அறிதல் பற்றிய புரிதல் !

 

அறிதல் எனும் போதே வேறொன்றின் தொடர்பு வெளிப்படுகின்றமை தெரிகிறது. அதனை நமக்கு வெளியே உள்ளவை, நமக்கு உள்ளே உள்ளவை, அவைகளில் பௌதிகத் தன்மை உள்ளவை, பௌதிகத் தன்மை அற்ற உணர்வுகளால் அறிபவை போன்று வகைப்படுத்தலாம்.

 

சாதாரணமாக அறிதல் புலன்களோடு தொடர்புபட்டதென்பது அனைவரும் அறிந்ததே!  ஐம்புலன்களுமே நமக்கு நம்மைச் சுற்றியுள்ளவற்றை அறியும் ஊடகங்களாகச் செயற்படுகின்றன. புலன்களுக்கு அப்பாலும் சென்று அறிவனவும் உண்டே!

 

ஐம்பொறிகள் மூலம் பெறப்படுபவை பறவைகள், மிருகங்கள், மனிதர்களில் ஐம்புலன்களைக் கொண்டும் தொழிற்படுவதாகத் தெரிகின்றது.  சுருக்கமாக தோல் என்ற பொறியின் மூலம் தொடுகை என்ற பண்பை உணர்வது. நாசியின் நுகர்வு மூலம் நாற்றமறிவது. நாக்கினால் ருசிப்பதன் மூலம் சுவை அறிவது,  செவியினால் கேட்டல் மூலம் ஒலியை அறிவது. கண்ணினால் பார்த்தல் மூலம் காட்சிகளைக் கண்டு அறிவது.

 

இன்னும் சற்று  சிந்திப்போமாயின், உண்மையில் பொறிகள் நமக்கு ஊடகமாகவே அன்றி வேறு வகையில் அறிவைத் தருவதில்லை என்பதை அறியலாம்.  சிறிய உதாரணமாக, மின்சாரத்தைக் கடத்தும் வயர் wire  எப்படி மின்னைக் கடத்தித் தன் பணியை முடித்துக் கொள்கின்றதோ அதனையே இந்த ஊடகங்களாகக் குறிப்பிட்டுள்ள தோல், நாசி, நா, செவி, கண் முதலியன செய்கின்றன. அதற்கு மேல் புலன்கள் தமது வேலையைச் செய்கின்றன.

 

ஆக, பொறிகளும், புலன்களும் நமக்கு அறிவைத் தருவதாகக் கொள்ள முடியாது. இவைகளினால் பெறப்பட்டவை அவற்றோடு தொடர்புடைய நுண்ணிய நரம்பு மண்டலங்களால் எடுத்துச் செல்லப்பட்டு, மூளையை அடைந்த பின்னரே, அங்கிருந்து தனக்குக் கொடுக்கப்பட்ட தகவல்கள், நாம் தொட்டு உணர்ந்த, நுகர்ந்து தெரிந்த, சுவைத்து அறிந்த, கேட்டுத் தெளிந்த, பார்த்துத் தெரிந்த புலனுணர்வுகள் பற்றி அறிய வைக்கப்படுகின்றோம். இவை சாதாரணமாக நம்மில் பெரும்பாலானோர் தெரிந்தவையே!

 

இங்கு ஓர் வினா எழுகின்றது. மூளை என்ற ஒரு பௌதிகப் பொருள் எப்படி இவற்றைத் தெரிந்து வைத்திருக்கின்றது என்பதே அது! சாதாரணமாக பதிலிறுப்பதாயின் இப்பொறிகளோடு நுணுக்கமாக இணைக்கப்பட்டுள்ள நுண்ணிய நரம்பு மண்டலங்களின் மூலம் கணப் பொழுதில் மூளைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது எனக் கூறிடலாம். அது உண்மையுங்கூட! காவியாக நீர் தொழிற்படுகின்றது. 

 

ஆனால் நமது விசாரணை, அப்படி எடுத்துச் செல்லப்பட்டவை எப்படி இனங் காணப்படுகின்றன என்பதே! அதற்கும், முன் அனுபவங்கள் என இலகுவாக பதிலிறுத்து விடலாம்! அடுத்த கேள்வி – சரி, நாம்தான் எவ்வளவோ முன் அனுபவங்களைப் பெற்றிருக்கிறோமே அவை அனைத்தையும் எங்கோ ஓர் சிறு பகுதியில் குவித்துவைத்துக் கொண்டிருக்கும் குப்பைத் தொட்டியான அந்த மூளையிலிருந்து மிக மிகக் குறுகிய ஷணத்தில் எப்படி சரியானதை இனங்கண்டு,  பொறுக்கி, அந்த மாத்திரத்திலேயே நமக்குத் தெரியத் தருகின்றது என்பதே! இதை இறை கருணை என்பதைவிட வேறு விதமாக வெளிப்படுத்த முடியாது. அல்லது தெரியாது என்றே பதில் வெளிவரும்!

 

இதனைச் சிறிய அளவில் தற்போது கணணியுடன் ஒப்பிட்டறியலாம். மூளையின் செயற்பாட்டை அறிந்தே கணணி உருவாக்கப்பட்டுள்ளது. பதினையாயிரம் ட்ரில்லியன் தகவல்கள் வரை பதியப்படக் கூடிய நமது மூளையில் மிக மிகச் சிறிய பகுதியில் அமைந்துள்ள  memory chip  ச்சிப்பில் பதிவாக்கப்பட்டுள்ள,  அத்தனைக்குள்ளும் இத்தனை விரைவாகத் தேடலைச் செய்வது என்பதனை வேண்டுமானால் ஓரளவிற்குக் கணணியுடன் ஒப்பிடலாம். ஆனால், அவற்றின் ஒவ்வொன்றிலும் பொதிந்துள்ள பௌதிகத் தன்மைகளைக் கொண்டிராத வலி, உருசி, நாற்றம், ஒலி போன்றவற்றை அப்படியே நமக்கு அறிவித்து விடுகின்றதே என்பது நமது கற்பனைகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டது!   வலியை அறியத் தரும் அந்த ஷணத்திலேயே கண்ணுக்கும் கைக்கும் அறிவுறுத்தலைத் தருகின்றது.

 

இது பகுத்தறியும் அறிவினுள்ளும் அடக்கப்பட முடியாததே! இதனை விளக்க ஒரு சிறு உதாரணத்தை உங்கள் முன் வைக்கலாம் என நினைக்கிறேன்.  மரத்தில் பழுத்த ஆப்பிள் கீழே விழுவது என்பது சாதாரணமாக யாரும் பார்த்துச் செல்வதே என்பதுதான். ஆனால் அது ஏன் விழுகின்றது என்பதை அறிய வெளிப்பட்ட அந்த ஆய்வ}க்கத்தின் உந்துதல் என்பது பகுத்தறிவின்பாற்பட்டதுதான்.   

 

ஆனால், இங்கு நான் கூற விழைவதற்கு, நாம் பகுத்து அறிய வேண்டிய வேலை இருப்பதில்லை. காரணம் நாம் ஏற்கனவே பார்த்திருந்த ஒன்றை, கேட்டிருந்த ஒலியை, நுகர்ந்திருந்த நாற்றத்தை, சுவைத்திருந்த சுவையை, தொடுகையினால் உணர்ந்திருந்த எழுத்தில் வடிக்கவும் முடியாத இன்னோரன்னவற்றை இமைப் பொழுதில் நமக்கு அறிவித்து விடுகின்றதே என்பது பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டதே என்பது தற்போது விளங்கியிருக்கும்.   

 

இதனை இன்னும் ஒரு வகையில் அறியலாம். புதிதாக ஒரு உருசியை, நாற்றத்தை, ஒலியை அறிகிறோம். அச்சந்தர்ப்பத்தில் அவை என்னவென்பதை இனங்கண்டு கொள்ள முடியவதில்லை. உடன், நாம், புதிதாக உருசியை அனுபவிப்பதாகவும், சப்தத்தைக் கேட்பதாகவும், வலியை உணர்வதாகவும், நாற்றத்தை நுகர்வதாகவும், புதிய ஒன்றைக் கண்டதாகவும் கூறுகிறோம். இப்பொழுது பகுத்தறிவு தனது வேலையைச் செய்து கொள்ள முடியாமல் இருக்கின்றது.  தனது ஆய்விற்கு வந்தது வேறொன்று அன்றி புரியாத ஒன்று என்ற அளவில் பகுத்தறிவு தடைப்பட்டு விடுகின்றது.

 

ஆக, பகுத்தறிவு எங்கோ மறைவாகவுள்ள ஒன்றைக் கண்டு பிடிப்பதற்கு தனது பங்கை ஆற்றுகின்றது. அதற்கு மேல் அதன் பயனைப்  பெற்றுக் கொள்ள பகுப்பதற்கு ஏதாவது ஒன்று இன்றி  முடியாது.

 

ஆகர்ணசக்தி எனக் கூறப்படும் புவி ஈர்ப்பு  சக்தி ஏற்கனவே இருந்த ஒன்று, அது யாராலும் கண்டு பிடிக்கப்படாத நிலையில், யாரோ ஒருவரின் சிந்தனையில், ஏன் ஆப்பிள் பழம் கீழ் நோக்கி விழ வேண்டும் என்ற வினாவை எழுப்பியதும், அதற்கு விடைகாண முற்பட்டு, ஆப்பிள் கீழே விழுந்ததற்கு புவிஈர்ப்புதான் காரணம் என்ற மறைந்திருந்த ஓர் உண்மையை வெளிப்படுத்தியமை பகுத்தறிவின் பயன்பாடே! இதற்கு மேல் மனித பகுத்தறிவு வெளிப்படாது என்ற வரை தற்போது அறிதல்  பற்றிய புரிதலை நிறுத்திக் கொள்கிறேன்!

 

இறைவன் நாடினால், இதுவரை கண்டதற்கு மேல் உள்ள அறிவு, அது எங்கு, எப்படி, உள்ளது? அவை வெளிப்படும் சந்தர்ப்பம் போன்றவை பற்றிய மேலதிக சிந்தனையை மேற்கொள்ளலாம்! 

 

 

-   நிஹா    -