57-4 பற்றிய சிந்தனை…. ‘அல்லாஹ் அர்ஷில் நிலையானான்.’

‘அவன் எத்தகையவனென்றால், வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். அர்ஷின் மீது நிலையானான். பூமியில் நுழைவதையும், அதிலிருந்து வெளிப்படுவதையும், வானத்திலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும் அவன் அறிவான். நீங்கள் எங்கிருப்பினும் அவன் உங்களுடைனேயே இருக்கிறான். மேலும் அல்லாஹ் நீங்கள் செய்து வருவதை நன்கு பார்க்கிறான்.’

இவ்வசனம் அல்லாஹ் பற்றியதுதான் என்பது நமக்குப் பெரும் சோதனையாகவும் இருக்கும். அவனை அவனது பண்புகளைக் கொண்டு அறிந்து ஈமான் கொள்ள வேண்டிய நாம், அவனது இருப்பை சாட்சியம் கூறி நமது ஈமானைப் உறுதிப்படுத்த வேண்டிய நாம் அவனை அறிய முனையவே வேண்டும்.

ஆயினும், அது அவ்வளவு இலகுவானதல்ல என்பதால், நமக்கு இலகுவை மட்டும் விரும்பும். நம்மீது அன்பு கொண்ட அல்லாஹ், சிரமத்தை தாராதிருக்க, அவன் பற்றிய செய்திகளைக் குர்ஆனில் பல இடங்களில் பதிவாக்கியுள்ளான். அப்படியல்லாமல் அவனை அறிவதென்பது முயற்கொம்பே! அந்த வகையில் அவனை அவனது பண்புகளைக் கொண்டு அறிவதில் அவனது சொல் ஒன்றே நம்பிக்கைக்கு உரியதும், அதிகாரமிக்கதும், சர்ச்சையைத் தவிர்ப்பதும் ஆகும் என்ற ரீதியில். இக்குர்ஆனையே பயன்படுத்தி உண்மையை அறிய வேண்டியுள்ளது.

மேற்கண்டவற்றை மனத்திலிருத்தியவனாக அவனின் பண்புகளையறிய அவனது வசனத்தின் நோக்கத்தை அறிய வேண்டியுள்ளது. இவ்வசனம் அல்லாஹ்வைப் பற்றியதுதான் என்றாலும், அவன் அர்ஷில் நிலையானான் என்பதனால் குறிப்பிடப்படும நிலையை அறிந்து கொள்வதே நமக்கு இவ்வசனத்தால் வேண்டப்படுவது. இன்றேல், அவன் பற்றிய கருத்தை நாம் பிழையின்றி, அவனது மகத்துவத்திற்குத் தக்கவாறாக அறிந்து கொள்ளமாட்டோம்.

‘அர்ஷின் மீது நிலையானான்’ என்பதற்கு, முன்னதாக அவன் கூறியவையையும், அதன் பின்னராக அவன் கூறியவையையும், மேலும், இவ்வசனங்களின் தொடரான மிகுதி வசனங்களையும், இன்னும் குர்ஆனில் பல்வேறு இடங்களில் பதிவாகியுள்ளவையையும், அவனது திருநாமங்களையும் கூட அறிந்து கொள்வது அவனது பண்பைக் குறைத்துக் கொள்ளாமல், ‘அர்ஷில் நிலையானான்’ என்பதன் பொருளைத் தெளிவாக விளங்கிக் கொள்ள நமக்கு உதவும். இன்ஷாஅல்லாஹ்.

அர்ஷில் நிலையானான் என்பதற்கு மாறுபட்ட கருத்துக்கள் சில நம்மத்தியில் நிலவுதை, நாம் அறியக் கூடியதாயிருக்கின்றது. அந்தக் கருத்துக்களில் எது சரி, எது பிழை என்பதைத் தீர்மானிப்பதற்கு அல்லாஹ் பற்றிய அறிவே அத்தியாவசியம் ஆகின்றது.

இவ்வசனத்தின் தொடக்கமாக அல்லாஹ் தன் தன்மையை, ‘வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்’ என்பதன் மூலம் வெளிப்படுத்துகின்றான். பின்னுள்ள தொடர், ‘பூமியில் நுழைவதையும், அதிலிருந்து வெளிப்படுவதையும், வானத்திலிருந்து இறங்குவதையும், ஏறுவதையும் அவன் அறிவான். நீங்கள் எங்கிருப்பினும் அவன் உங்களுடனேயே இருக்கிறான். இன்னும், அல்லாஹ் நீங்கள் செய்து வருவதை நன்கு பார்க்கின்றான்.’ மேலும், தொடராவுள்ள 10 வரையுள்ள வசனங்கள் அறிதலுக்குரியனவே!

இதற்கும் முன்னதாக உள்ள வசனம் 57:இல் வசனங்கள் 1- ‘வானங்களிலும் பூமியிலுமுள்ளவை அல்லாஹ்வைத் துதிக்கின்றன. அவனே மிகைத்தவன், ஞானமுள்ளவன்’, 2- வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது. அவன் உயிர்ப்பிக்கிறான். அவனே மரணிக்கச் செய்கிறான். அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுடையவன்.’,
3- அவனே முதலாமவனும் கடைசியானவனும். அவன் வெளிப்படையானவனும் மறைவானவனும். மேலும். அவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.’

மேற்கண்டவை உய்த்துணர்ந்து அறியப்பட்டாலே அவன் அர்ஷில் நிலையானான் என்ற தொடருக்குரிய கருத்தை உணர முடியும். அன்றேல் அவன் அர்ஷ் என்ற ஒன்றைத் தனது இருக்கையாகக் கொண்டு அமர்ந்து இருக்கின்றான் என்ற தவறான சிந்தனைக்கு இட்டுச் செல்லும். அவன் ஒவ்வொரு ஷணமும் ஒவ்வொரு மாட்சிமையில் இருக்கிறான் என்பதுவம் அவனது வாக்கே.

இந்த ஆய்வுகளுக்குச் செல்லுமுன், அவன் யாருடைய தேவையும், எதனுடைய தேவையும் அற்றவன் என்ற அவனது திருநாமங்களை அறிந்தால், அவனுக்கு அர்ஷ் என்றால் சிம்மாசனம், அதில் அவன் நிலையானான் என்ற நிலைபாடுகள் தானாக வலுவிழந்துவிடும்.

மேலே இறுதியாகக் கூறிய, அவன் முதலாமவன், கடைசியானவன் என்பதை அறிந்தால், அர்ஷ் என்ற ஒன்று படைக்கப்பட்டிராத நிலையில் அவன், தான் மட்டும் இருந்த நிலையில் எதனில் நிலையானான் என்ற கேள்வியை எழுப்பி நிற்கும்.

இன்னும் தொடர்ந்து வரும் அவனது திருநாமங்களான ளாஹிரு, பாத்தினு ஆகிய வெளியானவன், மறைவானவன் என்பவை அவனது நிலையை அறிய உதவும்.

குர் ஆனில் பிறிதோரிடத்தில், நீரிலிருந்தே அனைத்து உயிரினங்களையும் படைத்தான் எனக் கூறியவன், அவனது ஆட்சி முன்னர் நீரின்; மீதிருந்தது என்கின்றான். ஆயத்துல் குர்ஸி என்ற அனைவராலும் அழைக்கப்படும் 2:255 வசனம் அவனது குர்ஸ் என்ற சிம்மாசனம் வானம் பூமிகளை அடைய வளைந்துள்ளதாகக் கூறுகின்றது.

50:16ஆம் வசனத்தில், அல்லாஹ் நமது ஊரிதா (Jagular vein) நரம்புக்கும் மிக அருகாமையில் இருக்கிறான், என்கின்றான். 6:103ஆம் வசனத்தில் பார்வைகள் அவனை அடைவதில்லை, அவன் எல்லோருடைய பார்வைகளையும் அடைகின்றேன் என்கின்றான்.

அவனைப் போன்ற எப்பொருளும்; இல்லை என்ற 42:11 வசனம் எவருடைய கற்பனைக்குள்ளும் அவனை அடக்கிட முடியாது என்பதை ‌ஐயமறக் காட்டுகின்றது. இந்நிலையில் “அர்ஷ்“ என்று அவன் கூறியுள்ளமையை ஒரு குறிப்பிட்ட வடிவம் கொண்ட ஒன்றாறகப் பார்க்க முடியாது என்பது தெரிய வருகின்றது.

43:82 வானங்கள் மற்றும் பூமியினுடைய ரப்பும்,“அர்ஷுடைய ரப்புமானவன்“ அவர்கள் வர்ணிப்பதைவிட்டும் மிக்க தூயவன். சுபுஹானல்லாஹ். இதன்படி, அல்லாஹ் தன்னைப் பற்றி அனைவரும் கூறுகின்ற, -குறிப்பாக அர்ஷையும் உள்ளடக்கி,-அவனை அவன் பண்புகளாக வர்ணிக்கப்படும் அனைத்தையும் மறுக்கிறான்.

7:7இல் “நிச்சயமாக நாம் மறைந்திருக்கவில்லை“ எனக் கூறியிருப்பது அவன் வெளிப்படையானவன் என்பதை உறுதிப்படுத்துவதோடு, அவன் எங்கோ ஓரிடத்தில் நிலையாக இருப்பதாகக் கூறவில்லை

57:4, 58:7 வசனங்களில் நீங்கள் எங்கிருப்பினும் அவன் உங்களுடனேயே இருக்கிறான் என்பது அவனது இருப்பை அறிந்து கொள்ள, அர்ஷில் நிலையானான் என்ற கருத்தையடைய உதவும். இன் ஷா அல்லாஹ்.

நிச்சயமாக அல்லாஹ் மனிதனுக்கும், அவனது இதயத்திற்கும் மத்தியில் சூழ்ந்துஇருக்கின்றான் என்ற 8:24 வசனம் மேலும் நம்மை சிந்திக்க வைக்கின்றது. 51:21 என்ற வசனம், உங்களுக்குள்ளேயும் கவனித்துப் பார்க்க வேண்டாமா என நம்மை அவனைக் கண்டு கொள்ளும் நிலையைக் காட்டும் அதே வேளை, அர்ஷ் பற்றி சாதாரணமாக மக்கள் மத்தியில் கொண்டுள்ள கருத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றது.

இதற்கு முன்னர், உயிரினங்கள் நீரிலிருந்தே படைக்கப்பட்டன எனக் கூறியதிலிருந்தும், தனது ‘அர்ஷ்’ நீரில் இருந்தது எனக் கூறியதிலிருந்தும், அர்ஷ் என்ற பதம் (ஆட்சி) அல்லாஹ்வால் என்ன நோக்கத்திற்காகப் பாவிக்கப்பட்டது என்ற உண்மை வெளியாகின்றது அல்ஹம்துலில்லாஹ்!.

இப்போது, வசனத்திற்கு மீண்டால், ‘குன்’ எனக் கூறியதால் ஆறு நாட்களில் படைப்பு முடிந்து அதன்பின் ஆட்சியில் நிலையானமை தெரிகின்றது. அதாவது அல்லாஹ் எதனையும் படைக்காதிருந்தால் ஆட்சி செய்யும் வேலை இருந்திருக்காது. ஆதலால், படைப்பு முடிந்ததும் ஆட்சியில் நிலையாவது என்பது, பரிபாலித்தல் என்ற தனது தொழிலைச் செய்வதே என்ற முடிவிற்கு வரலாம் இதனை நாம் வழக்கிலுள்ள சிம்மாசனமேறினான், சிம்மாசனத்தில் அமர்ந்தான், ஆட்சியில் அமர்ந்தான் போன்ற தொடர்களால் விளங்கிக் கொள்ளலாம்.

தான் அனைத்தையும் படைத்ததைக் கூறி, படைப்பின் பின்னர் அர்ஷில் நிலையானதைக் கூறி, அதன் பின்னர், பூமியில் நுழைவது, வெளிப்படுவது, வானத்திலிருந்து இறங்குவது, ஏறுவது போன்றவற்றை அறிந்தவனாக இருப்பதைக் கூறி, மேலும், நீங்கள் எங்கிருப்பினும் உங்களுடனேயே இருக்கிறான், அத்தோடு நீங்கள் செய்வதையும் பார்த்துக் கொண்டிருக்கின்றான் எனக் கூறி முடிக்கின்றான்.

மேற்கண்டவை, நாம் எவ்விதத்திலும், அவன் எங்கோ இருக்கின்றான் என்ற எண்ணத்தை உண்டாக்கிவிடக் கூடாது என்பதற்காகவே, அவன் எங்கெல்லாம் இருக்கிறான் என்பதை அர்ஷில் நிலையானதோடு இணைத்துக் கூறியதிலிருந்து நாம் அறிந்து கொள்ளாவிட்டால், அல்லாஹ் எளிதாக்கிய குர் ஆனை நாம் அறியாலிருப்பதன் அறியாமையை உணர்ந்து கொள்ள முடியும்.

நாம் திட்டமாகக் குர்ஆனை நல்லுணர்ச்சி பெறுவதற்காகவே எளிதாக்கி வைத்துள்ளோம். ஆகவே, படிப்பினை பெறுவோர் உண்டா?

- நிஹா -