அல்லாஹ் செய்வதை மனிதன் செய்யலாமா! அல்லாஹ் செய்வது போன்று மனிதனால் செய்ய முடியுமா!

 

மேற்கண்ட இரு வினாக்களும் நமது செயற்பாடுகளைத் தீர்மானிப்பதில் மிகவும் வேண்டற் பாலனவாகவே நான் கருதுகின்றேன். வேண்டற்பாலன என்ற சொல்லோடு அவ்வசனங்களின் கருத்தை மட்டுப்படுத்திவிடவும் என்னால் முடியாது. காரணம், அவை அல்லாஹ்வால் நமது கடமையாகக் கூறப்பட்டும் உள்ளன என்பதுதான்.

இவற்றை அறியும் முன்னர் பின்வருவனற்றை அறிவது, இவ்வேலைகளை மனிதர் செய்வது, இறைவனைப் போன்று நாமும் செய்வது என்ற நிலையை வருவிக்கும் என்ற கருத்தாக கற்பனை செய்யப்பட்டு, அதனைச் சிலர் மக்கள் மத்தியில் பரப்பி, அவை ஷிர்க் என்ற இணைவைத்தல் என்பதையும் கூறி வருவதனால் ஏற்பட்டுள்ள குழப்பத்தில் இருந்து விடுபடவும் உதவும்.

இப்படிக் கூறுவோர் லா இலாஹ இல்லல்லாஹு என்ற ‘அல்லாஹ்வைத் தவிர இலாஹு இல்லை’ என்ற கலிமாவின் தூய பொருளை உணராதிருப்பதேயாகும். அப்படி அவர்கள் உணர்ந்திருப்பார்களேயானால், இது போன்ற ஒரு குறை சிந்தனை அல்லாஹ்வின் விடயத்தில், அத்தோடு கலிமாவிலும் எழுந்திராது. இந்த சிந்தனையே முற்றுமுழுதாக இணைவைத்தலாகும். அத்தோடு, அல்லாஹ்வின் ஆற்றலை உணர வேண்டியபடி அவர்கள் உணராதிருப்பதும், அவனின் கண்ணியத்துக்கு மாசு கற்பிப்பதுமாகும்!

அப்படியில்லாமல் உண்மையை உணர்ந்திருப்பார்களேயாகின், அல்லாஹ்வைப் போன்று யாரும் எதையும் செய்து விடமுடியும் என்பதை எவரும் கூறின், அதே வினாடியில், அதனை ஓரே வசனத்தில் மறுத்தும் விடுவர்.

அப்படி மறுக்காத நிலையில் அவர்கள், புனித இஸ்லாத்திற்காக, அப்படி மறுக்கப்பட்ட வசனங்களைப் பெருமளவில் கொண்ட குர்ஆனை அல்லாஹ் இறக்கி வைத்திருப்பதை அறியாதிருப்பவர் களாக இருப்பதை அவர்களே வெளிப்படுத்துவதை யாரும் மிக இலகுவாக அறியலாம்! நான் அவ்வசனங்களை இங்கு வரிசைப் படுத்துவதாயின் குர்ஆனின் பெரும் பகுதியையே இங்கு பதிவிட வேண்டி வரும். அத்தோடு கூற வந்ததைக் கூறுவதில் இருந்து தடைப்படுத்தியும் விடும். அதனால் உங்கள் பார்வைக்கு அதனை விட்டு விடுகின்றேன்.

மேலும், அல்லாஹ்வைப் போன்று செய்வதாகக் கூறி மறுப்போரின் கருத்து அடிப்படையையே தகர்ப்பதுதான் என்பதை இன்னோர் வகையிலும் கூறலாம். அதாவது அவர்களின் கூற்றுக்களில் முக்கியமான இடத்தைத் தற்போது வகித்துக் கொண்டிருக்கும் சூனியமாகும். அவர்கள் இதனை மறுப்பதற்கு, அது அல்லாஹ்விடமிருந்து வராதது, அது ஷைத்தான் கற்பித்தது, அதனால் எவ்வித பாதிப்பையும் யாரும், யாருக்கும் ஏற்படுத்திவிட முடியாது என்ற கருத்தே! இக்கருத்து மிகவும் மோசமான இணைவதை்தலாகும்.

அதாவது, அல்லாஹ்வுக்கு அப்பாலும் ஒரு அறிவு உண்டு, அதனை ஷைத்தான் மக்களுக்குக் கற்பித்து வருகின்றான். அதனைச் செய்வோர், அல்லாஹ்வைப் போன்று பௌதிகத் தொடர்பின்றி, எங்கோ ஓர் மூலையில் இருந்து கொண்டு, ஏதோ பொருட்களால், எங்கோ இருக்கும் ஒருவருக்குப் பாதிப்பை, தாக்கத்தை, நஷ்டத்தை, இழப்பை வருவிக்க முடியாது, அப்படி வருவிக்க முடியுமென நம்புவது, அல்லாஹ் போன்று செய்வதாக நம்பி இணைவைத்தல் என்கின்றனர்.

விடயத்திற்குத் திரும்பின், அல்லாஹ்வைப் போன்று செய்ய வேண்டிய சில செயல்களை அல்லாஹ்வே வகைப்படுத்தி உள்ளான். அவற்றில் முக்கியமான ஓரிரு விடயங்களை குர்ஆனிலிருந்து முன்வைக்கின்றேன். முதலாவது, 3:18இல் கூறியுள்ள, நீதியை நிலைநாட்டக் கூடியவனாக உள்ள நிலையில் அல்லாஹ் தன்னைத் தவிர வேறு இலாஹு இல்லை என்று சாட்சி கூறுகின்றான். அவ்வாறே, வானவர்களும், அறிஞர்களும் சான்று பகர்கின்றனர் எனக் கூறியுள்ளான். இது அல்லாஹ் செய்வதை நாமும் செய்ய வேண்டி இருப்பதை, செய்தும் கொண்டிருப்பதை, செய்யாவிடில் நாம் இஸ்லாமாக இருக்க முடியாது என்பதைக் குறிகாட்டி நிற்பது.

அடுத்து, மிக முக்கியமானது, 33:56இல் பதிவாகியுள்ளது. நிச்சயமாக, அல்லாஹ்வும் அவனது வானவர்களும், நபியின் மீது ‘ஸலவாத்து’க் கூறுகின்றார்கள். எனவே, முஃமின்களே! நீங்களும் அவர்மீது ஸலவாத்துக் கூறி, சாந்தி அளித்திடும் ஸலாமையும் கூறுங்கள். இந்த வசனம் நமது, முன்னை கருத்திற்கும், தலையங்கத்தின் இரு பாகங்களுக்கும் விடையாக அமைந்து நிற்பது.

இவற்றிற்கு மேலும், அல்லாஹ்வின் திருநாமங்களில் பல, அவன் செய்வதை நாமும் செய்து கொண்டிருப்பதை வெளிப்படுத்துவன. அவற்றைச் செய்யுமாறு நம்மை மறைமுகமாக வலியுறுத்துவன. தவிர, வெளிப்படையாக நம்மைச் செய்யுமாறு கூறும் வசனங்களும் நிறையவே உண்டு. ரஹ்மான், ரஹீம், ரஸ்ஸாக், ஸாஹிதுன், வலிய்யு, முஹய்மினு போன்று அடுக்கிக் கொண்டே போகலாம். இது போன்று, அல்லாஹ் திருநாமம் நம்மில் எதிர்மறையாகவுள்ள வையும் உண்டு, வாஹிது, கைய்யூமு, ஹைய்யு, ஸமது, கனீ போன்றவை. இன்னும் உண்டே!

இந்தத் திருநாமங்களே, அல்லாஹ் செய்வதை நாமும் செய்யும் விடயங்களையும், செய்ய முடியாத விடயங்களையும், அதாவது அவை செய்யக் கூடாது என்று கூடக் குறிப்பிட வேண்டியதில்லை, செய்யவே முடியாதவை என்பதுதான். அவன் செய்தைச் செய்யக் கூடியவையாக அன்பு செலுத்தல், உணவளித்தல். தர்மம் செய்தல், கொடையளித்தல், உதவுதல், சாட்சி கூறல், படைத்தல், பொறுப் பேற்றல், கொல்லல். தண்டித்தல் என்பனவும், செய்ய முடியாதவை யாக அல்லது எதிர்மறையானதாக தேவையுடையவர்களாக நாம் இருப்பது, மரணிப்பவர்களாக நாமிருப்பது, மறதியாளராக இருப்பது, குறைவுள்ளவர்களாக இருப்பது, இறையுதவியை வேண்டி நிற்பது, அவனுடைய வழிகாட்டலின்றி எதனையும் செய்ய முடியாதவர் களாகவும் ஆற்றல் அற்றவர்களாகவும் இருப்பது போன்றவை.

மேற்கண்டைவையினால், தலைப்பின் முதல் அங்கம் தானாகவே விளக்கம் பெற்று நிற்கின்றது. காரணம் சில முக்கியமான விடயங்கள் அல்லாஹ் செய்வதனை நாமும் செய்யும்படி அவனே பணித்திருப்பது. இன்னும், சில நன்மைகளைப் பெற்றுக் கொள்வதற்காக, சிருஷ்டிப்பை மேற்கொள்வதற்காக, உணவளித்தலை, உதவுவதை, அறிவதை, அன்பு காட்டுவதை வெளிப்படுத்துவன.

அடுத்தது, அவனைப் போன்று செய்யவோ, கட்டுப்படுத்தவோ, நிலைத்திருக்கவோ, மறைவானவற்றை அறிந்திருக்கவோ, மறுமையை ஏற்படுத்தவோ, மீளவைக்கவோ, தண்டிக்கவோ, சுவனத்தை அளித்திடவோ முடியாத விடயங்கள். அவன் பெறுவது, பெறப்படுவது, உணவுண்பது, ஓய்வெடுப்பது, களைப்படைவது, உறக்கம் கொள்வது, சந்ததி பெற்றிருப்பது, இணையாக, நிகராக யாரையும், எதனையும் கொண்டிருப்பது, தேவையுடையவனாக இருப்பது, உதவி தேடுபவனாக இருப்பது, வரையறைக்கு உட்படுவது போன்ற இன்னும் எத்தன்மைகளும் அண்ட முடியாதவன்.

இரண்டாவது பாகமாக தலைப்பில் கூறப்பட்டிருப்பதைப் பார்ப்போமாகில், மனிதரில் ஒருவர் செய்வதே போன்று, ஒரு செயலை, இன்னொருவர் செய்வதென்பதே மிகவும் முடியாத ஒன்றாயுள்ள நிலையில், எப்படி அல்லாஹ்வைப் போன்று மனிதன் செய்ய முடியம்? அப்படி செய்ய முடியும் என்று கூறுவது, நினைப்பது, யாரும் செய்கின்றனர் என நம்புவது போன்ற அனைத்துமே, ஷிர்க் என்ற அல்லாஹ்வின் மன்னிப்பை ஹறாமாக்கிய இணைவைத்தலே என்பதில் எதிர்வாதத்திற்கு இடமே இல்லை.

இன்னும், கூறுவதாயின், அல்லாஹ் மனிதனைத் தனது சூரத்திலேயே படைத்துள்ளதாகக் கூறுகின்றான். அத்தோடு, தான் கற்றுக் கொடுத்ததாகவும், அவன் கற்றுத் தந்ததற்கு மேல் நமக்கு எதுவும் தெரியாது என்பதும், அவனே நமக்கு அனைத்தையும் வசப்படுத்தித் தந்திருப்பதும், அதனைக் கொண்டே நாம் காரியமாற்ற வேண்டி இருப்பதும், காரியமாக்கிக் கொண்டிருப்பதும் மட்டுமே நம்மையும் அல்லாஹ்வயும் வேறுபடுத்திக் காட்டுவன.

அதனைவிடுத்து நாம் அல்லாஹ்விலிருந்து வேறானவர்களாக நினைப்பது, அவனை மறப்பதும், இணைவத்தலில் சேர்ப்பதுமாகும். அவனுடைய ஆவியே நம்மில் உயிரைத் தந்து நிற்கின்றது. அவனது சக்தியே நாம் அசைவதற்குக் கூட உதவுவது, அவன் தந்த அறிவே, மேலும், சிந்திப்பதற்கு, ஆற்றலை வளர்ப்பதற்கு உதவுன்றது.

இதனை நாம், அவன் தந்த அறிவாலும் ஞானத்தாலும் வெளிப்படுத்தவும் செய்யலாம் என்பதைக் குர்ஆனிலிருந்து கண்டு கொள்ளலாம். சுலைமான் அலை அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த அருட் கொடைகளைக் கொண்டு, மாத தூரத்தைக் குறுகிய நேரத்தில், காற்றின் உதவியால் சென்றமை, நிலத்திற்கு அடியிலும், மேற் பாகத்திலும் ஜின்கள், ஷைத்தான்கள், பறவைகள், மிருகங்களைக் கொண்டு பல அரிய செயல்களைச் செய்வித்தமையும், ஈஸா அலை அவர்கள் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு, இறந்தவர்களை உயிர்ப்பித்து, பிறவிக் குருடருக்குப் பார்வை கொடுத்து, தொழு நோயைக் குணப்படுத்தி, மண்ணில் பறவை செய்து, அதனைப் பறக்க விட்டமை, பிறந்த பாலகனான நிலையில் தனது தாயைச் சந்தேகித்த வர்களுக்கு தொட்டிலிலிருந்தே பதில் கூறி வாயடைக்க வைத்தமை, அப்போதே தான் ஒரு இறைதூதர் என்பதையும், தான் அல்லாஹ் வால் மேன்மைப்படுத்தப்பட்டிருந்தமையை அறிந்திருந்தமையும் போன்றவை அல்லாஹ் செய்வதைப் போன்று, அல்லாஹ் அனுமதி தந்தால் செய்யலாம் என்பதை விளக்கி ஆதாரப்படுத்துவன.

இன்னும். அவர் ஒரு தீர்க்கதிரிசி, சில சிறப்பான பண்புகளைக் கொண்டவர் எனக் கூறினும் அவையும் அல்லாஹ்விடமிருந்து கிடைத்தனவே! ஆனாலும், சாதாரண மனிதர்களும், சில விடயங்களை எவ்வித பௌதிகத் தொடர்புமின்றி, நினைத்த மாத்திரத்தே செய்துள்ளனர் என்பதையம் குர்ஆன் பதிவாக்கியே உள்ளமை நமது தலைப்பிற்கு வலு சேர்ப்பன. அவற்றில் ஒன்று, சுலைமான் அலை அவர்கள் காலத்தில், ஒரு கற்றறிந்த நபர், ஷபா நாட்டு அரசியின் சிம்மாசனத்தைக் கண்பார்வை திரும்பு முன்னர், நினைத்த மாத்திரத்தே தாமிருக்கும் இடத்திற்குக் கொணர்ந்தது என்ற குர்ஆனியப் பதிவு.

மேலும், அல்லாஹ்வின் சக்தி கொண்டு மூஸா அலை அவர்கள் செய்த பலவற்றில், சிறப்பாகக் கடலைப் பிளந்ததையும், அவர்கள் சந்தித்த கற்றறிந்த நபர் ஓருவர், செய்த செயற்பாடுகளையும், பார்க்கும் போது, மனிதனுக்கு அல்லாஹ் எவ்வகைச் சகதிகளை எல்லாம் கொடுத்திருக்கின்றான் என்பதை அறிய முடிகின்றது.

அல்லாஹ்வும், வானத்தில் பறவைகளை எப்படி விழாமல் பறக்க வைக்கிறான் என்பதைச் சிந்திக்கும்படி கூறினமையை அறிந்த மனிதனே, இன்று இரும்பையே விமானமாக்கி, வானத்தில் வையத்தை ஏன் அதற்கப்பாலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்திக் கொண்டிருக்கின்றான். இவை விஞ்ஞானம் காரண காரியங் களுடனும் வேறு சாதனங்களுடனும் செய்யப்படுபவன. இதற்கு புவியைத் தாண்டிச் செல்ல முடியாது, ஆயினும் சக்தியிருந்தால் செல்லலாம் என்பதிலிருந்து புவியீர்ப்பு சக்தி உண்டென்பதையும் அறிந்து, அதனைச் தாண்டிச் செல்ல ஈர்ப்புச் சக்தியைவிட சக்தி பிரயோகிக்கப்படல் வேண்டும் என்பதையும் உணர்ந்தவன் வெற்றியாளனாகி உள்ளான்.

இறைவன் .இன்னொரு வகை மனிதருக்கு நீரில் நடக்கவும், நெருப்பில் படுக்கவும், விண்ணில் பறக்கவும், நினைத்த மாத்திரத்தே எதனையும் செய்து கொள்ளவும், வியாதிகளைச் சொஸ்தப்படுத்தவும் போன்ற இன்னோரன்னவைகளையும், நினைத்தவற்றை அடைவதை யும் கொடுத்தே உள்ளான். இவற்றைச் செய்பவர்களைப் பார்த்து, அவர்களிடம் அல்லாஹ்வின் சக்தி வெளிப்படுவதை அறிவதையும், படிப்பினையாகக் கொள்வதையும், அதனை நாமும் அடைய முயற்சிப் பதையும் விடுத்து, அவற்றை மறுத்துக் கொண்டும், அவை ஷிர்க் எனக் கூறிக் கொண்டுமிருப்பதும், நமது தலையில் நாமே மண்ணை வாரிப் போடுவதற்கச் சமனானதே!

இவைகளைப் பார்க்கும் போது, உண்மையைக் கொண்டே அனைத்தையும் அல்லாஹ் படைத்துள்ளான் எனக் கூறுவதும், உண்மையைக் கொணர்ந்தவரும், அதனை உண்மைப் படுத்தியவரும் வெற்றியாளர்கள் என்பதுவும் நமக்கு ஊக்குவிப்பைத் தருகின்றது. உண்மை அறியப்பட்டால், அவை எட்டப்படக் கூடியனவே, நன்மை யின்பால் இட்டுச் செல்வனவே என்பதையும் அறிவிக்கின்றது. அதனால், அவற்றைச் சிந்தித்துக் காரியமாற்றி நாம் பிறந்ததன் பயனை, நம்மைப் படைத்த, நமக்கு இத்துனை சக்திகளையும் தந்த இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காக நாமும் அவற்றைச் செய்ய வேண்டும் என்பதையும் வெளிப்படுத்தி நிற்கின்றது.

இதனைத்தான், அல்லாஹ் தனது குர்ஆனின் 4:147 இல் மிக அழகாகக் கூறுகின்றான். இம்மையில், மறுமையில் அவனது தண்டனையில் இருந்து தப்பிக்கும் வழியாகவும் மறைமுகமாகக் கூறுகின்றான். அவ்வசனம், நீங்கள் அல்லாஹ்வை விசுவாசித்தும், அவனுக்கு நன்றி செலுத்தியும் வந்தால், உங்களுக்கு வேதனை செய்து அவன் என்ன அடையப் போகின்றான்? அல்லாஹ்வோ நன்றி பாராட்டுகின்றவனாகவும், நன்கு அறிபவனாகவும் இருக்கின்றான். மேற்கண்ட தலைப்பை அறிவதற்கு இவை போதும் என்று நிறைவுறுகின்றேன்.

 

- நிஹா -