குர் ஆன் வழியில் …

அல்லாஹ் கூறும் தொழுகையாளிகளின் பண்புகள்.

புனித குர்ஆனில் நரகம் அழைக்கும் மனிதர்களை சுருக்கமாக புறமுதுகு காட்டிப் புறக்கணித்தவன், சேமித்துப் பதுக்கிக் கொண்டவன், தீங்கொன்று அவனைத் தொட்டால் பதறுகிறவனாக, நன்மை தொட்டால் தடுத்துக் கொள்கிறவனாக எனக் கூறிவிட்டு, அப்படி அழைக்கப்படாதோர் வரிசையில் தொழுகையாளிகளைக் குறிப்பிட்டுள்ளான். 70:21 தொழுகையாளி களைத் தவிர எனக் கூறுவதைக் கவனிக்க. மேலும், அதே வரிசையில் அத்தொழுகையாளிகள் எத்தகையவர்கள் என அவர்களின் பண்புகளை விளாவாரியாகத் தெரிவித்துள்ளான்.

முதலாவதாக, வசனம் 70:22 தொழுகையாளிகள் தொழுகையில் நிலைத்திருப்போராக இருக்க வேண்டும் என்கின்றது. தொழுகையில் நிலைத்திருப்பது என்பது, பராக்குகளை, வீண் எண்ணங்களைவிட்டு, பிறர் மெச்சுவதற்காக தொழுவதை விட்டு, இறைவனை நினைவுகூர்தலைச் சிறப்பாகச் செய்வதாக இருத்தல். தொழுகையில் நிலைத்திருத்தல் என்ற வார்த்தையே மிக அழகாக வேறொன்றிலும் மனம் செல்லாமல், எதனையும் வேண்டாமல், நோக்கை மட்டும் கொண்டி ருப்பதைக் குறிக்கின்றது. நிலைத்திருப்பது என்பது அல்லாஹ்வின் நினைவிலேயே இருப்பது ஆகும். காரணம் தொழுகை அல்லாஹ்வை நினைவு கூர்வதற்காகத் தரப்பட்டதாக அவனது குர்ஆன் 20:14 கூறிக் கொண்டிருக்கிறது. இன்னும் பல வசனங்களும் தொழுகை அல்லாஹ்வை நினைவுகூரல் என்பதை நினைவுபடுத்திக் கொண்டுள்ளன.

அடுத்து, அவர்களின் பொருள்களில் குறிப்பிட்ட பங்கு உண்டு. அதாவது அவர்களது பொருட்கள் முழுமையாக அவர்களுக்குச் சொந்தமில்லை. அதன் குறிப்பிட்ட அளவு பங்குக்கு சொந்தக்காரர் உண்டு என்பதைக் குறிக்கின்றது. அதற்கடுத்தாக, அவ்வாறானோர் யார் என தெரிவிக்கின்றான். யாசிப்போருக்கும், கேட்காதோருக்கும் எனக் கூறியுள் ளான். யாசிப்போர் என்போர் இரந்து வாழ்வோர். மற்றவர் யாரிடமும் இரக்கமாட்டாதவர்கள். எவ்வகைக் கஷ்டத்தையும் பொறுத்துக் கொண்டு பொறுமையயைக் கடைப்பிடித்து அல்லாஹ்வின் உதவியை நாடியவர்களாக இருப்போர். இவ்வாறான மக்களை அடையாளம் கண்டு அவர்களது பங்கை அவர்களுக்குக் கொடுத்துவிடவேண்டும். அல்லாஹ் எதனையும் நேரடியாகச் செய்யாது இன்னொருவர் மூலமே செய்கின்றான். அதனால் தர்மத்தையும், ஸக்காத் என்னும் ஏழை வரியையும் நமக்குக் கட்டாயமாக்கி உள்ளான்.

அடுத்த பண்பாக, தீர்ப்பு நாளை மெய்ப்பிக்கின்றார்கள் எனக் கூறியுள்ளமை கவனிக்கற்பாலது. தீர்ப்பு நாளில் அல்லாஹ் வுக்கு பதில் சொல்ல வேண்டி வரும் என்பதால், அவன் தடுத்துள்ளவற்றை விலக்கியும், அவன் ஏவியவற்றை செய்தும் வருதல். இப்பண்பு வரும் போது உலகில் பிரச்சினைகள் அனைத்தும் இருந்த இடம் தெரியாது அகன்று விடும். தொடர்ந்து இவர்கள் ரப்புவின் தண்டனைக்கு அஞ்சுவார்கள் என்பது பிழை செய்தோர் மறுமையில் அல்லாஹ்வால் தண்டிக்கப் படுவர் என்பதை ஆணித்தரமாக நம்புவதால், அவனுடைய தண்டனைக்குப் பயந்து எவ்வித பிழைகளையும் செய்யார். காரணம் அவனுடைய தண்டனை அச்சமற்றிருக்கக் கூடியதல்ல என்பதை நன்றாகவே அறிந்து வைத்துள்ளமையே. அவன் தண்டிப்பதில் கடுமையானவன். நமது தோல்கள் கருகும் போதெல்லாம், அதனை மாற்றி, மாற்றி தண்டனையை நன்றாக அனுபவிக்கச் செய்வதாகக் கூறியிருப்பதை அறிந்திருப்பர்.

மறைவிடங்களைப் பாதுகாத்துக் கொள்வர் என்பதன் மூலம் அவர்களின் பாலியல் ஒழுக்கம் மிகத் தெளிவாகக் கூறப் பட்டுள்ளது. அனுமதித்த வகை தவிர்ந்த எவ்வழிகளிலும் தமது மறைவிடங்களை ஈடுபடுத்தார். அதனைத் தொடர்ந்து அவர்கள் யாரிடம் தமது பாலியல் தேவையைப் பூர்த்தி செய்யலாம் என்பதை, தங்களது மனைவியரிடமோ, அல்லது தங்கள் வலக் கரங்கள் உரிமையாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர, நிச்சயமாக அவர்கள் பழிப்பிற்குரியவர்கள் அல்லர் எனக் கூறியதில் அறிதற்கு நிறையவே உண்டு. அதனைத் தொடர்ந்து, இதன் பின்னரும் தேடினால், அவர்கள் தாம் வரம்பு மீறியவர்கள் எனக் கூறியிருப்பது, மேலும் பல விடயங்களை வலியுறுத்தும்.

அடுத்து, அமானிதங்களையும், தம் வாக்குறுதிகளையும் பேணிக் கொள்கிறவர்கள் எனக் கூறியிருப்பதை நோக்குமிடத்து, அமானிதங்களுக்கும், வாக்குறுதிகளுக்கும் அவன் கொடுத்துள்ள முக்கியத்துவம் வெளிப்படுகிறது. அமானிதம் ( நம்பி க்கைக்காக வைக்கப்படுவது ) காக்கப்படாது விடுபடல் ஏமாற்றையும், வஞ்சனையையும், துரோகத்தையும், பிறரது பொருளை அனுமதி இன்றி அனுபவித்த குற்றத்தையும் வருவித்து விடுகின்றது.

வாக்குறுதிகளும், பிறரை நம்ப வைத்துக் கெடுப்பது, ஏமாற்றுவது போன்ற பாரிய குற்றங்களுக்கு ஆளாக்கிவிடும். அதனால் இவை இரண்டிலும் இருந்து தவிர்ந்திருத்தல் அவசியம். அடுத்து, சாட்சியங்களை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பவர்கள். இது மிக மிக முக்கியமான ஒன்று. நாம் யாருக்குச் சாட்சியாக இருக்கின்றோமோ, அச்சமயத்தில் உறுதியாக இருப்பதுடன் தேவைப்படும் போது நிறைவேற்றத் தயங்காத தன்மை கொண்டவராக இருத்தலைக் குறிக்கின்றது. மேலும், அல்லாஹ் ஒருவன் என நாம் கூறும் சாட்சியத்தில் உறுதியாக இருப்பதையும் குறிக்கும்.

இறுதியாக, மீண்டும் தொழுகையில் பேணுதலாக இருப்பதைக் குறிப்பிடுகின்றான். இதுவும் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதே. பேணுதல் அற்ற தொழுகை வீண் விரயத்துள் சேர்த்துவிடக் கூடியது என்பதால், தொழுகையில் பேணுதல் மிகக் கவனமாகச் செய்யப்பட வேண்டியது. அதனை மிக நுட்பமாகத் தெரிந்து அதன்படி நடந்து அல்லாஹ் கூறும் தொழுகையாளிகள் என்ற பதத்துக்கு உரியவர்களாக முயற்சிப்போமாக. இத்தகு பண்புகள் கொண்டோர் சுவனங்களில் கண்ணியப்படுத்தப்படுவார்கள் எனவும் உறுதிமொழி பகர்கின்றான்.

அல்ஹம்துலில்லாஹ்.

- நிஹா –