காவியும் பாவியும் !

 

காவியுள் புகுந்தது புத்தர் அன்று
கர்மம் தொலைத்து காமம் அறுக்க
காவியுள் இன்று காவாலிகள் புகுந்து
காடைத்தனங்களை மேடை ஏற்றுறார்!

காவியில் பாவிகள் படுத்திடும் பாடு
காவியாய் காலிகள் விளைத்திடும் கேடு
தாவியே தாமும் கூவியே நிதமும்
நோவினை செய்வதை நாவினிற் கொண்டார்!

காவிகள் இன்று கைக்கூலிகளாகி
பாவிகள் கூற்றைக் கூற்றங்களாக்கி
அப்பாவிகள் வாழ்வை அழித்து ஒழிக்க
தப்பாக திட்டங்கள் தனையே கொண்டனர்!

முப்படை கொண்டு தப்பினைக் களையலாம்
மோப்ப நாய் கொண்டு கள்ளரைக் காணலாம்
மேய்ப்போரைக் கொண்டு மற்றைய மதத்தாரை
மாய்த்திடும் கயவர் தோய்ந்தனர் மலத்திலாம்!

கோயிலை உடைக்கும் குண்டர்கள் தம்மைபள்ளி
வாயிலைத் தகர்க்கும் கா(மாபா)விகள் தம்மை
மேயவே விட்டு காயங்கள் விளைப்போர்
மாயங்கள் செய்யும் மைந்தர்கள் தாமே!

விருத்தி என்றே வருத்தங்கள் செய்திட
கருத்திலிருத்தி காரியம் படைப்போர்
துருத்தி கொண்டே ஊதி எரிப்போர்
பாருள் இருந்து வேருடன் அழிவர்!

பாமரர் யாரும் சாமரம் வீசலாம்
பூமரஙகாட்டி பாரினை ஏய்க்கலாம்
பூமரஙகாகித் தாக்கிடும் போழ்து
பூமலர் சாத்தும் சாமரம் மிஞசும்!

சிந்தனை என்று சந்தைப்படுத்தலாம்
விந்தை வழியில் மந்தைகளாக்கலாம்
கந்தையில் சனங்களை கலங்கிட வைக்கலாம்
மாந்தி மகிழ்ந்து வாழ்வது எந்நாளோ!

பாலங்கள், கோலங்கள் தாளங்கள் எல்லாம்
மாயாஜாலங்கள் என்பதை மக்களும் உணர்வர்
வாயார உண்டிட வழிவகை காணார்
ஓயாதோ உங்கள் தொல்லை என்றனர்!

 

- நிஹா -