குர்ஆன் வழியில் …
வேதங்கள் பற்றிய இஸ்லாமிய நிலைப்பாடு!
ஒரு மனிதன் இஸ்லாமியனாக, அதன் நுழைவாயிலான அல்லாஹ் ஒருவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை என்பதை ஏற்க வேண்டும். அதற்காக லாஇலாஹ இல்லல்லாஹு என்ற தாரக மந்திரமான திருக் கலிமாவை வாயாலும் மனத்தாலும் கூறி அஷ;ஹது அன்லாயிலாஹ எனத் தொடங்கும் ஷஹாதத் கலிமாவைக் கூறி சாட்சியம் அளிக்க வேண்டும். எப்போது திருக் கலிமாவைக் கூறி இஸ்லாமியன் ஆகிவிட்டானோ அப்போது அவன் ஆறு விடயங்கள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டியுள்ளது. அதன் பின்னரே அவன் மீது சில விடயங்கள் கடமையாகி விடுகின்றன.
ஒரு இஸ்லாமியன் நம்பிக்கை கொள்வதற்காகக் குறித்துரைக்கப்பட்ட ஆறு விடயங்களையும் அறிய வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. காரணம் ஒன்றை நம்புவதாயின் அது பற்றிய தீர்க்கமான அறிவு பெற்றிருத்தல் அவசியம் என்கிறது புனித குர்ஆன். எதில் உமக்கு தீர்க்கமான ஞானமில்லையோ அதனை நீர் பின்பற்றாதீர் என்கிறது. அறிதலின்றி ஏற்படும் நம்பிக்கை என்பது போலியானது. அதில் ஸ்திரத்தன்மை காணப்படாது. தளம்பல் நிலையே காணப்படும். ஸ்திரமற்ற தளம்பல் நிலை நம்பிக்கையைத் தவிடு பொடியாக்கிடும். எப்போது நம்பிக்கை கேள்விக் குறியாகிறதோ அப்போது நமது இஸ்லலாமியன் என்ற அந்தஸ்தும் கேள்விக் குறியாகியே விடுகிறது.
ஆதலின் நாம் அந்த ஆறு விடயங்களையும் என்னவென்று அறிந்திருப்பதற்கு மேலாக அவை பற்றி தெளிவாக அறிய வேண்டிய கடப்பாடு உடையவர்களாக ஆகிவிடுகிறோம். இல்லையேல் நாம் பெயரளவில் மட்டுமே இஸ்லாமியனாக இருக்க முடியும். முதலில் நாம் இஸ்லாமியன் ஆவதற்கு கூறியிருந்த கலிமா என்ற தாரக மந்திரமான அல்லாஹ்வைத் தவிர நாயனில்லை எனக் கூறிய சாட்சியமே பொய்யாகி விடும் அபாயத்தை எதிர் கொள்கிறது.
நாம் நம்பிக்கை கொள்ள வேண்டிய ஆறு விடயங்களாவன. அல்லாஹ், மலக்குகள். வேதங்கள், இறைதூதர்கள், மறுமை நாள், இறை விதியும் தீர்ப்பும். நாம் இங்கு ஆராயவுள்ள தலைப்பு வேதங்கள் பற்றிய குர்ஆனின் நிலைப்பாடே! மேற்குறிப்பிட்ட ஆறு விடயங்களில் இஸ்லாமியன் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும் என்பதே குர்ஆனிய விதிதான் என்பதால் அது பற்றி சர்ச்சை இல்லை.
ஆக வேதங்கள் உண்டு என நம்பினால் போதுமா என்ற கேள்விக்கு விடையாக ஏற்கனவே குர்ஆன் வெளிப்படுத்தியுள்ள அறிவின்றி ஒன்றில் நம்பிக்கை ஏற்பட்டுவிட முடியாது என்பது பதிலாகின்றது. எனவே அது பற்றிய அறிவு அத்தியாவசியமாகின்றது.
இப்போது அந்த வேதங்கள் யாவை? அவை யாரால் வெளிப்படுத்தப் பட்டன? அதன் உரிமையாளன் யார்? யாருக்காக அவை வெளிப்படுத்தப் பட்டன? ஏன் அவை வெளிப் படுத்தப்பட்டன? அவற்றின் நோக்கமென்ன? கருப் பொருளென்ன? எப்போது? எங்கே? ஏன் என்பன போலொத்த பல் வேறு கேள்விகளும் ஒன்றன் பின் ஒன்றாக உருவாகின்றன? இதற்கான பதில்களை எங்கு தேடலாம் எனும் போது அதற்குப் பதிலும் குர்ஆனில் என்றே வருகிறது. ஆம் குர்ஆன் கூறியதை அறிய வேறெங்கு செல்வது? அங்கேயே தான் தேட வேண்டியுள்ளது. இதற்கெல்லாம் பதில் கண்ட நிலையில் இப்போது நம்மத்தியில் ஓர் கேள்வி உருவெடுத்து நிற்கின்றது. அது நாம் வேதங்களை அறிந்திருக்கிறோமா?
அங்கு மௌனம் விடையாகின்றது. மனதிற்குள் பல கேள்விகள் எழுந்து நிற்பதால் பதில் மௌனத்துள் மறைந்து கொள்கின்றது. ஆம் எனக் கூறின் ஒன்று பொய் சொல்வதாகிவிடும். அன்றேல் அது பற்றிய இன்னோர் கேள்விக்கு பதிலிறுக்க வேண்டிய தர்மசங்கடமான நிலையுள் தள்ளப்பட்டு அவமானத்தைச் சம்பாதிக்க வேண்டி வரும். பெரும்பாலானோர் ஆறு விடயங்களையும் பெயர்களாகப் பாடம் பண்ணியுள்ளனரே தவிர அவற்றைப் பற்றிய அறிவைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூடத் தெரிந்திருக்கவில்லை என்பதே முன்னைய பதில் மௌனத்துள் மறைந்து கொள்ள வேண்டிய காரணம்.
இவ்வுண்மைகளை நாம் அறிய முற்பட்டால் அனைத்து வேதங்களையும் தேடிப் படிக்க வேண்டிய நிலை வந்து விடுகின்றது. அப்படி தேடிச் செல்லும் போது அவைகள் அல்லாஹ்வால் தனது தூதர்கள் மூலம் இறக்கப்பட்ட பாiஷயிலோ, அதே பண்பிலோ, மாற்றத்துக்கு உட்படாது இல்லை என்பது தெரிய வருகிறது. இந்நிலையில் அவைகளை பெயரளவில் அறிந்து கொள்கிறோமே தவிர உண்மையை அறிந்து கொள்ள முடிவதில்லை.
இதற்குப் பரிகாரம் காண வேண்டின் மீண்டும் நாம் புனித குர்ஆனைத் தேடவே வேண்டி வருகின்றது. இப்போது புனித குர்ஆனில் இறைவன் சாட்சியம் கூறுகிறான், இந்த புனித குர்ஆன் எதனையும் புதிதாகக் கொண்டிருக்கவில்லை, இதற்கு முன்னர் தான் ஆதம் அலை அவர்கள் முதல் ஈஸா அலை அவர்கள் வரை எதனை வேதமாகவும் கட்டளை களாகவும் இறக்கியருளி வைத்தானோ அவற்றை எல்லாம் உண்மை எனவும், அது தன்னால் இறக்கப்பட்டவை எனவும் சாட்சியம் கூறுவதற் காகவே முஹம்மது ஸல் அவர்கள் மூலம் இக்குர்ஆன் இறக்கி அருளப்பட்டது என்கிறான்.
ஆக குர்ஆனை நன்கு அறியும் போது அனைத்து மதங்களையும் அறிந்து கொண்டது போன்ற ஓர் திருப்திகாணப்படுகின்றது. அத்தோடு வேதங்களை அறிந்து நம்புதல் என்ற ஈமானில் ஒன்று முற்றுப் பெறும் வாய்ப்பு ஏற்படுகின்றது. ஆயினும் மற்றைய வேதங்களைத் தேடி ஆய்ந்து அறியும் போது நிறை உண்மைகளை நாம் கண்டு கொள்ளலாம். அதில் ஒன்று இறுதி நபி பற்றிய எதிர்வு கூறல்.