முன்ஜென்மம் – ஓர் சிறப்புக் கண்ணோட்டம்

அறிமுகம்- முன் ஜென்மம் பற்றிய பல தகவல்களை ஏலவே அறிந்திருந்தாலும் அவை பற்றி எழுதும் எண்ணம் எனக்கு என்றும் ஏற்பட்டதில்லை. காரணம் அந்த விடயத்தில் ஏதோ ஒரு விதத்தில், நாமறியாத சில உண்மைகள் பொதிந்துள்ளன என நான் எண்ணியிருந்ததே! அப்படியானவைகள் மக்களால் விளங்கிக் கொள்ளப்பட்ட விதத்தில் குளறுபடிகள் இருக்க வேண்டும் என்பதும் எனது எண்ணம். அதற்குக் காரணம், அது போன்ற, ஏழு ஜென்மம் அல்லது அதற்கு மேலும் எடுக்கும் கொள்கைகள் எப்படியோ மதங்களின் பெயரால் கூறப்பட்டுக் கொண்டிருந்தமையே!


மதங்களில் அவை காணப்படுகின்றனவோ என்னவோ தனது உலக வாழ்வை நிறைவு செய்யாத ஆவிகள் பேயாக அலைவதாகவும், சில அவரவர் நடபடிகளுக்கு ஏற்ப ஜென்மங்களை எடுத்து முன்ஜென்ம வினையைத் தீர்ப்பதாகவும் மக்கள் மத்தியில் கதைகள் கூறப்படுகின்றன. முத்தியடைந்த ஆன்மா பிறப்பை நிறுத்திக் கொள்வதாகவும் கூறப்படுகிறது. இவைகளுக்கு எல்லாம் ஆதாரங்கள் எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. கர்ண பரம்பரையாக வந்த கதைகள் உள. மேலும், ஏழு ஜென்மம், 550 ஜென்மம், அதற்கு மேலும் ஜென்மம் முடிவு காண வேண்டிய நிலையை ஏற்படுத்தினாலும், முன்ஜென்மம் என்பதன் பின்னணியில், புறக்கணித்திட முடியா ஓர் மர்மம் மறைந்து இருப்பதாகத் தெரிகிறது. அதன் முடிச்சு அவிழ்க்கப்படாமலே இதுகாலவரை இருப்பதும் உண்மையே!
இவைகளில் உள்ள தர்க்கங்களைப் பேச நான் இக்கட்டுரையைத் தொடரவில்லை. மாறாக, இத்தலைப்பில் எழுதுவதற்கு என்னைத் தூண்டியது PJ என்ற இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த திரு. பி.ஜைனுல் ஆபிதீன் என்பவரின் கேள்வி பதில்கள் அடங்கிய காணொளி ஒன்றே !
அக்காணொளியின் URL: http://www.youtube.com/watch?v=A2u9CAe9A5c&feature=player_embedded#
மனித உரிமை: இப்பூலகில் எதனையும் கூறுவதற்கு எவருக்கும் எங்கும் உரிமை உண்டு, அது எல்லை தாண்டாது, பிறரது மனங்களைப் புண்படுத்தாது இருக்குமாயின். இவ்வடிப்படையில் கூறுவது அவரவர் பிறப்புரிமை. அவற்றில் பிழைகள் காணப்படுமாயின், அவை அவர்களுக்கும் இறைவனுக்கும் இடையில் இருக்கும் பிரச்சினை. எவரதும் மதக் கொள்கைகளில் அத்து மீறி தலையிடுவதும், அவற்றை விமர்சிப்பதும் ஏற்புடைக் கொள்கையல்ல. அவை குழப்பத்தை, அமைதியின்மையை ஏற்படுத்துவன. இஸ்லாத்தால் தடை செய்யப்பட்டுள்ளன. நமது கருத்தை கொள்கையை சரியான முறையில் முன்வைப்பதன் மூலம், அல்லது அவர்களது மதங்களில் உள்ள உண்மையான தகவல்களை வெளியிடுவதன் மூலம் இறைவனுக்கும் அனைத்து மக்களுக்கும் நமது சேவையை அளித்திடலாம்.
மக்களை அஞ்ஞான இருளிலிருந்து அகற்றுவதில் ஒவ்வொரு மனிதனுக்கும் சிறப்புப் பங்குண்டு, பொறுப்புண்டு. அதை நிறைவேற்றும் முறைமையும் உண்டு. அவை பற்றி மிகஅழகாக புனித குர்ஆன் விளக்கியுமுள்ளது. மிகச் சிறந்த நன்மையைக் கொண்டு தீமையைக் களைவீராக என்பது குர்ஆனியக் கட்டளை. எது மிக அழகானதோ அதைக் கொண்டு தர்க்கம் செய்வீராக. பொதுவான விடயங்களில் ஒன்று படுவோம் எனக் கூறி வேற்றுமையிலும் ஒற்றுமை காண வழி கூறுகிறது குர்ஆன். இவ்வறிவுறுத்தலைத் தாண்டிச் செய்யப்படும் விமர்சனங்கள் அனைத்தும் முதலில் நிராகரிப்பாகிறது. இரண்டாவது, குற்றமாகின்றது.
தீமைகள் தீமைகளை அகற்றுவதில்லை. தீமைகள் தீமைகளையே வளர்க்குமே அல்லாது நன்மை பயப்பதில்லை என்பதை வெகுவாக ஆதரிப்பவன் நான். அதனடிப்படையிலேயே தான் பழிக்குப்பழி உண்டு என மூஸா என்ற மோஸே நபியவர்களுக்குத் தான் பரிந்துரை செய்த சட்டத்துக்கு திருத்தம் ஒன்றை முன்வைக்கிறான் அல்லாஹ் புனித குர்ஆனினூடே. பழிக்குப் பழி வாங்குவதில் உங்களுக்கு நல்ல வாழ்வு உண்டு என்று கூறும் குர்ஆன், அதே வேளை, அவர்களுக்குப் பழிக்குப் பழி வாங்குவதை விதித்திருந்தோம் எனினும் நீங்கள் அதனை மன்னித்து விடுவீர்களாயின் உங்களது தீமைகளுக்குப் பரிகாரமாக அது ஆகிவிடும் என்று பயன்தரு திருத்தம் கொண்ட ஆலோசனை ஒன்றை முன் வைக்கின்றது.
6:108- ‘அல்லாஹ்வையன்றி அவர்கள் அழைத்துக் கொண்டிருப் போரை நீங்கள் திட்டாதீர்கள். அப்பொழுது அவர்களும் அறிவின்றி வரம்புமீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள்’ என்கிறான் வல்ல நாயன் அல்லாஹ். இது, மனிதர் அவனை ஏசுவதால் அவனுக்குக் குறைவு ஏற்படும் என்பதற்காகவல்ல, மாறாக மக்கள் மத்தியில் குழப்பங்கள் அநாவசியமாக ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கே. பல் வேறு சந்தர்ப்பங்களில் சிந்திக்கத் தூண்டிக் கொண்டிருக்கும் குர்ஆன், நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் அறிந்தவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள் போன்ற பல வசனங்களைக் கூறி, நாம் அறிய வேண்டிய விடயங்கள் நிறையவே உள்ளன என்பதையும் மறைமுகமாகச் சுட்டிக் காட்டுகின்றது. அறிவை அறியுமிடங்கள் எங்கிருந்தாலும் அது யாரிடமிருந்தாலும் தேடிப் பெற்றுக் கொள்ளத் தூண்டுகிறது. சீனா தேசம் சென்றாயினும் ஞானத்தைத் தேடுங்கள் என்ற நாயக வாக்கியமும் குர்ஆனை ஒட்டி முன் வைக்கப்பட்டதே!
பிழையென்று கூறுவது அழிவுசாரா, அறிவுசார் தன்மை: நாம் ஒரு கருத்தை, எழுந்தமானமாக, மிக இலகுவாக பிழை எனக் கூறி விடலாம். இப்படிக் கூற எவரும் பேரறிவாளனாக இருக்க வேண்டும் என்பதுவுமில்லை. காரணம் அது முட்டாள்களின் அல்லது அறிவீனர்களின் செயல் என்பதே. அதனாலேயே புனித குர்ஆன் அறிவீனர்களைப் புறக்கணித்து விடுமாறும், அறிவீனர்களில் ஆவதை விட்டும் பாதுகாப்புத் தேடுமாறும், அறிவீனருக்கும் உமக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் அறைகூவி ஆலோசனையும் தருகின்றது.
ஆக, நாம் எதிலாவது பிழை காணுவோமாயின், அவை மக்கள் நலன் கருதி அடையாளம் காட்டப்படுதல் வரவேற்கப்படக் கூடியதே. அக் கைங்கரியத்தைச் செய்ய முனைவோர் தம் மனதில் எந்த மறைவான நோக்கங்களும் இன்றி, சரியான தகவல்களுடனும், உண்மையான சான்றுகளுடனும், நீதமான முறையிலும், குர்ஆன் கூறும் மிகச் சிறந்த முறையில் பிழைகளை நிராகரிக்கலாம் அன்றி சரியானதை முன்வைக்கலாம். இதுவே குர்ஆன் கூறும் வழிமுறை.

இறைவன்கூட, 3:18 இல் – நீதியை நிலைநாட்டக் கூடியவனாக உள்ள நிலையில் தன்னைத் தவிர வேறு யாருமில்லை என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான். அவ்வாறே வானவர்களும் அறிஞர்களும் சான்று பகர்கின்றனர், எனத் தனது குர்ஆனில் பதிவாக்கி உள்ளான். இது ஓரிறைக் கொள்கையை வலியுறுத்துவதே தவிர வேறில்லை. இதனையே மற்றைய மதங்களும் பேசுகின்றன. ஆயினும் இங்கு பிழையான வணக்கமுறை தடுக்கப்படுவதில்,உள்ள நடைமுறை பிழையைச் சுட்டிக் கொண்டிராது சரியை, பின்பற்ற வேண்டிதைக் கூறுவது. அல்லாஹ் பிழைகளின் மேல் சரியைப் போடும் பண்பு வெளிப்படுகின்றது.

பலவந்தமில்லை மார்க்கத்தில்: இறைவன் பிரபஞ்சத்தைப் படைத்த தனது அபார சக்தியை, பலத்தை, அதிகாரத்தைப் பாவித்து பலாத்காரமாகவோ அன்றி வேறு வகையிலோ அவனைத் தவிர வேறு யாரும் இல்லை. இவ்வுலகை வேறு யாரும் ஆளவுமில்லை என நம்மனை வரையும் நம்ப வைத்திருக்கலாம். ஆனால் அவன் அவ்வாறு செய்யாமல், மார்க்கத்தில் நிர்ப்பந்தமில்லை எனக்கூறி, மனித உரிமைகளை மதித்து, நமக்கு அவன் அளித்துள்ள அரிய பொக்கிஷமான ஆறாவதறிவைப் பிரயோகிக்கும் உரிமையை மறுக்காது, அனைத்தையும் அறிவால் அறிந்து, நமக்கு நாமே நீதிபதிகளாகி, நமது செயல்களை நாமே மாற்றிக் கொள்ளும் வகை செய்துள்ளான். அதனாலேயே ஒரு சமூகம் தன்னை மாற்றிக் கொள்ளாவரை தான் அவர்களில் எவ்வித மாற்றத்தையும் செய்வதில்லை எனவும் கூறியுள்ளான் (பார்க்க 13:11).

அவன் விரும்பி இருந்தால் மக்கள் அனைவரையும் ஓரே சமுதாயமாகவே படைத்திருக்கலாம்.ஆனால் அப்படிச் செய்யவில்லை. காரணம் அப்படிச் செய்திருந்தால் மிருகங்களுக்கும் நமக்கும் எவ்வித வித்தியாசமும் இருந்திருக்காது. நமக்குத் தரப்பட்ட ஆறாவதறிவைத் தந்தி ருக்கத் தேவையில்லை என்றாகிவிடும். படைப்பினங்களில் மனிதனை உயரந்த படைப்பினமாகப் படைத்திருக்கிறேன் என்பதற்கும் முரண்பட்டு விடும். பலவந்தத்தின் பேரில் செய்யப்படுபவை சரியான அறிதலைப் பெறுவதுமில்லை, நிலைத்திருப்பதுமில்லை, உரிய பயன்பாட்டை தந்து நன்மை பயப்பதுமில்லை. ஆக வீண் என்பதனுள் தன்னைச் சங்கமமாக்கி இறையாணையையும் மீறிய குற்றத்துக்காளாக்கிவிடுகிறது.

முரண்பாடுகள் நிரந்தரமாவை: ஆக, அனைவரும் ஓரே கருத்தில் வாழ வேண்டும் என யாரும் எதிர்பார்ப்பதும், அல்லாதவர்களைச் சாடுவதும் குர்ஆனால் அனுமதிக்கப் படாதது.இஸ்லாத்துள் முழுமையாக நுழைந்து விடுங்கள் என்ற அல்லாஹ்வின் அழைப்பு இதனைப் புறந்தள்ளியதல்ல என்பதை உணர்தல் நன்மை தரும். நம்மை அளக்கும் அளவு கோலாக அமைவது, நமது வாயிலிருந்து வரும் வசனங்களும் கருத்துக்களுமே!மறுமையில் நமது தோல்கள்கூட பேச வைக்கப்படும் என்பதும் இதனை ஒட்டியே. நாம் நிர்ப்பந்த மூலமாகவோ, பிழையான வழி களிலோ பிற மதத்தவர்களின் உணர்வுகளைச் சாடுவதைத் தவிர்க்க வேண்டும். அதற்கு இறைவனின் அனுக்கிரகமும் கிடையாது என்பதை நன்குணர வேண்டும்.

இஸ்லாம் ஓர் சாந்தி, சமாதானத்தைப் போதிக்கும் மார்க்கம். சகிப்புத் தன்மையைப் போதிக்கும் மார்க்கம். சபூர் என்ற சகிப்பைத் தன்பெயர்களில் ஒன்றாகக் கொண்டவன் அல்லாஹ் என்பதை நம்மவர் புரிந்து கொள்ள வேண்டும். நபிகளார் குர்ஆனின்படி வாழ்ந்து காட்டியே உலக மக்களைக் கவர்ந்தார்கள். அதன் வழியைப் பின்பற்றிச் செல்வதையே முஸ்லிம்களிடம் அல்லாஹ்வும், அவனது தூதரும் எதிர்பார்க்கின்றனர். மாறான அனைத்தும் நாம் இறைவழியை விட்டு விலகிப் போவதைத் தெளிவாகக் காட்டும்.மேலும், கீழ்நிலையிலுள்ள தனியாள் செயற்பாட்டைவிட, மேல்மட்ட ஸ்தாபன ரீதியான செயற்பாடு பாரிய தாக்கத்தை அவர்தம் பேச்சுக்கு அடிப்படையான கொள்கையையுடைய மார்க்கத்துக்கும், அதனைப் பின்பற்றுவோருக்கும் ஏற்படுத்திவிடும். அமைதியின்மையையும் உருவாக்கி விடும்.

இறைதீர்ப்பே நிறை தீர்ப்பு: இந்த வகையில், இறையறிவை மக்களுக்கு எடுத்துச் செல்லும் போது, நமது ஆறாவதறிவைப் பிரயோகித்துச் செய்யப்படும் நடவடிக்கைகள் இறைவனால் ஏற்கப்படுமிடத்து அவன் தனது கருவூலமான ஞான வாசலைத் திறந்து விடுவான். 6:59 மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவற்றை அவனையன்றி அறிய மாட்டார்கள் என்கிறான். அப்போது கல்வியின் மூலம் அறிய முடியாதவையும் தெளிவாகிவிடும். எவருக்கு அல்லாஹ் வழி காட்ட விரும்பு கின்றானோ அவர்களின் நெஞ்சங்களை இஸ்லாத்தின்பால் விரிவாக்கி விடுகிறேன் என்கிறான் பார்க்க 6:125.

குர்ஆனிய அறிவே அனைத்துக்கும் தீர்வாகுமே தவிர எண்ணங்களல்ல. நீங்கள் எண்ணங்களில் பெரும்பாலானவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். எண்ணங்களில் சில பாவமாகும். துருவி ஆராய்ந்து கொண்டிருக்காதீர்கள். உங்களில் சிலர் சிலரைப் புறம் பேசவும் வேண்டாம் என்கிறது 49:12. அல்லாஹ் உமக்கு அறிவித்ததைக் கொண்டு மனிதர்களுக்கிடையே தீர்ப்பு வழங்கிடவே, உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை உம்பால் நாம் இறக்கி உள்ளோம். சதிகாரர்களுக்கு வழக்காடுபவராக நீர் ஆகிவிடாதீர். அல்குர்ஆன் 4:105. ஆக பிழைகள் நிராகரிக்கப்படலாம் உரிய பண்போடு. பிழையான பண்போடு அல்ல.

ஓரான்மாவே உயிரினங்கள்: பேச வந்ததை இன்னும் பேசாமல் இருப்பது எனது ஞாபகத்தைத் தூண்ட… முன்ஜென்மம் பற்றி இஸ்லாம் என்ன கருத்தைக் கொண்டுள்ளது என்பதை, நமக்கருளப்பட்ட ஓரே வழியான – குர் ஆன் வழியில்- காண்போமாயின், அது ஓர் மிகச் சிறந்த பதிலை நமக்குத் தரக் காத்திருப்பதை அறிய முடிகிறது. உய்த்துணர்வோருக்கே அருளப்பட்டது குர்ஆன் என்பதால், உய்த்துணரத்தக்க உண்மையைக் கூறுகிறது. அதாவது அனைத்து உயிரினங்களும் ஓரே ஆன்மாவில் இருந்து படைக்கப்பட்டுள்ளன எனக் கூறும் கொள்கையே அது. ஒன்றிலிருந்து இன்னொன்று தோன்றியதல்ல. ஒன்றிலே அனைத்தும் தோன்றின. கலன்கள்கூட ஒன்று இரட்டித்துப் பல்கிப் பெருகினவே தவிர, ஒன்றில் இருந்து மாற்றம் பெற்றனவல்ல. ஒன்றில் அனைத்தும், அனைத்திலும் ஒன்று என்பதற்கு இதனை ஆதாரமாகக் கொள்ளலாம். பின்வரும் வசனங்கள் இவ்வாறு கூறுகின்றன.

4:1-மனிதர்களே! உங்கள் ரப்பை (lord) நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள். அவன் எத்தகையவனென்றால் 7:189 – உங்களை ஓரே ஆத்மாவிலிருந்து படைத்தான். அதன் ஜோடியை அதிலிருந்தே படைத்தான்.

6:98- அவன் எத்தகையவனென்றால், ஓரே ஆத்மாவில் இருந்து உங்களைப் படைத்தான். இதை மறுவிதமாகக் கூறின் ஒரு ஆன்மா பல பல நிலைகளில், பல உருவங்களாக, உயிரினங்களாகக் காட்சி தந்து கொண்டு இருக்கின்றன. நகைகளாக,கட்டிகாளாக, கம்பிகளாக, தகடுகளாக, உருவங்களாக மட்டுமே நாம் தங்கத்தைக் காண்கிறோம்.  தங்கம் பல உருக்களைப் பெற்றுள்ளது. தவிர அது பிறவி எடுக்கவில்லை.

மின்சாரம், தனது இயக்கத்துக்காக,தயாரான பல் வேறு பொருட்களை அடைந்து பல நிலைகளில் இயக்கிக் கொண்டிருப்பதைக் காணும் யாரும் அது பல பிறவிகள் எடுத்திருப்பதாகக் கூறுவதில்லை. இதனை ஞானவான்களாகிய அறிஞர் பெருமக்கள் விளக்குவார்களாயின் உலக முடிவுவரை எழுதிக் கொண்டே இருப்பதற்கு உரிய உண்மைகள் இதில் பொதிந்துள்ளன. ஆயினும் நான் மிகச் சுருக்கமாக எனது வரையறுக்கப்பட்ட அறிவைக் கொண்டும், வாசகர் நலன் கருதியும் முன்ஜென்மம் பற்றிப் பின்வரும் விளக்கத்தை முன்வைப்பது பொருத்தமாக இருக்கும்.

இதனையே அல்லாஹ் ஏழு கடல்களையும், இன்னும் ஏழுகடல்களையும் மையாக்கி, அனைத்து மரங்களையும் எழுது கோலாக்கி எழுதினாலும் எழுதி முடியாது அவனது அருட்கொடை என்கின்றான்.

மனிதர், மற்றுமுள்ள அனைத்து உயிரினங்கள் அனைத்திலும் அன்பு, பிரியம் கொட்டிக் கிடக்கின்றது, அரவணைத்து நிற்கின்றது. பிரயோகிப்போரின்அல்லது வெளிப்படும்போது அளவுகள் வேண்டுமாயின் ஆளை, பாவனையை, இடத்தை, காலத்தைப் பொறுத்து விகிதாசாரத்தில் வேறுபடலாம். இது PJஅவர்களின் பின்வரும் காணொளிக்கும் இக் கட்டுரையும் பதிலாயமைகின்றது. அதனை எனது PJ யின் பிதற்றல்கள் என்ற கட்டுரையில் பார்க்க. அதற்குக் காரணமும் அவர்கள் ஓருயிர் வெவ்வேறு மட்டத்தில், இடங்களில், காலங்களில், நிலைகளில் இருந்த போது, அவற்றுக்கேற்ப மாறுபட்ட தன்மைகளைக் கொண்டிருந்தமையாக இருக்க வேண்டுமே தவிர, அவர் கூறுவது போல் அல்லாஹ் அன்பைப் பிரியத்தை அவ்வப்போது மனிதரிடையே உருவாக்குகிறான் என்ற பிழையான வேறு கருத்தைக் கொண்டதாக இருக்க முடியாது. ஓர் குடும்பப் பெண் பலர் முன்னிலையில், பகிரங்கமாகத் தன் அன்பைத் தன் கனவனிடம் காட்டிக் கொண்டிருக்க மாட்டாள். தன் பிள்ளைகள், உறவினர்கள் முன்னிலையில் கூட அவ்வாறே. சந்தர்ப்ப சூழல், மனநிலை, உடல்நிலை போன்றவைகள் கூட பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும். 

(http://www.youtube.com/watch?v=A2u9CAe9A5c&feature=player_embedded#)

முன்பின் ஜென்ம விளக்கம்: அதாவது, உலகம் தோன்றிய காலம் முதல் உலகின் கண் தோன்றிய அனைத்து உயிரினங்களும் ஓரே ஆத்மாவில் இருந்து தோன்றி இருப்பதாகக் குர்ஆன் கூறுவதால், மிகச் சிறந்த ஞாபக சக்தியைக் கொண்ட, உயிரினங்களில் தனது கருத்தை முன்வைக்கக் கூடிய அல்லது வெளிப்படுத்தக்கூடிய மனித இனம் சார்ந்த, அதிகூடிய நினைவாற்றலைக் கொண்ட மனிதரில் மிகச் சிலர் தமது தற்போதைய இத்தோற்றத்துக்குச் சொந்தமாகவுள்ள ஆத்மா, வேறு எங்கெல்லாம் முன்னர் வியாபித்து இருந்துள்ளன, தற்போது இருக்கின்றன, எதிர்காலத்தில் இருக்கவுள்ளன என்ற நிகழ்வுகளை ஏதோ ஓர் நிலையில் நினைவூடாக, கனவூடாக, அறிதுயில் மூலம் அறிந்து நினைவுகூர்ந்து கொள்கின்றனர். அப்படி அறிந்தவைகளை சிலர் வெளிப்படுத்தவும் செய்கின்றனர். அங்கு பேசுவது மனிதராக இருப்பினும் ஆன்மா அடைந்த, அடைந்து கொண்டிருக்கிற, அடையவுள்ளவையே தவிர உருவல்ல.

இதனையே பதப் பிரயோகத்தில் பல பிறப்புக்கள் என்கின்றனர். மிகக் குறைந்தவையே, தாம், தம் ஆன்மா பல்வேறு பௌதிக நிலைகளில் இருந்தபோது செய்த சாகசங்கள், அழிவுகள், ஆக்கங்கள், நோக்கங்களான அநுபவங்களை வெளிப்படுத்தியதனால், முன் பின் ஜென்மங்களாக அல்லது, அவை வேறு வகையாக இறை நிலையாகக் கருதப்பட்டு அவதாரங்களாகவும் கூறப்படுகின்றன. இறைவன் தேவையற்றவன் என்பதனால் பின்னைய கருத்து அதன் வலுவை தானாகவே இழந்துவிடுகிறது. ஆகுக என்ற சொல்லின் மூலம் பிரபஞ்சத்தைப் படைத்ததாகக் கூறும் இறைவனுக்கு இத்தகு பண்புகள் இருக்க முடியாது. அவை மனிதனுக்குரிய பண்புகள். முன்னைய ஓருயிரின் பன்முகமே நமது கருத்துக்கு உட்படுகிறது.


தத்துவங்களின் வித்து: இறைவனும் தான் நேரடியாக எதனையும் செய்யாமல் காரண காரியங்களின் அடிப்படையில், தன்னிலிருந்து, தன்னால் தோற்றுவிக்கப்பட்ட தோன்றல்கள் மூலமே அனைத்தையும் செய்விக்கிறான். இங்கு உருவாக்கியவன், செய்வித்தவனும், செய்தவனும், செய்யப்பட்டவனும் அவனே. படைப்புகள் காரண காரியங்களாகின்றன. நிறைவேற்றி வைப்பவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்ற அவன் கோட்பாடு இதனை விளக்கப் போதுமானது. இதனால்தான் உயிர்களிடத்தில் அன்பு வேண்டும். அன்பே சிவம். அன்பு தான் இன்ப ஊற்று. அன்புக்கும் உண்டோ அடைக்குந் தாழ். ஈருயிரும் ஓருடலுமாக இருப்பது. அன்பினால் என்றுமே இன்பங் காணலாம். மனிதன் மட்டுமல்ல உயிரினங்கள் அனைத்தும் அன்பு செலுத்திக் கொண்டிருப்பதன் தத்துவம் அவை ஓருயிராய் இருப்பதே.

இப்பண்புகளின் தன்மை அதிகம் காணப்படுபவர்களே அட்ட அவதானிகளாக, சோடவதானிகளாக, தச அவதானிகளாக, சதாவதானிகளாக மிளிர்கின்றனர். சுகப்படுத்தல், உயிர் கொடுத்தல், உணவளித்தல், ஊறு விளைவித்தல், உய்த்துணரல், பகுத்தறிதல், வேற்றுமை காணல், களைதல் இப்படி வகை தொகையின்றி வளர்ந்து பிரபஞ்சத்தையே ஆக்கிரமித்துக் கொள்ளும். குங்பூ, புத்த துறவிகளின் சாகசங்கள், மறைதல், வெளிப்படுதல். இடம் மாறல், நினைவிற்குக் கொணர்தல், என அடுக்கிக் கொண்டே போகலாம் தொழுகையே இறைவனை நினைவுகூரல் (20:14) என்ற இறை தத்துவம் இதற்கு மேலும் விளக்கம் தருவது.

உங்கள் முன்னோர்களை நினைவுகூர்வது போல், உங்கள் பிள்ளைகளை நினைவுகூர்வது போல் என்னை நினை கூருங்கள் என அல்லாஹ் அழைப்பு விடுப்பதன் அடித்தளமே அவனில் தோன்றிய ஓருயிர் என்ற தத்துவமே. இதனை உணருவோர், வேதங்கள், ஆகமங்கள், பைபிள், கட்டளைகள் எனப்படும் சுஹுபுகள், குர்ஆன் போன்றவை கூறும் பரம் பொருள், சர்வேசுரன், பரமபிதா, அல்லாஹ் என்றெல்லாம் பிரயோகப்படுத்திய பதவுண்மைளை அறிந்து கொள்வர். சீறா பாடிய உமர் கூட ‘திருவினும் திருவாய்…’ என்ற பாடல் மூலம் மறைவாகக் கூறிச் சென்றுள்ளமையும் இதுவே. பட்டினத்தார், ‘நட்ட கல்லைத் தெய்வம்… நாதன் உன்னுள் இருக்கையில்…’ எனவும் கூறியதன் தாற்பரியமும், யேசுநாதர் நான் எல்லாமாய் இருக்கிறேன் என்பதுவும் இதுவே. நான் அல்லாஹ்வாய் இருக்கிறேன் எனக் கூறவில்லை. யேசுவின் மேலங்கியைத் தொட்ட பெண், அவர் அறியாமலே பிணி தீர்ந்ததும் இதன் பின்னணியைக் கொண்டதே. மன்சூர் கல்லாஜ் ரஹ்மத்துல்லாஹ் என்ற இறை நேசர், தானே இறைவனுடைய திருப்பெயர்களில் ஒன்றான ‘ஹக்’ (சத்தியமானவன்) எனக் கூறிய, இறந்தவனுக்கு உயிர் கொடுத்தது எல்லாம் ஓருயிர் என்ற இவ்வழி வந்ததுவே.

இறை வேலையைச் செய்பவர் அவனின் பிரதிநிதியாகியே அதனைச் செய்ய முடியும். அதுவே அல்லாஹ் மனிதனை தனது பிரதிநிதியாகப் படைக்கப் போகிறேன் என்று தன் வானவரிடம் கூறியது. கீதை கூறும் மகாபாரதத் தத்துவமும் இதுவே. அல்லாஹ்வும் இதுபோன்ற யுத்தங்களைச் செய்யும்படி பணித்துள்ளமையும் தெரிந்ததே. தக்க காரணமின்றி ஒரு மனிதனைக் கொல்வது மனித சமூதாயத்தையே கொன்றதை ஒத்தது எனக் கூறிய அல்லாஹ் யுத்தம் செய்து எதிரிகளைக் கொல்லும்படியும் கூறியிருப்பது உய்த்துணரப்பட வேண்டியது. அதனால்தான் அல்லாஹ் சொற்களையோ, செயல்களையோ பார்ப்பவனல்லன், உள்ளத்தை மட்டுமே பார்க்கிறான் என அவனை தன்திருமறையில் திருவாய் மலர்ந்தருளியுள்ளான். அதுவே உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது போன்ற கருத்து வழங்கக் காரணமாயின. செயலின் நோக்கம் அவன் அறிந்ததே.

மூஸா அலை தேடிச் சென்ற கற்றறிந்த நபர் சிறுவனைக் கொன்றது, மதிலை கூலி பெறாது கட்டிக் கொடுத்தது, படகில் துவாரமிட்டது எல்லாம் மறைவான அது பற்றிய உண்மைகள், ஓருயிர் தத்துவத்தின் மூலம் தெரிய வந்ததாக இருக்க வேண்டும். அல்லாஹ்வும், தான் விரும்பியோருக்கு அவர் தம் உள்ளங்களில் அவற்றைப் போடுவான். இங்கு அந்நடைமுறை பேணப்படவில்லை என்பது தெரிகிறது. உங்களை அழித்துவிட்டு உங்களில் இருந்தே இன்னோர் சமுதாயத்தை உருவாக்கி அவர்களைப் பொறுப்பாளி ஆக்கிவிடுவேன் என்பதெல்லாம் இன்னொன்றைப் படைத்தாகக் கூறவில்லை. ஆதமின் சந்ததிகள் என்றும், இபுறாகிமின் சந்ததிகளென்றும், உங்கள் மூதாதையர் என்றும் அல்லாஹ் பேசியிருப்பது இவ்வோர் உயிரின் பண்பேயாகும்.

இரும்பில் இருந்து அனைத்து ஆயுதங்களும் உருவாகி இருந்தாலும் அவற்றில் எதையும் இரும்பு என்பதில்லை. காண்பது படைப்பு களையே என்பதால் அவற்றின் பெயராலேயே அழைக்கப்படுகின்றன. இறைவனிடம் இருந்து வந்தவை இறை பண்பை வெளிப்படுத்துவனவே தவிர இறைவனாகிவிட முடியாது. கண்ணாடியில் நம்மைக் காண்பவர் கண்ணாடியில் தான் இருப்பதாகக் கூற முடியாது.

நீதிபதியாக இருந்து கொலைத் தீர்ப்புக் கூறியவர் குற்றவாளியாகக் கருதப்படுவதில்லை. அத்தோடு நீதிபதி என்ற நிலையில் அம்மனிதர் இருந்து கூறுவது மட்டுமே தீர்ப்புமாகும். இறைவனைத் தன்னில் காணும் பண்பும் இத்தகைத்தே. அவனைப் பார்வைகள் அடைய முடியாது. ஆனால் எல்லோரது பார்வைகளையும் அடைகிறான் என்பதுவும் அவனது திருவசனம் 6:103. அதனாலேயே, இன்னும் உங்களுக்குள்ளேயும் நீங்கள் கவனித்துப் பார்க்க வேண்டாமா என 51:21 வசனம் மூலம் நம்மை வினவிக் கொண்டிருக்கிறான்

அல்லாஹ். உயிர் நரம்பான ஊரிதாவை விடவும் மிக அருகாமையில் இருக்கிறேன் எனக் கூறியுள்ளானே தவிர அவன் நம்மில் உயிராக இருக்கிறான் எனக் கூறவில்லை. அவனைப் போன்று எப்பொருளும் இல்லை என்பதையும் மனத்தில் இருத்தல் அவசியம். இரும்பைக்கூட இறைவன் விண்ணிலிருந்தே இப்பூவுலகிற்கு அனுப்பியதாக குர்ஆன் கூறுவதும் இவ்வரிய தத்துவத்தினை விளக்கப் போதுமானது.

நமதுடம்புக்கு அத்தியாவசியம் தேவைப்படுவதான இரும்பு, மனித சக்தியால் இப்பூலகின் பௌதிக தன்மைக்குள் உருவாக்கப்பட முடியாதது என்பதே. நமதுடம்பில், இரத்தம் நுழைய முடியாத மிக மிக நுண்ணிய குழாய்கள் மூலம் குருதியைக் கொண்டு சென்று நமதுட லைப் போஷிக்கும் வேலையை இரும்பே செய்கிறது. DNA, Cloning, stem cell தத்துவம் எல்லாம் இதன் பாற்பட்டதே.

 

வித்தின் இரகசியம்: இப்பிரபஞ்சத்தில் அனைத்தும் அவனைத் துதி செய்கின்றன. அவனை வணங்குகின்றன. அவனது புகழைப் பாடு கின்றன. அவன் புகழ் பாடாதது எதுவுமில்லை. போன்ற அல்லாஹ் வின் குர்ஆனிய வசனங்கள். ஆக வணங்கியவனும் அவனே, வணங்கப்பட்டவனும் அவனே என்ற அத்துவைதம், சூபித்துவ தத்துவம் விளக்கம் பெறுகின்றது. அதாவது அனைத்தும் அவனுள் அடக்கமே. எதுவும் அவனாகிவிடாது. அவன் அனைத்தும் அறிந்தவன். அவனது அறிவில் இல்லாதது எதுவுமில்லை. தேவையும் எதுவுமில்லை. அதனால் கண்ணின்றிப் பார்ப்பவன். காதின்றிக் கேட்பவன். உங்கள் கோரிக்கைக்கு உங்களுடனேயே இருந்து பதில் அளிப்பவன். மன்னிப்பை ஏற்பவன். காருண்யன். அளவற்ற அன்புடையோன். நிகரற்ற அருளுடை யோன். ஆதியானவன். அந்தமானவன். மறைவானவன். வெளியானவன். தண்டிப்பவன். நீதி செலுத்துபவன். கூலி கொடுப்பவன்.சர்வ வியாபகன். ஓன்றானவன்.குணமற்ற,குணமுள்ள தன்மைகளை ஒருங்கே கொண்ட வன். அவன் நமது வர்ணனைகளுக்கொல்லாம் அப்பாற்பட்டவன்.

 

வணக்கம், தொழுகை என்பதெல்லாம் நமது ஆன்ம முன்னேற்றத் துக்காக இறைவனின் பெயரால் செய்யப்படுவனவே தவிர வேறில்லை. அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்து உண்பதைக் கொண்டு இதனை அறியலாம். நமது உய்வுக்கான வழிகளே அவனது குர்ஆனியச் சட்டம். அது அவனது தேவையல்ல.

 

கலிமாவின் உண்மை: இதனை லாயிலாக இல்லல்லாஹ் என்ற திருமந்திரமான ‘இல்லை நாயன் (சிருஷ்டி) அல்லாஹ்வைத் தவிர’ என்ற கருத்து விளக்கி நிற்கின்றது. ஒன்றில் அனைத்தும், அனைத் திலும் ஒன்று என்ற உண்மையும் உளதே. ஆயினும், அவனைப் போன்று எப்பொருளும் இல்லை என்ற 42:11 குர்ஆனிய வசனம் இன்னும் விளக்கம் தருவது. அவனே படைப்பாளனுக்கெல்லாம் படைப்பாளன். எப்பக்கம் திரும்பினும் அவன் வதனமே.

 

அவ்வோருயிர் தத்துவம், இந்த முன்பின் ஜென்மம் எனக் கருதிக் கூறப்படுவது, மின்சாரத்துக்கு பேசும் சக்தி இருந்தால், தான் எங்கெல்லாம், எப்படியெல்லாம், என்னெல்லாம் செய்வித்துக் கொண்டு இருந்தேன், இருக்கிறேன், இருப்பேன் போன்றவற்றைக் கூறுவதை ஒத்ததே. இக்கருத்து குர்ஆனிய வசனத்தால் அறியக் கூடியதாக உள்ளது. இந்த உண்மையை வெளிப்படுத்தியதில் அல்லது விளங்கிக் கொண்டதில் உள்ள தவறே முன்ஜென்மம் என்ற கோட்பாடாக மாறியிருக்கலாம்.

 

ஓர் ஆன்மா உலகம் தோன்றியுள்ள காலந்தொட்டுள்ள அனைத்து ஜென்மங்களையும் உள்ளடக்கியுள்ளது என்பதே உண்மை. அதனை யாரும் ஆதாரபூர்வமாக மறுக்க முடியாது. காரணம் உயிரினங்களின் தோற்றம், இறைவனிடம் இருந்து தோன்றியுள்ளன என அனைத்து மதங்களும் ஏற்றுக் கொண்டு உள்ளமையே.

 

இந்து சமய கொள்கைகள் ஏழு ஜென்மங்கள் பற்றிப் பேசினும், புத்த பிரான் அவர்கள் 550 ஜன்மங்களை நினைவு கூர்ந்துள்ளதாக அறிய வருகிறது. சமய ஆர்வலர்கள் இதற்கு அதிகமாகவும் இருக்கலாம் என்கின்றனர். விஞ்ஞானம் கூட அனைத்து உயிரினங்களிடமும் எதிர்ப்புச் சக்தி ஓரே விதமாகக் காணப்படுவதாகக் கூறியிருப்பது, அனைத்தும் ஓர் ஆன்மாவில் தோன்றியமையே என்ற கருத்துக்கு வலு சேர்க்கும். எல்லாம் வல்ல இறைவன், 6:38ஆம் வசனத்தில். ‘பூமியில் ஊர்ந்து திரிபவைகளும், தனது இறக்கைகளால் பறக்கக் கூடியவைகளும் உங்களைப் போன்ற இனமேயன்றி இல்லை. எதனையும் குறிப் பேட்டில் நாம் விட்டுவிடவில்லை. பின்னர் தம் ரப்பின்பால் அவை ஒன்று திரட்டப்படும்’ எனவும் கூறியுள்ளமையும் இது சார்ந்த பலமான உண்மையே. ஆறறிவுடன் சிறப்பாகப் படைக்கப்பட்ட மனிதன், ஐயறிவு மிருகத்துக்கும் கீழான நிலையில் உள்ளான் என பைபிளும் குர்ஆனும் கூறியிருப்பதும் உற்று நோக்கற்பாலதே. இவை மறைவு தேடி நிற்பன.

 

பிறப்புக்கள் பற்றி ஞானிகள்: அகஸ்தியர் ஞானம் 6 பாடல் 6. மறுபிறப்பை இவ்வாறு நிராகரிக்கிறது. அதாவது, தமது வாழ்க்கையை ஓட்டிக் கொள்வதற்காகவே மறுபிறப்பு பற்றி கதைகள் கூறி மக்களை ஏமாற்றியுள்ளார்கள் என்கிறார்.

 

அழிந்திடுவார் பாவத்தால் என்று சொல்லும்
கட்டிய நால் வேதமாறு சாஸ்திரமும்
அழிந்திடவே சொன்னதல்லால் வேறொன்று மில்லை
அதர்மமென்றும் தர்மமென்றும் இரண்டுண்டாக்கி
ஒழிந்திடுவாரென்று சொல்லி பிறப்புண்டென்றம்
உத்தமனாய்ப பிறப்பனென்று முலகத்தோர்கள்
தெளிந்திடுவார் சீஷரென்றும் குருக்களென்றும்
சீவனத்துக்கேயல்லோ தெளிந்து காணே!

 

சிவவாக்கியர் கூறுவதாவது: இறந்த மனிதர்கள் இனி எப்போதும் பிறப்பதில்லை என்பதே!

 

கறந்தபால் முலைபுகா கடைந்த வெண்ணெய் மோர்புகா
உடைந்த சங்கினோசையும் உயிர்களும் உடல்புகா
விழுந்தபூவு முதிர்ந்த காயும் மீண்டும் போய மரம்புகா
இறந்துபோன மானிடர் இனிப்பிறப் பதில்லையே!

பாச்சலூர் மங்கை விருத்தம்.

இதில் மற்றொரு பிறப்பு உண்டென்று கூறி வீணாக அலைகினறார்கள் என்கின்றது.

 

வித்தது மரத்தையீனும் மரமது வித்தையீனும்
பெற்றதாய் பிள்ளையீனும் பிள்ளையுமதுவேயீனும்
மற்றொரு பிறப்புண்டென்று மானிடப் பசுக்களெல்லாம்
பற்றிநின் றலைவதேதோ பாச்சலூர் கிராமத்தாரே!

 

மறைந்துள்ள முன் அனுபவ அறிவு: றைட் சகோதரர் தாம் பறக்க முடியும் என்ற கருத்தில் முயன்று இன்று நம்மனவைரையும் ஆகாயத் தில் பறந்து திரியும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியது, பறவைகளைக் கண்டதால் மட்டுமாக இருக்க முடியாது. பறத்தல் அவர்தம் ஆன்மப் பதிவாக இருந்திருக்கும். பறவைகளைக் கண்டது ஓர் தூண்டலாகவே இருந்திருக்கும். முன்னர் மனிதர் ஆகாயத்தில் பறந்து திரிந்ததாக சரித்திரங்கள் வாயிலாக அறிகிறோம். அநுமான் கூட பறந்ததை இராமாயணம் கூறுகின்றது. இராவணன்கூட புஷ்ப விமானத்தில் பறந்ததாகவும், நிலத்தைப் பெயர்த்தே சீதையைக் கவர்ந்ததாகவும் கூறப்படுகிறது. சிந்துபாத் கதைகளில் பாய் போன்றவற்றில் பறந்தாகக் காட்டப்படுகிறது.

 

ஆக இவை எல்லாம் ஏதோ அடிப்படையில் நடந்தவை என்பதால், ஓரே ஆன்மா பல அநுபவங்களின் தொகுப்பைக் கொண்டிருக்கிறது. சில மனிதரில் அந்த அநுபவங்கள் ஆழ்ந்த சிந்தனைகளின் மூலம் வெளியாகும் போது அவை பல பிறப்புக்களைப் போன்று நம்மால் அறியப்படுகிறது. பிறப்பு என்பது இங்கு ஓர் அனுமானமே தவிர முடிவல்ல.

 

ஆன்மா இறைவனிடம் இருந்து வந்துள்ளதனால் அது அவனிடம் உள்ள, ஆத்ம உயர்வுக்கான அனைத்து அறிவுகளையும் உள்ளடக்கி இருந்திருக்கும். அதனாலேயே அது மனித உடலில் இருக்கும் போது சிந்திக்கும் வேலையைச் செய்கிறது. மாறாக மிருகங்களோ மற்றைய படைப்பினங்களோ சிந்திப்பதில்லை. அது முடியாததுங்கூட.

 

மின்சாரம் காற்றாகவும், நெருப்பாகவும், நீராகவும் செயற்பட வைக்கப்படுவது போல். அதனால் இறைவன் மனிதர்களைச் சிந்திக்கும்படி, உற்று நோக்கும்படி, ஆராயும்படி, கவனிக்கும்படி கூறி, அவற்றில் பல படிப்பினைகள் உண்டு எனவும்,அதன் மூலம் பல படிகளைக் கடக்க முடியும் என்றும் கூறுகின்றான். மனிதர் தவிர்ந்த உயிரினங்கள், இறைவனால் கொடுக்கப்பட்ட அறிவை(inbuilt knowledge) மட்டுமே பயன்படுத்த முடியுமே தவிர அதற்குமேல் அவற்றால் சிந்தித்து செயற்பட முடியாது. அதனாலேயே மனிதப் படைப்பு அனைத்துப் படைப்புகளிலும் உயர்ந்தது என இறைவனே கூறுகின்றான்.

 

ஓர் கருதுகோள் : ஆன்மாவின் இப்பண்பு ஓரளவு மின்சாரத்துக்கும் பொருந்தும் என்பதாகிறது. மின்சாரம் எங்கோ மறைந்திருந்தது. அது ஏதோ பிறப்பாக்கி மூலம் வெளிக் கொணரப்பட்டு, ஏற்கனவே திட்ட மிடப்பட்டு புரோகிரேம் பண்ணப்பட்டுள்ள பொருட்களின் மீது பாவிக் கப்படும் போது, அது சக்தியாகி பொருளை இயங்கச் செய்கிறது. அப்போது அப்பொருள் அதற்குத் தரப்பட்ட தகவல்களின்படி செயற் படுகின்றன. இதே மின்சாரம் ஓரளவு சிந்திக்கும் பண்புகள் கொண்ட வாறு நிகழ்ச்சித் திட்டத்துடன் தயாரிக்கப்பட்ட ரோபோவில் செலுத்தப்படும் போது, அங்கு அப்பொருள் நடக்கும், பேசும், ஆடும், ஓரளவு சிந்தித்து மனிதனைப் போன்றும், அவனால் செய்ய முடியாத சில வேலைகளைக் கூட செய்யும். இதற்கு மேல் அதற்கு இயக்கமிராது. இங்கு தயாரிக்கப்பட்ட பொருட்களின் புரோகிராமே செயற்படுகின்றது. இது போன்றே மனித உயிரினங்களில் செயற்பாடு நடந்தாலும் அங்கு ஆன்மாவும் இறை அறிவுடன் உள்ளது என்பதனால் அது எங்கிருந்தாலும் தனது ஆற்றலுக்கேற்ப நினைவுகளை மீட்டு, தானிருக்கும் உடல்களின் அவயங்களால் தன் கருத்தை வெளிப்படுத்தும். இத்தன்மை மனித உடலில் அதிக தாக்கத்தை வெளிப்படுத்துகிறது. மனிதன் தவிர்ந்த மற்றைய உயிரினங்களில் அவற்றுக்குக் கொடுக்கப்பட்டிருந்த ஸ்பரிச, சுவை, சுகந்தம், கேள்வி, பார்வை என்ற அறிவுகளின் வகையில் ஒன்றையோ, இரண்டையோ, மூன்றையோ, நான்கையோ அன்றி அனைத்தையுமோ பாவித்து தமது செயற்பாட்டைச் செய்கின்றன.

 

பகுத்தறிவின் மேன்மை: இவ்வறிவுகளுக்கு மேலான பகுத்தறியும் ஆறாவது அறிவை மனிதன் கொண்டிருப்பதால், அவன் காரண, காரி யங்களோடு தன் சிந்தனையைச் சுழல விடுகிறான். அவனது முயல்வுக்கேற்ப வெளியாகும் ஆற்றல்களே அவன், முன் சொன்ன நிலைகளில் தன் உடலையே பாவித்துப் பறக்க, மிதக்க, தாழ, மறைய முடியும் போன்ற இன்னனோரன்ன நிலைகளை ஏற்படுத்துகிறது. இம்மாற்றங்கள் மிகக் குறைந்த அளவிலான எண்ணிக்கையுடைய சிலரில் மட்டுமே நடைபெறுகிறது. அது சாதாரண மனித அறிவுள் அடங்கா நிலையில், ‘அதிசயம்’ என்ற பெயரால் இனங் காணப் படுகின்றது. இதிலிருந்து சிறு மாற்றமான நிலையில் சிந்திப்போர் அவர்களில் ஏற்படும் திறனை பௌதிக மாற்றங்களுக்கு உட்படுத்துகின்றனர். அதுவே விமானம், கப்பல், வாகனம், மருத்துவம், தொடர்பாடல், இயந்திராதிகள் என அறிவியல்சார் கண்டு பிடிப்புக்கள் என பல்வேறு வகையாக உருவெடுக்கின்றன.

 

இன்னும் அவையே வெட்ட, தோண்ட, துளைக்க, அறுக்க, நிரப்ப, திருக, நெருக்க, நெரிக்க, பிரிக்க என்றவான எண்ணிலடங்கா ஈடிணையற்ற பல சேவைகளை மனித வர்க்கத்துக்காக ஆற்றுகின்றன. ஆன்ம சக்தியைப் பாவித்துத் தன்னுடலை இயக்கும் பண்பைப் பெற்றவனுக்கு இவ்வாறான தயாரிப்புக்கள் இல்லா மலேயே, எப்படி நாம் பார்க்க, பேச, நடக்க, பாய, இருக்க, எழும்ப, சிரிக்க, அழ, உணர, சிந்திக்க என்று செய்கிறோமோ, அதையொத்த வகையில் இன்னும் பல் வேறு பண்புகள்சார் வேலைகளை செய்து கொள்ள முடிகிறது. இவை சித்துக்கள் என அறியப்படுகின்றன.

இதற்கு மேல் போவோரும், அதே வேளை, கீழ் நிலையை அடைவோரும் உண்டு. அவர்களே இவ்வுலகில் மனிதர்களாக, அமரர்களாக, தெய்வங்களாக, மிருகங்களாக வாழுகின்றனர். அப்படியான மனித நிலையில் உள்ளோர் சிந்தனையாளர்களாக, கண்டு பிடிப்பாளர்களாக, சீர்திருத்தவாதிகளாக, இறைநேசர்களாக, குழப்பக்காரர்களாக, கொலை, கொள்ளை போன்றவைகளில் ஈடுபடுவோராக ஆகின்றனர். அதற்கும் மேல் சில படிநிலைகளை அடைந்தவர்களும் உளரே. அல்லாஹ் பதவிகளை உயர்த்துபவன் என்பதும் அவன் வார்த்தையே!

மனித மூளை மகத்தானது: ஒரு கலனில் முந்நூறு கோடி எழுத்துக்களால் வரையப்பட்ட Programme திட்டத்தைக் கொண்ட, ஆயிரம் மில்லியன் கலன்களால் உருவாக்கப்பட்டுள்ள மனித மூளை, பதினையாயிரம் ட்ரில்லியன் தகவல்களை உள்ளடக்கக் கூடியது எனக் கண்டு பிடித்துள்ளது விஞ்ஞானம். உண்மையில் மனித மூளையில் பதிவாகி உள்ள அனைத்தையும், இன்னும் பதிவாக உள்ளதையும் மீட்கும் திறனை இயற்கையாக பெற்றோர், அன்றி வளர்ப்போர், தற்போது பிறப்புக்கள் பற்றி கூறப்படுவதற்கு மேலும், பல அரிய தகவல்களைத் உலகுக்குத் தரமுடியும். இந்த வகையில் சிறந்த ஞாபகங்களைக் கொண்ட சிலரே உலகில், முக்காலம் அறிந்தவர்களாக, சித்தர்களாக, முனிவர்களாக, ஞானிகளாக, இறைநேசர்களாக இருந்திருப்பார். மனித மூளை ஒரு வினாடிக்கு 4000 நியூட்ரோன்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறதாம்.

அக்காலத்தில் வாழ்ந்த நம்முன்னோர்களில் சிலர் மூலிகைகள் பற்றி அவைகளின் பகுதிகளான தளிர் முதல் வேர் வரையான பண்புகள், குணங்கள், நன்மை-தீமைகள் போன்றவற்றை விளாவாரியாகத் தந்தி ருக்கிறார்கள் என்றால் அந்நிலைகளில் தாம் இருந்தபோது கண்டு கொண்டவைகளாக இருக்க முடியும். எந்த விஞ்ஞான முன்னேற்றமும் இல்லாத காலச் சூழலில் பிரபஞ்சம் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தி உள்ளார்கள் என்பது எதைக் காட்டுகின்றது. உடலுறுப்புக்கள், பாலியல் சார்ந்த பண்புகள் போன்றவற்றையும், பௌதிகம் சாரா மூச்சு, கனவு, நினைவு, மனோதத்துவம் போன்றவைகளை வெளியிட்டமைகள் எல்லாமே அவர்கள் பல்வேறு நிலைகளில் இருந்து பெற்ற அநுபவங்களை மனித உருவில் இருக்கும் போது மீட்டுக் கொண்டவைகளாக இருக்க வேண்டும். அதனாலேயே மனிதன் விஞ்ஞான வளர்ச்சி கண்டுள்ள இக்காலத்தில் கூட நினைத்துப் பார்க்க முடியாத அரும் பெரும் காரியங்களை அக்காலத்தில் செய்துள்ளமை வரலாற்று வாயிலாக அறியக் கூடியதாயுள்ளது.

இந்த வகை ஞானம் கிடைத்தவர்களே ஆரூடங்கள் கூறியிருக்கிறார்கள். அகத்தியர், கௌசிகர், போன்றோர் நாடி சாஸ்திரம் எழுதியிருப்பதும், பீர்முகம்மது ஒலியுல்லா என்ற ஞானவான் மூச்சுக் கலை பற்றிய சரநூல் எழுதியிருப்பதும், அதிவீரராம பாண்டியன் கொக்கோகம் என்ற பாலியல் உண்மைகளை வெளிப்படுத்தி இருப்பதும், இபுனுசீனா போன்றோர் மருத்துவ உண்மைகளைக் கூறியிருப்பதும், மற்றும் யோகம், வர்மம், கூடுவிட்டு கூடுபாய்தல் போன்ற அட்ட சித்திகளும் இவை சார்ந்தனவாகக் கருத இடமுண்டு.

மேற்கண்டவர்கள் பற்றிய நீண்ட பட்டியல்கள் உள. அற்லஸ் என்ற அரபு மூலச் சொல் அக்காலை வானசாஸ்திரத்தில் அரேபியர் புகழ் பூத்திருந்த நிலையை விளக்குகிறது. அக்கால இடையர்கூட வானவர் தலைவன் தற்போது எங்கிருப்பான் என வானவர் தலைவனே மாறுவேடத்தில் இருந்து கேட்ட போது, சில வினாடிகளில் பிரபஞ்ச மெங்கும் தேடிவிட்டேன் அவர் எங்கும் இல்லை. மிகுதியான நம்மிரு வரிவரில் நான் இடையன், நீர் தான் ஜிப்றீல் என்ற பதிலைக் கூறியதாக ஒரு கதையை எனது பாட்டனார் கூறக் கேட்டிருக்கிறேன்.

மறைந்துள்ள மனித சக்தி: சொலொமோன் என்ற சுலைமான் அலை அவர்களின் காலத்தில் நினைத்த மாத்திரத்தே தொலை தூரத்தில் இருந்த அரசியின் சிம்மாசனம் கொண்டு வரப்பட்டதாக குர்ஆன் சாட்சியம் கூறி நிற்கின்றது. இது ஓர் கற்றறிந்த மனிதரால் நடத்திக் காட்டப்பட்டது என்பதை அறியும் போது, நொஸ்றடாமூஸ் போன்றவர்களின் ஆரூடங்கள் எம்மாத்திரம் என்றாகின்றது. சுலைமான் காற்றைக் கூட தன் வசப்படுத்தி வைத்திருந்ததாக அறியக் கூடியதாயுள்ளது. தாவீது அவர்களின் பராக்கிரமம் போன்றவை நினைக்கவும் முடியாதவை. யூசுப் என்ற ஜோஸப் நபியவர்கள் கனவுகளுக்கு விளக்கம் தரும் அறிவு. யோனா என்ற யூனூஸ் நபியவர்களின் மீன் வயிற்று வாழ்க்கை, ஏபிரகாம் என்ற இபுறாகிம் நபியவர்கள் நெருப்புக் குண்டத்தில் வீசப்பட்டும் அவர்களை நெருப்பு தீண்ட முடியாமற் போனதும், முகம்மது நபியவர்கள் கூட சந்திரனைப் பிளந்ததாக சான்றுகள் Google earth கூகுள் ஏர்த்தில் காணக் கிடப்பதும் மனித சக்தியைப் பறைசாற்றிக் கொண்டிருப்பவை. குர்ஆனும் சந்திரன் பிளந்து விட்டது என்ற பதிவைக் கொண்டுள்ளது. இன்னும் அனேக ஆதாரங்களும் உண்டே.

The Great wall of China, Pyramids of Egypt, Adams Peak என்ற சிவனொளிபாத மலையில் மனிதக் காலடி போன்றவை நினைத்துப் பார்க்கவும் முடியாதவை. நபி ஈஸா(அலை) அவர்கள் உட்பட சிலர் இறந்தவர்களுக்கு உயிர் கொடுத்து உள்ளனர். இவை எல்லாம் அற்புதங்களாகத் தோன்றினாலும் ஞானம் பெற்ற மனிதரால் சாத்தியப்படுத்தப்படக் கூடியதே என்பதை நினைக்குந்தோறும் இறைவனது தன்மை எப்படி இருக்கும் என்பது மனித கற்பனைகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டதே என்ற உண்மை முன்னிற்கின்றது.

இந்த ‘ஓர் ஆன்மா’ தத்துவத்தை ஓரளவு சர்வ வியாபகத் தன்மைக்கு அடுத்த நிலையாகக் கொள்ளலாம். இறைவன் எங்கும் நிறைந் துள்ளான் என்பதை, இதனை உய்த்துணர்வோர் இலகுவாகக் கண்டு கொள்வர். நிச்சயமாக யாம் எங்கும் மறைந்து இருக்கவில்லை(7:7). நீங்கள் எங்கிருப்பினும் அவன் உங்களுடனேயே இருக்கிறான் (57:4). பார்வைகள் அவனை அடைய முடியாது. அவனோ எல்லாப் பார்வை களையும் அடைகிறான் (6:103). அல்லாஹ் யாவுமறிந்தவன் போன்ற அனைத்துக்கும் விளக்கம் கிடைக்கும். பைபிளும் குர்ஆனும் மனிதனை இறைவன் தன் சாயலில்/சூரத்தில் படைத்திருப்பதாகக் கூறுவதின் இரகசியம் புலப்படும். இவை அனைத்தும் ஆத்மீகம் மூலம் பெறப்படும் மனித சக்தியை பறை சாற்றுவன. இன்னும் கூற அதிக முண்டு ஆயினும் வரம்பு மீறலைத் தவிர்ப்பதற்காக இவ்வளவும் போது மென்றாக்கிக் கொள்கிறேன்.

முற்பிறப்பு பற்றி குர்ஆன்: முற்பிறப்பைப் பற்றிய கருத்தை மிகத் தெளிவாக குர்ஆன் பதிவு செய்துள்ளது. அவற்றில் மிக முக்கியமானதாக நான் கருதும் வசனத்தை உங்கள் பார்வைக்காக முன் வைக்கின்றேன். ஆயினும் இது இஸ்லாமியர் அல்லாதாரால் கருதப்படும் முன் பின் ஜென்மங்களல்ல என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.

7:172-இன்னும் உம்முடைய ரப்பு(Lord), ஆதமின் மக்களாகிய அவர்களது முதுகுகளில் இருந்து,அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி, அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக்கி வைத்தபோது, ‘நான் உங்கள் ரப்பு (Lord) அல்லவா?’ (எனக் கேட்டேன்). ‘ஆம் நாங்கள் சாட்சி கூறுகிறோம்’என்று அவர்கள் கூறியதை நினைவூட்டும். ஏனென்றால், ‘நிச்சயமாக நாங்கள் இதனை விட்டும் மறதியாளர்களாக இருந்து விட்டோம்’ என்று மறுமை நாளில் நீங்கள் கூறாதிருப்பதற்காக. இன்னும் 56:62, 7:29, 18:48, 6:94, 5:7, 18:37, 57:8, 40:11, 6:152, 50:15 போன்றவைகளும் இதனை ஒட்டியனவே. இவ்வசனம் ஆன்ம உயர்வுக்கான உண்மைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளதை உய்த்துணர்வோர் கண்டு கொள்வர். இது முற்பிறப்பு சம்பந்தமாக இஸ்லாம் கொண்டுள்ள கொள்கை. அன்றைய தேவைக்கு அனைவரும் வெளிப்படுத்தப்பட்டு சாட்சியம் கூறப்பட்டது. இது மறுமையில் எழுப்பப்படுவதை ஒத்ததே. பிறந்து வாழ்ந்த நிலையல்ல.

தெளிவு: ஆக இஸ்லாம் கூறும் முற்பிறப்பு மிகத் தெளிவானது. இது ஓர் ஆன்மா பாவ, புண்ணியங்களின் காரணமாகப் பல பிறவி எடுப்பதென்ற கோட்பாட்டைத் தழுவியதல்ல. ஒரு ஆன்மாவே அனைத்துமாக. அனைத்திலும் ஒரு ஆன்மா இருப்பதே. முன் ஜென்ம கொள்கை குர்ஆன் பரிந்துரைத்த ஓரே ஆத்மாவில் உயிரினங்கள் தோன்றியதால், சில மனிதரில் ஏற்படுகின்ற, தன் ஆத்மா வேறெங்கெல்லாம் இருக்கின்றன என்ற ஞாபகங்களின் தொகுப்பே என்றவாறு ஏற்றுக் கொள்ளலாம். இவை கனவாகவோ, நினைவாகவோ, மயக்க நிலையிலோ கூட வரவாய்ப்பு உண்டே என்பது எனது குர்ஆன் தழுவிய சிறு சிந்தனை. சமகாலத்தில் ஒருவரைப் போன்று உருவ ஒற்றுமையுடன் பலர் வாழ்வதையும் காணக் கூடியதாகவும் உள்ளது. ஆன்மா காலத்துக்குக் கட்டுப்படாமலும், உடல் காலத்தை தன் வாழ்வாகக் கொண்டிருப்பதும், முன் பின் ஜென்ம பிரச்சினை, அணுகுமுறை காரணமாக மனித உற்பத்தி தோன்றிய காலம் முதல் மனிதரால் தீர்க்கப்பட முடியாதுள்ள ஒன்றே.

முடிவு: உலகே மாயம் வாழ்வே மாயம். மாயவனின் கோலங்கள். கடவுளைத் தன்னில் காணாதவனுக்குக் கடவுள் இல்லை. உன்னையே நீயறிவாய்,உங்களுக்குள்ளும் கவனித்துப்பார்க்க மாட்டீர்களா? போன்ற இறை அழைப்பு. இது உலக சமாதானத்துக்கான ஓருயிர் மூலம் அன்பு வெளியாகி அருள்பாலிக்கும் ஓர் அறநெறி, இறை நெறி, இயற்கை நெறி.

- நிஹா –

2012.06.10

6:110 முதல் தடவையில் ஈமான் கொள்ளாதிருந்தமை

6:104 உங்களுடைய ரப்பின்; புறத்திலிருந்து ஆதாரங்கள் உங்களுக்குத் திட்டமாக வந்துவிட்டன. எவர் பார்க்கிறாரோ? அப்பொழுது அவருக்கே நன்மையானதாகும். எவர் குருடராகி விடுவாரோ அப்பொழுது அவருக்கே கேடாகும்.

6:94 அன்றியும் நாம் உங்களை முதன்முறையாகப் படைத்தது போன்றே திட்டமாக நீங்கள் தனியாக நம்மிடம் வந்து சோ்ந்து விட்டீர்கள்.

6:95 வித்துக்களையும் கொட்டைகளையும் அல்லாஹ் பிளக்கச் செய்கிறான். இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை அவன் வெளியாக்குகிறான். உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் அவனே வெளியாக்குகின்றான். அவன்தான் அல்லாஹ்.

6:88 இது அவன் நேர்வழியாகும், தனது அடியார்களில் தான் நாடியவரைக் கொண்டு வழி நடத்துகின்றான். அவர்கள் இணைவைப்பார்களாயின், அவர்கள் செய்து கொண்டிருந்தவை அவர்களை விட்டு அழிந்து விடும்.

6:89 அவர்கள் எத்தகையவர்களென்றால், அவர்களுக்கு வேதத்தையும், சட்டத்தையும், நபித்துவத்தையும் கொடுத்தோம். ஆகவே, இவற்றை இவர்கள் நிராகரிப்பார்களாயின் நிராகரிக்காத ஒரு சமூகத்தினரை நாம் திடடமாக இதற்குப் பொறுப்பாக்கிவிடுவோம்.

6:90 அவர்கள் எத்தகையோரென்றால், அல்லாஹ் அவர்களை நேர்வழியில் நடத்தினான்.

6:9 அவர்கள் குழம்பிக் கொண்டிருக்கும் ஒன்றையே அவர்கள் மீது நாம் குழப்பியவர்களாவோம்

6:14 வானங்களையும் பூமியையும் படைத்தோனாகிய அல்லாஹ் அல்லாதவனை பாதுகாவலனாக நான் எடுத்துக் கொள்வேனா? அவனோ உணவளிப்பவன். உணவளிக்கப்படுவதில்லை.

6:59 மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவற்றை அவனையன்றி அறியமாட்டார்கள்.

20:46 நீங்கள் இருவரும் அஞ்ச வேண்டாம். நிச்சயமாக, நான் உங்கள் இருவருடன் இருந்து, கேட்டுக்கொண்டும் பார்த்துக் கொண்டும் இருப்பேன்.

20:50 எங்களது ரப்பு! ஒவ்வொரு பொருளுக்கும் அவற்றுக்குரிய உருவத்தைக் கொடுத்து, பின்னர் நேர்வழியும் காட்டினானே அத்தகையவன் ஆவான் எனறு அவர் கூறினார்.