குர்ஆன் வழியில் …

அல்லாஹ்வுக்கு உவமை ஏற்படுத்தாதீர் !

அல்லாஹ் பற்றி அறிந்து கொள்வது ஷிர்க் என்ற இணைவைப்பை வருவிக்காதிருக்கும். அல்லாஹ் தான் விரும்பினால், தனது கருணையைக் கொண்டு மானுடரின் அனைத்துக் குற்றங்களையும் மன்னிப்பான். ஆனால் தனக்கு இணை வைப்பதை அவன் எக்காரணங் கொண்டும் மன்னிக்கமாட்டான். அதனால் அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் காரியங்களையாவது நாம் அறிந்து வைத்திருத்தல் ஷிர்க்கிலிருந்து நம்மை விலக்கி இறைதண்டனையில் இருந்து நம்மைக் காப்பாற்றும்.

அந்த வகையில் லா இலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவை சரிவரப் புரிந்து ஈமான் கொண்டோமாயின் ஷிர்க்கில் இருந்து விலகிக் கொள்ளலாம். மேற்கண்ட தலைப்புக்கு ஆதாரமாக நிறைய குர்ஆனிய வசனங்கள் இருப்பினும் அது நேரடியாக உணர்த்தும் வசனம் ஒன்றை முதலில் பதிவாக்குகிறேன். ‘அவனைப் போன்று எப்பொருளும் இல்லை’. இந்த வசனம் மிகத் தெளிவானது. அவனைப் போன்று எப்பொருளும் இல்லை- 42:11 என்ற போது, அவன் இப்படி இருப்பான், அப்படி இருப்பான், அங்கு இருக்கிறான், இங்கு இருக்கிறான். வானத்தில் இருக்கிறான், பூமியில் இருக்கிறான் போன்றவாறு நினைப்பதோ, கூறுவதோ ஷிர்க் என்பதை மக்கள் அறியாமல் இருப்பது அவனது மன்னிப்பை ஹறாமாக்கிவிடுவது.

அவன் அனைத்தையும் படைத்துவிட்டு அர்ஷில் அமர்ந்தான் எனக் கூறியுள்ள வசனத்தை வைத்துக் கொண்டு, அவனது அர்ஷ் வானத்தில் இருக்கிறது. அவன் அதில் அமர்ந்துள்ளான் என்றெல்லாம் நம்பிக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் அவன் அர்ஷில் அமர்ந்தான் என்பதோ, சிம்மாசனம் ஏறினான் என்பதோ கதிரை ஒன்றில் அமர்ந்து இருப்பதை வெளிப்படுத்துவதல்ல. மாறாக அவை, ஆட்சியில் இருக்கும் பண்பை வெளிப்படுத்துவதே தவிர அவன் பௌதிகத் தன்மையுள்ள ஒன்றில் அமர்ந்திருப்பது அல்ல என்பதை அறிந்துகொள்ள பேரறிவு தேவையில்லை. மேலும், 9:129இல் அவன் மகத்தான அர்ஷின் அதிபதி எனக் கூறியிருப்பதில், அவன் அதிபதியே தவிர அதில் உட்கார்ந்து இருப்பதல்ல. அவனது குர்ஷ் வானம் பூமியை அடைந்து வளைந்து கொண்டிருப்பதாக அவன் கூறியுள்ள வசனம் சூரா பகரா 255இல் பதிவாகி உள்ளதை நாம் கவனித்திருந்தால் இவ்வாறான தப்பெண்ணம் உண்டாகி இருக்காது. அது போன்றே அனைத்தையும் படைப்பதற்கு முன்னர் அவனது அர்ஷ் நீரின் மேலிருந்தது என 11:7இல் கூறியுள்ளான். அதன்படி அல்லாஹ் நீரில் மிதந்து கொண்டிருந்தான் என்பதா? ஆனால் அவனது ஆட்சி நீரின் மீது இருந்தது என்பதே பொருள். படைத்தலை நீரிலிருந்தே அவன் தொடங்கினான் என்பதற்கும் அவனது ஆட்சி நீரிலிருந்ததென்பதற்கும் உள்ள சம்பந்தத்தை, உற்று நோக்குவோர் விளங்கிக் கொள்வர். மேலும், 2:115இல் நீங்கள் எப்பக்கம் திரும்பினாலும் அல்லாஹ்வின் திருமுகம் உண்டு என்பது உவமை கூறக் கூடிய ஒன்று எப்பக்கத்திலும் இருக்கும் சாத்தியமில்லை.

அவன், தான் எங்கும் மறைந்து விடவில்லை எனக் கூறியிருப்பதும் நாம் நன்கு கவனிக்க வேண்டியது. மறைந்துவிடக் கூடியவை, அளவில், பருமனில், உருவில் போன்ற பண்புகளைக் கொண்டிருக்கும். 7:7 இல் நிச்சயமாக நாம் மறைந்திருக்கவில்லை எனக் கூறியிருப்பதில் இருந்து, தான் அத்தகைய எந்த பண்புகளுக்குள்ளும் அடங்காதவன் என்பதை வெளிப்படுத்தி உள்ளான். அவனது திருநாமங்கள்கூட பாத்தினு, ளாஹிறு அதாவது மறைவானவன், வெளியானவன் என்ற பொருளை உடையனவே. இன்னும் உங்கள் பார்வை என்னை வந்தடைவதில்லை எனக் கூறியிருப்பது மிக உன்னிப்பாக அவதானிக்க வேண்டியுள்ளது. எங்கோ தொலைவில் உள்ள சூரியன், நட்சத்திரங்கள் போன்றவற்றைப் பார்க்கும் தன்மையை நமக்கு அளித்துள்ள இறைவன் நமது பார்வைகள் அவனை அடைய முடியாது, மாறாகத் தான் எல்லோரது பார்வைகளையும் அடைவதாக 6:103 இல் கூறியிருப்பதில் இருந்து அவன் எந்த உவமைகளுக்கு உள்ளும் அடங்குபவனல்லன் என்பது தெளிவாகிறது. 50:16 இல் – ஊரிதா என்ற நமது பிடரி நரம்புக்கும் மிக அண்மையில் இருப்பதாகக் கூறியிருக்கும் அதே வேளை, 8:24 இல் நிச்சயமாக அல்லாஹ் மனிதனுக்கும் அவனது இதயத்திற்கும் இடையிலும் சூழ்ந்து இருக்கிறான் எனக் கூறியுள்ளமையில் இருந்து அவன் இப்படித்தான், இங்குதான் இருப்பான் என்பதை யூகித்தோ உவமித்தோ கூற முடியாததை உணரலாம். அதற்கு மேலும் அவன் ஒவ்வோர் ஷணமும் ஒவ்;வோர் மாட்சியமையில் இருக்கின்றான் என்பது சிந்திப்போருக்கு விருந்தாவது. ஓவ்வோர் ஷணமும் மாற்றத்துக்கு உட்பட்டுக் கொண்டிருக்கும் ஒன்று காண முடியாததாகவும் ஒப்பு, உவமைகளுக்கு அபபாற்பட்டதாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இவை போன்ற பல் வேறு தன்மைகளைக் கூறிவிட்டு அவன் வாளாவிருந்து விடவில்லை. அல் குர்ஆன் 16:74இல் மிகத் துல்லியமாக நமக்கு அறைகூவல் விடுக்கிறான். ‘ நீங்கள் அல்லாஹ்வுக்கு உவமைகளை ஏற்படுத்தாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் அறிந்தவன். நீங்கள் அறியமாட்டீர்கள்’ . இன்னோரிடத்தில் 20:110இல் அவனை அவர்கள் கல்வி, ஞானத்தால் அவனை அறிந்து கொள்ளமுடியாது எனக் கூறியுள்ளமை அறிவுள்ளோருக்கு அதிக விளக்கத்தைத் தருவது. மேலும், அவன் பரிசுத்தமானவன். அவர்கள் கூறுவதை விட்டும் மிகப் பெரும் உயர்வாக உயர்ந்தவன் என 17:43இல் கூறியிருப்பது அனைத்து முட்டாள் தனங்களையும் மறுத்துரைக்கின்றது. குர்ஆனில் இது போன்ற வசனங்கள் நிறையவே உள்ளன. தேடுவோர் தெளிந்து கொள்வர். அறிவுடையோருக்கு இவை தெளிவான வசனங்களாகும் என்பதும் அவனது கூற்றே. அல்ஹம்துலில்லாஹ்.

- நிஹா –