தொழுகையில் அல்ஹம்து சூராவும் அதன் பயன் பற்றிய கருத்தோட்டமும்!

 

 

தொழுகையின் ஒவ்வொரு றக்அத்துக்களின் ஆரம்பத்திலும் நாமனைவரும் அல்ஹம்து சூராவை ஓதி வருகின்றோம்! அந்த சூராவில் 5, 6, 7ஆம் வசனங்களில்,“ நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக! நீ எவர்களின் மீது அருள் புரிந்தாயோ அத்தகையோரின் வழியில், கோபத்துக்குள்ளானவர்களின் வழியுமல்ல, வழிதவறியோர் வழியுமல்ல“ எனவுளது!

இவ்வசனங்களை நாம் ஓதும் போது, நாம் தற்போது இருக்கும் வழி நேர்வழி அல்லவென்று மறைமுகமாகக் கூறுவது போன்றுள்ளது. அதனால்தான், அல்லாஹ்வே! நாம் இப்போது பிழையான வழியில் இருக்கிறோம், அதிலிருந்து எம்மை விடுவித்து, உனது நேரான வழியில் செலுத்து என அவனிடம் முறையிடுகின்றோம்!

ஆயினும், தினமும் ஆகக் குறைந்தது ஐவேளைத் தொழுகையில் பதினேழு தடவை இவ்வாறு கேட்கின்றோம்! ஆனால், நமக்கு நேரான வழிகாட்டப்பட்டதா என்ற கேள்வியை எழுப்பாமலே, நாம் இன்னும் அதே பழைய பிழையான வழியில்தான் இருக்கின்றோம் என்பதையும் நமது வாயாலேயே மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருக்கின்றோம்!

இல்லை நாம் பழைய பிழையான வழியில் இல்லை , சரியான வழியில்தான் இருக்கிறோம் என்றால், அவ்வசனங்களை அல்லாஹ்விடம் கேட்டுக் கொண்டிருப்பது வீண் என்ற செயலாகவும், அல்லாஹ்வுக்காகச் செய்யப்படும் ஒரு வணக்க வழிபாட்டில் தேவையற்ற ஒன்றைக் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் ஆகிவிடும்! தொழுகை பாத்தில் ஆகும் சந்தர்ப்பமும் ஏற்படுகின்றது!

உண்மையில் அல்லாஹ், தன்னருள்மறையில், இந்த சூராவைப் பற்றிச் சொல்லும் போது, நாம் மீண்டும் மீண்டும் ஓதக் கூடிய ஏழு வசனங்களை உங்களுக்கு இறக்கித் தந்துள்ளோம் எனக் கூறியுள்ளான். அப்படிக் கூறியிருப்பது, ஒரு நேர் வழி உண்டென்பதை நமது நினைவிற்குக் கொணர்ந்து, அந்த நேர்வழியைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் குர்ஆனில் மூழ்கி, அதனைச் சரியான முறையில் அடைந்து விடுவதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதற்குமேதான், என்ற அடிப்படையில் தான், தொழுகையின் ஒவ்வொரு றக்அத்திலும் பாத்திஹா சூராவை நாம் ஓத வேண்டும் என்ற சிந்தனையில் புகுத்தப்பட்டுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்! இவ்விடத்தில் தொழுகை அல்லாஹ்வை நினைவு கூர்தல் என்பதை மனத்திலிருத்தி விளங்கிக் கொள்ளல் அவசியம்!

ஒரு சமுதாயம் தன்னை மாற்றி்க் கொள்ளாதவரை, அல்லாஹ் அவர்களில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்பதை அறிந்தால் இந்நிலை ஏற்பட்டிராது.

ஆதலால், நாம் முயன்ற, நமது முயற்சியின் அளவுக்கே அல்லாஹ்வால் நமக்குப் பலன்கள் தரப்படும் என்பதை நன்குணர்ந்தால், நாம், நேரான வழியைக் காண்பதில் எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளாமல், அல்லாஹ்விடம் தொழுகையின் போது கேட்பதுடன் நமது கடமை முடிந்து விட்டதாகவும், அந்த நேர்வழி காட்டப்படா விட்டாலும் நாம் கேட்டுக் கொண்டு மட்டும்தான் இருப்போம் எனற மனோ இச்சையில் வாழ்ந்து கொண்டிருந்தால், நமது நிலை மறுமையில் கவலைக்கிடமாக. கைசேதப்படுவதாகவே இருக்கும்!

அல்லாஹ் உங்களது அழைப்புக்குப் பதில் சொல்பவன் என்பதை நம்புவோமாகில், தினமும் பதினேழு தடவை, இத்தனை காலமும் நமது வேண்டுதலுக்கு அவன் பதில் தரவில்லையா என்று அறிந்தால், நமது தொழுகை பற்றி நாம் சுயவிமர்சனம் செய்து, தொழுகை நிலை நிறுத்தப்படவில்லை, நிறைவேற்றப்படவில்லை, பேணப்படவில்லை போன்ற நமது தொழுகையின் குறைபாட்டை அறிந்து நிவர்த்தி செய்வதற்கான முயற்சியில் இறங்கியிருப்போம்!

நீங்கள் அறியாதவர்களாகவிருந்தால், அறிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்ற இறையறிவுறுத்தலை ஏற்று அதன்படி நடந்து, நிலைமையைச் சீர் செய்து கொண்டிருப்போம்!

‌இதனால்தான் போலும் அல்லாஹ்வும் தொழுகையாளிகளுக்குக் கேடுதான் எனவும், அவர்கள் மற்றவர்களுக்குக் காட்டுவதற்காகவே தொழுகிறார்கள் என்றும் கூறியிருப்பதாக எண்ண வேண்டியுள்ளது!

குர்ஆனின் வசனங்கள் கூறப்பட்டால் அவர்கள் குருடர்களாகவும் செவிடர்களாகவும் விழமாட்டார்கள் என்ற அல்லாஹ்வின் எச்சரிக்கை புறந்தள்ளப்பட்டதை, இந்த, புனித குர்ஆனின் ஆரம்பமான சூரத்துல் பாத்திஹாவே புறந்தள்ளப்பட்டுள்ளதில் இருந்து அறிந்து கொள்ளலாம்!

ஆக நேரான வழி என்பது, கலிமாவை ஏற்பது. அதனை விடுத்து அனைத்தும் வழிகேடே என்பதை உணர்வோமாயின், அந்த கலிமாவை அறிவதில் நாம் ஆர்வம் காட்டியிருப்போம். ஆனால் நாமனைவரும் கலிமாவை ஓர் சடங்காகக் கூறிக் கொண்டால் சரி என்ற இடத்துக்கு அப்பால் சிறிதும் நகரும் முயற்சியில் இறங்கவில்லை என்பதே மிகவும் கசப்பான உண்மை! அல்லாஹ்வை அறிந்து சாட்சியம் கூற வேண்டியதையும் வசனமாகக் கூறிவிட்டால் போதும் என்ற மாயையில் உள்ளோம்!

அப்படி அடுத்த நிலை ஒன்று கலிமாவின் கடமையாக உள்ளது என்பதை அறிந்திருந்தால், கலிமாவின் உண்மையைக் குர்ஆனின் அடிப்படையில் உய்த்துணர்ந்து அல்லாஹ்வைத் தவிர வேறு எதுவுமில்லை என்று மனதாலும், வார்த்தையாலும் சாட்சியம் பகன்று முஸ்லிமாகி இருப்போம்!

இந்த வழியிலான முயற்சியாகக் கொள்ள வேண்டிய தொழுகையும் வெறும் சடங்காகி, மறு புறத்தில் நிராகரிப்பாக மாறியுள்ளது. நான் இப்படிக் கூறுவதற்கான காரணம், அல்லாஹ் தொழுகை பற்றிக் கூறியதைச் செய்யாமல் தொழுகை என்று எதையோ செய்து கொண்டிருப்பதே என்பதை வருத்தத்துடன் பதிவிடுகின்றேன்!

 

- நிஹா -