கட்டுரையுள் புகமுன் அறிதலுக்காகச் சில ஆயத்துக்கள் … ‘இன்னும், ஈமான் கொண்டு, நற்செயல்களை ஆற்றி, முஹம்மது (ஸல்) மீது இறக்கிவைக்கப்பட்டதை, அது தங்கள் ரப்பிடமிருந்து வந்துள்ள உண்மையாய் இருக்கும் நிலையில் ஈமான் கொண்டார்களோ, அவர்களின் தீமைகளை, அவர்களை விட்டும் போக்கி, அவர்களுடைய நிலைமையையும் அவன் சீராக்கிவிட்டான்.’ – 49:2.

‘அவர்கள் இந்த குர்ஆனை ஆராய்ந்து பார்த்திட வேண்டாமா? அல்லது, இதயங்கள் மீது பூட்டு இருக்கின்றனவா?’ – 47:24.

‘இ(ந்த குர்ஆனான)து மனிதர்களுக்கு எத்திவைத்தாகும். இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப்படுவதற்காகவும், மேலும் அவன் ஓரே நாயன்தான் என்று அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும், இன்னும் அறிவுடையோர் நல்லறிவு பெற்றிடவுமாகும்’ – 14:52.

‘மேலும், இந்த குர்ஆன் அல்லாஹ் அல்லாதவர்களால் கற்பனை செய்யப்பட்டதல்ல. அன்றியும், முன் உள்ளதை உண்மைப்படுத்துவதாகவும், வேதத்தை விவரிப்பதாகவும் இருக்கிறது. அகிலத்தாரின் ரப்பிடமிருந்துள்ள இதில் எந்த சந்தேகமும் இல்லை.’ – 10:37

‘நிச்சயமாக இந்தக் குர்ஆன், எது மிக மிக நேர்மையானதோ அதன்பால் நேர்வழி காட்டுகின்றது. அன்றியும், நற்செயல் செய்துவரும் முஃமின்களுக்கு, நிச்சயமாக மிகப்பெரும் கூலி உண்டென்று நற்செய்தி கூறுகிறது’ – 17:9.

‘நிச்சயமாக இந்தக் குர்ஆனில், மனிதர்களுக்கு எல்லா உதாரணங்களையும் திட்டமாக நாம் விவரித்து உள்ளோம்…’ 17:89.

‘உம்முடைய ரப்பிடமிருந்து, உம்மீது இறக்கி வைக்கப்பட்டது சத்தியமேதான் என்று அறிகின்ற ஒருவர், குருடராக இருக்கும் ஒருவரைப் போல் ஆவாரா? நிச்சயமாக உபதேசம் பெறுகின்றவர்கள் எல்லாம் அறிவுடையோர்தாம்’ – 13:19.

‘அலிஃப், லாம், மீம். இவை வேதத்தின் வசனங்களாகும். மேலும், உம்மீது, உம் ரப்பிடமிருந்து இறக்கிவைக்கப்பட்டுள்ள இது உண்மையானதாகும். எனினும், மனிதர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.’ – 13:1.

‘இவ்வாறே நாம் அரபியில் சட்டதிட்டங்களைக் கொண்டதாக இதை இறக்கி வைத்துள்ளோம். எனவே உமக்கு ஞானம் வந்த பின்னரும் அவர்களுடைய மனோஇச்சையை நீர் பின்பற்றுவீராயின், அல்லாஹ்விடமிருந்து உதவியாளரோ, பாதுகாப்பாளரோ உமக்கு இல்லை.’ 13:37.

‘… இன்னும் ஒவ்வொரு பொருளுக்கும், விளக்கமாகவும், நேர்வழியாகவும், அருளாகவும், முஸ்லிம்களுக்கு நற்செய்தியாகவும் வேதத்தை நாம் இறக்கி வைத்தோம்.’ – 16:89.

‘நம்பிக்கை கொண்டோரை உறுதிப்படுத்துவதற்காகவும், முஸ்லிம்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நற் செய்தியாகவும் உண்மையைக் கொண்டு இதனை உமது ரப்பிடமிருந்து ரூஹுல் குத்தூஸ் இறக்கிவைத்தார்’ என்று நீர் கூறுவீராக.’ 16:102.
‘நீர் உம்முடைய முகத்தை தூய மார்க்கத்தின்பால் முற்றிலும் திருப்பியவராக நிலை நிறுத்துவீராக. அல்லாஹ் மனிதரை எதில் படைத்தானோ, அத்தகைய இயற்கை மார்க்கத்தை, அல்லாஹ்வின் படைப்பில் எத்தகைய மாற்றமுமில்லை. அதுவே நேரான மார்க்கமாகும். மனிதரில் பெரும்பாலோர் அறியமாட்டார்கள்’. – 30:30.

‘ஒரு நற்செய்தியாகவும், இதைக்கொண்டு உங்களுடைய உள்ளங்கள் அமைதி பெறுவதற்காகவுமே அன்றி அல்லாஹ் இதை ஆக்கவில்லை…’. 8:10.

ஏன் இந்த தலைப்பு?

நான் மேற்கண்ட தலைப்பைத் தேர்ந்ததற்கும,; அதுபற்றிச் சிந்தித்ததற்கும், அதனை எழுத்துருவில் கொணர்ந்ததற்கும் நிறையவே காரணங்களிருக்கின்றன. என்னை நீண்ட காலமாக அரித்துக் கொண்டிருந்தவை பல, என்றாலும் அவற்றுள் சில மிகமுக்கியமானவை. அவை நம் அத்திபாரத்தையே ஆட்டம்காண வைப்பன. முஸ்லிம்கள் என்ற பெயரைத் தக்கவைத்துக்கொள்ள அவை பற்றிய ஆழ்ந்த நோக்கு, சரியான மதிப்பீடு, பக்கச் சார்பற்ற பகுப்பாய்வு தேவை என்பது எனது தாழ்மையான கருத்து. யாரிடம் குர்ஆன் இல்லையோ அவர் முஸ்லிம் என்ற வரைவுள் அடங்குவாரா? அதனை அறிவதற்காக குர்ஆனை உரைகல்லாகக் கொண்ட கணக்கீடே சரியான தகவலைத் தரவல்லதும், அதிகாரபூர்வமானதும் என்பது உணர்த்தப்படுகிறது. அந்த அடிப்படையில் நான் வல்ல அல்லாஹ் சுபுஹானஹுவ தஆலாவின் உதவியுடன் முயல்கிறேன். சரியான தகவல்களை மட்டுமே இங்கு சமர்ப்பிக்க என்னாலான அனைத்தையும் செய்வதுடன் அதற்கான இறையருளையும் அவாவுறுகிறேன்.

முஸ்லிம்கள் குர்ஆனைப் புறக்கணித்துவிட்டு எங்கே சென்றுகொண்டு இருக்கின்றனர்? என்ற புதிருக்குத் தீர்வுகாண இறையுதவியையே முதற்கண் நான் நாடுகிறேன். அதன் பின்னணியில், இந்தச் சந்தர்ப்பத்திலேயே எனது கருத்தைக் கவர்ந்து, பெரும் கேள்வியாக உருவெடுத்து, இக்கட்டுரையை எழுதுவதற்கு உந்துகோளாகிய கீழ் காணப்படும் குர்ஆனின் கூற்றை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். இது உங்கள் கவனத்தை இக்கட்டுரையின்பால் ஈர்ப்பதற்காகவன்று. மாறாக, குர்ஆனிய உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற உளமார்ந்த உந்துதலால், இறை வெளிப்பாட்டை, தீர்க்கதரிசனத்தை வெளிப்படுத்துதல் இறை விசுவாசியான இஸ்லாமியன் ஒவ்வொருவனினதும் கடமை என்பதனால். குர்ஆனிய உண்மைகளை மறைப்பது கொடிய குற்றம் என்பதனால். 2:159- ‘நாம் இறக்கியருளிய தெளிவான வசனங் களையும், நேர்வழியையும் மனிதர்களுக்காக வேதத்தில் விளக்கிய பின்னரும், நிச்சயமாக எவர்கள் அவற்றை மறைப்பார்களோ அவர்களை, அல்லாஹ் சபிக்கிறான். இன்னும் சபிப்பவர்களும் சபிக்கிறார்கள்.’ மேலும், 2:174இல் – ‘அல்லாஹ் வேதத்தின் மூலம் இறக்கி அருளியவற்றை நிச்சயமாக எவர்கள் மறைத்து, அதற்குப் பகரமாக அற்ப தொகையைப் பெறுகின்றனரோ, அத்தகையோர் தங்கள் வயிறுகளில் நெருப்பையல்லாது உட்கொள்ளவில்லை. அல்லாஹ் அவர்களுடன் மறுமை நாளில் பேசமாட்டான். மேலும் அவர்களை தூய்மைப்படுத்தவும் மாட்டான். மேலும் அவர்களுக்குத் துன்பந்தரும் வேதனையுமுண்டு’.

இதோ அந்த இறை வசனம் ‘ எனது ரப்பே! நிச்சயமாக என்னுடைய சமுகத்தினர் இந்த குர்ஆனைப் புறக்கணித்து விட்டனர்’ என்று தூதர் கூறுவார். –அல் புர்கான் 25: வசனம் 30.

மேற்கண்ட வசனம் இறைதூதர் கூற்றல்ல, நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் இறுதி நாளில், இறைவனிடம் கூறவிருப்பதாக வல்ல அல்லாஹ் கூறும் நிறைவான மறை கூற்று! எதிர்வு கூறல்!! எச்சரிக்கை!!! இது இன்று நேற்று கூறப்பட்ட ஒன்றல்ல, அன்றே 1400 ஆண்டுகளுக்கு முன்னர், நாயகத் திருமேனிக்குக் கூறப்பட்ட எச்சரிக்கை. இந்த வசனம் அறிவிக்கப்பட்டதைக் கேட்டு, அன்று அருமை நாயகம் அவர்கள் எந்தளவு வேதனை கொண்டிருந்திருப்பார்கள் என்பதைச் சிறிது நமது மனக்கண் முன் நிறுத்தினால் குர்ஆன் பக்கம் நமது கவனம் திரும்பும் என அவாவுறுகிறேன். அதனால்தான் போலும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் தனது மரண வேளையிலும் தனது உம்மத்தான நம்மைப் பற்றியே முனுமுனுத்துக் கொண்டிருந்ததாக ஹதீஸ் பதிவுகள் கூறுகின்றன.

நபியவர்களைத் தம் உயிரிலும் மேலாக இறைநம்பிக்கையாளர்கள் நேசிப்பார்கள் என இறைவன் கூறியுள்ளமையை நாம் ஏற்போமானால். நாம் குர்ஆனைப் புறக்கணியாது அவர்கள் வேதனையைக் கலைவதற்கான நடவடிக்கையாக அதனைச் சரிவரப் புரிந்து அதன்படி நடக்க முயற்சிப்போம். எனது கூலி என்னைப் படைத்தவனிடம் உள்ளது. இதற்கு முந்திய வசனம் நம்மனைவரதும் கவன ஈர்ப்பைப் பெறாதிருப்பது இறை கூற்றின் நிறை தன்மையை வெளிப்படுத்த வல்லது. அதனால்தானோ என்னவோ குர்ஆனின் வாரிசுதாரர்களும் ,நபிகளாரின் உம்மத்துமாகிய நாம் இதுவரை அது பற்றிச் சிறிதேனும் கவலையற்று இருக்கிறோம். இறைவன் கூறியது போல், நபிகளாரை நம்முயிரிலும் மேலாக நேசிப்பது உண்மையாயின், நிச்சயமாக அவர் போதனையான அல்குர்ஆனை நாம் புறக்கணிக்க மாட்டோம்.

மேலும் மேற்கண்ட ஆயத்தோடு ஒட்டிய எனது கருத்தையும் முன்வைப்பது இறை கருத்துக்கு எதிரான செயலல்ல, நம்மவர்களின் நலன் கருதிய செயற்பாடே. இறைவன் மேற்கண்ட வசனத்தைக் கூறியிருப்பது அல்லாஹ்வின் கூற்றல்ல என்பதனை முன்னர் கூறியுள்ளேன். இது ஓர் எதிர்வு கூறல். எதிர்வு கூறல் ஓர் எச்சரித்தல் அல்லது அறிவித்தல். எச்சரிக்கையாயின் அதனை உணர்வதும், அத்தவறில் இருந்து விலகிக் கொள்ள முயற்சிப்பதும் ஏற்கப்பட்டதே. முயற்சிகள் ஏற்கப்படும் என்ற அவன் வாக்கை மீறுவபனல்லன் வல்ல நாயன். ஆதலால், கருணையே உருவான அல்லாஹ் சுபுஹானஹுவ தஆலா நம்மை ஏதாவது ஒரு கட்டத்தில் நாமே நம்மில் ஓர் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காகத் தரப்பட்ட எச்சரிக்கையாக நான் கருதுகிறேன். இது அவன் வழியை நாடுவதற்கான சிந்தனையே அன்றி அவனது எதிர்வு கூறலுக்கெதிரான முனைப்பல்ல. ஆகவே, எச்சரிக்கையைச் செவிமடுப்பதும், அந்த எச்சரிக்கையில் கூறப்பட்ட ஆபத்தில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்வதற்கான சிறந்த அறிவுபூர்வமான ஏற்புடை முன்முயற்சிகளும் இன்றியமையாதன. வரவேற்பைப் பெறுவன. குர்ஆனை அறிவதும் அதன்படி செயற்படுவதும் மறுமையின் வேதனையிலிருந்து காத்துக்கொள்ள உதவும். அல் குர்ஆன் 13:11 ‘…எந்த ஒரு சமுதாயத்தவரும் தங்கள் நிலையைத் தாங்களே மாற்றிக் கொள்ளாதவரை நிச்சயமாக, அல்லாஹ் அவர்களை மாற்றுவதாயில்லை’. நமது கடமையை, பொறுப்பை உணர்த்த இது போதுமானது.

விடயத்தைத் தொடங்கு முன்னர் ஓர் முக்கிய உண்மையை வாசகரின் தெளிவிற்காகத் தெரிவித்துக் கொள்கிறேன். முஸ்லிம்கள் புனித குர்ஆனைப் புறக்கணித்து விட்டு எங்கும் சென்றுவிட வில்லை. எல்லோரும் ஐவேளைத் தொழுகை உட்பட இதர வேளைகளிலும், பல்வேறு சந்தர்ப்பங்களிலும் குர்ஆனை ஓதிக்கொண்டுதானே இருக்கின்றனர் என்ற கேள்வி அநேகமாக இதனை வாசிப்பவர் மனதில் எழாதிருந்தால் மட்டுமே ஆச்சரியம். அந்த வகையில் முஸ்லிம்களில் அநேகமானோர் ஓர்ஆனை ஓதிக்கொண்டிருக்கின்றனர் என்பதும் சிலர் அதனை மனப்பாடம் செய்து வருவதுடன், பாராயாணம் கூடச் செய்து கொண்டிருப்பதும் உண்மையிலும் உண்மை. இதனை மறுக்கும் சக்தியும் எவருக்குமில்லை. அப்படியானால் ஏன் இவ்வாறான கருத்தை இறுதிநாளில் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறவிருப் பதாகக் வல்ல அல்லாஹ் கட்டியம் கூறியுள்ளான் என்பதே நம்மை நிந்தனைக்குள்ளாக்கிச் சிந்திக்க வைத்துள்ள மிகப்பெரும் கேள்வி.

குர்ஆன் அருளப்பட்டதன் நோக்கம்…

மேற்போந்த இறைகூற்றை, நிராகரிக்க முடியா நிலையில், சீர்தூக்கிப் பார்ப்போமாயின் மறைக்க முடியா ஓர் உண்மையைக் கண்டுகொள்வோம். ஆம் அருள் மறை குர்ஆன் முழுக்க முழுக்க தொழுகையில் ஓதுவதற்காகவோ, ஓய்வு நேரங்களில் பாராயணம் பண்ணி மகிழ்வதற்காகவோ, மனப்பாடம் செய்து மகுடம் சூட்டிக்கொள்வதற்காகவோ, வேறு வைபவங்களில் ஓதி பெருமை சேர்ப்பதற்காகவோ அருளப்பட்டதல்ல என்பதே அந்த உண்மையாகும்.

குர்ஆன் உய்த்துணர்ந்து நல்லறிவு பெறுவதற்காக அருளப்பட்டதே என்பதே உண்மை. இது குர்ஆனில் பல இடங்களில் ( 17:41, 54: 17,22,32,40 ) பதிவாகியுள்ள இறைகூற்று. இதற்கு மேல் செய்யப்படும் மற்றவை எல்லாம் மேலதிகமானவை. நோக்கை நிறைவு செய்யாதவை. மேலும், திட்டமாக நாம், குர்ஆனை நல்லுணர்ச்சி பெறுவதற்காகவே எளிதாக்கி வைத்துள்ளோம். ஆகவே படிப்பினை பெறுவோர் உண்டா?) அப்போதுதான் அல்லாஹ் நம்மிலும் நாம் அவனிலும் திருப்தியடையலாம். அதுவே ஈருலக வெற்றியுமாகும். குர்ஆன் 9:100-…அவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள் … இது மகத்தான வெற்றியாகும். 50:37 – ‘நிச்சயமாக எவருக்கு இதயம் இருக்கின்றதோ அவருக்கு, அல்லது தாம் மன ஓர்மையுடன் செவி சாய்க்கிறாரோ அவருக்கு இதில் (குர்ஆனில்) படிப்பினை உள்ளது.’ அதனால்தான் புனித குர்ஆன் மட்டும் இருபத்து மூன்று வருடங்களில் சிறிது சிறிதாக இறக்கப்பட்டு நபிகளாரால் நடைமுறைப்படுத்திக் காட்டப்பட்டதாக இறைவனே 17:106, 25:32ஆம் வசனங்களில் சான்று பகர்கின்றான்.

இன்னோர் வகையில் நாம் இந்தக் கருத்தை ஆய்வுக்குட்படுத்தலாம். அது சிறந்த உரிய விளக்கத்தைப் பெற உதவியாக இருக்கும். நாம் தலை சிறந்த விஞ்ஞான உண்மைகளைக் கொண்ட வெளியீடுகளையோ, மிக மதிக்கத்தக்க மருத்துவ உண்மைகளைக் கொண்ட அறிக்கைகளையோ, பல்வேறு சித்தாந்தக் கருவூலங்களையோ, அதிக விற்பனையாகிக் கொண்டுள்ள மெஜிக் புத்தகத்தையோ, விண்வெளி ஆராய்ச்சிகளைக் கொண்ட வியத்தகு விவரணச் சித்திரங்களையோ, விவிலியம் எனப்படும் வேதாகாமத்தையோ, தேரவாத புத்த கருத்தோவியத்தையோ, லியனாடோ டாவின்ஸியுடைய கலைப் படைப்புகளையோ கண்டுள்ளோம் என வைத்துக் கொள்வோம். இவற்றை வைத்துக் கொண்டு தான் ஒரு விஞ்ஞானி என்றோ, மருத்துவர் என்றோ, சித்தாந்தவாதி என்றோ, மெஜிக் மன்னன் என்றோ, விண்வெளி ஆராய்ச்சி யாளன் என்றோ, வேதாகாம விற்பன்னன் என்றோ அல்லது அதனைப் பின்பற்றுபவர் என்றோ அதில் நம்பிக்கை கொண்டவர் என்றோ, சித்திரக் கலைஞன் என்றோ நினைப்பதோ, நம்பிக்கை கொள்வதோ, கூறிக்கொள்வதோ இல்லை என்பதை நாமனைவரும் இரண்டாம் கருத்தின்றி ஏற்றுக் கொள்வோம்.. ஆக இவை, இவர்களில் ஏதாவது ஒன்றாக, ஒருவராக வரவேண்டுமாயின் அந்தத் துறையில் சிறந்த கற்கை நெறியைத் தேர்ந்து, தேடிக் கற்றறிந்து, மீண்டும் மீண்டும் தொடர் பயிற்சி பெற்றால் ஓரளவு வெற்றிப் படிகளை எட்டிப் பிடிக்க முடியும்.

அது போன்றே குர்ஆனை வெறுமனே ஓதுவதாலோ, கருத்தை ஓரளவு வாசித்து விட்டதனாலோ குர்ஆனைப் பின்பற்றிய வர்களாக மாட்டோம். நாம் குர்ஆனை ஓதி, உய்த்து, உணர்ந்து, நல்லறிவு பெற்று. அதன்படி ஒழுகி, எதிர்பார்க்கப்பட்ட இலக்கினை, அதாவது அல் குர்ஆன் நமக்கு அருளப்பட்ட அல்லாஹ்வின் நோக்கை நிறைவு செய்யும் கைங்கரியத்தில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.

குர்ஆனின் பார்வையில் முஸ்லிம்களும் ஈமானும்.

இஸ்லாமிய – குர்ஆனிய – கோட்பாடே ஈமான் என்ற விசுவாசத்தினை அடியொட்டிய அத்திவாரத்தில் எழுப்பப்பட்டுள்ள நடைமுறை சார்ந்த உண்மை என்பது யாவரும் அறிந்த ஒன்றே. ஆயினும் விசுவாசம் என்பது வெறுமனே வாயால் நாம் நம்பிக்கை கொண்டோம் எனக் கூறுவதல்ல என்பதை வல்ல நாயன் தன் திருவேதத்தில் தெளிவாக்கியுள்ளான். சாதாரணமாகக் கூறின், நமக்கு யாராவது ஒருவரில் அன்றேல் ஏதாவதொன்றில் நம்பிக்கை உண்டு எனக் கூறுவோ மாயின் அவை பற்றிய பூரண அறிவொன்றைப் பெற்றிருக்க வேண்டும். அல்லது அதனைவிடச் சிறிது குறைந்த அளவாவது அறிந்து வைத்திருக்க வேண்டும். ஒன்றையும் அறியாது நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம் எனக் கூறுவது குருட்டு நம்பிக்கை, மலட்டு வரைவுக்குள் முடங்கி மதிப்பிழந்து, மடிந்துவிடுவது, அல்லது வெறும் வார்த்தையாகவும், கேலிக்கூத்தாகவும் மாறிவிடும் என்பதில் கருத்து வேற்றுமை இருக்க முடியாது. இக்கருத்தினை வலுப்படுத்த குர்ஆன் வசனமொன்றைப் பார்ப்பது பொருத்தமானதே. ‘மனிதரில் அல்லாஹ்வையும், மறுமைநாளையும் நாங்கள் ஈமான் கொண்டோம் என்று கூறுவோரும் உண்டு. அவர்கள் முஸ்லிம்கள் அல்லர்’. – 2:8. ஈமான் பற்றி நீர் முன்னர் அறிந்திருக்கவில்லை என அல்லாஹ் சுபுஹானஹுவதஆலா தனது தூதருக்கே கூறியுள்ளமை ஈமானின் ஆழ அகலத்தை அதன் செறிவைச் சீர்தூக்கிப் பார்க்கும் அறிவைத் தரும்.

அறிவுபூர்வமாக நாம் இந்த ஈமான் என்ற நம்பிக்கையைப் புரிந்து பேணவேண்டுமேயன்றி. குருட்டு நம்பிக்கையாகவோ, வெளிவேஷமாகவோ, வெறும் வார்த்தை ஜாலமாகவோ தொடர்தல் நம்மை நாமே அழித்துக் கொள்வதற்காகவே எடுக்கப்படும் எத்தனமாகவே அமையும். ஈமான் கொண்டோம் என்போரெல்லாம் அல்லாஹ்வின் பார்வையில் முஸ்லிம்கள் அல்லர் எனும் போது, ஈமான் என்றால் என்ன என்பதை அறிய வேண்டிய கடப்பாடும் பொறுப்பும் மறுமையின் விளைச்சலை நாடுவோருக்கு அவசியமாகிறது. ஆதலின் நம்மை நாம் முஸ்லிம் எனக் கூறிக்கொள்வதை அல்லாஹ் ஏற்கும் முறையில் ஈமானை அறிந்து கொள்ளுதல் அவசியமாகின்றது. ஈமானின் முக்கியத்துவத்தையும், அதன் பயனாக வரும் நற்பேற்றையும் அறிந்திட அல் குர்ஆன் 4:147 நமக்கு உந்துசக்தியாகின்றது. ‘நீங்கள் அல்லாஹ்வை விசுவாசித்தும், அவனுக்கு நன்றி செலுத்தியும் வந்தால், உங்களுக்கு வேதனை செய்து அவன் என்ன அடையப் போகிறான். அல்லாஹ்வோ நன்றி பாராட்டுகின்றவனாகவும், நன்கு அறிபவனாகவும் இருக்கின்றான்.’ அதற்காக நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஈமான் பற்றி அறிவதில் நாட்டம் கொள்வதும், அம்முயற்சியில் நம்மை ஈடுபடுத்தி வெற்றி பெறுவதுமேயாகும். அப்படியானால் அந்த அறிவைத் தந்து வழிநடத்தக்கூடிய ஓரே ஊடகம் புனித குர்ஆன் மட்டுமே. அதுவே அதிகாரபூர்வமானது. அடுத்து நமக்குத் துணை நிற்பது, குர்ஆனையே தம் வாழ்க்கையாகக் கொண்டு நமக்கு வழிகாட்டியுள்ள நபிகள் கோமானின் நடைமுறையான இறை வழியே. இதற்கும் அடுத்தபடியாக கீழ் நிலையில் ஏற்கக்கூடிய, ஆனால் வல்ல நாயனால் விதந்து உரைக்கப்பட்ட அறிந்தவர்கள் எனக்கூறப்பட்ட ஞானம் கொடுக்கப் பட்டவர்கள் கைக்கொண்ட மறைவழியே.

மேலாக நம்மைத் தேடலில் ஈடுபடும்படி வல்ல அல்லாஹ் தன் அருள் மாமறை 5:35இல் -‘இறை நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள். அவன்பால் நெருங்குவதற்குரிய வழியைத் தேடிக்கொள்ளுங்கள்’, எனப் பணித்திருப்பது அறிதற்கும், அவசிய நடவடிக்கைக்கும் உரியதே. அல்லாஹ்வின் வார்த்தைகள் வாசித்துச் செல்வதற்காக அருளப்பட்டவையல்ல. மாறாக விசுவாசித்து, நடைமுறைப்படுத்தி உயர்நிலையை அடைவதற்கே.

விசுவாசம் எனும் ஈமான்.

அல் குர்ஆன் 2: 177 ஈமான் பற்றி…. ‘கிழக்கிலோ, மேற்கிலோ உங்களது முகங்களைத் திருப்புவது நன்மை ஆகிவிடாது. எனினும் நன்மையை அடைபவர், எவர் அல்லாஹ்வையும், மறுமை நாளையும், வானவர்களையும், வேதத்தையும், நபிமார்களையும் நம்பிக்கை கொண்டு, செல்வத்தை தம்விருப்பத்துடன் உறவினர்கள், அநாதைகள், ஏழைகள், வழிப்போக்கர்கள், யாசகம் கேட்போர் முதலியோருக்கும், (கடன், அடிமை) விடுபடுவதற்கும் கொடுத்து உதவுபவரும், மேலும், தொழுகையை நிலைநிறுத்தி, ஸக்காத்தை வழங்கிவருபவரும் மேலும், வாக்குறுதிகளை நிறைவேற்றுபவரும், கடும் வறுமையிலும், பிணியிலும், போர்க் காலத்திலும் பொறுமையை மேற்கொள்பவரும்தான். இன்னும் இவர்கள்தான் இறையச்சம் கொண்டோர்.’

ஈமான் என்ற நம்பிக்கை, நம்பிக்கை கொள்ள வேண்டியதை உய்த்துணர்ந்து அறிந்து கொள்வதானால் அன்றேல் அவ்வாறு அறிந்த அறிஞர்களைப் பின்தொடர்வதனால் அதாவது அவ் அநுபவஸ்தர்களது அறிவால் பயன் பெறுவது என்றவாறு அறிவுக்கடல் என விதந்து உரைக்கப்படும் இமாம் ஹஸ்ஸாலி (றஹ்) அவர்களால் கூறப்பட்டுள்ள குர்ஆன் அடிப்படையிலான வரைவிலக்கண விளக்கம் நமது நம்பிக்கை பற்றிய அறிவை மேம்படுத்திக் கொள்ள உதவும்.

ஈமானில் முதலாவதும், முக்கியமும் அவசியமுமானது – அல்லாஹ்மீது நம்பிக்கை கொள்வது.

நாம் அறிந்தபடி எதனையும் ஆழமாக அல்லாவிடினும் அவசியமான அளவிலாவது அறியாது நம்பிக்கை கொள்ள முடியுமா? சிறு உதாரணம் மூலம் இவ்வுண்மையை விளங்கிக் கொள்ளலாம். ஓர் ஆழ் கிணற்றில் உள்ள நீரைப் பெறவேண்டுமாயின், முதலில் இலகு வழியாக வாளி ஒன்றைக் கயிற்றில் இணைத்து கிணற்றுள் இறக்கி தண்ணீரை வெளிக் கொணரலாம் என்ற தந்திரோபாயத்தைத் தீர்மானித்த பின்னர், அதன் பின்னணியில் கிணற்றின் ஆழத்திலுள்ள நீரைத் தொட எவ்வளவு நீளக் கயிறு தேவை? இணைக்கவுள்ள வாளியின் குறைந்த, கூடிய கனவளவு எவ்வளவு? நீர் நிறைந்த நிலையில் அந்த வாளி நம்மால் கையாளக்கூடியதா? அதன் அடியில் ஓட்டையற்றதா? கயிற்றை இணைக்கும் வளையம் போன்ற வசதியுடைய வாளியா? இணைக்கும் கயிறு அந்த வாளியையும் நீரையும் தூக்கக்கூடிய உறுதி கொண்டதா? போன்றவை அறியப்படல் அவசியம். அதன் பின்னரே நமக்கு அந்த கிணற்றின் அடியிலுள்ள நீரை வெளிக் கொணர முடியும் என்ற நம்பிக்கை ஏற்படும். இதனை அறிவுபூர்வமாக ஒருவர் சிந்தித்துச் செயற்படுத்தவும் முடியும்.

அன்றேல் அநுபவஸ்தர் ஒருவரின் வழிகாட்டலில் இலகுவாகச் செய்யவும் முடியும், இதனால்தானோ வல்ல நாயன் சூரத்துல் பாத்திஹாவில் அவனது வழிகாட்டலைப் பெற இறைஞ்சும்போது, அவனது வழிகாட்டலால் வெற்றி பெற்றோர் சென்ற வழியில் நம்மையும் நடத்துமாறு கேட்க வகை செய்யப்பட்டுள்ளது. அப்படியாயின்; அல்லாஹ்வைப் பற்றி முழுமையாக அறிய (முடியாதுதான்) முடியாவிட்டாலும், ஈமானை நிலைப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு அல்லாஹ் கூறியபடி அவனை அறிந்து ஈமான் கொண்டுள்ளோமா? அல்லது அவ்வாறான முயற்சியிலாவது இதுவரை ஈடுபட்டுள்ளோமா? இது நம்முன் நிற்கின்ற, நிற்கவேண்டிய கேள்வி. இதற்கு ஆம் என்ற பதிலை வைத்திருப்போரும், அக்கறையற்றோரும் இதனை வாசிக்கத் தேவையில்லை என்பது எனது தாழ்மையான கருத்தும் வேண்டுதலும். காரணம் இக்கட்டுரை அவர்களுக்குத் தேவையற்ற ஒன்று. அல்லாஹ்வைப் பற்றி ஒருவர் சரிவர அவனின் எதிர்பார்ப்புப்படி அறிந்திருந்தால் அவர் நிச்சயமாக மற்ற அனைத்தையும் அறிந்திருப்பார் என்பதும், விருப்பமற்றவருக்கு இறையருள் கிடைக்காது என்பதனாலும்;. அவர்தம் கால விரயத்தை விரும்பாததுமே. அல்லாஹ் வீண் விரயம் செய்பவர்களை வெறுக்கிறான் அன்றேல், தான் இதனை வாசிப்பதால், தனது அல்லாஹ் பற்றிய அறிவை ஒப்பு நோக்கவோ, அன்றி மேலும் அறிந்து அவ்வறிவை மேம்படுத்திக்கொள்ளவோ, அன்றி நன்மை கருதி தனக்குத் தெரிந்த, நான் இங்கு குறிப்பிடாது தவறவிட்ட மிகச் சிறந்தவற்றை வெளிப்படுத்துவதற்காகவோ, அன்றி நான் என்னை அறியாது ஏதாவது தவறான கருத்துக்களை முன்வைத்திருந்தால் அவற்றை எனக்குச் சுட்டிக்காட்டி என்னையும் வாசக முஸ்லிம்களையும் வழிதவறாமல் இருக்க வகைசெய்வான் வேண்டித் தமது நல்லெண்ணக் கருத்துக்களைக் குர்ஆனின் அடிப்படையில் வெளியிடும் நோக்காகவோ வேண்டுமானால் வாசிக்கலாம். அறியும் முயற்சியில் ஈடுபாடு உள்ளோருக்கு இது உபயோகமாவிருக்கும். அல்ஹம்துலில்லாஹ்.

அல்லாஹ் இருக்கிறான். அவன் நிலையானவன். அவனை உறக்கமோ, களைப்போ அணுகாது. அவன் யாரையும் பெறவுமில்லை, யாராலும் பெறப்படவுமில்லை. அவனே தனித்து அண்ட சராசரங்களையும் முன் மாதிரியின்றியும், யாருடைய உதவியின்றியும், குறையேதுமின்றியும், இல்லாமையில் இருந்து ஆறே நாட்களில் படைத்துப் பரிபாலித்து வருபவன். மறுமைநாளின் மன்னன். அல்லாஹ் பற்றி இதனையும் இன்னும் மேலதிகமாகவும் நாம் எல்லோரும் சிறு வயது முதலே வாசித்தும், கேட்டும் தெரிந்து வைத்திருக்கிறோம். ஈமான் என்ற வார்த்தை நம் எல்லோருடைய வாயிலும் மிகச் சாதாரணமாக தவழ்ந்து கொண்டிருப்பது. ஆயினும் அல்லாஹ் பற்றி சரிவர அவன் கூறியபடி அறிந்து ஈமான் கொண்டுள்ளோமா? ஈமான் பற்றி இதுவரை நாம் அறிந்து வைத்திருக்கும் அளவு போதுமானதா?, அது ஈமான் என்ற இறை கருதுகோளை நிறைவுசெய்து நம்மை ஈடேற்றிவிடுமா? இவையே போதுமென்றால், அல்லாஹ் சுபுஹானஹூவ தஆலா தன் அருள் மறையில் பல இடங்களில் தன்னை அறியும் விதமாக அறியும்படி கூறியிருப்பதேன்? அவனது கண்ணியத்துக்குக் களங்கமில்லாது அவனை அறியும்படி கூறியிருப்பதேன்? அவர்கள் வர்ணிப்பதைவிட்டும் அவன் மிக உயர்ந்த உயர்வாக உயர்ந்தவன் எனக் கண்டிப்புடன் மறுப்பதன் காரணம் யாதோ?. நமது மூதாதையர்களை அறிவது போல் அவனை அறிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தியிருப்பதேன்? இம்மையில் குருடராயிருப்பவர்கள் மறுமையிலும் குருடராயிருப்பர் எனப் பகன்றிருப்பதன் இரகசியம் என்ன? இந்த வசனங்களில் நமது கவனம் என்றாவது சென்றதுண்டா?

இவ்வசனங்களோடு அல்லாஹ் பற்றி நாம் கொண்டுள்ள அறிவை ஒப்பு நோக்கின், இப்போது முதலில் குறிப்பிட்ட அல்லாஹ்வின் திருவசனமான, ‘ எனது ரப்பே! நிச்சயமாக என்னுடைய சமுகத்தினர் இந்த குர்ஆனைப் புறக்கணித்து விட்டனர்’ என்று தூதர் கூறுவார்’, என்பதன் நடைமுறை உண்மையினை நாமாகவே எடைபோட்டுக் கொள்ளமுடியும். இப்போது நமக்குத் தீர்வும் கிடைத்திருக்கும் அல்லவா? அதாவது அவ்வசனம் உண்மையாக இப்போது நம்மத்தியில் நிலை பெற்றிருக்கும் அவலத்தைக் கோடிட்டுக் காட்டுவது புரிந்திருக்கும் என்பதனை நான் உணர்கிறேன். நீங்களும் உணர்ந்திருப்பீர்கள். புரிந்தால் அவனை அறியும் வழியில் நம்மை முன்னிறுத்த வேண்டும். அப்படிப் புரியவில்லை யெனில் இந்நிலை குறித்து வருந்தி அவன் உதவியை யாசிப்பதைத் தவிர வழிதெரியவில்லை. எல்லாவற்றுக்கும் அல்லாஹ் போதுமானவன்.

அல்லாஹ் பற்றிய இந்த நம்பிக்கையை இஸ்லாத்தின் முதற் கடமையான கலிமாவுடன் இணைத்துப் பார்ப்பது இத்தருணத்தில் மிகப்பொருத்தமாக இருக்கும். காரணம், கலிமாவும் அல்லாஹ் பற்றி நமக்கிருக்க வேண்டிய நம்பிக்கையைக் கூறுவதே. ஆம், ‘லா இலாஹ இல்லல்லாஹ்’. இதன் கருத்து, இல்லை இலாஹு (சிருஷ்டி- நாயன்) அல்லாஹ்வைத் தவிர என்பதே. அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை எனலாம். இப்படி வாயாலும் மனதாலும் சொல்ல வேண்டுமென்பதே பெரியார்களின் அறிவுறுத்தலாக இருக்கின்றது. இது முதல் படிவம் என்று வேண்டுமானால் கூறலாம். காரணம், மேற்போந்த இறையாணைகள் நம்மால் அறியப்படாதிருப்பதே. மேலும், அடுத்து வரும் கலிமாவான ‘கலிமா ஷஹாதத்’ என்ற சாட்சியம் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளதே. ஷஹாதத் கூறுவதென்ன? முதலாவது கலிமாவான தையிபாவை அது உண்மைதான் எனவும் அதனை நாம் சரிவர, பிசகின்றி அறிந்து விட்டோம் என்றும் சாட்சியம் கூற வேண்டியிருப்பது புரிந்திருக்கும். மேற்கண்ட இரண்டாம் கலிமாவுக்கு ஆதாரமாகக் குர்ஆன் 3:18 இல் பதிவாகியுள்ள வெளிப்பாட்டைப் பாருங்கள், ‘ ‘நீதியை நிலைநாட்டக்கூடியவனாக உள்ள நிலையில் தன்னைத் தவிர யாரும் இல்லை’ என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான். அவ்வாறே வானவர்களும், அறிஞர்களும் சான்று பகர்கின்றனர். அவனைத் தவிர வேறு யாருமில்லை. மிகைத்தவனாகவும், ஞானமுள்ளவனாகவும் இருக்கிறான்.’

நாமும் அவ்வாறே சான்று பகரவேண்டும் என்ற இறைகட்டளையை, கடமையை சிரமேற்கொள்வோமே யானால், நாம் நம்மைச் சுயவிமர்சனம் ஒன்றுக்கு உட்படுத்திக் கொள்ளவேண்டிய கடப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளதை உணர வேண்டிய நிலையை அடைந்துள்ளதை அறிய வேண்டியுள்ளது. நாம் சான்று பகர்தல் என்ற இறையாணையை நிறைவு செய்துவிட்டோமா? என்ற வினாவுக்கு விடை கண்ட நிலையில், ‘சான்று பகரவில்லை’ என்ற கசப்பான பதிலுடன் அடுத்த கட்டத்தை நாம் அடைந்துள்ளது இப்போது தெளிவாகிறது. அதன்படி நாம் இதுவரை கலிமா தையிபாவை, – அதாவது அல்லாஹ்வைத்தவிர வேறு நாயனில்லை என்ற மூலமந்திரத்தை- சரிவர, பிசகற அறிந்து சாட்சியம் சொல்லவில்லை என்ற மிகப் பயனுள்ள, ஆனால் வேதனைக்குரிய உண்மையைக் கண்டுள்ள படி நிலை ஒன்றுக்கு உயர்ந்துள்ளோம்.

இதுவே, நாம் அறியாதவர்கள் என்பதை அறிந்தவர்கள் என்ற இரண்டாம்தர இழிவான மனித நிலை. இதுவும் வரவேற்கக் கூடிய தன்மையே. காரணம் நாம் அறியாதவர்கள் என்பதை அறியாதிருந்த நிலையில் இருந்து ஒரு படி ஏறிய முன்னேற்ற நிலை. எப்போது நாம் அறியாதவர்கள் என்ற உண்மையை அறிகிறோமோ அப்போது நாம் நம் நிலையில்; ஒரு படி உயர்ந்து விடுகிறோம். மேலும், இந்த நிலை ஆத்மீகப் பயணத்தை அறிந்து தொடர வித்திடுவது. இப் படி நிலை நாம் தெரியாதென தெரிந்து கொண்ட ஒன்றை அறிவதற்கான மனேநிலையை உருவாக்கும் உந்துதலைத் தரவல்லது. ‘நீங்கள் திட்டமாக, படிப்படியாகக் கடந்து செல்வீர்கள்’ என அல் குர்ஆன் 84: 19 கூறுவதும் குறித்துணரப்பட வேண்டியது.

அல்லாஹ்வை அறியும் முயற்சியில் நம்மை முழுமையாக மூழ்க வைப்பது. நமது முயற்சிகள் எப்போதும் கணக்கெடுக் கப்படும் என்ற அல்லாஹ்வின் திருவசனம் 17: 19, நாம் முழுமையாகக் கைவிடப்பட மாட்டோம், மாறாக முயன்றால் ஏதோ ஓரளவாவது இறைகருணையைப் பெற்று விடுவோம் என்ற நம்பிக்கையைப் பொழிந்து புதிய தெம்பைத் தருவது. இவ்விடத்தில் நாம் காணும் தெம்பும், அதன் தொடரான முயற்சியும் வெற்றியும் கலிமாவை அறிவதோடு ஈமானின் முதல் அங்கமான அல்லாஹ்வைப் பற்றிய அறிவையும் அளித்துவிடுகிறது. எப்போது அல்லாஹ் பற்றிய அறிவும், கலிமாவின் விளக்கமும் கிடைத்து விட்டதோ அப்போது நாம் ஏறத்தாழ மற்ற அனைத்து ஈமானின் கூறுகளையும், இஸ்லாமியக் கடமைகளையும் அதனை நிறைவேற்றுமாறையும் அறிந்து விடுகிறோம். இப்படி நினைப்பதற்கு நமக்கு நம்பிக்கையூட்டும் காரணமாக அமைவது வல்ல அல்லாஹ்வின் 30: 47 ‘…ஈமான் கொண்டோருக்கு உதவிடுவது நம்மீது கடமையாகிவிட்டது’ , 10:103 ‘பின்னர் நம்முடைய தூதர்களையும், இவ்வாறே நம்பிக்கை கொண்டோரையும் நாம் பாதுகாப்போம். நம்பிக்கை கொண்டோரைக் காப்பது நம்மீது கடமையாகும்’ போன்ற திருவசனங்களாகும்.

இத்தருணத்தில் கட்டுரைக்குள் நுழையுமுன் என்றதைத் தொடர்ந்து பதிவாக்கியுள்ள இரு குர்ஆனிய வசனங்களுக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன். ;…. ‘இன்னும், ஈமான் கொண்டு, நற்செயல்களை ஆற்றி, முஹம்மது (ஸல்) மீது இறக்கிவைக்கப்பட்டதை, அது தங்கள் ரப்பிடமிருந்து வந்துள்ள உண்மையாய் இருக்கும் நிலையில் ஈமான் கொண்டார்களோ, அவர்களின் தீமைகளை, அவர்களை விட்டும் போக்கி, அவர்களுடைய நிலைமையையும் அவன் சீராக்கிவிட்டான்.’ – 47:2.

‘அவர்கள் இந்த குர்ஆனை ஆராய்ந்து பார்த்திட வேண்டாமா? அல்லது, இதயங்கள் மீது பூட்டு இருக்கின்றனவா?’ – 47:24. முதல் வசனம் ஈமான் கொண்டு நற்செயலாற்றி நபிகளார்மீது இறக்கி வைக்கப்பட்டதை உண்மையாய் இருக்கும் நிலையில் ஈமான் கொள்தல் பற்றிப் பேசுகிறது. அதாவது தொடக்கத்தில் நம்பிக்கை – ஈமான்- கொள்ளாது எதிலும் ஈடுபட முடியாது. அது ஆரம்பப் படிவமாகவே உள்ளது. அந்த வகையில் தொடங்கிய வசனம், அடுத்த நிலையில் ரப்பிடமிருந்து வந்துள்ள உண்மையாய் இருக்கும் நிலையில் ஈமான் கொண்டார்களோ… என அமைந்துள்ளமை, நான் முன்னர் கூறிய குருட்டு நம்பிக்கையை முற்றாக மறுத்து ‘உண்மை என்பதை அறிவதைக்’ கட்டாயப்படுத்தி உள்ளது. அதிலும் ரப்பிட மிருந்து வந்ததாலேயே அது உண்மை என்ற அந்தஸ்தைப் பெறுகிறது. இறைவனிடமிருந்து வரும் உண்மைகள் நிரந்தரமானவை. மாறுபடாதவை என்பதும் அறிதலுக்குரியதே. அப்படி அறிந்தவர்களின் தீமைகளையே அவன் போக்கி நிலைமையைச் சீராக்கிவிட்டதாகக் கூறுவது, அப்படியல்லாத ‘ஈமான்’ கடைத்தேறாச் செயல்தான் என்பதை கூறா நிற்கின்றது. அதற்காகவே அடுத்து வரும் வசனமும் குர்ஆனை ஆராய்ந்து பார்த்திடவும், அறிய முயலாதோரைக் கண்டிக்கவும் செய்திருப்பது நம் சிந்தைக்கு விருந்தே. இதுவே நம்பிக்கையாளரைக் காப்பது நம் கடமை என பதிவாக்கி யுள்ள இறைவசனத்தைப் விளக்க நன்கு போதுமானது.

மீண்டும் விடயத்துக்கு வருவோம். கலிமா தையிபா பற்றி அல்லாஹ் பல இடங்களில் கூறியிருந்தாலும், ஓரிரு இடங்களில் மிகத் தெளிவாகவும், நிறையுதாரணங்களுடனும் கூறியிருப்பதைக் கவனிக்காமல் விடுவது, நம்மை நாமே இழிநிலைக்குக் கொண்டு செல்வதை ஒத்ததே. இது விழிகண் குருடராக நாம் இருப்பதை காணக்கூடியதாக உள்ளதைச் சுட்டிக் காட்டுகின்றது. கண்ணும் இருக்கும் வெளிச்சமும் இருக்கும் ஆனால் பார்த்துக் கொள்ளமாட்டார்கள் என இறைவன் இந்நிலையையே குறிப்பிடுகிறான். இக்கலிமா பற்றிய விளக்கம், நமது ஆத்ம உயர்வுக்காக இறைவன் காட்டிய கருணை வழி, அருட் கொடை. அல்லாஹ் மீது கொள்ள வேண்டிய நம்பிக்கை பற்றிய அறிவை சூறா அந்நூர் 35ஆம் வசனம் உய்த்துணர வகை சமைக்கும். மேலும், அல்லாஹ்வை அறிய குர்ஆன் 25:59 ‘அவனைப் பற்றி நக்கு அறிந்தோரிடம் நீ கேட்பாயாக’ என்ற அறிவுறுத்தலைச் செவிமடுத்து நடத்தல் நன்மை பயக்கும்.

திருமறை 35:10. ‘எவன் கண்ணியத்தை விரும்புவானோ, கண்ணியங்கள் யாவும் அல்லாஹ்வுக்கே உரியதாகும். அவன்பாலே தூயவாக்கியங்கள் (கலிமா தையிபா) மேலேறிச் செல்கின்றன. நற்செயல் அதை உயர்த்துகிறது’. ஆக கலிமா அறியப்படுவது நம்மை அல்லாஹ்வின்பால் மேலேறிச் செல்ல வழிவகுப்பதாகும்.

14:27, ஈமான் கொண்டுள்ளார்களே அத்தகையோரை இவ்வுலக வாழ்விலும், மறுமையிலும் உறுதியான சொல்லைக் கொண்டு அல்லாஹ் நிலைப்படுத்துகிறான். இன்னும் அநியாயக்காரர்களை அல்லாஹ் வழிதவறச் செய்துவிடுகிறான். மேலும், அல்லாஹ் தான் நாடியதைச் செய்கிறான். இங்கும் கலிமாவின் முக்கியத்துவம் பிரகடணமாகியுள்ளது.

5:83 ‘…’எங்களுடைய ரப்பே! நாங்கள் நம்பிக்கை கொண்டோம், எனவே சாட்சி கூறுபவர்களுடன் எங்களையும் நீ பதிவு செய்தருள்வாயாக!’ என்று கூறுகின்றனர்’. இவ்வசனம் நம்பிக்கையையும் சாட்சியத்தையும் இணைத்துக் கூறுகிறது. நம்பிக்கை இருந்தாலன்றி ஒன்றைப் பற்றி சாட்சியம் கூறமுடியாது. சாட்சியம் கூறும் தகுதியை ஒருவர் எட்டுவது உயர்வை வெளிப்படுத்துவது. அந்தத் உயர் தகுதியை நமக்கு லா இலாஹ இல்லல்லாஹ் தந்துள்ளது. சாட்சியம் கூற முற்கூறிய தகுதியோடு, சாட்சியத்துக்குரியவர் பற்றிய நம்பிக்கை சாட்சியம் கூறுவோனுக்கு இருக்க வேண்டும். அந்த நம்பிக்கை ஏற்பட சாட்சியம் கூறவுள்ள விடயத்தை அல்லது நபர் பற்றிய அறிவை மிகத் தெளிவாக நாம் பெற்றிருக்க வேண்டும். அன்றேல் அது பொய்ச் சாட்சியமாகக் கருதப்பட்டு தண்டணையைப் பெற்றுத் தரும். அதிலும் அல்லாஹ் மேல் பொய்கூறுவது அவனது சாபத்தை வருவிக்கும். ‘அல்லாஹ்வின் மீது பொய் கூறியவர்களுக்குக் கேடுதான்’ என்பது இறைமறை. ‘அல்லாஹ்வின் மீது பொய் புகன்றவர்களின் முகம் மறுமையில் கருத்துவிடும்’ என்ற இறைமறைமொழி முன்னைய இறைகருத்தை மெயப்படுத்தி நிலைக்கிறது.

அல்லாஹ் பற்றி அறிவதற்காக குர்ஆன் அடிக்கடி நினைவூட்டி அழைப்பாணை விடுத்துக் கொண்டிருக்கின்றது. அவனை நாம் அறியாதிருப்பதை அல்லது மறந்திருப்பதைக் குர்ஆன் பல இடங்களில் கண்டித்துள்ளதுடன், ஞாபகப்படுத்துமாறு அறிவுறுத்தியும் உள்ளது. வேதங்கள் அனைத்தும் அவனை நாம் மறந்திருப்பதை நினைவுபடுத்தவே அருளப்பட்டதாக அறிகிறோம். அல்லாஹ் அவனைப் பற்றி, நாம் ஏலவே அறிந்திருந்ததை, நாம் மறந்துள்ள நிலையில், நம்மை ஞாபகப் படுத்துவதற்காகக் கூறியுள்ள பல உண்மைகளை, தொழுகை பற்றி ஆராயும் போது, அறிந்து கொள்ள முடியும் என்பதால் அதனை இத்தோடு முடித்து அடுத்த கட்டத்துள் உங்களை அழைத்துச் செல்லுமுன்… மறந்ததை நினைவு கூர்ந்தால் அறிந்தவை வெளிப்படும். அறிதலும் இலகுவாகும். அறிவதும் உறுதி காணும். புனித குர்ஆனை உய்த்துணர்ந்து அறிவதால் மட்டுமே அதில் பொதிந்துள்ள உண்மைகள் நம்மை வழிநடத்தும். இறையாணைகளைச் சந்தேகத்துக் கிடமின்றி அறிந்து கொண்டு, நடைமுறைப்படுத்தலாம். அன்றேல் அறிவற்ற நடபடிகள், இலக்கை அறியாது எறியப்பட்ட அம்பாகிவிடும். அம்பை இழந்ததுதான் மிச்சம் வேட்டை கிடைக்காததைப் போன்று, நமது நேரமும் சக்தியும் வீணாகியதுடன் இறை வழியையும் தவறவிட்ட நஷ்டம் மட்டுமே எஞ்சும்.

ஈமானின் அடுத்த இலக்காகிறது அமரர்கள் – மலக்குகள்.

அமரர்கள் பற்றி எதனைத் தெரிந்து ஈமான் கொண்டுள்ளோம்? மலக்குகள் மீது ஈமான் கொள்வது இறை கட்டளையே. அப்படியாயின், நாம் இறையாணைப்படி வானவர்களைப் பற்றி அவர்கள் இருக்கின்றார்கள், சில மலக்குகள் அவர்கட்குப் பணிக்கப்பட்ட வேலைகளைச் செய்துகொண்டு இருக்கிறார்கள், செய்வார்கள், அவர்களில் தலைமை மலக்கான ஜிப்ரீல் (அலை) அவர்களே இறை வசனங்களைத் தாங்கிவந்து அவ்வப்போது இறைதூதர்கட்கு வஹீயாக அறிவிப்பவர். மலக்குகளில் சிலருக்குச் சில பொறுப்புகள் உண்டு, நன்மை தீமைகளை எழுதுவதற்காக ஒவ்வொருவர் தோளிலும் இவ்விரண்டு பேரும், கல்லறையில் கேள்வி கேட்பதற்காக முன்கர் நக்கீர் என்ற இருவரும் உள்ளனர். மழைக்கென ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். உயிரை வாங்குவதற்காக ஒருவர். இறுதிநாளுக்காக அறிவிப்புச் செய்யும் ‘சூர்’ என்ற குழலை ஊத ஒருவர். அவர்கள் இறை ஆணையை மட்டும் செயற்படுத்துபவர்கள், ஒளியினால் படைக்கப்பட்டவர்கள், என்ற அளவில் ஈமான் கொண்டால் போதுமாகுமா? அல்லது இதற்கு மேலும் அறிய வேண்டுமா? என்ற கேள்வி நம்முள் எழுகின்றது. ‘குன்’ என்றால் அனைத்தும் ஆகிவிடும் எனக் கூறும் அல்லாஹ்வுக்கு அவனது கட்டளைகளைச் செயற் படுத்த மலக்குகள் தேவைதானா? அவன் ‘கனீ’, ‘ஸமது’ போன்ற யாருடைய தேவையும், எதனுடைய தேவையும் அற்றவன் என்ற பொருள் தரும் திருநாமங்களைச் சூடிக் கொண்டு, அமரர்களை மேற்கண்ட விடயங்களைக் கவனிக்க நியமித்த காரணம் யாது? போன்ற காரண காரியங்களை அறியும் போது மலக்குகள் மீது ஈமான் கொள்வதில் முழுமையைக் காணமுடிவதோடு அல்லாஹ் பற்றிய ஈமானிலும் மெருகேற்றிக் கொள்ளலாம்.

முதல் மனிதனை முதன் முதலாகப் படைக்குமுன் மலக்குகளிடம் நான் மனிதர்களைப் படைக்கப் போகிறேன் அம்மனிதனுக்கு சிரம் சாயுங்கள் எனக் கூறியதன் தாற்பரியம் என்ன? அதற்கு மலக்குகள் விளக்கம் தேடியதும், ஈற்றில் இறைவனின் ஆணையை ஏற்று ஆதமுக்குச் சிரம் சாய்த்ததையும் குர்ஆன் கூறி நிற்பதில் நாம் எதனைக் கற்றுக் கொள்கிறோம்? இவற்றில் எல்லாம் ஞானம் நிறைந்து கிடக்கவே செய்கின்றது. அதனால்தான் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்த்திட வேண்டாமா என இறைவன் நம்மிடம் கேள்வி எழுப்புகிறான். ஒரு படைப்பின் உயர் அந்தஸ்தைக் காட்ட இன்னொரு படைப்பு தேவைப்படுகிறது என்ற உண்மையை நாம் மறக்கலாகாது. ஓப்பிட்டறிவது மனித சுபாவம். இதனால்தான் இறைவன் தன் திருமறையில், நாம் மனிதர்களைத் தனது படைப்புகளில் எல்லாம் மிகச் சிறந்த படைப்பாக ஆக்கியுள்ளோம் என நமக்கு விளங்கும் வகையில் ஒப்பீட்டு முறையில் கூறுகிறான். இறைவனால் பல வல்லமைகள் கொடுக்கப்பட்ட மலக்குகள் தாம் விரும்பியவாறு நடந்து கொள்வதுமில்லை. மாறாக இறையாணை எதுவோ அதனை அப்படியே ஏற்றுச் செயல்படுகின்றனர். அந்த அடிப்படையிலேயே அவர்கள் மனிதனுக்கு சிரம் பணிந்ததும் அமைகின்றது. இவைகளும் நமது சிந்தனைக்குரியதே. இவற்றிலும் நமக்குப் பல படிப்பினைகள் உண்டு. மேலும், மேலான ஓர் இறை எதிர்பார்ப்பும் மறைவாகவே உள்ளது. அதுவும் நாம் அறிந்து கொள்ள வேண்டியதே. நம்மை மட்டுமல்ல எதையுமே அவன் வீணாகவோ விளையாட்டாகவோ படைக்கவில்லை என்ற இறைவனின் திருமறை வசனம் நம்மையும் நம்மைச் சூழவுள்ள அனைத்தையும் அறிவதில் நமக்குப் பாரிய பொறுப்பும் கடமையும் உள்ளதை வெளிப்படுத்தி நிற்கிறது.

பேதங்களற்ற இறைவேதத்தை நம்புவது ஈமானிpல் அடுத்த கட்டமாகிறது.

நாம் வேதங்களை எந்தளவு அறிந்து நம்பிக்கை கொண்டுள்ளோம் என்பது நமக்கு நாமே கேட்டுப் பெற வேண்டியது. வேதங்கள் நான்கு. அவை நான்கு தூதர்களுக்குக் கொடுக்கப்பட்டது. அவை கொடுக்கப்பட்ட மொழிகள், சமுதாயம் போன்றவற்றை அறிந்தால் போதுமானதா? எது சரி? எது பிழை? என அறிவதற்கு இரண்டு அம்சங்கள் தேவைப்படும். இதனால்தான் இறைவன் அனைத்தையும் குறோமோஸம் என்ற சந்ததிச் சுவடுகள் உட்பட அனைத்தையும் சோடிகளாக, இருள்- வெளிச்சம், நல்லது – கெட்டது போன்றவாறு வெளிப்படுத்தினான், அந்த வகையில் வேதங்களும் மக்களினதும், காலத்தின் தேவை கருதியும், இடத்துக் கேற்றபடியும் அருளப்பட்டன. அனைத்து வேதங்களும் அடிப்படையில் ஒன்றே. அதனால் இறைவன் நமது நாயகம் அவர்களிடம், நாம் உமக்குப் புதிதாக எதனையும் தந்து விடவில்லை, முந்தைய நபிமார்களுக்குக் கொடுத்ததே தவிர எனப் பகன்றுள்ளமையும், முன்னைய வேதங்களை மெய்படுத்துவதற்காகவே இந்த புர்கானை வெளிப்படுத்தியதாகவும் அதனோடு ஒட்டிய இன்னும் பல வசனங்களயும் அருளியுள்ளான். நபியே! இப்றாஹிமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக எனக் கட்டளை பிறப்பித்ததும் உய்த்துணரப்பட வேண்டியதே. இந்த நிலையில் மார்க்கங்களை அறிவதும் அவற்றில் நம்பிக்கை கொள்வதும் முஸ்லிம்களாக இருப்பதற்கு இன்றியமையாத ஒன்றாகிறது.

2:136 – ‘நீங்கள் கூறுங்கள், ‘அல்லாஹ்வையும் எங்கள்பால் இறக்கப்பட்டதையும், மற்றும் இப்றாஹீம், இஸ்மாயில், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் சந்ததியினர்மீது இறக்கிவைக்கப்பட்டதையும், மற்றும் மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் அருளப்பட்டவற்றையும் நாங்கள் நம்பிக்கை கொண்டோம். அவர்களில் எவருக்குமிடையில் வேறுபாடு காட்ட மாட்டோம். நாங்கள் அல்லாஹ்வுக்கே வழிப்படுகிறவர்களாக இருக்கிறோம்’. ‘ அவர்களில் எவருக்குமிடையில் வேறுபாடு காட்டமாட்டோம் என்பது அவர்களது போதனையான வேதங்களைக் குறித்ததே தவிர தூதர்களின் தரத்தைக் குறிப்பிடுவதல்ல என்பது இக்குர்ஆனிய வசனத்தின் அடிநாதம். தனது தூதர்களில் சிலரைச் சிலரைவிடவும் தரத்தில் உயர்த்தியுள்ளமையை குர்ஆனில் அல்லாஹ்வே கூறியிருப்பதும் மேலும், அவ்வசனத்தின் முற்பகுதியும் அதனை வலியுறுத்துவதே காரணம். மேலும் வேதங்களை வெளிப்படுத்துவதற்காகத் தூதர்களைத் தேர்ந்தானே தவிர தூதர்களுக்காக வேதங்கள் வெளிப்படுத்தப்படவில்லை என்பதும் உணரப்படல் மிக அவசியம்.

விசுவாசிகள் நபிமாருக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தின் அளவை வேதங்களுக்குக் கொடுப்பதில்லை என்பது மறுக்கமுடியாத உண்மை. ஒன்றை இவ்விடத்தில் கூறிச் செல்வது எனது கருத்தைப் தவறான வழியில் நோக்குவதைத் தவிர்க்கும். அதாவது, நாம் ஒன்றில் கொண்டுள்ள மதிப்பு, மரியாதை, பாசம், நேசம், விருப்பு, வெறுப்பு போன்றவை இன்னொன்றில் எவ்வித குறைத் தாக்கங்களை ஏற்படாது பார்த்துக் கொள்ள வேண்டும். இதனைக் குர்ஆனும் வேறோரிடத்தில் கூறியே உள்ளது. இப்போது நாம் நம் மனதில் வேதங்களை அறிந்துள்ளோமா? என்ற வினாவை விடுப்பதும் விடையைப் பெறுவதும,; நமது ஈமானைச் சரிசெய்துகொள்ள மிகவும் இன்றியமையாதது என்பதை உணர்ந்திருப்பீர்கள். இவ்வுண்மைகள் தெளிவாகும் போது நமது நிலையை நாம் எடை போட்டுக் கொள்ள முடியும். இப்போது மறுமையில் எந்தக் கையில் நமது பட்டோலை கொடுக்கப்படுகின்றது என்பதைக் கொண்டு நமது முடிவை நாமே அறிந்து கொள்ளலாம் என்ற இறைதத்துவத்தின் தெளிவான உண்மை நிலையும் வெளியாகிறது.

இறைவன் இந்த மார்க்கத்தை ஏற்றுக் கொண்டு இதனையே நமக்காகத் தேர்ந்துள்ளதாகக் கூறுகிறான். (2: 132 பார்க்க) அத்தோடு இந்த வேதத்தைத் தனது இறுதி வேதவெளிப்பாடாகவும் அறிவித்துள்ளதோடு, முன்னைய அனைத்து வேதங்களையும் மெய்ப்படுத்துவதற்குமாகவே அருளப்பட்டதாகவும் குறிப்பிடுகிறான். அப்படியாயின் முன்னைய வேதங்களில் காணப்படுபவை என்ன என்பதைத் தெரிந்திருத்தல் கட்டாயாய கடமையாகிறது. அதனாலேயே இறைவன் வேதங்கள் மீது நம்பிக்கை கொள்வதை நமது கடமையாக ஆக்கியுள்ளான். இப்போது நாம் ஈமான் கொள்ள வேண்டிய மூன்றாவது அங்கமான வேதங்கள் பற்றிய நமது அறிதல் எந்த அளவில் உள்ளது என்பது நமது மனக்கண் முன் பளிச்சிட்டுக் கொண்டிருக்கிறது. ஆக நாம் எந்த வேதத்தையும், ஏன் நமது வேதத்தைக்கூட சரிவர அறியாதிருப்பதன் அவலமும், கையறுநிலையும் புரிவதோடு, நாம் இத்துனைக் காலமும் எந்த வேதத்தையும் அறியவில்லை என்பதை அறியாது அவமே கழித்த நாட்களையும் எண்ணிப் பார்த்து நொந்துகொள்ள வேண்டியுள்ளது.

மேலும் நபியே முன்னைய நபிமாருக்கு அறிவித்ததைவிட உமக்குப் புதிதாக எதனையும் தந்துவிடவில்லை ( அல் குர்ஆன் 41:43 வசனத்தைப் பார்க்க. 42:13 அதற்கு மேலும் வலுவூட்டும் ) எனக் கூறுவதில் இருந்து நாம் புனித குர்ஆன் ஒன்றை மட்டுமே பூரணமாக அறிந்தால்கூட அனைத்து வேதங்களையும் அறிந்துவிடுகிறோம் என்ற உண்மை மறைந்து நிற்கிறது. அதனாலேயே பேதமையற்ற வேதம் எனக் குறிப்பிட்டேன். அத்தோடு இவ்வேதம் பூரணப்படுத்தப்பட்டது எனப் பூரணனே சாட்சியம் கூறுவது இக்குர்ஆனை மட்டும் அறிந்தாலும் போதுமானது என்பதற்கு வலுவூட்டுவது. இறைவன் தன் திருமறையாம் அருள் மறையில் இவற்றை எல்லாம் அறிவதற்குப் போதுமான ஆயுளை நாம் உங்களுக்கு அளித்திருக்கவில்லையா என மறுமையில் கேள்வி எழுப்பவிருப்பதாகக் கூறுவது நமக்காக ஒலிக்கப்படும் எச்சரிக்கை மணியல்லவா! அதனால்தான் குர்ஆனில் பல இடங்களில் இப்புனித குர்ஆனை நினைவூட்டல் என்று அல்லாஹ் கூறியுள்ளான். அறிந்து கொள்ளத் தூண்டும் அழைப்பொலி. ‘அன்றியும், இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை எவரேனும் தேடினால் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்படமாட்டாது. மேலும், அவர் மறுமையில் நஷ்டமடைந்தவர்களில் இருப்பார்.’ – 3:85.

அடுத்து நாம் ஈமான் கொண்டிருக்க வேண்டியது அல்லாஹ்வின் திருத்தூதர்கள் மீது.

அல்லாஹ்வின் திருத்தூதர்கள் அனைவரும் நபிமார்கள் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரிந்த உண்மை. திருக்குர்ஆனில் வல்ல அல்லாஹ் கூறியுள்ள சில நபிமார்கள் பற்றியும், தூதரான சில நபிமார் பற்றியும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேதங்கள் பற்றியும், அவர்களது தன்மைகள், குணங்கள், அறிவுகள், அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட விஷேட சக்திகள், எச்சரிக்கைகள், உதவிகள், அவர்கள் பற்றிய இறைவனின் நற்சான்றுகள் போன்றவற்றை மட்டும் தெரிந்திருந்தால் போதுமா? அல்லது அதற்கு மேலும், நாம் ஏதாவது அறிய வேண்டியுள்ளோமா? என்ற கேள்விக்கு இறைவனே தனது மாமறையில் சில கருத்துக்களை முன் வைத்துள்ளான். தூதர்களிலும், அவர்களது செய்திகளிலும் படிப்பினைகள் உண்டு என்பதே அந்த உண்மை. அடுத்து சிலரை விடவும் சில தூதர்களை உயர்வாக்கி உள்ளதாகவும் கூறியுள்ளான். இதனுள் மறைந்துள்ள விசேட காரணம் என்ன? அந்த வகையில், நாம் குர்ஆனில் இறைவன் குறிப்பிட் டுள்ள தூதர்களின் செய்திகளைத் தேடி அறிவதும், அவற்றில் படிப்பினைகள் பெறுவதும் விதியாகிவிடுகின்றது. இப்போது நாம் தூதர்கள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்ற விதி ஏற்படுத்தப்பட்டதன் பின்னணியைப் புரிகிறோம்.

‘தூதர்களின் செய்திகளிலிருந்து உம்முடைய இதயத்தை எதன் மூலம் நாம் உறுதிப்படுத்துவோமோ, அவை அனைத்தையும் நாம் உமக்குக் கூறுகிறோம். இவற்றில் உமக்கு உண்மையும், முஃமின்களுக்கு நல்லுபதேசமும், நினைவூட்டலும் வந்திருக்கின்றன.’-11:120. ஓவ்வோர் தூதரின் சரிதையிலும், வேதத்திலும் வெவ்வேறு அறிவுகளும், ஞானங்களும் நிரவிக் கிடக்கின்றன. உதாரணமாக, தாவூது நபி அவர்களின் பராக்கிரமம், சுலைமான் நபியவர்களின் அறிவு, அரசாட்சி, யூசுப் நபியவர்களின் கனவுகளுக்குப் பலன் கூறும் அறிவு, யூனூஸ் நபியவர்களின் மீன் வயிற்று வாழ்க்கை, இப்றாஹிம் நபி அவர்களினது மன ஓர்மையும் தியாகமும், இறைகட்டளையைச் செயற்படுத்தும் பாங்கும், மூஸா நபியவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த மந்திர சக்தியும் அறிவும், ஈஸா நபியவர்களுக்குக் வழங்கப்பட்டிருந்த நோய்களைக் குணப்படுத்தும் சக்தியும் உயிர்கொடுக்கும் உயர் கௌரவமும், பிறப்பும், வான் வாழ்வும், நமது அருமை நாயகம் ஸல்லல்லாஹு அவர்களுக்குக் அளிக்கப்பட்ட நற்சாட்சிப் பத்திரம், ஓரே இரவில் அண்மையிலுள்ள மஸஜிதுக்கு அழைத்துச் சென்ற அற்புதம், (மிஹ்ராஜ); விண்ணேற்றத்தின் போது காட்டப்பட்ட காட்சிகள், இறுதித் தூதுத்துவம், அனைத்து வேதங்களையும் மெய்ப்படுத்தும் உயர் அந்தஸ்தும் பாக்கியமும், அல்லாஹ்வும் அவனது வானவர்களும் நபியவர்கள் மீது ஸலாமும் ஸலவாத்தும் கூறிக்கொண்டு நம்மையும் கூறுமாறு பணித்துள்ள (33:56 பார்க்க) மகிமையும், ஷபாஅத்துக் கொடுக்கும் உயர் பண்போடு, கருணையோடு, காருண்யத்தோடு கூடிய அதியுயர் கௌரவமும் அந்தஸ்தும் நிறைந்த அதிகாரம் இன்னும் பிறவும் அறியப்பட வேண்டியனவே. இவைகளில் மிகச் சிறப்பான பல வழிகாட்டல்கள், நடைமுறைகள், படிப்பினைகள் மறைந்தும் விரிந்தும் நிறைந்துள்ளன. இவற்றை நாம் அறிந்திருப்பது ஈமானைக்குரிய பங்களிப்பைச் செய்வதுடன், நம்மை ஆத்மீக ரீதியாக உயர்த்திக் கொள்வதில் பேருதவி புரியும். கணித சூத்திரங்களையோ, மொழிகளின் இலக்கண அறிவையோ அறிவது, நம்புவது, அதனை நாம் பெற்றிருப்பது நமக்கு அந்தத் துறையில் சிறப்பாக இயங்கி இலக்கை அடைவதற்கு உதவி புரிவதே. அல்லாஹ் நமக்கு இலகுவையே விரும்புகிறான் என்பதும் அதனால் நாம் நமது படியேற்றத்தைச் சிரமமில்லாது அடைவதும் தெளிவு. இவற்றை எல்லாம் நாம் புனித அருள்மறையில் கண்டறியவே வேண்டியுள்ளது. 84:19 ‘நீங்கள் திட்டமாகப் படிப்படியாகக் கடந்து செல்வீர்கள்.’

சிலர் நினைப்பது போல் இஸ்லாத்தின் சில கடமைகளைச் செய்வதால் மட்டும் நாம் உய்வடைந்துவிட முடியாது. முதலில் நாம் அல்லாஹ்வின் அடியார்கள்-முஸ்லிம்கள்- என்ற பெயரைப் பெறுவதில் வெற்றிபெற வேண்டும். அதற்கு, முதலில் அவசியமான நம்பிக்கையை, அவசரமாக ஆனால் தெளிவாக உறுதியாகக் கொண்டிருக்க வேண்டும். ஈமானே இல்லாத நிலையில் நாம் இருப்போமானால் கடமைகள் சிலவற்றைச் செய்வது எவ்வாறு சாத்தியம்? மாணவனாகப் பதிவு செய்து மாணவன் என்ற தகுதியைப் பெற்றவன் மட்டுமே குறித்த துறையில் படிக்க, பரீட்சை எழுத, பட்டம், பதவி பெற அருகதை உடையவன் ஆகின்றான். அது போன்றதே. முதலில் இஸ்லாமியனாக இருப்பதும். ஆசிரியனாக இல்லாமல் கற்பிக்கச் செல்ல முடியுமா? இறைநம்பிக்கையாளனாக-இஸ்லாமியனாக இல்லாவனுக்கு அவனின் காரியங்களைச் செய்யலாமா? செய்தாலும் அவை இறைவனால் ஏற்கப்படுமா? அதற்கு, நான் இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளப்படமாட்டேன் என்ற 3:86 இறைவசனம,; பதில் கூறுகிறுகிறது. (இவ்விடத்தில் இஸ்லாம் என்றால் என்னவென்பதைச் சரிவரப் புரிந்திராவிடில் வழிகேடாகிவிடும்)

அண்டசராசரம் அடங்கலான அத்தனை அறிவும் அல் குர்ஆனில் குவிந்து கிடக்க, அதனை இறைவன் விரிவாக்கியும், தெளிவாக்கியும் வைத்திருக்க, நாம் அவற்றைக் கண்டு கொள்ளாது அல்லது கண்டும் காணாதிருப்பது அல்லது குறிப்பிட்ட சிலவற்றை மட்டும் ஏற்று ஏனையவற்றில் இருந்து விலகிக் கற்பனை உலகில் சஞ்சரிப்பது இழப்பையும் அழிவையும் தவிர வேறு நன்மைகளைத் தருவதாக அமையாது. உமக்கு வஹீ அறிவிக்கப்படுவதில், சிலவற்றை விட்டுவிடுபவராய் நீர் ஆகிவிடுவீர் போலும்!…’ – 11:12 என்ற வசனம் சிலவற்றை விடுவதைக் கண்டித்து எச்சரிக்கிறது. வல்ல நாயன் நாம் நல்லறிவு பெறுவதற்காகவே குர்ஆனை மிகத் தெளிவாக விளக்கி உள்ளதாகக் கூறுகிறான். இறை கூறும் இந்த நல்லறிவை நாம் பெற்றுக் கொள்ளாதபடியால் தான் நமது அருமை நாயகம் தனது சமூகத்தினர் குர்ஆனைப் புறக்கணித்து விட்டனர் எனக் கூறுவார் என இறைவன் கூறியுள்ளான். நாயகம் தனது சமூகத்தினர் தொழவில்லை, நோன்பு வைக்கவில்லை, ஸக்காத் வழங்கிடவில்லை, புனித ஹஜ் பிரயாணம் மேற்கொள்ளவில்லை போன்ற வற்றையோ, மேலாக சிறந்த ஈமான்தாரிகளாகவோ கூட இருக்கவில்லை என்றோ கூறவிருப்பதாக அல்லாஹ் கூறவில்லை. மாறாக குர்ஆனை மட்டும் பிரஸ்தாபித்திருப்பது குர்ஆனின் முக்கியத்துவத்தை இன்றியமையாமையை குர்ஆனுள் அனைத்தும் என்பதை விளக்கும்.

பின்வரும் மறை வசனம் மேற்கண்ட கருத்துக்குச் சான்று பகரும். ‘அல்லாஹ் எவருக்கு நேர்வழி காட்டிட விரும்பு கின்றானோ அவருடைய நெஞ்சத்தை இஸ்லாத்திற்காக விரிவு படுத்துகின்றான். மேலும் எவரை வழி தவறச் செய்ய விரும்புகின்றானோ அவருடைய நெஞ்சத்தை வானத்தில் ஏறுகின்றவனைப் போன்று சிரமத்துடன் கூடிய நெருக்கடி யானதாக ஆக்கிவிடுகின்றான். இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்கள் மீது தண்டணையை அல்லாஹ் ஏற்படுத்து கின்றான்’ – 6:125. மேலும் குர்ஆனை முழுமையாக அறிந்து பின்பற்றியவன் அனைத்தையும் சிறப்பாக அறிந்தும் சரியாக நடைமுறைப்படுத்தியும் நற்பேறடைவான் என்பதும், அதனைக் கைவிட்டவன் அனைத்தையும் இழந்து அல்லற் படுபவனே என்பதையும் குறித்தே குர்ஆனைக் கைவிட்டமை மட்டும் அல்லாஹ்வால் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது அறிதற்குப் போதுமானது. அத்தியாவசியமானதும் கூட.

மறுமை எனும் இறுதிநாள் பற்றிய நம்பிக்கை

இறுதிநாள் பற்றி முஸ்லிம்கள் அனைவரும் ‘ஆமன்து பில்லாஹி…’ எனத் தொடங்கும் ஈமானின் ஆறு காரியங்களையும் போல் அறிந்து வைத்துள்ளோம் என்பது உண்மைதான். சிலர் அதற்கு மேலும் பல புத்தகங்களிலும் ஹதீஸ்களிலும் கூறப்பட்டுள்ளதை அறிந்து வைத்திருக்கின்றனர். சிலர் கேள்வி ஞானத்தால் அரைகுறையாகப் பாடம் பண்ணியு முள்ளனர். தாம் பாடம் பண்ணியுள்ளவற்றில் என்ன இருக்கின்றது என்பது முழுதாகத் தெரியாத நிலை. இவை போதுமா, இந்த நம்பிக்கையின் அடிப்படையில் நமது ஈமான் நிறைவு பெறுமா?

அரசு சுனாமி எனக் கூறப்படும் கடற்கோள் குறிப்பிட்ட திகதியில் வரவிருப்பதாக பகிரங்க அறிவிப்புச் செய்கிறது என எடுத்துக் கொள்வோம். இவ்வெச்சரிக்கை நமக்கும் கிடைத்துள்ளது. அப்படியாயின் நாம் இதனை அறிந்து கொண்டோம், இச்செய்தியில் நம்பிக்கை கொண்டோம் எனக் கூறி வாளாவிருப்போமா? அல்லது அதற்கான தற்பாதுகாப்பு நடவடிக்கை களை மேற்கொள்வோமா? இந்த அறிவிப்பைச் செய்த அரசின் எதிர்பார்ப்பு யாது? அறிவிப்பைக் கேட்ட நமது கடமை, பொறுப்பு யாது? அரசின் அந்த எதிர்பார்ப்பை நாம் நிறைவேற்றாவிடில், பின்னர் நாம் அடையவுள்ள பாதிப்பை அரசிடம் கூறிட முடியுமா? அன்றேல் அரசுதான் நமது பாதிப்பை ஏற்றுக் கொள்ளுமா? அல்லது நாம் அதனை எதிர்பார்க்கத்தான் முடியுமா? சுனாமியினால் இழந்த உயிர், உடமைகளின் நஷ்டத்தை மீட்டிடத்தான் முடியுமா?

குர்ஆனில் இறுதிநாள் பற்றிக் கூறியவற்றில் மலிந்து கிடக்கும் விஞ்ஞானக் கருத்துக்கள் நம்மில் எத்தனை பேரின் கண்களில் பட்டுள்ளன. எத்தனை பேருக்கு இதயத்தைத் திறந்துள்ளன, எத்தனை பேருக்குப் பயபக்தியை ஏற்படுத்தி ஈமானைப் பலப்படுத்தியுள்ளன. ஏதாவது ஓன்றை நாம் அறியும் சந்தர்ப்பத்தின் தொடராகச் சில தாக்கங்கள் நம்முள் ஏற்பட்டிருக்க வேண்டும். அப்படி ஏதும் தாக்கங்கள் ஏற்படாதவிடத்து அவைகளை நாம் அறிந்ததாகக் கொள்ள முடியாது. கேட்டதாக, பார்த்ததாக, வாசித்ததாக வேண்டுமானால் கூறலாம்.ஞானம் கொடுக்கப்பட்டவர்களான விசுவாசிகள் குர்ஆனின் வசனங்களைக் கேட்டவுடன் அஞ்சி, நடுங்கி, சிரம் சாய்த்தவர்கள் ஆகிவிடுவர் என இறைவன் கூறுவது நான் மேற்கூறிய தாக்கத்தை அன்றேல் விளைவைத்தான். இப்போது நமது நிலை தெளிவாகியிருக்குமே. நாம் விசுவாசிகள் தானா?

இது போன்றதே அல்லாஹ்வின் மறுமை பற்றிய அறிவிப்பும், அதில் நம்பிக்கை கொள்ள வேண்டுமென்பதும் ஆகும். அந்த நாள் பற்றி புனித மாமறை மிக விரிவாக அறிவிப்புச் செய்துள்ளது. அந்த நாளில் யாரும் யாருக்கும் உதவிட முடியாது. இறை விசுவாசிகள் மட்டுமே காக்கப்படுவர். அந்நாளில் உதவுவோர் யாரும் இரார். அதற்கு அடையாளமாக நூஹ் நாபி கால ஜலப்பிரளயம், மூஸா நபி கால கடலில் மூழ்கடிப்பு, லூத் நபி கால அழிப்பு, போன்றவற்றை உய்த்து உணர்ந்து அறியலாம். சாதாரண தண்டனைகளே அவ்வளவு மோசமானதாக இருக்குமானால் மறுமையின் கோரத் தாண்டவம் நம் கற்பனைக்கு எல்லாம் அப்பாற்பட்டது. ஆதலின் அம்மறுமைக்கு முன்னர் நாம் நமக்குத் தரப்பட்ட ஆயுளுக்குள் மறுமையைச் சந்திப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதில்லையா? ஆக மறுமைநாள் உண்டு என ஈமான் கொள்வதன் அடிப்படையில் பொதிந்துள்ள உண்மை நிலை என்ன என்பதைக் கண்டறிய வேண்டாமா? மறுமை பற்றிய அறிவு அல்லாஹ்வைத் தவிர எவருக்கும், ஏன் நமது நபிகள் நாதர் ரசூலே கரீமுக்கும் கூடக் கொடுக்கப்பட வில்லை. அதனை அவன் இரகசியமாகவே வைத்துள்ளான். அது எந்தச் ஷணத்திலும் எம்மிடம் வரலாம். இப்போது நான் எழுதிக் கொண்டிருக்கும் இந்த ஷணத்தில்கூட வந்துவிடலாம். அப்படி வருவது கண் இமைக்கும் நேரத்தைவிட மிகக் குறைவான நேரத்தில் நடக்கும் என்றெல்லாம் வல்ல நாயன் தனது திருமறை 16:77இல் பதிவு செய்துள்ளான்.

அறிதலுக்காக உங்கள் கவனைத்தை ஈர்க்க… சில வருடங்களுக்கு இந்தோனேசியா, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளையும், சில நாட்கள் முன்னதாக சில வினாடிகளில் ஜப்பானையும் உலுக்கி, குப்பைமேடாகவும், பிணக்காடாவும் ஆக்கி உலகத்தையே சோகத்தில் ஆழ்த்திய பூகம்பமும் கடற்கோள் என்ற ஆழிப் பேரலையும், காட்டுத்தீ போன்ற இன்னபிற இயற்கை அழிவுகளும் நமக்கு மறுமை பற்றிய அறிவை, விளக்கத்தை, அச்சத்தை அதனால் பக்தியைத் தராவிட்டால் அதுவும் ஒரு சாபக் கேடே. இந்தக் குர்ஆனை ஈமான் கொள்ளாதவரை உலகின் ஒவ்வொரு பகுதியிலும் வருடத்துக்கு ஒரு முறையோ இரு முறையோ இயற்கை அழிவுகள், பஞ்சம், பட்டினி, நோய் போன்றவற்றை அனுப்பி நமது அத்தாட்சிகளைக் காட்டிக் கொண்டே இருப்போம் என வல்ல நாயன் தன் மாமறையில் கூறியிருப்பதை உணர்வதும் குர்ஆனின் உண்மைத் தன்மையை விளக்கி மறுமையறிவை நல்கும்.

இதுவரை மறுமை பற்றி அறிவதன் யதார்த்தத்தைக் கண்டறியாதிருப்பின் அவ்வாறான முயற்சிகளில் இனியாவது நம்மை நாம் ஈடுபடுத்திக் கொள்வோமா? அதன் மூலம் ஈமானை முழுமையடையச் செய்வோமா? எந்த ஷணத்திலும் நடந்து விடக்கூடிய அந்த அநர்த்தத்துக்கு முகம் கொடுக்கக் கூடிய எதனை நாம் செய்துள்ளோம்? அது பற்றிய சிந்தனையாவது நம்மிடம் உள்ளதா? உண்மையாக மறுமை பற்றி ஈமான் கொண்டிருந்தால் நம்மால் வாளாவிருக்க முடியுமா? நமது ஈமான் எங்குள்ளது? அதன் நிலை புரிகின்றதா? அறிந்திருந்தால் மட்டுமே நம்பிக்கை வரும் என்பதன் உண்மைத் தன்மையை பின்வரும் பத்தி மேலும் விளக்கும்.

வெற்றியின் இரகசியத்தைப் பற்றிக் கூறும் போது பின்வரும் கருத்து என்னை வியப்புக்குள்ளாக்கியது. காரணம் இறைவன் மறுமையில் நடக்கவுள்ளதைக் குறிப்பிட்டு அதனை நம்பிக்கை கொள்ளுமாறு நம்மை ஏவியிருப்பதென்ற உண்மையே. அதாவது, கடலைக் கடக்கக் கப்பல் கட்டவேண்டுமா? முடிவு இல்லாத அகன்ற கடலை நினைத்து ஏங்குவதற்கு அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள் போதும். கப்பல் கட்டுவதன் அவசியம் உணரப்பட்டுவிடும். அது போன்றே, மறுமையின் பயங்கர நிலையை ஒருவன் பூரணமாக அறிந்திருந்தால் உலகில் எந்தத் தீமையும் நடைபெறாது. எல்லோரும் அதனைச் சந்திப்பதற்கான அனைத்து ஆயத்தங்களையும் செய்து இறையச்சம் உள்ளோராகத் திகழ்வர். இந்த பிரபஞ்சமே சாந்தியும் சமாதானமும் தவழுமிடமாகிவிடும். இஸ்லாம் சாந்தி, சமாதானம் என்பதன் உள்ளார்ந்த பொருளும் தெளிவாகிறது. பின்வரும் குர்ஆன் வசனம் 19:72இல் இறைவன் கூறுவது நமக்கு ஆறுதல் தருகின்றது. பின்னர் பயபக்தி உடையோராக இருந்தார்களே அவர்களை நாம் ஈடேற்றுவோம். இன்னும் அநியாயக்காரர்களை முழந்தாளிட்டவர்களாக அதில் விட்டு விடுவோம்.

ஈமானின் இறுதி அம்சம் விதியும் தீர்ப்பும்.

விதி என்பது சட்டம். அதாவது இறைவன் உலகைப் படைத்த அன்றே அனைத்துப் படைப்புக்களினதும் சிறப்பான ஒழுகலுக்காகப் பல திட்டங்களை உருவாக்கிச் சட்டங்களையும் வகுத்துள்ளான். அவனது சட்டங்கள் தவறவிடவோ, மீறப்படவோ முடியாதது. அவனின் விதிப்படியே அனைத்தும் நடைபெறுகின்றன. அச்சட்டங்களில் ஏதாவது சிறு மாற்றம் நடந்தாலும் அவை பாரிய, கற்பனை பண்ணிக் கொள்ள முடியாத பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும். எல்லாப் படைப்புகளினதும் இயக்கத்துக்கு ஓர் வழிமுறை, அனைத்து கிரகங்களினதும், நட்சத்திரங்களினதும் பயணம், பாதை, குறிப்பிட்ட தூர அமைவு, பருமன், வேகம், வளர்ச்சி, ஈர்ப்புச் சக்தி, செம்மை, சூடு, குளிர், அவைகளுக்கு ஓர் குறிப்பிட்ட காலக்கெடு போன்ற இன்னோரன்னவற்றைக் கொடுத்துள்ளான். உதாரணமாகச் சூரியன் சந்திரனை முந்திவிட முடியாது. இரவும் பகலும் அவ்வாறே. கடல்களுக்குள் கூட கண்ணுக்குத் தெரியாத தடை ஒன்றை வைத்துள்ளான். அதனால் அவை தமது எல்லையைத் தாண்டுவதில்லை. நம்மை வாழ வழிவகுப்பதற்காகப் பூமி, தன்மத்தியில் உருவாகிக் கொண்டு இருக்கும் நெருப்பை நேரமறிந்து வெளியேற்ற எரிமலையாகிக் குமிறி நெருப்பை வெளியேற்றும் நியதி. ஆயிரம் மைல்வேகத்தில் சுழன்றும், 67000 மைல் வேகத்தில் நகர்ந்தும் கொண்டிருக்கும் இப்பூமியின் வேகம் நம்மைத் தாக்கிடாது விதித்திட்ட மதி நுட்பம்,

சிறிதைப் பெரிதாக, பெரிதைச் சிறிதாக, அசைவதை நிற்பதாக, நிற்பதை அசைவதாக, அண்மையைச் சேய்மையாக, சேய்மையை அண்மையாகக் காணும் கண்ணின் பண்;பு. அப்பப்பா… என்னே தொழில் நுட்பம்? விண்ணே நம் கண்ணுள்! ஆணின் விந்தின் ஒரு கலத்தில் மனித உருவாக்கத்துவத்துக்கான தகவல் திட்டம். தாயின் வயிற்றில் கருவின் வளர்ச்சி, கருவறையுள் நீர்ப்பையால் காப்புக் கவசம். தங்கியிருக்கும் காலம், வெளியேற்றம் இவற்றை எல்லாம் எழுதுவதாயின் நம் வாழ் நாளும் போதா. எழுதுவதற்காக ஏழு கடல்களும் மேலும் ஏழு கடல்களும் மையாக்கப்பட்டு உலகின் அனைத்து மரங்களும் எழுதுகோல்களாக ஆக்கப்பட்டாலும் எழுதி முடியாது என இறைவன் தன்திருமறையில், 18:109இல், பகன்றுள்ளான். கலா கத்ர் எனப்படும் இந்நம்பிக்கை ஆறாவதாகக் குறிப்பிடப்பட்டு இருந்தாலும் மிகவும் ஆழ்ந்த கருத்தையும், ஞானத்தையும் கொண்டுள்ளது. ஞான வாசலைத் திறக்க துணை நிற்க வல்லது எனக் கூறினும் மிகையல்ல. அல்லாஹ்வைப் பற்றி அறிவதில் மிகவும் அரிய பெரிய பல தகவல்களைத் தந்து நம்மை வியப்பில் ஆழ்த்துவது. விதியைத் தொடரும் தீர்ப்பு. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு குறிப்பட்ட காலம் என்ற ஒன்று தீர்மானிக்கப் பட்டிராவிடில் இவ்வுலகத்தை இறைவன் எப்போதோ அழித்திருப்பான் என்ற இறை அறிவிப்பும் நாம் வாழ வழி வகுக்கும் இறை கருணை. ஷைத்தான் உட்பட அநியாயக்காரர்களுக்குக்கூட ஒரு காலத்தை நிர்ணயம் செய்து ஒரு தீர்ப்பை வழங்கி உள்ளதால், அவர்கள் தலைக் கனம் கொண்டு திரிகின்றார்கள். இவையெல்லாம் அவன் செய்திருப்பது நமது அறிவுக்கு விருந்தாவதுடன், உலக இயக்கத்துக்கும், அதன் சமநிலையைப் பேணுவதற்கும், நமக்குத் தரப்பட்டுள்ள ஆறாவதறிவின் பயன்பாடு, மதிப்பு போன்றவற்றிற்கும் கொடுக்கப்பட்ட அங்கீகாரமாகவும் ஆகி நமக்குப் பேருதவி புரிகிறது. ஆக இது பற்றித் தெளிவான அறிவை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வறிவை எல்லாம் நமக்குத் தருவதற்காக அருளப்பட்டதே அருள் மறை குர்ஆன். கருணையாளன் அல்லவா அல்லாஹ். ‘6:12 அவன் தன்மீது கருணையைக் கடமையாக்கிக் கொண்டான்’ அவனது கிருபைக்குத் தான் அளவேது. சுபுஹானல்லாஹ்.

அடுத்து, கடமைகளுள் முதன்மையான, ‘கலிமா’ எனும் மூலமந்திரம். இப்படிக் கூறுவதைவிட கடமைகளுக்கு முதன்மையானது என்றே நான் கருதுகிறேன். காரணம் லா இலாக இல்லல்லாஹ் என்பதை ஏற்றுக்கொள்ளாதவரை ஒருவன் இஸ்லாமியன். முஸ்லிம், மூமின் என்ற வரம்புக்குள் அடங்கான். அந்த படிநிலையில் அடங்காதவனுக்குக் கடமைகள் எப்படி கடமையாக வரும்?. சாதாரண உத்தியோகம் பார்ப்பவன்கூட நியமனத்தை ஏற்றுப் பதவியில் அமர்ந்த பின்னர்தானே கடமை செய்யும் நிலைமை தோன்றுகிறது. அதுவே, ‘கலிமா கடமைகளுக்கு முதன்மையானது’ என்ற கருத்தை முன்வைக்கத் தூண்டியது. கலிமா அறிந்து நடைமுறைப்படுத்தப்படாத விடத்து செய்யப்படும் கடமைகள் ஏற்கப்படுமா? கடமை செய்யும் உரிமையாவது உண்டா? கலிமா வலியுறுத்தும் ஓரே இறைவன் என்ற கொள்கையில் சரிவு ஏற்படுமாயின் ஷிர்க் என்ற இணைவைத்தலுக்குள் நம்மை ஆழ்த்தி அல்லாஹ்வின் மன்னிப்பை ஹறாமாக்கி விடுகிறது. இப்போது புரிந்திருக்கும் கலிமா கடமைகளுக்கும் முன்னோடி, முதன்மையானது என்பது. இன்னும் கூறின் கலிமா ஈமான் அரும்பும் தலம். கலிமாவில் ஏற்படும் சிறு தளர்வுகூட அரும்பிய ஈமானைக் கருகி அழிய வைத்திடும். ஓரிறையை வெளிப்படுத்த வந்தனவே வேதங்கள், தீர்க்கதரிசிகள். அண்டசராசரங்களும் கலிமாவை வலியுறுத்தி நிற்பன. ஆதமின் படைப்பிலிருந்தே அறிமுகமாகி நிலைப்பன. 7: 172 இதனைச் சிறப்பாக விளக்கும். ‘இன்னும் உமது ரப்பு, ஆதமின் மக்களாகிய அவர்களது முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி, அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக்கி வைத்தபோது, ‘நான் உங்கள் ரப்பு அல்லவா?’ (எனக்கேட்க) ‘ஆம் நாங்கள் சாட்சி கூறுகிறோம்’ என்று அவர்கள் கூறியதை நினைவூட்டும். …….’ அல்லாஹ் போதுமானவன்.

லா இலாக இல்லல்லாஹ் என்ற பன்னிரு எழுத்துக்களைக் கொண்ட அல்லாஹ்வைத் தவிர நாயன் வேறு யாருமில்லை என்ற கலிமாவின் பொருளை முன்னைய பந்தியில் விரித்துள்ளோம். ஒருவன் இஸ்லாமியனாக ஆவதற்கு முதற் கட்டமாக மேற்கண்ட கலிமாவை வாயினால் மொழிந்து மனதினால் ஏற்றிட வேண்டும். அடுத்த ஷஹாதாக் கலிமாவின் மூலம் நாம் முன்பு கூறிய அல்லாஹ்வைத் தவிர வேறு நாயனில்லை என்ற தத்துவத்தை உண்மையாக அறிந்து, அறிந்ததை மெய்ப்படுத்துவான் வேண்டி சாட்சி பகர வேண்டும்.

கலிமாவை நாம் வாயினால் மொழிந்து, மனதினால் ஏற்றவரை எல்லாம் சரியாகவே நடை பெற்றுள்ளது. அடுத்த கட்டளையான சாட்சியம் கூறும் கலிமாவை நாம் மொழிந்த போது உண்மையாகவே நாம் அல்லாஹ்வைத் தவிர வேறு நானில்லை என்ற நடைமுறைத் தத்துவத்தை உண்மையாகக் கண்டு பிசகற அறிந்து அல்லாஹ்வைத் தவிர நாயன் யாருமில்லை என்று சாட்சியம் கூறியுள்ளோமா? இங்குதான் பிரச்சினை தொடங்குகின்றது!

சிறு வயதில் நாம் கலிமாக்கள் ஐந்தென அறிந்து அவற்றைப் பாடம் பண்ணியுமுள்ளோம். ஆனால், அவைகளை நிதர்சனமாக அறிந்து உண்மைப்படுத்தி உள்ளோமா? ஸ்டீரியோ டைப் என்பார்களே அப்படி அவைகளை அறிந்து வைத்துள்ளோமே தவிர, அதனை அறிய வேண்டும் என்பதைக்கூட நாம் அறிந்து வைத்திருக்கவில்லை என்பதே கசப்பான ஆனால் அப்பட்டமான உண்மை. நாம் அறியாதவர்கள் என்பதை அறியாதவர்களாக இருக்கும் மனிதனின் கடைநிலை. அல்லாஹ் நம்மைக் காப்பானாக. இதனால்தான் இறைவன், நான் மனிதனை மிகச் சிறந்த படைப்பாகவே படைத்தேன். ஆனால் அவர்கள் கடையர்களிலும் கடையர்களாக, மிருகங்களாகிவிட்டனர் எனக்கூறுகின்றான். ஊர்வனவற்றுள் மிகக் கீழ்த்;தரமானது விளங்கிக் கொள்ளாத மனித இனமே என நம் தரத்தின் உண்மை நிலையை அல்குர்ஆனில் வெளிப்படுத்துகிறான்.

இந்த கலிமாவின் உண்மைத் தத்துவத்தை விளக்க வந்த அனைத்து வேதங்களும், அதிகமாகத் தோற்றுப் போயுள்ள நிலையை அந்தந்த தூதுவர்களே தமது வாயால் வெளிப்படுத்தி உள்ளதை இறைவன் தனது மாமறை புர்கானில் பல்வேறிடங்களில் பதிவாக்கியுள்ளான். இந்த அடிப்படையில் வெளிப்படுத்தப்படவிருப்பதே எம் கண்மணி நாயகம் அவர்களின் எனது சமூகத்தினர் குர்ஆனைப் புறக்கணித்துவிட்டனர் என்ற வேதனையின் வெளிப்பாடும், அறிக்கை சமர்ப்பிப்பும். அப்படியாயின் நாம் லா இலாஹ… என்ற கலிமாவினை ஏற்கவில்லையா? என்றால் அனைத்து முஸ்லிம்களும் ஏற்றுள்ளனர் என்ற ஓரே பதிலே கிடைக்கிறது. ஆம், ஆனால் நாம் ஏற்றுள்ளது வாயளவில் என்பதே யதார்த்தம். இதையும் வல்ல நாயன் வெளிப்படுத்தியுள்ளான் என்பதை முன்னர் கண்டோம். நாம் இப்படிச் செய்வோம் என்பதைத் தீர்க்கமாக அறிந்த ஆலிமான அல்லாஹ் நாம் கலிமாவை வெறுமனே வாயளவில் கூறிச் செல்வதற்கு வழிவிடாது, சந்தேகத்துக்கிடமின்றி மிகவும் தெளிவாக அறிந்து சாட்சியம் கூறவைத்து நம்மை ஈடேற்றி வைப்பதற்காகச் செய்யப்பட்ட ஏற்பாடே இரண்டாம் கலிமாவான சாட்சியம் கூறும் சஹாதத்து. 3:18 – கூறுவதைப் பாருங்கள். ‘நீதியை நிலைநாட்டக் கூடியவனாக உள்ள நிலையில் தன்னைத் தவிர யாரும் இல்லை’ என்று அல்லாஹ் சாட்சி கூறுகின்றான். அவ்வாறே வானவர்களும், அறிஞர்களும் சான்று பகர்கின்றனர். அவனைத் தவிர வேறு யாருமில்லை. மிகைத்தவ னாகவும், ஞானமுள்ள வனாகவும் இருக்கிறான். மேலும், 17:36 ‘….நபியே! எதனைக் குறித்து உமக்குத் தீர்க்கமான ஞானமில்லையோ அதனை நீர் பின்பற்றாதீர்’. எனப் பணித்திருப்பதும் நமது கவனத்தை ஈர்ப்பதுடன், மேற்கண்ட கருத்துக்கு வலிமை சேர்ப்பது.

தொழாதவன் நம்மைச் சார்ந்தவனல்லன் என்ற நாயக வாக்கினை அடிப்படையாகக் கொண்டு, தொழுபவன்தான் இஸ்லாமியன் என்ற கருத்தையடைந்து, தொழுகைதான் இஸ்லாம் என்ற கருத்து மேலோங்கிய நிலையில், நம்மவர் மத்தியில் இஸ்லாம் புதிய பரிமானத்தைப் பெற்றுள்ளமை தெரிகிறது. இக்கருதுகோள் குர்ஆன் பற்றிய கவனத்தை ஈர்ப்பதில் ஏதோ ஓர் வகையில் முக்கியத்துவத்தை இழக்க வைத்திருக்கிறது. இதன் கருத்து தொழுகை முக்கியமற்றது எனக் கருதிவிட வேண்டாம். ஆனால், அதனைவிட முக்கியமான ஒன்று தன முக்கியத்துவத்தை இழந்து, நாம் செய்யும் அனைத்துக் கடமைகளையும் பெறுமதி இழக்க வைத்துவிடக் கூடாது. தொழுகையின் முக்கியத்துவம் ஈமானின் முக்கியத்துவத்துக்கு பிந்திய நிலையில் வரவேண்டியது என்பது நமது ஞாபகத்தில் இருத்தப்பட வேண்டியது. ஒன்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போது இன்னொன்று முக்கியத்துவத்தை இழந்து விடுவது இயற்கையே. இதுவும் இறை நியதியே. இதனை அறியாமை எனக் கூறுவதைத் தவிர வேறு வழி இல்லை. தொழுகை மானக்கேடான விடயங்களில் இருந்து உங்களைக் காப்பாற்றும். அதைவிட மேலானது அவனை நினைவு கூர்வதாகும் என அவன் ஓரே வசனத்தில் கூறியிருப்பது தொழுகையில் நிலைக்க வேண்டிய நினைவுகூர்தலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இறைபாங்கு முன்னையதை விளங்க உதவும்..

தொழுகை பற்றிய அறிவை, நிலைநிறுத்தல் என்ற வரம்புள் இறைகூற்றுக்கு அமைவாக ஆய்வுக்குட்படுத்தத் தேவை இல்லை, மாறாக நன்னோக்குடன் சிறு விளக்கத்தைக் கூறுபவன்கூட இஸ்லாத்துக்கு எதிரி என்று நினைக்கும் அளவுக்கு, பட்டம் சூட்டும் அளவுக்கு மடமை, அறியாமை அவர்களை அரவணைத்து ஆட்கொண்டு நிற்கின்றது. இந்த நம்பிக்கை யாளரின் தொழுகை பற்றிய கருதுகோள், அதன் நோக்கம் என்னவென்பதே அறியாத, ஸ்டீரியோ தன்மைகொண்ட நிலை நம்மைத் திகைக்க வைக்கின்றது. அல்லாஹ் நம்மைக் காப்பானாக. அல் குர்ஆன் 29:38 ‘…அவர்களுக்கு அவர்களுடைய செயல்களை ஷைத்தான் அலங்காரமாக்கிக் காண்பித்தான். அவர்கள் கூர்ந்த மதியினராயிருந்தும், நேரிய வழியை விட்டும் அவர்களைத் தடுத்து விட்டான்’. தொழுகைக்குத் தரப்படும் முக்கியத்துவம் கலிமாவை அறிவதற்கு அடுத்தபடி யாகவும், அதற்கான சாதனமாகவும் பாவிக்கப்படுவது வரவேற்புக்குரியதே. ஆனால் தொழுகை பற்றிய அறிவு அறியாமல் விடப்பட்டிருப்பது மனித அவலத்தை உண்டுபண்ணுவது என்பது அறியப்படாதிருப்பது துர்அதிர்ஷ்டமா? சாபக்கேடா?

ஐவேளை பள்ளிசென்று ஏதோ சில கிரியைகளை முடித்துத் திரும்புவதே தொழுகை என்ற அளவுக்கு அறியாமை நம்மவரை ஆட்கொண்டு இருக்கின்றது. தொழுகை பற்றி அல்லாஹ் குர்ஆனில் ஏதும் கூறியிருக்கின்றானா என்பதுவும் தெரிவதில்லை. தெரிந்து கொள்ளும் எண்ணமும் கிடையாது. அப்படியே அதனைத் தெரிந்தவர்கள் எடுத்துக் கூறினும் அதனை ஏற்கும் மனநிலையும் நம்மில் காணப்படுவதாகத் தெரியவில்லை. ஒரு சிலர் குர்ஆன் கூறியுள்ளமையை யாராவது கூறுவதைக் கேட்டு, வியப்புற்று பின்னர் அதனை ஆம் எனச்சரிகண்டு செல்கின்றனர். அப்படிச் செவியேற்றுச் செல்வோர்கூட காதால் கேட்ட அவ்வுண்மையைக் கருத்தில் நிறுத்தாது, கேட்ட மாத்திரத்தே, கேட்ட அந்த இடத்திலேயே விட்டுக் சென்றதை நான் பல தடவைகளில் அவதானித்துள்ளேன். அந்த அளவுக்கு அவர்கள் அக்கறை இன்மையில், கோணற் பாதையில் தம்மூதாதையர் வழியில், தம்மை முற்று முழுதாக ஈடுபடுத்திக் கொண்டு உள்ளனர். அல்லாஹ் கூறுவதுபோல், அவர்களது கண்கள் திரையிடப்பட்டிருக்கின்றன. காதுகள் அடைப்பான் போடப்பட்டிருக்கின்றன. அவர்களது இதயங்களில் பூட்டுக்கள் போடப் பட்டிருக்கின்றன என்றே கருத வேண்டி உள்ளது. அல் குர்ஆன் 18:101 என்னை நினைவு கூர்வதைவிட்டும் அவர்களது கண்கள் திரைக்குள் இருந்தன. மேலும், அவர்கள் செவியேற்கச் சக்தியற்றவர்களாக ஆகிவிட்டனர். பின்வரும் பத்திகள் இதனை அணுகும்.

குர்ஆன் கூறும், தொழுகையாளிகளுக்குக் கேடுதான் என்ற வல்ல நாயனின் சொல்கூட நம்மவர்களின் கண்களுக்குப் படுவதோ கருத்தை ஈர்ப்பதோ இல்லை. யாராவது இந்த இறைவாக்கைச் சற்று சிந்தித்தால் அவர்கள் தமது தொழுகை பற்றி ஓர் சுயமதிப்பீட்டையாவது குர்ஆனின் அடிப்படையில் செய்து கொள்ள முடியும். அதனால் தம்மைத் திருத்திக் கொள்ள முடியும். அல்லாஹ் அறிவித்தவாறு தொழுகையைப் பேண, நிலை நிறுத்திக்கொள்ள முடியும்.

தொழுகை பற்றி இஸ்லாம், 4:103 ‘நிச்சயமாக தொழுகையானது இறைநம்பிக்கையாளர் மீது நேரங் குறிப்பிடப்பட்ட கடமையாக இருக்கிறது’. அடுத்து 20:14 மிகத் தெளிவாகத் தொழுகை என்றால் என்னவென்று கூறியுள்ளது. ‘நிச்சயமாக நான்தான் அல்லாஹ். என்னையன்றி நாயனில்லை. ஆகவே என்னையே (ப அஃபுது- அறிவீராக) வணங்குவீராக. மேலும் என்னை நினைவு கூர்ந்திட, தொழுகையை நிலை நிறுத்துவீராக’. இப்போது தொழுகை என்றால் என்ன என்பதற்கான விளக்கம் கிடைத்து விட்டது. இன்னும் தொழுகை பற்றி ஏதாவது உள்ளதா எனப் பார்ப்போமாயின் மிகச் சிறந்த இன்னொன்று நம்மை அறிவுறுத்துகின்றது. ‘இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை, நீர் ஓதிக் காட்டுவீராக. இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக. நிச்சயமாகத் தொழுகையானது மானக்கேடானவைகளை விட்டும், வெறுக்கப்பட்டதைவிட்டும் தடுக்கும். மேலும், அல்லாஹ்வை நினைவுகூர்வது மிகப் பெரியதாகும். அல்லாஹ் நீங்கள் செய்பவைகளை நன்கு அறிகிறான்’.– 29:45 இதிலிருந்து தொழுகை மூலம் எத்தனை நன்மைகள் கூறப்பட்டாலும், அல்லாஹ்வை நினைவு கூர்வது என்பதே அதன் பிரதான நோக்கம் ஆத்ம ஈடேற்றம், மானுடப் பிறப்பின் அடிநாதம் என்பது வெள்ளிடைமலை. மேலும் இவ்வுண்மையைப் பின்வரும் வேதவசனம் மூலம் ஊர்ஜிதம் செய்யலாம். ‘பயபக்தியாளர் அல்லாஹ்வை நினைவுகூர்ந்து உதவி தேடுவர்’. (இதனைப் பின்னர் விளக்கவுள்ளேன்) உதவி தேடுவதற்கே தேடப்படுபவர் நினைவுகூர்ந்து அறியப்பட வேண்டியிருப்பதால்,இறைவனுக்காக அவனை நினைவு கூர்வதற்காகவே நிலைநிறுத்தும்படி பணிக்கப்பட்ட தொழுகையில் அவனை நினைவுகூராது விடமுடியுமா? சற்று சிந்தித்தால் இறையுதவி தேடிவரும். நாம் அவனை நினைவு கூர்ந்தால் அவன் நம்மை நினைவுகூர்வான் என்பதும் இறைகூற்றே.

அறியாமையில் அல்லலுறும் சிலர், தாம் தொழுகையில் இறைவனோடு உரையாடுவதாகக் கூறிப் பிதற்றுகிறார்கள். அல்லாஹ் தன் அருள் மறையில் எந்த ஒரு இடத்திலும் மனிதர் தன்னோடு உரையாடலாம் எனக் கூறியிருக்கவில்லை. அல்லது தொழுகை அல்hஹ்வுடன் நடத்தும் உரையாடல் எனக் கூறவில்லை. அப்படிக் கூறுபவர்கள் இறைவன் மேல் பொய்யுரைத்த குற்றத்துக்காளாகி நிராகரிப்போராக இறை சாபத்துக்கும் ஆளாகின்றனர். இறைவன் மேல் பொய்யுரைத் தோர் முகம் மறுமையில் கருத்துவிடும் என அல்லாஹ் தீர்ப்பளித்து உள்ளமைகூட அவர்களுக்குத் தெரிவதில்லை. மாறாக இறைவன் தன்திருமறை 42:51இல், ‘வஹீ யின் மூலமோ, அன்றேல் திரைக்கு அப்பாலிருந்தோ, அன்றேல் ஓரு தூதுவரை அனுப்பியோ தவிர எம்மனிதருடனும் அல்லாஹ் பேசுவதில்லை……’ என முற்றாய்ப்பு வைத்துள்ளான். மாறாக அல்லாஹ்வை அழைக்கலாம். அழைப்பை ஏற்பான். அவன் அழைப்புக்கு பதில் கூறுவான். அழைத்தல் வேறு உரையாடல் வேறு. பதில் கூறல் என்ற கருத்து நம்தேவையை நிறைவேற்றல். அபயக்கரம் நீட்டல், உதவிபுரிதல் போன்ற பல கருத் துக்களை உள்ளடக்குமே தவிர உரையாடுவதோ கதைப்பதோ அல்ல. ஆக யாராவது இறைவன் தம்மோடு பேசினான் எனக் கூறுவார்களாயின் அது அப்பட்டமான பொய்யே தவிர வேறில்லை. 77:15, 19, 24, 28, 34, 40,45, 47, 49, மேற்கண்ட இலக்கங்கள் அனைத்தும் அவனது வசனங்களைப் பொய்யாக்கியோருக்குக் கேடுதான் எனக் கூறுபவைகளாகும்.

தொழுகை பற்றி அல்லாஹ் மிக அதிகமாகப் பேசியுள்ளான். பேசிய அனைத்து சந்தர்ப்பங்களிலும், அவன் தொழுகையைப் பேணி வருவீராக, தொழுகையை நிலை நிறுத்துவீராக. தொழுகையை நிறைவேற்றுவீராக, தொழுகையை நிலைநாட்டு வீராக தொழுகையைக் கடைப்பிடிப்பீராக எனவே கூறியுள்ளான். இன்னொன்றை நான் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டி யுள்ளது. அது, தொழுகைதான் வணக்கமென நாம் கருதிக்கொண்டிருப்பது. இதனைக்கூட இறைவன் மிகத்தெளிவாகக் குர்ஆனில் பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியுள்ளான். அண்ட சராசரத்தில் உள்ள அனைத்தும் விரும்பியோ விரும்பா மலோ தன்னை வணங்கிக் கொண்டிருக்கின்றன. துதி செய்து கொண்டிருக்கின்றன. சிரம் சாய்க்கின்றன. தனது புகழைப் பாடாத எதுவுமில்லை எனக் கூறியுள்ளான். அப்படியானால் வணங்கிக் கொண்டிருப்பவர்களிடம் மீண்டும் தன்னை வணங்குங்கள் என இறைவன் கூறியிருப்பானா? கடமையாக்கி இருப்பானா? நுண்ணறிவாளனான வல்ல நாயன் அப்படியான பிழைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவன். 17:44- ஏழு வானங்களும், பூமியும் இன்னும் அவற்றில் உள்ளவை யும் அவனைத் துதி செய்த வண்ணமுள்ளன. அவனது புகழைக்கொண்டு துதி செய்யாதது எதுவுமே இல்லை. எனினும், அவற்றின் துதியை நீங்கள் விளங்கிக் கொள்ளமாட்டீர்கள். 57:1, 59:1, 61:1, 62:1, 64:1, பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும் அல்லாஹ்வை வணங்குவதாக, சிரம் பணிவதாகக் கூறும் வசனங்கள் இன்னுமுள.

தொழுகை விடயத்தில் நாம் அரிச்சுவடியில் இருப்பதற்குக் காரணம் குர்ஆன் மொழி பெயர்ப்புக்களில் உள்ள குறைபாடே எனக் கருத இடமுண்டு. மொழி பெயர்ப்பாளர் தாம் விளங்கிக் கொண்டதற்கமைய அல்லது பரம்பரை பரம்பரையாக மக்கள் மத்தியில் தொழுகை பற்றி நிலவி வந்த கருத்துக்கு மாற்றமாக அமையாத வகையில் சொற் பிரயோகங்களை மேற்கொண்டு தமது பணியை நிறைவு செய்துள்ளனர் என்பதே அடியேனின் கருத்து. மொழிபெயர்ப்பாளர் என்ற வகையில் அவர்கள் தம் அறிவுக்கு உட்பட்டு தம்வேலையை முடித்த வரையில் அவர்களுக்கு நாமனைவரும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம். ஆயினும் அவை பரிபூரணமான குர்ஆனிய வசனங்களுக்குப் பூரணமான மொழி பெயர்ப்புமல்ல. பூரணமான பெயர்ப்பாக இருக்கவும் முடியாது. காரணம் மறுமைவரை நிலைத்து நின்று தீர்ப்பு வழங்கவுள்ள இப்புனித குர்ஆனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள கருத்துக்கள், காலங்களுக்கேற்ற விதத்தில் தம் அறிதலின் விரிவுக்கேற்ப மாற்றத்துக்கு ஆளாவது தவிர்க்கப்பட முடியாததே. அதனாலேயே நாம் பின்பற்றும், மனிதன் தன் அறிவுக்கேற்ப யாத்துக் கொண்ட, ஷரிஆச் சட்டங்கள்கூட விமர்சனத்துக்கு ஆளாகின்றன. மாற்றத்தை வேண்டி நிற்கின்றன. அது காலத்தின் அவசியம். அதற்கு குர்ஆன் வழிவிட்டுக் கொடுக்கும். ஆம் குர்ஆன் இறைசட்டமல்லவா! அது நிரந்தரமானது நம் அறிவுக்கேற்ப பரந்து விரிந்து பயன்தரும் பொருள் தரக்கூடிய கருத்துக் கருவூலம். எனது சமூகத்தினர் குர்ஆனைப் புறக்கணித்து விட்டனர் என்பது எத்துனை நிதர்சனமாக உள்ளது.

ஒரு இறை வசனத்துக்கு தமிழ் மொழி பெயர்ப்பொன்றில் ஏற்பட்டுள்ள கதியை ஈங்கு குறிப்பிடுவது, நான் மேலே கூறிய கருத்துக்கு வலு சேர்க்கும். அல்குர்ஆன் 15:99 க்கு உங்கள் கவனத்தை ஈர்க்கிறேன். வஅஃபுது ரப்பிக ஹத்தா யா அத்தியக அல் யக்கீனு. Wa A`bud Rabbaka Ĥattá Ya’tiyaka Al-Yaqīnu. இதன் தமிழ் மொழி பெயர்ப்பொன்றில் ‘உமக்கு ( ‘யக்கீன்’ என்னும் ) மரணம் வரும்வரை உமது ரப்பை வணங்கிக் கொண்டிருப்பீராக’ காணப்படுபடுகின்றது. இங்கு ‘யக்கீன்’ என்ற பதம் ‘உறுதிப்பாடு’ என்ற பொருளைக் கொண்டிருந்தும் அதற்கு மரணம் என்ற கருத்து வலிந்து கொடுக்கப்பட்டுள்ளது. இது மக்களை எந்தளவு வழி கேட்டில் கொண்டு சென்றுள்ளது என்பதை அல்லாஹ்தான் அறிவான். இதற்குக் காரணம் நான் முன் கூறிய தொழுகை பற்றிக் கர்ணபரம்பரையாக நம்மத்தியில் வேரூண்றியுள்ள தவறான கருதுகோளே. இதற்கு வழிசமைத்த, அடுத்த, ஆனால் முக்கியமான காரணம் வஅஃபுது என்ற பதத்துக்கு வழக்கம்போல் வணங்குதல் எனப் பொருள் கொள்ள முனைந்தமையே.

இக்கருத்தைக் கொண்ட மொழி பெயர்ப்பு தொடங்கிய இடம் சூரத்துல் பாத்திஹாவின் இய்யாக நஃபுது என்ற வசனமே. நஃபுது , வஃபுது போன்ற சொற்களுக்கு அறிதல் என்ற பொருளைத் தந்திருந்தால் இது போன்ற தடப் புரள்தல்களுக்கு வழியேற்பட்டிருக்காது. ஆக, மேற்சொன்ன 15:99 என்ற வசனத்துக்கு உமக்கு உறுதிப்பாடு வரும்வரை அறிந்து கொண்டி ருப்பீராக எனக் கருத்துக் கொள்ள வேண்டிய இடத்தில், தொழுகையை அல்லது வணக்கத்தை மனதிற் கொண்டு மொழி பெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளமை மிகத் தெளிவான பிழைகளுக்கு கால்கோளாகியுள்ளன. இய்யாக நஃபுது எனத் தொடங்கும் இரு வசனங்களும் தொழுகையில் பாவிக்கப்படுவதை நோக்காகக் கொண்டு வணங்குகிறோம் என மொழி பெயர்ப்புச் செய்யப்பட்டிருப்பின், தொழாத வேளைகளில் அவ்வசனம் ஓதப்படும் போது பொருத்தமற்ற தன்மையை ஏற்ப்படுத்துகிறது. அது மக்களுக்குப் புரியாதிருப்பதற்குக் காரணம் அவர்களுக்கு அந்த பாத்திஹா சூறாவின் கருப் பொருள் கவனத்தை ஈர்ப்பதில்லை என்பதே. அன்றேல் தெளிந்த உள்ளத்துடன் அறிவுபூர்வமாக, உணர்வுபூர்வமாகச் சிந்தித்து விளங்கிக் கொள்ள முயலாததே.

ஒருவரை அறிந்திருந்தாலே அவரிடம் உதவி தேடலாம். அறியாதவரிடம் உதவி தேடமுடியுமா? நாம் உதவிதேட முனைபவர் எவற்றையெல்லாம் தரக்கூடியவர், எப்போதெல்லாம் தரப்படும் போன்ற பல் வேறு அம்சங்கள் உதவி தேடலிலும் தருதலிலும் அடங்கும். யாரிடம் உதவி தேடப்படுகிறது என்பதை அறிந்தாலே, அவரது கண்ணியத்துக் கேற்றவாறு, மதிப்பு, மரியாதை, பண்பு, குறைவடையாத முறையோடு உதவி தேடலாம். அப்போதுதானே நம் தேவை நிறைவேற்றித் தரப்படும். நம் தேவையை நிறைவேற்றித் தருவபனை அறியாமல் இலக்கின்றி நம் தேடலைத் தொடர முடியுமா? உதவி தேடல் பற்றி விளக்க முனைந்தால் அதுவே ஓர் கட்டுரையாகிவிடும். ஆயினும் குர்ஆன் அதற்கான பரிகாரத்தை முன்வைத்துள்ளதைக் கூறாதிருக்க முடியாது. ஆம். பயபக்தியாளர்கள் அல்லாஹ்வை நினைவுகூர்ந்து உதவி தேடுவர் என குர்ஆன் நவின்றுள்ளது அனைத்துக் குழப்பங்களுக்கும் தீர்வாகிறது. நமது நோக்கம் தொழுகை என்ற பதம் மொழி பெயர்ப்புக்களாலும், பாரம்பரியங்களாலும், முன்னோரின் வழிமுறைகளாலும், குர்ஆனிலிருந்து விலகிச் சென்று அதன் உயர் தத்துவத்தை, பயன்பாட்டை, அதனால் அடையவேண்டிய ஈடேற்றத்தை, பிறப்பின் பயனை அடைய முடியாது உள்ளமையை உணர்த்துவதே. அதன் மூலம், குர்ஆன் கூறும் தொழுகையைக் கடைப்பிடித்து, நிலைநிறுத்தி இம்மைக்கும் மறுமைக்கும் நன்மையை சேர்த்துக்கொள்ளத் தூண்டுவதே.

நோன்பைப் பற்றிக் கூறும்போது குர்ஆன் இதற்கு முன்னர் உங்கள் முன்னோருக்குக் கடமையாக்கப்பட்டது போன்றே உங்கள் மீதும் அது கடமையாக்கப்பட்டுள்ளது எனக் கூறுகின்றது. மேலும், றமழான் மாதத்தை அடைந்துவிட்டால் எண்ணிக் கணக்கிட்டு நோன்பு நோற்பீராக என்கிறது. ஆனால் நோன்பைத் தீர்மானிப்பதிலும், அதனை நோற்பதிலும், நோன்பை நிறைவு செய்வதிலும் ஏற்படுத்தப்பட்டுள்ள குளறுபடிகள் எண்ணற்றவை. அவற்றைப் பற்றிக் கூறிக் கொண்டி ருப்பது நமது நோக்கமல்ல. நோன்பு மாதத்தில் லைலத்துல் கத்ர் என்ற இரவில் புனித குர்ஆன் இறக்கப்பட்டது என்பதும், அதிகாலையில் வயிறு முட்டச் சாப்பிட்டு, சூரியாஸ்தமணத்தில் நோன்பு திறத்தல் என்ற பெயரில் அள்ளிக் கொட்டிக் கொள்வதையும், அதையும் நாகரிகமாகவும், ஏதோ சாதனைகள் புரிவது போலவும், தமது பெருமையையும், பொருளாதார உயர்வையும் அல்லது மேலான்மையையும் காட்டுவதற்காக அந்நிய மதத்தவர்களைக் கூட வருந்தி அழைத்து திருமண வைபவம் போன்று வினோத விழாக்களாக இப்தார் என்ற பெயரில் அரங்கேற்றப்படுகின்றது. எத்தனை பேர் நோன்பின் மகத்துவத்தை, அதனால் நம்முள் ஏற்பட வேண்டிய மாற்றங்களை, நமது பண்பாட்டு விழுமியங்களை, அறிந்தோ அடைந்தோ உள்ளோம். நோன்பு காலத்தில் பிறைக்கும், நேரத்துக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவம்கூட நோன்புக்குக் கிடைப்பதில்லை என்பதே யதார்த்தம்.

ஸக்காத் – றமழான் மாத்திலேயே ஸக்காத் என்ற புனித கடமை நிறைவு செய்யப்படுகிறது. குர்ஆனில் தொழுகையைப் பற்றிக் கூறிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஸக்காத்தையும் இணைத்தே இறைவன் கூறியுள்ளதை நமது கவனத்தை ஈர்க்க வேண்டும். ஸக்காத் என்பது ஏழைவரி எனக் கூறப்பட்டு, வருடமொரு முறை சில ஷரியா விதிமுறைகளுடன் பணம் படைத்தவர்களுக்குக் கடமையாகக் கூறப்பட்டு செயல்படுத்தப்படுகின்றது. ஸதக்கா பெறத் தகுதியான எட்டு வகையினரே குர்ஆனில் பரிந்துரைக்கப்படுகின்றனர். ஸக்காத்தை பெறத் தகுதி படைத்தவர்கள் என ஸதக்கா பெறத் தகுதியான எட்டு சாராரே அனைவராலும் கூறப்படுகின்றன. இது எந்தளவுக்குச் சரி என்பது ஓர்புறமிருக்க, குர்ஆனில் ஓர் இடத்திலும் வருடத்துக்கொரு தடவை மட்டும் ஸக்காத் கணக்கிட்டு அக்கடமையை பூர்த்தி செய்யுமாறு இறைவன்; பணிக்கவில்லை. அனைத்து குர்ஆனிய வசனங்களிலும் தொழுகையோடு இணைத்து ஸக்காத் கூறப்பட்டுள்ளதால், தொழுகை அதிகாலை, காலை, மதியம், மாலை, இரவு போன்ற நேரங்களில் செயற்படுத்தப்படுவதைப் போன்று, நேரங்காலம் பாராது தேவைப்படுபவர்களுக்கு, தேவைப்படும் போது, அவர் தம் தேவையை நிறைவு செய்யக்கூடிய விதமாக எந்த அகால வேளையிலும்கூட நிறைவேற்றப்படல் வேண்டும் என்பதே இறை நோக்காக இருக்க வேண்டும். அல்ஹம்துலில்லாஹ் (பிழையாயின் அல்லாஹ் மன்னிப்பானாக) .

காரணம் ஸகாத் பெறத் தகுதியானவர்கள் எனக் கருதப்படுவோரான கடனாளிகள், பிரயாணிகள் உள்ளடக்கப்பட்டு இருப்பதே. காலநேரம் பார்த்து யாரும் வழிப்போக்கனாக ஆவதில்லை. சந்தர்ப்ப சூழ்நிலைகள் உலகையாளும் சக்கரவர்த் தியையும் வழிப்போக்கனாக, சிறு தேவைக்காக அடுத்தவனை எதிர்பார்hப்பவனாக நிர்ப்பந்தப்படுத்திவிடும். நாம் தற்போது பின்பற்றும் ஸக்காத் முறைமை இந்த வழிப்போக்கனுக்கு உதவ வேண்டும் என்ற இறைவிருப்பை நிறைவு செய்திடாது. ஆக நாம் ஸக்காத் கடமையை நிறைவேற்றாதவர்களாகவே இருப்போம் என்பதை நான் கூறி நீங்கள் புரிய வேண்டியதில்லை என்ற நிலைக்கு நீங்கள் தள்ளப்பட்டிருப்பீர்கள்.

குர்ஆன் 9:60 வசனத்தில் ‘தர்மங்கள் எல்லாம் வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும், அதற்காக உழைப்பவர்களுக்கும், எவர்களுடைய இதயங்கள் ஈர்க்கப்படுகின்றனவோ அவர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும், கடனாளி களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் இருப்பவர்களுக்கும், வழிப்போக்கருக்கும் உரியவையாகும். அல்லாஹ் ஏற்படுத்திய கடமையாகும். அல்லாஹ் அறிந்தோனும் ஞானமுள்ளவனுமாவான்.’ஸதக்காவுக்காகச் சிபாரிசு செய்யப் பட்டவர்களே ஸக்காத்தும் பெறத் தகுதியானவர்கள் எனக் கொண்டால், வழிப்போக்கர், கடனாளி போன்றோர் வருட மொரு, அதுவும் றமழான் பிற்பகுதியில்தான் வழிப்பயணத்தில் ஈடுபடுபவராகவோ கடனிறுக்க வேண்டியவராகவோ, இருக்க வேண்டும். ஆக தற்போதைய ஸக்காத் செலுத்தும் ஷரிஆ முறைமை மறுபரிசீலனைக்கு உரியதாகின்றது. உதவி என்பது, தேவை கருதிச் செய்யப்படுவதே அன்றி, நாம் கொடுப்பதற்காக ஒருவருக்குத் தேவையேற்பட வேண்டும் என்பதில்லை.

சில சமயங்களில் இஸ்லாமிய ஆட்சி நிறுவப்பட்டுள்ள நாடுகள் வேண்டுமானால் ஸக்காத் பணத்தை வருடமொரு முறை பெற்று, தேவைகளின் போது அவ்வப்போது நடைமுறைப்படுத்திக் கொள்ளலாம். எப்படியோ வருடமொரு தடவை தர்மம் கொடுக்கும் வரை தேவைப்பட்டோரைக் காக்க வைத்தல் இறையாணையை மீறிய செயலை ஒக்கும். மேலும் ‘விடுபடுவதற்கும்’ அன்றைய காலகட்டத்தில் கடனிலிருந்து, அடிமைத் தனத்திலிருந்து விடுபடுதல் என அறியப்பட்டது. இன்றைய நிலையில் அடிமைத்தனம் இல்லை. ஆனால், பல்வேறு நிர்ப்பந்தங்களில் இருந்து விடுபட வேண்டியுள்ளது. ஏன் நோயிலிருந்து, வறுமையிலிருந்து, பயங்கரவாதத்திலிருந்து, அகதி நிலையிலிருந்து, ஒப்பந்தங் களில் இருந்து விடுபட என அடுக்கிக் கொண்டே போகலாம். குர்ஆனியக் கருத்துக்கள், இறை கருணையினை விளக்கி அவனின் கருத்தாழத்தினைக் காட்டும், குர்ஆனது, நெகிழ்ந்து, விரிவடைந்து அனைத்தையும் அரவணைத்து நிற்கும் உயர்பண்பு உலகில் எச்சட்டத்திலும் சமயத்திலும் காண முடியாதது என்பதை விளக்க இதுவே போதுமானது. ஆயின், தற்போதைய ஸக்காத் செலுத்தும் ஷரிஆ முறைமை மறுபரிசீலனைக்கு உரியதாகின்றது. மேலும்,அல் குர்ஆன் 30:39ஆம் வசனம் ஸக்காத் பற்றி ஓர் சமிக்ஞையைத் தருகின்றமை ஆராய்வுக்குட்டுத்தப்பட வேண்டியதே! ‘மனிதர்களின் பொருள் களுடன் பெருகுவதற்காக வேண்டி, றிபாவுக்கு (இரட்டிப்பாகும் பன்மடங்காகும் ) கொடுக்கிறீர்களோ, அது அல்லாஹ் விடம் அதிகரிக்காது. அல்லாஹ்வின் திருமுகத்தை நீங்கள் நாடியவர்களாக, ஸக்காத்திலிருந்து நீங்கள் கொடுப்பதானது, அத்தகையோர்தாம் இரட்டிப்பாக்கிக் கொள்கிறவர்கள்.’

இன்னோர் வகையில், தற்போதைய, நாம் பின்பற்றும் ஸக்காத் வழங்கும் முறைமை குறைபாடுடையதே என்பதைவிட தெரிந்தோ தெரியாமலோ இறைகட்டளையைச் செயற்படுத்தாது தடுத்து விடுவதைப் பின்வரும் சந்தர்ப்பங்கள் தெளிவு படுத்தும். மிகப்பெரும் செல்வந்தரான,ஸக்காத் கடமையான ஒருவர் வருடத்தின் முதல் பதினொரு மாதங்களில் பல கோடி பணத்துக்கும், பொருட்களுக்கும், உடமைகளுக்கும் ஸக்காத் செலுத்தவேண்டிய நிலையில் இருந்திருப்பார். இறுதி மாதத்தில் அனைத்தையும் இழந்துவிடுகிறார். இப்போது அவரே ஸக்காத் பெறுவோர் பட்டியலில், அதாவது கடனாளி என்ற வரிசையில் சேர்ந்து விடுகிறார். அவருக்குக் கடமையாகவிருந்த முதல் பதினொரு மாதம் இறுக்க வேண்டிய வரியைச் செலுத்தமுடியாத நிலையில், அல்லாஹ்வின் ஆணையை மீறியவராகவே கணிக்கப்பட வேண்டியுள்ளது. இக்குறை ஸக்காத்தை நடைமுறைப்படுத்தும் வழிகளிலுள்ள குறையே. தவிர, அந்த மனிதரின் தவறல்ல. இவர் தனது கடமையில் தவற வேண்டிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திய சட்டமியற்றியோர் தண்டணைக்கு உரியோராகின்றனர். இதனால் உண்மையான முஸ்லிம்கள்கூட இறைநெறியில் இருந்து விலகிவிடும் நிலை தோன்றிவிடுகிறது. குர்ஆன் இது பற்றி, 16:25இல் ‘…மேலும், அறிவில்லாமல் இவர்கள் எவர்களை வழிகெடுத்தார்களோ அத்தகை யோருடைய பாவச்சுமை களில் இருந்தும் அவர்கள் சுமப்பதற்காகவும். அறிந்து கொள்ளுங்கள்! இவர்கள் சுமப்பது மிக்க கெட்டதாகும்.’இப்போது குர்ஆனின் 25:30ஆம் வசனத்தில் இறைவன் கூறியதை அசைபோட்டுப் பாருங்கள். இறைகூற்றின் நிதர்சனமும் நம்பரிதாப நிலையும் துல்லியமாகும்.

குர்ஆனின் அடிநாதம் நமக்கு விளங்காதவரை, குர்ஆனில் நம்மைச் செய்யுமாறு கூறிய செயற்பாடுகள் குறை தன்மை கொண்டதாகவே அமையும். மேலும், குறைவாகவே அவர்கள் விளங்கிக் கொண்டுள்ளனர். குறைவாகவே அவர்கள் நன்றி செலுத்துகின்றனர் போன்ற இறைவனின் குற்றச்சாட்டுகளுக்குள் இவை நம்மை அடக்கிவிடுகின்றன. இதனால் தான், முற்றிலும் இஸ்லாத்துள் நுழைந்துவிடுங்கள், உமது முகத்தை முற்றிலும் இஸ்லாத்தின் பால் திருப்பிவிடுவீராக என்று வல்ல அல்லாஹ், நாயகம் (ஸல்) அவர்களையே பணிக்கின்றான் என்பதன் ஆழம் புலப்படும். நாம் எந்தளவு குர்ஆனைப் பற்றிச் சிந்தித்துச் சிறந்த வழியைத் தேர்ந்து கொள்ள வேண்டும் என்பதனைக் கூட அல்லாஹ் சுபுஹான ஹுவ தஆலா சொல்லாமல் விடவில்லை. அந்த அடிப்படையில் இதிலுள்ள சிறந்ததைச் செயற்படுத்துவீராக என்று கூறியுள்ளான். இதன் கருத்து குர்ஆனில் சிறப்பற்றவை காணப்படுகின்றது என்பதல்ல. மாறாக பாலில் மறைந்து இருக்கும் நெய்யை வெளிக் கொணர்வது போல் குர்ஆனிலும் மறைந்துள்ள சிறந்தவற்றை உய்த்துணர்ந்து நல்லறிவு பெறவேண்டும். அப்போது தான் குர்ஆனைப் பின்பற்றியவர்களாவோம். அன்றேல் நுனிப்புல் மேய்ந்தவர்களாகவே இருப்போம்.

இறுதிக் கடமை ஹஜ், உம்றா எனும் ஆத்மீகப் பயணம்.

தற்போதெல்லாம் இக்கடமை ஒரு பெருநாளைக் கொண்டாடுவதாகவோ, ஓர் பெருமைக்காகச் செய்யப்படும் வேலை யாகவோ, தமது பெயருக்கு முன்னால் அல ஹாஜ், ஹாஜியானி போன்ற பட்டங்களைச் இணைத்துக் கொள்வதற் காகவோ, தமது பொருளாதார வளத்தைச் வெளிப்படுத்தும் சாதனமாகவோ, பொழுதுபோக்கிற்காகச் செய்யப்படும் ஒன்றாகவோ, ஓய்வு எடுக்கும் ஸ்தலமாகவோ, தமக்கு வேண்டியவற்றை கொள்வனவு செய்வதற்குரிய பாரிய சந்தை யாகவோ கணிக்கப்படுகின்றது என்பதை முதற்கண் மிகுந்த வருத்தத்துடன் பதிவாக்குகிறேன். ஹஜ் என்றால் என்ன வென்று இறைவன் மிகத் தெளிவாக இரத்தினச் சுருக்கமாகச் சில வரிகளில், சிலஇடங்களில் கூறியுள்ளான். அவைகளை வாசகர் அறிதலுக்காக முழுமையாகச் சமர்ப்பிக்கின்றேன். காரணம் அந்த அளவுக்கு ஹஜ் உம்ரா கடமைகள் திசைமாறிச் சென்றுகொண்டு இருக்கின்றன என்பதே.

2: 196 – அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் முழுமையாக நிறைவேற்றுங்கள். எனினும், நீங்கள் தடுக்கப் பட்டு விடுவீர்களாயின் ‘ஹத்யு’ (என்னும் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவைகளில் ) எளிதானது. இந்த ஹத்யு ஆனது அதன் இடத்தை அடைகிறவரை உங்களது தலைகளைக் களையாதீர்கள். எனவே, எவர் நோயாளியாகவோ அல்லது அவரது தலையில் நோய் ஏற்பட்டிருந்தாலோ, நோன்புகள் அல்லது, ஸதக்கா வழங்குதல், அல்லது குர்பானி கொடுத்தல் பரிகார மாகும். ஆகவே, நீங்கள் அச்சம் தீர்ந்திருப்பீர்களாயின், உம்றாவை முடிப்பது கொண்டு ஹஜ்ஜு வரை இன்பத்தை அனுபவித்துவிட்டால், குர்பானி விலங்குகளில் அவருக்கு இயன்றதைப் பலியிட வேண்டும். கிடைக்கப் பெறாதவர் ஹஜ்ஜின் போது மூன்று நாட்களும், திரும்பிய பின்னர் ஏழு நாட்களும் நோன்பு நோற்பது கடமையாகும். இவை முழுமை யான பத்து ஆகும். இது, ‘மஸ்ஜிதுல்ஹராமில்’ எவருக்குக் குடும்பம் இல்லையோ அவருக்கே. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்

2: 203 – மேலும், எண்ணிவிடப்பட்ட நாட்களில் அல்லாஹ்வை நீங்கள் நினைவு கூர்ந்திடுங்கள். எவராவது இரண்டு நாட்களில், அவசரப்பட்டு விரைந்து விட்டால், அவர்மீது குற்றமில்லை. எவரொருவர் பிந்தினால் அப்பொழுது அல்லாஹ்வை அஞ்சியவர் மீது எவ்வித குற்றமில்லை. நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். உறுதியாக நீங்கள் அவன்பாலே ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். 3:97 – அதில் தெளிவான சான்றுகள் உள்ளன. இபுறாஹீம் நின்ற இடமும் இருக்கின்றது. மேலும், எவர் அதில் நுழைவாரோ, அவர் அச்சமற்றவராகி விடுகின்றார். இன்னும், அல்லாஹ்வுக்காக அவ்வீட்டை ஹஜ்ஜு செய்வது அதன்பால் போய்வரச் சக்தி பெற்ற மனிதர்கள் மீது கடமையாக இருக்கிறது. எவரொருவர் நிராகரிப்பாரோ, நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தோரைவிட்டும் தேவையற்றவனாக இருக்கின்றான்.

5:2- ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுடைய அடையாளங்களையும், கண்ணிய மிக்க மாதங்களையும், குர்பானிப் பிராணியையும், அடையாளமிடப்பட்டவற்றையும், தங்கள் ரப்பிடமிருந்து அருளையும், திருப்பொருத்தத்தையும் தேடிய வர்களாக, கண்ணியமான வீட்டை நாடிச் செல்வோரையும், நீங்கள் ஆகுமாக்கிக் கொள்ளாதீர்கள். நீங்கள் இஹ்ராமைக் களைந்துவிட்டால், அப்பொழுது வேட்டையாடுங்கள்…

22: 26 – இப்றாஹிமுக்கு வீட்டின் இடத்தை நாம் தெளிவுபடுத்திய பொழுது, ‘எனக்கு எப்பொருளையும் இணைவக்காதீர். என்னுடைய வீட்டை தவாப் செய்பவர்களுக்கும், நிற்பவர்களுக்கும், ருகூஃ செய்பவர்களுக்கும், சுஜூது செய்பவர் களுக்கும் பரிசுத்தப் படுத்தி வைப்பீராக’. ( மேலும் அல் குர் ஆன் 22:27-30வரை வாசித்தறிக)

மேற்கண்டவை வல்ல அல்லாஹ்வின் வசனங்கள் விளக்கம் தேவைப்படாதவை. உற்று நோக்கி வாசித்தால் தெற்றென விளங்கிக் கொள்ளும்வாறாக வரையப்பட்டுள்ளது. அப்படி விளங்கிக் கொண்டதன் பின்னர் தாம் நிறைவேற்றியதாக நம்பிக் கொண்டு இருக்கும் ஹஜ்ஜினதும் உம்ராவினதும் தரத்தை, இந்த புர்ஹான் உரைகல் என்று அல்லாஹ் கூறியிருப் பதற்கு ஒப்ப, உரைத்துப் பாருங்கள் உண்மையைக் கண்டு கொள்வீர்கள்.

6: 116 – இப்பூமியில் இருக்கிறவர்களில் பெரும்பாலோருக்கு நீர் வழிப்பட்டால், அவர்கள் உம்மை அல்லாஹ்வின் வழியை விட்டு வழிதவறச் செய்திடுவார்கள். எண்ணத்தையன்றி அவர்கள் பின்பற்றுவதில்லை. மேலும், அவர்கள் பொய்யுரைக் கிறார்களே தவிர வேறில்லை. 6: 119 – ‘ மேலும், நிச்சயமாக பெரும்பாலோர் அறியாமையின் காரணத்தாலும் தங்களது மனோ இச்சைகளின் காரணத்தாலும் திட்டமாக வழிகெடுக்கின்றனர். உம்முடைய ரப்பு வரம்பு மீறுவோரை மிக்க அறிந்தவன்’

2:143 – ‘…உங்களை நடுநிலையான சமுதாயமாக ஆக்கினோம்…’. என இறைவன் தன்மாமறையில் கூறியமைக்கொப்ப, நாம் நமது காரியங்களை, அவனது அறிவிப்பின்படி செய்துள்ளோமா? குர்ஆன் கூறியவாறு உய்த்துணாந்துள்ளோமா? அதன் மூலம் நல்லறிவு பெற்றுள்ளோமா? எனச் சீர்தூக்கிப் பார்ப்போமாயின் நமது உண்மை நிலையை கண்கூடாகக் கண்டுகொள்ள முடியும். இது படித்தபடி நடப்பதற்கு நாம் படிக்க வில்லை என்பதை அறியக் கூடியதாயுள்ளது. இதனை மஸ்தான் சாகிபு என்ற ஆத்மீகஞானி,’படிக்கும்படி நடக்கப் படிக்கா உலோபிகள் சுத்தப் பதங்கெட்டுப் போனாலும் போகட்டும்’என இகழ்ந்து பாடியுள்ளார். இது நம்நிலையை அறிந்து பாடியதைப் போன்றே உள்ளது.

முஸ்லிம்களின் நிலையைச் சீர்தூக்கின், நம்மை சீர்திருத்திக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும், அவசரத்தையும் அறிந்திட முடியும். நம் நிலையைத் தத்ரூபமாகக் காட்டக்கூடிய சம்பவமொன்றைக் கூற அநுமதியை வேண்டுகின்றேன். மூன்று நபர்களை வியாபார விடயமாக எனது இல்லத்தில் அண்மையில் சந்திக்க நேர்ந்தது. சந்தர்ப்பவசமாக வருகை தந்திருந்த மூவரும் இஸ்லாமியர் என்பதால் எமது உரையாடல் இஸ்லாத்தின்பால் நிலைத்தது. மிகவும் அறிவு பூர்வமாக, அதே வேளை குர்ஆனின் அடிப்படைக் கருத்துக்களைக் கொண்டதாக, இஸ்லாத்தின் அத்திபாரத்தை அடியொட்டியதாக, நடைமுறையிலுள்ள மூடக் கொள்கைகளை, அறியாமையை, தவறான விளக்கத்தை இனங்காட்டுவதாக இருந்தது. வந்திருந்தோரில் ஒருவர் கற்று உணர்ந்தவர் போன்றும் விளங்கிக் கொள்ளக் கூடியவராகவும் காணப்பட்டார். ஏதிர்க் கேள்விகளைக் கேட்டாலும் உண்மையை ஏற்றுக் கொள்ளும் பான்மை அவரிடம் காணப்பட்டதாகத் தெரிந்தது. தமக்கு அவசர வேலை இல்லாதிருப்பின் இவ்விடத்தைவிட்டு நகரமாட்டாத அளவு சிறந்த, உபயோகமுள்ள, உண்மையான இறை கருத்துக்களை கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்ததாகவும், கவலையுடன் பிரிவதாகவும், மீண்டும் என்னை அடிக்கடி சந்தித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புவதாகவும் கூறி என்னை வெகுவாகப் பாராட்டிச் சென்றார். அடுத்த நாள் அவர்களில் ஒருவர் என்னைச் சந்தித்த பொழுது, எனது மார்க்கக் கருத்துக்கள் வழமையான பல்லவியாகவல்லாது அறிவுபூர்வமானாதாக, உண்மை நிலையை அறியக்கூடியதாக பயனுடையதாக இருந்ததாகக் கூறியதாகவும், நான் எந்த மார்க்கக் குழுவைச் சார்ந்தவன் எனக் கேட்டதாகவும் கூறினார். இன்று முஸ்லிம்கள் இருக்கின்ற நிலையினை யாரும் இலகுவாகப் புரிந்து கொள்ள இது உதவும்.

முஸ்லிம்கள் என்றால் ஏதாவது ஒரு பிரிவைச் சார்ந்தவராக இருக்கவேண்டும் என்ற கருத்தியல். இதுவே புனித குர்ஆனுக்கு எதிர்மாறானது என்பது வருத்தத்துடன் பதிவாக்கப்படுகிறது. பேச்சில் இருக்கும் அளவு நடத்தையில் இல்லாத நிலை. மார்க்கத்தைப் பல பிரிவினராக்கியோர் பற்றிப் பல குர்ஆனிய வசனங்கள் 23: 52, 30: 32, 21:93, 15:90-93இல் காணப்படினும், 6:159–’ நிச்சயமாக எவர்கள் தங்கள் மார்க்கத்தைப் பிரித்துப் பிரிவினர்களாகி விட்டனரோ,அவர்களுடன் நீர் எவ்விஷயத்திலும் சேர்ந்தவரல்லர்..,’ என நபிகளாரையே எச்சரிப்பது நமது கவனத்தை ஈர்க்காமல் இருப்பது சாபக்கேடே! மேலும், அல் குர்ஆன் 2:166 – ‘பின்பற்றப்பட்டவர்கள், பின்பற்றியவர்களை விட்டும் ஒதுங்கி, அவர்கள் வேதனையைக் காண நேரிடும் பொழுதும், மேலும் அவர்களுக்கிடையில் இருந்த தொடர்புகள் அறுந்துவிடுகின்ற போதும்.’ தமது பேதமையும், உலக வாழ்வை வீணடித்தமையும், தற்போதைய கையறு நிலையும் புரிந்துவிடும். இவை யாவும் குர்ஆன் புறக்கணிக்கப்பட்டதன் விளைவே என்பது இன்னும் புலப்படாவிடில், நமக்கு இறையருள் கிடைக்கவில்லை என்பதைத் தவிர கூறுவதற்கில்லை. ஆனால் இறைகூற்று 25:30 இன் நிறை தன்மையே என்பது மட்டும் தெளிவு.

மொத்தத்தில் இஸ்லாம் மக்கள் மத்தியில் பெயரளவிற் சில கடமைகளை, இயந்திரம் போன்று, செய்துகொண்டிருக்கும் பாங்கிலேயே நிலை கொண்டுள்ளதாகத் தெரிகிறது. அதுவே யதார்த்தம். இந்நிலை, குர்ஆன் அறிவு தகுந்தவாறு பெறப்படாததும், அல்லாஹ்வை அவனது கண்ணியத்துக்கு ஏற்றவாறு அறிந்ததிலும், அவனது கருத்துக்களை அறியாதிருந்ததிலும் ஏற்பட்ட பின்னடைவால் உருவானதாகவே உள்ளது. ‘…அறிந்தவர்களாக இருப்பவர்களும் அறியாதவர்களாக இருப்பவர்களும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுபவர்கள் எல்லாம் அறிவுடையவர்களே!’ என்ற அல் குர்ஆன் 39:9 நம்நிலையையும், அறிதலின் அவசியத்தையும், குர்ஆனை அறிய வேண்டியதையும் உணர்த்தும். 50:37 –’ நிச்சயமாக எவருக்கு இதயம் இருக்கின்றதோ அவருக்கு அல்லது தாம் மன ஓர்மையுடன் செவிசாய்க்கின்றாரோ, அவருக்கு இதில் படிப்பினை உள்ளது’. 39:22 – ‘எவரது இதயத்தை இஸ்லாத்தை ஏற்பதற்காக அல்லாஹ் விரிவாக்கி வைத்திருக்கின்றானோ அவரா? அவர் தனது ரப்பிடமிருந்துள்ள பிரகாசத்தின் மீது இருக்கின்றார். அல்லாஹ்வை நினைவு கூர்வதைவிட்டும் அவர்களுடைய இதயம் இறுக்கமடைந்துவிட்டவர்களுக்குக் கேடுதான். அவர்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கின்றனர்.’ மேற்கண்ட சில குர்ஆனிய வசனங்கள் நம்நிலையை 25:30ஆம் வசனம் படம் பிடித்துக் காட்டுவதை உணர்த்தப் போதுமானது. அல்லாஹ்வை நினைவுகூராதோர் பகிரங்கமான வழிகேட்டில் உள்ளனர் என்றமை முன்னையதை உறுதிப்படுத்துகிறது.

இச்சிறு ஆக்கம், வெறும் ஆத்மீகக் கருத்துக்களைப் பற்றி, நாம் அறியாதிருக்கும் உண்மைகளுள் சிலவற்றை மட்டுமே கொண்டுள்ளது. லௌஹிகம் சம்பந்தமாகவோ, விஞ்ஞான உண்மைகள் சம்பந்தமாகவோ அன்றி பிறவகையிலாகவோ மலிந்து கிடக்கும் கருத்துக்களை குர்ஆனியக் கருவூலங்களில் இருந்து நான் வெளிப்படுத்தவுமில்லை, அத்தகுதியும் எனக்கில்லை என்பதனால், வல்ல அல்லாஹ்வின் மறை கூற்று 25:30 ஆம் வசனத்தினது பொருட் செறிவு இங்கு நான் குறிப்பிட்டவை மட்டும்தான் என்ற எண்ணக் கருவை வளர்த்துக்கொள்ள வேண்டாம் என அன்பாக வேண்டிக் கொள்கின் றேன். எனது கட்டுரை அப்படியொரு கருத்தை வாசகருக்கு உண்டாக்கி, குர்ஆனுக்கு குறைநிலையை ஏற்படுத்திவிடும் என்ற குற்றத்துக்கு அஞ்சி அல்லாஹ் சுஹானஹுவ தஆலாவின் பாதுகாப்பைத் தேடுகிறேன். மேலும், விரிவு அஞ்சி அந்தப் பகுதிகளுக்குள் நான் நுழைய முற்படவில்லை. ஆயினும் அவைகள் அனைத்தையும் நாம் குர்ஆனில் இருந்து அறியாதிருப்பதை உள்ளடக்கியதன் வெளிப்பாடுதான், இறைகூற்று 25:30இன் நிறை தன்மை என்பது அனைவரும் கருத்திற் கொள்க.

முடிக்குமுன்… ஹதீஸ்களைப் பின்பற்றித்தானே தற்போதைய சட்டங்களும், சடங்குகளும், இன்ன பிறவும் யாக்கப்பட் டுள்ளன. அதன்படிதானே நாம் ஒழுகிக்கொண்டு இருக்கின்றோம். காலங் காலமாக நமது நபிகளாரும், முன்னோர்களும், இமாம்களும், மதப் பெரியார்களும் கூறியும், செய்துகாட்டியும் சென்றவற்றைத் தானே நாம் செய்து கொண்டிருக்கிறோம் எனக் கேட்பது புரிகிறது. இது பற்றி நீண்ட விளக்கம் கொடுக்கலாம். தூதரின் முன்மாதிரி யாருக்கு என 33:21 கூறுவது, ‘அல்லாஹ்வையும், மறுமை நாளையும் ஆதரவு வைத்து அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூர்பவராக இருப்பவருக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது’ ஆனால் குர்ஆனில் நமது நாயகம் ஸல்லல்லாஹு அவர்களே கூறவிருப்பதாக அல்லாஹ் கூறிய அந்த 25:30வசனம் ஒன்றே குர்ஆன் புறக்கணிக்கப்பட்டதைக் கூறி அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலிறுத்து நம் நேர விரயத்தைத் தவிர்க்கிறது. நாம் செய்து கொண்டிருப்பது, அல்லது பின்பற்றுவது ஓரளவாவது சரி என்றால் அல்லாஹ் ஏன் இப்படி ஓர் பயங்கர உண்மையை வெளிப்படுத்தி இருக்க வேண்டும். அல்லாஹ் பிழைகளுக்கு அப்பாற்பட்டவன் என்பதையும் குர்ஆன் சம்பூரணம் ஆக்கப்பட்டது என்ற மறை கூற்றையும் நாம் ஏற்று ஈமான் கொண்டிருந்தால் அவனது வசனத்தில் கிஞ்சித்தும் சந்தேகம் கொள்ளோம். அது ஈமான் தவிடுபொடியாகும் இடமல்லவா? இப்போதாவது நம்மத்தியில் வழிகேடு நடந்து கொண்டிருப்பது ஏற்கப்படவேண்டும். அல்லாஹ் கூறிய நடுநிலையான சமுதாயமாக நாமிருப்போமாயின் அனர்த்தத்தை அறிந்து, தவிர்ந்து, உணர்ந்து, உயர்ந்து கொள்ள வழி காண்போம்.

முடிவாக முற்போந்த பத்திகளில் கூறப்பட்ட வழிகளிலும், கூறப்படாது விடுபட்டுள்ள வழிகளிலும் புனித குர்ஆனின் கருத்துக்கள் பல்வேறு வகைகளில், தரத்தில், நிலையில் நம்மால் புறக்கணிக்கப்பட்டோ, கைவிடப்பட்டோ, பிழையாகப் புரிந்து கொள்ளப்பட்டோ, உரிய பயன்பாட்டைப் பெறாமல் விடப்பட்டோ இருப்பது தர்க்கத்துக்கு இடமின்றி ஏதோ நிலையில் வெளிப்பாடாகி உள்ளது தெளிவாகி இருக்கும். இது இறை கூற்றாகிய 25:30 மறை வசனத்தினை ஊர்ஜிதம் செய்துள்ளது நமது கவன ஈர்ப்பைப் பெற்றால், நம்மில் சிலராவது தப்பிப் பிழைத்த முன்னோருள் சிலராகிட முடியும் என்பதே அடியேனின் கருத்து. இறை வசனத்தைப் பொய்யாக்கிடும் சக்தி நமக்கில்லை, ஆதலால் அவன் கூறிய அந்தப் பாவிகள் கூட்டத்தில் நம்மைச் சேர்த்து விடாதிருப்பதற்காக அவன் கருணையை வேண்டி நிற்போம். அல்ஹம்துலில்லாஹ்.

21:10 திட்டமாக உங்கள்பால் ஒரு வேத்தை நாம் இறக்கிவைத்தோம். அதில் உங்களுடைய நினைவுகூர்தல் இருக்கின்றது. நீங்கள் விளங்கிக்கொள்ள வேண்டாமா? என்ற இறைவனின் அறைகூவலுடன் விடை கூறுகின்றேன். சிறந்த வழிகாட்டு அவனிடமே உள்ளது அவனது திறந்த பிரகடணமல்லவா! அல்ஹம்துலில்லாஹ்.

ஆக்கியோன்: ஹா.மு.நிஸாம்