நாடு போகிற போக்கில் நாட்டு மக்களின் சுயாதீனம்…. ஒரு பார்வை!

நாட்டின் அரசியலமைப்பைப் பாதுகாப்பேன் எனப் பயபக்தியோடு சத்தியஞ் செய்து பாராளுமன்ற அங்கத்தவர்களாகப் பதவி வகிப்போர் அவர்கள் சத்தியம் செய்து எடுத்த உறுதிமொழியைப் பாதுகாக்கத் தவறியுள்ளதன் மூலம், பாராளுமன்றின் சிறப்புரிமைகளை மீறியுள்ளனரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அன்றி மக்கள் அவர்களிடம் அளித்திருந்த நம்பிக்கைப் பொறுப்பை மீறியுள்ளனரா! அல்லது இரண்டுமா!

யாப்பின் Xஆவது உறுப்புரையின் 63ஆவது பந்தியில் கூறப்பட்ட சத்தியத்தைச் செய்து அதனைச் செயற்படுத்தத் தவறியமை, பாராளுமன்ற அங்கத்தவரது தலையாய கடமையைச் செய்யாமல் புறக்கணித்ததாக அமையுமானால், அந்த அங்கத்தவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை என்ன? அவர்கள் பாராளுமன்ற அங்கத்துவத்தை இழந்தமையாகக் கொள்ள முடியுமா? என்பதும் ஓர் முக்கிய விடயமாகக் கருதப்பட வேண்டியதே! சத்தியம் செய்த பின்னர் அதனை நடைமுறைப்படுத்தாதவர்கள் பற்றிய நடைமுறைச் சட்டமென்ன?

தற்போதைய நாட்டு நடைமுறைகள் மக்கள் மனத்தில் பல்வேறு கேள்விகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. நாம் எங்கு சென்று கொண்டிருக்கின்றோம்! சிவில் நிர்வாகம் நடைபெறும் நாட்டில், மக்களுக்கு அறிவுறுத்தல்கள் எங்கிருந்து வரலாம்! யுத்தம் நடைபெற்று முடிந்ததோடு நாட்டு நிர்வாக முறை மாற்றம் பெற்றுள்ளதா என்று சிந்திக்கும் நிலைக்கு நாட்டுப் பற்றாளர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

சிவில் நிர்வாக நடவடிக்கைகள் யுத்த காலத்தில் தவிர்க்க முடியாத நிலையில் இராணுவத்தின் கைக்குப் போயிருந்தது. 2009இல் யுத்தம் முடிவுக்கு வந்து ஐந்து வருடங்கள் நிறைவடைந்த பின்னரும் அதே நிலை தொடருவதாக தெரிகின்றது.

எதற்கெடுத்தாலும் இராணுவக் கெடுபிடிகளும், இராணுவத் தலையீடுகளும், இராணுவ அறிவுறுத்தல்களும் என நீண்டு கொண்டே போகின்றது. இது சிவில் நிர்வாகம் இராணுவத்தின் கைக்கு மாறிக் கொண்டிருக்கின்றதா? பழுத்த வாழைப் பழத்தில் நுட்பமாக ஊசியை நுழைப்பது போன்று சிவில் சேவைகள் இராணுவ நிர்வாகமயப்படுத்தப்படுகின்றதா? இம்முன்னோடி நடவடிக்கைகளே, நடைபெறப் போகின்ற இராணுவ ஆட்சியின் ஒத்திகையா என்றெல்லாம் சமூக ஆர்வலர்களைச் சிந்திக்க வைத்துள்ளமையைத் தவறாகக் கருதிவிட முடியாது.

இந்நிலை மிகவும் அபாயகரமானது. ஜனநாயகம் தற்போது கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பெயரளவில் நடைபெறும் தேர்தல்களும், மாகாண சபைகளும், பாராளுமன்றமும், அமைச்சரவையும் கூட யார் யாரினதோ மறைமுகக் கட்டுப்பாடு களுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளதாகவே தெரிகின்றது.

அதிகார பலம் இரண்டு மூன்று நபர்களின் தனியுடமையாகி, அனைத்து மக்களினதும் பிரதிநிதிகளும், அவர்களின் கைப்பொம்மைகளாக மாறியுள்ளதாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கும் காரியங்கள் அபாய அறிவிப்பைச் செய்து கொண்டிருக்கின்றன.

உதாரணமாக, மூன்றில் இரண்டு பங்கு வாக்காளர்களால் தேர்தல் ஒன்றின் மூலம் தீர்மானிக்கப்பட, திருத்தப்பட வேண்டிய அரசியல் யாப்பு கூட, மூன்றில் இரண்டு பங்கு பாராளுமன்றப் பிரதிநிதிகளை விலைக்கோ, அன்றி அமைச்சர் பதவி என்ற இலஞ்சம் கொடுத்தோ வாங்கி நிறைவேற்றப்பட்டுள்ளமை, மக்கள் புறக்கணிப்புக்கு உள்ளாகி உள்ளமையை, அவர்களின் கையறு நிலைமையை வெளிப்படுத்தி நிற்கின்றது.

இது ஒரு பிழையான முன்னுதாரணமாக இருந்தும், உச்ச நீதி மன்றம் இதில் கவலை கொண்டுள்ளதாகத் தெரியவில்லை.

நாளை இந்த அரசாங்கம், தான், அங்கத்தவர்களைப் பயமுறுத்தியோ, இலஞ்சம் கொடுத்தோ வாங்கிக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பாவித்து புதிய ஒரு யாப்பினை உருவாக்கி பாராளுமன்றின் ஆயுட்காலத்தைக்கூட இன்னும் இருபது வருடங்கள் நடைமுறைப்படுத்தக் கூடியதாக ஆக்கிக் கொள்ளலாம்.

தாங்கள் விரும்பிய இனங்களினது வாக்குரிமைகளைக்கூட யாப்பின் மூலம் இல்லாமல் செய்து விடலாம் என்ற அபாய நிலையும் உள்ளது. அல்லது தனியாள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவியை உருவாக்கியது போன்று, மூன்றாவது தடவையும் ஜனாதிபதியாகப் பதவி வகிக்கலாம் என்று மாற்றியவாறு, ஆயுட்கால நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவியை உருவாக்கிக் கொள்ளலாம்.

மக்கள் பிரதிநிதிகள்தானே யாப்பை மாற்றி அமைத்தனர் என சிலர் வாதிடலாம். ஆனால் உண்மை அதுவல்ல. மக்கள் பிரதிநிதிகள் என்போர், மக்கள் ஆணை பெறப்பட்டு, உருவாக்கப்பட்ட யாப்பினை செயற்படுத்துபவர்களே தவிர, அவர்கள் தமது விருப்பப்படி காரியமாற்றும் உரிமை பெற்றவர்கள் அல்லர். அவர்கள் புதிதாக எதையாவது செய்ய வேண்டுமாயின் மக்கள் ஆணை பெறப்பட வேண்டும் என்பதையே யாப்பு கூறி நிற்கின்றது. அதற்காகவே Referandum சர்வசன வாக்கெடுப்பு எடுக்கும் முறை யாப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது ஒரு தடவை நடைமுறைப்படுத்தப்பட்டு பாராளுமன்றின் ஆயுள் மேலும் ஒரு தடவைக்கு நீடிக்கப்பட்டும் உள்ளது.

மேலும், பாராளுமன்றின் செயற்பாட்டை அவதானிப்பதற்கும், தேவையான சந்தரப்பங்களில் சட்டவாக்கத்தின் போது, யாப்பிற்கமைய திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பதையும் உறுதிப்படுத்தும் நோக்கிலேயே உயர்நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட வேண்டும் என்ற ஷரத்தையும் யாப்பு கொண்டுள்ளதையும் கொண்டு, பாராளுமன்று, யாப்புக்குமேல் அதிகாரம் கொண்டதல்ல, யாப்புக்கு உட்பட்டே காரியமாற்ற வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

அரசியல் அமைப்பின் பதினாறு திருத்தங்களும், அன்று மக்களின் ஆறில் ஐந்து பலத்தைக் கொண்டிருந்த ஓர் அரசினால் ஏற்படுத்தப்பட்டது. ஆயினும், அவ்வரசே, அத்தனை திருத்தங்களையும் தனது மூன்றில் இரண்டு பலத்தால் செய்திருந்தாலும், பாராளுமன்றின் ஆயுட்காலத்தை மேலும் ஒரு தவணைக்கு நீட்டிக் கொள்ளலாம் என்றொரு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வரவில்லை. காரணம் அது ஒரு பிழையான நடைமுறைக்கு வித்திடுவதாக அமைந்து விடும் என்பதே! அதனாலேயே, அந்த நீடிப்பைச் செய்வதற்கு அன்றைய அரசு, ஒரு சர்வசன வாக்கெடுப்பை நடத்தியது. தனக்கிருந்த அதாவது மக்களால் தனக்குத் தரப்பட்டிருந்த மூன்றில் இரண்டு பங்கு அதிகாரத்தைப் பாவித்து சட்டமாக்க முனையவில்லை.

மேலும், 17ஆவது திருத்தம் கொண்டுவரப்படுவதற்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில், பல்வேறு உத்திகளையும். சதிகளையும் பாவித்து, அன்று தனது சுயநலத்துக்குப் பக்கபலமாக இல்லாதிருந்த பிரதம நீதியரசரை பதவியில் இருந்தே தூக்கி எறிந்தமையில் பல்வேறு உண்மைகள் பொதிந்திருந்தாலும், நிவிநெகும சட்டம், அனைத்து மாகாண சபைகளினதும் அங்கீகாரம் பெறப்பட வேண்டும் என்ற அரசியல் யாப்பின் ஷரத்தை நிறைவு செய்திருக்கவில்லை என்பதே! அந்த சமயத்தில், நீதித்துறை அதனை மறுக்காது, அரசுக்கிருக்கும் பலத்தைக் கொண்டு சட்டம் ஒன்றைக் கொண்டு வரும்படி பணிக்கவில்லை. அந்த நிவிநெகும சட்டம் பின்னர் புதிய நீதியரசரின் அனுசரனையோடு நிறைவேற்றப்பட்டதனால், அரசியல் யாப்பின் மூலம், மாகாண சபைகளுக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. அல்லது யாப்புக்கு முரண்படும் வழியில் புதிய 17ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த திருத்தத்துக்குக் கிடைத்த அங்கீகாரம், மக்களின் மூன்றில் இரண்டு ஆதரவு இல்லாமலே யாப்பில் திருத்தங்களைக் கொண்டு வரலாம் என்ற பிழையான ஒரு நடைமுறைக்கு வித்திட்டு இன்று நாடே பற்றி எரியும் நிலையிலுள்ள 18ஆவது திருத்தமாக உருவெடுத்துள்ளது.

அதன் விளைவே, இன்று மூன்றாவது முறையாகவும், ஒருவர் ஜனாதிபதியாக வரமுடியும் என்ற வகையில் இன்று நடைபெறும் ஜனாதிபதித் தேர்தல். இத்தேர்தலின் விளைவுகள், அது ஜனநாயகப் பாரம்பரியத்தை மீறியுள்ள தன்மை, பொருளாதாரத்தை வீணடித்தல். அதிகார துஷ்பிரயோகத்துக்கு வழிவகுத்தமை, இரு வருடங்களின் பின்னர் முதல் முறையாக வாக்களிக்க காத்துக் கொண்டிருந்த இளைஞர்களின் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டமை, அவ்வுரிமையை மேலும் ஆறு வருடங்களுக்குத் தள்ளிப்போட்டமை, அதிகாரத்தை முழுமையாகப் பாவித்து, அரச வளங்களைத் தனக்கு எதிராகப் போட்டியிடுபவர் மீது பிரயோகிக்கும் இழிநிலை உருவாக்கப்பட்டமை. ஜனாதிபதியின் அதிகாரத்தை, ஜனாதிபதி அபேட்சகர் தனக்கு வாக்குகளைப் பெறும் இயந்திரமாக்கிக் கொள்ளும் பயங்கரம் எற்பட்டுள்ளது.

பாராளுமன்றின் உரிமையை மீறினாலோ, ஏன் நாட்டின் யாப்பை மீறினாலோ கூட அவருக்கு எதிராகப் பாராளுமன்றோ, நீதிமன்றமோ எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது என்ற நிலையில் உள்ள ஒருவரை, அவர் தானே ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடும் போது, அவரை எதிர்த்துப் போட்டியிடுபவர், பல்வேறு அழுத்தங்களுக்கு வலிந்து உட்படுத்தப்படுகின்றார். இங்கு நீதியான தேர்தல் ஒன்று நடைபெறுவதில்லை. எதிர்த்துப் போட்டியிடுபவர் ஒரு ஜனாதிபதிக்கும் எதிராகப் போட்டியிட வேண்டிய தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளப்படுவது எப்படி நீதியான, நேர்மையான தேர்தலாகக் கொள்ள முடியும்? எப்படி ஜனநாயக பாரம்பரியத்துக்கு வழிகோலும்?

மேற்படி நடைமுறைக்கமைய, பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிகள் வறிதாகாத நிலையில், தற்போதைய பாராளுமன்றம் கலைக்கப்படாது, தேர்தல் ஆணையாளர், ஒரு பொதுத் தேர்தலை நடத்த முடியுமா! ஜனாதிபதியின் குறிக்கப்பட்ட காலம் இன்னும் இரு வருடங்கள் இருக்கும் நிலையில் அப்பதவிக்குத் தேர்தலை எப்படி நடத்துவது? மேலும், அவரது ஆட்சிக்கு எவ்வித குந்தகமும் இல்லாத நிலையில், அவர் உடல், மன நிலை பாதிக்கப்படாத நிலையில் ஒரு தேர்தலை, எப்படி அதனை தேர்தல் ஆணையாளர் நடத்துவது!

தேர்தல் ஆணையாளர், தாம் ஜனாதிபதியின் கட்டளைக்கமைவாகத் தேர்தலை நடத்துவதாகக் கூறுவாராயின், நாளை, பாராளுமன்றம் கலைக்கப்படாமல், ஒரு காபந்து அரசாங்கம் அமைக்கப்படாத நிலையில், பாராளுமன்றிற்கு அங்கத்தவர்களைத் தெரிவு செய்வதற்காக பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துமாறு ஜனாதிபதி ஆணையிட்டால் அப்பொழுதும் அவ்வாணைக்குக் கட்டுப்பட்டு பொதுத் தேர்தலை நடத்துவாரா!

மேலும், பிரதமர், நீதியரசராக இருக்கும் ஒருவர், அல்லது, இராணுவக் கட்டளைத் தளபதி, அல்லது, பொலிஸ் மா அதிபர் தனது பதவியில் இருந்து கொண்டு, ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட முடியுமா! இதற்கு நாட்டின் சட்டம் இடம் தருமா!

மொத்தத்தில் மக்களின் அதிகாரம் சட்டமாக மாறி, அதனை செயற்படுத்துவதற்காக ஜனாதிபதி, பாராளுமன்றம் போன்றவைகளிடம் பாராதீனப்படுத்தப்பட்டுள்ளது. அவைகளே நிர்வாகத்தை இலகுபடுத்துவதற்க்குத் தேவையான திணைக்களங்களை ஏற்படுத்தி அச்சட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். ஆக, மக்களால் கொடுக்கப்பட்ட சட்டம் என்ற அதிகாரம், ஜனாதிபதியாலோ, பாராளுமன்றாலோ நேரடியாகச் செயற்படுத்தப்படுவதில்லை. அதற்காக நியமிக்கப்பட்ட நீதித்துறை, பொலிஸ் போன்றவை இக்கடமையில் நேரடித் தொடர்புள்ளவை. ஆதலால், சட்டத்தைப் பாதுகாக்கும் மக்களால் கொடுக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றுவதில் தவறுபவர்கள், மக்களுக்கு நம்பிக்கைத் துரோகம் இழைத்தவர்களே! அப்படியான நிலையில் மக்களின் சுயாதீனம் கீழ்நிலையை அடைந்து நாடே குட்டிச்சுவராகும் நிலை தோன்றவே செய்யும்.

 

தேசாபிமானி