நற்சிந்தனை 24

தங்களுடைய ரப்பை அவனுடைய திருப்பொருத்தத்தை – வஜ்ஹை/முகத்தை – நாடி காலையிலும் மாலையிலும் அழைத்துக் கொண்டிருப்போரை நீர் விரட்டி விடாதீர். அவர்களுடைய கணக்கில் நின்றும் உம்முடைய கணக்கிலிருந்து அவர்கள் மீது ஏதுமில்லை. ஆகவே நீர் விரட்டினால் நீர் அநியாயக்காரர்களில் ஆகிவிடுவீர்.

மேற்கண்ட குர்ஆனின் வசனம் பல விடயங்களை நமக்கு அறிவித்துக் கொண்டிருக்கின்றது. அது பற்றிப் பேசும் முன்னர், அதனோடு தொடர்பு உடையதாக அதற்கு முன்னுள்ள வசனத்தையும் அறிவது அறிதலுக்கு உதவுவதாக, இலகுபடுத்துவதாகவிருக்கும்.

எவர்கள் தங்களுடைய ரப்பின்பால் ஒன்று திரட்டப்படுவார்கள் என்பதைக் குறித்துப் பயப்படுகிறார்களோ, அத்தகையோர், அவர்கள் பயபக்தி உடையோராவதற்காக இதனைக் கொண்டு எச்சரிக்கை செய்வீராக! அவர்களுக்கு பாதுகாப்பளிப்போனும், பரிந்துரைப்போனும் அவனையன்றி இல்லை.

இவ்வசனத்தில், மறுமையை ஈமான் கொண்டவர்கள், அந்நாளில் அனைவரையும் ஒன்று திரட்டுவது குறித்து பயப்படுகிறவர்கள் உள்ளதை, அப்படிப் பயப்படுபவர்களிடம் பயபக்தி இல்லாதிருப்பதை வெளிப்படுத்தும் அதே வேளை, அப்படியானோருக்கு இதனைக் கொண்டு எச்சரிக்கை செய்யும்படி அறிவுறுத்துகின்றது. இவ்வறிவுறுத்தலைக் கூறுவதன் மூலம் நபிகள் ஸல் அவர்கள் செய்ய வேண்டியதையும் கூறா நிற்கின்றது. இறுதியாக, அவர்களுக்குப் பாதுகாப்பளிப்போனும், பரிந்துரைப்போனும் அல்லாஹ்வைத் தவிர இல்லை என்பதைக் கூறுவதன் மூலம் மேலும் பல உண்மைகளை, அதிகாரங்களை வலியுறுத்துகின்றது.

மேற்கண்ட எச்சரிக்கையை அறிந்து கொள்ள உதவுவதாகவும் அந்த எச்சரிக்கையின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாகவும் அடுத்து வரும் முதற் பந்தியில் கூறிய வசனம் 52 அமைகின்றது, அது பற்றிய விடயங்களை அறிவதே இவ்வாக்கத்தின் நோக்கம்;.

அவ்வசனத்தில், சிலர் அல்லாஹ்வின் ‘வஜ்ஹ்’ எனும் திருமுகத்தை தேடியவர்களாக அழைத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள் என்பது மிகவும் தெளிவு. அத்தோடு, அந்த நபர்களை, நபிகள் ஸல் அவர்கள் விரட்டும் நிலையொன்றை அல்லாஹ் அறிந்திருக்க வேண்டும். ஆம் மறைவான எண்ணங்களையும் அறிபவன் அல்லவா! அதனால், அந்நிலையை நபிகளார் அடைந்து விடக் கூடாது என்பதையும், அந்த சிலர் செய்து கொண்டிருந்ததன் உண்மை நிலையையும் வெளிப்படுத்துவதாக அடுத்து வரும் பகுதி அமைந்துள்ளமை உய்த்துணர்ந்து நல்லறிவு பெறப்பட வேண்டியது.

அடுத்த வரிகளான, ‘அவர்களுடைய கணக்கில் நின்றும் ஏதும் உம்மீது இல்லை. உம்முடைய கணக்கிலிருந்து அவர்கள் மீது ஏதுமில்லை’ என்ற தொடர், தெளிவாக நமக்குப் பல உண்மைகளை வெளிப்படுத்துகின்றது. அவை: அவர்கள் செய்யும் எதுவும் நபிகளாரது குற்றமாகப் பார்க்கப்படப் போவதில்லை. மற்றது நபிகளார் செய்து விடும் எதுவும் அவர்களது குற்றமாகப் பார்க்கப்படப் போவதுமில்லை.

இதனோடு தொடர்பாக அறிவதாயின், அவர்கள் அழைத்துக் கொண்டு இருந்தது அல்லாஹ்வைத்தான் என்பதும், அது காலையிலும் மாலையிலும்தான் என்பதும், இச்செய்கை அன்றைய நிலையில் தொழுகையாக கருதப்பட்டிருக்காது என்பதையும், அதனால்தான் நபிகளார் அவ்வழைப்பைச் செய்து கொண்டு இருந்தவர்களை விரட்டி விடும் நிலை நபிகளாரின் எண்ணத்திலாவது தோற்றியிருக்க வேண்டும் என்பதுவும், அது, நபிகளாருக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவோ, அன்றி நபிகளாரின் சிந்தனையோ செயலோகூட அந்த திருமுகத்தை நாடி அழைத்துக் கொண்டு இருப்போரை பாதிக்கப் போவதில்லை என்பது அறியப்படும் உண்மையாகின்றது.

அடுத்த, அதாவது 52ஆம் வசனத்தின் இறுதித் தொடர் மிகவும் தெளிவாக, அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி அழைத்துக் கொண்டு இருந்தவர்களது செய்கை அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்டதுதான் அதனைத் தடை செய்யும் எண்ணமோ, முயற்சியோகூட அநியாயம் எனவும், அப்படிச் செய்பவர் அநியாயக்காரர் என்பதுவும் மிக மிகத் தெளிவாக, சந்தேகமோ, விளக்கமோ அற்ற நிலையில் வெளியாகின்றது,

நமது ஆக்கத்தின் நோக்கம், மேற்கண்ட சம்பவங்களை வைத்து, அவற்றில் விமர்சனம் செய்வதல்ல. அப்படி விமர்சனம் ஒன்றைச் செய்வதற்காக அல்லாஹ் நமக்கு அதனை அறிவிக்கவுமில்லை. மாறாக, அவற்றில் காணப்படும், அத்தாட்சிகளை அறிந்து, படிப்பினை பெற்று நம்மை நாம் காத்துக் கொள்வதற்காக, அதனுள் உள்ள நமக்கான செய்தி என்னவென்று அறிந்து அதனைப் பின்பற்றும் முயற்சிகளில் ஈடுபடுவதே!

அவ்வசனத் தொடர்தனில் நாம் அவதானிக்க முடிவது, அல்லாஹ்வின் திருமுகத்தைத் தேடி ஏதோ முயற்சிகளில் ஈடுபடல் அவசியம் என்பது. அது இங்கு அல்லாஹ்வின் நாமங்களை உச்சரித்து, அவனை அழைப்பதாக அமைந்துள்ளது. அச்செய்கைக்காக காலையையும் மாலையும் உகந்தது போன்றவை. அவை எவரினதும் தடைக்கோ விமர்சனத்திற்கோ உள்ளாக்கப்பட முடியாது. அப்படி மீறி யாராவது தடுக்க முனைவார்களாயின் அவர்கள் அநியாயக்காரர்களாக அல்லாஹ் தீர்மானித்திருப்பது,

அல்லாஹ்வின் வசனத்தைச் செவிமடுத்தால், அதில் குருடர்களாகவும், செவிடர்களாகவும் விழுந்து விடாதீர்கள் என்ற அவனின் எச்சரிக்கையை ஏற்பதாயின், மேற்கண்ட வசனத்தில் கூறப்பட்டவைகளை நாம் அவன் வழியில் சிந்தித்து உணர வேண்டிய பொறுப்பையும் கொண்டுள்ளோம். உய்த்துணர்ந்து நல்லறிவு பெறுவதற்காகவே இக்குர்ஆன் அருளப்பட்டு உள்ளது.

அல்லாஹ்வின், இந்த குருடர்களாகவும், செவிடர்களாகவும் விழுந்து விடாதீர்கள் என்ற அறிவுறுத்தல், குர்ஆன் பிழையான தகவல்களைக் கொண்டதாக உள்ளது என்ற கருத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காக அமைந்ததல்ல. மாறாக, மனிதர் தாம் கேட்டவைகளை கிளிப்பிள்ளை போன்று ஒப்புவிப்பவராகவோ, அவற்றில் உள்ள உண்மைகளை, நன்மைகளை அறியாதவர்களாகவோ, பிழையான விளக்கத்துடன் பின்பற்றி, கைசேதத்துக்குள்ளாகி நாளை மறுமையில் சாக்குப் போக்குக் கூறும் நிலைகாளானவராகவோ ஆகாது தடுத்தல்.

மேலும். மர்க்க விடயங்களில் உறுதிப்பாட்டுடனேயே காரியங்கள் நடைபெற வேண்டி இருப்பதனையும், மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை என்பதையும், நமது செய்கைக்கு நாமே பதில் கூற வேண்டியவர்கள் போன்ற விடயங்களையும் கொண்டதாகக் குர்ஆனின் பின்பற்றல் நடைபெற வேண்டும் என்ற கருணையின் அடிப்படையையும் கொண்டு கூறப்பட்டதே!

அத்தோடு குர்ஆனின் தொடக்கமான சூரா பாத்திஹாவின் இறுதி மூன்று வரிகளின் இறைஞ்சுதலுக்கு மாற்றமில்லாமல், அல்லாஹ் குர்ஆனை அமைத்துள்ளதாகக் கொள்ளலாம். மேலும், தன் வழியில் குர்ஆனைக் கொண்டு முயற்சிப்பவர்களுக்கு வழிகாட்டும் பொறுப்பும் அவனுக்கு உண்டு என்பதும் காரணமாகின்றது!

தற்போது, நாம், 52ஆவது வசனத்துக்கு திரும்பின், அவ்வசனம் அல்லாஹ்வின் திருமுகத்தை தேடிக் கொண்டு இருந்தவர்களின் அச்செயலை அங்கீகரித்ததை, அச்செயலுக்கு எதிரான எதுவும் அநியாயம் என்று அல்லாஹ்வால் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதையும் கொண்டு, அதனை மேலும் வலுப்படுத்த குர்ஆனின் பக்கல் நமது பார்வையைத் திருப்புவோம்.

நமது கடமையான ஒன்றே, நாம் முற்பிறப்பில் அல்லாஹ்வை நமது ரப்பாக ஏற்றுக் கொண்ட செய்தி. ஆதனை நாம் தற்போது மறந்து இருக்கின்றோம். அம்மறதியை நாம் சாக்குப் போக்காக்கி மறுமையில் அல்லாஹ்விடம் நாங்கள் மறந்துவிட்டோம் எனப் புகல் கூறக் கூடாது என்பதற்காக, அல்லாஹ் நபிமார்களுக்கு வேதங்களைக் கொடுத்து நம்மை ஞாபகப்படுத்துமாறு வேண்டுகின்றான். அது 7:172இல் பதிவாகியுள்ளது.

இந்த ஞாபகப்படுத்தலை, இலகுபடுத்தும் ஒரு கடமையாக தொழுகை என்ற ஒரு செயற்பாட்டை நமக்கு அவன் அறிமுகம் செய்துள்ளான். அந்த தொழுகையை நிலைநிறுத்துமபடியும். அந்த நிலைநிறுத்தல் அவனை நினைவுகூர்வதன் மூலமே நிறைவு பெறவுள்ளதை, 20:14, 29:45இன் வசனங்கள் மூலம் வெளிப்படுத்தி உள்ளான்.

நினைவுபடுத்தல் என்பது நாம் ஏற்கனவே கண்டதை நமது பார்வைக்குள் கொணர்வது என்பதால், அதனை மிகவும் நாசூக்காக நமது பார்வைகள் அல்லாஹ்வை அடைய முடியாது, ஆயினும், அல்லாஹ் அனைவருடைய பார்வைகளையும் அடைகின்றான் எனக் கூறி அல்லாஹ்வை நாம் கண்டு கொள்ள முடியாது என்ற மாயையில் இருந்து விடுபடும் வழியையும் கூறியுள்ளான். 6:103, 104 ஆகிய இரு வசனங்களும் இது பற்றிப் பேசுகின்றன.

இப்போது, இத்தகைய நிலைக்குள் மனிதன் அல்லாஹ்வின் முகத்தைத் தேடுவதில் அல்லாஹ்வின் நாமங்களை உச்சரித்து அவனை அழைத்துக் கொண்டிருந்ததனை சற்று சிந்திப்போர், அல்லாஹ் நபிகளாரையே, அவர் அவர்களை விரட்டுவாராயின் அநியாயக்காரர் எனக் கூறியிருப்பதில் இருந்து புரிந்து கொள்ள முடியும்.

அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் நம்மனைவரையும் அவன் நமது பார்வைக்குள் வந்துவிடுவதை கண்டறியும் அருளை வழங்குவானாக. நாமும் அவ்வாறான முயற்சியில் ஈடுபடுவோமாக! 5:35 அல்லாஹ்வின் நெருக்கத்தை அடைவதற்கான வழியைத் தேடிக் கொள்ளுங்கள் என்ற அறிவிப்பையும் உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகின்றேன். அறிதலுக்காக 76:29, 73:19, 78:39.

 

- நிஹா -