உலகம் தோன்றிய நாள் முதல் அநியாயங்கள் நடந்த வண்ணமே உள்ளன. இயன்றவர்கள் அநியாயம் செய்வதும், இயலாதவர்கள் அநியாயத்துக்கு உள்ளாக்கப்படுவதும் வாழ்வின் ஓர் பகுதியாகவே உள்ளன. அனைத்து உயிரினங்களும் கூட இந்நிலைக்கு விதிவிலக்கின்றியே உள்ளன. இவ்வநியாயங்களின் பிரதி பலன்களே உலகில் தலையெடுத்த அத்தனை புரட்சிகளுக்கும், பயங்கரவாதங்களுக்கும், வன்செயல்களுக்கும் காரணமாயமைந்தன. அநியாயங்களின் ஆரம்பம் எங்குள்ளது என்பது கட்டுரையின் வரைவுக்கு அப்பாற்பட்டது. அநியாயங்கள் அமைதியை அழித்தொழித்தன என்பதே தெளிந்த உண்மை!

அநியாயங்களின் தொடர் நடவடிக்கைகள் உலகையே அழிவுப் பாதையில் இட்டுச் சென்று கொண்டு இருந்தன. அதன் பயனாக, பொதுவான பார்வையில் சிறு அநியாயங்கள் போல் தெரிபவை, ஒரு சாராரால் மிகப் பெரிதுபடுத்தப்பட்டு நீண்ட காலத்துக்குப் பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வைத்து உயிர், உடமை, அமைதி போன்றவற்றைப் பங்கப்படுத்தி உள்ளன. அநியாயங்களுக்கான பழிவாங்கலுக்கு எல்லையோ, அளவோ இருந்ததில்லை! அவரவர் உளப்பான்மை, அந்தஸ்து, உடல், பொருள், வளங்களின் வலிமையைப் பொறுத்து தாக்கங்கள் வேறுபட்டு வெளியாகின! அநியாயத்துக்கு உள்ளானோரே தாமடைந்ததைவிடக் கூடிய அநியாயத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர். அந்த அழிவிலேயே மகிழ்வடைந்தும் இருக்கின்றனர்.

சமூக நீதிகள் தூங்கி வழிந்து கொண்டிருந்தன. நியாயங் கேட்க வேண்டியவர்களே அநியாயக்காரராகவும், அநியாயத்துக்கு வழிபோபவர்களாகவும், பாதுகாவலர்களாகவும் காணப்பட்டனர். அதனால் குழப்பங்கள், வக்கிரங்கள், அதனைத் தொடர்ந்த அட்டூழியங்கள் அதிகரித்தே இருந்தன. ஒன்றுக்கு நூறு என்றவாறே பதிலடிகள் கொடுக்கப்படுவது பெருமைக்குரியதாக, மதிப்பைத் தருவதாக இருந்தன. தம் அந்தஸ்தை வெளிப்படுத்துவனவாகவிருந்தன. இன்றும் இந்நிலையில் மாற்றம் பெருமளவு இல்லை என்பது வருத்தத்தோடு பதிவாகிறது.

அந்த அடிப்படையில் இவைகளுக்கெல்லாம் முற்றுப் புள்ளிவைக்கும் நோக்கிலேயே யாவுமறிந்த கருணையாளனாகிய, வல்ல அல்லாஹ் சுபுஹானஹுவதஆலா பழிவாங்கும் உரிமையைப் பாதிக்கப்பட்ட ஒருவருக்குக் கொடுக்கின்றான். பாதிக்கப்பட்டவனுக்கு உரிய உரிமைகள் கொடுக்கப்படுவதன் மூலம் தமக்கு இழைக்கப்பட்ட பாதிப்புகட்கு மேல் அளவுக்கதிகமாகச் செய்யப்பட்டுவந்த அக்கிரமங்கள், அழிவுகள், தொடர் சண்டைகள், உயிரிழப்புக்கள், உடமைகளின் அழிவுகள், வம்புகள், வாதங்கள், குழப்பங்கள் எல்லாவற்றுக்கும் வரம்பு கட்டுகின்றான். இயலாமையில் இருப்பவர்களுக்கும் நியாயங்கிடைக்க வழி சமைத்துள்ளான்.

அநியாயம் இழைக்கப்பட்டவன் எதற்குமே முடியாதவனாக இருப்பானாயின் அவன் தகாத வார்த்தைகள் மூலம் தனது பழிவாங்கலைத் தீர்த்துக் கொள்ளலாம். உதவி தேடுவதற்கும் அனுமதித்துள்ளான். அநியாயம் இழைக்கப்பட்டவன் முடியுமானவனாக இருப்பானாயின், அளவு கடவாமல் தனக்கு இழைக்கப்பட்ட அநியாயத்தின் அளவிலேயே பதிலடி கொடுக்கும் உரிமையைக் கொடுத்துள்ளான். அநியாயம் இழைக்கப்பட்டவன் முடியாதவனாகவோ, உயிருடன் இல்லாமலோ இருந்தால், பாதிக்கப்பட்டவனின் சந்ததியினருக்குப் பழிவாங்கும் உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நியாயமான உரிமை, மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உள்ளது. எல்லை கடந்து உரிமையைப் பாவித்துவிடக் கூடாது. இதற்கு மேலாக இழப்பிற்கான நட்ட ஈட்டைப் பெற்றுக் கொண்டு பழிவாங்கலைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

உண்மையில் இம்முறை மூலம் தேவையற்ற பகைமை, வஞ்சம், அழிவுகள் தவிர்க்கப்படுவதுடன், பாதிக்கப்பட்டவரும் ஏதோ வழியில் நன்மையை அடைகின்றார். மனமுறிவுகள் இதனால் பெருமளவில் தவிர்க்கப்படுகின்றன. அத்தோடு நட்டஈடு கொடுக்க வேண்டுமே என்ற நிலை ஏற்படுவதால் வலிந்து அநியாயம் செய்யும் தன்மையும் குறைகின்ற சாத்தியம் உண்டாகின்றது. இவை எல்லாவற்றுக்கும் மேல் பெருமனது கொண்டு மன்னித்துவிட முடியுமாயின் அதுவே அனைத்திலும் மிகச் சிறந்தாகும் எனக் கூறியுள்ளதுடன்,பொறுமையை மேற்கொள்வதற்கான கூலி தன்னால் கொடுக்கப்படும் எனவும் கூறுகின்றான். சிந்திப்போருக்கு நிறைய உண்மைகள், நன்மைகள், படிப்பினைகள் இவற்றில் காணப்படுகின்றன.

தொடர்பான குர்ஆன் வசனங்கள்

2 : 178 – ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன், அடிமைக்கு அடிமை, பெண்ணுக்குப் பெண் இருப்பினும் அவனுக்கு அவனது சகோதரனால் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் – இது உங்கள் இறைவனிடம் இருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும். ஆகவே, இதன் பிறகு யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு.

2:179. நல்லறிவாளர்களே! கொலைக்குப் பழி தீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டு. நீங்கள் உங்களைக் காத்துக் கொள்ளலாம்.

2:194. …..ஆகவே, எவனாவது உங்களுக்கு எதிராக வரம்பு கடந்து நடந்தால், உங்கள் மேல் அவன் எவ்வளவு வரம்பு மீறியுள்ளானோ அதே அளவு நீங்கள் அவன் மேல் வரம்வு மீறுங்கள். அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

4:92. தவறாக அன்றி, ஒரு முஃமின் பிறிதொரு முஃமினை கொலை செய்வது ஆகுமானதல்ல. உங்களில் எவரேனும் ஒரு முஃமினை தவறாக கொலை செய்துவிட்டால், அதற்குப் பரிகாரமாக முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; அவனுடைய குடும்பத்தாருக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் – அவனுடைய குடும்பத்தார் அதை தர்மமாக விட்டாலொழிய கொல்லப்பட்ட அவன் உங்கள் பகை இனத்தைச் சார்ந்தவனாக முஃமினாக இருந்தால், முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்தால் போதும் அவன் உங்களுடன் சமாதான செய்து கொண்ட வகுப்பாரைச் சேர்ந்தவனாக இருந்தால் அவன் சொந்தக்காரருக்கு நஷ்ட ஈடு கொடுப்பதுடன், முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்யவும் வேண்டும். இவ்வாறு செய்வதற்கு சக்தியில்லாதவனாக இருந்தால், அல்லாஹ்விடம் மன்னிப்புப் பெறுவதற்காகத் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு வைக்க வேண்டும் – அல்லாஹ் நன்கு அறிந்தவனாகவும், பூரண ஞானமுடையவனாகவும் இருக்கிறான்.

4:148. அநியாயம் செய்யப்பட்டவர்களைத் தவிர வார்த்தைகளில் தீயவற்றை பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்பவில்லை – அல்லாஹ் நன்கு செவியுறுவோனாகவும் யாவற்றையும் அறிபவனாகவும் இருக்கின்றான்.

5:45. அவர்களுக்கு நாம் அதில், ‘உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும், காயங்களுக்கு நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்’ எனினும் ஒருவர் தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும். எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்தபடி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களே!( இது மூஸா (அலை) நபி அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட சட்டம். பைபிளில் காணப்படுவது)

16:126. நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் எந்த அளவிற்கு நீங்கள் தண்டிக்கப்பட்டீர்களோ அது போன்ற அளவுக்கே நீங்களும் தண்டியுங்கள், பொறுத்துக் கொண்டால், நிச்சயமாக அதுவே பொறுமையாளருக்கு மிக்க மேன்மையானதாகும்.

17:33. அல்லாஹ் விலக்கியிருக்க நீங்கள் எந்த மனிதனையும் நியாயமான காரணமின்றிக் கொலை செய்து விடாதீர்கள். எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டு விட்டால், அவருடைய வாரிஸுக்கு நாம் அதிகாரம் கொடுத்திருக்கிறோம்;.ஆனால் கொலையில் வரம்பு கடந்து விடக்கூடாது. நிச்சயமாக கொலையுண்டவரின் வாரிசு உதவி செய்யப்பட்டவராவார்.

22:60. அது எவன் தான் துன்புறுத்தப்படும் அளவே தண்டித்து அதன் பின் அவன் மீது கொடுமை செய்யப்படுமானால் நிச்சயமாக அல்லாஹ் அவனுக்கு உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், பிழை பொறுப்பவன்.

42:39. அன்றியும். அவர்களுக்கு அக்கரமம் செய்யப்பட்டால் பழி தீர்ப்பார்கள்.

42:40. இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையேயாகும. ஆனால், எவர் மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குரிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது – நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்.

42:41. எனவே, எவரொருவர் அநியாயம் செய்யப்பட்டபின், பழி தீர்த்துக் கொள்கிறாரோ, அவர் மீது யாதொரு வழியுமில்லை.

42:42. ஆனால் எவர்கள் மக்களுக்கு அநியாயம் செய்து நீதமின்றி பூமியில் அட்டூழியம் செய்கிறார்களோ,அவர்கள் மீதுதான் வழியிருக்கிறது- இத்தகையோருக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு.

42:43. ஆனால், எவரேனும் பொறுத்துக்கொண்டு மன்னித்துவிட்டால், நிச்சயமாக, அது மிக்க உறுதியான செயலாகும்.

– நிஹா -