மார்க்க போதனை என்ற பெயரில் அன்பு அழிக்கப்படுகின்றதா! வம்பு வளர்க்கப்படுகின்றதா!
அன்பு உலக மார்க்கம் என்று கூறின் அது மிகையல்ல. அல்லாஹ் தன்னை நிகரற்ற அன்புடையவன் என விழிப்பதில் இருந்து அன்பை உலக மார்க்கம் எனக் கூறின் அது மிகையல்ல என்பது தெளிவு. அன்பு பற்றி எது பேசவில்லையோ அது மார்க்கமும் அல்ல. அன்பு காட்டாதவன் மனிதனுமல்ல, இறைவனுமல்ல! அன்பே சிவம் என்போரும் உண்டே! அன்புதான் இன்ப ஊற்று என்று ஆதங்கப்பட்டவன் அசோகச் சக்கரவர்த்தியே!
உலகில் ஒரு பொதுவான வரியற்ற, ஆனால் முகபாவம் என்ற வரிவடிவமுடைய பாஷையை இறைவன் படைத்திருக்கிறான் என்றால், அது அன்பு என்ற பாஷையே தவிர இல்லை.
அன்பை மிருகங்கள், பறவைகள் அனைத்தும் உணருகின்றன. அன்பு செலுத்தும் மனிதனிடம் மிருகங்கள், பறவைகள் அனைத்தும் மிகவும் நெருங்கிப் பழகி, மிகமிக நெருக்கமாகவே நடந்து கொள்கின்றன. மனிதர்களின் சொல்லைக் கேட்டு நடக்கின்றன.அவர்களின் அழைப்புக்கு பதிலிறுக்கின்றன. பயங்கரமான காட்டு மிருகங்கள்கூட அன்பு செலுத்தத் தவறுவதில்லை. அதே வேளை பிறர் தம்மேல் செலுத்தும் அன்பை உணரத் தவறுவதுமில்லை. தம்மில் அன்பு செலுத்துவோரிடம் தம்மை அடகு வைப்பதைக் குறைவாக எண்ணுவதுமில்லை. அன்புக்கு நான் அடிமை என்கின்றதோ!
அவை மற்றைய மிருகங்கள், பறவைகள், மனிதர்களிடம்கூட அளவுக்கு அதிகமாகவே தமது அன்பைப் பரிமாறிக் கொள்கின்றன. சில மிருகங்கள், தம்மினம் சாராத மிருகங்களுக்குப் பாலூட்டவும் செய்கின்றன என்றால் அன்பின் அளவை அளவிட முடியாது, அது எங்கும் கொட்டிக் கிடக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ளலாம் அல்லவா!
அன்பை உடனடியாக வெளிப்படுத்துவதில் முக்கிய பங்கை மனிதரில் ஏற்பது முகமே! ஆம் முகத்தில் ஏற்படும் முகபாவம் அடுத்தவரை நம்மில் ஈர்த்து விடுகின்றது. அடுத்தவர் முகத்திலும் அந்த அன்பின் ரேகைகளை உருவாக்கி விடுகின்றது. இந்நிலை ஏற்பட எவ்வித பௌதிகத் தொடர்பகளும் தேவையில்லை.
அடுத்து மௌனமாக அன்பு மொழி பேசிக் கொள்கின்றன. அதன் தொடராக வாயிலிருந்து புன்னகை தவழ்ந்து விடுகின்றது. இவை எல்லாம் இறைவன் நம்மத்தியில் ஏற்படுத்தியுள்ள அன்பின் பிணைப்பு என்ற அறியும் போது, நம்முள்ளம் அந்த வல்ல நாயனைப் புகழ்ந்து துதி பாடுகின்றது. அவன் அன்பாளனாக மட்டும் இருந்து விடாது, அன்பின் ஊற்றை அனைவரிலும் பெருக்கெடுத்து ஓடச் செய்துள்ளான் என்று நினைக்கும் போது அவனது அளப்பரிய அருளின் வெளிப்பாடு புலப்படுகின்றது. ஆம் அருளாளனும்தான்.
ஆனால், இன்றைய நிலையில் அன்பைத் தேடி உலகோர் அலைந்து கொண்டிருக்கின்றனர் என்பதைப் பார்க்கும் போது ஒரு குழப்ப நிலையே தோன்றுகின்றது. அன்பை அனைத்து மதங்களும் போதிக்கின்றன என்பதை அனைவரும் அறிந்துள்ளோம். அதேவேளை உலகில் மிகக் குறைந்த எண்ணிக்கை உடையோரைத் தவிர மற்றைய அனைவரும் ஏதோ ஒரு மதம் சார்ந்தவர்களாகவே உள்ளனர் என்பதும் மறுக்க முடியா உண்மையே!
அப்படியாயின், மக்கள் அன்பைத் தேடி அலைகின்றனர் என்று பார்ப்பபோமாயின், அதற்கு வெளிப்படையான சில காரணங்கள் இருந்தாலும், மறைமுகமான காரியம் பெரும் காரணியாகி உள்ளதை மறுக்க முடியாது. ஆம், மதத்தை அறிந்து, அதன் போதனைகளை நன்கு விளங்கி, அடுத்தவனுக்குத் துன்பம் இழைக்கக் கூடாது என்ற கட்டளையை சிரம் ஏற்றால், வக்கிர எண்ணங்கள் விலகி, அன்பு தளிர்விடும். மதத்தைப் பின்பற்ற வேண்டியோர், மதத்தைப் பாதுகாக்கும் கடமையை வலிந்து தமதாக்கிக் கொண்டு, அடுத்தவர் மதத்தைப் பழிப்பதும், அடுத்த மதத்தவரை எதிரிகளாகக் கணிப்பதும், வேண்டாத கருத்துக்களை வெளியிடுவதுமாக இருந்து கொண்டு இருப்பதுதான் என்பதே உண்மை நிலை.
இறைவன் தனது வேதத்தை இறக்கியருளி, அவற்றைப் போதிப்பதற்கு, மனிதரில் இருந்தே தான் தேர்ந்து எடுத்த அன்புள்ளம் கொண்ட தூதர்களை அனுப்பி, தனது தூதுச் செய்தியை சேர்ப்பித்தான். அப்புனித கைங்கரியத்தைச் செய்யும் போது, அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் தனது கருத்தை மக்களுக்குக் கூறுவதற்கு மேல் திணிப்பதற்கு அனுமதி கொடுக்கவில்லை. ஏற்பவர்களுக்கு மட்டும் இறை வேதத்தை பறை சாற்றும்படி கூறினானே தவிர, இம்சைப்படுத்தி ஏற்றுக் கொள்ளச் செய்வதை அனுமதிக்கவில்லை. மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை எனவும் அழகாகக் கூறி வைத்தான்.
மேலும், அடுத்தவர் கடவுள்களை ஏசாதீர்கள், அவர்களும், மாறாக, வரம்பு கடந்து தன்னையும் பேசுவர் என்ற, கடவுளரைத் திட்டுவதற்கு தடை விதித்துள்ளான. தர்க்கம் செய்ய வேண்டிய சந்தர்ப்பங்களில் மிகச் சிறந்த முறையில், அழகான வார்த்தைகளைக் கொண்டு வாதம் செய்யும்படி கூறியுள்ளான். மிகச் சிறந்த நன்மையைக் கொண்டு தீமையைக் களையும்படி கூறியுள்ளான். அப்படிச் செய்யும் போது எதிரிகளும் நன்பராகி விடுவர் என்ற ஓர் உயர் தத்துவத்தை வெளிப்படுத்துகின்றான். ஆக, தீமைகளைக் களையும் சந்தர்ப்பத்தைக்கூட மிகச் சிறப்பாக நன்மையைச் செய்வதன் மூலம், அன்பு பரிணமிக்கச் செய்யும் வழியை இறைவன் அழகாக எடுத்தியம்பி உள்ளான்.
ஒருவன் பாதிக்கப்பட்ட நிலையில்கூட தகாத வார்த்தைகளைக் கூறுவதற்கு அனுமதி தந்தவன், அதில் அளவு கடந்து விட வேண்டாம் என்று கூறியுள்ளமை படிப்பினையாகும். பாதிக்கப்படுபவனின் உரிமை மறுக்கப்பட முடியாது என்ற உயர் நோக்கின் போதுகூட கட்டுப்பாடு விதிக்கப்படுகின்றது. இவை அனைத்தும் சிந்திப்போருக்கு நிறையவே உண்மைகளை வெளிப்படுத்துவன.
இன்று இவ்வுலகில் மதப் பிரச்சாரங்களில் ஈடுபடுவோராலேயே அதிகமான அத்துமீறல்கள், சர்ச்சைகள், குழப்பங்கள், சண்டைகள் ஏற்படுத்தப்படுகின்றன எனக் கூறின், அது மிகையல்ல. மதத்தில் உள்ள கருத்துக்கள் பகிரங்கப்படுத்தும் நோக்கில் பிறரறியச் செய்வது ஒன்றே முடிந்தவர்களின் மீது கடமை. அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் போதிய அறிவு, பொறுமை, அன்பு, சாந்தம், அமைதி, எடுத்தியம்பும் முறை போன்றவை இன்றியமையாதவை.
இந்நிலையில்கூட பிரச்சினைகள் ஏற்படுவதனைத் தவிர்ப்பதற்காக, இறைவன் உங்கள் மார்க்கம் உங்களுக்கு, எங்கள் மார்க்கம் எங்களுக்கு என்று விட்டுக் கொடுத்து விலகிவிட அறிவுறுத்துகின்றான். அப்படி விலகிக் கொள்ளம் போதுகூட, அன்பான முறையில், உங்கள் மேல் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக என்ற கருத்துள்ள ஸலாமைக் கூறி விலகும்படி கூறுகின்றான் என்றால், மார்க்கம் அன்பிற்குத் தந்துள்ள முக்கியத்துவம் தெள்ளிதிற் தெரிகின்றது.
தற்போது பிரச்சாரங்களில் ஈடுபடுவதாகக் கூறி, தமக்கென ஒரு பெயரையும் சூடிக் கொண்டதன் மூலம். அடிப்படையிலேயே பிரிவினையை வெளிப்படுத்துவோர் பிரச்சாரத்தின் போது நடந்து கொள்ளும் முறை சகிக்க முடியாதது. மாற்றுக் கருத்துக் கொண்டோரைச் சுட்டுத் தள்ளிய பயங்கரவாதக் கும்பல்களுக்கும், இவர்களுக்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை என்ற அளவிற்கு நடந்து கொள்கின்றனர்.
தீயினாற் சுட்டபுண் ஆறினும் ஆறாதே, நாவினாற் சுட்ட வடு என்ற குறள் வெளிப்படுத்தும் ஆறாத ரணங்களைத் தமது வார்த்தைப் பிரயோகங்களால் மாற்றுக் கருத்துக் கொண்டோரில் விளைத்து விடுகின்றனர். கேலி, கிண்டல், நையாண்டி, பட்டப் பெயர், போன்றவற்றோடு, அச்சுறுத்தல்கூட விடுக்கப்படுகின்றது என்பதை நினைக்கும் போது, அன்பை வளர்க்க வேண்டிய மதம், எந்தளவு அராஜக நிலையைத் தொற்று நோய் போன்று தோற்றுவிக்கின்றது என்பது புரியும். இது இன்றைய மதபோதனைகளில் ஈடுபடுவோரால் தோற்றுவிக்கப்படும் நிலை.