மரம் ஒரு வரம் –  அறிவோம், மறவோம், மதிப்போம்!

 

நிழலையும் தரும் பச்சை மரந்திலிருந்துதான்
நெருப்பையும் தந்தான் இறைவன் என்ற
முத்தான உண்மையை சத்தான வித்துவம் தந்து
எரித்து மகிழ விறகாயும் மாறியது மரம்தான்

எட்டமுடியா நெட்டையாக வளர்வதும் மரம்தான்
தொட்டிடுமளவு குட்டையாய் மாறுவதும் மரமேதான்
கட்டிப் பிடிக்க முடியா பெருக்காய் வளர்ந்ததும் மரம்தான்
வெட்டிட முடியா பெரு வைராமாய் மாறியதும் மரம்தான்! 

தரையில் கொடியாய், செடியாய் பற்றையாய்
முற்றம் மறைக்கும் பச்சைப் புற்றரையாய்
கொற்றம் அமரும் கவினுறு சிம்மாசனமாய்
சற்றும் சரியா செங்கோலானதும் மரமே!

முற்றும் துறந்தவர் கையிலும் மரம்தான்
கற்றுத் தெளிந்தவர் கையிலும் பிரம்பாய் மரம்தான்
ஊற்று மையை எழுத்தாய் வடிப்பதும் மரம்தான்
ஒற்றி மையகற்றும் ஒற்றுக்கடதாசியானதும் மரம்தான்

நிலத்தின் பிரசவமும் மரம்தான்
களத்தில் தேரானதும் மரம்தான்
தளத்தில் தரையாவதும் மரம்தான்
தாளத்தில் மத்தளமானதும் மரம்தான்

வனமெனப் ‌பேர்பெற்றதும் மரம்தான்
வடிவழகான பஞ்சோலையாய் மாறியதும் மரம்தான்
நெடிதுயர்ந்து தோப்பாய் மாறியதும் மரம்தான்
கொடியாய்மாறி பந்தலில் காய்த்ததும் மரம்தான்

வந்தனை செய்வோருக்கு சிலையாய்
வணங்கிடவடிவெடுத்ததும் மரம்தான்
மந்தார புத்தியாளர் சந்தானமழித்திட
வேரோடு வெட்டிச் சரிப்பதும் மரம்தான்

இயேசுவை ஏற்றிட சிலுவையானதும் மரம்தான்
பேசிப் புகிழ்ந்திடும் பெரும் கொலுவானதும் மரம்தான்
மாசுபோக்கிக் காற்றை வீசி உதவுவதும் மரம்தான்
வாசிக்கும் பத்திரிகையாய் கையில் தவழ்வதும் மரம்தான்

ஏந்திழையாருடன் இணைந்தே தூங்கிடக் கட்டிலானதும் மரம்தான்
சேர்ந்துபடுத்திட இதமான மஞ்சமான பஞ்சைத்தந்ததும் மரம்தான்
சந்தம் தவறாது இசையைத் தருவதும் துளையிட்ட மரம்தான்
கந்தையாய் மானத்தை மறைத்திடும் ஆடையானதும் மரம்தான்

கப்பலாய் மாறி கடலில் மிதந்ததும் மரந்தான்
கடலைக் கடந்திடும் பாலமாய் மாறியதும் மரந்தான்
கப்பலில் பாயாய் மாறி பயணத்திலுதவியதும் மரந்தான்
பாடலில் பரதனின் ஆட்சியிலமர்ந்ததும் இராமனின் மிதயடிதான்

புலக்கடையில் உரலானதும் பெருமரம்தான்
வலக்கையில் உலக்கையாய் நீண்டு இடிக்க உதவுவதும் மரந்தான்
கலக்கிக் கடைந்து வெண்ணெய் எடுக்கும் மத்தானதும் மரந்தான்
இளக்கியடித்து மட்டையில் தும்பைப் பிரிப்பதும் மரந்தான்

பாரம் ஏற்றிடும் பரக்கரத்தையானதும் மரந்தான்
வீரம் விழைத்திட போர்க்களத்தில் தேராய் ஊர்வதும் மரந்தான்
தாரம் தலையி்ல் சீப்பாய் அமர்வதும் மர்ந்தான்
தூரமளந்திடும் அளவகோலாய் மாறியதும் தடிமரந்தான்

காரந்தரும் மிளகாய் காய்ப்பதும் மரந்தான்
காரமகற்றும் இனிப்பைத் தருவதும் கரும்பாம்
முறமாய்மாறி புலியை விரட்டியதும் மரந்தான்
உரமாய் மாறி மீண்டும் படைப்பிலுதவுவதும் அதுதான்

புத்தன் அமர்ந்து ஞானமடைந்ததும் மரந்தான்
பித்தம் தெளிந்திடும் மருந்தைத் தருவதும் மரந்தான்
வித்தை காட்டிடும் வில்லாய் வளைந்ததும் மரந்தான்
வேந்தன் கையில் வேலாய் சிறப்பதும் மரந்தான்

உழுபவன் கையிலும் ஏரென்று பெயர் பெற்றாய்
எழுபவன் கையிலும் கோலென்ற பெயருற்றாய்
தழுவித் தன்னில் ஏறுபவன் காலிலும் தளை என்றாய்
கழுவிலும் காலனாய் இழிவுற்றாய் மரமே!

ஆலயத்தில் அர்ச்சனையிலும் அருகம்புல்லானாய்
சரணாலயமாகி சாந்தி தரும் மரக்காடானாய்
கோணலாகி எறிந்தவனிடம் வரும் வளை தடியானாய்
காணிகளிலும் எல்லைகாட்டி அரண் வரியானாய்!

மழைபெய்ய உதவி மனிதரைக் காப்பதும் மரந்தான்
மாலையாகி மனிதரை மதிப்பேற்றுவதும் பூநாரும் தரும் நீதான்
வாலைக் குமரிகள் சூடத் தருவதும் மரந்தான்
எழுத்தோலையாய் மாறி கருத்தை சுமப்பதும் மரந்தான்!

விருந்து படைத்திட மேசை தந்ததும் மரந்தான்
இருந்து அருந்தி மகிழ்ந்திட ஆசனமானதும் மரந்தான்
மருந்து மூலிகையாகி மனிதரைக் காப்பதும் மரந்தான்
வருந்தி வருவோனுக்கு இருந்து ஆறிடஉகந்து நிற்பதும் நீதான்!

இறைவன் படைப்பினில் இணையிலாதவற்றுள் ஒன்றும் மரந்தான்
ஊரார் வாழ்ந்திட உறைவிடமாய் உழைப்பதும் மரந்தான்
வேராய்ப் பரந்து சீராய் நிலம் காப்பதும் மரந்தான்
கூராய் ஆக்கிட தேய்ந்து தொலைவதும் மரந்தான்!

இறப்பிலும் பாடையாய் பிறப்பிலும் தொட்டிலாய்
இறப்பர் தருவதிலும் சிறப்புறு இடம் பெற்றாய்
மறுப்பரோ மறப்பரோ ஆனால் மறந்தான் இவை
மரந்தான் என்பதால் இழிந்தான் மனிதன்!

பாயாய் மாறிப் படுக்க உதவியதும் மரந்தான்
நோயால் வாடியபோது தாயாய் உதவியதும் அதுதான்
மாயாது மீண்டு மரமாய் அவதரித்து மண்ணில்
ஓயாது உழைத்து உலகை உய்விப்பதும் மரந்தான்!

காயாய், கனியாய், களியாய், கறியாய் புரியாப் பலதாய்
காய்ந்தும், இறந்தும், கருகிக் கரியாகியும்
தேய்ந்தும், தோய்ந்தும், பாய்ந்தும், பணிபல செய்தும்
ஓய்ந்தும், உலர்ந்தும், ஓய்வின்றி மிதந்துதவுதும் மரமே!

வெட்டிப் பார்த்தால் சில தான் வாழ்ந்ததைக் கூறும்
விட்டே சில ஓலைக் கணக்காய் தன்காலம் கூறும்
நட்டே வைத்தால் திட்டமாய் உழைக்கும்
கெட்டே அழிந்திடினும் நட்டம் விளைத்திடாது மரம்!

பட்டமாய்ப் பறக்கும் கட்டையாய் மிதக்கும்
பட்டறையிலும் தட்டும் தடுக்கும் தன்னையும் அழிக்கும்
ஏட்டிலும் கூட்டிலும் றோட்டிலும் காட்டிடும் பயணிக்குமிடத்தை
தோட்டிகள் கையிலும் துடைப்பமாய்ப் பெருக்கும்!

கட்டி த் தழுவுதலால் கால் சேர ஏறுவதால் என்ற
பாட்டால் கவிஞன் கண்ணில் வேசி வடிவெடுத்தாய்
வெட்டி வடிப்பதால் கருச்சிதைவுக்கும் ‌ஆளாவாய்
வாடி வதங்கினும் வர்ணங்களும் காட்டி நிற்பாய்!

இத்தனையும் செய்யும் மரத்தை ஏனோ நெடுமரமென
வித்தகி அவ்வை கண்டாளோ மனிதனை !
முத்தும் விளையும் முதுசம் பெற்ற மரத்தினை
கத்திப் பிடியாக்கி வெட்டி வீழ்த்திடச் செய்வதும் நாமே!

மேய்ச்சலிலும் ஏய்த்திடாது நிதமும் விலங்கினத்தை
வேய்ந்திடவும் தந்து வாய்த்திடுவாய் கூரையாய்
காய்த்திடாவிடினும் சில மாய்த்திடும் தன்னைத்தந்து
காய்ச்சிடினும் சில கஷாயமாய் காக்கும் நமை!

அரிந்தாலும் பலகையாய் வரிந்தாலும் வேலியாய்
சரிந்தாலும் இருப்பாய் பிரிந்தாலும் பெட்டியாய்
கரிந்தாலும் நெருப்பாய் கரியாய் நேர்மையாய்
திரிந்தாலும் கயிறாய் பெருமை பெற்று நிற்பாய்!

காற்றில் ஆடியே கழிவுக் காற்றைச் சுவாசித்து
மாற்றித் திருத்தி மாசு அகற்றி மனிதருக்குதவி
போற்றிப் புகழ்ந்திட புதுவாழ்வு தந்திடும் மரமே
தோற்றிடா வாழ்வை தேற்றியே தருவாய்!

மரந்தரு பயனை மறந்திடல் நன்றோ
மறந்திடில் நாமும் மனிதராவோமோ
சிறந்திடும் உழைப்பால் உயர்ந்த மரத்தைவிட
சிறுத்திடுதல் நமக்கழகோ அதனை அழித்து!

– நிஹா -