வடக்கு முஸ்லிம்களின் இடக்கர் அகற்றுவீர்!
புண்ணியமல்ல நாம் உமைக் கேட்பது
மண்ணில் உள்ள நமது உரிமையே!
வருடந் தோறும் எண்ணி மகிழ்ந்தனர்
வாழ்வை இழந்த வடக்கு மக்களை
புருடாக் கதைகள் பலதும் பேசி
குருடர்கள் போன்று கொண்டாடித் தீர்த்தனர்!
புலிகள் விரட்டியது கொடுமைதான் ஆயினும்
புலிகள் பெயரால் காலத்தை ஓட்டி
பழிகள் செய்து தம்வாழ்வினை நகர்த்தும்
பழிகாரர் செயலை பழித்தே விடுவோம்!
வலிகள் தீர மருந்துகள் உண்டோ
வாதுகள் செய்ததில் நாமென்ன கண்டோம்
சூதுகள் செய்யும் ஆட்சி யாளரால்
ஏதும் நடந்ததா ஏதிலிகள் வாழ்வில்!
பயங்கரவாதிகள் செயலைப்பலரும் பழித்தனர்
தம்பயங்கரம் மறைக்க திரையாய் ஆக்கினர்
பயங்கரம் தீர்த்திடும் வழிியினைக் கண்டனரா
பயங்கர வாழ்வையே பரிசாகவும் ஆக்கினர்!
யுத்தம் முடிந்தால் நித்தம் மகிழலாம்
பத்தும் பலதும் கூறியே நாளும்
சித்த மில்லா அரசியல் வாதிகள்
சொத்து சேர்த்தனர் அவர்களுக் காங்கே!
ஐந்து வருடம் முடிந்தும் இன்றும்
நைந்து வாழ்ந்ததில் மாற்றம் இல்லை
ஏய்ப்புகள் மட்டுமே எமது சொத்தாய்
வாய்க்குள் அடக்கி வதங்கி வாடுகின்றோம்!
இதுவரை எமக்காக எதனைச் செய்தீர்
புதுமை படைப்பதாய் கூறும் நீவிர்
எதுவுமின்றி இருபத்து நான்கு வருடங்களாக
சாதுக்களாக வாழ்வை நகர்த்து கின்றோம்!
சாது மிரண்டால் காடு தாங்காது
சண்டாளர் வால்கள் ஒட்டவே அறுந்திடும்
மண்டைகள் உருளும் தொண்டைகள் அறுந்து
கண்டே நாடும் கலங்கி நிற்கும்!
இதுவரை வாழ்ந்த நம்மைப் போல
இனிவரும் சமூகம் படுத்துக் கிடக்காது
கனி வரும் என்று காத்தும் இராது
கனிய வைத்தே உண்டு மகிழும்!
பனித்துளி அல்ல எமது வாழ்வு
நுனியில் இருந்து மறைந்து போக
நானிலந் தன்னில் ஆறாய் ஓட்டிடும்
காணுவர் கயவர் நாணுவர் அன்று!
எண்ணி மகிழாதீர் இதற்கு மேலும்
கண்ணியமாக நடத்துவீர் எம்மை
புண்ணியமல்ல நாம் உமைக் கேட்பது
மண்ணில் உள்ள நமது உரிமையே!