அவ்லியாக்கள் என்ற இறைநேசர்களின் கபுறை முஸ்லிம்களில் எவரும் வணங்குகின்றார்களா! ஓர் கண்ணோட்டம்!

அண்மைக் காலமாக, தௌஹீத் ஜமாஅத் என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருப்போர், ஸியாரத்துச் செய்பவர்களை, சிறப்பாக, அவ்லியாக்கள் என்ற இறைநேசர்களின் கப்ர் என்ற அடக்கத்அ தலங்களைத் தரிசிப்போரை, “கபுறு வணங்கிகள்“ என்று கூறி, அவர்கள் ஷிர்க் என்ற இணைவைப்பில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டிக் கொண்டும், அவர்களைப் பழித்துரைத்துக் கொண்டும், அவமானப்படுத்திக் கொண்டும், அப்படி அவர்களை அத்துமீறி விமர்சிப்பதையே தமது முக்கிய குறிக்கோளாகவும், அழைப்புப் பணியாகவும் செய்து கொண்டிருக்கின்றனர்.

இறைநேசர் என்ற அவ்லியாக்கள் பற்றி அல்லாஹ் தனது அருள் மறையில், அவர்கள் அச்சப்படவும் மாட்டார்கள், கவலைப்படவும் மாட்டார்கள் என்று கூறுகின்றான்.

இன்னும் இறைவழியில் தம்மை அர்ப்பணித்தவர்கள் மரணித்துவிட்டதாகக் கருத வேண்டாம் அவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள். அவர்களுக்குத் தான் உணவும் ஊட்டுவதாகக் கூறுகின்றான்.

அதற்‌கு மேலும், குர்ஆனின் 22:58,59 போன்ற வசனங்களில்,

“அல்லாஹ்வுடைய பாதையில் நாடு துறந்து, பின்னர் கொல்லப்பட்டவர்கள், அல்லது இறந்து விட்டவர்கள், அவர்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் மிக்க அழகான உணவை அளிப்பான். நிச்சயமாக அல்லாஹ், அவன்தான் உணவளிப்பவர்களில் மேலானவன்.“

“நிச்சயமாக, எதனை அவர்கள் பொருந்திக் கொள்கிறார்களோ, அந்நுழையுமிடத்தில் அவர்களை அவன் நுழையச் செய்வான். நிச்சயமாக, அல்லாஹ் நன்கறிந்தவன். சகிப்புத் தன்மையுடையவன்.“

மேற்கண்ட வசனங்களில், இறையடியார்கள், இறப்பை எய்தியிருந்தாலும், அவர்கள் தாங்கள் நுழையுமிடத்தைத் தீர்மானிக்கக் கூடியவர்களாகவும் இருப்பதையும், அதனையே அல்லாஹ் நிறைவேற்றி வைப்பதாகவும் தெரிகின்றது. அத்தோடு அவர்களுக்கு மிகச் சிறந்த உணவை அல்லாஹ் ஊட்டிக் கொண்டிருப்பதும் அறிய வருகின்றது.

மேற்கண்டவற்றிலிருந்து இறையடியார்கள், இறைநேசர்களின் பதவி நிலை அல்லாஹ்விடத்தில் எத்தகையது என்பது வெளிப்படை. அவர்கள் எந்த இடத்தில் நுழைய வேண்டுமோ அந்த இடத்தில் அவர்களை நழையச் செய்வான் என்பதன் மூலம், அவர்கள் நினைத்த இடத்துள் நுழைந்து இறைவனுக்கு உகப்பான காரியங்களில் ஈடுபடுவார்கள் என்பதுவும் வெளியாகின்றது.

அவ்லியாக்களின் வரலாறுகளை ஆராயும் ஒருவர், அவ்லியாக்கள், ம‌ரணித்த பின்னர் செய்த அற்புதங்களையும், மார்க்கத்தைப் பரப்புவதில் அவர்கள் ஆற்றிய பணிக‌ளையும், அவர்கள் வெவ்வேறிடங்களில் வெளிப்பட்டு அங்கு தம்மை நாடி வருபவர்களுக்கு, அல்லாஹ்வின் உதவியால் அவர்களது துன்பங்களில் இருந்து விடுதலை பெற்றுக் கொடுத்த விபரங்களையும் அறிந்து கொள்வர்.

மறைவான விடயங்களை நாமறிய மாட்டோம். நாம் காண்பவைகள், கேட்பவைகள்தான் உண்மை, மற்றவை எல்லாம் விவாதிக்க முற்படுவது அறியாமைக்குள் நம்மை அழித்து விடும்.

அல்லாஹ் தானாக வெளிவந்து எவ்வித நன்மை, தீமைகளைச் செய்வதில்லை. அதற்காக அவன் இயற்கையை, வானவரை, மனிதர்களைப் பயன்படுத்துவான். இப்படிச் செய்வதனால் அவன் யாருடையவும் உதவியை வேண்டப்படுபவனாக எண்ணுவதும், அவன் தானாக எதனையும் செய்து கொள்ள மாட்டான் எனவும் நினைந்துவிடக் கூடாது. அவன் “குன்“ ஆகுக என்ற தனது வார்த்தையால், அத்த‌னையையும் உருவாக அனுமதித்தவன். அவனது அனுமதியோ, அறிவுக்கு உட்படாமலோ அணுவும் அசைவதில்லை. தானாக எதற்கும் இயக்கமுமில்லை. அவன் எதனை நாடியிருந்தானோ அதன்படியே அத்தனை கருமங்களும் நடைபெற்றன, பெறுகின்றன, நடைபெறும். இதனை ஒருவர் விளங்காத வரை அவர் தௌஹீது என்ற கூறுவதெல்லாம் வெறும் பிதற்றலே! அறியாமையின் வெளிப்பாடே!

நேர்வழியில் செல்ல வைப்பதும், வழி கெடுப்பதுவும் கூட அவனது ஆட்சிக்கு உட்பட்டதே! அவன் வழிகெடுத்த மனிதர்களை யாரும் வழிகாட்டிடவோ, பாதுகாத்திடவோ முடியாது. அப்படி தாம் காட்டுவதாக யாரும் நினைந்து அவ்வகை வழிகளில் தம்மை ஈடுபடுத்துவது, அல்லாஹ்வுடன் போர் பரிவதே!

நபிகளாருக்குக் கூடக் கொடுத்திராத, ஏன் அல்லாஹ்வே தன்மீது திருத்துவது என்ற ஒன்றைக் கடமையாக்கிக் கொள்ளாத நிலை யில், அல்லாஹ்வுக்கு மேலாக தாம் அந்த வழிகளில் செயற்பட அனுமதியில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அல்லாஹ் கூறிய வழியில் தம்மைத் திருத்து்ம் வழிகளில் ஈடுபட வேண்டும். அப்படி இல்லாமல், தாம் நினைத்த மாதிரி, தமது மனோ இச்சகைளின்படி செயல்படுவது, ஷிர்க்கை வருவிப்பதே தவிர இல்லை என்பதை தஃவாப் பணிகளில் ஈடுபடுவோர் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இன்றேல் திருத்தப் போனவனே, மன்னிப்பற்ற குற்றத்துக்காளாகி சுடுநரகில் வீழும் நிலையை அடைந்து விடுவர் என்பதைப் புரிந்து கொள்ளல் அவசியம்.

இந்த நிலையை, திருத்துவதற்கு முயல்பவன் அடைந்துவிடக் கூடாதென்ற கருணையின் அடிப்படையில் யாவுமறிந்த அல்லாஹ், “உங்கள் மார்க்கம் உங்களுக்கு, எங்கள் மார்க்கம் எங்களுக்கு“ எனக் கூறி, வீண் தர்க்கத்தைத் தவிர்த்து “உங்கள் மீது சாந்தி உண்டாகுக என்று கூறி அகன்றுவிடுமாறு கூறியுள்ளான்.

அடுத்து. மற்றையோரின் நிலையை அறிய,” எந்த ஒரு சமூகத்தவரும் தங்கள் நிலையைத் தாங்களே மாற்றிக் கொள்ளாதவரை நிச்சயமாக அல்லாஹ் அவர்களை மாற்றுவதில்லை, எனக் கூறி அவர்களை எச்சரித்துவிட்டு, திருத்த முனைவோரான இன்னொரு பகுதியினருக்காக, அதே வசனத்தில், “இன்னும், அல்லாஹ் ஒரு சமுதாயத்தவருக்குத் தீமையை நாடிவிட்டால், அதனைத் தடுப்பவர் எவருமில்லை அவர்களுக்கு அவனையன்றி எந்த உதவியாளரும் என்று கூறியுமுள்ளான். இவை உய்த்துணரப்பட வேண்டியவை.

ஆதலால், தஃவாப் பணி என்ற பெயரில் தம்மைத் தாமே அழிவுக்குள் கொண்டு செல்வதை விடுத்து, தாம் அடையவுள்ள நிலைபற்றிச் சிறிது சிந்திக்க வேண்டும். அவரவர் முயற்சித்த அளவே அல்லாஹ்வால் அவர்களுக்குக் கூலி கொடுக்கப்படும். பதவிகள் உயர்த்தப்படும் என்பதை விளங்கிக் கொள்வது, தஃவாப் பணி செய்வதைவிட மிகவும் நன்மை பயப்பது. அன்றேல், தமது விருப்பு வெறுப்புக்கமைய எதையெல்லாமோ செய்துவிட்டு, அது அல்லாஹ்விடம் தம்மைக் கொண்டு சேர்க்கும் என நினைந்து ஏமாறுவதாகவே இருக்கும்.

அல்லாஹ், இறைநெருக்கத்தை அடைவதற்கான வழியைத் தேடிக் கொள்ளுங்கள் என்று கூறியிருப்பதும், என்னை இவ்வுலகில் கண்டு கொள்ளாதவன், மறுமையில் என்னைக் காண முடியாத குருடனாகவே நிச்சயமாக இருக்கப் போகின்றான், நீங்கள் மறதியில் இருக்கின்றீர்கள், நினைவுகூருங்கள், உங்களுக்குள்ளேயும் நீங்கள் கவனிக்க வேண்டாமா போன்ற எச்சரிக்கை வசனங்களும் உங்களை நீங்கள் அறிந்து கொள்ள, காத்துக் கொள்ள, உயர்வை அடைய உதவுமேயன்றி, தற்போது நீங்கள் செய்து கொண்டிருப்பவை அல்ல என்பதை உணர வேண்டும்.

தௌஹீத் என்ற சொல்லை உச்சரித்துக் கொண்டு, மற்றவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதைப் புலனாய்வு செய்து, துருவித்துருவி ஆராய்ந்து கொண்டு, அவர்கள் மேல், அபாண்டங்களை அள்ளிவீசி, அவர்களுக்குப் பட்டப்பெயர் கூறி, பகடி, கேலி, நையாண்டி செய்வதன் மூலம், தாமே தெளிவான நிராகரிப்பாக அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்து, நிராகரிப்பாளர் வரிசையில் இணைந்து விடாதீர்கள்.

அல்லாஹ் தானோ, தனது தூதரோ செய்யாத, செய்வதற்கு அனுமதியாத “பிறரைத் திருத்துதல்“ என்ற ஒன்றைச் செய்வதாகக் கூறி, அல்லாஹ்வுக்கு எதிராகப் போர் புரிபவர்களாக ஆகிவிடாதீர்கள். இது உங்களை ஈடேற்றப் போவதில்லை அழிவைத் தவிர தரவும் போவதில்லை. மறுமையில் கைசேதப்படுபவர்களாகவே இருக்கப் போகின்றீர்கள்.

மேலாக, தமது ‌தஃவாப் பணிக்கு ஒரு புதிய பெயர் கொடுத்துக் கொண்டு, தம்மை ஓர் இயக்கமாக அடையாளப்படுத்திக் கொண்டு இருப்போர் எவராயினும், பிரிவினைவாதிகளே! தௌஹீது இல்லாவிட்டால் அது இஸ்லாமல்ல என்பதை உணர்வோர், “இஸ்லாம்“ என்று அல்லாஹ் தேர்வு செய்த பெயரை, அவன் ஏற்றுக் கொண்ட அம்மார்க்கத்தை, அவனது அருட் கொடையை முழுமையாக்கி, அவனால் பாதுகாக்கப்படும் அம்மார்க்கத்தை, வேறு பெயரில் தஃவா செய்வது எவ்வகையிலும் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தைப் பெறப் போவதில்லை. மாறாக, பிரிவினை என்ற குற்றத்திற்குள் ஆழ்த்தி, நபிகளாருக்கும் நமக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்ற இறை கூற்றுக்கும் உள்ளாக்கிவிடும். பார்க்க: 30:32, 23:53, 21:93, 3:105, 15: 90-93.

தஃவாப் பணி செய்வதாகக் கூறித் தமக்குள் பிரிவினையை ஏற்படுத்திக் கொண்டுள்ள இயக்கவாதிகளைப் பற்றி மிகத் தெளிவாகப் பேசுகின்றது பின்வரும் வசனம். 6:159 -“ நிச்சயமாக எவர்கள் தங்கள் மார்க்கத்தைப் பிரித்துப் பல பிரிவினர்களாகி விட்டனரோ, அவர்களுடன் நீர் எவ்விஷயத்திலும் சேர்ந்தவர் அல்லர். அவர்களது காரியமெல்லாம் அல்லாஹ்வின்பால் உள்ளன. பின்னர் அவர்கள் செய்து கொண்டிருந்தவை குறித்து அவர்களுக்கு அவன் அறிவிப்பான்.

-  நிஹா  -