உண்மையைக் கொண்டே பிரபஞ்சத்தைப் படைத்தவனைத் தவிர யாருமில்லை!

 

மனிதனை இறைவனே படைத்ததாக அனைத்து வேதங்களும் எடுத்துரைக்கின்றன! மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்பதும் வேதங்கள் கூறும் உண்மையே! அதுவே விஞ்ஞான முடிபுமாக உள்ளது! நீரிலிருந்தே உயிரினங்களின் படைப்பை ஆரம்பித்ததாக அல்லாஹ் கூறுகின்றான்! பஞ்சபூதங்களான ஆகாயம், மண், காற்று, நீர், நெருப்பு போன்றவற்றின் கலவையே மனிதன் என்பதும் ஏற்கப்பட்ட, இரண்டாம் கருத்தற்ற உண்மையே!

மேலாக, உண்மையைக் கொண்டே இந்த பிரபஞ்சத்தையும் அவற்றில் உள்ளவற்றையும் படைத்ததாக அல்லாஹ் கூறியிருப்பது உய்த்துணர்ந்து நல்லறிவு பெறப்பட வேண்டியது! இந்த வசனத்தின் உண்மையை மட்டும் விளங்கிக் கொண்டால், அனைத்தையும் அறிந்து கொண்ட அறிவு கொண்டோராகிவிடுவோம்! அனைத்து உயிரினங்களுக்கும் ஆத்மா இறைவனிடமிருந்து வந்தது என்பதன் மூலம் ‌நாமறிந்து கொண்ட உண்மை மேலும் வலுப்பெற்று விடும்!

இவ்விடத்தில், உண்மை என்பது என்ன என்று உற்று நோக்குவோமாயின், அது ஒன்றுமட்டுமே என்ற அடிப்படை பண்பைப் பெற்றுக் கொள்வோம்! இரண்டு உண்மைகள் இருக்க முடியாது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. அடுத்தபடியாக, அந்த ஒன்று எது என்பது, பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு விடயங்களைக் கொண்டதாக இருப்பினும், அனைத்திற்கும் பொதுவான மாறுபாடில்லாதது ஓருண்மையானவே இருக்க வேண்டும்! ஒவ்வான்றுக்குமான தனித்தனி உண்மைகளான மற்றவற்றை மாறுபடுவனவாகக் கொள்வதால், அவை வெறும் மயக்க நிலை அல்லது மாயை என்ற சொல்லால் கூறலாம்! ஆக அனைத்திற்கும் பொதுவாக உள்ள உண்மையையே பேருண்மையாகக் கொள்ள வேண்டும்!

நான் முன்னர் கூறியபடி, அனைத்தும் இறைவனால் படைக்கப்பட்டிருந்தால், வேறு எதுவும் இல்லாமலே இருந்துள்ளது என்ற மறைவான உண்மை வெளிப்படுகின்றது. இல்லாமல் இருந்ததில் அனைத்தும் எப்படி படைக்க்்ப்பட்டன என்றால், இல்லாமையில் எதுவும் உருவாகாது என்ற உண்மையும் இருக்கவே செய்கின்றது! அப்படியானால், இறைவனிடம் இருந்துதான் அனைத்தும் வெளியாகின என்றால், அவை இறைவனிடம் இருந்தவையாக இருக்க வேண்டும்! அப்படி ஏற்பது என்பது அவனிடம் அனைத்தும் நாம் பார்ப்பது போன்று இருந்ததாகக் கொள்ள வேண்டிவரும்! ஆதலால், அதனைப் பொருத்தமான கருத்தாகக் கொள்ள முடியாது!

ஆனால், அவனது உள்ளமையில் அனைத்தும் இருந்ததாகக் கொள்ள வேண்டியுள்ளது. அவனது அறிவில் அனைத்தும் அறிவாக இருந்திருக்க வேண்டும்! அதனை அறிய, நாமிருக்கும் கட்டிடத்தின் சுவரை எடுத்துக் கொள்வோம். அத்தோற்றத்திற்கு நாம் சுவர் என்று கூறுகின்றோம்! அச்சுவர் உடைந்து கற்களான பின்னர், அக்கற்களை சுவர் என்று கூறுவதற்கு மாறாக, கற்கள் என்கின்றோம். பின்னர் அக்கற்கள் தூளான போது, அவற்றைக் கற்கள் எனாது, தூசு என்கின்றோம்! அதன் பின்னர் அந்த தூசு காற்றி‌ேலா, நீரிலோ மறைந்து விட்டால் தற்போது எதுவும் இல்லை எனவே கூறுகின்றோம்! அப்படியானால், நம் கண் முன்னால் சற்று முன்னர் இருந்த, பார்த்து, தொட்டு அறிந்த அந்த சுவர் எங்கே என்ற கேள்விக்கு பதில் காண வேண்டியுள்ளது! இல்லை, சுவர் தற்போது அழிந்துவிட்டது என்றால், நாம் சுவர் எனக் கூறியது எதனை! என்ற கேள்வி மறுமுனையில் தோன்றுகின்றது!

இது, இதுவரை நாம், பௌதிக நிலையில் பார்த்துக் கொண்டிருந்த சுவர் என்ற நமது கருத்தியலை திசை திருப்பி, நமது சிந்தனையை வேறு உண்மையைக் காணத் தூண்டுகின்றது! அந்தத் தூண்டலின் விளைவு, மேலும் கேள்வி கேட்க்த் தயாராகின்றது! அந்தக் கேள்வி, நாம் சுவர் என்றது இல்லாமலே போய்விட்டதா என்றால், பௌதிகத் தோற்றத்தை எடுத்த சுவர் மறைந்து விட்டது! ஆனால், அதற்கு எதிரிடையான தன்மையில் அச்சுவர் நம்மிடம் அறிவாக உள்ளது! தேவை ஏற்படின், அவ்வறிவைக் கொண்டு நாம் மீண்டும் அச்சுவரை எழுப்பி விடுவோம்! ஆக, சுவர் என்பது ஓரறிவுதான் என்பது, அல்லாஹ் உண்மையைக்கொண்டே அனைத்தையும் படைத்ததை நமக்கு எடுததியம்பிக் கொண்டிருக்கின்றது!

இப்போது, படைக்கப்பட்டதும், படைத்தவனும் வேறு வேறாக இருந்ததில்லை. இருக்கப் போவதுமில்லை. படைப்புக்கள் அனைத்தும் கால தேய வர்த்தமானங்களுக்கேற்ப தோற்றம் பெறுவை! மாற்றங்களை ஏற்பவை! அ‌ழிவைச் சந்திப்பவை! மீண்டும் உருவாக்கப்படுபவை! போன்ற உண்மைகளைக்கொண்டுள்ளன!

இந்நிலையில், உண்மை என்று முன்னர் கூறிய ஒன்று, எதை எதை எல்லாமோ செய்துவிட்டு, மாற்றங்கள், அழிவு எதுவுமின்றி, தான் எப்படி இருந்ததோ அப்படியே இப்போதும், எப்போதும் இருந்து கொண்டிருக்கின்றது! அதனால் அது, தன்னைத் தவிர எதுவுமில்லை என்று பறை சாற்றிக் கொண்டு இருக்கின்றது!

இதனையே அல்லாஹ் தனது வார்த்தை மட்டு‌மே மேலேறிச் செல்கின்றன எனக் கூறுகின்றான்! ஆம், அவனைத் தவிர யாருமில்லை! அவன் மிகைத்தவன்! ஞானமுள்ளவன்!

 

- நிஹா -