அசைவும் அடைவும்!

ஒரு மிகமிகச் சிறிய புள்ளியைச் சூழ வானம் பூமி, மிகப் பரந்த வெளி, உயர்ந்த பனி மலைகள், எரி மலைகள், ஆழமான மடுக்கள் கடல்கள், காடுகள், அருவிகள், ஆறுகள், நீர்நிலைகள், களனிகள், சோலைகள் என என்னென்னவோ, காணக் கூடியதாகவும், காண முடியாதவைகவும் இயற்கையில் அமைந்துள்ளன.

இவற்றில் நன்மைகளும், தீமைகளும், பயனுள்ளவையும், பயன் தருவனவும், இதம் தருபவையும். இன்னல் விளைப்பனவும், கேடு விளைப்பனவும், கெடுதி செய்வனவும், கொடுமை தருவனவும், படிப்பினைகளும், அத்தாட்சிகளும் என்று எண்ணில்லா தன்மைகளைக் கொண்டுள்ளவைகளாக இருக்கின்றன.

இவற்றையறிய நீர் நிலைகளை மட்டும் ஓர் உதாரணமாகப் பார்ப்போம். ஆறும், கடலும், மடுவும், மலையும், குளமும், குட்டையும் நீர் நிறைந்தவைதாம். ஆனால், அவற்றில் இருக்கும் நீரின் தன்மை, சுவை, தட்ப, வெப்ப, பௌதிக நிலை போன்ற இன்னோரன்னனவை மாறுபட்டு, நன்மை, தீமைகளை விளைப்பனவாகவே காணப்படுகின்றன.

அனைத்திலும் காணப்படும் நீர் அடிப்படையில் ஓரே பண்பைக் கொண்டிருப்பினும், அவை சூழல், அமைவிடம், அவற்றின் போக்கு, பாதிப்பு போன்றவற்றால் தமது நிலையில் தவிர்க்க முடியாத மாற்றங்களை ஏற்றுக் கொண்டுள்ளன. இவற்றில் படிப்பினையும், அத்தாட்சிகளும் உண்டே! நமது நோக்கம் அது பற்றி எழுதுவதல்ல. நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் இவ்வாறே காணப்படுபகின்றன என்பதனைத் தொட்டுச் செல்வதே!

நம்மை ஓர் புள்ளியாகக் கொண்டால் நம்மைச் சுற்றி 360 பாகை உள்ளது என்பது கணக்கிற்காக நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு சட்டவரைவு. இந்த ஒரு புள்ளி எப்பக்கமாகத் தன்னை நீட்டிக் கொள்கின்றதோ அப்பக்கத்தை அடையும் என்பது மறுக்க முடியாத மாறாத தத்துவம். ஒரு புள்ளியாக இருக்கும் நிலையில் தன்னைச் சுற்றியுள்ள அனைத்தையும் தன்னருகிலேயே கொண்டுள்ள புள்ளி, தான் ஓர் திசையில் நீண்டு சென்ற போது, தான் இருந்த சூழலை, தன்மையை, நன்மையை, தீமையை, உயர்வை, தாழ்வை என முழுமையான மாற்றங்களுக்கும் பாதிப்புக்களுக்கும் உள்ளாக்கிக் கொள்கின்றது. புள்ளி தன்னருகே இருந்தவற்றைவிட தற்போது 360 கோடி வித்தியாசமான அளவில் காண முடியாத தூரத்தில், கற்பனை பண்ண முடியா இடத்தில் இருக்கின்றது. இப்புள்ளி நீண்டு கொண்டு தற்போதைய இடம் வரை சென்ற தன் தூரம்கூட, பல் வேறு அனுபவங்களை நல்லதாகவும் கெட்டதாகவும் பெற்றிருக்கவே வேண்டும்.

இவற்றிலுள்ள படிப்பினையே நமது ஆக்கத்திற்கான அடிப்படை நோக்கம். நமக்குத் தரப்பட்ட இலகுவாக தேர்வு செய்யும் உரிமை, நமது தெரிவு ஒன்றின் மூலம் நடைமுறையில் நம்மை எங்கு கொண்டு செல்கின்றது என்பதை உணர வைப்பது நமது ஆக்கத்தின் அடிப்படை நோக்கம்.

அல்லாஹ் கூறுகின்றான். இலகுவில் கஷ்டமுண்டு, கஷ்டத்தில் இலகு உண்டு என்று. இது எத்தனை கருத்துக்களைக் கொண்டிருக்கின்றதோ அதனை அவரவர் ஆய்வுக்கும், அறிவுக்கும் ஏற்றவாறு கண்டு கொள்வர். இவ்வசனத்திற்குரிய முழுமையான ஆய்வை நான் இங்கு செய்ய முயலவில்லை. அது முடியாததும்கூட. ஆனால், எனது ஆக்கத்திற்கு அதனை அடிப்படையாக்குகின்றேன்.

இப்போது புள்ளி தொடங்கிய இடமும் அசைவும்,அங்குள்ள சூழலையும் கருத்தில் கொண்டு, நமது சிந்தனையை ஓடவிட்டால், நாம் செல்ல வேண்டிய இடத்தை சிந்தித்து அறியாமல் இலகுவாகத் தேர்வு செய்ததில் உள்ள பாதிப்பைக் கண்டு கொள்ளலாம். ஆதலால், செல்ல வேண்டிய இடம் கண்டறியப்படுவதில் சிரமத்தை ஏற்போமாயின், அடைய வேண்டிய இடம் பற்றிய அறிவை ஆபத்தின்றி, கண்டு கொண்டு நமது பயணம் என்ற புள்ளியை நீட்டியிருப்போம். அடைவும் நன்மை தருவதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும்.

 – நிஹா -