நல்லதை அறிந்திட முயன்றால்
வல்லவன் உதவியும் கிட்டும்!
நாயகம் அவணியில் உதித்தார்
நறுமணம் உலகில் கமழ
நற்செயல் தந்திடும் நன்மை
நயம்பட மனிதர்க்குரைத்தார்!
உண்மைப்படுத்தி முன்னைய வேதங்களை
உறுதியாய் சாட்சியம் பகர்ந்தார்
அறுதியாய் கலிமாவே உயர்த்தும்
அரும் பெரும் உண்மையை உகந்தார்!
அல்லாஹ்வைத் தவிர எதுவும்
இல்லையென்றடித்து உரைத்தார்
வல்லவன் தன்னில் நின்றும்
உள்ளமை கொண்டு படைத்தான்!
என்றும் அழிவிலா அல்லாஹ்
எங்கும் ஏகனாய் ஆனான்
ஆயினும் கண்டிட முடியா
சாயலைக் கொண்டே எதையும்!
மறைந்திட அவனும் இல்லை
மறையாது அனைத்தும் ஆனான்
கறையிலாது அவனும் உள்ளான்
குறையேதுமில்லா வல்லோன்!
ஆதியாகவும் அவனே எதிர்
அந்தமாவதும் அவனே நிலைத்து
நித்தியமாக உள்ளான் வித்தில்
சத்தியாய் அவனே அறிவான்!
எல்லாம் நமக்கு நபிகள்
சொல்லால் செயலால் காட்டி
வெல்லும் வழிதனைக் காட்டி
செல்லும் இடத்தையும் பகர்ந்தார்!
இம்மையில் இறைவனை் காணார்
மறுமையிலும் குருடரே என்றான்
பார்வைக்குள் வந்திடும் அவனை
தேர்ந்து அறிந்திடச் சொன்னான்!
அவனை அறிந்திடும் வழிகள்
நினைவில் கொணர்வதைக் கூற
அனைத்து தூதரும் வந்தனர்
நினத்திட நம்மை அழைத்தே!
கணத்தில் முடிந்திடும் இம்மை
மனத்தில் இருத்திக் கொண்டு
முனைந்தே நிறுத்திட தொழுகை
நினைவு கூர்ந்திடு தன்னையென்றான்!
அல்லாஹ் நபிகள்மேல் ஸலாம்
அழகாய் உரைக்கின்ற வேளை
அவனின் வானவரும் சேர்வர்
அவணியில் நமக்கும் கடமை!
தன்தூதரின் பிரஸ்தாபத்தை நயமாய்
தரணியில் உயர்த்தினான் வல்லலோன்
கண்மணி நாயகம் தன்னை
துண்யாவுக்கருளாய் ஆக்கினான்!
ஆதலால் நாமும் அவர்புகழை
வாதனை வம்புகளின்றி சாதனைசெய்து
போதனை செய்து அவர்களை
உயிரிலும் மேலாய் மதிப்போம்!
நாயகம் நமக்குந் தந்த
தூய அருள்மிகு வேதந்தன்னை
காய்தல் கலத்த லின்றி
உய்த்துணர்ந்து நடப்போம்!
அல்லாஹ்வின் வழிகாட்டல் அதுவே
வெல்லும் வழியும் அதிலே
நல்லதை அறிந்திட முயன்றால்
வல்லவன் உதவியும் கிட்டும்!