நற் சிந்தனை 32

 

பதவிகளால் சிலர் புகழ் அடைவர். பதவிகள் சிலரால் புகழ் அடைகின்றது. – வழக்கிலுள்ள மொழி

இது முற்றிலும் உண்மைதான். அப்படி நடந்த வரலாறுகளும் பதிவாகியே உள்ளன. அதற்காகப் பல உதாரணங்களையும கூறவும் செய்யலாம். அது இன்றைய துர்ப்பாக்கிய நிலையை வெளிப்படுத்தப் போவதில்லை. அதனால், இன்றைய உலகில், சற்று இதனை  அலசி ஆராய்ந்து பார்ப்போமானால், பதவியால் சிறுமை அ்டைந்தவர்களின் எண்ணிக்கையே அதிகமாகக் காணப்படுகின்றது.

அது போன்றே, பதவிகள் சிலரால் புகழ் அடைந்ததும் உண்மைதான், ஆனால், சில பதவிகளே, சிலரால், ஏன் இந்தப் பதவிகள் உருவாக்கப்பட்டன, இவைகளை ஒழிக்காவிடில் உலகே உருப்படாது என்ற நிலையை ஏற்படுத்தியுள்ள நிலைமையே இன்று எங்கனும் காணப்படுகின்றது. அதனால்தான், இன்று, இந்நாட்டில் ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோஷம் அனைத்துப் பாலாரிலும் இருந்து வலுப்பட்டு, வெளிப்பட்ட வண்ணமுள்ளது.

 

உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகி விடாது. – ஊர்ப் பழமொழி

ஊர்க்குருவி பருந்தாகிவிட முடியாது என்பதற்காகப் பயந்து, விரக்தியடைந்து, படுத்துறங்கிடக் கூடாது. அது இயற்கை நமக்களித்த கிருபை. உயரப் பறப்பதால் பருந்து ஒரு போதும் பெருமை பெற்றுவிடுவதில்லை. ஆனால், ஊர்க் குருவி அதே செயலைச் செய்யும் போது அது பெருமை பெறுகின்றது. சாதனையாகின்றது. அனைவராலும் மதிக்கப்படுகின்றது. அந்த உயர்ச்சியிலும் பணிவைப் பேணி நடந்தால், பருந்தைவிட உயர்ந்த ஸ்தானத்தையும் அடைந்து விடலாம். இது, முன்னைய கருத்தில், மோசமான நிலையை அடைந்தவர்கள் பெற்றுக் கொள்ளும் பேறாக ஆகிவிடும்.  

 

ஒரு மனிதன் தன்னுடைய செயல்களாலே பெரிய மனிதன் ஆகிறான், அவன் அமரும் பதவியில் இல்லை. காகம் பெரிய மலையில் மேல் அமர்ந்தாலும் கருடன் ஆகாது . – அர்த்த சாஸ்திரம்

 

மேற்கண்ட தத்துவம்: ஒன்று, செயல்களால் பெரிய மனிதன் ஆகின்றான் என்பதும், இரண்டாவது, பெரிய மனிதனாவது அமரும் பதவியில் இல்லை என்பது. இங்கு செயல்களால் பெரிய மனிதன் ஆகுபவன் பெருமை பெறுகின்றான். அதேவேளை, பதவியால் பெரிய மனிதன் ஆகி கடமையைச் செய்யும் போது பதவிப் பெருமையைக் காத்து விடுகின்றான். அதற்கு மேலும், நற்செயலைச் செய்யும் போது தனக்கும் பெருமையைப் பெற்றக் கொள்கின்றான். இது ஊர்க் குருவியின் நிலையை ஒத்ததாகக் கொள்ளலாம். அதனைவிட இன்னொரு படி, காகம் கழிவைத் தின்று அழுக்கை ஒழிக்கும் உயர் பணியையும் செய்வதன் மூலம் மனிதருக்கும், இயற்கைக்கும் தனது பங்கை ஆற்றி விடுகின்றது. ஆக காகம் கருடன் ஆக முடியாவிடினும், தனது பண்புகளுடன், கருடனின் பண்புகளையும் வெளிப்படுத்தி, கருடனிலும் உணர்ந்து விடுகின்றது.

 

மனிதருள் மிருக குணமும், மனித குணமும், தெய்வாம்சமும் இரண்டறக் கலந்தே உள்ளன. வெளிப்படுத்துவதில்தான் நமது பெருமையும் சிறுமையும் தங்கியுள்ளது.

இது அனைத்திலும் சற்று வித்தியாசமானது. மனிதன் தன்னிலையில் இருந்து, பிறழ்ந்து மிருக நிலையை வெளிப்படுத்தி விடாது, மனிதனாகவும் தனது கடமைகளை, தனக்கு, தன் குடும்பத்திற்கு, தன்னைச் சுற்றி உள்ளோருக்கு, தான் சார்ந்த சமூகத்திற்கு, நாட்டுக்கு, இந்த உலகுக்கும் செய்து வருவானாயின் அவன் அமரத்துவம் பெற்று, மனித தெய்வமாகி விடுகின்றான். இவை அனைத்திலும், ஒழுக்கமும், பணிவும் இன்றேல் அனைத்துமே அபத்தமாகிவிடும். இதனாலேயே, அல்லாஹ் தன் இறுதித் தூதர் முஹம்மது ஸல் அவர்கள் பற்றிக் கூறும் போது,  அவர்கள், ”உயர் குணத்தின் உன்னத நிலையில் இருக்கிறார்” என்று கூறியுள்ளான். ஆதலால், அவர் உலகுள்ள வரையும் வாழ்ந்து கொண்டிருப்பார். அதற்குப் பின்னரும் அவர் புகழ் உயர்ந்தே நிற்கும்.

 

- நிஹா -