தேன் சர்வலோகிலும் சர்வரோக நிவாரணி!

 

 

உடல் கட்டியையும் உடைக்கும்
உடற் காயத்தையும் ஆற்றிவிடும்
மட்டற்ற சேவை மகிழ்வாகச் செய்து
கெட்டிடாது உதவும் கேடும் விழைக்காது!

களைப்பையும் எளிதாய்ப்போக்கிவிடும்
இளைப்பு தரும் சளியையும் அழித்து விடும்
சோர்வையும் அகற்றி சோம்பலைப் போக்கி
பார்வையைத் துலக்கிடும் பயன்தரும் நாளும்!

தேனின் சிறப்புகளைக் குர்ஆனும் கூறிநிற்கும்
மேதினியில் தேனின் பெருமைகளை யாரும்
ஓதி முடியா உலகுள வரை என்பதனால்
ஓதிடுதே குர்ஆனும் சர்வரோக நிவாரணியென!

பாரெங்கும் கிடைக்கும் பட்சபாதமின்றி
ஊர் பேரைப் பாராது நீர் போன்று கிடைக்கும்
கார் போல உலகெலாம் வீறு கொண்டு
அரு மருந்தாகி விருந்து படைக்கும் !

பழுதிடாது காத்து உணவை பலகாலம் வைக்கும்
எழுதிட இயலாது பழுதிலா அதன் பெருமை
வழுவிலாத உணவாகி பாரில் முன்னிற்கும்
கிளை மலை தாண்டி பொந்திலும் காணலாமே!

வீணில் அலையாது நானிலத்தில் தேனீ
வானில் பறப்பதே கனிமலர்கள் தேடியே
கானில் திரிந்தாலும் கோணிடாது தன் போக்கில்
நாணித் தலைகுனியனும் நாமதனைக் காணில்!

மலர்களில் பெற்றே மருவிலா வயிற்றில் சுமந்தே
தளர்வின்றி சேர்த்து தன்மையையும் போற்றி
அயர்வின்றி ரீங்கரித்து அசல் தேனாய் மாற்றி
உயர் பயனை நல்கி உவகை தரும் நமக்கு!

 

- நிஹா -