை எவராலும் ஆளப்படாமல், நபிகளார் அஹிம்சை வழியில் தொடக்கி வைத்த ஆட்சி அதிகாரமே. இங்கு மனிதர்கள் தோற்கடிக்கப்படவில்லை. மனிதர்கள் வீழ்த்தப்படவில்லை. மாறாக மனிதர்களின் தப்பான பல தெய்வ வணக்க வழிபாடுகள் அழித் தொழிக்கப்பட்டன, ஏகதெய்வக் கொள்கையை எடுத்தியம்பியதன் மூலம். ஆம் எதிரிகளின் கொள்கை வீழ்ந்தது. பொய் அழிந்தது. உண்மை ஆட்சியில் அமர்ந்தது. இறைவனே அதனை பகிரங்கப்படுத்துகிறான். அல்லாஹ் அவர்களை அகில உலகிற்கும் அழகிய முன்மாதிரி எனக் கூறியிருப்பதை நிரூபித்துச் சென்றுள்ளார்கள் அண்ணல் நபியவர்கள். அண்ணலாரைப் பற்றி வல்ல அல்லாஹ் கூறும் நட்சாட்சிப் பத்திரம், நீர் உயர் குணத்தின் உன்னத நிலையில் இருக்கிறீர் என்பதே. இவ்வழியே நபிகளாரை இஸ்லாமியரல்லாத ஒரு சில அறிஞர் பெருமக்கள் கூறும் வாசகங்களைக் கொண்டு விளங்கிக் கொள்ளலாம்.

George Bernard Shaw is reported to have said:”I have always held the religion of Muhammad in high estimation because of its wonderful vitality. It is the only religion which appears to me to possess that assimilating capacity to the changing phase of existence which can make itself appeal to every age. I have studied him – the wonderful man and in my opinion for from being an anti-Christ, he must be called the Saviour of Humanity. I believe that if a man like him were to assume the dictatorship of the modern world, he would succeed in solving its problems in a way that would bring it the much needed peace and happiness: I have prophesied about the faith of Muhammad that it would be acceptable to the Europe of tomorrow as it is beginning to be acceptable to the Europe of today.” –G.B. Shaw, THE GENUINE ISLAM, Vol. 1, No. 81936.

‘I believe in One God and Mohammed the Apostle of God,’ is the simple and invariable profession of Islam. The intellectual image of the Deity has never been degraded by any visible idol; the honours of the prophet have never transgressed the measure of human virtue, and his living precepts have restrained the gratitude of his disciples within the bounds of reason and religion.” –Edward Gibbon and Simon Ocklay, HISTORY OF THE SARACEN EMPIRE, London, 1870, p. 54.

“He was Caesar and Pope in one; but he was Pope without Pope’s pretensions, Caesar without the legions of Caesar: without a standing army, without a bodyguard, without a palace, without a fixed revenue; if ever any man had the right to say that he ruled by the right divine, it was Mohammed, for he had all the power without its instruments and without its supports.” –Bosworth Smith, MOHAMMAD AND MOHAMMADANISM, London, 1874, p. 92.

“It is impossible for anyone who studies the life and character of the great Prophet of Arabia, who knows how he taught and how he lived, to feel anything but reverence for that mighty Prophet, one of the great messengers of the Supreme. And although in what I put to you I shall say many things which may be familiar to many, yet I myself feel whenever I re-read them, a new way of admiration, a new sense of reverence for that mighty Arabian teacher.” –Annie Besant, THE LIFE AND TEACHINGS OF MUHAMMAD, Madras, 1932, p. 4.

“Medieval Islam was technologically advanced and open to innovation. It achieved far higher literacy rates than in contemporary Europe ;it assimilated the legacy of classical Greek civilization to such a degree that many classical books are now known to us only through Arabic copies. It invented windmills, trigonometry, lateen sails and made major advances in metallurgy, mechanical and chemical engineering and irrigation methods. In the middle-ages the flow of technology was overwhelmingly from Islam to Europe rather from Europe to Islam. Only after the 1500’s did the net direction of flow begin to reverse.” (pg 253) Jared Diamond a world renowned UCLA sociologist, and physiologist won the Pulitzer Prize for his book: “Guns, Germs, and Steel.” :

ஆக இவற்றில் இருந்து நாம் கற்றுக் கொள்வதெல்லாம், நமது முன் வைக்கும் கருத்து பொருள் பொதிந்ததாக, உயர் பண்பைக் கொண்டதாக, அழிவைத் தவிர்த்து ஆக்கத்தையே முதலீடாக்கிக் கொண்டதாக, சுயநலமற்றதாக, மறைமுக நோக்கங்கள் கொண்டதல்லாததாக, அனைவரையும் அரவணைத்துக் கொள்வதாக, இறைவனை முன்னிறுத்துவதாக இருக்க வேண்டும் என்பதே. அப்படி வளர்க்கப்படுபவை உலக அழிவு வரை வளர்ந்து கொண்டே இருக்குமே தவிர அழிவை அரவணைக்கா. உலகமும் பயன் பெறும். மக்கள் மனதில் உவகை நடனமிடும். இறைவனின் கிருபையும், உதவியும் நாமறியா வழிகளில் இருந்து வந்து கெண்டே இருக்கும். ஆதலின் அவர் காட்டித் தந்த குர்ஆனிய வழியில் பிரச்சினைகளை அணுகி, தீர்ப்பளித்து, வென்று லௌகீகத்திலும் ஆன்மீகத்திலும் உயர்வடைவோம். இம்மை, மறுமைக் கான அனைத்து சிறப்பு அம்சங்களும் ஒவ்வொரு செயலிலும் ஒருங்கே அமையப் பெற்றிருக்கும் உயர் பண்பு கொண்டது. அது மற்றோரையும் உயர்த்தி தம்மையும் உயர்த்திக் கொள்வது. மொத்தத்தில் உலக உய்வுக்கான வழிகளை உருவாக்குவது.

- நிஹா –

+ ( ஒன்றினுள் ஒன்று மறைந்துள்ளது என்பதில் பொதிந்துள்ள உண்மை ஆத்மீகத்திலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்திக் கொண்டிருப்பதைச் சற்று சிந்தித்தால் புரியும்!  ஆலம் விதையினுள் பல ஆலமரங்களும், ஒரு ஆல மரத்தில் பல ஆலம் விதைகளும் மறைந்துள்ள உண்மைகளும்,  கல்லினுள் சிலைகளும், சிலைகளுள் கல்லும் போல தெரியவரும் போது, வேறும் பல நன்மைகளும் கிட்டலாம்! முயற்சி கணக்கெடுக்கப்படவே செய்யும்! )