ஹை கூ வில்
பேனா பேசினால்….
பேனா
பேசினால்
எழுத்தாம்!
பேனா
விசித்திரமாக
சித்திரமாகும்!
எழுத்துக்கள்
பேசினால்
எல்லாம் விளங்க வரும்!
பேனாவின்
பிரசவம்
பிழையறு அறிவாகனும்!
பிழையறு அறிவானாலது
விலையறு
செல்வமாகும்!
பேனாவும் நோனாவும்
பிரசவிக்காவிடில்
சமனே!
மைகொள்ளாப் பேனாவும்
கருவுறா நோனாவும்
பையவே இழிவைடைவர்!
பேனாவிற்கு சுயமில்லை
தோணாமலே
எழுதித் தள்ளும்!
அறிவை வெளியாக்கின்
அறிவாளியென
ஆக்கிவிடும்!
அறிவிலிகளின்
பேனா உண்டுபண்ணும்
அழிவுதனை!
வெல்லவும் செய்யும்
பேனா வேதனையைச்
சொல்லவும் செய்யும்!
அறிவை வரியாக்கும்
பேனாவோர்
அற்புதப் படைப்பு!
அறிவை விலையாக்கும்
அற்புதம் செய்வதும்
பேனாவே!
கற்றுக் கொடுத்தவன்
இறைவன்
பேனாவால் எழுத!
குர்ஆனை மட்டுமேனோ
பேனாவால்
எழுதவில்லை!
தூதையும் சொல்லும்
பேனா விட்டதா
காதல் சொல்லாமல்!
எண்ணத்தை வரியாக்கி
இதயத்தைக் கொள்ளையிட்டு
தன்னையழிக்கும் பேனா!
காகிதம் காணா வேளை
காதிலும் தூங்கும்
பேனா!
நிறம் மாறினாலும்
பேனா அதன்
தரம் மாறாது!
உருமாறினாலும்
பேனா எழுதிடும்
வரிமாறாது!
மை இல்லா வேளை
இயங்காமலே
மயங்கி நிற்கும்!
முனை போனால் மட்டும்
சுணையின்றிக்
கொட்டிவிடும்!
பேனாவின் காதலியே பேப்பர்
ஆனாலும் எழுதிவிட்டால்
அவளை விட்டு நீங்கிவிடும்!
நீதியை நல்கும் பேனா
சேதிகளில்
பொய்யும் சொல்லும்!
நீதியென்ற பெயரில்
அநீதிகளையும்
பதிந்துவிடும்!
அழகான தமிழை
இழிவாக்கி எழுதிடவும்
பழிபாவத்தில் உதவிடுதே!
பழிவாங்கும் எழுத்துக்களை
ஒளியாமல் செய்தே
பலி கொள்ளவும் உதவிடுதே!
பேச்சுக்கள் மாறாமல்
ஏச்சுக்கள் தொடராமல் உதவிடுமே
எழுத்தாகி ஒப்பந்தமாய்!
உரிமைதனை நிலைநாட்ட
உறுதியெனப் பெயர்வாங்கிட
உதவுவதும் பேனாவே!
இப்போதெல்லாம் பேனாவுக்கு
இதமாக ஓய்வுதர
வந்ததே தட்டச்சு கணினி!
கையொப்பமிட மட்டும்
கருத்தாகத் தன்னிடத்தை
நிறுத்திடுமே நாளும் பேனா!
ஊற்றுப் பேனா
மறைந்து
உருள்முனைப் பேனாவாச்சு!
தோற்றுப் போனதா
ஊற்றுப் பேனா
கூற்றுப் போல் வந்ததாலே!