இப்பிரபஞ்சத்தில் மனித தோற்றம் நிகழ்ந்த காலமுதல், மனுக்குலத்தின் உயர்வுக்காக வல்ல அல்லாஹ்வால், முதல் மனிதன் ஆதம் (அலை) முதல், இறுதி நபி முகம்மது (ஸல்) அவர்கள் வரையில் தோன்றிய அனைத்து நபிமார்களுக்கும் அவர்கள் காலத்தில் வாழ்ந்த மக்களின் சீரான, நேரான வாழ்வுக்காக வேதங்களையும், வேதக் கட்டளைகளையும் அவ்வப்போது வழங்கி ஈடேற வழிவகுத்தான். அந்த வகையில் வழங்கப்பட்ட அனைத்து வேதங்களையும் மெய்ப்படுத்துவான் வேண்டி, (குர்ஆன் 3:3 இதற்கு முன்னுள்ளவற்றையும் உண்மைப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், இவ்வேதத்தை உண்மையைக்கொண்டு உம்மீது அவன்தான் இறக்கிவைத்தான்.) தனது இறுதித் தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்கள் மூலம் இறுதி வேதமாகிய இஸ்லாத்தை 6237 வசனங்களைக் கொண்ட புனித குர்ஆன் மூலம் இறக்கித் தனது அருளை தனது மக்களுக்கு முழுமையாக்கினான்.‘…இன்றையதினம் உங்களுடைய மார்க்கத்தை உங்களுக்குப் பரிபூரணமாக்கி விட்டேன். மேலும் என்னுடைய அருட்கொடையையும் உங்கள்மீது முழுமையாக்கி வைத்து விட்டேன்..’ குர்ஆன் 5:3.

இந்த வேதத்தையே நமக்காகத் தேர்ந்தெடுத்து (குர்ஆன் 2: 132, 5: 3), சம்பூரணமாக்கி, ஓர் உத்தமரை வைத்து, அக்குர்ஆனின் வசனங்களை 23 வருடங்கள் நடைமுறைப்படுத்திக்காட்டி, எக்காலத்தும் எந்த மாற்றங்களுக்கும் உட்படாதவாறு பாதுகாத்து வைத்துள்ளான். (15: 9 நிச்சயமாக நாமே இவ்வேதத்தை இறக்கி வைத்தோம். நிச்சயமாக நாமே அதனைப் பாதுகாப்போம்)

இந்த குர்ஆனை ஞாபகமூட்டல் (திக்ர் ) என்றே குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ் குறிப்பிடுகிறான். ‘திட்டமாக உங்கள்பால் ஒரு வேதத்தை நாம் இறக்கிவைத்தோம். அதில் உங்களுடைய நினைவு கூர்தல் இருக்கின்றது. நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டாமா?’ – குர்ஆன் 21:10. அத்தோடு எதனை ஞாபகமூட்டுகின்றது என்பதனையும் சொல்லத் தவறவில்லை. ‘மேலும் அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களது இதயங்கள் அமைதி பெறுகின்றன. அறிந்து கொள்ளுங்கள் அல்லாஹ்வை நினைவுகூர்வதன் மூலமே இதயங்கள் அமைதி பெறுகின்றன.’ மேற்கண்ட குர்ஆன் 13:28 வசனம் அல்லாஹ்வை நினைவுகூர்வதன் இம்மைப் பலனையும் நமக்கு அறிவிக்கின்றது. அல்குர்ஆன் 7:205 கீழ்க்கண்டவாறு பணிக்கிறது. ‘உம்மனதிற்குள் பணிவோடும், அச்சத்தோடும், சொல்லில் சப்தமின்றி, காலையிலும், மாலையிலும் உம்முடைய ரப்பை நீர் (திக்ர்) நினைவுகூர்வீராக. மறதியாளர்களில் ஒருவராக நீர் ஆகிவிட வேண்டாம்’. மேலும் பல வசனங்களில் நம்மை ஞாபகப்படுத்துமாறும், எப்படியெல்லாம் ஞாபகப்படுத்த வேண்டும் எனவும், ஞாபகப்படுத்த மாட்டீர்களா? என்றும் கூறுகிறது.

இன்னும் ஞாபகமூட்டலின் முக்கியத்துவத்தை, மேன்மையை நமக்கு விளக்குவான் வேண்டி, 29:45 – ‘இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக! நிச்சயமாகத் தொழுகையாகிறது மானக்கேடானவைகளை விட்டும், வெறுக்கப்பட்டதைவிட்டும் தடுக்கும். மேலும் அல்லாஹ்வை நினைவுகூர்வது மிகப் பெரியதாகும். அல்லாஹ் நீங்கள் செய்பவைகளை நன்கு அறிகிறான்’. இதில் இருந்து தொழுகைக்கு மேலும் அல்லாஹ்வை (திக்ர்) நினைவுகூர்வது மேலானது என்று அல்லாஹ்வை நினைவுகூரலின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறான். தொழுகையின் பெருமையை, பயனைக் கூறிய இடத்திலேயே அல்லாஹ்வை நினைவு கூர்வது மிகப்பெரியதாகும் எனக் கூறுவதில் பொதிந்துள்ள மகிமை அறியப்படல் அவசியம்.

தொழுகையே அல்லாஹ்வை நினைவு கூருவதுதான் என்பதை இன்னும் பல இடங்களில் குர்ஆனில் வலியுறுத்தியுள்ளான். அதனாலேயே தொழுகை பற்றிக் கூறிய அனைத்து வசனங்களிலும் தொழுகையை நிலை நிறுத்துவீராக, தொழுகையைப் பேணிவருவீராக, தொழுகையை முறையாக நிறைவேற்றுங்கள் தொழுகையைக் கடைப்பிடியுங்கள் போன்ற நிபந்தனைகளை விதிக்கிறான். தொழுகை மானக்கேடானவைகளை விட்டும், வெறுக்கப் பட்டதை விட்டும் தடுக்குமாயினும், அதைவிடப் மிகப் பயனுள்ள ஒன்றே ‘அல்லாஹ்வை நினைவு கூர்தல்’ என்னும் அல்லாஹ்வின் நோக்கத்தை மிகத் தெளிவாக்கி உள்ளான்.

மேலும் ‘தொழுகையாளிகளுக்குக் கேடுதான்’ – குர்ஆன் 107:4, என அல்லாஹ் சாபம் இடும் காரணத்தை நாம் அறியாதிருப்பதன் காரணமறிந்தால் அல்லாஹ் நம்தொழுகையில் எதனை எதிர்பார்க்கிறான் என்பதை அறிந்து அதன்படி நாம் ஒழுக முடியும். அடுத்த வசனமான குர்ஆன் 107:5 மிகத் தெளிவாக்குகிறது, ‘அவர்கள் எத்தகையோரென்றால் தங்கள் தொழுகையில் மறந்தவர்களாக இருப்பார்கள்’. குர்ஆன் 20:14’…மேலும் என்னை நினைவுகூர்ந்திட தொழுகையை நிலைநிறுத்துவீராக!’ என்பதிலிருந்தும் மேலும் அறிவில்லாத வணக்கத்தை நாம் ஏற்றுக்கொள்வதில்லை என வரும் ஹதீஸ் குத்ஸியிலிருந்தும் இறைவனை அறிவது என்ற ஒரு பெருநோக்கம் தொழுகையில் உள்ளது என்ற பேருண்மை வெளியாகிறது.

மறுமைக்கு முன்னர் தொழுகையை நிலை நிறுத்தங்கள் என்பதும் அவனது அறிவிப்பே! அதனால்தானே பின்வரும் அவனது எச்சரிக்கை வெளியாகிறது. அது அடையப்படாவிட்டால் அதனால் வரும் பெரு நஷ்டம் மறுமையில் உங்களது தொழுகைகள் பழைய சீலையைப் போல் சுருட்டி உங்கள் முகத்தில் வீசப்படும் என்ற ஹதீஸ் மூலம் அறியப்படலாம். இன்னும், ‘எனவே எவன் நம்முடைய திக்ரை (ஞாபகத்தை) விட்டும் முகம் திருப்பிக் கொண்டானோ அவனை நீர் புறக்கணித்து விடுவீராக!…’–குர்ஆன் 53:29, ‘எனவே என்னை நீங்கள் நினைவுகூருங்கள், உங்களை நான் நினைவு கூருகின்றேன்…..’–குர்ஆன் 2:152, எனக் கூறுபவைகளில் இருந்தும் அல்லாஹ்வை நினைவு கூரலின் ஆழத்தை, அத்தியாவசியத்தை, அவசரத்தை, அதில் பொதிந்துள்ள ஞானத்தை, அதனால் பெறவுள்ள ஈடேற்றத்தை நாம் அறிந்து கொள்ள முடியும்.

அல்லாஹ்வை நினைவுகூருங்கள் எனும்போது நம்முன்னே ஓர் கேள்வி தோன்றியிருக்க வேண்டும். அப்படித் தோன்றாவிடில் நமது ஆறாவதறிவு தர்க்க ரீதியாக ஆய்வு செய்வதில் பின்னிற்கிறது என்றே கொள்ள வேண்டும். அப்படியானால் அந்தக் கேள்விதான் என்ன? அது ஏற்பட்டால்தானே விடை காணமுடியும். அதன்படி செயற்பட்டு ஈடேற்றம் பெற முடியும். அல்லாஹ்வின் சாபத்துக்கு ஆளாகாது தப்பித்துக் கொள்ள முடியும். ஆம் அந்தக் கேள்வி, நாம் நமது கண்ணால் காணாத ஒன்றை ஞாபகப்படுத்த முடியுமா? என்பதே! பதிலும் நிட்சயமாக முடியாதென்பதே!

காணாத ஒன்றை ஞாபகப்படுத்த முடியாதென்றால், காணாத இறைவனை நாம் ஞாபகப்படுத்துவது எவ்வாறு? முடியாத ஓர் காரியத்தை செய்யும்படி நம்மை அல்லாஹ் நிர்ப்பந்திப்பானா? தனது மாமறையின் 2:256 ஆவது வசனத்தில் ‘…மார்க்கத்தில் எவ்வித நிர்ப்பந்தமும் கிடையாது…’ என மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளவன், அதற்கு மாறாக நாம் காணாத ஒன்றை ஞாபகப்படுத்த நம்மைப் பணிக்க மாட்டான் என்ற நம்பிக்கை நமக்கிருந்தாலோ, அன்றி நடைமுறைக்குச் சாத்தியமற்ற ஒன்றைச் செய்யுமாறு பணிப்பவனல்ல அல்லாஹ், அவன் இரக்கவான், காருண்யவான் ( 57:9 ), கருணையாளன், ஞானவான் என்பதை ஏற்றாலோ, அவனது நினைவு கூருங்கள் என்ற கட்டளைக்கான விடையை அவனது ஞாபகமூட்டலான புனித குர்ஆனிலேயே தேடவேண்டும் என்ற எண்ணம் நம்மை வந்தடையும். தேடாதவை கிடைப்பதில்லையே! நாடாதவை அடையப் பெறுவதில்லையே!
‘கருணையைத் தன்மீது கடமையாக்கிக் கொண்டுள்ளவன்’- 6:12 அந்த உண்மையைச் சொல்லாமல் விடவோ அன்றி மறைத்து வைத்துத் நம்மைத் துன்பத்தில் ஆழ்த்தவோ விரும்பாது மிகத் தெளிவாகப் பல இடங்களில் வெளிப்படுத்தி உள்ளான். அவன் நமக்கு இலகுவை விரும்புவனல்லவா? குர்ஆன் 2: 185 – ‘உங்களுக்கு இலகு அளிப்பதை அல்லாஹ் நாடுகிறான். மேலும் உங்களுக்குச் சிரமம் அளிப்பதை அவன் விரும்பவில்லை’. ஆக நாம் செய்யவேண்டி இருப்பதெல்லாம் தேடுதல் ஒன்றே! இதற்கும் மேலாக,‘நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் அறிந்தவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்’ என இறைவன் குர்ஆன் 16:43, 21:7 இல் கூறி, இன்னும் நம் தேடலின் வேலையை இலகுபடுத்தி உள்ளான் என்பது நம்மேல் அவன் கொண்டுள்ள அக்கறையை அறிய வைக்கிறது.

ஆக நம் முயற்சியின் அளவுக்கேற்ப நமது அடைவு இருக்கும் என்பதைப் பின்வருமாறு விளக்குகிறான். அதனாலேயே உங்களது முயற்சிகள் கணக்கெடுக்கப்படுமென அவன் கூறியுள்ளான். இப்போது நாம் விடயத்தின் ஆழத்திற்கு வருவோம்.

‘இன்னும் உம்முடைய ரப்பு,ஆதமின் மக்களாகிய அவர்களது முதுகுகளில் இருந்து, அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி, அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக்கி வைத்தபோது, ‘நான் உங்கள் ரப்பு அல்லவா?'(என்று கேட்டதும்)’ஆம் நாங்கள் சாட்சி கூறுகிறோம்’ என்று அவர்கள் கூறியதை நினைவூட்டும். ஏனென்றால், நிச்சயமாக, ‘நாங்கள் இதனைவிட்டும் மறதியாளர்களாக இருந்து விட்டோம்’ என்று மறுமை நாளில் நீங்கள் கூறாதிருப்பதற்காக’, என்று புனித குர்ஆன் 7:172 வசனம் மிகத்தெளிவாக, சிறிதேனும் சந்தேகத்துக்கோ அன்றி மேலும் விளக்கத்துக்கோ, விசாரணைக்கோ, இடந்தராது கூறி நிற்கிறது.

நாம் முன்னர் அல்லாஹ்வைக் கண்டதை ஞாபகப்படுத்துவதன் மூலம் இப்போது அவனை நம்முள்ளேயே கண்டு ஞாபகப்படுத்த வேண்டும் என்பதை நமக்கு இக்குர்ஆன் மூலம் மீண்டும் ஞாபகப்படுத்தி நாளை மறுமையில், நாம் கண்டதை மறந்து விட்டோம் அதனால் ஞாபகப்படுத்துவதில் தவறு இழைத்துவிட்டோம் எனச் சாக்குப்போக்குச் சொல்லித் தப்புவதற்கு முயற்சிக்க இடம் தராமல், -ஒவ்வோர் சமூகத்துக்கும் நபிமார்கள் மூலம் வேதங்களைத் தந்து, ஞாபகமூட்டி- தடைபோட்டுள்ளான். மேலும், எப்படி? எந்தளவு நினைவுகூர வேண்டும் என்பதை, ‘உங்கள் மூதாதையரை நீங்கள் நினைவுகூர்வது போன்று அல்லது அதைவிட அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூர்ந்திடுங்கள்’ என்றும் புனிகுர்ஆன் 2:200இல் கூறியுள்ளான்.

இன்னும் உங்களுக்குள்ளேயும் நீங்கள் கவனித்துப் பார்க்க வேண்டாமா? எனக் குர்ஆன் 51:21 நமக்கு அறைகூவல் விடுப்பது வெறும் வார்த்தைகளல்ல முற்று முழுதான அறவுரையும், அறிவுரையும், அருளுரையுமே. மேலும், அது நம்மேல் அவன் கொண்ட கருணையின் வெளிப்பாடு.

இன்னும் ‘ எவர் இம்மையில் குருடராக இருந்தாரோ அவர் மறுமையிலும் குருடராக இருப்பார். இன்னும் அவர் பாதையில் தவறியவராவார்’ என்னும் இறை வசனம் 17:72 ஆலும் இறை தரிசனத்தின் இன்றியமையாமையை மாமறை நமக்கு விளக்குகிறது. அதனால் இம்மையிலேயே அவனை நினைவு கூரும்படி கூறியதன் நுணுக்கம் வெளியாகிறது. மேலும் இம்மையில் இறைவனைக் காண முடியும் என்ற நுட்பத்தைச் சூசகமாக நமக்கு அறிவிக்கிறது.

இதனை அனுசரித்து அம்முயற்சிகளில் ஈடுபடும்போது ஏற்படும் பயனை அறிவதற்கு முயற்சி எடுக்க வைப்பதற்கு அடுத்த வசனம் ஆதாரமாகிறது. ‘மனிதனுக்கு அவன் முயற்சி செய்ததேயல்லாமல் இல்லை’ குர்ஆன் 53:39. ஆக இந்தப் பிறப்பிலேயே, இந்த உலகிலேயே அவனைக் காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால் அவன் நமது பார்வையை வந்தடைவான் என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது பின்வரும் வசனம். ‘ பார்வைகள் அவனை அடைய முடியாது. அவனோ அனைத்துப் பாhரவைகளையும் அடைகிறான்- அல் குர்ஆன் 6:103′. இந்த இறைகூற்றில் பொதிந்துள்ளவற்றைச் சற்றே ஆராய்ந்தால் பல உண்மைகள் புரியும்.

ஆக அவனை நம் ஊனக் கண்களால் பார்க்க முடியாது. நாம் ஒன்றை நேரடியாகக் காண முடியாவிட்டாலும் இன்னொருவரால் நமக்கு அதைக் காண்பிக்க முடியும் என்பதை இன்றைய விஞ்ஞான உலகில் மறுப்பவர் யாரோ? எங்கோ? எப்போதோ? நடந்தவைகள் நம்கண்முன் கொண்டு வரப்படுவதை மிகச் சூட்சகமாக மேற்கண்ட வசனத்தில் கூறியுள்ளமை அறிந்தவர்கள் அறியக் கூடியதே. இறைவன் நினைத்தால் நமக்குக் காட்சியாவான் அதாவது நமது பார்வையை வந்தடைவான் என்ற அவனது வாக்கு நம்மை ஊக்குவிக்கின்றது. உற்சாகம் தருகின்றது. நமது அருமை நாயகம் ஸல் அவர்களுக்குக் கூட காண்பிக்கப்பட்டது எனக் கூறுவதிலிருந்து அந்நம்பிக்கை வலுப்பெறுகின்றது. அடுத்து அவன் நம்மை நினைவு கூரும்படிதானே வேண்டுகோள் விடுக்கிறான். இங்கோ இறைவனே உங்கள் பார்வையை அடைகிறான் என்னும் போது நமது முயற்சிக்கு அவன் பதிலளிப்பான் அல்லவா?

நம்பிக்கையாளரைப் பாதுகாப்பது நம்கடன் எனக் கூறியவனல்லவா! ஆக, காணக்கூடிய முயற்சி உள்ளோர் கண்டு கொள்வதன் மூலமும், அவனை ஞாபகப்படுத்தும் முயற்சியுடையோர் ஞாபகப்படுத்துவதன் மூலமும், மறைகூறும் இறை கட்டளையை நிறைவேற்றி மறுமையில் அவனைக் காணவும், கதிபெறவும் முடியுமல்லவா? இதனைத்தானே இறைவன் நமக்கு நன்மையை விரும்புவதாகக் கூறுகிறான்.

அத்தோடு இப்பிறப்பிற்கு முன்னர் நாம் இறைவனை ஏதோ ஓர் சந்தர்ப்பத்தில், எங்கோ? ஏதோ ஓர் நிலையில் கண்டுள்ளோம். அவனது கேள்விகட்கு பதிலளித்துள்ளோம். வாக்குறுதி கொடுத்துள்ளோம் போன்றவை மிகத் தெளிவாகின்றது. 56 : 62 ‘அன்றியும், முதல் முறை படைத்திருப்பதை, நிச்சயமாக நீங்கள் அறிந்துள்ளீர்கள். எனவே நீங்கள் நல்லுணர்வு பெறவேண்டாமா?’. 6:152 ‘அல்லாஹ்வுக்கு நீங்கள் அளித்திருந்த வாக்குறுதியையும் நிறைவேற்றுங்கள். நீங்கள் நினைவுபடுத்திக் கொள்வதற்காக இவற்றை அவன் உங்களுக்கு வஸியத்துச் செய்கிறான்.‘ 53:32 ‘….. அவன் உங்களைப் பூமியிலிருந்து உருவாக்கிய பொழுதும், உங்களுடைய தாய்மார்களின் வயிறுகளில் நீங்கள் சிசுக்களாக இருந்த பொழுதும் உங்களைப் பற்றி அவன் நன்கு அறிந்தவன்…’-18:48. ‘…..நாம் உங்களை முதல் தடவை படைத்தவாறே இப்பொழுதும் நம்மிடம் திட்டமாக நீங்கள் வந்துள்ளீர்கள்….’.-57: 8. ‘….நிச்சயமாக அவன் உங்களுடைய வாக்குறுதியை வாங்கியிருக்க நீங்கள் அல்லாஹ்வைக் கொண்டு ஈமான் கொள்ளாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் ஈமான் கொண்டவர்களாக இருந்தால்.’

மேற்கண்ட வசனங்கள் நாம் உய்த்துணர்ந்து நல்லறிவு பெறக்கூடியவை. இவற்றினால், நாம் முன்னர் கண்ட அகிலங்களின் ரப்பை நினைவுகூர முடியும் என்ற தரவுக்கு மேலும் வலு பெறப்படுகின்றது. முடியாத ஒன்றைச் செய்யுமாறு அவன் நம்மைத் தூண்டவில்லை. மாறாக அவனை நினைவு கூர்ந்து நம்பிறப்பின் பயனைப் பெறமுடியும் என்பது அவனது நேர்வழிக்கு உட்பட்டதே. முடிவாக அவன் நினைவுகூரப்பட வேண்டியவன். நாம் நினைவுகூர வேண்டும். நினைவுகூர முடியும். அதில் முயற்சிப்பது நம்மனைவரதும் தலையாய கடன்.

அந்தக் கடமையில் தவறுபவர்களைப் பற்றியும் அல்லாஹ் சொல்லாமல் விடவில்லை. அடுத்த வசனம் அதனை நமக்கு அறிவிக்கிறது. 

21: 42 ‘….எனினும் அவர்கள் தமது ரப்பை நினைவுகூர்வதைப் புறக்கணிப்போராகவே இருக்கின்றனர்’. 58:19 ‘அவர்களை ஷைத்தான் மிகைத்துவிட்டான். எனவே அல்லாஹ்வைப் பற்றிய நினைவை அவன் அவர்களுக்கு மறக்கடித்துவிட்டான். அவர்கள் ஷைத்தானின் கூட்டத்தினர் ஆவர்…..’. இன்னும் வல்ல அல்லாஹ் தன் திருமறையின் 3 : 135இல் பயபக்தியாளரைக் குறித்து ‘ அவர்கள் மானக்கேடான ஒரு செயலைச் செய்துவிட்டால், அல்லது தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்டால், அல்லாஹ்வை அவர்கள் நினைவுகூர்ந்து தங்களுடைய பாவங்களுக்காக மன்னிப்புத் தேடிக்கொள்வர்.

இவை நம் தலைப்புக்குச் சாதகமாக நினைவுகூர முடியும் என்ற பதிலைத் தருபவை. குர்ஆன் 39:22 அல்லாஹ்வை நினைவுகூர்வதை விட்டும் அவர்களுடைய இதயம் இறுக்கமடைந்து விட்டவர்களுக்குக் கேடுதான். அவர்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கின்றனர்’ இன்னும், குர்ஆன் 18:101இல் ‘..என்னை நினைவுகூர்வதை விட்டும், அவர்களது கண்கள் திரைக்குள் இருந்தன….‘என்றும் கூறுவதில் அல்லாஹ்வை நினைவுகூர்தல் என்ற கருத்தை வலுப்படுத்த மேலும் ஓர் உண்மை உறைந்துள்ளதை அறிவுள்ளோர் கண்டறிந்து கொள்வர், நேர்வழியில் நடந்து வெற்றி பெறுவர்.

குர்ஆன் 6: 104 இவ்வாறு கூறுகிறது, உங்கள் ரப்பின் புறத்திலிருந்து ஆதாரங்கள் உங்களுக்குத் திட்டமாக வந்துவிட்டன. எனவே, எவர் பார்க்கிறாரோ அப்பொழுது அவருக்கே நன்மையானதாகும். எவர் குருடாகிவிடுவாரோ அப்பொழுது அவருக்கே கேடாகும். ‘….அவன்பால் நெருங்குவதற்குரிய வழியைத் தேடிக்கொள்ளுங்கள்….’ குர்ஆன் 5: 35. என்று அருள் மறையில் அறைகூவல் விடுப்பதன் தாற்ப்பரியத்தை அறிந்து மேலும் நன்மைகளைப் பெற்றுக் கொள்ளலாமே! இறை நெருக்கத்தைவிடச் சிறந்த ஒன்றை நாம் இம்மையிலோ மறுமையிலோ கண்டு கொள்ள முடியுமா! அப்படியான அதியுன்னத கருத்தாழமிக்க, அவனை ஞாபகப்படுத்தும்படி கூறும், வாசகங்கள் நம் கண்ணைக் கருத்தை கவராமல் விடப்படுவது விரும்பத்தக்கதா? நாம் பின்னர் கைசேதப்படலாமா? அதனோடு தொடர்புள்ள வாக்கியங்களின் அருமை பெருமை அறியாமல் விடப்படலாமா? சற்றே நாம் சிந்தித்தால் நமக்குக் கிடைத்துள்ள இவ்வரிய பொக்கிஷத்தின் கருவூலங்களைக் கண்டு கொள்ளாமல் விட்டமைக்காகப் பின்னர் வருந்தத்தான் முடியுமா? போன்றவை நம்மை ஆட்டம் காணவைத்து வாட்டி வதைக்கின்றன.

நாம் குர்ஆன் வசனங்களை அறியாததனால்தானே திருக்குர்ஆன் 25:30இல் இறைவன் தனது கூற்றாகப் பின்வருமாறு கூறுகிறான். ‘ ‘எனது ரப்பே நிச்சயமாக என்னுடைய சமூகத்தினர் இந்தக் குர்ஆனைப் புறக்கணித்து விட்டனர்’ என்று தூதர் கூறுவார்’ இந்நிலைக்கு ஆளானவர்களின் வரிசையில் நாமும் இடம்பெறலாமா?ஆகவே குர்ஆனை ஓதியுணர்ந்து ரப்பை நினைவுகூர்ந்து, பிறந்த பயனைப் பெறுவோம்.

மறைகூறும் இறையாணைக்கமைய, தொழுகையை நிலைநிறுத்த வல்ல நாயனை நினைகூர்ந்து, தொழுகையையும் பொருள் பொதிந்ததாக்கி, அதன் பயனான ஈடேற்றமான நல்ல வாழ்வை இம்மை மறுமையில் இனிதே பெற்ற புனிதராவோம்.

- நிஹா -