1. புனித குர்ஆன் புகழ்மிகு அல்லாஹ் சுபுஹானஹுவ தஆலாவால் அரபு மொழியில் அருளப்பட்டதை அறியாதோர் இலர். ‘நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இதனை அரபியிலான குர்ஆனாக நிச்சயமாக நாமே இறக்கி வைத்தோம்’ ( 12:2 ) என அவனே விதந்துரைக்கின்றான். அதாவது, இதன் கருத்து உலக மக்கள் எல்லோரும் அரபு மொழியில் எழுதினால் விளங்கிக் கொள்வர் என்பதல்ல. அரபி மொழியில் எழுதப்பட்டால், உலக முடிவு வரையான, அனைத்து சாராருக்கும், அனைத்து சந்தர்ப்பங்களுக்கும் பயன்தரக்கூடிய, இறைவனின் விருப்பத்தைப் பரந்துபட்ட அளவில், உயர்ந்தபட்ச நிலையில், சிறந்த முறையில் வெளிப்படுத்தக் கூடியவாறு, விரிவான கருத்தை மிகத் தெளிவாக, இலகுவாக, விளங்க வைக்க முடியும் என்பதே! அத்தோடு அரபு மொழியே தெரியாத எழுத்தறிவற்ற அரபியான முஹம்மது (ஸல்) அவர்கள் மூலம் இதனை அனுப்பியது தன்னை (அல்லாஹ்வை)த்தவிர வேறு யாருமில்லை என்பதை விளங்கிக் கொள்ள என்பது போன்ற பல கருத்துக்களை வெளிப்படுத்துவதுமாகும்.

2. அதற்கு மேலும் அரபியிலான குர்ஆன் எந்த மாற்றத்துக்கும் உட்படுத்தப்பட முடியாத புதுமையான அமைப்பொன்றைக் கொண்டிருக்கின்றது. இதனை வேறு மொழியில் எழுதியிருந்தால், அதனைத் தற்போது மக்கள் மனனம் செய்துள்ளவாறு செய்திருக்க முடியுமா? மனப்பாடமாகும் தன்மை கொண்ட ஒன்று, விளக்கம் தருவதில் இலகு தன்மையைக் கொண்டிருக்கும். கவிதையாக இல்லாவிடினும், கவிதை போன்று வாசிக்கக் கூடிய இசைவைக் கொண்டிருக்கும். அதன் பரம்பல்கூட துரித தன்மை கொண்டிருக்கும். மிகச்சிறிய மூன்று வசனங்கள் கொண்ட அத்தியாயம் கூட உயர் கருத்தை வெளிப்படுத்தக் கூடியதாயுள்ளது. பல வசனங்களைக் கொண்ட நீண்ட பந்தி ஓர் சட்டத்தை வெளிப்படுத்தும். ஓன்றை வெளிப்படுத்தும் வேளை அதனுள் சில விஞ்ஞான உண்மைகள் பொதிந்து கிடக்கும் தன்மை. ஒரு விடயத்தைத் துண்டு துண்டாகப் பல இடங்களில் கூறல். ஓன்றையே தொடராகப் பல வசனங்களாகக் கூறல். மிகக் குறைந்த சொற் பிரயோகத்தில் மிக உயர்தர செய்திகளைக் கொடுக்கக் கூடிய பண்பு. வெவ்வேறு இடங்களிலும் கருத்துக்களிலும் உள்ள வசனங்கள் ஒன்றையொன்று காத்து நிற்கும் பண்பு. ஒன்றை நாம் பிழையாக விளங்கினால் இன்னோரிடத்தில் வேறு ஒன்றை வாசிக்கும் போது, ஏற்கனவே கொண்ட பிழையான கருத்தை மீள்பரிசோதனை செய்யச் செய்யும் பாங்கு. முரண்பாடாக ஏதாவது தோன்றினால் அதற்குத் தீர்வு அக்குர்ஆனுள்ளேயே அமைக்கப்பட்டுள்ள நுட்பம். ஓரிரு எழுத்துக்கள்கூட கருத்தோடு கூடிய வசன மாற்றங்களில் பாரிய கருத்து மாற்றங்களை ஏற்படுத்தும் கவசம். அத்தாட்சி. சாட்சி. எச்சரிக்கை, போன்ற பன்முகத் தன்மை கொண்டது.

3. இன்று உலகின் அனைத்து மக்களும் அவர்கள் என்ன பாஷை பேசுவோராயினும் அரபு மொழியிலே குர்ஆன் வசனங்களைப் பாடம் பண்ணியுள்ளனர். மூன்றே வயதுக் குழந்தை முதல் மரணத்தை எதிர்பார்த்துள்ள மூத்தோர்கள் வரை, பட்டங்கள் பெற்ற பண்டிதர் முதல் படிப்பறிவற்ற பாமரர் வரை குர்ஆனைக் கவினுற ஓதும் தன்மை, அரபு மொழியின் மகிமை! ஏன் நமது அருமை நபி (ஸல்) அவர்களே இவ்வகுப்பினர் தானே. இந்த மகிமையால் கட்டுண்டுதானே கொன்றுகுவித்து வென்று வருவேன் என்று உருவிய வாளொடு வந்த உமர் ஹத்தாப் (ரலி) அவர்கள் கலிமாவை மொழிந்து இறைவழி தேர்ந்து, மறை வழி பேணி, கறையிலா ஆட்சியும் நடத்தினர் இரண்டாம் கலீபாவாக! இத்தனை பண்புகளை உள்ளடக்கிய, குர்ஆனின் வசன அமைப்பை வேறொரு மொழியில் அகில உலக மக்களுக்குப் பொருத்தமாக ஆக்கி இருக்க முடியுமா?

4. இதற்கு முன்னர் வெளிப்படுத்தப்பட்ட மார்க்கங்களின் மொழிகளான ஹீப்ரு, யூனானி, சுர்யானிப் பாஷைகளும் வழக்கொழிந்து, பாவனையில் இல்லாமல் போயுள்ளன. அத்தோடு மார்க்கங்களும் பல்லாயிரம் மாற்றங்களுக்கும் உட்படுத்தப்பட்டு அவற்றின் அழிவைச் சந்தித்துள்ளன. அம்மொழிகளின் குறைபாடே இவ்வழிவுக்கான முக்கிய காரணம். அவற்றை உலகில் ஒருவரும் மனனம் செய்திருந்ததாகப் பதிவுகளிருப்பதாக தெரியவில்லை. மேலும் ஹிந்து, பௌத்தம் போன்றவை தோன்றிய மொழிகளான சமஸ்கிருதம், பாளி போன்றவை பொதுமக்களிடம் இல்லை. அவை டெட் லேங்க்வேஜ் (இறந்த பாஷை) ஆகியுள்ளன. மேலும், கோயிலுக்குள்ளும் பன்சலைக்குள்ளும் முடங்கிவிட்டன.

5. அனைத்து நபிமாருக்கும் பல்வேறு கால கட்டங்களில், பல்வேறு இடங்களில், அவ்வவ் சமூக மக்களின் பாஷைகளில் வழங்கப்பட்டிருந்த வேதங்களின் சாரங்களைக் கொண்டு அவற்றை மெய்ப்படுத்தும் தோரணையில் மார்க்கம் ஒன்றை உலக அழிவு வரை, உலக மக்களின் பயன்பாட்டுக்காக வெளிப்படுத்த அரபியைத் தவிர வேறு மொழி உபயோகப்பட்டிருக்குமா? அவை வெற்றி அளித்திருக்குமா? இல்லை என்ற விடையை எளிதில் வெளிப்படுத்துவது, மேற்கண்ட பாஷைகளில் அருளப்பட்ட முந்தைய மார்க்கங்களுக்கு ஏற்பட்ட கதியும், அவற்றின் மொழிகளுக்கு ஏற்பட்ட நிலையுமே. அவை அனைத்தும் இன்று வழக்கொழிந்து விட்டன.

6. குர்ஆனுக்கு முந்திய வேத வெளிப்பாடுகளான மார்க்கங்களை விசுவாசித்த எத்தனை மக்கள் அம்மார்க்கங்கள் கொடுக்கப்பட்ட மொழி எது என்பதை அறிந்தவர்கள். எத்தனை பேர் மூல மொழியிலான வேத வசனங்களைக் கண்டவர்கள்? விரலால் எண்ணிவிடலாம். ஆனால் இஸ்லாத்தைத் தனது மார்க்கமாகத் தேரும் மனிதன் முதல் முதலாக அரபியிலேயே மொழிகிறான் என்பதை மறுப்பார் உண்டோ? அரபியில் உள்ள குர்ஆனைக் காணாதோரோ, ஓதத் தெரியாதோரோ, சில வசனங்களையேனும் மனனம் செய்யாதோரோ இல்லையென்றே கூறலாம். அம்மொழி அவ்வளவு இலகுவாக இருந்திராவிடில், ஒருவன் இஸ்லாமியனாக மாறமுடியுமா? ஆதலின் இன்று அத்தனை கோடி முஸ்லிம்களும் அரபியில் ஒரு வசனத்தையாவது கூறியிருக்கிறார்கள் என்பது ஒன்றே மொழியின் பண்புக்கு சாட்சி பகர்கின்றது. தடம் மாறுகிறதா இல்லை புடம் தேவையாயுள்ளது!

7. உலக முழுவதிலுமுள்ள அனைத்து முஸ்லிம்களும் இதனை அரபு மொழியில் ஓதினாலும், அரபியைத் தாய் மொழியாகக் கொண்டிராத பெரும்பான்மை மக்களால் அதன் கருத்தை முழுமையாக அறியவோ, அறிந்தாலும் உய்த்து உணர்ந்து, அதன் முழுப்பயனையும் பெற்றுக் கொள்ளவுள்ள தன்மை குறைவாகவே காணப்பட்டது. குர்ஆனின் கருத்தை அறிந்த சிலரும்கூட தமது தாய் மொழியில் இப்புனித குர்ஆனை அறியும் ஆவல் இல்லாதோராக இருக்கவில்லை. அத்தோடு குர்ஆனை அறிய விரும்பிய ஏனைய மதத்தவர்கள்கூட மொழிபெயர்ப்பு இல்லாதிருந்தமையால் அந்த ஆசையை விட்டொழிக்கும் போக்கே காணப்பட்டது. சில ஆராயும் மனங்கொண்ட அறிஞர்கள்கூட மொழி மாற்றங்கள் இன்மையால் தாமே அரபு மொழியைக் கற்றுப் பாண்டித்தியம் பெற்றே தமது தேவையை நிறைவேற்றிய சம்பவங்களும் நிறையவே நடை பெற்றாலும், அக்கருவூலத்தில் விரவிக் கிடக்கும் அரிய பொக்கிஷங்களை அறிந்தோர் தொகை குறிப்பிடக்கூடிய அளவில் இல்லை. இதனால், மக்கள் மத்தியில் குர்ஆன் பற்றிய முழுமையான ஆழ்ந்த அறிவு மந்தமாகவே இருந்தது எனக் கருத இடமுண்டு.

8. நீண்ட காலமாக நிலவிவந்த இந்நிலை, அண்மைக் காலங்களில் பல்வேறு மொழிகளில் செய்யப்பட்ட பெயர்ப்புக்கள் மூலம் ஓரளவு தீர்க்கப்பட்டுள்ளமை மனநிறைவைத் தருகிறது. அதனால் மக்களது அவா ஓரளவு நிறைவேறி இருக்கின்றது என்பதும் மறுக்கமுடியா உண்மை. இம்மாற்றத்தினால், அரபு தெரியாத முஸ்லிம்களுட்பட அனைத்து மதத்தைச் சேர்ந்த மக்களும் கூடத் தத்தமது மொழிகளிலேயே குர்ஆனை வாசித்து விளங்கி, அதன் பயனை ஓரளவு பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் குர்ஆன் கருத்துக்களும் ஓரளவு மக்களைச் சென்றடைகின்றன. அதனால் மக்கள் அடையும் மகிழ்சிக்கோ எல்லை இல்லை. ஆனால் அம்மொழி பெயர்ப்புக்களால் பயனாளிகள் எந்தளவு நன்மை அடைந்தார்கள் என்பதுவே கேள்விக் குறியாகி உள்ளது. குர்ஆனின் கருத்து மக்களைச் சென்றடைந்துள்ளதா? அன்றி குர்ஆனைத் தமது மொழியில் வாசிக்கும் சந்தர்ப்பம் அவர்கட்கு மகிழ்ச்சியைத் தந்ததா? இன்றேல் தவறாகப் போய்ச் சேர்ந்துள்ளதா? மேலும், மக்கள் மனதில், அவர்கள் தாம் பார்த்ததும், அதில் அறிந்து கொண்டதும்தான் குர்ஆன் என்ற மாயையைத் தோற்றுவித்து உள்ளதா?

9. சாதாரண மக்களைப் பொறுத்து, குர்ஆனில் அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையும், மதிப்பும் அந்த மொழி பெயர்ப்புக்களை அப்படியே ஏற்கும் நிலையை ஏற்படுத்தியிருந்தால் அது வியப்பல்ல. அரபியில் குர்ஆனை வாசிப்போரில், அரபியர் தவிர்ந்த, ஆயிரத்தில் ஒருவர்கூட அதன் கருத்தை முழுமையாக உய்த்து உணர்ந்து அறிந்தவர்களாக இருப்பதில்லை. அதனால் மொழிபெயர்ப்பை அப்படியே நம்பவேண்டிய அபாக்கியம். இது நமது ஈமானின் மூன்றாவது அங்கமான வேதத்தின் மேல் கொண்ட நமபிக்கையில் நாமறியாமலே தொய்வை ஏற்படுத்துகிறது. ஈமானாகிய நம்பிக்கை என்பதில் நாம் கொண்டுள்ள விளக்கமின்மை குருட்டு நம்பிக்கையாகவே நம்மிடம் பரிணமிக்கிறது. பகறா 2, சந்தேகமற இது திருவேதமென்கிறது. பயபக்தியுடையோருக்கு நேர்வழிகாட்டி என்கிறது. ஆயின், அதனை அறியாது நேர்வழி காணமுடியுமா? வாசித்து, ரசித்து, மகிழ்ந்து மூடி வைத்திடும் புராணமா? குர்ஆனின் அதிகமான வசனங்கள், குர்ஆனை அறியும்படி அறைகூவல் விடுக்கின்றன. உய்த்து உணர்ந்து நல்லறிவு பெற அதனைப் பிசகற அறிய வேண்டாமா!

10. சாதாரண பொருளை விற்பனைக்கிடுபவன் அப்பொருள் பற்றிய மக்களின் அறிவு, பயன்பாடு, குறைநிறை என்ற பல்வேறு தலைப்புகளில் மக்களில் கருத்துக் கணிப்பீடொன்றைச் செய்வான். இது மக்கள் நலத்தைப் பின்னணியாகக் கொண்டதல்ல! தமது பொருளின் விற்பனையின் ஸ்திரத் தன்மையை உறுதிப்படுத்துவதுடன் விற்பனையை அதிகரிக்கச் செய்வதே! ஆனாலும் அதன் மூலம் முதலில் உயர் பயனைப் பெறுவோர் மக்களே! வியாபாரிக்குப் பொருள் வரவும், புகழுமே! இக்கருத்துக் கணிப்பீடு பல வகையில் நுகர்வோனுக்கு அறிவுபூர்வமான பாவனையைத் தருகிறது. மக்கள் தேவை கருதிப் புழக்கத்துக்கு/ விற்பனைக்கு விடப்பட்டவை, மக்களின் பிழையான பாவனையாலோ அன்றிப் பிற காரணங்களாலோ உரிய இலக்கை அடையாத போது மக்கள் மத்தியில் மதிப்பை இழந்துவிடும். பாவனையும் பாடை ஏறிவிடும். இது போன்றதுதான் இன்று குர்ஆனின் விடயத்திலும் நடந்துள்ளது. ஆனால் அல்லாஹ்வுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. இவையனைத்தும் அவனது பதிவில் உள்ளனவே.

11. தனது வேதவசனம் 25:30இல், நபிநாதர் தனது சமூகம் குர்ஆனைப் புறக்கணித்து விட்டனர் எனக்கூறுவார் என அல்லாஹ்வே கூறுவது நமது சிந்தனையைத் தூண்டாதிருந்தால் அது வழிகேட்டைத் தவிர வேறெதுவாக இருக்கமுடியும். இந்தக் குற்றத்தில் பெரும் பங்கைச் சுமப்போர் அதிகமாக மொழி பெயர்ப்பாளர்களாக இருப்பது புரிகிறதா? நாம் மொழி பெயர்ப்புக்கள் கண்டு மகிழ்ச்சி அடைந்த அளவு, குர்ஆனின் உண்மைப் பயனை மக்கள் அடைய அவை உதவினவா? குர்ஆனின் வழிநடத்தலைப் புரிந்து கொண்டார்களா? என்ற நியாயமான கேள்விகள் ஓரளவு சிந்திக்கத் தெரிந்தோர் மத்தியில் எழுந்தமை ஆச்சரியம் தருவதல்ல. இறையருளே!

12. எப்பொழுது குர்ஆன் மொழிபெயர்ப்பை அறிவதில் அப்படியான சந்தேகம் தோன்றியதோ அப்போதே அதனைத் தீர்க்கும் பணி நம்மேல் கடமை ஆகிறது. இதில் தட்டிக் கழிப்போ, ஏனோதானோ மனப்பான்மையோ இருக்கக் கூடாது. காரணம் அது நமது ஈமானோடு ஒட்டியது. சரியானதைச் செய்ய முடியாவிட்டாலும், தவறானவை பரவும் ஆபத்தைத் தவிர்த்தல் அவசியம். இக்கடமையில் தவறுவது தண்டனைக்குரிய குற்றம். குர்ஆன் விடயத்தில் எந்த வகையில் மறைப்பு நடந்தாலும் அது இறை கோபத்தை வருவிக்கும் என்பதில் யாரும் வேறுபடார். அதனால் இச்சந்தேகம் ஆய்வு செய்யப்பட்டு தீர்வு காணப்பட வேண்டியது அத்தியாவசியம் என்ற கட்டத்திற்கு அறிஞர் குழாம் ஆளாகி இருக்கிறது. மேலும் உண்மையாக மார்க்கத்தை அறிந்து தெளிந்தவர்கள் மீது பிரதானமான கடமையாகியும் உள்ளது. அக்கடமையை அவர்கள் செய்யத் தவறின், அவர்கள் மறுமையில் இறைவனுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்.

13. மொழி பெயர்ப்புக்கள் முன்னுக்குப் பின் முரண்பாட்டை உருவாக்காது காப்பதற்கு மொழியறிவு மட்டுமன்றி, இறையறிவும், குர்ஆனுக்கு முழுமையான விளக்கமும், அடைப்புக் குறி பாவிக்காமலே கருத்தை வெளிப்படுத்தும் மொழியாட்சியும், ஆளுமையும், இறையச்சம் தவிர்ந்த அச்சமின்மையும், உள் வெளிக் காரணிகளின் பாதிப்பின்மையும் அவசியம். அத்தோடு அரபு மொழியில் அமைந்த வசனங்களை உய்த்துணருவது போல், மொழி மாற்றத்தின் பின்னரும் உய்த்துணர்வு பெறும் வகையில் மொழிபெயர்ப்பு அமைதல் அவசியம். குறிப்பிட்ட ஒன்றை மட்டும் வெளிப்படுத்தும் பெயர்ப்பாக அமைதல் குர்ஆனை முழுமையாக அறிதல் அதன் மூலம் அல்லாஹ்வை அறிதல் என்ற இலக்கிலிருந்து தடம்புரள வைத்துவிடும்.

14. மொழிபெயர்ப்பே கூட, குர்ஆனின் புனிதத் தன்மையில் அதாவது அதன் ஜீவநாடியில், சிறு தளர்வை ஏற்படுத்த வல்லது என்னும் போது, அடைப்புக் குறிகளின் சேர்க்கை என்ன மோசத்தை நாசத்தைச் செய்யும் என்பது புரியும். 5:48 மேலும் உங்களுக்கு வந்துள்ள உண்மையைவிட்டும் அவர்களது மனோ இச்சையைப் பின்பற்றாதீர்கள் என்பது தெளிவான எச்சரிக்கையைத் தருகிறது. 28:50 அல்லாஹ்விடமிருந்துள்ள நேர்வழியை அன்றி, தன்னுடைய மனோ இச்சையைப் பின்பற்றுவோனைவிட மிக வழி தவறியவன் யார்? இது போன்று நிறைய வசனங்கள் குர்ஆனின் உண்மையைப் பின்பற்றுவதன் அவசியத்தை வலியுறுத்துவது நம் கருத்திலிருத்தப்பட வேண்டியது.

15. எனது அறிவுக் கெட்டியவரை குர்ஆன் மொழி பெயர்ப்பாளர்களில் அநேகர் அறியாமையால், தமது எண்ணங்களில் சிலவற்றை மனதிற் கொண்டு, மக்களிடையே அதற்கு ஊறு விளையாது பார்க்கும் நோக்கிலும், தமக்கு எதிர்ப்பு வராது காத்துக் கொள்ளும் வகையிலும் குர்ஆனுக்கு மொழிபெயர்ப்புச் செய்ய முயன்றுள்ளார்கள் என்பதை அறியக் கூடியதாயுள்ளது. இது மயக்கநிலை என்பதைத் தவிர சொல்வதற்கில்லை. சில வசனங்களின் கருத்தை உள்ளவாறு கொடுத்தால் மக்கள் தவறாகப் புரிவர், ( 49:12. முஃமின்களே! பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும் ) அது முக்கிய கடமைகளைச் செய்வதில் பிரச்சினையை உண்டாக்கும் என்ற மாயை. அம்மாயை, இஸ்லாத்தின் தாரக மந்திரமான கலிமாவையோ, கடமைகளில் ஒன்றினையோ புரிந்து கொண்டமையில் ஏற்பட்ட தவறு; அன்றி புறக்காரணிகளின் பாதிப்பு; இவை போன்ற ஒன்றோ அன்றி அனைத்துமேர் அக்கடமைளுக்குக் குந்தகத்தை ஏற்படுத்திவிடும் என்ற மாயையைத் தோற்றுவித்ததனால், இடைச் செருகல்கள் வலிந்து தோற்றி அதுவே மறைமுகமாக ஈமானுக்கு ஊறு விளைப்பதான பரிணாமத்தையும் பரிமானத்தையும் பெற்றுள்ளது. குளிக்கப் போனவன் சேறு பூசியதை விடவும் ஒருபடி கூடியதே.

16. ஈமானற்ற கடமை, குர்ஆன் கூறும் தொழுகையாளிகளுக்குக் கேடுதான் என்ற அவனின் சாபத்தைப் பெற்றதில் ஆச்சரியமென்ன? அல்லாஹ்வை அறிதலும், அவனை நினைவு கூர்தலும் (39:22,2:110,21:42), அவனை நினைவுகூர்தலே தொழுகை (20:14) என்பதும் அவனது திருவேதத்தில் உள்ளவைதானே! மேலும், அவனது நெருக்கத்தைப் ( 5:35) பெறும் வழியைத் தேடிக்கொள்ளுங்கள் என்ற அழைப்பினை எப்படிஅறிவது? அவனைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் (3:101) எனக் கூறியதை எப்படி நடைமுறைப்படுத்துவது? இதற்காக எங்கு போய்த் தேடுவது? இவைகளைச் செயற்படுத்த வேண்டுவதில்லையா? மொத்தத்தில சரியான குர்ஆன் அறிவில்லையேல் நமது நிலை நரகை நோக்கிய பயணமான கடை நிலையாகவே இருக்கும்.

17. இக்குளறுபடிகள் களையப்படும் வரை, அல்லது தடை செய்யப்படும்வரை, மொழிபெயர்ப்புக்களை, விசேடமாகக் குர் ஆன் தமிழ் மொழி பெயர்ப்பை வாசிக்கும் அன்பர்கள் அடைப்புக் குறிகளுக்குள் வலிந்து கொடுக்கப்படும் செய்திகளை, புரட்டுக்களை, மொழி பெயர்ப்பாளரின் அறியாமையின் வெளிப்பாட்டை குர்ஆனின் கருத்தாக எண்ணி வாசியாமல் தவிர்ப்பது குர்ஆனை அதன் உண்மை நிலையில் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும் என்பதை இங்கு கூறாமல் இருக்க முடியவில்லை. மேலும் சிறந்ததைத் தேடுங்கள் என்ற இறை ஆணைப்படி, இரண்டு மூன்று மொழி பெயர்ப்புக்களை அல்லது அதற்கு மேலும், பல்வேறு மொழிகளிலும், பலராலும் உருவானவைகளை ஒத்துப் பார்ப்பது ஓரளவு நன்மை பயக்கும். மேலும் நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் அறிந்தவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள் என்ற இறை ஆணையைப் பின்பற்றுங்கள்

18. மேற்கூறியவற்றினாலேயே குர்ஆனில் அவ்வப்போது இவை, தெளிவான வசனங்கள், தெளிவாக்குகிறான், தெளிவாக விளக்குகிறான், சிந்திக்க மாட்டீர்களா, உணர மாட்டீர்களா, அத்தாட்சிகளைக் காட்டுகிறான், சிந்திப்போருக்கு தெளிவான வசனங்கள், அறிவுடையோரே அறிவு பெறுவர், வழிகாட்டி, நேர்வழி, சிறந்த உபதேசம் போன்ற கருத்துக்களை உள்ளடக்கிய சொற்களடங்கிய வசனங்களைக் கூறியுள்ளான். குர்ஆனில் பல இடங்களில், அல்லாஹ், இந்தக் குர்ஆனை மிகத் தெளிவாக விளக்கி உள்ளதாகவும், அது சம்பூரணப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் (5:3 ), தனது பாதுகாப்பிலுள்ளதாகவும் (15:9) கூறியுள்ளான். ஆக தெளிவாக விளக்கப்பட்டு, சம்பூரணப்படுத்தப்பட்டு, அவனது பாதுகாப்பிலும் வைக்கப்பட்டு உள்ளது என வல்ல அல்லாஹ்வே தன் அருள்மறையில் பிரகடணப்படுத்திய பின்னரும் அதற்குச் சேர்மானங்களைச் செய்துதான் குர்ஆனை விளங்க வைக்க வேண்டுமென்பது அல்லாஹ் மேல் போர் தொடுப்பதை ஒக்கும்.

19. அதனால் குர்ஆன் மொழிபெயர்ப்பாளர் எவராயினும் – அல்லாஹ் முழுமையாகத் தனது கருத்தைக் கூறத் தவறிவிட்டான் என்ற நினைவை ஏற்படுத்தும் விதமாக- அடைப்புக்குறி மூலம் தமது மனோ இச்சைப்படி எதையாவது நுழைத்து குர்ஆன் வசனங்களின் தூய, உன்னத, உண்மைத் தன்மையை மக்கள் பிழையாக விளங்கிக் கொள்ள வழிவகுக்க வேண்டாம் என அல்லாஹ்வின் பேரால் மிகவும் அன்பாகக் கேட்டுக்கொள்கிறேன். (33:3 நீர் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கையையும் வைப்பீராக) இது ஈமான் ஆட்டங் காணும் இடமல்லவா? 41:44-குர்ஆன் ஈமான் கொண்டவர்களுக்கு நேர்வழியாகவும், நோய் நிவாரணியாகவும் இருக்கிறது. ஈமானை இழந்தால் குர்ஆனின் பயனை அடைய முடியுமா? 14:27 ஈமான் கொண்டுள்ளார்களே, அவர்களை இவ்வுலக வாழ்விலும், மறுமையிலும் அல்லாஹ் உறுதியான சொல்லைக் (கலிமா)கொண்டு  அல்லாஹ் நிலைப்படுத்துகிறான்….

20. அன்றி அதனுள் மறைந்து, ஆனால் மலிந்து கிடக்கும் ஒப்பற்ற, விண்ணிலும் மண்ணிலும் உள்ளவை பற்றிய விஞ்ஞான உண்மைகளை வெளிப்படுத்தலாம். அதற்காகத்தான் வல்ல அல்லாஹ் தன் புனித மாமறையில் தான் வெளிப்படுத்தியுள்ள அத்தாட்சிகளை (signs) உய்த்துணர்ந்து நல்லறிவு பெறும்படியும், சிந்திக்கும்படியும், ஆய்வு செய்யும்படியும் அடிக்கடி கூறிக் கொண்டிருக்கின்றான். மேலும் குர்ஆன் மொழி பெயர்ப்பு செய்யும் போது அரபு மொழியிலிருந்து நேரடி மொழி மாற்றம் செய்யப்படாது வேறு ஏதாவது ஓர் மொழியாக்கத்திலிருந்து மொழி மாற்றஞ் செய்யப்படும் சந்தர்ப்பங்களே அதிகம். அதிலும் குளறுபடிகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன என்பதால் அப்படியான முயற்சிகள் தவிர்க்கப்படுவது குர்ஆனுக்குச் செய்யும் மிகப் பெரிய சேவையாக இருக்கும். தம்மையும் பாதுகாத்துக் கொள்வதாக இருக்கும்.

21. அடைப்புக் குறிச் சேர்மானமின்றி சில அரபுச் சொற்களுக்குச் சரியான சொல் தரப்பட முடியாத சந்தர்ப்பத்தில் அடைப்புக் குறிக்குள் அப்படியான சேர்த்தலைச் செய்வது ஏற்கப்படுவதே. தமது மொழி பெயர்ப்பு சரியான கருத்தைத் தராது எனச் சந்தேகிப்போர், தாம் வேண்டுமானால் அடிக் குறிப்புக்கள், விளக்கவுரைகள் எழுதலாம். மேலும் அப்படியான அரும்பதங்கள் கொண்ட சொற்களை அரபி மூலத்திலேயே விட்டும் வைக்கலாம். பல் கருத்தையும், விரிவான கருத்துக்களையும் உள்ளடக்கிய சொற்களை பிற்சேர்ப்பில், விளக்கங்களுடன் சொல்லகராதி போன்று அட்டவனைப்படுத்தலாம். ஆனால் மொழிபெயர்ப்பாகக் காட்ட முனைவது மக்களைத் திசைதிருப்புதல் என்ற குற்றத்துக்கு ஆளாக்குவதுடன், அல்லாஹ்மேல் பொய் சொல்லிய குற்றத்தையும், இறை சாபத்தையும் வருவிக்கும். அதிலும் பிழையான கருத்தை வருவிக்கும் முறையில் அடைப்புக்குறிகள் கையாளப்படுவது மகா மட்டமான இறை, மத, சமூக விரோதச் செய்கையே! இப்படியான புரட்டுக்கள் நடக்கும் என்பதனை முற்றும் உணர்ந்த வல்ல அல்லாஹ், அது பற்றியும் எச்சரிக்கை விடுக்கத் தவறவில்லை. 6:119-‘…மேலும், நிச்சயமாகப் பெரும்பாலோர் அறியாமையின் காரணத்தாலும், தங்களது மனோ இச்சைகளின் காரணத்தாலும் திட்டமாக மக்களை வழிகெடுக்கின்றனர். நிச்சயமாக உம்முடைய ரப்பு வரம்பு மீறுவோரை மிக்க அறிந்தவன்’.

22. உண்மையில் புனித குர்ஆனின் வசனங்கள் அவ்வப்போது தேவைக்கேற்ப, ஆனால், எப்போதும் செல்லுபடியாகும் விதத்திலேயே அருளப்பட்டது. இறக்கப்பட்ட சந்தர்ப்பத்தோடே செல்லாமற் போகவல்ல, அதனால் அது எந்த சந்தர்ப்பத்திற்கு, என்ன தேவைக்காக அருளப்பட்டிருந்தாலும் குர்ஆன் மொழிபெயர்ப்பாளர், இம்மாமறை அகில உலக மாந்தருக்கும், உலக அழிவு வரை அல்லாஹ்வால் வழங்கப்பட்ட திருத்தத்துக்கு உட்படுத்த முடியாத, செல்லுபடியாகும் நிலையான சட்டம் என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். அதனால் குர்ஆன் வசனத்தை அது இறங்கிய காலத்தையும், தேவையையும், காரணத்தையும் மனத்திலிருத்திக் கொண்டு அது அந்த காரணத்திற்காகவே அருளப்பட்டதென்ற தமக்கு ஏற்பட்டுள்ள மாயையை, மக்கள் மனத்தில் புகுத்தும் அருவருப்பான செயலில் இறங்கக் கூடாதென்பது எனது தாழ்மையான, ஆனால் மேன்மையான, வன்மையான கருத்து. இத்தகு கருத்துக்களைக் கொண்ட மொழி பெயர்ப்புக்கள் ‘ஆயத்துக்கள் இறக்கப்பட்ட காரணங்களுடன்’ என்ற துணைத் தலைப்புடன் மொழிபெயர்ப்பாக வெளிவருவது கவலை தருவதே. ஒரு சட்டம் ஏதாவது சந்தர்ப்பத்தில்தான் உருவாகின்றது. அதற்காக அந்த சந்தர்ப்பம் நினைவுறுத்தப்படுவதோ, முக்கியத்துவம் கொடுக்கப்படுவதோ இல்லை. வரலாற்றாசிரியர் வேண்டுமானால் அதனை எழுதலாம்.

23. குர்ஆனிய சட்டங்கள் உலகளாவிய பிரச்சினைகளுக்குத் தீர்வே. குர்ஆன் நடைமுறைச் சாத்தியமானது என்பதை வெளிப்படுத்தவே அவ்வப்போது இறக்கப்பட்டது ஆனாலும் அது முந்திய மதமான தௌறாத் போன்று எழுதிக் கொடுக்கப்பட்ட ஆவணமல்ல. அதனால் அது ஏதோ சந்தர்ப்பத்தில் இறங்கி இருக்கும். குர்ஆன் வெளிப்படுத்தப்பட்டதற்கான ஒட்டுமொத்தக் காரணமே உண்மையை விளங்கிக் கொள்ளாமையே. குர்ஆன் மொழி பெயர்ப்பில் இறக்கப்பட்ட காரணத்தையோ வேறு எதனையோ சேர்ப்பது அபத்தம். குர்ஆனிய வசனங்கள் இறங்கிய காரணங்களை அறிவதால் வேறு பயன்கள் இருப்பதாக உணர்ந்தால், குர்ஆன் இறங்கிய சந்தர்ப்பங்கள் போன்ற தலைப்புகளுடன் வேறு புத்தகங்கள் வெளியிடலாம். விளக்கவுரையாயின் குர்ஆன் மொழி பெயர்ப்புக்களுடன், கருகலான கருத்துள்ள இடங்களில் அடிக்குறிப்புக்கள் எழுதலாம். அதுவும் பெயர்ப்பாளர், அல்லது ஏற்றுக் கொள்ளப்பட்ட அறிஞர்களின் கருத்துக்கள், வியூகங்கள் என்று எழுதப்படுவது புனித மாமறையின் புனிதத்துக்குக் களங்கம் ஏற்படுத்தும் குற்றம் வராது காப்பாற்றும். சில்லறை விடயங்கள் தர்ஜுமா என்ற தலையங்கத்தினாலான பதிப்புக்குள் புகுத்தப்படுவது ஏற்புடைத்தன்று. சில சந்தர்ப்பங்களில் சில குர்ஆன் வசனங்களை விளங்கிக் கொள்ள, சில வேளை, வசனங்கள் இறங்கிய சந்தர்ப்பங்கள் கூறுவது இலகுபடுத்துவதாக இருக்கலாம். ஆனால் தர்ஜுமாவுள் நுழைக்கப்படும் விபரீதத்தை உண்டாக்கி அதன் அந்தஸ்துக்குக் குந்தகம் உண்டாக்கும் பாரம்பரியத்தை உருவாக்கும். இது நாளை அருவருப்பான விடயங்களோடும் (விளம்பரங்கள், பாடல்கள், பயனுள்ளவையென்ற பெயரில்) குர்ஆன் மொழி பெயர்ப்போடு வெளிவரும் அசிங்கமான பாரம்பரியத்தை ஏற்படுத்தும்.

24. காரணம் இல்லாது காரியம் நடப்பதில்லை. இது படைப்பினங்களைக் கட்டுப்படுத்துமே அல்லாது அல்லாஹ்வைக் கட்டுப்படுத்தாது. அவனே காரணன் என்பதால் காரணங்களுக்கும் காரியங்களுக்கும் கட்டுப்பட்டவனல்ல. அவனது வார்த்தை, கால, நேர, காரணங்களைக் கடந்தது. காலம் என்பதே அவனால் படைக்கப்பட்டதே. அவனை (17:43) மதிக்குமாறு மதிக்கக் கற்றால், இது போன்ற பிரச்சினைகள் எழுந்திராது. அறிந்தவர்கட்கு இது போதுமானது. இதனைக் கருத்தில் கொண்டே ஞானம் கொடுக்கப்பட்டவர்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டவர்கள் எனவும் அவர்களே வெற்றியாளர்கள் என்றும், அதுபோன்ற பல வசனங்களையும் அவனே தன்னருள் மறையில் நவின்றுள்ளது உய்த்துணரப்பட வேண்டியது. உதாரணத்திற்கு, இந்த வசனம் எப்போது, எதற்கு, எங்கு இறங்கியது என்பதை அறிவதனால் என்ன பயனைக் காணப் போகிறோம். அறியாவிட்டால் இவ்வசனத்தின் கருத்து வெளிப்படாதா?

25. அவன் ஒரு குர்ஆனைப் படைத்துவிட்டு அதனை விளங்கிக் கொள்ள இன்னொன்றின் அல்லது இன்னொருவரின் உதவி தேவை என்ற நிலையில் ஆற்றல் அற்றவனன்று.(அஸ்தஃபிருல்லாஹ்) இயலாமை என்பது அவனது பண்பல்ல. குர்ஆனின் வசனங்களை விளங்க குர்ஆன் வசனங்களே போதுமானவை. அதற்கு மேலும், தேவை எனில் அவன் வழியில் தேடினால் நிட்சயம் வழிகாட்டுவான். முயற்சிகள் கணக்கில் எடுக்கப்படும். நம் கேள்விக்கு பதிலளிப்பவன். மக்கள் பிழையாக விளங்கிக் கொள்வார்களோ என்ற பயம் மொழியெர்ப்பாளருக்கு வந்தால் அது அவர்களது இறைவனை அறியுமாறு அறியாத நிலையால் ஏற்பட்டதே. அவன் விளங்க முடியாத ஒன்றை, பிழையான வழிநடத்தலைக் கொண்டுள்ள ஒன்றை கொடுக்கமாட்டான் என்ற நம்பிக்கையும் அவன் பற்றிய பயமும் இருந்தால் இந்நிலை ஏற்படாது. வழிகெடுப்புக்கூட அவனது பாற்பட்டதே என்பதையும் நாம் உணர்தல் அவசியம். ஆலஇம்றான் (3:7)இல் இதனையே அவன் மிகத் தெளிவாக்கி உள்ளான்.

26. அணுமுதல் அண்டம் வரை படைத்துப் பரிபாலித்து வரும் சர்வ வல்லமை கொண்ட, முற்றும் அறிந்த நாயனுக்கு, பிரச்சினையைக் கண்ட பின்னர்தான் தீர்வு காணும் அறிவு வந்து விடவில்லை. அவனிடம் அத்தனை அறிவும் மண்டியிட்டுக் கிடக்கின்றன. அவனது பதிவில் இல்லாதது எதுவுமில்லை என அவனே கூறுவதை ஞாபகப்படுத்துகிறேன். எங்கிருந்தும் எதுவும் அவனுக்கு வருவதோ, வரவேண்டிய தேவையோ இல்லை. குர்ஆனை நாயகத் திருமேனி நபிகளார் முகம்மது முஸ்தபா (ஸல்) அவர்கள் மூலம் கருணையின் அடிப்படையில் செயற்படுத்திக் காட்டவேண்டி இருந்தது. காரணம்:- கடினமானது, விளங்கவில்லை, நடைமுறைச் சாத்தியமற்றது, மறந்துவிட்டோம் போன்றவற்றுக்கெல்லாம் பதிலாகவே காலத்திற்குக் காலம், சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, படிப்படியாக, சிரமமின்ற செயற்படுத்தும் வகையில் மனித, ஜின் வர்க்கத்துக்கு அவ்வப்போது ஞாபகமூட்டலாக இறக்கி வைக்கப்பட்டதென்பதே.

27. நாம் ஒருவரது தேவைக்காக சிறு பணத்தைக் கடனாகவோ உதவியாகவோ கொடுத்ததை வைத்துக்கொண்டு-அப்பணம் கொடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தை கொண்டு-அந்தப் பணம் அந்த தேவையைத்தான் நிறைவேற்றும் என்ற கருத்தை ஏற்படுத்தும் வகையில் இடைச் செருகல்கள் கொடுப்பது தகுமா? வயிற்றிலிருக்கும் கருவுக்குத் தன் இரத்தத்தைக் கொடுக்கும் தாய், பிறந்ததும் தன் உதிரத்தைப் பாலாகக் கொடுக்கிறாள், பின்னர் வேறு உணவுப் பொருட்களும் கொடுத்து வளர்க்கிறாள் என்றால் அதற்கெல்லாம் சந்தர்ப்பம் தேடிக் கருத்துக் கூற முடியாது. இரத்தத்தின் தேவை உள்ள போது இரத்தமாகவும், பாலின் தேவை வந்தபோது பாலாகவும், அதற்குமேலும் தேவைகள் வந்தபோது, அவள் தன்கிருபா கடாட்சத்தால் எதை எதையெல்லாமோ கொடுக்கிறாள். அங்கு அந்தத் தாயின் செயற்பாடும், சேவையின் தன்மையும், பாவிக்கப்படும் பொருட்களும் முறைமைகளும் வேறுபடுகின்றன. தேவை, ஊட்டம், வளர்ச்சி, பயன்பாடு போன்றவை முன்னிறுத்தப்படுகின்றன. இவை மனித தேவையை முன்னோக்கிய செயலே. இவற்றை எல்லாம், யாரும் அறியாமலே செய்து வருபவனும் அந்த நாயனே என்பதை அறிந்தவர்கள்கூட இதுபோன்ற கைங்கரியத்தைச் செய்வது முரண்பாட்டை ஏற்படுத்துகிறது. அத்தகைய நடவடிக்கையிலேயே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

28. கால்நடைகள் மூலம் மனிதனுக்கு இறைவன் பாலைத் தந்துள்ளான். பாலாகவும் அருந்தலாம். தயிராகவும் சாப்பிடலாம். மோராகவும் குடிக்கலாம். வெண்ணெயாகவும் பாவிக்கலாம். அதற்கும் மேல் சென்று நெய்யாக்கி ஆயுட்காலம் வரை பல்வேறு தேவைகட்கும் பயன்படுத்தலாம். இது கைப்படுத்துவோரின் தேவையையும், திறமையையும் பொறுத்தது. அதனால் குர்ஆனைப் பாலாகவே கொடுத்துவிட்டால் பயனாளிகள் தம் நிலைக்கேற்றவாறு படிப்படியாக தம் நிலையை நகர்த்தலாம். அதாவது பாலைப் பயன்படுத்தி தம் தேவைக்கும் திறமைக்குமேற்ப நெய் வரையும் செல்லவும், பின் அதனைப் பயன்படுத்தும் வகையை அறியும் அதிஉச்சப் பயன்பாட்டை பெறும் அறிவை அறிந்து, அறிவைப் பெற்றுக்கொள்வர். ஏன் மருந்தாக, அதற்கும் மேலாகவும் பயன்பாடுள்ளது. இதனையும் அல்லாஹ் படிநிலைகளாகக் குறிப்பிட்டுள்ளான். அடைவுகளைப் பொறுத்து, மனிதர்களிற் பல படித்தரங்கள் உண்டென்பதெல்லாம் இவை போன்றவையே. படிப்படியாகக் கடந்து செல்ல வேண்டியுள்ளது என்றெல்லாம் கூறுவது வேறன்று.

29. ஆங்கில, தமிழ் மொழி பெயர்ப்புக்களில் கருத்து மறைப்புகள்/மாற்றங்கள்கூட வலிந்து செய்யப்பட்டுள்ளதைக் காணக் கூடியதாகவுள்ளது.உதாரணமாக, அல்குர்ஆன் 15:99 – ‘உமக்கு (‘யகீன்’ என்னும்) மரணம் வரும்வரை உமது ரப்பை வணங்கிக் கொண்டிருப்பீராக!’, “And serve thy Lord until there come unto thee the hour that is certain” Mohshin Khan translates: And worship your Lord until there comes unto you the certainty (i.e. death). Muhammed Pickthal  translates: And serve thy Lord till the Inevitable cometh unto thee.  . அவை தற்போது காணப்படக்கூடிய தமிழ், ஆங்கில மொழிபெயர்ப்புக்கள். மேலே இறுதி மொழிபெயர்ப்பாளர் ‘தவிர்க்க முடியா நிலை வரும்வரை…’ எனக் கூறியதிலிருந்து அது நடைமுறைக்குச் சாத்தியமற்ற அறிவுறுத்தல் என்பதை உணர்ந்திருந்தும், அவர்களின் மனம் உண்மைக் கருத்தை வெளிப்படுத்த இடந்தராமை தெரிகிறது. அத்தோடு ஏதோ ஒன்று மறைக்கப்படுகிறது என்பதை விளக்குகிறது. ஏதோ ஒன்றின் ஆதிக்கம் நேரடியான கருத்தை வெளியிடவிடவில்லை என்பதை காணக்கூடியதாக இருக்கிறது.

30. அல்லாஹ் அறியாததை நாம் அறிந்துவிட்டோமா என்ன? 2:140 ‘உங்களுக்கு நன்றாகத் தெரியுமா அல்லது அல்லாஹ்வுக்கா? அல்லாஹ்விடமிருந்து தன்பால் வந்திருக்கும் சாட்சியங்களை மறைப்பவனைவிட அநியாயக்காரன் யார்? இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றி பராமுகமாக இல்லை.’ அடுத்து உண்மையை அதுவும் குர்ஆனின் வெளிப்பாட்டை வெளிப்படுத்த பயப்படுவதேனோ? அச்சம் கொள்வதே தவிர்க்கப்பட்டது தானே. அச்சம் இறைவன்பால் மட்டுமே இருக்க வேண்டியதல்லவா? (2:159, 174 நமது கவனத்தை ஈர்க்கின்றது) முற்காலத்தில் காணப்பட்ட மொழிபெயர்ப்பொன்றில் ‘நீங்கள் உறுதிப்பாடு அடையும் வரை வணங்குவீராக’ எனக் காணப்பட்டது. இறுதியாகவுள்ள ‘உறுதிப்பாடு’ என்பது ஏற்புடையதே. இந்த வசனம் சில மொழி பெயர்ப்பாளரில் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்ததால், அவர்கள், எங்கே மக்கள், தொழுகையை ஓர் கட்டத்தில் நிறுத்திக் கொள்வார்களோ என்ற அச்சத்தினால், உங்களுக்கு மரணம் வரும் வரை வணங்குவீராக என கருத்தை மாற்றியுள்ளனர்.

31. இது பலத்த சந்தேகத்தையும் ஏற்படுத்த வழிவகுத்தது. இந்த இடத்தில், ‘வஅஃபுது’ என்ற அரபிச் சொல்லுக்கு வணங்குவீராக எனப்பொருள் கொடுக்க வேண்டி வந்ததால் ‘யகீன்’ என்ற சொல்லுக்கு மரணம் என்ற கருத்தைக் கொடுத்ததனால், அதன் மூலம், மரணம் வரை தொழுகை சாத்தியமா என்ற குழப்ப நிலை ஏற்பட ஏதுவாகியுள்ளது. ஆங்கிலத்தில் serve என்று மொழி மாற்றஞ் செய்யப்பட்ட ‘வஅஃபுது’ அரபிச் சொல்லுக்கு, ‘வணங்குவீராக’ எனத் தமிழில் பொருள் கொள்ள முனைந்தமையால் தொடர்ந்த குழப்பம். மேலும் மரணம் வரும் வரை வணங்குவீராக என்பதனால் அது குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகக் கொடுக்கப்பட்டதல்ல, மாறாக இறக்கும் வரை செய்யப்பட வேண்டிய ஒன்றாகவே கருதப்படுகிறது. இவ்வவசனத்தின் உண்மை நோக்கும் அதன் பெரும் பயனும் வலியுறுத்தப்பட்டுள்ளமை தெரிய வருகிறது.

32. மொழிபெயர்ப்புகள் கூறுவது போல், மரணம் ஏற்படும் வரை தொழ முடியுமா? இது சாத்தியமானதா? சாத்தியமற்ற ஒன்றை முஃமின்களுக்கு இலகுவையே விரும்புகின்றேன் எனக் கூறும் பேரறிவாளனான அல்லாஹ் கூறியிருக்க முடியாது என்றதனால், இக்கருத்தை மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இங்கு ‘வணங்குவீராக’ என்ற கருத்தை ஆங்கில மொழிபெயர்ப்பாளரில் ஒருவரைத் தவிர எவரும் பயன்படுத்தவில்லை என்பதைக் கருத்திற் கொள்வதோடு, ‘வஅஃபுது’ என்ற அரபிப் பதத்திற்கு ‘உறுதிப்பாடு’ என்ற கருத்தும் உளதை யாரும் மறுத்துவிட முடியாது. அயினுல் யகீன், ஹக்குல் யகீன், இல்முல் யகீன் போன்ற சொற்களனைத்தும் உறுதிப்பாடு என்ற கருத்தைத் தாங்கி நிற்பதை நினைவிற் கொண்டால், அந்த 15:99 வசனத்திற்கு ‘உமக்கு உறுதிப்பாடு வரும்வரை அறிந்து கொண்டிருப்பீராக’ எனக் கொள்ளலாம்.

33. மரணம் வரும்வரை வணங்கிக் கொண்டிருப்பதென்பது சாத்தியப்படாததொன்று என்று நபிகளாரின் வாழ்வின் இறுதி நேரத்தை அறியும் எவரும் எளிதில் புரிந்து கொள்வர். நபிகளாருக்கே முடியாத ஒன்றை சாதாரண மக்கள் செய்வதை நினைத்தும் பார்க்க முடியாது. வணக்கம் எனக் கருதப்படும் தொழுகையானது அல்லாஹ்வை நினைவு கூர்வதற்காகக் கொடுக்கப்பட்டது (20:14-மேலும், என்னை நினைவுகூர்ந்திட தொழுகையை நிலைநிறுத்துவீராக!) என்பது குர்ஆனில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டிருந்தும் அதன் உண்மை நிலையை யாரும் உணர்வதாகவோ ஏற்பதாகவோ தெரியவில்லை. அது ஓர் சடங்கு போல் நடந்து கொண்டிருக்கின்றது. 21:42 அவர்கள் தங்களது ரப்பை நிiவுகூர்வதைவிட்டும் புறக்கணிப்போராகவே இருக்கின்றனர். இதுபோல் இன்னுமுள.

34. அறிந்த ஒன்றையே நினைவுகூர முடியும். நினைவுகூர்வதன் மூலம் அறிந்தது மீட்கப்படுவதனால் தமது தொழுகை நிலை நிறுத்தப்படுகிறது. இதுபோன்றே அறிதல் என்ற எத்தனம், அறிந்து உறுதிப்பாடு அடைந்ததும் தானாக நின்றே ஆகவேண்டும். ஒருவர் உறுதியாக அறிந்த பின்னர் மீண்டும் அறியும் வேலையில் தம்மை ஈடுபடுத்தார். அதனாலேயே தொழுகையில் இறைவன் தன்னை அறியும்படி கூறாது, நினைவுகூரும்படி பணிக்கின்றான். அறிந்த ஒன்றை அடிக்கடி நினைவுகூர்ந்து ஒன்றை மறப்பதிலிருந்து காத்துக்கொள்ளலாம். ஆக தொழுகை அறிதலல்ல, நினைவுகூர்தலே. ‘அறிதல்’ மட்டுமே அறிந்த பின்னர் மீண்டும் அறிய வேண்டியதில்லை என்றாகும். நினைவுகூர்தல் அப்படியல்ல. வாழ்வின் எல்லை (இறப்பு) வரைகூட செல்லக் கூடியதாகும். முடிவாக உறுதி ஏற்படும் வரை அறிந்து வருவீராக என்பது நடைமுறைச் சாத்தியமாவதுடன், தொழுகையில் நினைவுகூரும் நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பில்லை. அல்லாஹ் முரண்பாடானவற்றைக் கூறுபவனல்லன்.

35. 15:99இன் கருத்தை சரியாக அறிவது எந்த வகையிலும் தொழுகையைப் பாதிக்காது. காரணம், நாம் ஏலவே அவனை அறிந்து இருக்கிறோம் என்பதனை நாம் மறந்து போனாலும், வல்ல நாயன் நம்மை நினைவுபடுத்தியே வைத்துள்ளான். அறிந்ததை மறவாதிருக்க அடிக்கடி நினைவுறுத்தல் நடைபெறவே வேண்டி உளது. வேதங்கள் அருளப்பட்டதும் நினைவுறுத்தலைச் சார்ந்ததே. (outof sight is out of mind) நினைவு படுத்துவதன் மூலம் பார்வைக்குள் கொண்டு வரப்படாதவை காலப்போக்கில் மனதை விட்டு மறைந்துவிடும். தொழுகை சம்பந்தமாக எழுதும் போது விரிவாக எழுதவுள்ளேன். இப்போதைக்கு இது போதுமானதாகும். உண்மையில், மொழிபெயர்ப்பாளர் அடைப்புக்குறியுள் தமது கருத்தை, அறியாமையை, புகுத்தும் வேலைகளால் நடைபெற்றுள்ள விபரீதங்கள் பற்றி எழுதுவதே நம் முயற்சியாயினும் தவிர்க்க முடியா விதத்தில் அடைப்புக் குறியுள் தமிழில் மூல வார்த்தையை எழுதி, கருத்தாகப் பொருந்தா ஒன்றை எழுதியதை, குர்ஆனை அறிய முயல்வோரின் நலன் கருதி, சுட்டிக்காட்டி உண்மையை உணர்த்த வேண்டிய கடமை என்னை மேற்கண்ட பத்திகளை நிறைக்க வைத்தது. வாசகர் மனங் கோணாது ஏற்க வேண்டுகிறேன். உண்மையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசித்துக் கொண்டார்களே… என்ற குர்ஆனிய கட்டளை கவனிக்கற்பாலது.

36. 2:21. மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும், தூய்மையும்) உடையோராகலாம்.;. O ye people! Adore your Guardian-Lord, who created you and those who came before you, that ye may have the chance to learn righteousness;  Yoosuf Ali . O men! serve your Lord Who created you and those before you so that you may guard (against evil). Muhammed Habib Shakir. O mankind! worship your Lord, Who hath created you and those before you, so that ye may ward off (evil). Muhammed Pickthal . O mankind! Worship your Lord (Allah), Who created you and those who were before you so that you may become Al-Muttaqun (the pious – See V.2:2). Mohsin Khan.  இது 2:21 இன் ஆங்கில , தமிழ் மொழி பெயர்ப்புக்களில், ‘அஹ்புது’ ((oAAbudoo )  ) என்ற அரபிப் பதத்திற்கு வணங்குங்கள், adore,  serve,  worship போன்ற கருத்துக்களைப் பயன்படுத்தி உள்ளனர். Al-Muttaqun    என்ற அரபிப் பதத்திற்கு இறையச்சம், righteousness,  guard,  ward off,  pious  போன்ற கருத்துக்களைக் குறிப்பிட்டுள்ளனர்.

37. இறைவனை வணங்கினால் இறையச்சம் வருமென்பதோ, சரியான பாதையை தெரியும் சந்தர்ப்பம் ஏற்படும் என்பதோ, தம்மைக் காத்துக் கொள்ளலாம் என்பதோ, நல்லோராகலாம் என்பதோ பொருத்தமாகத் தெரியவில்லை. இறையச்சம் அற்றவன் எப்படி வணங்குவான். இறைவனை அறியாமல் இறையச்சம் வரும் சாத்தியமில்லை!அறிவதனால் மட்டுமே சரியான பாதையை தெரியும் சந்தர்ப்பம் ஏற்படும். சேவிப்பதனால் ஒன்றைக் காத்துக்கொள்ள முடியும். ஆக ஹ்புது எனத் தொடரும் சொற்பிரயோகம் வரும் சந்தர்ப்பங்களில் எல்லாம் ஓர் குழப்ப நிலை தோன்றுவதற்கான காரணம் அச்சொல்லின் பரந்துபட்ட கருத்தை இடத்துக்கு ஏற்றவாறு பயன்படுத்தத் தவறுவதனால் உண்டாவதே எனத் தோன்றுகின்றது. இச்சொல்லை இடத்துக்கு ஏற்றவாறு பயன்படுத்துவோர் மிகச் சிறந்த பாஷை அறிவோடு, சமநிலையான மனத்துடன், ஆழ்ந்த கண்ணோட்டத்தையும் பெற்றவராக இருத்தல் அவசியம். ஏற்கனவே தாம் கொண்டுள்ள கருத்தை காப்பாற்றும் நோக்கில் இச்சொல்லைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் பாவிக்க முயலும் இடங்களில், குழப்ப நிலைகள் தோன்றுவதைத் தவிர்க்க முடியாது.

38. மொழியெர்ப்பாளர் தெருவோரங்களில் இருந்துபாஷை பரிவர்த்தனை செய்வோராகவல்லாது கூர்ந்த மதியும், தெளிந்த மனமும், நிறைந்த உறுதியும், மனோ இச்சைக்கு இடங்கொடா பக்குவமும், அல்லாஹ்வைத் தவிர எதற்கும் அஞ்சாத மனமும் கொண்ட நடுநிலையுள்ள நல்ல மனிதராக இருக்க வேண்டும். இறை ஞானம் இருப்பின் அது மிகச் சிறந்த தகுதியாக இருக்கும். வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அல்லாஹ்வை தாம் விரும்பியோ விரும்பாமலோ வணங்கிக் கொண்டு இருக்கின்றன. அவனின் துதிபாடாத எதுவும் இல்லை (அல்-குர்ஆன் 57:1, 59:1, 62:1, 64:1). அனைத்து சீவராசிகளும் பெரும்பாலான மனிதருட்பட சிரம் சாய்க்கின்றனர் (22:18) போன்ற வசனங்களை அல்லாஹ் தன் அருள் மறையில் கூறியிருக்கிறான்.

39. அடைப்புக்குறிகள் மூலம் இடைச் செருகப்படுபனவற்றால் இறைகருத்தில் ஏற்படுத்தப்படும் விபரீதங்களின் தாக்கத்தை ஒன்றிரண்டைக் கூறுவதன் மூலம் விளங்கலாம். 2:45- மேலும் பொறுமையைக் கடைப்பிடித்தும், தொழுதும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள். நிச்சயமாக அ(த் தொழுகையான)து உள்ளச்சம் கொண்டவர்களைத் தவிர மற்றவர்களுக்கு பளுவாகவே இருக்கும். இந்த பரந்துபட்ட கருத்தைக் கொண்ட வசனம் இடைச்செருகளால் குறுகலான கருத்துள் முடக்கப்படுகிறது. ‘அது’ என்ற சொல் சுட்டுவது ‘முன்சொல்லப்பட்டது’ – உதவி தேடும் பாங்கு- என்ற கருத்தை ஏற்றது. அதன்படி பொறுமையைக் கடைப் பிடித்தும், தொழுதும் உதவி தேடுவது பளுவாகவே இருக்கும் என்பதுவே வலியுறுத்தப்படுகிறது. அது என்ற சொல்லினுள் வலிந்து அ(த்தொழுகையான)து செருகப்பட்டபோது, பொறுமையை மேற்கொண்டு, தொழுது உதவி தேடுவது பளுவாக இருக்கும் என்பது குறுகி தொழுகையானது பளுவாக இருக்கும் என்றாகிறது. யாரிடம்? எப்படி?உதவி தேடுவது என்பது பளுவான ஒன்றே. மேற்கண்டவாறு தொழுகையானது என்ற அடைப்புக்குறிச் சேர்க்கை எத்தகைய குற்றத்தைச் சார்ந்தது? இலகுவையே நமக்கு விரும்புவதாகக் கூறும் அல்லாஹ் பளுவான தொழுகையை கட்டாயமான கடமையாக மனுக்குலத்துக்கு அறிமுகம் செய்திருப்பானா? கஸ்டத்தில்/துன்பத்தில்/துயரத்தில்/ஆபத்தில்…பொறுமை காப்பதும், அதே நேரம் தொழுதும், அதாவது அல்லாஹ்வை நினைவுகூர்ந்தும் உதவி தேடுவது பளுவானதே. இந்த உண்மையை விளங்க மேலும், 2:153ஆம் வசனத்தில் மேற்கண்ட இறுதி அடியில் அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான் எனக் கூறியிருப்பதில் அறியலாம். ( பொறுமை பற்றிய விளக்கத்தை எனது ‘பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுவீராக’ என்ற கட்டுரையில் காணலாம் )

40. அல்லாஹ் வெவ்வேறு வசனங்களில், ஒன்றோடு ஒன்றைச் சேர்த்துச் சொல்வது, உய்த்துணரப்பட வேண்டியவை. அப்படியானவை தொழுகை-ஸக்காத், தொழுகை-பொறுமை, நம்பிக்கை-நற்செயல், நம்பிக்கை – நன்றி போன்றவை. இவைகளில் ஒன்றைத் தனிமைப்படுத்திப் பார்ப்பது, குர்ஆனில் உள்ள பல முக்கிய, மறைந்து நிற்கும் உண்மைகளை வெளி வராது தடுப்பதுடன், அல்லாஹ்வின் உண்மை நோக்கத்தை திரிபு படுத்திவிடும். இதனால்தான் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள் எனக் கூறுகிறான். அறிவீனர்களைப் புறக்கணித்து விடுமாறு பணிப்பதும் மேற்போந்த காரணங்களினாலும் ஆகும். அறிவுடையோருக்கு இதில் நிறையப் படிப்பினைகள் உண்டு எனக் கூறியதெல்லாம் இதனை வெளிப்படுத்துவனவே.

41. அடுத்து, 2:67- ….(அதற்கு) அவர் (கேலி செய்திடும்) அறிவீனர்களில் நான் ஆவதைவிட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்… என்பதில் அடைப்பினுள் சேர்க்கப்பட்ட (கேலி செய்திடும்) என்பதால் அவ்வசனத்தின், ‘அல்லாஹ்வை அறியாத, இன்னும் பலவற்றை அறியாத அறிவீனர்களின்’ என்பவற்றை உள்ளடக்கும் கருத்து மழுங்கடிக்கப்பட்டு, ‘கேலிசெய்பவர்’ என்ற குறுகிய வட்டத்துள் மட்டுப்படுத்தப்படுகிறது. மேலும், கேலி செய்யாத அறிவீனர்களைப் புறந்தள்ளி இறைகருத்தையும் புறந்தள்ளி விடுகிறது. கேலி செய்யாத அறிவீர்களைப் புறக்கணிக்கத் தேவை இல்லை என்றாகிறது.

42. அடுத்து 2:97- யார் ஜிப்ரீலுக்கு விரோதியாக இருக்கின்றானோ (அவன் அல்லாஹ்வுக்கும் விரோதி யாவான்) என்று (நபியே!) நீர் கூறும்; நிச்சயமாக அவர்தாம் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்கி உம் இதயத்தில் (குர்ஆனை) இறக்கி வைக்கிறார் அது, தனக்கு முன்னிருந்த வேதங்கள் உண்மை என உறுதிப்படுத்துகிறது. இன்னும் அது வழிகாட்டியாகவும், நம்பிக்கை கொண்டோருக்குச் சிறந்த உபதேசமாகவும் நன்மாராயமாகவும் இருக்கிறது. இன்னோர் மொழி பெயர்ப்பாளர் இன்னும் ஒருபடி மேலேறி, அடைப்பினுள,; யார் ஜிப்ரீலுக்கு விரோதியாக இருக்கின்றானோ (அவர் பகைமையிலேயே மரணிக்கட்டும்) எனக் கூறுகிறார். உண்மையில் இவ்வசனம் யார் ஜிப்ரீலுக்கு விரோதியாக இருக்கின்றானோ அவனுக்கு நீர் கூறும், நிச்சயமாக அவர்தாம் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்கி உம் இதயத்தில் (குர்ஆனை) இறக்கி வைக்கிறார் என்பதை வலியுறுத்துவதே தவிர அவர்களைச் சாபமிடுவதோ, அப்படியே தொலைந்து போக விடும்படி கூறுவதோ அல்ல. அப்படியாயின் 2:251 …அல்லாஹ் உலகோரின் மீது கருணையுள்ளவன் என்ற வசனத்துக்கு முரண்பட்டுவிடும். அவர்கள் ஜிப்ரீலை நம்பாததாலேயே விரோதியாக்கப்பட்டுள்ளனர். இப்போதும், இச்சிறந்த வேதத்தை எனக்கு இறைவனிடமிருந்து அருளுபவர் அவரே என்பதன் மூலம், ஜிப்ரீலின் உண்மைத் தன்மையையும், அவர் இறைவனின் வானவரே என்பதையும், மூஸாவுக்கு வேதத்தை வழங்கியதும் இதே வானவர்தான் என்பதையும் கூறி அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதே!

43. அத்தோடு வானவர்களை நம்புவதும் இறையாணையே. மேலும், அடுத்த வசனம் கூட எச்சரிக்கையே தவிர சாபமில்லை. அதனை விட்டு இம்மொழிபெயர்ப்பாளர்கள் அடுத்த வசனத்தில் அப்படியானோருக்கு அல்லாஹ் ‘பகைவனாவான்’ எனக் கூறியிருப்பதைக் கவனத்தில் எடுத்திருந்தால் 97ஆம் வசனத்தில் ‘அல்லாஹ்வுக்கு விரோதியாவான்’ , ‘அவர் பகையிலேயே மரணிக்கட்டும்’ போன்ற செருகல்களைத் தவிர்த்திருப்பர். விளக்கம் தேவைப்படும் சந்தர்ப்பங்களாயின் அல்லாஹ்வே அதனை மிகத் தெளிவாகக் கூறி விடுவான். சில இடங்களில் உதாரணமாக, அல்லாஹ் 3:130 இல் றிபா வுக்கு வரைவிலக்கணம் தந்தது போல். அல்லாஹ் கூறாததை அவனின் கருத்தாகக் கூற முயல்வது அல்லாஹ்வால் வெறுக்கப்படுவது, அவனது சாபத்தை வருவிப்பது.

44. 2:137. ஆகவே, நீங்கள் ஈமான் கொள்வதைப்போல் அவர்களும் ஈமான் கொண்டால் நிச்சயமாக அவர்கள் நேர்வழியை பெற்று விடுவார்கள்;. ஆனால் அவர்கள் புறக்கணித்துவிட்டால் நிச்சயமாக அவர்கள் பிளவில்தான் இருக்கின்றனர். எனவே அவர்களி (ன் கெடுதல்களி ) லிருந்து உம்மைக் காப்பாற்ற அல்லாஹ்வே போதுமானவன். அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், (எல்லாம்) அறிந்தோனுமாகவும் இருக்கிறான். இன்னொரு மொழி பெயர்ப்பாளர் தனது அடைப்புக்குறிக்குள் அழிவைப் புகுத்தும் வேலையைச் செய்துள்ளதைப் பாருங்கள். 2:137- ஆகவே, (அந்த யூத, கிறிஸ்தவர்கள்) நீங்கள் நம்பிக்கை கொண்டது போல், அவர்களும் நம்பிக்கை கொள்வார்களாயின், நிச்சயமாக அவர்கள் நேர்வழி பெறுவார்கள். அவர்கள் புறக்கணிப்பார்களாயின் (உங்களுடன்) அவர்கள் பிணக்கிலேயே இருக்கின்றனர். மேற்கண்ட இரு அடைப்புக்குறி உள்ளீடுகளும் காரணமின்றிச் செய்யப்பட்டு மிகத் தெளிவாகவிருந்த கருத்தை கருகலாக்கியதுடன், இறை கருத்தையும் மாற்றியுள்ளது. தேவையற்ற விதத்தில், பொருத்தமற்ற முறையில், பொருத்தமற்ற இடத்தில் எதற்காக இடைச்செருகல் செய்யப்பட்டதென்பதை நியாயப்படுத்த முடியாத நிலையில், வலிந்து புகுத்தப்பட்டு மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்நாசகாரச் செய்கையை என்னவென்பது.அல்லாஹு அஃலம். இச்செருகல்கள் அனைத்தும் கருத்தின் பரப்பைக் குறைப்பனவாகவும், கூறாததைக் கூறும் குற்றத்தையும் சுமந்து கொள்வதையும் ஊன்றிக் கவனிப்போர் இலகுவாக அறிந்து கொள்வர்..

45. 2:163. மேலும், உங்கள் நாயன் ஒரே நாயன்தான், அவனைத் தவிர வேறு நாயனில்லை. அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன். இன்னொருவரின் மொழி பெயர்ப்பில் …அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை…. இந்தத் தேவையற்ற இடைச்செருகலின் மூலம் வணக்கத்திற்குரிய நாயன் அல்லாத வேறு நாயன்கள் இருக்கின்றனர் என்ற புதிய, அல்லாஹ் கூறாத, கருத்து பெறப்படுகிறது. ஆனால் அல்லாஹ்வோ அவனைத் தவிர வேறு நாயனில்லை என்று கூறி வேறு தெய்வங்கள் உண்டென்ற கொள்கைக்கு முற்றாக ஆப்பு வைக்கிறான். இடைச்செருகல், அல்லாஹ்வின் சீரிய ஏகநாயன் கருத்தை மாற்றி, தேவையற்ற தர்க்கங்களுக்கும், சந்தேகங்களுக்கும் ஆளாக்கி, மேலும் விளக்கங்களைக் கொடுக்க வேண்டிய நிலைக்கும் வழிவகுக்கிறது. அதாவது, ‘இல்லை இலாஹு அவனைத்தவிர’. இலாஹு என்பதற்கு மேலதிகமான விளக்கம் தேவையானோர் சொல்லகராதியில் கண்டுகொள்வர்.

46. 2:190. உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள், ஆனால் வரம்பு மீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை. இதே வசனத்திற்கு இன்னொரு மொழி பெயர்ப்பாளர் அடைப்புக் குறிக்குள் அவசியமற்றவற்றைச் சேர்த்து அல்லாஹ்வின் கருத்தை மாற்றிவிடும் வேலையைச் செய்பவர், உங்களுடன் (நியாயமின்றி) போரிடுபவர்களிடம் அல்லாஹ்வின் பாதையில் (அவனின் மார்க்கத்தை உயிர்ப்பித்திட) நீங்களும் போரிடுங்கள். மேலும் வரம்பு மீறிவிடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிக்க மாட்டான் எனப் பொருள் தருகின்றார். அல்லாஹ்வின் பாதை என்பதை, அவனின் மார்க்கத்தை உயிர்ப்பிப்பது என்ற ஓரே கருத்தினுள், வேறு காரணங்களுக்காக யுத்தம் புரியாதீர் என்ற புதிய, அல்லாஹ்வுக்கு மாற்றமான கருத்துள் கட்டுப்படுத்துகிறார். ஆனால் அல்லாஹ்வோ தக்க காரணமின்றிப் போர் தொடுத்தால் அல்லாஹ் காட்டித் தந்த பாதையில் உங்கள் போரைச் செய்யுங்கள் என்று கூறியுள்ளானே தவிர வேறு காரணங்களுக்காக யுத்தத்துக்கு முகம் கொடுப்பதைத் தடுக்கவில்லை. இம்மொழி பெயர்ப்பு வழி கெடுப்பின்பால் வாசிப்பவர்களை இட்டுச் சென்றால் அது வியப்பில்லை. அத்தோடு மார்க்கம் மரணித்துவிட்டது அதனை உயிர்ப்பிக்க வேண்டியுள்ளது, இறைவன் இயலாதவாகிவிட்டான் போன்ற பிழையான எண்ணங்களை வருவிப்பதாகவுள்ளது.

47. அல்லாஹ்வினால் சம்பூரணமாக்கப்பட்டதாக சான்றிதழ் வழங்கப்பட்டு அவனது பாதுகாப்பில் உள்ளதாகக் கூறப்பட்ட புனித குர்ஆன், மக்கள் படிப்பினைபெற, மக்களை நல்வழிப்படுத்த, அவர்கள் கடைத்தேற, அல்லாஹ்வினது நெருக்கத்தினைப் பெறத் தூண்டுவதே தவிர, மார்க்கத்தைக் காப்பாற்றிக் கொள்ளவோ இறைவனைக் காப்பாற்றிக் கொள்ளவோ அருளப்பட்டதல்ல என்பதை நன்கு உணர்ந்தால் அடைப்புக்குள் தேவையற்ற செருகல்கள் செய்யவேண்டிய நிலை மொழி பெயர்ப்பாளர்களுக்கு ஏற்பட்டிராது என்பது தெளிவு. சிலவசனங்கள் ஒன்றன் பின் ஒன்றாய், தொடர்புடையதாய் வந்தாலும், அவை தனித்தும் பொருள் தரக்கூடிய விதமாகவே காணப்படுகின்றன. அவசியமற்ற அடைப்புக்குறி சேர்ப்புகள் அத்தன்மையை நீக்கிவிடுகின்றன.

48. 2:198. (ஹஜ்ஜின் போது) உங்கள் இறைவனுடைய அருளை நாடுதல் (அதாவது வியாபாரம் போன்றவற்றின் மூலமாக நேர்மையான பலன்களை அடைதல் ) உங்கள் மீது குற்றமாகாது. பின்னர் அரஃபாத்திலிருந்து திரும்பும்போது ‘மஷ்அருள் ஹராம்’ என்னும் தலத்தில் அல்லாஹ்வை திக்ரு (தியானம்) செய்யுங்கள். உங்களுக்கு அவன் நேர்வழி காட்டியது போல் அவனை நீங்கள் திக்ரு செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் இதற்கு முன் வழிதவறியவர்களில் இருந்தீர்கள். இன்னொருவரது அடைப்புக்குறி அலங்காரத்தைக் காண்போம். (ஹஜ்ஜின் போது வணிகத்தின் மூலம் ) உங்கள் ரப்பிடம் (பொருள் என்னும்) அருளைத் தேடிக்கொள்வது உங்கள் மீது (எத்தகைய) குற்றமுமில்லை. வல்ல அல்லாஹ்வின் கருத்து பரந்துபட்ட பொருளை உணர்த்தி நிற்கும் அதே வேளை, நம்பிக்கையாளரின் தன்மைக்கும், பயபக்திக்கும், தேவைக்கும் ஏற்ப விட்டுக் கொடுக்கும் தன்மையைக் கொண்டதாகக் காணப்படுகிறது. இது குர்ஆன் 2:256இன் ‘மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை’ என்ற பண்பைத் தாங்கி நிற்பதை சிறிதளவாவது சிந்திக்கும் ஒருவர் உணரக்கூடியதாகவிருக்கும்.

49. மேற்கண்ட மொழிபெயர்ப்புகள் போல் இடைச் செருகலை ஏற்றால் வியாபாரம் செய்ய அனுமதி கொடுக்கப்பட்டது போன்ற நேரடிக் கருத்தையும், அங்கீகாரத்தையும் வழங்குவது போன்றுள்ளது. உங்கள் இறைவனுடைய அருளை நாடுதல் என்னும் போது, இறைவனிடம் வேண்டுவதையே குறிப்பிடுவதாக இருக்க வேண்டும். அதைவிட்டு வியாபாரம் செய்வதாக இருக்க முடியாது. காரணம், இந்த ஐந்தாவது கடமையைச் செய்ய முற்படுபவர் ஓரளவாவது உலக பந்தங்களில் இருந்து விடுபட்டவராகவும், தனது கடமைகளை செய்து முடித்தவராகவும், தேவைகளற்றவராகவும், அல்லாஹ்வின் அண்மையைத் தேடிய வண்ணம் தனது பயணத்தை மேற்கொண்டவராகவும் இருப்பர். மேலும், ஏலவே குர்ஆன் 2:197 ஹஜ்ஜுக்கான ஆயத்தம் செய்து கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டு இறையச்சமே அவற்றுள் மிகச் சிறந்தது எனக் கூறுவதிலிருந்து பெரிதும் புலனாகின்றது. ‘ஹஜ்ஜின் போது வணிகத்தின் மூலம்’, (பொருள் என்னும்) அருள் என்றெல்லாம் அடைப்புக் குறிகளுள் வலிந்து புகுத்தப்படுவது புனித குர்ஆனின் உயர் பண்புக்கே இழுக்கை ஏற்படுத்தும் தன்மையை வெளிப்படுத்துகிறது. யாருடையவோ திருப்திக்காக மொழி பெயர்க்கப்பட்டுள்ளதோ என்ற நியாயமான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

50. 2:213. (ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர். அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான். இன்னொரு பெயர்ப்பாளர், (துவக்கத்தில்) மனிதர்கள் அனைவரும் (ஓரே கொள்கையைப் பின்பற்றும்) ஒரே குலத்தவராகவே இருந்து வந்தனர். (தங்களுக்குள் கருத்து வேறுபாடுகளின் காரணமாகப் பிரிந்து போயிருந்தனர். அதை நெறிப்படுத்த) அல்லாஹ் நபிமார்களை நற்செய்தி அறிவிப்போராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை நன்மாராயம் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் எனக்கூறியதை நல்லவர்களுக்கு நன்மாராயமும், தீயவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெனவும் முற்றாக மாற்றி இறைவனின், ‘மிகச்சிறந்த நன்மையைக் கொண்டு தீமையைக் களைவீராக’ என்ற கருத்துக்கு மாற்றமானவற்றை அடைப்புக் குறிகள் மூலம் சேர்த்து, முரண்பாட்டை ஏற்படுத்துகிறார். இது குழப்ப நிலையைத் தூண்டுகிறது. நன்மாராயமும், எச்சரிக்கையும் அனைத்து மனுக்குலத்துக்குமே தவிர தேவையற்ற இடைச் செருகல்களால் வலிந்து பெறப்பட்டவை போலல்ல.

51. அடுத்தவர், (ஓரே கொள்கையைப் பின்பற்றும்) ஒரே குலத்தவராகவே இருந்து வந்தனர். (தங்களுக்குள் கருத்து வேறுபாடுகளின் காரணமாகப் பிரிந்து போயிருந்தனர். அதை நெறிப்படுத்த) எனப் புரட்டுச் செய்து இறைவன் கூறாததைக் கூறிக் குழப்ப நிலையை உண்டுபண்ணி, குர்ஆனில் தேவையற்ற தர்க்கங்களை உருவாக்கும் பாதகத்தைச் செய்துள்ளார். இறைவசனம் மிகத் தெளிவானது. மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர். அல்லாஹ் நன்மாராயங் கூறுவோராகவும், அச்மூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான். இந்த வசனத்துக்கு அடைப்புக்குறிகள் சேர்க்கு முன்னர் சற்று சிந்தித்திருந்தால், அந்தத் தேவை ஏற்பட்டிராது. ஓர் சட்டம் அனுப்பப்படும் முன் நல்லோர், தீயோர் என எதை வைத்துத் தீர்மானிப்பர். அல்லாஹ் நபிமாரை அனுப்பி தனது செய்திகளை (நன்மாராயம் அச்சமூட்டி எச்சரிக்கை ) எத்தி வைக்காத எந்த சமுதாயத்தினரிலும் குற்றம் பிடிப்பவனாக இல்லை. இவ்வசனம், ஓர் செய்தியை அனுப்பி அதை ஏற்பவர்களுக்கு அது நன்மாராயமாகவும், ஏற்காதோருக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாகவும் இருப்பதைக் கூறுகிறது. ஆக நபிமார் வருவதற்கு முன்னர் நல்லோர் தீயோர் தீர்மானிக்கப்படவில்லை. தீர்மானிக்கவும் முடியாது. அது இறை தன்மைக்கு உரியதுமல்ல. இறைவிருப்புமல்ல. Mankind was one single nation, and Allah sent Messengers with glad tidings and warnings; and with them He sent the Book in truth, to judge between people in matters wherein they differed…, இவ்வாங்கில மொழிபெயர்ப்பு, தமிழ் மொழிபெயர்ப்பின் நிலையை விளக்கும். அதுமட்டுமல்ல அவர்களுக்கு உண்மை தெளிவான பின்னர்தான் அவர்களுக்குள் வேறுபட்டார்கள் என அல்லாஹ் பல இடங்களில் கூறுகிறான். இதற்கு முற்றிலும் மாற்றமானதே மேற்கண்ட அடைப்புக் குறிச் செருகல்கள்.

52. 2:219. (நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். நீர் கூறும், ‘அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது. மனிதர்களுக்கு (அவற்றில் சில ) பலன்களும் உண்டு. ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது. இங்கு குர்ஆன் கூற முற்பட்டது ஓர் ஒப்பிட்டு அடிப்படையில், அதாவது நன்மைகளும் உண்டு. ஆனாலும் அதனால் ஏற்படும் பெரும் பாவங்கள், கிடைக்கும் நன்மைகளைவிட மிகக் கூடியது என்பதே. இறைகூற்று, ‘மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். நீர் கூறும் அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது. மனிதர்களுக்கு பலன்களும் உண்டு. ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது என்பதே. இதில் மனிதர்களுக்கு பலன்களும் உண்டு எனக் கூறுவது அவற்றில் தீமைகள் உண்டு என்பதை வெளிப்படுத்தவே, தவிர, இச்செருகல் கூறுவதுபோல், சில அல்லது பல பலன்கள் உண்டு என்பதைக் கூறவல்ல. அவை எவ்வாறான பலன்கள், எப்போது கிடைக்கும், எப்படிக் கிடைக்கும் என்பது போன்றவற்றை இறைவன் வெளிப்படுத்தவில்லை. இது பற்றி ஓர் ஆய்வையே மேற்கொள்ளலாம். பலன்களும் உண்டு என்பது நடைமுறைப் பிரயோகம், செய்யலாம் என்பதை வெளிப்படுத்துவதற்கான அங்கீகாரமோ, அவற்றில் சில நன்மைகளுண்டு என்பதை வெளிப்படுத்துவதற்கான நிலையோ அல்ல என்பதைச் சிந்திப்போர் உணர முடியும். அதனால்தான் ஆரம்பத்தில் மது போதையில் இருக்கும் போது தொழ வேண்டாமெனவும், அதன் பின்னர் விலக்கிக் கொள்ளும்படியும் இறைசட்டம் வருகிறது.(பார்க்க 4:43, 5:90,91)

53. அதே 2:219 இல், (நபியே! தர்மத்திற்காக எவ்வளவில்) ‘எதைச் செலவு செய்ய வேண்டும்’ என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்’ (உங்கள் தேவைக்கு வேண்டியது போக ) மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள்’ என்று கூறுவீராக. நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு அல்லாஹ் (தன் ) வசனங்களை(யும், அத்தாட்சிகளையும் ) அவ்வாறு விவரிக்கின்றான். எதைச் செலவு செய்ய வேண்டும் என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள் என்று கூறுவீராக என்பதற்கு (நபியே! தர்மத்திற்காக எவ்வளவில்) என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர் (உங்கள் தேவைக்கு வேண்டியது போக) எனத் தேவையற்ற செருகலைச் செய்கிறார். ‘எதை’ என்ற வினாவும், பதிலாக’ மீதியை’ என்ற விடையும் எல்லையற்ற பொருளைத் தாங்கி உள்ளன. இங்கு (அவற்றில் சில), (நபியே! தர்மத்திற்காக எவ்வளவில்), (உங்கள் தேவைக்கு வேண்டியது போக) போன்ற செருகல்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதால் வசனத்தின் கருத்துக்கள் திரிபு பெறுகின்றன. அல்லாஹ்வின் உள்ளக் கிடக்கை நமக்கு மறைக்கப்படுகிறது. இதற்காகவே மேற்கண்ட வசனங்களை இறக்கி அதன் முடிவில் ‘நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு அல்லாஹ் வசனங்களை அவ்வாறு விவரிக்கின்றான்’ என்கின்றான்.

54. இதன் மூலம் அல்லாஹ் மனிதனின் சிந்தனையைத் தூண்டி, அவ்வசனங்களிலும் அவை கொண்டுள்ள கருத்துக்களிலும் மனிதர்களுக்கு இன்னும் பல நன்மைகள் உண்டு என அறிய வைப்பதற்கும் விரும்புவது தெரிகிறது. மீதியை என்பதற்கும் தேவைக்கு வேண்டியதுபோக என்பதற்கும், நிறையவே வேறுபாடுண்டு என்பதை உற்று நோக்கின் உணரமுடியும். இங்கு முக்கியத்துவப்படுத்தப்பட வேண்டியது, அதனால் ஏற்படும் பெரும் பாவங்களைத் தான். மீதியை என்பது அரசன் முதல் ஆண்டி வரை செயற்படுத்தக் கூடியது. இதில் (உங்கள் தேவைக்கு வேண்டியது போக ) என்ற செருகல் பிரச்சினையை உண்டுபண்ணி தர்க்கிக்க வைக்கிறது. மேலும், இவ்வசனத்திலும் கூட(யும், அத்தாட்சிகளையும்) எனச் செருகி கூறப்படாததைக் கூற விளைகிறார் மொழி பெயர்ப்பாளர். உண்மையில் அத்தாட்சிகள் விவரிக்கப்படுவது இல்லை. அன்றி ஏலவே வெளிப்பட்டிருப்பது. அத்தாட்சிகள் காட்டப்படுவது. அவை காட்டப்படுவது இறை சக்தியை வெளிப்படுத்த, சில உண்மைகளைப் புரிய வைக்கவே.

55. 2:222. மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள். நீர் கூறும், ”அது (ஓர் உபாதையான ) தீட்டு ஆகும். ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள். அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள். அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள். பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான். இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.’ இன்னோர் மொழிபெயர்ப்பு, இன்னும், மாதவிலக்கு பற்றி (நபியே) உம்மிடம் அவர்கள் வினவுகின்றனர். நீர் கூறும், ‘அது (ஓர் வித அருவருப்பான) தீட்டு ஆகும். எனவே மாதவிலக்கு ஏற்படும் காலத்தில் (உடலுறவு கொள்வதைவிட்டும் ) விலகியிருங்கள். இன்னும் அவர்கள் (குளித்து) சுத்தமாகின்றவரை அவர்களை (அனுபவிக்க) நெருங்காதீர்கள்…  இருவரும் முதல் அடைப்புக்குறியுள் தீட்டு என்பதற்கு அடைமொழி கூற முற்பட்டுள்ளனர். இது அவசியம்தானா? இது இன்றி தீட்டு என்பது விளங்காதா? இரண்டாமவர், இன்னும் அவர்கள் (குளித்து ) சுத்தமாகின்றவரை அவர்களை (அனுபவிக்க) நெருங்காதீர்கள், என்பதற்கு (குளித்து ) ( அனுபவிக்க ) என்பவற்றைச் சேர்த்துள்ளார். இங்கு அல்லாஹ் சுத்தம் எனக் கருதுவது மாதவிலக்கு நின்றுபோவதை என்பது மிகத் தெளிவாக இருக்க, குளித்து என்றதைச் சேர்த்தல் மூலம் அக்கருத்தின் உண்மைத் தன்மையைப் போக்கியுள்ளார். விலக்கு நிற்காமல் குளித்தால் சுத்தமாகுமா? சுத்தமாகின்றவரை என்பது அனைத்தையும் உள்ளடக்கி நிற்கிறது. மேலும், அதுபோன்றே நெருங்காதீர்கள் என்ற சொற்பிரயோகம் பரந்த கருத்தை உள்ளடக்கி இருக்க (அநுபவிக்க) என்ற இடைச்செருகலின் மூலம் குர்ஆனுக்கு மாசு கற்பிக்கிறது.

56. இஸ்லாம் நடைமுறைச்சாத்தியமான மார்க்கம் என்பதை மீண்டும் ஞாபகத்துக்குக் கொண்டு வருகிறேன். அத்தோடு அல்குர்ஆன் தனது எந்த வசனத்துக்கும், எந்த இடத்திலும் முரண்பாட்டை உருவாக்காது என்பதை மறந்துவிடலாகாது. அந்த வகையில், தயமத்தை அனுமதித்த குர்ஆன் குளிப்பினால்தான் மாதவிலக்கிலிருந்து சுத்தமடையலாம் என்ற கட்டாயத்தை ஏற்படுத்தமாட்டாது. குளிக்க முடியாத ஒருவராகவோ, குளிக்கத் தண்ணீர் கிடைக்காத நிலையிலோ, இவ்டைப்புக்குறிகள், நிர்ப்பந்தமாகி, இஸ்லாம் நடைமுறைக்கொவ்வாதது என்ற நிலையை அடைந்து விடும் என்பதை ஏனோ மொழிபெயர்ப்பாளர் தம்மனதில் இருத்திக் கொள்ளத் தவறிவிடுகிறார்களோ என்பதை அறியும் போது அதிர்ச்சி மேலிடுகின்றது.

57. தமிழில் வட்டி எனவும் ஆங்கில மொழிபெயர்ப்புகளில் USURY எனவும் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்ட றிபா என்ற அரபுப் பதத்தைக் கொண்ட வசனம் இன்றைய நாகரிக உலகின் அத்திபாரமான பொருளாதாரத்துக்குப் புத்துயிர் கொடுப்பது. ஆனால் நிலை அதுவல்ல. றிபா என்றால் எது என்பதற்கு மிக விரிவான விளக்கத்தோடு கூடிய சட்டத்தைக் குர்ஆன் 3:130இல் கூறி நிற்கிறது. இரட்டிப்பாக்கப்பட்ட, பன்மடங்காகிவிடும் றிபாவை நீங்கள் தின்னாதீர்கள் என்கின்றது. சட்ட வல்லுனர்கள் அக்காலத்தில் இஜ்மா, கியாஸ் என்ற சில நிபந்தனைகளைப் பயன்படுத்தி றிபாவோடு வட்டியைத் தொடர்புபடுத்தி, அதனோடு கூடிய அனைத்தையும் முற்றாகத் தடையும் செய்துள்ளனர். அந்தத் தடையைச் சிறு குழந்தையும் அறியும். இதன் விளைவு எக்காலத்துக்கும், எல்லோருக்கும் தீர்வு தரவேண்டிய குர்ஆன் வட்டி விடயத்தில் சரியான தீர்வை முன்வைக்காதுள்ளது போன்ற ஓர் சலனத்தை மாயையை உண்டாக்கியுள்ளது. மேலும் நெறியான பொருளாதாரக் கொள்கைகளைக் குர்ஆன் கொண்டிராதது போலவும் பேசப்படுகிறது. அத்தோடு இக்கால கட்டத்துக்குச் செல்லுபடியாகாத சட்டமாகவும் எண்ணப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளது. மேலாக றிபாவை அழித்து தர்மத்தை வளர்க்கிறான் என்ற இறைகூற்றுக்கு மாறான நிலையாகத் தெரிவதால் இறைவனை இயலாமலாக்குவது போன்ற தோற்றப்பாட்டையும் உருவாக்குகிறது.

58. ஆக சில சட்டவல்லுனர்கள் அக்கால கட்டத்தில் மேற்கண்ட ஆயத்தை விளங்கிக் கொண்டதற்கு ஏற்ப, அல்லது அப்போதைய தேவைக்கேற்ப சட்டங்களை ஆக்கியிருப்பர். அவர்களது சட்டவாக்கம் அன்றைய நிலையில் சரியாக என்பதைவிட, தேவைப்பட்டதாகக்கூட (அல்லாஹ் மன்னிக்க வேண்டுகிறேன்) இருந்திருக்கலாம். அல்லது அக்காலை அல்லாஹ் குறிப்பிட்டுள்ள றிபா நடைமுறையில் இருந்திருக்கலாம். ஆயினும், இன்றைய நிலையில் இறைமறை கூறும் கருத்தை வெளிப்படுத்தாத தன்மையை தற்போது உணர முடிகிறது. இதற்கான காரணம் இன்றைய உலக பொருளாதாரத் திட்டங்களும் அதற்குத் தேவையான நெறிமுறைகளும் அதனை நெறிப்படுத்தும் தாபனங்களும் தற்போது நமது மனித சட்டங்களின் அமைப்புள் தடை செய்யப்பட்டவைகளாகத் தெரிவதே. றிபா என்பதை ஆங்கிலத்தில் USURY என்ற சொல்லால் மொழிமாற்றஞ் செய்யப்பட்டிருந்தும், தமிழில் வட்டி என்ற சொல் றிபாவுக்குக் கருத்தாகக் கொள்ளப்பட்டமை இறை நோக்கில் குறை நிலையைத் தோற்றுவித்துள்ளது. இந்த மொழிபெயர்ப்பாளர்கள், ஷரீஆ சட்டத்தின் செல்வாக்கினால் உள்வாங்கப்பட்டவர்கள் என்றே கூற வேண்டியுள்ளது. அக்காலை, இமாம்கள் காலத்தில் நடைமுறையிலிருந்த றிபாவுக்காக உருவக்கப்பட்ட சட்டங்கள் மாற்றப்படாது நடை, முறையில் இருந்து வருவதனால்,  அது மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தின் கனத்தை மனதிற்‌ கொண்டு, றிபா புழககத்தில் இல்லாத இக்காலத்தில் அதற்கேற்றவாறாக வட்டி என்ற பதத்தேர்டு தமிழில் மொழி பெயர்ப்பைச் செய்துள்ளனர்.  ஆங்கிலத்தில் சரியான பதப்பிரயோகம் கையாளப் பட்டிருப்பினும், அது மூதாதையர் காலப் பழக்க வழக்கங்களின் சாயை மாறாதுள்ள மக்கள் மனதிலோ, மத அறிஞர்களாகத் தம்மைக் கூறிக் கொள்வோர் மனதிலோ பட்டதாகத் தெரியவில்லை. அல்லது அவர்களும், அதே தாக்கத்தில் உள்ளனரா என நினைக்க வைக்கின்றது. இது போன்று மொழிபெயர்ப்பாளர் ஏற்படுத்தியுள்ள குழப்பங்கள் இன்னும் சிலவுண்டு.

59. இந்நிலைக்கு வித்திட்டது, கடன், தர்மம் போன்றவை பற்றிக் குர்ஆன் றிபாவோடு தொடர்பாகக் கூறியமையையும் இதர குர்ஆன் வசனங்களையும் அவ்வண்ணம் பாராமையாகவும் இருக்கலாம். றிபாவைத் தடை செய்த இறைவன் பகறா 275 இல் றிபாவை உண்பதன் கேடு பற்றியும், 276இல் றிபாவை அழித்து தர்மத்தை வளர்ப்பது பற்றியும், 278இல் இறைவனுக்கு அஞ்சுபவர்களாகவிருப்பின் றிபாவில் எஞ்சியதை விட்டுவிடும்படியும், மூலதன உரிமை பற்றியும் பேசியவன் அதனைத் தொடர்ந்து 280இல் கடன் தரமுடியா நிலையில் தர்மமாக்கி விடுவது பற்றியும் மேலும் 282 இல் கடன் கொடுபடு முறையின் முழு விளக்கத்தினையும் கூறுகிறான். அத்தோடு கடன் பற்றியதுள் வியாபாரத்தையும் நுழைத்து அதன் தன்மையைக் கூறியதுடன், ‘வியாபாரமெல்லாம் றிபாவைப் போன்றதுதானே’  என்பதைக் கடிந்தும் கூறுவதிலிருந்தும் குர்ஆன் எதனை ஏற்கிறது, மறுக்கிறது அதன் உண்மை நிலைப்பாடு என்ன என்பது போன்றவையும் மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ளக் கூடியதாயுள்ளது. குர்ஆனுக்குப் பொருள்கூற விழைவோர் முழுமையாகக் குர்ஆனை ஜயந்திரிபற விளங்கியவர்களாக இருக்க வேண்டும். இது இறை ஞானத்தால் வருவது. இதனை அல்லாஹ்வே 6:125இல் அல்லாஹ் எவருக்கு நேர்வழி காட்டிட விரும்கின்றானோ அவருடைய நெஞ்சத்தை இஸ்லாத்திற்காக விரிவுபடுத்துகிறான் எனத் தெளிவாக்கியுள்ளான். இன்னும் 29:49இல் எனினும் இது கல்வியறிவு கொடுக்கப்பட்டார்களே அத்தகையவர்களின் நெஞ்சங்களில் தெளிவான வசனங்களாகும் எனக் கூறியிருப்பதும் நமது விளக்கத்துக்கு அணிசேர்ப்பது.

60. சுருக்கின் யாரோ- சட்டமாமேதைகள்- விளங்கிக் கொண்டபடி, அன்றைய/அவர்கள் விளங்கிய/ தேவைக்கேற்ற நிலையில் கொடுக்கப்பட்ட/ அவர்கள் உருவாக்கிய சட்டங்கள் இவை. மனித சட்டங்கள் செல்லா நிலையை என்றாவது எய்தும் என்பதும், ஆனால் இறை சட்டங்கள் அப்படி செல்லாமற் போகாது என்றும் நிலைப்பவை என்பதும் நிதர்சனமாகின்றது. அடைப்புக் குறிகளின் விபரீதங்கள் பற்றிப் பேசவேண்டிய நான் திசைமாறிச் செல்வதுபோல் தோன்றுகிறதா? அன்று. மொழிபெயர்ப்பின் போது இறை கருத்தை வெளிப்படுத்தக்கூடிய சொற்கள் கிடைக்காத போது அடைப்புக் குறி பாவனையின் முக்கியத்துவத்தையும் சந்தர்ப்பத்தையும் அதன் பயனையும் கூறுவதே. சரியான சொல் கிடைக்காத, அல்லது மொழியெர்ப்பின் விளக்கம் போதாத நிலையில், குறிப்பிட்ட அரபிச் சொல்லை அடைப்புள் இடும்போது வாசிப்போர், மொழிபெயர்ப்பு சரியான கருத்தைத் தரவில்லை என்பதை அறிவர். அதனால் பிழையான கருத்தேற்றம் இடம்பெறாது. இன்றேல் மக்கள் பிழையான சொற் பிரயோகத்தையே, அதுவே குர்ஆன் என எண்ணும் நிலைக்குத் தள்ளப்படுவர். உண்மை மறைந்து விடுகிறது. 2:159-நாம் இறக்கியருளிய தெளிவான வசனங்களையும், நேர்வழியையும் மனிதர்களுக்காக வேதத்தில் விளக்கிய பின்னரும், நிச்சயமாக எவர்கள் அவற்றை மறைப்பார்களோ அவர்களை, அல்லாஹ் சபிக்கிறான். இன்னும் சபிப்பவர்களும் சபிக்கிறார்கள். (பார்க்க 2:174) மக்கள் பிழைகளைச் சரயென நினைப்பதால், குர்ஆனைக் கைவிட்ட நிலை ஏற்படுகிறது. இறை வசனம் 25:30 இதனையே வலியுறுத்துகிறது. இஸ்லாம் மிகவும் பிழையாக விளங்கிக் கொள்ளப்பட்ட மார்க்கமானதற்கும் இது போன்ற மாயைகளே காரணமாகலாம். அதனாலேயே உண்மை நிலையை வெளிப்படுத்த சில குர்ஆன் வசனங்களைக் கூற வேண்டியிருந்தது. ஆக அடைப்புக்குறி தேவையான இடங்களில் தவிர்க்கப்படுவதும் மொழிபெயர்ப்பில் தீமை பயக்கும் என்பதனை வலியுறுத்துவதற்காகவே.

61. 4:107 எவர்கள் தங்களுக்கு (பிறருக்குத் தீங்கிழைத்து)த் தீங்கிழைத்து தாங்களே மோசடி செய்து கொண்டனரோ அவர்களுக்காக நீர் வாதாட வேண்டாம். இந்த வசனத்தை அடைப்புக் குறியை மறைத்து வாசித்துப் பாருங்கள். எவ்வளவு பயங்கரத்தை நமக்கு அறிவிக்கிறது. நாயகம் (ஸல்) அவர்களுக்கும் உலகோருக்கும் அறிவுறுத்தல் தரப்படுகிறது. அதுமட்டுமல்ல மேற்சொன்ன வசனமும் அதனோடு தொடர்பான அனைத்து வசனங்களும் இறைவனிடம் அக்குற்றங்களுக்கு மன்னிப்பு இல்லை என்பதையும் எச்சரிப்பதாகவும் இருக்கும். அதன் முன்னோடியாக நம்மை எச்சரித்து இறை தண்டனையில் இருந்து நாம் தவிர்ந்து கொள்வதற்கான அறிவுறுத்தல். இவை இறைகருணை வெளியாகும் இடங்கள். இதன் முன்பின் வசனங்களை வாசித்தால் அல்லாஹ் அறிவித்தவாறு தீர்ப்புக் கூறும்படி உலக மாந்தருக்குக் கூறப்பட்ட நீதிமொழிகள் நிரவியுள்ளதைக் காணலாம். இவை ஒரு பொதுச் சட்டம், இதனைத் திரிபுபடுத்துவது நிராகரிப்புக்கு வழி வகுப்பதோடு, உண்மையை மறைத்த குற்றம், பிறரை வழிகெடுத்த குற்றம், அல்லாஹ்மேல் பொய் சொன்ன குற்றம் போன்றவற்றையும் அல்லவா வருவிக்கும்.

62. மேலும், நாயகத்துக்கு ஷபாஅத் செய்யும் அனுமதி உண்டென்பதால், எதற்கெல்லாம் பரிந்துரை செய்யலாம் என்பதை நாயகத்துக்கு அறிவுறுத்தல் வழங்குவதற்கும் மேலாக, சில குற்றங்களுக்காக நாயகம் அவர்களுக்குக்கூட நமக்காக வாதாடும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது என்பதை மக்கள் தெளிவாக விளங்கிக் கொண்டால், அத்தகு குற்றங்களைத் தவிர்த்துக் கொள்வர் என்பதே. 4:106, 108, 109, 110, 111, 112 போன்றவை குற்றங்களின் தன்மை, அவற்றின் பாரதூரம் முதலியன பற்றிக் கூறுகிறது. அப்படியானவற்றில் ஒன்றே, தங்களுக்குத் தாங்களே மோசடி செய்தல். அந்தளவு பாரதூரமான குற்றம் என்பதை மூமின்கள் உணர்ந்தால் தங்களுக்குத் தாங்களே மோசடி செய்தலைத் தவிர்த்தலின் தாற்பரியத்தை அறிவர். உய்வுக்கு வழிதேடுவர். பிறரால் நடந்த பிழையாயின் அது கருணைக்கான இடம்பாட்டைப் பெற்றுவிடும். இறை கருணையையும் தாண்டி நிற்கும் இடமிது? இங்கு நாமே தேடிக் கொண்டதற்கு நாம் அநுபவித்தேயாக வேண்டும் என்ற இறைவிதி வெளியாகவில்லையா? இறைவன் தனது கருத்துக்கு முரண்படுவனா? 20:52. ‘…என் ரப்பு தவறிழைத்து விடவும் மாட்டான். மறக்கவும் மாட்டான்.’

63. இப்படி எழுதிக் கொண்டே போகலாம். நமது நோக்கம் மறுமுனை நோக்கியது. அடைப்புக் குறியைச் சேர்த்து வாசியுங்கள். கருத்துத் தடம் புரண்டு, தலைகுப்புறக் கிடப்பது புரியும்? இதனை வாசிப்போர் வழி கெடுக்கப்பட மாட்டார்களா? தமக்குத் தாமே மோசடி என்பது பிறருக்குத் தீங்கிழைப்பதால் வருவதா? தீங்கு என்பது பொதுச் சொல். மோசடி என்பது வகைப்படுத்தப்பட்ட ஒரு குற்றத்தைக் குறித்துச் சொல்லப்படுவது. இதற்கு இடைச்செருகல் எவ்வகையிலும் ஏற்புடைத்தன்று. தீங்குகளில் சில மன்னிப்பைப் பெறுவதாகச் சில வசனங்கள் கூறுகின்றன.’9:113-ஒரு நபிக்கோ, முஃமின்களுக்கோ இணைவைத்துக் கொண்டிருப்பவர்களுக்காக, அவர்கள் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும், நிச்சயமாக அவர்கள் நரகவாசிகள்தான் என்று தெளிவான பின்னரும் மன்னிப்புக்கோருவது ஆகுமானதல்ல’. எனக் கூறியிருக்க நாம் எங்கு நிற்கின்றோம்? நபிமாரைக் கொண்டு நாம் கொண்ட ஈமானும் பறிபோன இடமல்லவா?

64. நான் அரபிப் பாஷையைத் துறைபோகக் கற்றவனோ, குர்ஆனுக்குக் கருத்துக் கூறும் பேரறிவாளனோ,  மொழி பெயர்ப்பாளனோகூட அல்ல. அல்லாஹ் கூறிய வண்ணம் சிந்திக்க முயற்சிப்பவன். அவனை அறியும் வகையில் அறியும்படி கூறியவாறு அறியத் துடிப்பவன். வாசித்து விளங்கிக் கொள்ள வேண்டாமா என்பதை மலைபோல நினைந்து தலை மேற்கொண்டு விளங்கத் துடிப்பவன். உங்களுக்கு ஓர் வேதம் தரப்பட்டுள்ளது அதில் உங்களைப் பற்றியே உள்ளது என்பதைக் கண்டு உயர்வடையத் துடிப்பவன். அவனுடைய கலிமா தையிபா மட்டுமே உயர்ந்து செல்லக்கூடியது என்பதை நம்பி அதைப் பற்றிப் பிடித்துக் கொள்ள விழைபவன். நிச்சயமாக நாம் மறைந்திருக்கவில்லை என்பதைக் கேட்டு, நிறைந்திருப்பதை அறிய அவாவுபவன். இன்னும் உங்களுக்குள்ளேயும் கவனித்துப் பார்க்க வேண்டாமா என்பதைக் கேட்டு உற்று நோக்குபவன். எங்கிருப்பினும் உங்களுடனேயே இருக்கிறேன் என்பதனால் பயந்து நடுங்கி அவனைக் காணும் வகையைப் பேணுபவன். அவனைப் பற்றிப் பிடித்துக் கொள்பவர் நேர்வழி காட்டப்பட்டு விட்டார் என்பதைக் கண்ணுற்று அவ்வழியைத் தேடுபவன். ஞானம் கொடுக்கப்பட்டவர்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டவர்கள் என்பதை நினைந்து அதனைப் பெற்றுக்கொள்ள விழைபவன்.

65. குர்ஆனுல் ஹக்கீம் என்பதைக் கேட்டு அதனை அல்லும் பகலும் அலசுபவன். அதில் காணப்படும் உண்மைகள் மொழிபெயர்ப்பு என்ற பெயரில் தடம் புரட்டப்படுவதைக் காணச் சகிக்காது துயருருபவன். நமது வசனங்களைக் கொண்டு ஈமான் கொள்பவர்களைத் தவிர நீர் செவி ஏற்கச் செய்திட முடியாது என்பதையறிந்து குர்ஆன் வசனங்களின் மூலமே உண்மையை அறியத் துடிப்பவன். நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான், ஈமான் கொண்டு, நற்செயல்கள் செய்து, உண்மையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசித்துக் கொண்டார்களே அத்தகையோரைத் தவிர என்பதைப் பார்த்து, அவ்வழி செல்ல நினைப்பவன். நான் இவற்றைத் தொடர முயன்றால் அது குர்ஆன் முழுவதையுமே இதில் நுழைக்க வேண்டிய நிலையை உருவாக்கும் என்பதால் இதனை இத்தோடு நிறைவாக்குகிறேன். அதனாலேயே அடைப்புக் குறியினால் ஏற்படுத்தப்படுகின்ற விபரீதங்களின் ஓரிரு உதாரணங்களுடன் வெளியாகிறது இக்கட்டுரை.

66. குர்ஆன் தனிமனித, சமூக உய்வை முதன்மையாகக் கொண்டது. தனிமனித முன்னேற்றம் கருதியே, உலகில் தரப்பட்டுள்ள அனைத்தும் -மனைவி மக்கள் உட்பட -வேடிக்கையும் விளையாட்டுமே, அதைவிட மறுமையே சிறந்தது என்கின்றது. அம்மறுமையைச் சந்திக்கும் வழியில் போராடும்படி பணிக்கின்றது. அதற்கான வழியைக் கூறும் உண்மைகளையும,; நன்மைகளையும் மக்கள் அறிவதற்கு ஏதுவாயுள்ள இவ்விறை வெளிப்பாட்டை உள்ளபடி அறிவதற்கு வல்ல அல்லாஹ் அருளிய அருள்மறையை, மனோ இச்சைகளுக்கும், தீய எண்ணங்களுக்கும் இடங்கொடாது அதனை மக்களைச் சென்றடையச் செய்வதில் சம்பந்தப்பட்ட அனைவரும் கவனம் செலுத்தல் இன்றியமையாதது.

67. இக் கட்டுரை இறை உண்மைகள் உள்ளது உள்ளவாறே உலகோரைச் சென்றடைய வேண்டுமே என்றது தவிர்ந்த வேறு எவ்வித குறுகிய அல்லது குற்றம் குறைகாணும் நோக்கம் கொண்டதல்ல என்பதை இறைசாட்சியுடன்; கூறுகிறேன். யாருடையவும் மனம் நோவதற்காக எழுதப்பட்டிருப்பின் இறைதண்டனைக்கு ஆளாவேன்.

 – நிஹா –
2010.06. 06