மறுமையில் அல்லாஹ்விடம் பதில் கூறப் போவது யார்!

அல்லாஹ் யாரையும் யாருக்கும் பொறுப்பாளனாக்கவில்லை! யாரையும் திருத்தும் வேலையையும் யாருக்கும் தரவில்லை!அவன் வழியில் நமது முயற்சிகளும், செயல்களும் நம்மைக் கரையேற்றுமே தவிர, அடுததவர் விடயத்தில் மூக்கை நுழைத்துத் திருத்த முயலும் செயலல்ல!

திருத்தும் வேலையை அல்லாஹ்வும் செய்வதில்லை. அவனது தூதர்களையும் செய்யும்படி பணித்ததில்லை. அதனால் நமக்கும் அக்கடமை இல்லை. ஒவ்வொருவரும், தா‌மே உற்றுணர்ந்து நல்லறிவு பெற்று, நேர்வழியைத் தேர்ந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டால், அல்லாஹ்வும் அதற்கு உறுதுணையாக இருப்பான். ஆனால், ஒரு சமூகம் தன்னை மாற்றிக் கொள்ளாதவரை அல்லாஹ் அவர்களில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை என தனது நிலையைத் தெளிவாக்கி உள்ளதன் மூலம், நமது கடமையும், நமக்குள்ள கடமையும் வலியுறுத்தப்படுகின்றது.

நபிகளார்கூட அல்லாஹ்வின் அனுமதி கொண்டே அழைப்பவராக இருந்தார் எனக் கூறும் குர்ஆனின் வசனம் அழைப்புப் பணியின் அந்தஸ்தை மட்டுமல்ல, அதற்கு யாருடைய அனுமதி வேண்டும் என்பதையும் கூறி நிற்கின்றது. அவனின் வேதத்தை பின்பற்றலுக்காகத் தந்திருக்கிறானே தவிர, அதனை அவனின் அனுமதியின்றிச் செய்ய இடம் தரவில்லை.

தீமைகள் நடக்கும் போது அதனைத் தடுப்பது இயன்ற ஒவ்வொருவர் மீதும் கடமைதான். இதற்கும் ஒரு வரையறையை, வழிமுறையை அல்லாஹ் கூறியே வைத்துள்ளான். அதுவும் அழைப்புப் பணியும் ஒன்றல்ல.

குர்ஆனிய உண்மைகளை வெளிப்படுத்தும் சந்தர்ப்பத்தில்கூட, அதனை ஏற்பவர்களுக்கே கூறம்படி பணித்துள்ளான். அவன்கூட யார் எற்பவர்கள் என்பதை அறிந்தே அவர்களுக்கு வழிகாட்டுகின்றான். இது திருத்தும் வேலையல்ல.

தர்க்கம் செய்ய வேண்டிய நிலையில்கூட, அழகான வார்த்தைகளைக் கொண்டு, அழகான முறையில் தர்க்கம் செய்யுமாறும், நன்மையளிக்காது என்ற நிலையில், குழப்பத்தைத் தவிர்க்க, ஸலாம் கூறி விலகிக் கொள்ளுமாறு ஆலோசனை பகர்ந்துள்ளான்.

பாதிக்கப்பட்டவனுக்கு மட்டுமே தகாத வார்த்தைகள் பேசம் அனுமதியை வழங்கியிருக்கின்றான் என்பதை
அறியும் ஒருவர், அல்லாஹ் மக்கள் மத்தியில் சாந்தி, சமாதானம் நிலவவேண்டும் என்பதில் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளான் என்பதைப் புரிய வைக்கும். இதனை மேலும், வலியுறுத்துகின்றது கீழ்வரும் கட்டளை. அதாவது, நிராகரிப்பாளர்களின் தெய்வங்களை ஏசாதீர்கள். அவர்களும் அளவு கடந்து தன்னை ஏசுவார்கள் என்கின்றான்.

இதில், சில உண்மைகள் காணப்படுகின்றன. முக்கியமானது குழப்பம் தவிர்ப்பது. நிராகரிப்பாளர்கள் அல்லாஹ்வை ஏசுவதைத் தாங்கிக் கொள்ளாத நம்மவர்கள் அத்துமீறிய நடவடிக்கைகளில் இறங்கி, சாந்தியைப் போதிக்க வந்த மார்க்கத்தை, சண்டை பிடிக்கும் மார்க்கமாகக் கருதவைத்து விடுவார்கள் என்பதுவே! இது மார்க்கத்தைப் பாதுகாக்கும் கடமையும் அல்ல. அல்லாஹ் தனது வேதத்தைத் தானே பாதுகாத்துக் கொள்வதாக 15:9இல் தெளிவாகக் கூறிவிட்டான்.

சிலர், அல்லாஹ் தனது வேதத்தைப் பூரணப்படுத்தாதது போன்றும் தாங்கள் பங்களிப்புச் செய்வது போன்றும் ஓர் மா‌யையை அப்பாவி மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றார்கள். இது ஷிர்க் வரையில் கொண்டுபோய் விடும் பயங்கரத்தைக் கொண்டது. அல்லாஹ் தனது மார்க்கத்தைப் பூரணமாக்கி, தனது அருட் கொடையையும் முழுமையாக்கி விட்டதாகப் பிரகடணப்படுத்தியும் விட்டான். இங்கும் யாரையும் எதற்கும் பொறப்பாளியாக்கவில்லை

அதில் ஒரு எழுத்தை. மாற்றவோ, கூட்டல், கழித்தல், பெருக்கல், பிரித்தல் வேலை செய்யவோ அனுமதி தரவில்லை ஆனால், நபிகளாரையே கடுமையாக இவ்விடயத்தில் எச்சரித்துள்ளமை குர்ஆனின் சிறப்பம்சமாகும். அவன் யாரையும் தனது வேலையில் பங்காளியாக்கிக் கொள்ளவில்லை என்பதைக் காட்டும். குர்ஆனில் எதையும் செய்ய முனைந்தால் உமது வலக்க‌‌ரத்தைப் பிடித்துக் கொண்டு உயிர் நரம்பைத் துண்டித்துவிடுவேன் என்ற எச்சரிக்கை அனைவரதும் கவ‌னத்தை ஈர்க்க வேண்டியதுடன், யாருக்கும் எதனையும் செய்ய முடியாது, அது கடுமையான தண்டனைக்குரிய குற்றச் செயல் என்பதையும் காட்டுகின்றது.

இது இஸ்லாம். யாரும் கூறிக் கொள்வது போன்று இனிய மார்க்கம் அல்ல. இனிய விடயங்களையும் கூறும் மார்க்கம்!புனித மார்க்கம். பூரண மார்க்கம். இலகு மார்க்கம். சிரமம் தராத மார்க்கம். நிர்ப்பந்தமில்லை எனப் பிரகடணப்படுத்திய மார்க்கம். தெளிவான மார்க்கம். தேர்ந்தெடுக்கபட்ட மார்க்கம். மாறாத சட்டங்களைக் கொண்டாலும், காலத்துக்கேற்ப கருத்தை வெளிப்படுத்தும் மார்க்கம். இறுதி மார்க்கம். இறக்கப்பட்ட மார்க்கம். உண்மைப் படுத்தும் மார்க்கம். சாட்சியம் கூறும் மார்க்கம். சந்தேகமற்ற மார்க்கம். கருணையும் கடுமையும் கொண்ட மார்க்கம். தீர்வு தரும் மார்க்கம். வழிகாட்டும் மார்க்கம். பழிக்குப்பழியை அனுமதி தந்த மார்க்கம். மன்னிப்புக்கு முதலிடம் தரும் மார்க்கம். மன்னிப்பும் தரும் மார்க்கம். இம்மை, மறுமை பற்றிப் பேசும் மார்க்கம். ஆத்ம உயர்வை முன்னிறுத்தும் மார்க்கம். அளவுகடக்க அனுமதியாத மார்க்கம் உண்மை‌யைக் கொண்ட மார்க்கம் நன்மையை ஏவும் மார்க்கம். தர்மத்தை வளர்ப்பதாகக் கூறும் மார்க்கம், கடன் கொடுப்பதன் நன்மை பற்றிப் பேசும் மார்க்கம், அனைத்திலும் ந‌டுநிலை, அனைவருக்கும் ஒரு நீதி, பெண்ணுரிமை, சொத்துரிமை ,பரோபகார சிந்தை, நிந்தனை தண்டனைக்குரியது, சொத்தில் சிலருக்குப் பங்கு என வகைதொகையின்றிக் கூறிக் கொண்டே போகலாம்.

இவை நம்மால் அறியப்பட்டால், நாம் அடுத்தவன் விடயத்தில் மூக்கை நுழைக்கும் தேவை ஏற்படாது. முடிந்தால் குர்ஆனில் உள்ளதை, உள்ளவாறு, தேவை கருதி, தேவைப்பட்டோருக்கு அழகிய முறையில் எடுத்துச் சொல்லலாம் இது நீங்கள் அறியாதவர்களாகவிருந்தால் அறிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்பதை ஏற்று நம்மிடம் வருபவர்களுக்கு நாம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட கடமை.

ஆனால் நடப்பதோ வேறு. நாம் இஸ்லாமியப் பணி செய்வதாக நினைத்துக் கொண்டு, அதுதான் இஸ்லாம் என்பது போன்று நடக்கத் தொடங்கி விடுகிறோம் இதனால் நாமும் நன்மை அடைவதில்லை. மக்களும் நன்மை அடைவதில்லை. பிழையான வழிகாட்டலாகி அனைவரும் அடுத்தவனைத் திருத்தும் வேலையை இஸ்லாமாக நினைக்கத் தொ டங்கி, குழப்பத்தை உருவாக்கிவிடுகின்றனர். பிரிவினை தோற்றுவிக்கப்படுகின்றது. வேலை இல்லாத நாசுவன் எருமைக் கன்றைப் பிடித்து சிரைத்தானாம் என்றொரு பழைய மொழி நம்மூரில் புழக்கத்தில் இருந்து வருகின்றது. அந்த நிலையை ஒத்த‌தே இது.

ஆனால் நாம் செய்ய வேண்டியதோ நிறையவே உள்ளன. அது பற்றிய அறிவு இருந்தால் முன்னைய நிலை ஏற்பட்டிராது என்பதால் நமது நிலை பற்றிச் சில வினாக்களை நமது கவனத்திற்காக விடுக்கின்றேன். இது அச்சமூட்டி எச்சரித்தலின்பாற்பட்டது.

கலிமா கூறி விட்டோமா? அதனைத் தொடர்ந்து சாட்சியம் அளித்து விட்டோமா? அதற்கு அங்கீகாரம் கிடைத்து விட்டதா? மறுமையில் இறைவனிடம் நாம் எதனைக் கொண்டு செல்லப் போகின்றோம்? என்ன பதில் கூறப் போகின்றோம்? எந்தக் கையில் பட்டோலை தரப்படப் போகின்றது? நமக்காக யாரும் முன்வரப் போகின்றார்களா? என்பது பற்றிய சிந்தனை இல்லை.

நாமோஅவனுடைய வார்த்தைகளே மேலேறிச் செல்வன என்பது பற்றி கதைத்ததே இல்லை. மறுமைக்கு முன்னர் தொழுகையை நிலைநிறுத்துங்கள்! தொழுகையாளிகளுக்குக்கேடுதான்! நான் எல்லோருடைய பார்வைகளையும் அடைகின்றேன்! இறை நெருக்கத்தை அடைவதற்கான வழியைத் தேடுங்கள்! நீங்கள் மறதியில் இருக்கிறீர்கள்! அதிகமதிகமாக நினைவு கூருங்கள்! என்ற இறை வசனங்களைப் பற்றி சிந்தித்ததே இல்லை.

எந்த இறை வார்த்தைகள் எப்படி மேலேறுகின்றன? தொழுகையை நிலைநிறுத்துவது எப்படி? அல்லாஹ் ஏன் தொழுகையாளிகளுக்குக் கேடு என்கின்றான்? பார்வைகளை அடைந்த அல்லாஹ்வைப் பார்த்துவிட்டோமா! அவன் கூறியுள்ள இறைநெருக்கத்துக்கான வழியை எங்கே யாரிடம் எப்படித் தேடுவது? அல்லாஹ்வைப் பற்றி அறிந்தவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள் என்று கூறியிருப்பது யாரை? நாம் எதை மறந்து இருக்கிறோம்? அவனை எப்படி நினைவுக்குக் கொண்டு வருவது? அத‌ற்கான தேட்டமில்லை. அது பற்றிய அறிவு இருந்தால் மக்களுக்கு அதனைக் கூறும் முயற்சியும் இல்லை.

இவ்வளவு பெரிய சுமை நம்மேல் இருக்கின்றது. இவற்றை இறக்கி வைக்க வழி தேடுவதைவிடுத்து, அடுத்தவன் என்ன செய்கின்றான்? அதில் எப்படிப் பிழை பிடிப்பது? எதனால் வைவது? என்ன பட்டப் பெயர் வைப்பது? என்பவை பற்றிய சிந்தனையே நம்மிடம் மேலோங்கி நிற்கின்றது!

நாம் அவர்களுக்கு உங்களைப் பொறுப்பாளனாக ஆக்கவில்லை என்ற இறை எச்சரிக்கையைக் கூட கிஞ்சித்தும் சிந்திப்பதில்லை. சுத்த நிராகரிப்பு இல்லையா! குளிக்கப் போய் சேறு பூசுவதைவிடக் கேவலமல்லவா! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! ஆக, மறுமையில் நாமே தனித்து நின்று பதில் கூறப் போகின்றோம். அப்போது நமது புகல் மொழிகள் எடுபடா! உங்களுக்குப் போதிய ஆயுளை நாம் உங்களுக்குத் தந்திருக்கவில்லையா என்று கேட்பான்.

இக்கேள்வி, நிச்சயமாக மறுமைக்கு முன் தொழுகையை நிலைநிறுத்திக் கொள்ளுங்கள் என்ற அச்சுறுத்தலை நாம் விடவி்லலையா! நீங்கள் சாட்சியம் கூறியதை மறந்திருக்கிறீர்கள் என்பதனை தூதர்களை, நபிமார்களைக் கொண்டு நினைவூட்டவில்லையா? எல்லோரது பார்வைகளையும் அடைகிறேன் எனக் கூறவில்லையா? இம்மையில் குருடர் மறுமையிலும் குருடரே என எச்சரிக்கவில்லையா! உங்கள் கண்கள் திரைக்குள் இருக்கின்றன என்பதை வலியுறுத்தவில்லையா? முயற்சிக்கு ஏற்பவே பலன் எனக் கூறவில்லையா? பல படிகளைக் கடக்க வேண்டியுள்ளது எனக் கூறவில்லையா? பதவிகளை உயர்த்துபவன் நான் என்று எச்சரிக்கவில்லையா! எனது நெருக்கத்தைத் தேடுமாறு பணிக்கவில்லையா? போன்ற இன்னோரன்ன அறிவுரைகளை நாம் நடைமுறைப்படுத்தாததை நமக்கு குத்திக் காட்டுவதாகவே இருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்!

இப்போதாவது நம்மேல் உள்ள பெரும் பொறுப்பு விளங்குகின்றதா? இவற்றை விளங்காதவர்கள் மீது அல்லாஹ் வேதனையை ஏற்படுத்துகின்றேன் எனவும், விளங்காதவர்களை பூமியில் ஊர்வனவற்றில் மிகமோசமான படைப்பினமாகவும் கூறியிருப்பதன் இரகசியம் இதுவாகவும் இருக்கலாம். அல்ஹம்துலில்லாஹ்!

 

- நிஹா -